மின்சாரம்

ஆரியராவது - திராவிடராவது; எல்லாம் வெள்ளைக்காரன், கிறிஸ்தவன் கட்டிவிட்ட சரடு -‘பிரித்தாளும் சூழ்ச்சி என்று ‘பிராமணர்கள்’ என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் பிலாக்கணம் பாடி வருவதுண்டு.

ஒருக்காலம் இருந்தது ‘நாங்கள் பிராம ணர்கள், பிர்மாவின் நெற்றியிலே பிறந்த வர்கள், பிர்மா இந்த உலகத்தை எங்களுக்கே படைத்தான் - நீங்கள் சூத்திரர்கள் - எங்களுக்குக் குற்றேவல் செய்து கிடக்க வேண்டியவர்கள்’ என்று கித்தாப்பாக, வீராப்பாக வெடுக்கு வெடுக்காகப் பேசினார் கள்.

தந்தை பெரியார் சகாப்தத்தில் அவர்க ளின் சப்த நாடிகளும் ஒடுக்கப்பட்டன. திராவிடர் இயக்கத்தினர் தோள் தூக்கி திசை எட்டும் பிரச்சாரப் புயலைக் கிளப்பியதுதான் தாமதம், இடுப்பு ஒடிந்தது ஆரியம்.

பூணூல் மார்போடு திரிந்தவர்கள் - பூதேவர்கள் என்று பூரிப்போடு பேசியவர்கள் பெட்டிப் பாம்பானார்கள். உச்சிக் குடுமி வைத்து சாலையில் சென்றால் கோலி விளையாடும் சிறுவன் கூடக் கல்லால் அடித்துக் கேலி செய்யும் காலம் கனிந்தது.

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதைக் கூடத் தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்; பார்ப்பனர் என்று சொன்னால் எதிர்வினைதான் என்கிற எதிர்ப்புப் புயல் கிளம்பியது.

திராவிடர் கழகம் அரசியலுக்குள் நுழைய வில்லை. சமூகப் புரட்சி இயக்கத்தை நடத்தி வருகிறது. அதிலிருந்து பிரிந்து சென்ற திமுக அரசியலில் காலடி எடுத்து வைத்தது. முதல் முதலாக 1957இல் தேர்தலைச் சந்தித்தது. படிப்படியாக 1967இல் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆனார்.

தொடர்ந்து திமுக - அஇஅதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் என்ற நிலை உறுதிப்படுத் தப்பட்டது. தேசியக் கட்சிகள் எல்லாம் இந்த இரு கட்சிகளோடு கூட்டணி வைத்துத் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையும் நிலைநாட்டப்பட்டது.

அ.இ.அதிமுகவில் அசைக்க முடியாத முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அ.இ.அதிமுகவுக்கு நெருக்கடியும், பலகீனமும் சூழ்ந்த நிலையில், அந்த வெற்று இடத்திற்கு நகரலாம் என்ற நப்பாசையில் பார்ப்பனீய கருத்துகளைச் சூள்கொண்ட பாரதிய ஜனதா கட்சி நாக்கில் எச்சில் சொட்டச் சொட்ட வேவு பார்த்துக் கொண்டு திரிகிறது.

மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்திருப் பதாலும், மாநிலத்தை ஆளும் அஇஅதி முக அமைச்சர்களின் மடியில் கனம் இருப்பதாலும், உருட்டி மிரட்டி தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற மனதில் கொண்ட தீரா ஆசையால் பார்ப்பனீய ஜனதா படம் எடுத்து ஆகிறது.

கழகம் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஆரம்பித்தார்கள், திரா விடத்தால் வீழ்ந்தோம் என்றார்கள். (அவர் கள் விரும்பும் இந்துத்துவாவினருக்குத் திராவிடம் என்பது எதிர்வினை யாற்றும் தத்துவமாச்சே!)

சென்னை இராதாகிருஷ்ணன் நகரில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளைப் பெற்று, டெபாசிட்டைப் பறிகொடுத்த பா.ஜ.க. இப்பொழுது ஒரு புது மூடியை முகத்தில் மாட்டிக் கொண்டு வர முடிவு செய்கிறது.

தமிழ்நாட்டில் ஒரே ஒரு பிஜேபி எம்.பி.யான பொன்.இராதாகிருஷ்ணன் வாய்வழியாக அது வெளிவந்திருக்கிறது.

“கடலூரில்  நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாஜகவினரை கடுமையாக விமர்சித்திருந்தார். புறம்போக்குகளாகிய நீங்கள் பேசுவதற்கும் மேடை அமைத்து கொடுத்தது திராவிட மண் எனவும் சாடி யிருந்தார்.

தளபதி ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சு விவாத பொருளாகிப் போனது. இதையடுத்து ஈரோடு வேப்பம்பாளையத் தில் அஸ்வமேத ராஜரூபா யாகம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ் ணன் அவர்கள் கூறியதாவது,  “ஸ்டாலின் என்ன திராவிடத்துக்கு சொந்தக்காரரா? 50 வருஷமா ஆட்சியில் இருந்தவர்கள் திரா விடப் பகுதிகளை இணைத்து முன்னேறிய பகுதியாக மாற்றியிருக்க முடியும், ஆனால் அவங்க அப்படி செய்யவில்லை. திரா விடம் என்பது ஒரு பகுதி 4, 5 மாநிலங்கள் சேர்ந்த பகுதி; நான் திராவிடத்தை ஒழிக்கவேண்டும் என்று எப்போதுமே கூற வில்லை, நான் திராவிடன் பச்சை திராவிடன், இங்கு உள்ள அனைவருமே திராவிடர்கள் தான், பச்சைத் திராவிடர்கள், பாரதீய ஜனதா கட்சியும் திராவிடக் கட்சிதான்,  நான் ஒழிக்கவேண்டும் என்று சொல்வது அவர்கள் கட்சியை, அய்ம்பது வருசமா ஆட்சி நடத்தியிருக் கிறார்கள், அது தோற்றுப் போய்விட்டது, அதை மாற்றவேண்டும் என்று மக்கள் நினைக் கின்றார்கள்.   பாஜகவும் திராவிடக் கட்சியே!” எனப் பேசியுள்ளார். இதை முன்மொழிந்து பாஜகவினரும் இப்போது தங்களை திராவிடர்கள்; திராவிட கட்சி என பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

மனம் நிறைந்து பேசுகிறார்களா? அல்லது மனம் திருந்திப் பேசியிருக் கிறார்களா? என்று ஆராய்வதை விட ‘திராவிட’ என்பதைச் சொல்லித்தான் தீர வேண்டும். அதைப் பயன்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டில் போணியாகாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைத் தானே இது காட்டுகிறது. இது திராவிடத் துக்குக் கிடைத்த வெற்றியே!

