மின்சாரம்

தமிழர் தலைவர் நெகிழ்ச்சி

மின்சாரம்

தஞ்சை கழகப் பொதுக் குழுவில் உரையாற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியுறச் செய்தார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து அவர் உரையாற்றுகையில், என்னைப் பெறாது பெற்றவர் அன்னை மணியம்மையார் என்று தழுதழுத்த குரலில் அவர் குறிப்பிட்டபோது பொதுக் குழுக் கூட்டத்தில் கூடியிருந்த அனைவரின் கண்களும் கலங்கின.

அன்னை மணியம்மையார் சாதாரண ஒரு குடும்பத்தில்  - கழகத் தொண்டர் குடும்பத்தில் வேலூரில் பிறந்தவர். தந்தை பெரியார் அருகில் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்று அவரின் தந்தையார் கனகசபை அவர்களால் தந்தை பெரியாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்.

தந்தைபெரியாருக்குத் தொண்டாற்றுவதே தனது ஒரே பணி என்பதற்காக திருமணமே வேண்டாம் என்று இளமையை - தனி வாழ்வைத் துறந்தவர்!

இந்நினைவைப்பற்றி கழகத் தலைவர் குறிப்பிடும் போது, தனிப்பட்ட முறையில் ஒரு பெண் ஏச்சுப் பேச்சுகள், ஏகடி யங்கள், தூற்றல்கள், வசைமொழிகள் இவற்றை அன்னை மணியம்மையார் சந்தித்த அளவுக்கு வேறு எந்த ஒரு பெண்மணியும் சந்தித்து  இருக்க முடியாது என்று மிகத் துல்லியமாகவே குறிப்பிட்டார்.

யாரும் எதையும் தியாகம் செய்யலாம். இளமையை ஒருவர் தியாகம் செய்வது என்பது சாதாரணமானதல்ல என்றும் குறிப்பிட்டார்.

அன்னையாரை துற்றியவர்களே பிற்காலத்தில் அன்னை மணியம்மையாரின் தொண்டறத்தைப் பற்றியும், தந்தை பெரியார் அவர்களைப் பேணி காத்து, சமுதாயத்துக்கு அய்யாவின் தொண்டு தொடருவதற்கான அவரின் பங்களிப்புக் குறித்தும் ஒப்புக் கொண்டு பாராட்டியதையும் கழகத் தலைவர் எடுத்துரைத்தார். இது அன்னையாருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும் கழகத் தலைவர் குறிப்பிட்ட போது மீண்டும் மண்டபம் அதிர கரவொலி!

அய்யா அவர்களிடம் அம்மா எப்படி தயாரானார் என்பதற்கு ஒரு முக்கிய நிகழ்வை நிரல்படுத்தினார் ஆசிரியர்.

தந்தை பெரியார் அவர்கள் தம் சொந்த சொத்துக்கள் அனைத்தையும் இயக்கத்திற்கே ஒப்படைத்தார் - ஓர் அறக்கட்டளையாக நிறுவி தக்கவர்களை  அதில் நியமித்தார். அன்னையார் தலைமை ஏற்று அய்யாவின் நோக்கங்கள் நிறைவேறும் வகையில் அறக்கட்டளையையும், இயக் கத்தையும் கண்டோர் வியக்க, எதிரிகள் அதிர்ச்சியுற நடத்திக் காட்டினார்.

தந்தை பெரியார் அவர்கள்  இன்னொரு ஏற்பாட்டையும் செய்திருந்தார். குறிப்பிட்ட சொத்துகளை அன்னை மணியம் மையார் பெயரில் ஏற்பாடு செய்திருந்தார். அந்தத் தகவல் அம்மா அவர்களுக்கே கூடத் தெரியாது. (தெரிந் திருந்தால், அதனை அவர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்பதை அன்னையாரை அறிந்தவர்கள் அறிவார்களே!)

நமது ஆசிரியர் அவர்களுக்கு அந்த ஏற்பாடு தெரியும் என்றாலும், அய்யா நினைவுக்கு - நிலைக்கு மாறாக அதனை வெளிப்படுத்தக் கூடாதல்லவா - இதுதான் கழகத்திற்கே உரித்தான தனித் தன்மையான அறிவு நாணயத்தின் தலை சிறந்த ஒழுகலாறாகும். அந்தப் பண்பாட்டின் நுட்பமாக ஆசிரியர் அவர்கள் அன்னையாரிடமும்  கூறவில்லை. பின்னர் அது தெரிந்தபோது அம்மா அவர்கள் ஆசிரியர் அவர்களை .உரிமையாகக் கடிந்து கொண்டதும் உண்டு (கழகத் தோழர்கள் கற்க வேண்டிய - கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியமான கருவூலமான உயர் பண்பாடு இது!

அய்யா அவர்கள் தன் பெயரில் ஏற்பாடு செய்து வைத் திருந்த அந்த சொத்துகளை என்ன செய்தார் அன்னையார்? உற்றார், உறவினர்களுக்கு அதிலிருந்து கடுகளவுப் பொருளையும்  கொடுத்தாரா? அங்கே தான் நெருப்பில் அழுக்குச் சேராது என்ற இலக்கணத்தின் காவியமாக ஒளி வீசினார் - வீசுகிறார்  - வீசுவார்.

அன்னையார் அவர்கள் சென்னைப் பொது மருத்துவ மனையில் இருந்தபோது ஒரு முடிவுக்கு வந்தார். தன் உடல் நிலைபற்றி அவர் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். தான் கண் மூடுவதற்கு முன் தனக்கு அய்யா ஏற்பாடு செய்து வைத்திருந்த அந்தச் சொத்துக்களை ஓர் அறக்கட்டளையாக்கி, தந்தை பெரியார் அறக்கட்டளை போலவே கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்று சீரிய நோக்கில் ஒரு ஏற்பாடு செய்தார். அதற்கான  ஆவணங்களை யும் மருத்துவமனையில் இருந்து கொண்டே தக்கார் மூலம் ஏற்பாடு செய்து  விட்ட நிலையில், நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களை  அழைத்து நடந்தவற்றைச் சொன் னார் அன்னையார்.

"உன்மீது நம்பிக்கையை வைத்து, நீ அதைச் சரியாகவே செய்வாய் என்ற உறுதியான எண்ணத்தின் பேரில் உன்னை முக்கிய பொறுப்பாக்கி இந்த அறக்கட்டளையை உருவாக் கியுள்ளேன் - உறுப்பினர்களையும் போட்டுள்ளேன்" என்று அன்னையார் சொன்ன பொழுது நமது ஆசிரியர் அவர்கள் அதிர்ந்தே போனார் - அதைவிட நெகிழ்ந்தே போனார் என்றே சொல்ல வேண்டும் அதற்கு இரண்டு காரணம். ஒன்று அன்னை மணியம்மையார் அவர்களிடத்திலே குடிகொண்டிருந்த அந்த உன்னதத் தொண்டற உள்ளம். இரண்டாவது தன்மீது அம்மா அவர்கள் வைத்திருந்த அந்த மிகப் பெரிய நம்பிக்கை.

அன்னையார் அவர்கள் உருவாக்கிய அந்த அறக்கட்டளைக்குச் சாட்சியாக கையொப்பமிட்ட பெருமக்கள் யார் யார் தெரியுமா? அதனையும் நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் வெளிப்படுத் தினார் நமது கழகத் தலைவர். ஒருவர், கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலு, இரண்டாம வர், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளரும், பகுத்தறிவாளர் கழகத்தின் முதல் மாநிலத் தலைவருமான சி.டி.நடராசன், மூன்றா வது, தந்தை பெரியார் அவர்களின் தனி மருத்துவராக இருந்த சென்னைப் பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் கே.இராமச்சந்திரா!

