மின்சாரம்

குடந்தையில் உடைக்கப்பட்டது கல்லூரி தண்ணீர்ப் பானை

கொந்தளித்து எழுந்தது திராவிட மாணவர் சேனை

கும்பகோணம் என்ற ஊரின் உண்மையான பெயர் குடமூக்கு! அது சமஸ் கிருதமாக்கப்பட்டு கும்பகோணமாயிற்று. ஆரிய சமஸ்கிருதப் பண்பாட்டு படை எடுப்பால் தமிழும், தமிழரும், தமிழ் பண்பாடும் தவிடுப் பொடியாக்கப்பட்டது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

கும்பகோணம் என்றால் அது ஆரிய புரி! கோயில் பெருத்த ஊராச்சே - கொழிக்க மாட்டார்களா பார்ப்பனர்கள்?

ஒரு சோறு பதம்: 1935ஆம் ஆண்டில் நிகழ்ந்தது அது. கும்பகோணம் அக்ரகாரத் துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்ட வர்களை நியமிக்கக் கூடாது - அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மலம் எடுப்பதில் கூட தாழ்த்தப்பட்டவர்கள் கூடாது என்று நகராட்சி தீர்மானித்ததே - இந்தத் தகவல் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

அத்தகைய குடந்தையிலே திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்டதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அந்த வீரிய விதைகூட தன்மான, இன மான எரிமலை வெடிப்பில் வந்து விழுந்தது தான்.

அந்தக் காலகட்டத்தில் எல்லாம் இப்பொழுது போல கல்லூரிகள் கிடையாது. அத்தி பூத்தது போல அங்கொன்றும், இங் கொன்றும்தான் காண முடியும்.

குடந்தையில் ஓர் அரசு கல்லூரி காவிரியின் கரையிலே கம்பீரமாக எழுந்து நின்றது.

அந்தக் கல்லூரி விடுதியில் நடந்த அந்த அநியாயம் என்ன? பிராமண மாணவர் களுக்கென்று ஒரு தண்ணீர்ப் பானையாம் - இதராருக்கு ஒரு தண்ணீர்ப் பானையாம். சம்பந்தம் என்ற கதர்ச் சட்டை மாணவர் பிராமணாள் தண்ணீர்ப் பானையிலிருந்து தம்ளரை எடுத்து தண்ணீர்க் குடித்து விட்டாராம்.

அடேயப்பா! எவ்வளவுப் பெரிய தப்பு - பிர்மாவின் நெற்றியிலே உதித்த பிராம ணருக்கான தண்ணீர்ப் பானையில் பிர்மாவின் காலில் பிறந்த சூத்திரன், விபச்சாரி மகன் (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415) தண்ணீர் எடுக்கலாமா? அது வருணா சிரமக் குற்றமல்லவா?

வருணப் பிழை நடந்து விட்டால் பிராமணர்கள் ஆயு தம் எடுத்து யுத்தம் செய்ய வேண்டும். (மனுதர்மம், அத் தியாயம் 8, சுலோகம் 348). பிரச்சினை விடுதி காப் பாளர் கணேச அய்யரிடம் சென்றது. ருத்திர தாண்டவம் ஆடினார் அய்யர். ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தத் தகவல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட்டை முடித்துவிட்டு, பி.ஏ. வகுப்பில் குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்த எஸ்.தவமணிராசன் என்னும் மாணவர் காதில் விழுந்தது.

(அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் மாணவர் பிரச்சினைகளில் முன் னெடுப்பாக இருந்த மாணவர் தான் அவர். அவர் கேட்காமலேயே டி.சி. கொடுக்கப் பட்டது. பல்கலைக்கழக பேராசிரியர் அ.சிதம்பரநாதன் அவர்களின் பரிந்துரை யோடு குடந்தைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் ஆவார்).

நேராக சம்பந்தப்பட்டமாணவர் சம் பந்தம் (இண்டர் மீடியட் முதலாண்டு மாணவர்) அறைக்குச் சென்றார் தனது நண்பர் டி.மகாலிங்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில், அருமை நண்பா! அபராதம் கட்டாதே - பார்த்து விடுவோம் அதைத்தான்! என்று அந்த ஒல்லி உருவம் அண்டங் குலுங்கக் குலுங்கக் கர்ச்சித்தது.

மாணவர் பட்டாளம் படபடத்தது. அப் பொழுது கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ விடுப்பில் இருந்தார். துணை முதல்வர் மார்க்க சகாயம் செட்டியாரிடம் முறை யிடப்பட்டது. விடுப்பில் சென்ற முதல்வர் வரட்டும்; அதுவரை அபராதம் கட்ட வேண்டாம் என்றார் துணை முதல்வர்.

முதல்வரும் ஆரியத்தின் பக்கம் நின் றால் பிரச்சினையை உள்ளூர் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்தவரிடம் எடுத்துச் செல்லலாம் என்கிற அளவுக்கு மாண வர்கள் தீப்பிழம்பாய்க் கொந்தளித்தனர்.

முதல்வரும் வந்தார், பதட்ட நிலை இருந்த சூழலையும் புரிந்து கொண்டார். அபராதத்தை ரத்து செய்தார் (மாணவர் களுக்கு முதல் வெற்றி!).

அதே கால கட்டத்தில் நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களின் இரு நாடகங்கள் குடந்தையில் நடைபெற்றன. விமலா அல்லது விதவையின் கண்ணீர் மற்றும் இழந்த காதல் என்னும் நாடகங்கள் அவை. தவமணிராசனும், நண்பர்களும் நாட கத்தைப் பார்க்கச் சென்றனர்.

நாடகம் முடிந்தபின் நடிகவேளையும் சந்தித்து தங்களின் பெரியார் கொள்கை ஈடுபாட்டைத் தெரிவித்து, குடந்தை கல்லூரி மாணவர்கள் சார்பாக உங்களுக்கு கேடயப் பரிசு வழங்க விரும்புகிறோம். அந்த நிகழ்ச்சிக்கு அறிஞர் அண்ணாவை யும் அழைக்க விருப்பம் என்றனர்.

நடிகவேளுக்கு மகிழ்ச்சி. அப்பொழுது சிதம்பரத்தில் திராவிட நாடு இதழ் வளர்ச் சிக்காக சிதம்பரத்தில் சந்திரோதயம் நாடகம் நடைபெறுவதை அறிந்த மாணவர் குழாம் சிதம்பரம் சென்றனர். நடிகவேளும் உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவும் இசைந்தார்; சொன்னவு டனேயே குடந்தையில் நடைபெற்ற நடிக வேள் நாடகத்திற்கும் தலைமை வகித்து பாராட்டிப் பேசினார்.

எம்.ஆர்.இராதா விரும்பினால் சந்திரோதயம் நாடகத்தை நடத்தலாம் என்றும், ராதா விரும்பினால் அந்த நாடகத் தில் துரைராஜ் பாத்திரத்தில் தானே நடிக்கத் தயார் என்று அண்ணா கூறினார்.

ராதா அவர்கள் மளிகைக்கடையில் சோப் விற்பதைவிட சோப்புக் கடையையே தனியாக வைத்து மக்களின் அழுக்கைப் போக்கும் தொண்டைச் செய்யலாம் என்று அப்பொழுது அண்ணா பேசினார். நடிக வேள் சிந்தனையில் மின்பொறி தட்டியது.