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழராகிய பொன்.இராதாகிருஷ்ணன் இப்படி சொல்லியிருந்தாலும், அக்கட்சிக்குள் இது ‘இரணகளத்தை’ ஏற்படுத்தத்தான் செய்யும்.

‘திராவிடம்’ என்றாலே அவர்களுக்கு ஒரு மாதிரியாகிவிடும் - ஒவ்வாமையை ஏற்படுத்தி உடலையும் உள்ளத்தையும் அரிப்பெடுக்கத் தான் செய்யும்.

ஆரியமாவது - திராவிடமாவது - அதெல்லாம் கட்டுக்கதை, வெள்ளைக் காரனின் பிரித்தாளும் பெரும் சூழ்ச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மத்தியிலிருந்து ‘நாங்களும் திராவிடர் கள்தான்!’ என்று குரல் வருகிறது என்றால் அது என்ன சாதாரணமா?

அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளுமா? பார்ப்பனக் கட்சியான இந்துத்துவாவை குருதியோட்டமாகக் கொண்ட அக்கட்சி அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தயங்கும்தான்!

திருவனந்தபுரத்தில் திராவிட ஆய்வு மய்யம் நடத்தி வந்தவரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வி.அய்.சுப்பிரமணி யம் அவர்கள் 2000-2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து ‘திராவிடியன் என்சைக்ளோபீடியா’ என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங் கினார்.

இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள ‘திராவிடியன்’ என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்று சொன்னார். இதற்குப் பதில் தந்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள், அமைச்சரை நோக்கி ‘நீங்கள் நாட்டுப் பண்ணிலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கிவிடுங்கள், நானும் திரா விடக் களஞ்சியம் என்பதிலிருந்து ‘திரா விடம்’ என்ற பெயரை நீக்கி விடுகிறேன்’ என்றார் (ஆதாரம் 2003 பிப்ரவரி ஞிலிகி ழிமீஷ்s).

தமிழறிஞர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் மறைந்து விட்டாலும் பிஜேபியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் கடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிஜேபிக்குத் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி இன்னும் உயிரோடு தான் இருந்து கொண் டுள்ளார். அவர்கள் எல்லாம் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் முன்மொழிந்ததை வழி மொழிவார்களா?

தமிழ்நாட்டுப் பிஜேபியின் ‘அவதார புருஷரான’ திருவாளர் எஸ்.குருமூர்த்தி அய்யர் இப்பொழுது துக்ளக்கில் ஆசிரிய ராக இருந்து வருகிறாரோ - துக்ளக்கில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

ஆரிய, திராவிட பேதம் கட்டுக்கதை என்று பிபிசி இணையதளத்தில் கூறப் பட்டு உள்ளது என்று துக்ளக் இதழில் (2.11.2015) திருவாளர் எஸ்.குருமூர்த்தி எழுதி இருந்தார். பிபிசி அவ்வாறு கூறுகிறது என்று எடுத்துக் காட்டித் துள்ளிக் குதித்தார்.

கரூர் வழக்குரைஞர் பூ.அர.குப்புசாமி, இரா.ஜீவானந்தம் ஆகியோர்களால் ஆடிட் டர் எஸ்.குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஆசிரியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதப்பட்டது.

‘துக்ளக்’ கூறும் அந்த பிபிசி இணைய தளத்துக்குள்ளும் சென்று பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறான கட்டுரையோ, தகவலோ பிபிசி இணைய தளத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டு, அதன்பின், பிபிசி நிறுவனத்துக்கே மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்கப்பட்டது. அவ்வாறு ஏதும் பிபிசி இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை என்று பிபிசி நிறுவனத்திடமிருந்து பதில் வந்தது.

ஆனால் பிபிசி வெளியிட்டதாகத் ‘துக் ளக்கில்’ எழுதினாரே திருவாளர் எஸ்.குரு மூர்த்தி அய்யர் (இன்றைய துக்ளக் ஆசிரியர்).

இதைப் பற்றி மூச்சுப் பேச்சு விடவில்லை. இதுதான் பார்ப்பனர்களின் அறிவு நாணயம் - எந்த எல்லைக்கும் சென்று பித்தலாட்டங் களில் ஈடுபடுவார்கள் என்பது வெளிப் படையே!

மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளதை நிச்சய மாக சொந்தக் கருத்தாக இருக்கவே முடி யாது.

பிஜேபிக்குள் தொடர்ந்து இருந்து வரும் ஆரியர் திராவிடர் போராட்டத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு கூறாகத்தான் இது வெளிவந்திருக்கின்றது என்று கருது வதற்கு இடமுண்டு.

இன்னொரு மத்திய அமைச்சராக இருக்கும் செல்வி உமாபாரதி அவர்கள் பிஜேபி உயர்ஜாதி பார்ப்பனர்களின் கட்சி என்று கூறியதுண்டே! பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் அவர்களும் சரி, தமிழ்நாடு பிஜேபியின் தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதி அவர்களும் சரி, உ.பி.மேனாள் முதல் அமைச்சர் கல்யாண் சிங் அவர்களும் சரி - பா.ஜ.க. பார்ப்பன உயர் ஜாதிகளின் கூடாரம் என்று கூறியதுண்டே!

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் கருத்தையும் கருத வேண்டும்.

தமிழ்நாட்டில் கட்சியை ஆட்டிப் படைக்க நினைக்கும் பார்ப்பனப் பிரமுகர் களுக்கு மறைமுகமான மிரட்டலா? அல்லது கட்சிக்குள் வெடிக்க இருக்கும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்துக்கான கட்டியங் கூறவா? காத்திருப்போம்! நாட்டில் நடப்பது அரசியல் அல்ல. ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் (‘விடுதலை’, 22.5.1967) என்று தந்தை பெரியார் சொன்னது பொய்க்காது அல்லவா?

மின்சாரம்


வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் காந்தியார் நினைவு நாளில் (30.1.1948) சென்னை பெரம்பூர்- பெரவள்ளூர் சதுக்கத்தில் நேற்று (ஜன.30) ஒரு திறந்த வெளி மாநாடு நடைபெற்றது.

கருத்துரிமைப் பாதுகாப்பு - மதவெறி கண்டன திறந்த வெளி மாநாடாகும் அது.

வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் நடை பெற்ற இம்மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங் கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், திராவிட இயக் கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம் ஆகி யோர் உரையாற்றினர்.