எத்தகைய ஏற்பாடு - எத்தகையோரின் சாட்சியங்கள் - எத்த கைய ஒருவரைத் தேர்வு செய்து தன் எண்ணத்தை நிறைவேற்று வதற்கான முடிவு - இவை அன்னை மணியம்மையார் அவர்களின் தலைமைத்துவத் தகைமையின் தகத்தகாய ஒளியல்லவா!

அன்னை மணியம்மையாரின் இத்தகு ஏற்பாடுகளையும், அவர்தம் தொண்டுள்ளத்தின் சீலத்தையும் நிரல்பட எடுத்துரைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

சுருக்கமாகச் சொன்னால் அன்னை மணியம்மையார் கண்களுக்குத் தெரியாத ஒரு கட்டடத்தின் அஸ்திவாரம் என்று மிகச் சரியாகவே கணித்துச் சொன்னார் ஆசிரியர்.

தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை பொறுப் பேற்று நடத்தும் வாய்ப்பைப் பெற்ற நான் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் நடத்தக்கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொன்னபொழுது கலகலப்பான வரவேற்பு!

(ஆசிரியர் நூற்றாண்டு விழாவையும் நாம் நடத்துவோம் - அவர் முன்னிலையிலேயே என்று பலத்த கரவொலிக்கிடையே கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் குறிப்பிட்டது ஒரு இன்ப அதிர்ச்சியின் தகவலாகும்).

சுருக்கமாகச் சொன்னால் 'இயற்கைக் கலவரங்களுக்கிடையே' தஞ்சையில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு செறிவாகவும், சிறப்பான தீர்மானங்களை உள்ளடக்கியதாகவும், பல புதிய தகவல்களைத் தோழர்கள் தெரிந்து கொள்ளும் வகுப்பு அறையாகவும், எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்காகவும், கழகத் தோழர்கள் மத்தியிலே புத்தெழுச்சி ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது என்று சொன்னால் கடுகளவும்கூட மிகையாகாது!

இதோ ஒரு செய்தி....

தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி வினோத பூஷை

திருச்சி அருகே சுடுகாட்டில் பரபரப்பு

அகோரிகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் அதிகம் வாழ்கின்றனர். நீண்ட தலைமுடி, உடலில் சாம்பல் அல்லது மண்ணை குழைத்து பூசிக்கொண்டு தியா னத்தில் ஈடுபடுவது, சுடுகாட்டில் பூஜைகள் செய்வது இவர்களது வழக்கம். மனித நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் மாறு பட்டவர்கள். நடிகர் ஆர்யா நடித்த நான் கடவுள் திரைப்படத்தில் அகோரிகளின் வாழ்க்கை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும்.

வட மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் அகோரி பயிற்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அகோரி கள் தங்களது இஷ்ட தெய்வங்களை கோவில் கட்டி பூஜை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி அருகே அரிய மங்கலம் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரம் ஜெய் அகோர காளி கோவிலை அகோரி மணிகண்டன் என்பவர் கட்டி பூஜை நடத்தி வருகிறார்.

இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் அகோரி மணி கண்டன் சிறப்பு பூஜை நடத்துவது உண்டு. மேலும் அருகில் உள்ள சுடுகாட்டிலும் சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம். நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டில் நின்று சங்கு ஊதி பூஜை நடத்துவார். உடல் முழுவதும் சாம்பல் பூசியபடியும், இடுப்பில் சிறிய அளவு துணிமட்டும் கட்டி, நீண்ட தலைமுடியை கொண்ட இவரிடம் சில பக்தர்கள் குறி கேட்க வருவது உண்டு.

அகோரி மணிகண்டன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மதத்தை சேர்ந்த ஒருவரை பார்த்து குறிப்பிட்ட நாளில் ரத்தம் கக்கி சாவாய் என கூறி, பூஜை தொடங்கி பரபரப்பை ஏற்படுத் தியவர். அப்போது காவல்துறையினர் தலையிட்டு அந்த பூஜைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அகோரி மணிகண்டனின் தாய் இறந்த பின் அவரது உடல் மீது அமர்ந்து பூஜை நடத்திய அவலம் நடந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அகோரி மணிகண்டனின் தாய் மேரி (வயது 67) கடந்த 30ஆம் தேதி காலமானார். அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிகழ்ச்சி அரியமங்கலம் மத நல்லிணக்க சுடுகாட்டில் நடந்தது. அவரது உடலுக்கு வழக்கமான இறுதிச் சடங்கினை உறவினர்கள் செய்தனர். மேரியின் உடலை அடக்கம் செய்வதற்காக படுத்த நிலையில் வைக்கப்பட்டது. அப்போது அகோரி மணிகண்டன் இறந்த தனது தாயார் உடல் மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்து, தியான நிலையில் ருத்ராட்ச மாலையை விரல்களால் உருட்டியபடி வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார்.

அவருடன் சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்து, சங்கு ஊதி பூஜை நடத் தினர். ஓர் அகோரி தலை கீழாக நின்று தியா னம் செய்தார். சிறிது நேர பூஜைக்கு பின் இறந்த மேரியின் உடலுக்கு தீபாராதனை செய்து அடக்கம் செய்தனர். சுடுகாட்டில் நடந்த வினோத பூஜையானது அப்பகுதி யினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வினோத பூஜை குறித்து அகோரி மணிகண்டனுக்கு நெருங்கியவர்கள் கூறுகையில், இறந்தவரின் உடல் மீது அமர்ந்து பூஜை நடத்தினால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடையும் என அகோரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் தான் இறந்த தனது தாயின் உடல் மீது அமர்ந்து மணிகண்டன் பூஜை நடத்தினார். வட மாநிலங்களிலும் அகோரிகள் இதேபோல பூஜை நடத்துவது வழக்கம். மணிகண்டன் சிறுவயதிலேயே ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். அதனால் வட மாநிலம் சென்று அகோரிக்கான பயிற்சி பெற்று வந்துள்ளார் என்றனர்.

சுடுகாட்டில் இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய பூஜை தொடர்பாக காவல்துறையினருக்கு எந்த தகவலும் தெரியவில்லை. பொதுமக்கள் மத்தியில் நேற்று காலை பரபரப்பாக பேசப்பட்ட பின்புதான் காவல்துறையின ருக்கும் தெரியவந்தது. அகோரி நடத்திய பூஜையை சுடுகாட்டில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத் தனர். அதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனர். இதன் மூலம் அகோரி நடத்திய பூஜை வீடியோ வைரலாக பரவியது.

- இப்படியொரு செய்தி படத்துடன் தினத்தந்தி நாளேட்டில் (3.10.2018, பக். 8) வெளிவந்துள்ளது.

காட்டுமிராண்டியாக நிர்வாணமாகக் காடுமேடுகளில் அலைந்து திரிந்த மனிதன், நாளும் அறிவு பெற்று, வளர்ச்சி பெற்று, நவநாகரிக உலகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளான்.

செவ்வாய்க் கிரகத்தில் குடியேறலாமா?, சந்திரனில் குடியேறலாமா? என்ற ஆய் வில் ஆழ்ந்து கிடக்கும் ஓர் அறிவியல் உலகில் இது போன்றவைகளும் நடந்து வருவது வெட்கக் கேடு அல்லவா?

இந்துத்துவவாதிகள் செத்தொழிந்து போன பழைமைக்கெல்லாம் பூச்சூடி புது மணம் கொடுத்து, மக்கள் மத்தியில் புகுத்தி, தங்களுடைய மனுதர்ம ஆளுமையை மக்களிடம் நிலைநாட்ட துடியாய்த் துடித் துக் கொண்டுள்ளனர்.