மாணவர்கள் மத்தியில் மட்டும் நன் கொடை திரட்டப்பட்டு எம்.ஆர்.இராதா வுக்கு விருது வழங்கினர். மீதிக் கொஞ்சம் பணம் கையில் இருந்தது. அப்பொழுதெல்லாம் மாணவர்கள் சந்திக்கக் கூடிய பாசறை - குடந்தை பாணா துரை வடக்கு வீதியிலிருந்த போட்டோ கிராபர் சீராமுலு வீடுதான்.

அங்கே மாணவர்கள் கூடி எடுத்த முடிவுதான் திராவிட மாணவர் கழக அமைப்பு என்பதாகும்.

தலைவர்: எஸ்.தவமணிராசன், துணைத் தலைவர்: கருணானந்தம், செயலாளர்: பழனிவேல், பொருளாளர்: சொக்கப்பா.

அண்ணாவும் வருகை தந்து திராவிட மாணவர் கழக தொடக்க விழா நடை பெற்றது (1.12.1943).

இந்தத் துவக்க விழா கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் கல்லூரி விரிவுரை யாளர் (தமிழ்) இரா.சானகி ராமன் எம்.ஏ. எல்.டி., வடாற்காடு திமிரியைச் சேர்ந்தவர். அன்று காலையில் குடந்தை கல்லூரி பொதுப் பேரவைக்கு அண்ணா அழைக்கப் பட்டு கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ தலைமையில் ஆங்கிலத்தில் ஒன்றரை மணி நேரம் பேசினார்.

அண்ணாவை அழைத்தாயிற்று. அய்யா வையும் எப்படியும் கல்லூரிக்குள் கொண்டு வந்தாக வேண்டும். பார்ப்பன ஆதிக்கக் கோட்டையில் எதிர்ப்பு எழாமல் இருக்குமா? எதிர்ப்புக்கனல் சூடேற சூடேற கழக மாணவர்களும் களத்தில் குதித்தனர்.

தந்தை பெரியார் அழைக்கப்பட்டு, ஆள் உயர மாலை அணிவித்து விருந்தளித்து உபசரிக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கக் கேட்டு கொள்ளப் பட்டபோது - தந்தை பெரியார் தெரிவித்த கருத்து - அவர் பெரியார் - பெரியாருள் பெரியார்! என்பதை வெள்ளிக் கீற்றெனத் தெரிவித்தது.

நான் பேசுவதில்லை என்று கல்லூரி முதல்வருக்குத் தெரிவித்து இந்த விருந்தில் நான் கலந்து கொண்டிருப்பதால் நான் பேசு வது சரியல்ல - வெளியில் கூட்டம் போடுங்கள் - நான் வந்து பேசுகிறேன் என்று கூறித் தந்தை பெரியார் விடைபெற்ற செய்தியை என்னென்பது!

அதன் பின்னர் அதே கல்லூரியில் இலக்கிய மன்றத்தில் முதல்வர் வி.சி.சாக்கோ தலைமையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தந்தை பெரியார் 2 மணி நேரம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட மாணவர் கழகம் தோன்றி விட்டது. கல்லூரிக்குள் உரிமைச் சங்க நாதம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. இதில் மூன்று நிகழ்ச்சிகள் முத்தாய்ப்பா னவை.

குடந்தைக் கல்லூரியில் உ.வே. சாமிநாத அய்யர் நினைவுத் தங்கப்பதக்கப் பேச்சுப் போட்டி பல்வேறு கல்லூரிகளுக் கிடையே ஆண்டுதோறும் நிகழும். கல்லூ ரியில் திராவிட மாணவர் பாசறையிலே பல சொற்பொழிவாளர்கள் தயாராகி விட்டனர். அண்ணாவின் அடுக்கு மொழியும், அழகு தமிழும் மாணவர்கட்குத் தாரக மந்திரம்.

ஆனால் கல்லூரி யூனியன் அய்யங் காரின் ஆதிக்கத்தில் இருந்ததால், பேச்சுப் போட்டியிலேயே கலந்து கொள்ளாத ஒரு மாணவரை அனுப்பும் முடிவை ரகசியமா கவே வைத்திருந்து கடைசியில் அறிவித்து விட்டனர்.

அவ்வளவுதான்...! ஆரிய ஆசிரியரின் அநீதியைக் கண்டு ஆர்ப்பரித்தார் கரு ணானந்தம், விடுவாரா தவமணி?

மாணவர்களைத் திரட்டிக் கிளர்ச்சி செய்ய நேரமில்லை. என்றாலும் கருணா னந்தமும், தவமணியும் இரவோடு இரவா கத் தமிழாசிரியர் திரு.சானகிராமன் இல் லத்திற்குச் சென்று அநீதியைக் கண்டிக்க அவர் மூலமாக முதல்வரிடம் வற்புறுத் தினர்.

நேரமில்லாமல் போனதால் முதல் வரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆரியம் திராவிடத்தின் மேல் தன் ஆதிக்க வலுவைக் காட்டிவிட்டது. திராவிட இனத்திற்குத் தீங்கிழைக்கப்பட்டு விட்டது.

அன்று மாலையிலேயே குடந்தை திரா விடர் கழகக் கட்டிடத்தில் திராவிட மாண வர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினர். ஆரியத்தின் அக்கிரமத்தை பலமாகக் கண்டித்தனர்.

கண்டனத் தீர்மானத்தைக் கருணானந் தம் படிக்கும் போதும், பேசும் போதும் அவர் அடைந்திருந்த கோபத்தின் உச்ச நிலை அவரது நெருங்கிய தோழர்களுக்குக்கூட வியப்பையூட்டியது.

அமைதியாயிருப்பவர் ஆவேசக் காரரானார்!

பொறுமையாயிருப்பவர் புலியாகக் காட்சி யளித்தார்!!

நிதானமாகப் பேசுபவர் நெருப்பைக் கக்கினார்!!!

அந்தக் கூட்டத்தில் தான், அதே பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக வந்திருந்த கே.ஏ. சோமசுந்தரம், மதியழ கனாக - மாறிக் கண்டனக் கூட்டத்திலும் கலந்து கொண்டு, திராவிட மாணவர்களின் விழிப்புணர்ச்சியை வியந்து பேசிப் பாராட்டினார்.

* * *

கல்லூரித் தமிழ் மன்ற நிதிக்காகக் கவிஞர் கருணானந்தத்தின் மூளையில் ஒரு திட்டம் உதயமாகியது. சற்று துணிச்சலான திட்டம் தான். ஒரு இசை விழா ஏற்பாடு செய்து நிதி திரட்ட, நன்கொடை ரசீதுகளும் அச்சடித்துப் பணியில் இறங்கி விட்டார்.

பொறுக்குமா பூசுரர்களுக்கு...? நிர் வாகத்தை நெருக்கினர்!

பயந்தார் முதல்வர்; பணிந்தார் முதல்வர்!

எப்படி என் அனுமதியின்றிப் பணம் வசூல் செய்யலாம்? என்று விளக்கம் கேட் டுத் தமிழாசிரியருக்கு தாக்கீது கொடுத்து விட்டார்.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ் சுமா...? அரைக்க அரைக்கச் சந்தனம் மணம் கமழும் அடிக்க அடிக்கப் பந்து உயர எழும்பும் அடக்க அடக்க ஆர்வம் பீறிட்டுக் கிளம்பும்

அந்த வகையில், இந்தப் பிரச்சினையில் உண்டு இல்லை என்று பார்த்து விடலாம் என்று தவமணியும், கருணானந்தமும் முடிவு செய்தனர். நடப்பது நடக்கட்டும் என்று தமிழாசிரியரும் தைரியமாகப் பச்சைக் கொடி காட்டி விட்டார்.

பணம் வசூல் செய்யப் பட்டுவிட்டது. இசை விழா விற்கு நாள் நெருங்கி விட்டது.

நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்தால் தானே விழா நடைபெற இயலும்?

மண்டபம் நிர்வாகத்தின் கையில்...!

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் ஏற்ற முடிவெடுக்கும் இயல்புடையவர் கருணானந்தம்.

துணிச்சலான முடிவு திராவிட மாணவர் கட்கு! சிக்கலான நிலை நிர்வாகத்தினருக்கு! விழா நாளும் வந்தது! அன்று கல்லூரியில் என்ன நடக்கப் போகிறதோ என்ற ஒரே பரபரப்பு ...!

இதை ஒரு கவுரவப் போராட்டமாக ஆரிய மாணவர்களும், ஆசிரியர்களும் கருதி அதற்கு ஆயத்தமாயினர்.

மாலையில் விழா....!

மண்டபம் பூட்டப்பட்டுக் கிடந்தது. அவ்வளவு தான்...!

தமிழ் - தவமணியின் போர்க்குரல்.

வாழ்க - திராவிட மாணவர்களின் இடிமுழக்கம்!

அய்யங்கார் - தவமணி ஒழிக - திராவிட மாணவர்கள்!

முதல்வர் சில ஆசிரியர்களுடன் தன் அறையிலிருந்து ஜன்னல் மூலம் ஆர்ப் பாட்டக் காட்சியைக் கண்டு அமைதியில் லாமல் அல்லாடிக் கொண்டிருந்தார். வெளி யிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேடிக்கை யான காட்சி.

திறந்த வெளி சிறையில் அய்யங்கார்...! கம்பியிட்ட சிறையில் முதல்வர்!!

இந்த அமளி எதையுமே கண்டு கொள்ளாதவர் போல் நிம்மதியாக ஆசிரியர்களின் ஓய்வறையில் தமிழாசிரியர்!

அய்யங்காருக்கு ஏற்பட்ட அவல நிலையைக் கண்டதும், அவருக்கு உதவக் கல்லூரிக் கரையில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த ஆரிய மாணவர்கள் திபு திபு'வெனப் பாலத்தின் மேல் ஏறி இக்கரைக்கு விரைந்தனர்.

அவ்வளவுதான்...!

நிலைமை கட்டு மீறிப் போய் விட்டதைக் கண்ட முதல்வர், மேலும் மோசமாகாமல் தடுக்க விரைந்தோடி வெளியே வந்தார். இக்கரையிலிருந்த மாணவர்களைக் கண்டு பேசினார்.

தமிழாசிரியரை வரச் சொல் - ஏகோ பித்த இடி முழக்கம். ஆள் அனுப்பினார் அவரை அழைத்து வர.

புண்பட்டிருந்த தமிழாசிரியர் புன்னகை யுடன் புலி போன்று வந்து பொலிவாக நின்றார், போர் வீரர்கள் முன்பு. வரவேற் பொலி - வாழ்த்தொலி; வானைத் தொட்டது! பின் என்ன...?

திராவிட மாணவர்களின் திடத்தையும், திட்டத்தையும், பலத்தையும், படையையும் கண்ட முதல்வர், தமிழாசிரியரிடம் கேட்டி ருந்த விளக்க தாக்கீதை வாபஸ் பெற்றார்; விழாவிற்கு அனுமதியளித்தார்.

மண்டபத் திறவு கோல் மாணவர் கைக்கு வந்தது. திருவெண்காடு இசை மேதை டி.பி.சுப்பிரமணியம் அவர்கள் மேடையில் அமர்ந்து நாயனம் வாசித்தார். தம்புராசுதி, பிடில், மிருதங்கம் பக்க வாத்தியங்களுடன் புதுமை இசை விழா நடந்தது; வெற்றிகரமாக இனிது நடந்தது. சிறப்பு என்னவென்றால், கல்லூரி முதல்வரே தலைமை தாங்கி நடத்தித் தந்தார்.

குடந்தை அரசினர் கல்லூரியில் தகுதிமிக்க தமிழ்ப் பேராசிரியர்கள் இருந்தும் சமஸ்கிருதப் பேராசிரியர்களே கொடி கட்டிப் பறந்தனர். பெயருக்குத்தான் கல்லூரியில் தமிழ் மன்றம் - சமஸ்கிருதத் தைச் சார்ந்தே அது செயல்படும் நிலை.

இந்த நிலையில் மாணவர் தவமணி ராசனும், கருணானந்தமும் சேர்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர். அ.சிதம்பரநாதனுக்கு அழைப்பு விடுத்தனர். முறையாக மன்ற பொறுப்பாளர்களிடம் அனுமதி பெற வில்லை என்று சமஸ்கிருதவாதிகள் தடுத் தனர். மாணவர்கள் திரட்டப்பட்டனர். ஆரியர் சூழ்ச்சி அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட்டது, விளைவு அ.சிதம்பரநாதனே வந்தார். அரும் உரையும் தந்தார்.

* * *

திராவிட மாணவர் கழக மாநில மாநாடு குடந்தை வாணி விலாச சபாவில் 1944 பிப்ரவரியில் 19, 20 நாள்களில் கான்பகதூர் கலிபுல்லா, பேராசிரியர் முத்தையா ஆகியோர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. திறப்பாளர்: தமிழ்ப் பொழில் ஆசிரியர் கோ.சி.பெரியசாமி புலவர், வர வேற்புரை: எஸ்.தவமணி ராசன், அறிஞர் அண்ணா, புதுக்கோட்டை சமஸ்தான திவான் தாருல் இஸ்லாம், ஆசிரியர் தாவுத்சா, இரா.நெடுஞ்செழியன், ஏ.பி. ஜனார்த்தனம், கே.ஏ.மதியழகன், க.அன்ப ழகன், இளந்தாடி இரா.செழியன், இளம் வழுதி, பூ.கணேசன், மா.நன்னன், கி.தியா கராசன் முதலியோர் மாநாட்டில் பங்கேற்று சங்கநாதம் செய்தனர். தந்தை பெரியார் மாநாட்டுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியை மாணவர் க.அன்பழகன் படித்தார்.

அதே காலகட்டத்தில் திருவாரூரில் மாணவர் மு.கருணாநிதி தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவை நடத்தினார். தலைமை: ஈ.வெ.கி. சம்பத். பங்கேற்றோர்: அண்ணாமலைப் பல் கலைக்கழக மாணவர் இரா.நெடுஞ்செழி யன், கே.ஏ.மதியழகன், கடலூர் மாணவர் கி.வீரமணி ஆகியோர் ஆவர்.

அந்தக் காலகட்டத்தில் இணைந்து பணியாற்றிய மாணவர்கள்: கோ.இலட்சு மணன் (பிற்காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக வந்தவர்), நெடும் பலம் சாமியப்ப முதலியார் அவர்களின் மைத்துனர் மகன் சொக்கப்பா, அமீர் அலி, இராமதாஸ், திருஞானம், செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி - தற்போதைய தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் வழக்குரைஞர் அமர்சிங் மாமனார், மாநில மகளிரணி செயலாளர் கலைச் செல்வியின் தந்தையார்), செல்வராஜ், தம்புராஜ், ஊக்கச் சக்தியாக இருந்தவர் தமிழாசிரியர் இரா.சானகிராமன்.

குடந்தையில் அன்றைய இயக்கப் பிரமுகர்கள் - கே.கே.நீலமேகம், வி.சின்னத் தம்பி, பி.ஆர்.பொன்னுசாமி, வழக்குரைஞர் முத்து தனபால், ஆர்.சி.வெங்கட்ராமன், எஸ்.கே.சாமி முதலியோர் ஆவர். மாண வர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தனர்.