காந்தியாரைக் கொன்றவர்கள் யார்? அவர்கள் தனி மனிதர்களா? அவரைக் கொன்ற தத்துவம் எது - இன்றைய தினம்வரை அந்த சக்திகள் எந்தெந்த வடிவங்களில் உலா வருகின்றன. மதவெறி எப்படியெல்லாம் தாண்டவமாடு கிறது - கருத்துரிமைப் பறிப்பு எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விளக்கும் விழிப்புணர்வு மாநாடாக அது மணம் வீசியது.

அதைப்பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையே இது.

வெகுமக்களால் "மகாத்மா காந்தி" என்று அழைக்கப் பட்டவர் காந்தியார். சுதந்திர இந்தியாவுக்காகத் தலைமை தாங்கி வழிநடத்தியவர். அகிம்சை அவரது ஆயுதம் என்பதெல்லாம் பொதுவான கருத்தே!

அரசியலில் மதத்தையும், பக்தியையும் குழைத்துத் தந்தவர்தான். அவர்பற்றி ஆயிரம் ஆயிரம் விமர்சனங் கள் இருந்தாலும், பொதுவாக மதிக்கப்பெற்ற மிகப்பெரிய தலைவராக வாழ்ந்தவர் என்பது மட்டும் உண்மை. உலகளவிலும் அவரைப்பற்றி அப்படி ஓர் அபிப்ராயம் இருந்ததும் மிகப்பெரிய உண்மை.

நான் ஒரு சனாதன இந்து என்று அவர் சொன்னதுண்டு. கிராமராஜ்ஜியம் - அது ராமராஜ்ஜியம். அதுவே நான் விரும் புவது என்று விளக்கம் அளித்தவர். அந்தக் காலகட்டத்தில் எல்லாம் மகாத்மா என்று உயர்ஜாதி பார்ப்பனர் களும், அவர்தம் ஊடகங்களும் தூக்கிச் சுமந்தன.

நாளாவட்டத்தில் பார்ப்பனர்களின் உயர்ஜாதி ஆதிக்கக் கூர்மையின் சுயநலத்தை அனுபவமூலமாக அறிந்து கொள்ளவும் தலைப்பட்டார் காந்தியார்.

‘‘பிராமணன், சத்திரியன், வைசியன் - மூன்று பேர்களும் ஜாதி இந்துக்களானால் அவர்கள் சிறுபான் மைக் கட்சியினர் ஆவார்கள். பிரிட்டீஷார் வெளியேறிய இந்தியாவில் சுதந்திரத்தை நிறுவிய பின் இருந்த இடம்தெரியாமல் அழிந்து போகவேண்டியதுதான்'' என்றார் காந்தியார்.

(‘திராவிட நாடு, 12.2.1947)

காந்தியாரின் போக்கில் பெரும் மாற்றங்கள் அரும்பத் தொடங்கின. இதுபற்றி தந்தை பெரியார் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது.
‘‘இந்தியா ‘சுதந்திரம்' பெற்றது 15.8.1947 இல்; காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948 இல். அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று காந்தி சொன்னது 7.12.1947 இல். காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல். அதாவது அவர் ‘‘நம் நாடு மத சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்.''

(‘விடுதலை', 13.1.1965)

என்கிறார் தந்தை பெரியார்.

பார்ப்பன - இந்துத்துவ சக்திகளுக்குக் காந்தியார்மீது ஏன் சினம் பொங்கி எழுந்தது என்பதுபற்றி சில ஆதாரங் களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற காந்தியார் நினைவுக் கூட்டத்தில் (1.2.2013) எடுத்து விளக்கியதுண்டு.

காந்தியார் அவர்களின் கொள்ளுப்பேரன் துஷார் ஏ.காந்தி அவர்களால் எழுதப்பட்ட ‘‘லிமீt's ரிவீறீறீ நிணீஸீபீலீவீ'' என்ற நூலிலிருந்து ஆதாரக் குவியல்களை அள்ளி அள்ளித் தந்தார்.

அவற்றுள் சில:

தொல்லை தரக்கூடிய அந்த கிழ மனிதனின் (காந்தியாரின்) தலையீடுகளைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் அரசும், அதன் அமைச்சர்களில் சிலரும் இருந்தனர். அவர்களுக்கு ஒரு மகாத்மாவுடன் வாழ்வது எளிதாக இருக்குமா?

உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்குக் கிடைத்த ஒரு ரகசிய அறிக்கையின்படி, காவல்துறையில் இருந்த பலரும் பல உயர் அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து மகா சபையின் ரகசிய உறுப்பினர்களாக இருந்தனர். அவர்கள் இந்து தீவிரவாத இயக்கங்களின் கருத்துகளையும் கொள்கைகளையும் ஆதரித்துக் கொண்டும், பிரச்சாரம் செய்து கொண்டும் பணியாற்றினர். அந்தக் குழு உறுப்பினர் கள் தீவிரவாத இயக்கங்களின் முன்னணிப் போர் வீரர்களா கவும் இருந்தார்கள் (ஷிtஷீக்ஷீனீ ஜிக்ஷீஷீஷீஜீமீக்ஷீs) என்பது ஹிட்லரின் நாஜி கட்சி மெம்பர்கள். எதிரி கட்சி ஊர்வலங்களில், மற்றும் ஹிட்லர் விரும்பாத இடங்களில் சென்று அடாவடிப் போராட்டக்காரர்களாக இருந்தனர்.

நாஜிகளுடன் தொடர்பு இருந்திருக்குமோ!

இந்த இருவர்க்கிடையில் ஏதேனும் ரகசிய ஒப்பந்தங்கள் இருந்திருக்கக் கூடுமா? விசாரணை மேற்கொள்ளப்பட்ட விதமும், காந்தியாரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையின் மெத்தனப் போக்கும், விசாரணை, உண்மையை வெளிக் கொண்டு வருவதற்குப் பதில், அதை மறைப்பதற்கே முயற்சிப்பதாக நம்பப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 20 முதல் 30ஆம் தேதி வரை, காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காந்தியாரின் உயிரைப் பாதுகாக்க முயற்சிப் பதற்கு பதிலாக கொலைகாரர்கள் அவர்கள் முயற்சிகளில் எளிதாக வெற்றிகாண வழி வகுத்துள்ளது.

தொல்லையானவர் ஆனாரா காந்தியார்?