ஆம் மக்களின் ஆபாச மூட நம்பிக் கைகள் மீதுதான் ஆரியம் தன் இரும்புக் கோட்டையைக் கட்டி வருகிறது.

இந்து மதத்தில் இதுபோன்ற அநாகரிக, கேடு கெட்ட அசூயையான புழு புழுத்துப் போன சாக்கடை ஊத்தை நாற்றத்தை எடுத்துக் காட்டினால் இந்து மதத்தை மட்டுமே ஏன் குறி வைக்கிறீர்கள்? மற்ற மதங்கள் உங்கள் கண்களுக்குத் தெரி யாதா? என்று அரைத்த மாவையே அரைக் கிறீர்கள்?

முதலில் பெரும்பான்மை மதத்தில் இந்த கேடுகெட்டத் தனத்தின் வாலை ஒட்ட நறுக் கினால், மற்றவை இருந்த இடம் இல்லா மலே போய்விடும்.

திருச்சி அருகே நடந்துள்ள இந்தக் காட்டு விலங்காண்டித் தனத்துக்கு என்ன பதில்? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

செத்த பிணத்தின்மீது இப்படிப்பட்ட கூத்துக்களால் அதுவும் பெற்ற தாயின் மீதா இத்தகு தறுதலைத்தனம்?

இந்து மதத்தில் இதைவிடக் கேவலமாக ஆபாசங்கள் உண்டுதான். எடுத்துக்காட் டாக இதோ சில.

பார்ப்பனர்களால் படைக்கப்பட்ட வேதாகமங்களின் தரத்துக்கு ஒன்றிரண்டு இதோ!

ஸ்தயச்: சின்னசிர: க்ருபாணம பயம்

ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்

கோராஸ்யம் சிரஸர்ஸ்ரஜா

ஹுருசிராமுன் முக்த கேசாவ லீம்:

ஸ்யாமாங்கீம் க்ருதமேகலாம்

சவகரைர் தேவீம் பஜேகாளிகாம்

(மந்த்ர மஹோததி)

பொருள்: அப்போது அறுத்தெடுத்த தலை, வால், அபயம், வரம், இவைகளை யுடைய கைகளும், கழுத்தில் மாலையாக விளங்குகின்ற தலைகளின் வரிசையும், அவிழ்த்துவிட்ட கூந்தலும், கடைவாயி னின்றும் ஒழுகு கின்ற இரத்தப் பெருக்கும், சலங்களைத் தோடாக உடைய காதுகளும், சலத்தினது கைகளின் வரிசையே ஒட்டி யாணமாக அணிந்திரா நின்ற இடையையும் உடைய காளிகா தேவியை நான் வழிபடு கிறேன். பின்னும் தேவியின் உருவத்தை வருணிப்பது:

அஸ்மின்பீடே யாஜேத் தேவீம்

சிவரூப சவஸ்திதாம்:

மஹாகால ரதாஸக்தாம்

சிவாபிர்திக்ஷுவேஷ்டிதாம்

பொருள்: சவ ரூபமாயிருக்கிற சிவனு டைய உடலை மிதித்துக் கொண்டிருப்ப வளும், மஹா காலனுடைய சம்போகத்தில் விருப்பமுடையவளும், பெண் நரிகளால் சூழப் பெற்றவளுமான தேவியை பீடத்தின் கண் ஆவாகித்துப் பூசிக்க வேண்டும். இங்ஙனம் பூஜித்தபின் மந்திரம் செபிக்கும் முறை:

ஸுத்ருசோ மதனாவஸம்

பஸ்யன் ய: ப்ரஜபேன் மனும்

அயுதம் ஸோசி ராதேவ

வாக்பதே: ஸமதாமியாத்

பொருள்: ஒரு அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திரசெபம் பண்ணுகிறவன் தேவ குருவுக்குச் சமனாவான். மந்திரம் ஜபிக்க வேண்டிய முறை மற்றொன்று:

திகம்பரோ முக்தகேச: ஸ்மசானஸ்தோ தியாமினி:

ஜபேத்யோ யுதமெலஸ்ய பவேயு: சர்வகாமனா

பொருள்: இரவு சுடுக்காட்டின்கண் நிர்வாணமாக இருந்துகொண்டு தலை மயிரை அவிழ்த்துவிட்டு, பதினாயிரம் உருசெபிக்கிறவனுக்குக் கோரிய பலன் கைகூடும்.

சாவம் ஹ்ருதய மாருஹ்ய

நிர்வாஸா: ப்ரேத பூகத:

அர்க்கபுஷ்ப ஹைஸ்ரேணாப்ய தேன

ஸவீயரேதஸா

தேவீம் ய: பூஜ யேத் மக்த்யா ஜபன்னே கைகசோமனும்

ஸோசிரேணைவ காலனே

தரணீப்ரபுதாம் வ்ரஜேத் (மஹோததி)

பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவை யும் மந்திரம் சொல்லி தேவியை பூஜை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனா வான்!

இந்த அளவோடு போதும் என்றே கருதுகிறோம்.

அர்த்தமுள்ள இந்து மதம் என்று ஆலாபரணம் பாடும் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, ஆரியக் கூட்டமே அதற்குத் துணைபோகும் ஆழ்வார்களே, இவற்றுக் காக வெட்கப்படுங்கள் - வேண்டாத இந்தக் குப்பைகளை எரித்துச் சாம்பலாக்குங்கள்!

பவுத்தர்களைப் படுகொலை செய்த மனுவின் தத்துவம் (2)

*மின்சாரம்

மனுதர்ம சாத்திர நூலைப்பற்றி ஆய்வுச் சொற்பொழிவு நடத்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி. வீரமணி அவர்கள் நூறு வயதையும் கடந்து வாழ்ந்த அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின் "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலிலிருந்து பல எடுத்துக்காட்டுகளை அவ்வப்பொழுது கூறினார்.

இவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் நெருங்கிய தோழர். இந்திய அரசமைப்புச் சட்டம்  உருவாக்க வேலை நடந்து கொண்டிருந்தபோது மதப் பாதுகாப்புக்கான சரத்துகள் அதில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, பார்லிமெண்ட் குழுவை 'இந்து' அலுவலகத்தில் சந்திப்பதற்கு ராமானுஜ தாத்தாச்சாரியாரைத் தான் தனது பிரதிநிதியாக அனுப்பி வைத்தார் என்றால், தாத்தாச்சாரியாரின் முக்கியத்துவம் எத்தகையது என்பது விளங்கும்.

இவரைப்பற்றிய மேலும் தகவல்களைத் தெரிந்து கொண் டால், இவரின் கருத்துக்கள், முடிவுகள் எந்தளவுக்கு முக்கியத் துவம் பெற்றவை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக இராமானுஜ தாத்தாச்சாரியாருக்கு "டாக்டர் பட்டம்" வழங்கியிருக்கிறது. இந்தியாவின் முதல் குடியரசு விழா டில்லியில் நடைபெற்றபோது - அங்கே அதர்வண வேதம் ஓதியவர்.  இராஷ்ட்ரிய ஸமஸ்கிருத ஸம்ஸ்தான் எனும் இந்திய அரசின் நிறுவனத்தில் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

அத்தகைய ஒருவரின் நூலிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆதாரங்களை எடுத்துச் சொல்லும் பொழுது பார்ப் பனர்களோ, சங்பரிவார்களோ மூச்சு விட முடியாது அல்லவா?

அவரின் இந்து மதம் எங்கே போகிறது? எனும் நூலின் பக்கம் 19 என்ன சொல்லுகிறது?

"அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத் தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டி ருக்கிறார்கள். நம்மூர் மழைச்சாலையைவிட மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக் கணிக்கப்பட்டது.

'வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்'... ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது கூடவந்த பெண்கள் கம்மி.. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண் களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான்.

ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால் மநு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மநு?...

வேதங்களை 'எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவர்க்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என 'எளிமை' என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மநுதர்மம். -

பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை 'மநு' பிளவாக்கியது. கூடவே இவர்களை தாண்டி 'சூத்திரர்கள்' என்ற பிரிவினரை உருவாக்கி அவர் களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மநு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உட்பட 11 குணங்களை வகுத்த மநு... சூத்திரனைப் பற்றி இப்படி எழுதியது.

"சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்த பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை"... இப்படிப் போகிறது மநு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் 'நன்றாகவே' வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

"அடே... குழந்தாய் இந்தா பால்.... இதைக் குடித்து மகிழ்வாய் வாழு..." என்ற வேதத்தை மனு திரித்து.. இந்த பாலை இவன் குடிக்க வேண்டும். ....இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்க வேண்டும்" என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா?.... இதற்கு காரணம் என எடுத்துக் கொள்ள, ஏதுவான மநு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.

"பால்யே பிதிர்வஸே விஷ்டேது .

பாணிக்ரஹா யௌவ்வனே புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது

நபஜேத் ஸ்த்ரி ஸ்வதந்த்ரதாம்."

"பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன் னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதை கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதை கேட்கவேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள். ஆண் சொல்படி கேள்"

இப்படி 'பெண்ணுரிமை' பேசும் மநு இன்னொரு இடத்தில் சொல்கிறது. "பெண்கள் அசுத்தமானவர்கள், உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோபதேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே...'' பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மநுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு 'பூம் பூம்' மாடுகள் போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.!

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. "கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்...'' என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.

பல நூறு வருடங்கள்... ஒரு கிரிமினல் - லா போன்றே மநுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன்... க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தான். அவனுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட ஒரு 'சாஸ்திர ஏகாதிபத்ய' சூழ் நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலி ருந்து ஒரு குரல் புறப்பட்டது.

"கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?.. உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது?.. கடவுளா?... அவன் எங்கே இருக்கிறான்?...

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மநு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும்தான் வேண்டும். - என அந்த சூழ்நிலையில் மிக மிக மிக வித்யாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.

இன்றைக்கு அணுகுண்டு வெடி சோதனைக்கே 'புத்தர் சிரித்தார்' - என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால். விளைவுகள் என்ன?."

இவற்றை எல்லாம் சொல்லியிருப்பது திராவிடர் கழகத் தலைவர் அல்லர்; மூத்த சங்கராச்சாரியாரின் முக்கிய ஆலோச கரான ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பதை மறந்து விடக் கூடாது.

ஏதோ திராவிடர் கழகம் தான் அப்படி கூறுகிறது. பெரியார் தான் அப்படி பேசினார். அம்பேத்கர்தான் அப்படி எழுதினார், திராவிடர் கழகத் தலைவர்தான் எழுதுகிறார், பேசுகிறார் என்று ஆரிய எதிரிகள்  ஒரே வரியில் கூறி ஏமாற்றி விடலாம் என்று மனப்பால் குடிக்க முடியாது அக்னிஹோத்திரம் போன்ற வர்களே சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டுள்ளார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எதையும் ஆதாரத்துடன் நூல்களின் பக்கங்கள் உட்பட ஆணித்தரமாக எடுத்துக் கூறுவது ஆசிரியர் வீரமணி அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.

இதுவரை அவர் பேசிய பேச்சு, எழுதிய எழுத்து ஏதாவது ஒன்றிற்காக அறிவு நாணயமாகப் பதில் அளிக்க முன் வந்தவர்களைக் கூறுங்கள் பார்க்கலாம், படித்த மேதாவி என்று தங்கள் முதுகில் தம்பட்டத்தைக் கட்டிக் கொண்டு ஓங்கி அடிக்கும் ஒரே ஒரு பார்ப்பனராவது முன் வந்ததுண்டா?

ஆனானப்பட்ட 'சோ' இராமசாமியே ஆசிரியரின் ஆதாரக் குவியல்களைக் கண்டு மருண்டு போனவராயிற்றே!

இப்பொழுதெல்லாம் எங்கே மனுதர்மம் என்று திருவாளர் 'சோ' இராமசாமி கேட்ட போது, சூத்திரன் சந்நியாசி ஆக முடியாது என்று அண்மையில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதாரத்துடன் ஆசிரியர் எடுத்துக் காட்டியபோது மனுஷன் விதறிப் போகவில்லையா?

திராவிடர் கழகத் தலைவர் தன் ஆய்வுரையில் வைதிக, வருணாசிரம, யாகக் கலாச்சார ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் மத்தியில்  அறநெறிக்  கருத்துக்கள் மூலம் ஆட்கொண்ட அருளாளர் கவுதமர் புத்தரைப்பற்றி எடுத்துக் கூறினார்.

அத்தகு புத்தரின் வழிவந்த மார்க்கத்தையும், அவர்களால் நாடு தழுவிய அளவில் உருவாக்கி வைக்கப்பட்டிருந்த புத்த விகாரங்களையும் எப்படியெல்லாம் அரசர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு ஆரியம் நர வேட்டை ஆடியது என்பதை இடைஇடையே எடுத்துரைத்தார்.

"காக்கையைப் போன்ற கருப்பர்களான பவுத்தர்கள் வேதத்தை எதிர்த்து நாத்திகம் பேசுகிறார்கள். அவர்களால் வேத மார்க்கம் அழிக்கப்பட்டு வேதம் இருளில் மறைந்து போனது. அந்தக் கரியர்களாகிய இருளைப் போக்கி அவர்களைத் திராவிடத் தேசத்து அரசர்களைக் கொண்டே கழுவிலேற்றிக் கொல்லச் செய்து வேத மார்க்கத்தையும், மனு தர்மத்தையும் நிலை நாட்டுவேன்!" என்று ஆதி சங்கரர் சூளுரைத்ததை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருடனை ஒத்தவன் பவுத்தன் என்கிறது இராமாயணம்.

யதாஹி சவ்ர

ஸ்யத தயாஹி புத்த

ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி

(வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம் சுலோகம் - 1502).

இன்றைக்கும் மதுரையில் ஆண்டுக்கொருமுறை சமணர்களைக் கழுவிலேற்றும் விழா கொண்டாடுப்படுவது எதைக் காட்டுகிறது?

'அநேக யாகங்களைச் செய்தவனும், தேவபக்தனுமான' "புஷ்யமித் திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான 'ஆராமங் களை எல்லாம் அழித்து , அவைகளில் சத்தர்மப் பிரசாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்துவந்த தவசிரேஷ்டர் களாகிய லட்சக்கணக்கான புத்த பிக்ஷக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.

பின் ஒரு நூற்றாண்டு கழிந்ததும் சிராஸ்வதிக்கு அரசானான "விக்கிரமாதித்தன்" என்பானும், மற்றொரு அரசனான "கனிஷ்கன் என்பானும் மேற்கூறியவாறே பிக்ஷக்களைச் கொல்வது, அவர்களின் பர்ணசாலைகளை அழிப்பது அரச தருமமான வேட்டை என்றே நினைத்து நடத்தி வந்தார்கள். சிவபக்தரான மிஹிரகுலன் என்பானும் இங்ஙனமே செய்துவந்தான். மேற்கு வங்காளத்திற்கு அரசனாயிருந்த "சசாங்கன்" கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட்டாகவே அநேக புத்த 'விக்கிரங்களையும், துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ் விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தபகவான் பரிநிர் வாணம் அடைந்த போதிவிருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.