இந்த மாணவர் பட்டாளம்தான் பிறகு இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். ஈரோட்டில் மாணவர் பயிற்சி முகாம் நடத்திட வரும்படி ரூ.10 பணவிடை (எம்.ஓ) அனுப்பி தவமணி ராசனுக்குத் தந்தை பெரியார் அழைப்பு விடுத்தார் என்றால் சாதாரணமா?

அந்த முதல் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்ற மாணவர்கள் 1944இல் முதன் முறையாக தெ.ஆ.மாவட்டத்துக்கு பிரச்சாரத்திற்கு அனுப்பப்பட்டனர். வழி நடத்தியவர் மா.பீட்டர் பி.ஏ. பிரச்சாரத்தில் பங்கு கொண்டவர்கள் கருணானந்தம், செங்குட்டு வன், பூண்டி கோபால்சாமி, இராமதாஸ், திருவேங்கடம், 11 வயது சிறுவன் வீரமணி - எடுத்த எடுப்பில் அந்த மாணவன் இயக்கப் பாடலைப் பாடுவார். பிறகு மேசை மீது ஏற்றப்பட்டுப் பேசுவார். கம்ப ராமாயணத் தில் காதல் கொண்ட என் தமிழா, வம் பளந்து பேசுவது ஏன்? வாய்த்த நிலை அறிந்ததுண்டோ? என்பது தான் அந்தப் பாட்டு - சிறுவன் வீரமணியை பூண்டி கோபால்சாமி உப்பு மூட்டை தூக்குவாராம்.

திராவிட இயக்க வரலாற்றில் வரலாறு படைத்த அதே குடந்தையில் வரும் ஜூலை 8ஆம் தேதி ஞாயிறன்று திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா (75ஆம் ஆண்டு) நடைபெறுவது - கழக வரலாற்றி லும் தமிழ்நாட்டு வரலாற்றிலும் காலங்கடந் தும் ஒளி வீசப்போகும் ஒப்பரும் மாநாடு.

ஆரியம் சலங்கை கட்டி ஆடும் ஒரு தருணத்தில், வருணாசிரமம் வாகை சூடலாம் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இந்தக் காலகட்டத்தில், சமூகநீதிக்கு சவால்கள் கிளம்பியிருக்கும் இந்தப் பரு வத்தில், இந்துத்துவா அறை கூவலிடும் பொழுதில்தான் இம்மாநாடு!

திராவிட மாணவர் கழகத்தின் வரலாறு மகத்தானது. குடந்தைதான் அதன் தாய்வீடு. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி 1944 ஆகஸ்டு 27இல் சேலத்தில் திராவிடர் கழகமாக முகிழ்த்தது என்றால் அதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே குடந்தைத் திருநகரில் (1.12.1943) திராவிட மாணவர் கழகம் உதித்தது. தாய்க்கு மூத்த தனயன் என்று சொல்லலாமோ!

(கோவில்பட்டி திராவிடர் கழகத்தின் 18ஆம் ஆண்டு விழாவில், 19.6.1927 அன்று வ.உ.சி.யுடன் தந்தை பெரியார் பங்கேற்றுப் பேசினார் (குடிஅரசு, 26.6.1927) என்ற தகவல் இருக்கிறதே).

பொங்கிற்று திராவிடர் மாணவர் பட்டாளம் என்னும் புது வெள்ளம் என்ற வரலாறு படைக்க வாரீர், வாரீர் என்று அழைக்கிறோம்.

கடந்த ஒரு மாதமாக குடந்தை மாந கரமே அல்லோலப்படுகிறது. தமிழ்நாட்டின் சுவர்கள் எல்லாம் குடந்தை மாநாட்டைக் குறித்தே பேசிக் கொண்டு இருக்கிறது.

ஆயிரக்கணக்கான மாணவச் சிப்பாய் களும், இளைஞர்களும் அணிவகுக்க இருக்கிறார்கள்.

இப்படைத் தோற்கின் எப்படை வெல் லும் என்று சங்கநாதம் செய்வோம் வாரீர்!

ஒழுங்குக்கும், நேர்த்திக்கும், கட்டுப் பாட்டுக்கும் கட்டியம் கூறும் கருஞ்சட்டைச் சேனையே வா, வா!

நிகழ்ச்சிகள் கொத்துக் கொத்தாக ஜொலிக்கின்றன. மாணவ இளைஞர் உலகிற்கு வழிகாட்டும் மாநாடு. அரிய தீர்மானங்கள் அணிவகுக்க உள்ளன. தமிழர் தலைவர் தருவார் புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும்!

ஜூலை 8 என்பது நமது நிலையம் குடந்தையே! குடந்தையே!! குடந்தையே!!!

(ஆதாரங்கள்: எஸ்.தவமணிராசன்,

கவிஞர் கருணானந்தம் மணிவிழா

மலர்கள்)

தமிழ்நாட்டின் பல கோவில்களில் இருக்கிற சிலைகளைத் திருடி, பல கோடி ரூபாய் வருமானம் தேடிய பக்கா திருடர்களின் கண்ணைக் குத்தி, காலை வாங்கி, மூளையைச் செயல்  இழக்க முடியாமல் சர்வ சக்தி' சாமிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது பரிதாபம்!

அவர்களைக் காப்பாற்ற, மீட்டுக்கொண்டுவரும் திருப்பணி யை''ச் செய்வதற்கென்றே, காவல் துறையில் தனிப்பிரிவுக்யூ' பிராஞ்ச் மாதிரி, சிலை திருட்டு தடுப்பு மீட்புப் பிரிவு, திறமை வாய்ந்த அதிகாரியான அய்.ஜி. பொன்.மாணிக்கவேல் அய்.பி.எஸ். அவர்கள் தலைமையில் இயங்குகிறது!

நேற்று (27.6.2018) சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை கடத்தல் மீட்பு வழக்கில் நேரில் ஆஜராக சொல்லிய தாக்கீது காரணமாக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன் தமக்குள்ள குறை, தமிழக அரசின் பல அதிகாரிகளின் ஒத்துழையாமைபற்றியெல்லாம் கூற, அரசு தரப்பு வழக்குரைஞரும் பதில்கள் கூற, ஒரு சிறு பட்டிமன்றமே - நீதிமன்றத்தில் கலகலப்பாக நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன!

கோவில் சிலைகளுக்கு தக்கப் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை'' என்றும், விரைவில் தனி பாதுகாப்புப் பெட்டக (Safe Deposit Vault) த்தைக் கட்டி முக்கிய கடவுள் சிலைகளை அங்கே உள்ளே வைத்துவிட ஏற்பாடு செய்வது அவசர அவசியம்'' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்! நல்லது!!'

இதிலிருந்து பகுத்தறிவு பாழ்படாத மனிதர் எவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்னென்ன?

1. கடவுள், கடவுளச்சிகளான இந்து மதக் கடவுள்களுக்கு தக்கப் பாதுகாப்புத் தருவது அரசின் கடமை என்றால், இனிமேல் கருவறைக்குள் ஒருபுறம் அர்ச்சகர் மறுபுறம் காவல்துறை அதிகாரி என்று இருந்து காத்தால்தான் விசா' வாங்காமல் - பாஸ்போர்ட் எடுக்காமலேயே அயல்நாட்டுக்குப் பயணமாக மாட்டார்கள் நமது கடவுள்கள்! கடவுளால் ஆகாது, காவல்துறையால் ஆகும். (கடவுளை மற; மனிதனை நினை).