வெள்ளையர்களை வெளியேற்றுவதில் காந்தியார் வெற்றி கண்டுள்ளார். ஆனால் கெட்ட வாய்ப்பாக அவரது அரசியல் வாரிசுகளுக்கு அவரது நல்ல கொள்கைகள் பின் பற்றப்படுவதற்கு கடினமாயிற்று. அவர்களுக்கு, அவர் தேசத்தின் பிதா; அவர் உதவிகரமாக இருப்பதற்கு மேலாகவே உயிர் வாழ்ந்துள்ளார். இப்பொழுது அவர் ஒரு தொல்லையாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியைக் கலைக்க வேண்டுமென்று அவர் ஆலோசனை சொல்லி இருக்கிறார். நாட்டுப் பிரிவினையை நீக்குவதற்குத்தான் பாகிஸ்தான் போவதாக அவர் பயமுறுத்தினர். தன்னுடைய லட்சிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு, அரசியல் காரணமாக ஆக்கப்பட்ட சில குறுகிய கால ஏற்பாடுகளை அவர் நிராகரிக்கச் செய்தார்.

அவர் ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக அச்சுறுத்தினார். கிராமங்களின் மறுமலர்ச்சிக்காக அவர் கொண்டிருந்த திட்டங்களுக்குப் பதிலாக வேக வேகமாக இந்தியாவை தொழில் மயமாக்கப் போவதை அவர் எதிர்த்தார். அவர் அமைச்சர்கள் மக்களின் வேலைக்காரர் களாகச் செயல்பட விரும்பினார்; அவர்களது பெரிய, ஆடம்பரமான பங்களாக்களை வீடில்லாத ஏதிலிகளின் உறைவிடமாக்க விரும்பினார். வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டனை அவருடைய மிகப் பெரிய மாளிகையை, ஏது மில்லா மக்களுக்கான மருத்துவமனையாக மாற்றுவதற் காக காலி செய்யச் சொன்னார்.

"இந்தக் கிழவனுடன் ஒத்துப் போக முடியாது!"

அவரது அரசியல் வாரிசுகளால், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இந்தக் கிழ மனிதனுடன் எப்படி ஒத்துப் போக முடியும்? அவர், இந்த சூழ் நிலையிலிருந்து எப்படியாவது நீக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன இழப்பு? சில இடங்களில் அவர்மீது மிகுந்த கோபம் இருந்தது. அதை ஏன் விசிறிவிட்டு, தங்களுக்கு வசதியாக, அந்த அமைதியின் தூதுவத்தைப் பலியாக்கக் கூடாது?

ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை அவர்மீது கோபம் கொண்டிருந்தது. ஏனென்றால் அவர்கள், முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவாகப் பிரிவினை செய்ய வைத்திருந்த திட்டத்தை அவர் முறியடித்தார். பிரிவினை விளைவால் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போது, அவர்களால் முடிந்த அளவு, இந்தியாவின் வட பகுதியிலிருந்தாவது எத்தனை இந்துக்கள் இந்தியாவுக்குள் வருகிறார்களோ, அத்தனை முஸ்லிம்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள விரும்பினர். இது செயல்பட்டிருந்தால், மற்ற பகுதிகளிலிருந்து முஸ்லிம் களை விரட்டியடிப்பதற்கு அது ஏதுவாக இருக்கும். முடிவில் உண்மையான இந்து தேசம் உருவாகும். இந்த முறையே ஏற்கெனவே முஸ்லீம் லீக் கட்சியானது சாமர்த்தியமாக மேற்கு பஞ்சாப், சிந்து, வட மேற்கு எல்லைப்புற மாநிலங்கள் மற்றும் கிழக்கு வங்களாம் ஆகிய பகுதிகளில் இருந்த இந்து மக்களை "வெளியேறு அல்லது கொல்லப்படுவாய்" என மிரட்டி அச்சுறுத்தி ஆரவாரம் செய்துள்ளனர். ஆனால் காந்தியார் தனது வன்செயலற்ற தத்துவத்தால் அது நடை பெறாமல் தடுத்துவிட்டார். ஓடுவதற்கு தயாராக இருந்த முஸ் லிம்களும், அவரது முயற்சியால், இங்கு தங்கி இருப்பதற்கான உறுதி பெற்றனர்.

கோபமடைந்த இந்து தீவிரவாதிகள், பாகிஸ்தான் உருவாக்கப்பட்டுவிட்டதால், இந்தியாவில் இருப்பதற்கான உரிமை முஸ்லீம்களுக்கு இல்லை என, காந்தியார்மீது, அவர்கள் குறிக்கோள் நிறைவேறாததற்கு குற்றம் சாட்டினர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகா சபா வெறியர்கள் மிகத் தந்திரமாக தங்கள் கோபத்தை மறைத்துக் கொண்டு, கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் தங்களது சகோதரர்கள், நாடு பிளவுபட்ட காரணத்தால், வெட்டிக் கொல்லப்படுவதைப் பொறுக்காமல், கிளர்ச்சி செய்து அதற்கான காரணம் காந்தியார்தான் என அவர்மீது பழி சொன்னார்கள். தாங்கள் செய்த தவறுகளுக்காக வேறுயாரோ சிலுவையில் அறையப்படுவதற்காக காங்கிரஸ்காரர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

பார்ப்பனர்களுக்கு வெறுப்பு - ஏன்?

ஆர்.எஸ்.எஸ். இந்துமகா சபாக்கள், பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்து இந்திய மக்களிடையே சாதியற்ற வகுப்புகளற்ற ஒரு சமுதாயத்தைக் காண காந்தியார் ஓர் இயக்கத்தை உருவாக்கியிருந்தார். இது அவர்களுக்கு அவர் மேல் மிகுந்த கோபத்தை உண்டாக்கியிருந்தது. உயிர்த்து எழுந்து "கீழ் ஜாதியினர்", புதிதாக தங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள ஜனநாயக உரிமைகளின்படி உயர் சாதியினரின் ஆதிக்கத்தை, குறிப்பாக, பிரிட்டிஷார் காலத்தில் அதிகார வர்க்கத்தையும், நீதித்துறையையும் தங்களது ஆளுகைக்குள் கொண்டிருந்த பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை அச்சுறுத்தலா யினர்.

1947-க்கு முன்பு பார்ப்பனர் அரசாங்கம்தான் இந்தியாவில் இருந்தது. மராட்டியத்தில் பூனே பேஷ்வாக்களின் சாம்ராஜ்யம் இருந்தது. பூனே பார்ப்பனர்கள் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினால் பிறகு ஆட்சிக்கட்டில் திரும்பவும் தங்களது கைக்கு வரும் என்றும் நம்பினர். பேஷ்வாக்களின் வழி வந்தோரின் இந்தக் கனவு காந்தியாரால் தூள் தூளாக்கப்பட்டது என்கிறார் காந்தியாரின் கொள்ளுப் பேரன் என்றார் தமிழர் தலைவர்.