காஷ்மீரத்தை ஆண்டுவந்த க்ஷேமகுப்தன் 'சிறீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிக்ஷக்களையும், அவர்களின் கோவில் களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான  "குமாரிலபட்டன்'' என்னும் பார்ப்பனனொருவனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிக்ஷக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடுமாடுகளை அறுக்கும் கொலைக்களங்களாக (காளி கோயில்) மாற்றப்பட்டும் போயின. "சுதன்வா'வென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரையிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டிருந்ததாகச் ''சங்கவிஜயம்' என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. புத்த பிக்ஷக்கள் இருக்கும் இடங்களிலும், அவர்கள் கோயில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று "பிருஹந் நாரதீய புராணம்" கூறுகிறது. வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய "சூலபாணி" என்னும் பார்ப்பனன் புத்தசமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும், அதைப்போக்கக் கடுமையாகப் பிராயச்சித்தங்களும் விதித் திருக்கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருப வராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமணகுலத்தில் விஷ்ணு பகவான் கல்கி'யென்னும் திருநாமத்தோடு அவதரிக்கப்போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகின்றது."

விரித்தால் காண்டம் காண்டமாக எழுத முடியும்.

புத்த மார்க்கத்தை வன்முறையால் வீழ்த்தினார்கள் - புத்த மார்க்கத்தை அரசு கொள்கையாகக் கொண்டு நாடு முழுவதும் இலங்கை வரைகூட பவுத்த சிந்தனைகளை பரப்பியவர் சாம்ராட் அசோகன் எனும் மவுரிய அரசன்.

இந்தியாவின் பொற்காலம் என்று மவுரிய ராஜ்ஜியத்தைத் தான் குறிப்பிட வேண்டும் என்று விரிவுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர்.

புத்தர் தொடங்கிய ஆரிய வைதிக, சனாதன எதிர்ப்புப் போராட்டத்தின் நீட்சியே தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கமும், திராவிடர்  கழகமும்.

பவுத்தத்தை வீழ்த்தியது போல பெரியாரியலையும், திராவிட இயலையும் வீழ்த்திட பல வகைகளிலும் தீவிரமாக முயன்று தோற்று வருகிறார்கள்.

இன்று நடக்கும் போராட்டமும் இதுவே. தமிழர் தலை வரின் மனுநூல் ஆய்வைக்கூட இதனோடு தொடர்புப்படுத்திக் கொள்ள வேண்டும்.

- (வளரும்)

* மின்சாரம்

அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட "ஆரிய மாயை" என்னும் நூலில் காணப்படுவதுதான் இந்தத் தலைப்பு.

தினமலர், விஜயபாரதம், 'துக்ளக்' முதலிய பார்ப்பன ஏடுகள் திராவிடர் கழகத்துக்கும், திமுகவுக்கும் சிண்டு முடியும் ஒரு வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த இரண்டு இயக்கங்களும் ஆரியத்தின் ஆணி வேர் வரை அறிந்தவை. ஆதலினால் இதில் வெற்றி பெற முடியாது என்பது மட்டுமல்ல - கத்தரிக்கோலின் இடையில் மாட்டி சிண்டு அறுந்து போவதுதான் நிகர லாபம்!

"இது உங்கள் இடம்" எனும் பகுதியில் தினமலர் அனாம தேயப் பெயர்களால் ஆரியத்துக்கே உரித்தான பூணூல் வேலையில் இறங்கி வருகிறது. அவ்வப்பொழுது 'விடுதலை' சூடு கொடுத்தும் புத்தி கொள் முதல் பெறுவதாகத் தெரிய வில்லை. 'விடுதலை' எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்க இயலாமல் வியர்த்து விறுவிறுத்து வேறு கிளைக்குத் தாவுவது அதன் உடன்பிறந்த நோயோ!

30.9.2018 நாளிட்ட 'தினமலர்' 8ஆம் பக்கத்தில் அதே இது உங்கள் இடம் பகுதியில் தன் பூணூல் புத்தியை வெளிப் படுத்திக் கொண்டுள்ளது.

சிறீரங்கம் கோயிலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்றார் - கோயில் அர்ச்சகர்கள் அவர் நெற்றியில் வைத்த குங்குமத்தை உடனே அழித்து விட்டார் என்பதோடு நிறுத்தி இருந்தால் தினமலர் நிதான அறிவோடு எழுதியுள்ளது என்று கூட ஏற்றுக் கொள்ளலாம்.

திமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பதால், கொள் கையை விட்டுக் கொடுக்காமல் ஸ்டாலின் அப்படி செய்தி ருக்கலாம் என்கிறது தினமலர். அப்படியே வைத்துக் கொள் வோம் - அதில் என்ன தப்பு? திமுக கொள்கைப்படி அதில் உடன்பாடு இல்லாமல், அதே நேரத்தில் அர்ச்சகர்கள் அநாகரிக முறையில் நடந்து கொண்டாலும் பண்பாடு கருதி தளபதி மு.க. ஸ்டாலின் நடந்து கொண்ட முறையை அறிவும், நாகரிகமும் தெரிந்தவர்கள் பலபடப் பாராட்டவே செய்வார். ஆனால், அதைத் தலை கீழாக்கி சேற்றை வாரி இறைப்பதுதான் பார்ப்பனப் புத்தி.

ஸ்டாலின் குடும்பத்தினர் கோயிலுக்குச் செல்வதைக் கிண்டல் செய்கிறது தினமலர் - பகுத்தறிவை அறிந்தவர்க ளுக்கு ஒன்று தெரியும் - எந்தக் கொள்கையையும் யார்மீதும் திணிக்கக் கூடாது என்பதுதான் பகுத்தறிவின் பால பாடம்.

அதற்காக ஸ்டாலினைப் பாராட்ட மனம் இல்லாவிட்டாலும்   அக்கப் போராக எழுதுவது எந்த ஊர் நியாயம்?

பழுத்த ஆர்.எஸ்.எஸ்.காரரான "இந்துத்துவா" என்பதன் பிதா மகானாகிய வி.டி. சவர்க்கார் கடவுள் நம்பிக்கைக்காரர் அல்லவே - பழுத்த நாத்திகர்தானே, அந்நிலை காவிக் கூட்டத்திற்கு, சங்பரிவார் சங்கதிக்கு எதிர்நிலைதானே. அவரைக் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டார்களா?

வெட்கம் கெட்ட முறையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வைத்து அவரின் பிறந்த நாளிலும், மறைந்த நாளிலும் மரியாதை  செய்கிறார்களே!

இவ்வளவுக்கும் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் மூளையாக இருந்த மூலகர்த்தா சட்டத்தில் சந்து பொந்துகளில் நுழைந்து கோட்சேவை மாட்டி விட்டு தான் மட்டும் தப்பித்துக் கொண்டார் என்பதுதானே உண்மை.

இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்று பிரச்சாரம் செய்தவர் என்று பிரமாதமாகப் பேசுகிறார்களே அவரது 150ஆம் ஆண்டு என்று கூறி ஊர் ஊராக ரத ஊர்வலம் நடத்திக் கொண்டு திரிகிறார்களே - பள்ளிகளுக்கெல்லாம் கொண்டு செல்லுகிறார்களே! அந்த விவேகானந்தர் பூணூலைப் பற்றியும், பசு பாதுகாப்புப் பற்றியும், பார்ப்பனர்களைப் பற்றியும் வண்டி வண்டியாக சொல்லியிருக்கிறாரே - அவற்றை எல்லாம் திரிநூல் தினமலரும், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார், பிஜேபி காவிக் கூட்டம் ஏற்றுக் கொள்கிறதா என்று கேட்க விரும்புகிறோம்.