2. அதென்ன நம் சர்வ சக்தி சாமிகளை - கடவுள் கூட்டத்தை 'வெறும் சிலைகள்' என்று கூறி, அவமதிக்கலாமா? அவர்கள்மீது இ.பி.கோ. 294-ஏ - மதம் விமர்சனம் - மனதைப் புண்படுத்தும் வகையில் - அந்தப் பிரிவுகளில் வழக்குப் போடவேண்டாமா, இந்து முன்னணி வீரத் துறவிகள், அவாளின் தொண்டர்களும்?

3. பூஜை செய்தால் கடவுள்கள்'; வெளிநாடு புறப்பட்டு விட் டால் சிலைகளா? Objection My Lord இவர்கள்தான் நமது மதிப் பிற்குரிய கடவுள்கள்  (Lords) காரணம் கடவுள்களைக் காப் பாற்றும் நடமாடும் கடவுள்கள்' - லார்டுகள் அல்லவா!

கடவுள் கடத்தலைத் தடுத்திட ஒரே வழி - பிரதான கடவுள்கள், கடவுளச்சிகளை - பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ளே தள்ளி'' - திருவிழா நேரங்களில் மட்டும் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இருமுறை பரோல்' தந்து வீதி உலா'  வெளிச்சம் காட்டி, பிறகு உள்ளே தள்ளிவிடுவது நல்ல முறைதான்!

இந்து மதத்தை மட்டும் பேசுகிறீர்களே என்ற தி.க.வினரைக் கேள்வி கேட்டு மடக்கும் சாம்பிராணிகள் பல உண்டு.

அவர்களுக்கு தி.க.காரன் இப்படிச் சொல்வானே! ஏனய்யா, மற்ற மதக்கடவுள்களையே உள்ளடக்கித்தானே ஒரே வரியில் கடவுள் இல்லை, கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று கூறுகிறோம்; எழுதுகிறோம்; சிலைப் பீடங்களில் பொறிக்கிறோம்'' என்பாரே! அது சரியானது என்று மாண்பமை நீதியரசர் ஜஸ்டீஸ் எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் தீர்ப்புக்கூட கொடுத்துவிட்டார் 1973 இல். அது ஒருபுறமிருந்தாலும், அதென்ன இந்து மதக் கடவுள்கள், கடவுளச்சிகள்மீது மட்டும் சிலை திருடர்களுக்கு அமோக பக்தி!?

ஏன், கிறித்துவ, இசுலாமிய கடவுள்களைத் திருட முடிய வில்லை? அவர்கள் கொஞ்சம் முன்யோசனையுடன் ஒருவர், பரம மண்டல பரம பிதா'' என்று சொல்லி விட்டனர்!

மற்றொருவர், அருபி'' எங்கள் அல்லா என்று சர்வ ஜாக்கிர தையாகக் கூறிவிட்டார்!

பரம மண்டல பரம பிதா'வை இதுவரை எந்த விண்வெளி வீரரும் கண்டுபிடிக்க முடியுமா? அதேபோல்தான், அவரில்லாத இடமே இல்லை என்று கூறிவிட்டதால், தனியே திருடப்பட முடியாத ஏற்பாட்டைச் செய்துவிட்டனர்.

அர்த்தமுள்ள இந்து மதத்தில் மட்டும்தான் இந்த வசதி வாய்ப்பு - ஏர்கண்டிஷன் அறையில் - குளிர்பதனத்தில் நம் கடவுள்கள், கடவுளச்சிகள். உல்லாச வாழ்நாள் சிறையில்.

எல்லாம் பிள்ளை விளையாட்டே'' என்று ஒரு போடு போட்டாரே நம் வடலூர் வள்ளலார்!

அவர் கூறியதுதானே இன்று நடக்கிறது - இல்லையா!

இந்த விளையாட்டில் அரசுக்கும், நீதிமன்றத்திற்கும்கூட பங்கு உண்டோ?


துவார பாலகர்களா வீரமணியும் - வைகோவும்?

மின்சாரம்

தி.மு.க.வுக்கு ஒரு பக்கம் கே. வீரமணியும், இன்னொரு பக்கம் வைகோவும் துவாரபாலகர்கள் போல் இருப்பார்கள். தி.க. போல ம.தி.மு.க.வும் இருக்கும் என்று 'துக்ளக்'கில் (13.6.2018 பக்கம் 10) திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் எழுதியுள்ளார்.

நாராயணக் கடவுளைப் பார்க்க வந்த சனாகதி முனிவரை அனுமதிக்காத துவாரபாலகர்களை சபித்த சனாகதி முனிவராக குருமூர்த்திகள் இருக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை.

இந்தப் பார்ப்பனர் எந்தப் பொருளில் சொல்லி யிருந்தாலும் தி.மு.க.வுக்கு அப்படி இருப்பதில் ஒன்றும் தவறும் இல்லை.

திமுகவை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால் இந்தப் பலம் வாய்ந்த துவாரபாலகர்கள் இருந்து தொலைகிறார்களே என்ற ஆத்திரத்தில் அய்யர்வாளின் பேனா முள் இப்படி எழுதுகிறது என்றே கொள்ள வேண்டும்.

திமுக செயல் தலைவர் போக்கில் மாறுதல் வேண்டும் - பழைய திராவிட இயக்கச் சிந்தனைகளை விட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லிப் பார்த்தார் இந்தக் குருமூர்த்தி அய்யர்.

அது நடக்காது என்று தெரிந்த நிலையில் தான் இப்படிச் சொல்லியிருக்கிறார். இந்த இரு துவாரபாலகர்கள் இருந்து தொலைக்கிறார்களே என்ற ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டிருக்கிறது.

234 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் இப்பொழுது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ஆகிவிட்டோமே!

அக்ரகார அம்மையார் ஜெயலலிதா இருந்தார்  அவர் மரணத்துக்குப் பின் உள்ளதும் போச்சே நொள்ளைக் கண்ணா என்று புலம்பித் தவிக்கின்றனர். இனி எந்த ஒரு யுகத்தில் அக்கிரகாரத்து ஆசாமி தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வரப் போகிறார் என்ற ஆற்றாமையில் எதை எதையோ கிறுக்குகிறது 'துக்ளக்'!

சமுதாயப் புரட்சி இயக்கமாக இருக்கக் கூடிய திராவிடர் கழகம், ஒரு பக்கம் அரசியலில் இருந்தாலும் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தினால் அவர்களைத் துவம்சம் செய்யும் வைகோவும் இருக்கும் நிலையில் சுயமரியாதைக்காரரான கலைஞரின் மகன் தளபதி மு.க. ஸ்டாலின் அந்தத் திராவிட இயக்கச் சித்தாந்த பாதையில்தான் பயணிக்க முடியும் என்பதை உணர்ந்த நிலையில்தான் உலக்கையை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறது அக்கிரகாரம்.

தமிழ்த் தேசியவாதிகள் இந்த இடத்தைத்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திராவிடம் - ஆரியம் என்பதுதான் ஒன்றுக்கொன்று எதிரணியிலிருந்து செயல்பட முடியும் என்பதை உணர வேண்டும்; தமிழர் என்று சொன்னால் சுலபத்தில் பார்ப்பனீயம் "சுவாகா" செய்து விடும் என்பதை உணர்வார்களாக!

திராவிடர் கழகத் தலைவரும், மதிமுக பொதுச் செயலாளரும் துவார பாலகர்களாக இருப்பது பெருமை தானே தவிர சிறுமையல்ல!

ரஜினியை விமர்சிப்பது வீரமணிக்கு விளம்பரமா?