(இதன் பின்னணியில்தான் காந்தியார் படுகொலை நடந்தது என்பது இன்னும் விளங்கவில்லையா?)

காந்தியாரின் உயிரைக் காப்பாற்றியவர் அம்பேத்கர்
ஆனால் அவர் உயிரைக் குடித்தவர் பார்ப்பனர்

 

லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கர் போன்றோரின் முயற்சியால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தனி இரட்டை தொகுதி முறை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம்களுக்கு அவ்வாறு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த காந்தியார் - தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவ்வாறு அளிப்பதற்கு ஒப்பவில்லை. அதனை எதிர்த்து சாகும்வரை உண்ணா விரதமிருந்தார் காந்தியார்.

அண்ணல் அம்பேத்கருக்கு நெருக்கடிகளைக் கொடுத்தனர். காந்தியாரின் உயிரைக் காப்பாற்றும்படி ஒரு நெருக்கடியான அழுத்த சூழ்நிலையில் அண்ணல் அம்பேத்கரும் அதற்கு இணங்க நேர்ந்தது - பூனா ஒப்பந்தம் என்பது அதுதான். அந்த காலகட்டத்தில் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தந்தை பெரியார் அவர்கள் 'ஒரு காந்தியாரின் உயிர் முக்கியமல்ல; கோடானுகோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைதான் முக்கியம்' என்று அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தார் ('குடிஅரசு', 9.3.1931) எப்படியோ காந்தியார் உயிரைக் காப்பாற்றினார் அம்பேத்கர். ஆனால் பார்ப்பனர்களோ காந்தியார் உயிரைக் காப்பாற்றவில்லை. நாங்கள் காப்பாற்றி வைத்திருந்த காந்தியை சுதந்திரம் அடைந்த இரண்டாண்டு வரைகூட அவரின் உயிரைக் காப்பாற்றவில்லையே என்று ஆங்கிலேய அதிகாரி சொன்னது நினைவு கூரத்தக்கதாகும்.
- சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர், 30.1.2018

 

 

- மின்சாரம்

யாரோ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி யாம், பா.ஜ.க.காரர் ஒருவர்  தமிழக அமைச்சரவையில் இல்லாத குறைக்கு இவர் இருக்கிறார் போலும்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் மன்ற ரசிகர்கள் எல்லாம் அமைச்சராகி விட்டார்கள் அல்லவா! அவர்களுக்கு பெரியார் தெரியுமா? அண்ணா தெரியுமா? திராவிட இயக்கம் என்றால் என்னவென்று தெரியுமா?

அவற்றை எல்லாம் தெரிந்திருந்தால் அவர் எப்படி அந்தக்கட்சியில் தான் இருப்பார்?

கடவுளே இல்லை என்று சொல்லக் கூடியவர் வீரமணி (கண்டுபிடித்து விட்டா ராய்யா - சபாஷ்! சபாஷ்!!) இந்து மத கடவுள்களை இழிவுப்படுத்துவதற்கு பதிலாக வீரமணி வேறு வேலை பார்க்கலாம் என்று அட்வைஸ் செய்துள்ளார். (தினமலர் -21.1.2018)

“கடவுள் இல்லை

இல்லவே இல்லை” என்பதுதான் தந்தைபெரியாரின் கருத்து.

அதைத் தொடர்ந்து சொல்லுவதற்குத் தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி உள்ளார். இந்நாட்டு அறியாப் பிள்ளைகளுக்குக் கூடத் தெரிந்த செய்தி இது.

“மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நல்லொழுக்கத்தை போதித்ததே ராமரும், ராமாயணமும் தான் - வீரமணி போன்றோர் அரசியல் செய்ய இந்துக் கடவுள்கள்தான் கிடைத்தார்களா? வீரமணி பேச்சு கண்டிக்கத்தக்கது” என்று ‘வீரவசனம்’ பேசியுள்ளார்.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், அண்ணாவின் உருவத்தை கட்சிக் கொடியிலும் பறக்க விட்டுக் கொண்டி ருக்கும் ஒருகட்சியைச் சேர்ந்தவர், அதுவும் அக்கட்சியில் அமைச்சராக இருக்கக்கூடிய வருக்கு இராமாயணம் பற்றி அண்ணாவின் கருத்தென்ன? இந்து மதத்தைப் பற்றி அண்ணாவின் கொள்கை என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அடிப்படைக் கூட தெரியாத ஆசாமிகள் எல்லாம் அமைச்சர்கள் என்றால் இதனை நினைத்து வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா? - விட்டுத்தள்ளுங்கள்!

இந்த விவரங்கெட்டவர்களை பற்றி என்ன முடிவுக்கு வருவது என்று மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இராமாயணத்தையும், பெரிய புராணத் தையும் கொளுத்துவதா? கூடாதா? என்ற வாதப் போரில் அறிஞர் அண்ணாவுடன் பொதுமேடையில் வாதிட்ட வரலாறு எல்லாம் நெற்றியில் திருநீற்றுப் பட்டையும், குங்குமப் பொட்டையும் வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது?

சொல்லின் செல்வர் என்று சொல்லப் பட்ட ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றவர்களெல்லாம் அண்ணாவுடன் வாதிட்டு தோற்றோடி யதும், அந்த வாதங்கள் ‘தீ பரவட்டும்’ எனும் நூலாக வெளிவந்ததையெல்லாம் கேள்விப் பட்டதாவது உண்டா?

இந்து மதம் கிள்ளுக்கீரையா? என்று கேள்வி கேட்டுள்ளாரே  - இதற்கு அண்ணாவே பதில் சொல்லியிருக்கிறாரே - அண்ணா திமுக அமைச்சர் அறிவாரா?

அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை’ என்ற நூலை படிக்க வேண்டாம் - பார்த்ததாவது உண்டா? அந்த நூலின் 31-33 ஆம் பக்கத்திற்கு வாருமய்யா வாத்தியாரே! என்று அழைக்கத்தான் ஆசை!

இதோ அண்ணாவின் ஆராய்ச்சி வரிகள்:

“நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று  தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலைச் சாமி, ஆனைமுகச் சாமி, ஆளிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணை களிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக் கொண்டு தொழ வேண்டுமே.  இந்தச் சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண் ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.

நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊண் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல், அலங்கா ராதிகள், அப்பம், பாயசம் அக்காரவடிசல் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும், நம்மிடத்திலிருந்து "தியானத்தைப்" பெறட் டும், அருளைத் தரட்டும்; நம்மிடத்திலிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.