அடேயப்பா! பூணூல் உயர் ஜாதியினர் சின்னமல்ல - துவி ஜாதியினர் நாங்கள் என்று காட்டிக் கொள்வதற்கு ஆவணி அவிட்டம் கொண்டாடுவதில்லை. பூணூலைப் புதுப்பிப்ப தில்லை என்று மண்ணில் உருண்டு புரண்டு ஒப்பாரி வைத்து எழுதுகிறார்களே மனுதர்மத்திலிருந்து நாம் எடுத்துக்காட்டிய தற்குப் பிறகு மரியாதையாக உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டுமே.

பூணூல் என்பது சிஷ்யன் கோவணம் கட்ட இடுப்பில் கட்டிக் கொண்ட கயிறு என்கிறாரே விவேகானந்தர் - ஏற்றுக் கொள்ளுமா திரிநூல் தினமலர்?

"முஞ்சா' என்னும் புல்லினை குரு சீடனின் இடுப்பிலே கட்டி தீட்சை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய  முப்புரியாகிய அப்புல்லினை சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான்! என்கிறாரே சிறீமான் விவேகானந்தர் ஆதாரம் வேண்டுமா? அவாளின் இராம கிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள நூலான ("சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்" பக்கம் 26-28).

திமுகவுக்குள் முரண்பாடுகள் இருப்பதாக ஏகடியம் பேசும்  இந்தக் கூட்டம் இந்து மதத்திலே இருக்கக் கூடிய இந்தப் பிரச்சினைக்கு என்ன பதில் சொல்ல உத்தேசம்?

பூணூலை விடுவோம்.  பிராமணர்களை பற்றி திராவிடர் கழகம் சொன்னால் 'அய்யயோ துவேஷம் துவேஷம்" ஆயிரம் டிகிரி தோஷம்! உஷ்ணம் தாங்க முடியவில்லை என்று கொய்யோ முய்யோ என்று கூச்சல் போடும் அந்தக் கூட்டத்தை நோக்கி இதோ விவேகானந்தர் பேசுகிறார் - கேண்மின்! கேண்மின்!!

"பிராமணர்களுக்கு ஒரு வார்த்தை; உங்கள் குலப் பெருமையும் பாரம்பரியப் பெருமிதம் வீணே. அதை விட்டொழியுங்கள். உங்கள் சாஸ்திரத்தின்படி பார்த்தால் இப்பொழுது உங்களிடம் பிராமணத்துவம் இல்லை. ஏனெனில் நீண்ட காலமாக நீங்கள் மிலேச்ச அரசின்கீழ் வாழ்ந்து விட்டீர்கள். உங்கள் முன்னோ ரின் வார்த்தைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு மானால், இந்தக் கணமே தூஷாக்கினியில் (உமியைக் குவித்து வைத்து மூட்டுகின்ற தீ) பிரவேசித்து உங்கள் பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள். குமாரில பட்டர் அதையே செய்தார். பௌத்தர்களை அழிக்க அவர் விரும்பினார். எனவே முதலில் அவர் பௌத்தர் ஆனார்.

பின்னர் பலரை வாதத்தில் வென்றார்; பலரது மரணத் திற்குக் காரணமானார்.  தனது பாவங்களைக் கழுவுவதற்காக தூஷாக்கினியில் வீழ்ந்து உடலை மாய்த்துக் கொண்டார். அதற்கான நெஞ்சத் துணிவு உங்களுக்கு இல்லாவிடில், உங்கள் பலவீனத்தை ஒப்புக் கொள்ளுங்கள்; எல்லோருக்கும் உதவிக் கரம் நீட்டுங்கள், அறிவின் கதவைத் திறவுங்கள், தாழ்த்தப்பட்ட பாமர மக்களின் நியாயமான உரிமைகளையும், சலுகைகளையும் மீண்டும் ஒரு முறை வழங்குங்கள்!" என்றாரே விவேகானந்தர்.

(சிறீராமகிருஷ்ண மடம் வெளியீடு - "கொழும்பு முதல் அல்மோரா வரை" பக்கம் 583).

இத்தோடு நிறுத்தி விட முடியுமா? கல்வி விடயத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் சிண்டை அறுக்கும் வகையில் விவேகானந்தர் முழங்கி இருப்பதைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

"ஏ, பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர் களுக்குக்கீழ் ஜாதியினரை விட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால், பிராமணர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காக செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்குக் கொடுங்கள்.

ஏனெனில் அவர்களுக்குத்தான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும்; பிறவியிலேயே அறிவாளியில்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரியர்களையும் பெறட்டும்; இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும், பகுத்தறிவுமாகும்"

(சிறீராமகிருஷ்ண மடம் வெளியிட்ட "கொழும்பு முதல் அல்மோரா வரை" பக்கம் 139,140).

பிஜேபி ஆர்.எஸ்.எஸ். கும்பல், 'தினமலர்', 'விஜயபாரதம்', 'துக்ளக்' வகையறாக்கள் திராவிடர் கழகத்தைப் போலப் பேசுகிற விவேகானந்தரை என்ன செய்ய முடிவு?

திமுகவுக்குள் முரண்பாடுகள் பற்றிப் பேசுபவர்களே, உங்களுக்குள்ளிருக்கும் இந்த முரண்பாடுகளுக்கு என்ன பதில்?

இந்து மதத்தில் தெய்வ காரியம், பகவான் கிருஷ்ணன் அருளியது என்று பீலா விடும் பார்ப்பனப் பிரமுகர்களே - அந்தக் கீதையைப் பற்றி உங்கள் விவேகானந்தர் கூறுவதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்பீர்களாக!

"கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையை சரி வரப் புரிந்து கொள்ள மிக மிக முக்கியமாக பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேத வியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா? இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர்  வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில் கூறப்படுவதுபோல் குருச்சேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக  அர்ஜூனனும், ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன, கீதையை சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி, குருசேத்திர யுத்தம் நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால், இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண்டாரா என்ற பிரச்சினை எழுகிறது.

அர்ஜூனன் ஏனைய பெயர்கள் பயன்படுத்தப்பட் டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருச்சேத்திர யுத்தம் செய்தனர் என்றோ கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

("விவேகானந்தர் கீதையைப் பற்றி கருத்து" ஏ.எஸ்.கே. எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா." பக்கம் 117)

இந்து மதத்தை ஏற்றுக் கொண்டு இருக்கக் கூடிய உங்களிடத்திலேயே இவ்வளவு முரண்பாடுகள் வண்டி வண்டியாக குவிந்து கிடக்கும்போது  தி.க. - தி.மு.க.வுக்கும் ஏதோ முரண்பாடுகள் இருப்பதாக மூக்கை நுழைப்பது புத்திசாலித்தனமா?

தி.மு.க.வை அண்ணா உருவாக்கியபோது, 'தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி' எனச் சொன்னார். தாய்க் கழகமான திராவிடர் கழகம், கொள்கையில் தி.மு.க. தவறு செய்கிறது என்று கண்டால் சுட்டிக் காட்ட வேண்டியது அதன் கடமை. பல கால கட்டங்களில் இத்தகு நிலைப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

தாய்க் கழகம், சேய்க் கழகத்திடம் சிலவற்றைச் சுட்டிக் காட்டினால் இடித்துச் சொன்னால் கண்டித்தால் சம்பந்தமே யில்லாத பார்ப்பனர் கூட்டத்துக்கு என்ன வேலை அங்கி ருக்கிறது?

"தி.மு.க.வின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் வீரமணியை முளையிலேயே கிள்ளி எறியா விட்டால், ஸ்டாலின் அதற்குரிய விளைவுகளை சந்தித்தே தீர வேண்டும். வீரமணி போன்றோரை பொருட்டாக நினைத்தால் தன் தலையில் ஸ்டாலின் மண்ணை அள்ளிப் போடுவதற்குச் சமமாகி விடும்" என்று மண்ணைவாரி இறைத்து தன் கடையை மூடிக் கொண்டு இருக்கிறது தினமலர்.