கேள்வி: ஜனநாயகத்தில் பாலபாடம் கூடத் தெரியாதவர் என்று ரஜினியை தி.க. தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளாரே?

பதில்: ரஜினியை விமர்சிப்பதன் மூலமாக அவருடைய பெயர் பத்திரிக்கைகளில் கொட்டை எழுத்துகளில் வருகிறது. எப்போதடா பத்திரிகையில் பெயர் வரும் என்று காத்திருக்கும் வீரமணி போன்றவர்களுக்கு, அது பெரும் லாபம் தானே. ஜனநாயகத்தைப் பற்றிப் பேச வீரமணிக்கு ஏராளமான தகுதிகள் இருக்கின்றன. ஜனநாயக தத்துவத்தை முழுமையாகக் கரைத்துக் குடித்ததால்தான் வீரமணி 1978லிருந்து இன்று வரை 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்ப்பே இல்லாமல் திராவிடர் கழகத் தலைவராக இருந்து வருகிறார்.

('துக்ளக்' 20.6.2018 பக்கம் 15)

கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யரின் மேதா விலாசத்தை என்னென்று பறைசாற்றுவதோ!

ரஜினியை விமர்சித்தால்தான் வீரமணியினுடைய பெயர் பத்திரிகைகளில் கொட்டை கொட்டையாக வெளி வருமாம். அதற்காகத்தான் வீரமணி, ரஜினியை விமர்சிக் கிறாராம் கண்டுபிடித்து விட்டார் இந்த அக்ரகாரக் கொலம்பசு.

பத்து வயது பாலகனாக மேடை ஏறித் தமிழ்நாட்டை வலம் வந்தவர் வீரமணி; 85 ஆண்டு வாழ்வில் 75 ஆண்டுப் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்ற விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் மானமிகு வீரமணி அவர்களுக்கே உண்டு.

அந்தப் பதினோறு (29.7.1944) வயது பாலகனின் மேடைப் பேச்சைக் கேட்டு பெரும் பேச்சாளரான அறிஞர் அண்ணா அவர்களே இப்பொழுது இங்குப் பேசிய சிறுவன் வீரமணியின் நெற்றியில் திருநீறும், காதிலே குண்டலமும், கழுத்திலே உருத்திராட்சக் கொட்டையும் இருந்தால் திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தன் என்று கூறி விடலாம். ஆனால் இவர் உண்டதெல்லாம் பார்வதியாரின் ஞானப்பால் அல்ல -  "பகுத்தறிவு ஈரோட்டுப்பால்!" என்ற பாராட்டைப் பெற்றவர்.

கல்லூரிகளில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் தங்க மெடல் வாங்கியவர். சிதம்பரம் நடராஜர் கோயில் பெயரில் அளிக்கப்படும் தங்க மெடலையும் தட்டிச் சென்றவர் வீரமணி என்ற விவேக வரலாறு இந்த வேதியப் பூணூல் கும்பலுக்குத் தெரியுமா?

75 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இவர் கால் படாத ஊர் கிடையாது, பேசாத இடம் கிடையாது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல- இந்தியத் துணைக் கண்டம் மட்டுமல்ல - உலகில் பல்வேறு நாடுகளையும் சுற்றி வந்தவர். சென்ற இடமெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை - திராவிடக் கருத்தியலைப் பரப்பி வரக் கூடியவர்.

அவர் தொண்டையும், கருத்தியலையும், சொற்பொழிவுகளையும் மய்யப்படுத்தி முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் உண்டு. பெற்றுக் கொண்டும் இருக்கிறார்.

அத்தகைய தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஒருவருக்கு ஒரு சினிமா நடிகரை விமர்சிப்பதன் மூலமாகத்தான் பத்திரிகை விளம்பரம் கிடைக்கிறது என்று எழுதும் பேர் வழிகள் ஒன்று கிறுக்கர்களாக இருக்க வேண்டும் அல்லது பொறாமை நோய் கொண்ட வயிற்றெரிச்சல் பூணூல் திருமேனிகளாக இருக்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டுப் பொது வாழ்வின் பால பாடத்தைக்கூட அறியாத கை சூப்பும் பாலகர்களாக இருக்க வேண்டும்.

இந்த மூன்றும் சேர்ந்த "முக்காலி" என்ற பட்டத்தை திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாளுக்குத் தாராளமாகவே சூட்டலாம்.

40 ஆண்டு காலமாக திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்திருக்கிறாராம்  வீரமணி - அவர்தான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறார் என்ற கிண்டல் வேறு.

அவர் ஒன்றைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல - ஒரு சரியான தலைமைத் தேர்ந்தெடுத்து இராணுவ சிப்பாய்கள் போல கட்டுப்பாட்டுடன் பணியாற்றும் பாசறை இது.

மானமிகு வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களாலும், அன்னை மணியம்மையார் அவர்களாலும் அடையாளம் காட்டப்பட்டவர் - அதனைத் தொண்டர்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுதான் அவர் தலைமை கிடைத்தற்கரிய ஒன்று என்ற உறுதியான எண்ணத்துடன், எவ்வித எதிர்பார்ப்புமின்றிப் பணியாற்றி வரக் கூடியவர்.

எவ்வித எதிர்ப்புமின்றி 40 ஆண்டுகாலமாக திராவிடர் கழகத் தலைவராக இருந்து வருகிறார் என்று திருவாளர் குருமூர்த்திவாள் அவரை அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளார். எவ்வித எதிர்ப்பின்றி ஒருவர் தலைவராக இருக்கிறார் 40 ஆண்டுகாலம்  என்றால் அதன் பொருள் என்ன?

அதே நேரத்தில் திராவிடர் கழகம் ஆர்.எஸ்.எஸ். போன்றதல்ல; ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பதவி என்றால் அது பார்ப்பனருக்கு மட்டுமே (ஒரே ஒரு ராஜேந்திர சிங் தவிர) என்ற நிலை எல்லாம் இங்குக் கிடையாது.

இந்த இயக்கத்திற்குத் தலைமை ஏற்று இருப்பவர் 75 ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்ற பெருமிதம் இருக்கிறது. தமிழ்நாட்டின் மூத்த தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களாலேயே தமிழர் தலைவர் என்று அழைக்கப்படுபவர் - எங்களின் அரசியல் "ராஜகுரு" வீரமணி என்று மதிப்பிற்குரிய மூப்பனார் அவர்களால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர்.

பார்ப்பன முதல் அமைச்சர் ஜெயலலிதா - பார்ப்பனப் பிரதமர் நரசிம்மராவ், பார்ப்பனக் குடியரசுத் தலைவர் சங்கர்தயாளர் சர்மா என்ற மூன்று பார்ப்பனர்களின் கைகளைக் கொண்டே தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு அட்டவணையில்  சேர்த்து பாது காப்புக்கு ஏற்பாடு செய்தவர்.

மண்டல் குழுப் பரிந்துரை அவ்வளவுதான் - பத்தாண்டுகள் பறந்து விட்டன; மண் மூடிப் போய்விட்டது என்று மனப்பால் குடித்துக் கிடந்தார்களே பார்ப்பனர்கள் அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டவர்தான் ஆசிரியர் வீரமணி.

இந்தியா முழுவதும் உள்ள சமூகநீதியாளர்களை இணைத்து 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்த சீலர் வீரமணி என்பதை சிண்டுகள் உணரட்டும்.