ஆள் நடமாட ஒரு உலகம், ஆவி உலவ மற்றோர் உலகம், இந்திரன் இருக்க ஒரு உலகம், நாகன் தங்க ஒரு உலகம், மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம்! அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபோலோக, மகாலோக, சத்தியலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே. நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும் புன்செயும், சாலையும் சோலையும், வாவியும், நதியும், மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும். காம தேனுவும் கற்பகவிருட்சமும், ரம்பையும் ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடிசூட்டிக் கொள்ளட்டும்! நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ்ஜாதி என்று கொடுமை இன்றி, "நாமார்க்குங் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண் ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே  தரகர் கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக, யாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை "இந்து" என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித் தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்? "இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் "இந்து" என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதிதுலங்கும் விஷயங்களை விட்டு, மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாள வழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்தபிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் ‘இந்து மார்க்கத்தில்,’ போய்ச்சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்துப் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!” இவை எல்லாம் அறிஞர் அண்ணாவின் அறிவுலகம் போற்றும் ஆய்த எழுத்துக்களாகும்.

மாண்புமிகு அமைச்சர் இராஜேந்திர பாலாஜி அவர்களே! திராவிடர் கழகத்தலைவர் மானமிகு. கி.வீரமணியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளீர்களே - அதே கேள்வியை அண்ணாவை நோக்கி கேட்கத் தயார்தானா?

எங்கள் கொள்கை அண்ணாவுடையது அல்லது எம்.ஜி.ஆருடையது என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்!  அண் ணாயிசம் என்றால் சோசலிசம், கம்யூனிசம், கேப்பிட்டலிசம் என்று வெண்டைக்காய் விளக்கெண்ணெய் விளக்கம் அளித்தவர் அல்லவா எம்.ஜி.ஆர்! அவரின் தொண்டரடி பொடியாழ்வார் என்று சொல்லித் தொலைத்து விட்டுப் போங்கள்!

மண்சோறு சாப்பிடச் சொன்ன அம்மா வழி என்றாவது சொல்லித் தொலையுங்கள். ஆனால் அண்ணா வழி என்று சொல்லி அண்ணாவை கொச்சைப்படுத்தாதீர்கள் - ஆண்டாளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.

முதலில் கட்சியின் பெயரிலிருந்து அண்ணாவையும், கட்சிக் கொடியிலிருந்து அண்ணா உருவத்தையும் தூக்கி எறியுங்கள் - அதுதான் அறிவு நாணயம்!

ஆம். என்க!

- மின்சாரம் -

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த இந்தத் தமிழ் மண்ணில் நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலில் நடத்த நினைக்கும் எந்த முயற்சியும் நிச்சயம் வெற்றி பெறாது என்று வீரமணி அடித்துக் கூறுகிறாரே என்ற அன்பர் ஒருவரின் கேள்விக்கு 'துக்ளக்' ஆசிரியர் திருவாளர் குருமூர்த்தி அய்யர் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

வீரமணி 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து கொண் டிருக்கிறார். 50 ஆண்டுகளில் தமிழகமே தலைகீழாகி விட்டிருக்கிறது. திராவிடன் அடையாளமாக இருந்த கருப்புச் சட்டை இப்பொழுது சபரிமலை அய்யப்ப பக்தர்களின் அடையாளமாக மாறிவிட்டது என்று குதூகலிக்கிறார்.

அந்தோ பரிதாபம். திருவாளர் குருமூர்த்தி அய்யர் பஞ்சத்துக்கு ஆண்டியா - பரம்பரை ஆண்டியா என்று தெரியவில்லை. பக்தியின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு ஆராய்ச்சியா தேவை?

கோவில்களுக்குப் போவது பெண்களை சைட் அடிக்கத்தான் என்று கார்ட்டூன் போட்டுக் கலாட்டா செய்தது இதே சாட்சாத் 'துக்ளக்' அல்லவா!

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலையுண்டு போயிருக் கலாம். காஞ்சி சங்கரர் ஜெயேந்திரர் பற்றி அவர் எழுதி ஆவணப் படுத்திய கடிதங்கள் கத்தை கத்தையாக இருக்கத்தானே செய்கின்றன.

பக்திப் பரவசம் சொட்டக்கூடிய உங்கள் லோகக் குரு சாட்சாத் சங்கராச்சாரியாரின் லீலா விநோதங்கள் கொஞ்சமா நஞ்சமா? பக்தியின் லட்சணத்துக்கு சாட் சாத் ஜெயேந்திரர் ஒருவர் போதாதா?

காஞ்சிபுரம் மச்சேஸ்வர் கோயில் புகழ் குருக்கள் தேவநாதன், பகவானின் பள்ளியறையை தன் பள்ளி யறையாக மாற்றி ஆடிய சரச விளையாட்டுகளுக்குப் பிறகும்கூட கோயில்கள் பெருகுகின்றன - பக்தி நுரை தள்ளிப் பொங்கி வழிகிறது என்று குருமூர்த்தி அய்ய ரால் கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமின்றி எழுத முடி கிறது என்றால் அவாளுக்கே உரித்தான திருக்கல்யா ணக் குணங்கள்தான் அதற்குக் காரணமாக இருக்க முடியும்.

எச்சில் இலையில் உருண்டு புரளும் பக்தியும், பூசாரி தன் வாயில் வாழைப் பழத்தைக் குதப்பி, பக்தை யின் வாயில் உமிழும் பக்தியும் (குழந்தை இல்லாத வாளுக்கு இதனால் குழந்தைப் பாக்கியம் கிட்டுமாம்!) தான் என்னே, என்னே! பக்தி பெருகி விட்டது - அத னால் ஒழுக்கம் வளர்ந்து விட்டது என்று சொல்லட்டும் பார்க்கலாம் குருமூர்த்தி!

பரமனிடம் பாரத்தை ஒப்படைத்தாகிவிட்டது. இனி மக்களுக்கு நோய் நொடியின்றி, சர்வ சவுக்கியத்துடன் மக்கள் வாழ்கிறார்கள் என்று வாயைத் திறக்கட்டும் பார்க்கலாம் வந்தேறிகள்.

திருட்டுகள் ஒழிந்தன, கொள்ளைகள் மறைந்தன - மக்கள் மனம், வாக்கு காயத்தில் மையல் கொண் டுள்ளது என்று எந்தக் குருசாமிகளையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

உண்மையைச் சொல்லப் போனால் 12 வருடங்கள் பாவம் செய்து விட்டு மகாமகக் குளத்தில் ஒரு முழுக்கு போட்டால் பாவங்கள் தொலையும், புண்ணியம் “டெபாசிட்டாகும்“ என்கிற பக்தி யாருக்கு வேண்டும்? குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்பதுதான் பக்தி காட்டும் ஒழுக்கமா?