உண்மையிலேயே மூக்கை நுழைப்பவர்கள் யார்? திராவிடர் கழகம் தாய்க் கழகம். திமுக அதன் சேய்க் கழகம் - தாய்க் கழகத்திற்கென்று சில கடமைகள் உண்டு. அந்த கடமையைச் செய்வது எப்படி திமுகவின் உள்கட்சி விவகாரத்தில் திராவிடர் கழகம் மூக்கை நுழைத்ததாகும்?

தந்தை பெரியார் காலத்திலேயே அண்ணா அவர்கள் மறைந்த நிலையில், யார் முதல் அமைச்சர் என்ற பிரச்சினை வந்தபோது தந்தை பெரியார் தலையிட்டுத் தீர்வு காணவில்லையா?

திமுகவிலிருந்து அதிமுக பிரிந்த நிலையில் எம்.ஜி.ஆரைக் கூப்பிட்டு தந்தை பெரியார் பேசவில்லையா?

திமுகவுக்குள் கலைஞர், நாவலருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நேரத்தில் பெரியார் திடலுக்கு அழைத்து அன்னை மணியம்மையார் பேச்சு வார்த்தை நடத்த வில்லையா?

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களே கட்சியின் உள் பிரச்சினையில் திராவிடர் கழகத் தலைவரை அழைத்து கருத்துக் கேட்டதுண்டே!

திராவிடர் கழகம் -திமுகவுக்குள் இருப்பது எங்கள் குடும்ப விஷயம். இதில் உண்மையிலேயே மூக்கை நுழைப்பது. 'தினமலர்' போன்ற பூணூல் கும்பல்தான் "ஆரிய மாயை" எனும் நூலில் அறிஞர் அண்ணா வெகு அழகாக ஆரியத்தைப் பற்றி  படம் பிடித்துக் காட்டினாரே அதுதான் இந்தநேரத்தில் நினைவிற்கு வருகிறது.

திராவிடத்தைக் கைவிட வேண்டும்; திராவிட இயக்கத்தின் காலாவதியான கொள்கையிலிருந்து விடுபட வேண்டும். குறிப்பாக தி.க. வீரமணியிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்று தொடர்ந்து இந்தக் கூட்டம் தூபம் போட்டுக் கொண்டு இருக்கிறது.

இதற்கொரு முடிவு கட்டும் வகையில் விடப்பட்டதுதான் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நேற்றைய "முரசொலி" அறிக்கை.

"இது பெரியார் மண் திராவிடக் கோட்டை. இங்கே அமைதியைக் குலைக்கும் வெறியுடன் குரோத வால்கள் ஆடினால், கொள்கை வாள்கள் உயரும்; பெரியாரின் இலட்சியப் புகழ் காக்க எங்கள் தலையை கொடுத்தேனும் அவரது சிலையைக் காப்போம்!" என்று திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக

அறிவித்துவிட்ட பிறகு (கட்சித் தலைவராக பொறுப்பேற்ற அந்தத் தருணத்திலேயே பிரகடனப்படுத்தி விட்டார்) திராவிடர்  சித்தாந்த தொடர்பு வேண்டாம், வீரமணி சகவாசம் வேண்டாம் என்று எழுதினால் இதைவிட வெட்கம் கெட்ட, மானங் கெட்டத்தனம் வேறு உண்டா? 'நல்ல மாட்டுக்கு ஒரு சூடு' என்ற பழமொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.. களத்தில் நேராகச் சந்திக்கலாம் - கவட்டுத்தனங்கள் வேண்டாம்!

மின்சாரம்

'தினமலர்' என்ற திரிநூல் ஏடு ஒரு  கால கட்டத்தில் 'டவுட்' தனபாலு என்ற பகுதியில் திராவிடர் கழகத்தையும், அதன் தலைவரையும் வம்புக்கு இழுத்து அக்கப் போர்களை எழுதிக் கொண்டிருந்தது. அவ்வப்போது பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், இப்பொழுது அந்த வேலையை "இது உங்கள் இடம்" பகுதிக்கு மாற்றிக் கொண்டுள்ளது. இந்த இடம் ஒரு பித்தலாட்டமான இடம் - இந்தப் பகுதியில் வரும் அதே கடிதம் 'தினமலர்' குரூப் நடத்தும் 'காலைக் கதிர்' ஏட்டில்  வேறு ஒருவர் பெயரில் வெளிவரும் அந்த இரண்டையும் எடுத்து  வெளியிட்டு 'தினமலர்' ஏட்டின் பித்தலாட்டத்தை அம்பலப் படுத்தியது 'விடுதலை'.

அதற்குப் பிறகாவது நல்ல புத்தி வந்ததாகத் தெரியவில்லை; ஒரு கரண்டி நெய்யில் அபிசாரத்திற்குக் கழுவாய் வைத் துள்ளக் கூட்டமல்லவா? - மானமாவது - வெட்கமாவது!

'தினமலர்' ஏட்டில்  இது உங்கள் பகுதியில் ஒரு கடிதம் வெளிவந்துள்ளது.

'தமிழர் தலைவர் - யார் தேர்வு செய்தது?' என்பது அந்தத் தலைப்பு. மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் கலைஞர் அவர்களே விளிக்கும் பொழுது தமிழர் தலைவர் என் ஆருயிர் இளவல் மானமிகு வீரமணி அவர்களே என்றுதான் விளிப்பார்.

அவர் தமிழர் தலைவரா இல்லையா என்பதை 'தினமலர்' பீடத்தில் அட்சயைப் பெற்றுதான் அறிவிக்க வேண்டுமோ!

காஞ்சிபுரத்தில் ஒரு மடத்துக்குள் உட்கார்ந்து கொண்டி ருக்கும் ஒரு பார்ப்பனச் சிறுவனை ஜெகத்குரு, லோகக் குரு என்று எழுதுகின்றார்களே, பேசுகிறார்களே! இந்த வெட்கம் கெட்ட பார்ப்பன ஏடுகள் - அந்தப் பார்ப்பனப் பையனுக்கு ஜெகத் குரு, லோகக் குரு என்று யார் தேர்வு செய்தது?  இதற்குப் பதில் சொல்லி விட்டு, வீரமணிக்கு தமிழர் தலைவர் என்று யார் தேர்வு செய்தது என்ற கேள்வியை எழுப்பட்டும்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது சென்னை மாநில சட்டப் பேரவையில் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களைப் பார்த்து உங்கள் தலைவர் இராமசாமிக்கு யார் பெரியார் என்று பட்டம் கொடுத்தது? என்று எதிர் தரப்பில் கேள்வியை எழுப்பியபோது, உங்கள் ராஜகோபாலாச்சாரியார் எந்த நாட்டுக்குச் சக்ரவர்த்தியாக இருந்தாரோ (சக்ரவர்த்தி ராஜகோ பாலாச்சாரியார் தானே அவர்) அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் கொடுத்தனர் என்று ஏ.டி. பன்னீர்செல்வம் முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்ததுண்டு.

தந்தை பெரியார் மறைவுக்குப்பிறகு, அன்னை மணி யம்மையார் மறைவுக்குப் பிறகு, இயக்கம் மற்றும் தமிழர் உரிமைகளுக்காகத் தலைமை தாங்கிப் போர்க் குரல் கொடுத்து களங்கள் பல கண்டு காராக்கிரகங்கள் சென்று  பல்வேறு உரிமைகளையும் சாதனைகளையும் பெற்றுத் தந்த 86 வயதில் 75 ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரைத் தமிழர்கள் தங்கள் தலைவராக அழைப்பது இயல்புதான் - பந்தியில் இடம் இல்லாத ஆரியப் பார்ப்பனர்களுக்கு என்ன வந்தது - ஏன் சம்மன் இல்லாமல் ஆஜராக வேண்டும்?