நண்பர் வீரமணியை காணும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வினைப் பெறுகிறேன் என்று பிரதமர் வி.பி. சிங் அவர்களால் பாராட்டப் பெற்றவர் ; நாடாளுமன்றத்தில் மண்டல் குழுப் பரிந்துரை குறித்த பிரகடனத்தை வெளியிட்ட போது பிரதமர் வி.பி. சிங், தந்தை பெரியார் கனவு நனவாயிற்று என்று சொல்லுவதற்கு வித்தாக இருந்தவர் மானமிகு வீரமணி.

இன்னும் எவ்வளவோ எழுதலாம்.

கரையான் புற்றெடுக்கக் கருநாடகம் குடி புகுந்தது போல 'துக்ளக்'  அலுவலகத்துக்குள் புகுந்து கொண்டு ('சோ' அவர்கள் குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி) அய்யர் அதிகமாகவே ஆட்டம் போடுகிறார். அதிகாரம் இருக்கும் வரை ஆடட்டும் ஆடட்டும் - வானரமாய்க் குதிக்கட்டும் குதிக்கட்டும்!

ஆனானப்பட்ட ஆச்சாரியாரையே (ராஜாஜியே) துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம்  என்று ஓட வைத்தது தந்தை பெரியாரின் கருஞ்சட்டைப் பட்டாளம் - வீணாக வாலை நீட்டி வசமாக மாட்டிக் கொள்ள வேண்டாம் - எச்சரிக்கை!

 

மின்சாரம்

கேட்டீர்களா தோழர்களே! இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கே அவமானம்! இந்தியாவின் முதல் குடிமகனுக்கே மகத்தான அவமானம்! முப்படைகளின் தலைவருக்கே மன்னிக்கப்பட முடியாத பெரும் அவமானம் அவமானம்!

இந்தியாவின் குடியரசுத் தலைவரான மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள், தம் துணைவியாருடன் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலில் தான் அந்த அவமானம் நடத்தப்பட்டிருக்கிறது (தென்னாட்டில் பொதுவாக பிரம்மாவுக்குக் கோயில் கிடையாது - அவன் பொய் சொன்னதற்காக அந்தச் சாபமாம்!)

அந்த கோயிலுக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் தம் குடும்பத்துடன் வழிபடச் சென்றுள்ளார்.

தடபுடலான வரவேற்பா? பூர்ண கும்ப மரியாதையா? ஒரு மரியாதையும் இல்லை. நரி வலம் போகா விட்டாலும் ஆளை விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதாதா?

குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்?

எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோயிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறி விட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து பூஜை நடத்திப் புறப்பட்டு விட்டார்-  120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.

இந்தச் செய்தி எப்படியோ வெளி வந்து விட்டது; இதனைக் கூடைக்குள் போட்டு அமுக்கி விட வேண்டும் என்று பிரயாசைப்பட்டும், எப்படியோ கோணிப்பையைக் கிழித்துக் கொண்டு பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது.

இது என்ன சாதாரண பிரச்சினையா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பகுதி  என்ற தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இதனைத் தீண்டவில்லையே ஏன்?

இதற்குக் காரணமானவர்களின் சிண்டைப் பிடித்து இழுத்து பிணையில் வர முடியாத அளவுக்குச் சிறைக் கொட்டடியில் தள்ளாதது ஏன்? ஏன்?

எங்கள் அமைப்பில் ஜாதியில்லை - தீண்டாமைக்கு இடம் இல்லை - எல்லோரும் பாரத மாதாவின் புத்திரர்கள் என்று பம்மாத்து அடிக்கும் பா.ஜ.க. பேர் வழிகள் எங்கே போனார்கள்? சங்பரிவார் சகதிகளின் பேச்சு மூச்சைக் காணோம் ஏன்?

56 அங்குலம்  மார்பளவுள்ள சண்டியர் பிரதமர் வாய்த் திறக்காதது ஏன்?

இது சுதந்திர நாடாம்; ஒரு குடியரசுத் தலைவரே தீண்டப்படாதவர் ஆகி விட்டாரே! இதுதான் ஆனந்த சுதந்திரமா?

ஒரு தாழ்த்தப்பட்டவர் சங்கராச்சாரியாராக வரும் நாள்தான் உண்மையான சுதந்திரம் வந்தநாள் என்று காகா கலேல்கர் கூறினாரே  - நினைவு இருக்கிறதா?

சங்கராச்சாரியார்கூட ஆக வேண்டாம். குறைந்தபட்சம் கோயில் அர்ச்சகராக ஆக முடியவில்லையே - கோயில் படிக்கட்டில் அமர்ந்துதான் இந்தியாவின் முதல் குடிமகன் பூஜை செய்ய வேண்டிய கீழமையை என்னவென்று சொல்ல!

2014ஆம் ஆண்டு ஆகஸ்டில் பீகாரில் நடந்த ஒரு நிகழ்வு நினைவிருக்கிறதா? நிதிஷ்குமார் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி அந்த இடத்திலே முதல் அமைச்சராக ஜிதன்ராம் மஞ்சி அமர்த்தப்பட்டாரே- நினைவிருக்கிறதா?

அவருக்கு என்ன நடந்தது? பீகாரிலே! மதுபால மாவட்டம், சிவன் கோயில் ஒன்றிற்கு வழிபடச் சென்றார் முதல் அமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி.

அவர் வழிபாடு செய்து வெளியில் வந்தது தான் தாமதம்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் அமைச்சர் சிவன் கோயிலுக்குள் நுழைந்ததால் கோயில் தீட்டுப்பட்டுவிட்டது; தோஷம் பட்டு விட்டது என்று கூறி கோவிலைக் கழுவி சடங்குகளைச் செய்து சுத்திகரித்தார்களா இல்லையா?

தனக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்தை முதல் அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியே கூறி புலம்பினாரா இல்லையா?

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்கிறார்கள் - ஒரு சுதந்திர இந்தியாவில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று கேட்டாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் - அந்தக் கேள்விக்கு விடை எங்கே? எங்கே?

மெத்தப் படித்த மேதாவிகள் பதில் சொல்லட்டும். பேனா பிடிக்கும் எழுத்தாளர்கள்தான் பதில் சொல்லட்டுமே!

ஆன்மிகவாதிகள் பதில் சொல்லட்டும்! சொல்லட்டும்!!

120 கோடி மக்களின் அரசமைப்புச் சட்ட ரீதியான மரியாதைக் குரிய முதல் குடிமகனுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை - மனித உரிமை மீறலை யாரும் கண்டுகொள்ளவில்லையே ஏன்?

வடக்கே நிகழ்ந்த இந்த மனித உரிமை மீறலை எதிர்த்து, -  வன்கொடுமையை எதிர்த்து குரல் கொடுக்க தெற்கே தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு தானே தோள் தட்டி எரிமலையாக எழுந்து நிற்கிறது.

ஒரே ஒரு தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்கு மட்டும்தானே குருதி கொதிக்கிறது - ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம் தானே போராட்டக் களம் அமைத்திருக்கிறது.

பரவாயில்லை தாங்களாக  களம் அமைக்காவிட்டாலும் திரா விடர் கழகம் முன்னின்று நடத்தும் இந்தப் போராட்டக் களத்திற்கு வாருங்கள் தலைவர்களே - வாருங்கள் தொண்டர்களே! வரும் 7.6.2018 வியாழன் காலை 10.30 மணிக்கு மாவட்டத் தலை நகரங்களில் எல்லாம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மற்ற மற்ற மாவட்டங்களில் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து அரிமாக் குரல் கொடுப்பீர் தோழர்களே!

 

 

பட்டுக்கோட்டை மண்டல இளைஞ ரணி மாநாட்டுத் தீர்மானங்களைக் கேண்மின்! கேண்மின்!!