குடந்தை மகாமகக் குளத்தின் நீரை எடுத்து சோதனை சாலைக்கு அனுப்பி அதன் ரிசல்டை வெளி யிட்டவர் தஞ்சை மாவட்டக் கலெக்டர்தான்; சிறுநீர்க் கழிவு 40 சதவிகிதம், மலக்கழிவு 28 சதவீதம் என்று வெளியிட்டாரே - இந்த வெட்கக் கேட்டுக்கு பெயர் தான் பக்தியா?

ஒரு கொசுறுச் செய்தி: அதுவும் திருவாளர் குரு மூர்த்திவாளின் துக்ளக்கில் இருந்துதான் (20.12.2017, பக்கம் 35)

என்ன தலைப்பு!

ஓயாத கோவில் திருட்டுக்கள்

சர்வ சக்தி வாய்ந்த கடவுள்கள் திருட்டுப் போகின் றன - இந்த லட்சணத்தில் கடவுள் பராக்கிரம வெத்து வேட்டு வீண் பேச்சுப் புரட்டு - இன்னொரு பக்கம்.

காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் பட்டப்பகலில் பகவான் சன்னதியில் படுகொலை செய்யப்பட்டபோது வராத வரதராச பெருமாள், மச்சேஸ்வர நாதர் கோயில் கருவறையைப் பள்ளியறையாக குருக்கள் பார்ப்பான் தேவநாதன் பயன்படுத்தியபோது தடுத்திட முன்வராத மச்சேஸ் வரன் - எப்பொழுது வரப்போகிறான்? மக்களுக்கு அருள்பாலிக்கப் போகிறான். வெட்கக் கேடே உன் பெயர்தான் பக்தியும் கோயிலுமா?

வீண் வம்புக்கு வரவேண்டாம் வெங்கண்ணா பரம்பரைகள் - வண்டி வண்டியாக சரக்குகள் வந்து விழுந்து கொண்டே இருக்கும்!
பக்தி தனிச் சொத்து - ஒழுக்கம் பொதுச் சொத்து என்றார் நாத்திக நன்னெறி ஆசான் தந்தை பெரியார். அப்படிச் சொல்ல முடியுமா இந்த அக்கிரகார அம்பிகளால்?  சங்கராச்சாரிகளால்?


 

- கவிஞர் கலி.பூங்குன்றன்

நியூஸ் 18 தொலைக்காட்சியில் கடந்த பொங்கலன்று சேலத்தில் ஒரு பட்டிமன்றம் ஒளிபரப்பப்பட்டது. பட்டிமன்றத்தின் தலைப்பு ‘50 ஆண்டு திராவிட ஆட்சி வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா? என்பதாகும்.

நேரம் கருதியோ, வேறு என்ன காரணம் கருதியோ திராவிட இயக்க ஆட்சியில் நடைபெற்ற சமூக ரீதியான சாதனைகள் இடம்பெறவில்லை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இடம் பெறாத சிந்தனை, சாதனை என்பது சமூதாய ரீதியான செயல்பாடுகளாகும்.

1. எடுத்துக்காட்டாக, சுயமரியாதை திருமணச் சட்டமும், பார்ப்பனீய புரோகித மூடத்தன பெண்ணடி மைக்கு கட்டியம் கூறும் வைதீகக் கல்யாணத்திற்கு மாற்றாக தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரி யாதைத் திருமணம் திமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்குமுன் நடை பெற்ற அத்தகு திருமணங் களும், இனி நடக்கவிருக்கும் அத்தகு திருமணங்களும் சட்டஅங்கீகாரம் பெற்றது சாதாரணமானதல்ல.

மார்க்சிஸ்ட்கள் ஆட்சி நடத்திய மாநிலங் களில் கூட இந்த புரட்சிகர மாற்றத்திற்கான சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

தமிழர் வீட்டுத் திருமணத்தில் அவனு டைய தாய்மொழிக்கு இடமில்லை. அந்த நிலையை மாற்றியது திராவிட ஆட்சியல்லவா!

2. இரண்டாவது சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் - இந்தியா விலேயே ஒரு நாடாக இருப்பது (தமிழ்நாடு) நமது மாநிலம்தானே!

3. மூன்றாவதாக தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை. இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம்.

4. ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொள்பவர் களுக்கு தங்கம் வழங்கும் திட்டம்.

5. அன்னை நாகம்மையார், அன்னை மணியம் மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் தருமாம்பாள், அன்னை தெரசா, டாக்டர் சத்தியவாணி முத்து போன்ற வீராங் கனைகளின் பெயரில் மகளிர் உயர்வுக்கான மறுமலர்ச்சி திட்டங்கள் - இந்தியாவிலேயே திராவிட ஆட்சியைத் தவிர்த்து வேறு எங்கு உண்டு?

6. ஏழை மகளிர் இலவச படிப்புத் திட்டம், திருமண உதவித் திட்டம், மகப்பேறு நிதி உதவித் திட்டம், ஏழை விதவைத் தாய்மார் களின் மகள் திருமண உதவித் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான திருமணஉதவித் திட்டம் என்று பெண்கல்வியில் தொடங்கி, திருமணம், மகப்பேறு வரை உதவி செய்த ஆட்சி எந்த ஆட்சி?

அரசுப் பணிகளில் பெண்கள் பங்கேற் பினை அதிகரிக்கும் வகையில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு, உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்பவையெல்லாம் திராவிட ஆட்சியின் அரும் பெருஞ்சாதனைகள் அல்லவா!

7. அரவாணிகள் என்பவர்களை - சமுதாயத்தின் அவலமாக நினைக்கப்பட்ட வர்களை திருநங்கைகளாக்கி அவர்களை மூன்றாம் பாலினத்தவர்களாக்கி தனி வாரி யமும் அமைக்கப்பட்டது என்ன சாதாரணமா?

8. தமிழை பயிற்றுமொழியாகக் கொண் டவர்களுக்கு அரசுப்பணி நியமனங்களில் 20 விழுக்காடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றம். தமிழுக்கு, செம்மொழி அங்கீகாரம் இவை யெல்லாம் திராவிடக் கட்சி ஆட்சிகளின் தனித்தன்மையான சாதனை முத்துக்கள் என்பதை மறுக்க முடியுமா?

9. ஜாதி ஒழிப்புத் திசையில் பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள், சாதனை சரித்திரத்தின் கல்வெட்டு அல்லவா!