பூணூல் பிரச்சினை பற்றி 'விடுதலை' எழுதியதில் அடங்கி யுள்ள தகவல்களுக்கும் கேள்விகளுக்கும் விடையளிக்க வக்கில்லாத தினமலர் -இப்பொழுது யார்தான் பூணூல் போடவில்லை; ஆவணி அவிட்டம் உள்ளிட்ட சில நாட்களில் அய்திக முறைப்படி பிராமணர்கள் மட்டுமல்ல ; இன்னும் சில ஜாதியினர் பூணூல்கள் அணிகின்றனர். அவர்கள் தங்கள் வீட்டிலோ, மடத்திலோ யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் அணிந்து கொள்கின்றனர். இதில் வீரமணிக்கு என்ன ஆத்திரம் என்று கேள்வி கேட்கிறது தினமலர்.

பூணூல் அணிவது பற்றி பார்ப்பன இந்து மதத்தின்

ஸ்மிரிதியான மனுதர்ம சாஸ்திரம் - அத்தியாயம் 2 சுலோகம் - 42 என்ன கூறுகிறது - அதில் சூத்திரர்களுக்குப் பூணூல் போடுவது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளதா?

பிராமண ஜாதிக்குறியான பூணூல் முதலியதைத் தரித் தால் அரசன் சூத்திரர்களின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் என்று மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224 கூறுகிறதே என்று ஆதாரப் பூர்வமாக எழுதியதற்கு (22.9.2018) மறுப்பெழுத வக்கில்லாத மனுவாதிகள், திசை திருப்பி எழுதிட முயற்சிப்பது ஏன்?

பூணூல் என்பது இந்துமதம் சார்ந்த ஒன்றல்லவா, அதைப்பற்றி விவாதிக்கும் பொழுது, அது தொடர்பாக அவர்களின் மத நூலை எடுத்துக்காட்டி விவாதிப்பது தானே அறிவு நாணயம்.

அறிவு நாணயத்தை அக்ரகாரவாசிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பதே 'தினமலர்' தனக்குத்தானே நிரூபித்துக் கொண்டு விட்டதே!

இன்றுவரை மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி

'துக்ளக்' க்கும் ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமும் விழுந்து விழுந்து எழுதிக் கொண்டு இருக்கிறதே - அதனைக் கண்டிக்கும் துணிவு இந் தத் தினமலருக்கு ஏன் ஏற்பட வில்லை?

திராவிடர் கழகத்திற்குப் பதில் சொல்லும் இடத்தில் மட்டும் மனுதர்மத்தைக் கை விட்டு விடுவது மற்ற நேரங்களில் எல்லாம் மனுதர்மத்தை மண்டையில் ஏற்றிக் கொள்வது என்ற இரட்டை வேடம் பார்ப்பனர்களில் இரத்தத்தோடு பிறந்த புத்தியாகும். அதை..... அடித்தாலும் புத்தி வராது.

பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல; திருப்பதி ஏழு மலையானுக்கு மூன் றரைக் கிலோவில் தங்க பூணூலையும் திருப்பரங்குன்றம் முருகனுக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் பூணூலை யும் காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திர சரஸ்வதி அணிவித் தாரே - சிறீரங்க ரங்கநாதன் கடவுள் சிலைக்கு ரூ.52 லட்சம் செலவில், நாராயண ஜீயர் அணிவித்தாரே அது ஏன்? பார்ப்பனர்களும் கடவுளும் ஒரே ஜாதி என்று காட்டுவதற்கா? என்று கேள்வி எழுப்பினோமே அந்தப் பகுதியைக் கண்டு கொள்ளாதது ஏன்? ஏன்?

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் தேவையில்லாமல் சங்கர மடத்தையும் ஜீயரையும் 'விடுதலை' வம்புக்கு இழுக் கிறதாம் - ரொம்பவே தான் வருத்தப்படுகிறது  பூணூல் ஏடு.

இந்து மதத்தைப் பற்றிப் பேசும் போது - அதன் தலைவர் களை இழுத்துப் பேசாமல் வேறு யாரை பற்றி பேசுவதாம்?

அவர்களை இழுத்து எழுதிய பகுதி தவறானது என்று முடிந்தால் பதில் எழுத வேண்டுமே தவிர - அப்படிப் பதில் எழுதிட வக்கில்லாத கையறு நிலையில், 'அய்யோ சங்கர மடத்தையும், ஜீயரையும் வம்புக்கு இழுக்கிறதே 'விடுதலை' என்று ஒப்பாரி வைத்துப் பலன் என்ன!

ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிடத் தயாராக இல்லாத கூட்டம் எதற்காகப் பேனாவை பிடிக்க வேண்டுமாம்?

சங்கர மடத்திற்கும் ஜீயர் மடத்திற்கும் விரும்பும் இந்துக்கள் மட்டும்தான் செல்கின்றனர். யாரையும் இந்த மடத்தினர் அழைக்கவில்லை; விரும்பாதவர்கள் போவதும் கிடை யாது என்று ஏதோ சாமர்த்தியமாக எழுதுவதாக நினைப்பு - ஆம், இத்தகு நினைப்புகள்தான் பிழைப் பைக்  கெடுக்கும்.

சங்கர மடமும், ஜீயர் மடமம் இந்துக்களுக்குச் சொந்தமானவர் களின் மடம் என்றால் அந்த மடத் தில் இந்து மதத்தில் உள்ள எவரும் செல்ல - புழங்க இடம் இருக்க வேண்டாமா இல்லையா! அந்த நிலை இந்த மடங்களில் உண்டா? குறைந்தபட்சம் இந்த மடங்களில் கடைநிலை ஊழியராக ஒரு தாழ்த் தப்பட்டவரை நியமனம் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம் - என்று சவால் விட்டே கேட்கிறோம்.

உடனே திராவிடர் கழகத்திற்குத் தலைவராக ஏன் ஒரு தாழ்த்தப் பட்டவர் இல்லை என்ற கேள்வி அர்த்தமற்றது. திராவிடர் கழகத்தில்  ஒரு தாழ்த்தப்பட்டோர் தலைவராக வர எந்த விதிமுறையும் தடையில்லை. தாராளமாக வரலாம் -  பணிகள் மூலம் அந்த இடத்திற்கு வருவதில் எந்தவித எதிர்ப்போ, விதிமுறைகளோ கிடையாதே.

திராவிடர் கழகத்தில் மாநிலப் பொறுப்பாளர்களாகவும், அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் இருக்கின்றனரே - அதே நிலை சங்கர மடத்தில் உண்டா, ஜீயர் மடத்தில் உண்டா? விதிமுறைகள் அதனை அனு மதிக்குமா? என்று மீண்டும் மீண்டும் சவால் விடுகிறோம். அடுத்த இதழில் 'தினமலர்'   முடிந்தால் முயற்சி செய்து பார்த்து பதில் எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம் - என்று மீண்டும் மீண்டும் சவால் விடுகிறோம்.

காஞ்சி மடத்திற்கு சு.சாமி சென்றால் சங்கராச்சாரியார் பக்கத்தில் சரி சமமாக ஆசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அதே சங்கர மடத்தில் மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு பொன். இராதா கிருஷ்ணன் சென்றபோது தரையில்தானே உட்கார வைக்கப்பட்டார்.

ஏ.பி.ஜே. அப்துல்கலாமும்  தரையில் உட்கார வைக்கப் பட்டதுண்டே! திரிநூல் தினமலரே பதில் உண்டா? பதில் உண்டா? பதில் உண்டா?

Banner
Banner