காலத்தின் தேவையை உணர்ந்த தீர்மானங்கள், மக்கள் பிரச்சினை என்னும் பசிக்கு உணவளிக்கும் தீர்மானங்கள்.

குருகுலக் கல்வி என்னும் பெயரால் பெரும்பான்மை மக்களின் குடியைக் கெடுக்கவரும் குண்டுகளை பஷ்பமாக்கும் கூர்மை  நிறைந்தவை அவை.

- டைம்ஸ் ஆப் இந்தியா

அன்று 1952-1954களில் தமிழ்நாட்டில் ஆச்சாரியார் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வியை எதிர்த்து அவர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தவர் தந்தை பெரியார். அந்தத் தந்தை பெரியார் மண்ணா கிய, தமிழ் மண் - அந்தக் குலக் கல்வித் திட்டத்தை விட ஒடுக்கப்பட்ட மக்களின் குடலை  கொடூரமாக அறுக்கும் குருகுலக் கல்வித் திட்டத்தை நிர்மூலமாக்கப் போகிறது. ஆம், இந்தக் குருகுலக் கல்வி தான் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கு அஸ்தமனத்தை அளிக்கப் போகிறது.

திராவிடர் கழகத் தலைவர் போர்ச் சங்கு ஊதிவிட்டார். பட்டுக்கோட்டை மாநாடு தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. வரும் ஆறாம் தேதி சென்னைப் புரசைவாக்கத்தில் தமிழகத் தலைவர்கள் எல்லாம் போர்ப்பறை கொட்ட இருக் கின்றனர்.

கல்வியின் கருவிலேயே கைவைத்து விட்டனர். 'நீட்' என்று சொல்லி மருத்துவக் கல்லூரியின் வாசலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடைத்துவிட்டனர்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளில் புதிய நடைமுறையைக் கொண்டு வந்து அத்தனை இடங்களையும் குடுமிகளின் கைகளில் கொடுக்கக் கொடுவாளைத் தீட்டிவிட்டனர்.

தேசிய கல்வி என்று சொல்லி சமஸ் கிருதத்தையும், இந்தியையும் திணித்திட திட்டம் தீட்டி விட்டனர்.

இந்த இடஒதுக்கீடு தானே குப்பனையும், சுப்பனையும் உயரே ஏற்றியது. அமாவாசை மகன் டாக்டர் ஆனது இந்த இடஒதுக்கீட் டால் தானே! குஞ்சானின் மகன் நீதிபதி யானதும் இந்த இடஒதுக்கீட்டுச் சனிய னால் தானே!

கிராமத்துக் காத்தான் மகனை அய்.ஏ.எஸ். ஆக்கியது இந்த இடஒதுக்கீடு என்னும் ஏணிப் படிதானே!

இப்பொழுது நடப்பது எங்கள் மனுதர்ம ஆட்சி - நினைவிருக்கட்டும். இதற்கு மேலும் நீங்கள் உயரப் பறக்க ஆசைப் படாதீர்கள்!

இன்னும் ஓராண்டு தான் எங்கள் ஆட்சி - அதற்குள் சகலத்தையும் முடித்துவிட்டுத் தான் போவோம் என்ற வெறியோடு வேதியர் கூட்டம் பஞ்சக்கச்சத்தை இறுகக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டது. உஜ்ஜயினியில் ஆர்.எஸ்.எஸ். தலை வர் மோகன் பாகவத் தலைமையில் கூடி திட்டங்களைத் தீட்டிவிட்டது ஆர்.எஸ்.எஸ்.

மோடி பிற்படுத்தப்பட்டவராயிற்றே என்று எண்ண வேண்டாம். இது வேடம் போட்ட புலி - நிஜப் புலியைவிட அதிக மாகத்தான் குதிக்கும். தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

இப்பொழுது இல்லாவிட்டால் வேறு எப்போது? என்று மோடியின் காதைப் பிடித் துத் திருக ஆரம்பித்துவிட்டது பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.

இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டாமா? ஆம் அதற்கான குரலைத் தான் பட்டுக்கோட்டை மாநாடு கொடுத் திருக்கிறது. அதன் ஈரம் காய்வதற்கு முன்னதாகவே ஒருவார கால இடை வெளியில் தலைநகரில் தலைவர்களை ஒருங்கிணைத்திருக்கிறது திராவிடர் கழகம். (ஆறாம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் தலைவர்கள் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டம்)

தலைவர்கள் கொடுக்கும் முழக்கம் டில்லி செங்கோட்டையிலே எதிரொலிக்கப் போகிறது!

இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வில் சங்கமமாகித் தட்டி எழுப்பப்போகிறது.

மண்டல் குழு பரிந்துரைகளை அப் படித் தானே வென்றெடுத்தோம். அதற் கடுத்த பெரும் போர் இப்பொழுது நம்முன். அதற்கான தொடக்கத்தை ஆசிரியர் களம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்.

இந்தியாவுக்கு அரசமைப்புச் சட்டம் மனுதர்மம்தான் என்று அவாளின் குருஜி கோல்வால்கர் எழுதி வைத்தது சும்மாவா?

ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர்ந்த பிறகு அதனை நிறைவேற்ற வேண்டாமா?

அதைத்தான் இப்பொழுது தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தக் குருகுலக்கல்வி மீது நாம் கொடுக்கவிருக்கும் மரண அடி - பிஜேபி என்ற பார்ப்பன பூஷ்வா ஆட்சியின் அஸ்தி வாரத்தை அடித்து நொறுக்க வேண்டும்.

அதற்கும் வழி சொல்லி இருக்கிறது பட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானம்.

பிஜேபியை வீழ்த்துவதற்கான மார்க்கத் தையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது!

நாட்டில் இரண்டே இரண்டு அணிகள் தான். ஒன்று பிஜேபி அணி. இன்னொன்று பிஜேபியை எதிர்க்கும் அணி.

ஏற்கெனவே சமூக நீதி அணி - சமூக நீதிக்கு எதிரான அணி என்றும், மதச்சார் பின்மை அணி - மதச்சார்பு அணி என்று இந் தியாவிலேயே கொள்கை ரீதியாக வழித்தடம் அமைத்து - கொடுத்தவர் நமது தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான். அந்த வரிசையில் இதுவும் வரும்.

மற்றபடி சின்ன சின்ன சங்கதிகளை யெல்லாம் மூட்டைக் கட்டி ஒரு பக்கத் தில் வைத்துவிட்டு, ஒரே மூச்சில் கொடுக் கும் அந்த அடி மரண அடியாக இருக்க வேண்டும் - இருக்கவும் போகிறது.

கடந்த 31ஆம் தேதி வந்திருக்கும் தேர்தல் முடிவுகளும், பட்டுக்கோட்டை மாநாட்டின் தீர்மானத்தை நிதர்சனப் படுத்தி விட்டன.

2019இல் மீண்டும் பிஜேபி என்றால் - மோடிதான் பிரதமர் என்றால் தாங்கா தப்பா தாங்காது - நாடு கண்டிப்பாகத் தாங்காது.

2000 முசுலீம்கள் 2002இல் குஜராத் தில் கொல்லப்பட்டது பற்றி மோடி REUTERS ஏட்டுக்குக் கொடுத்த பேட்டி நினைவிருக்கிறதா? தான் காரில் பயணிக் கும்போது நாய்க்குட்டி அடிபட்டுச் சாவதை ஒப்பிட்டாரே, நினைவிருக் கிறதா?

இந்த சகதிகள் சிம்மாசனம் ஏறலாமா? உஷார்! உஷார்!!

Banner
Banner