10. இந்தியாவிலேயே முதன் முதலாக குடிசை மாற்று வாரியம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான வாரியங்கள், உழவர் சந்தை என்பதெல்லாம் அடித்தட்டு மக்கள்பால் திராவிட ஆட்சிகளுக்கு இருந்த அளப்பரிய அக்கறையை பறைச்சாற்றுமே!

11. மாநில உரிமைகள் கோட்பாட்டுத் திசையில் நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலை மையில் குழு அமைத்து இந்திய துணைக் கண்டத்தில் ஆக்கரீதியான புதுவெளிச்சத்தை பாய்ச்சியவர் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அல்லவா!

12. இந்தியாவிலேயே இடஒதுக்கீடு 69 விழுக்காடு என்பது சட்டரீதியாக ஆக்கப் பட்டது எந்த ஆட்சியில்? திராவிட இயக்க ஆட்சியில் அல்லவா! சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டதுண்டே!

50 வயது கடந்த நிலையிலும் திருமண மாகாமல் வறுமையில் வாடும் பெண்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை.

வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை -இவையெல்லாம் மக்கள் நல ஆட்சியின் மகத்தானவை தானே!

மக்களின் அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ்.

பொது விநியோகத் திட்டத்தில் இந்தியா விலேயே தமிழ்நாடு (கலைஞர் அரசு) முன் னிலையில் இருக்கிறது. மற்ற மற்ற மாநிலங் களும் தமிழ்நாடு அரசை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றமே பாராட்டு. (12.8.2010) திராவிடக் கட்சியின் நிருவாகத் திறமைக்கு இது ஒரு பொன்னாடை!

சாலைகள் போடுதல், தெருவிளக்கு களுக்கு வகை செய்தல் போன்றவை எல்லா ஆட்சிக்காலத்திலும் சாதாரணமாக நடை பெறக்கூடியவைதான். ஆனால் வரலாற்று கண்ணோட்டத்தோடு சமூக மாற்றத்திற்கான  சீர்திருத்தத்துக்கான அடிப்படைச் சட்டங் களையும் திட்டங்களையும் வகுத்து சாதனைச் சிகரத்தில் சாகா ஒளி பெற்றது திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில்தான்.

சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி யேற்றும் உரிமையை இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தவரும் திராவிட ஆட்சி வித்தகராம் அதே கலைஞர் பெருமான்தானே.

இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராசர் பச்சைத்தமிழர் ஆனதும், கர்மவீரர் ஆனதும் கல்வி வள்ளலாகச் சுடர் விட்டதும் எல்லாம் கூட தந்தை பெரியார் அவர்களின் தோளில் காமராசர் நிறுத்தப்பட்டதுதான் என்பது வரலாறு. அதனால்தானே கதர் சட் டைக்குள் கருப்புச்சட்டை என்று ‘கல்கி’கள் கார்ட்டூன் போட்டனவே.

இந்திய துணைக் கண்டத்திலேயே கடந்த 50 ஆண்டு திராவிட இயக்க ஆட்சித்தான்  தன்னிகரற்று ஒளி வீசுகிறது.

திராவிட இயக்கத்தின் அரை நூற்றாண்டு ஆட்சி வளர்ச்சி இல்லையென்றால், வளர்ச்சி என்பதற்கு என்ன பொருளை தங்கள் கைவசம் வைத்துள்ளார்களோ யார் கண்டது?

 

 

=====================

அட அண்டப்புளுகே!

வாயில் சாக்கடையைத் தவிர வேறு எதுவும் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமாக தனிக்காட்டு ராஜாவாக இருக்கக்கூடிய பிஜேபி அம்பி ஒருவர். சேலம் பட்டிமன்றத்தில் ஓர் அண்டப்புளுகை - ஆகாசப் புளுகை அள்ளி விட்டாரே பார்க்கலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப் பட்டவர்களை நுழையச் செய்தவர் மதுரை வைத்திய நாதய்யர்தானாம். தாழ்த்தப்பட்டவர்கள் அக்கோயிலில் நுழைவதற்கு எதிராக ஈ.வெ.ரா. இருந்தார் என்பதுதான் அந்த அம்பியின் ஆலாபனம்.

உண்மை என்னவென்றால் 1922 ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நடந்தது என்ன? இதுபற்றி திரு.வி.க. அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்பு -2 பக்கம் 274இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாடு காங்கிரஸ் கூடிய போது நாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யரும், கிருஷ்ணய்யங்காரும் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளாரே. அவர்தான் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். ஈ.வெ.ரா எதிர்த்தார் என்று வாய் நிறைய பொய் புழுக்களை தேக்கி அப்படியே பொலபொலவென்று கொட்டியுள்ளாரே!.

இந்த இடத்திலும் பார்ப்பனக்கூட்டத்திற்கு ரொம்பவே இனிக்கும் திருவாளர் இராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜி) கொண்டு வந்து நிறுத்துவோம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் 8.7.1939 சனிக்கிழமை அன்று தாழ்த்தப்பட்ட வர்களுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி 30.7.1939 அன்று மதுரையில் பேசிய மாண்புமிகு முதல் அமைச்சர் (கனம்) சி.இராஜகோபாலாச்சாரியார்.

“இந்த வெற்றி காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றி யுமல்ல. இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷ யத்தில் காங்கிரஸ்காரர்களும், சுயமரியாதைக்காரர்களும், ஜஸ்டிஸ்காரர்களும் “இன்னும் இதரர்களும் சேவை செய்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

இச்செய்தி 31.7.1939 நாளிட்ட ‘சுதேசமித்தரன்’ ஏட்டில் வெளிவந்தது. (விடுதலை, 1.8.1939) பாவம் எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களுக்கு தோல்வி மயம்தான்.

மதுரை ஏ.வைத்தியநாதய்யர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அழைத்துச் சென்றார் என்று பிரச்சாரம் செய்கிறார்களே - சங்கதி என்ன தெரியுமா?

யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு சில தாழ்த்தப்பட்ட தோழர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார் என்பதுதான் உண்மை.

அதற்குக் கூட உதவி செய்தவர் நீதிக்கட்சிக்காரரான ஆர்.எஸ். நாயுடுதான்.  அவர்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாவார். அவரது அனுமதியின் காரணமாகத் தான் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக  சில தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்ற வீராதி வீரர் தான் இந்த வைத்தியநாத அய்யர்.

இதில் ஒரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதற்காகக் கோயில் கருவறையைப் பூட்டியும், மறுநாள் கோயிலுக்கு வராமல் இருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவரும், கோயில் நிருவாக அதிகாரியான அந்த நீதிக்கட்சிக்காரர்தான்!

Banner
Banner