மின்சாரம்

பிரயாகை- காசியிலிருந்து கங்கை ராமேச்வரத்திற்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்தால்தான், யாத்திரை பூரணமாகும் என்பது தங்களுடைய நம்பிக்கை என்று அவர்கள் கூறினார்கள். ஆச்சரியமாக இல்லை? இங்கிருப் பவர்கள் அங்கு செல்ல வேண்டும். அங்கிருப்பவர்கள் இங்கு வர வேண்டும் என்று நம் முன்னோர் அமைத்த யாத்திரைகளின் முக்கிய நோக்கமே, தேசிய ஒருமைப்பாடு என்பது வெளிப்படையல்லவா?

(துக்ளக் - 8.8.2018- பக்கம்-6)

நடந்து செல்லும் காலத்தை விட நவீன வசதிகள் பெருகிய இந்தக் காலக்கட்டத்தில் அதிக பிரயாணம் நடைபெற்று வருகிறதே- இப்போது. தேசிய ஒருமைப்பாடு வளர்ந்திருக்கிறதா? தேய்ந்திருக்கிறதா?

இவர்கள் சொல்லும் புண்ணிய சேத்திராடனங்கள் புண்ணிய நதிகளின் யோக்கியதை என்ன தெரியுமா? கங்கையை எடுத்துக் கொண்டால் காசியில் மட்டும் 20 மில்லியன் காலன் சாக்கடை கலக்கிறது. நாளொன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன. கங்கை நீரில் புற்று நோய்க்கான புகலிடம் என்றெல்லாம் உறுதி செய்யப் பட்டுள்ளது என்பதையும் கணக்கில் கொண்டு திருவாளர் குருமூர்த்தி அய்யர் துக்ளக்கில் எழுதும் க்ஷேத்திரங்களின் ஆபாசத்தை உணரலாம்.

நாம் அனைவரும் ஒன்றுதானா?

நாம் ஒரு நாடாக இருந்ததால், நமக்குள் வித்தி யாசங்கள் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், நம் முன்னோர் நடந்தோ, மாட்டுவண்டியிலோ நாடு முழுவதும் வலம் வந்தார்கள். ஒருவர் மொழியை மற்றவர்கள் கற்றுப் பேசி வந்தார்கள். அவர்கள் தனித் திருக்கவில்லை. தெற்கில் ராமசேதுவையும், கிழக்கில் பூரி- ஜெகந்நாத்தையும், வடக்கில் ஹரித்துவாரையும் புண்ணிய சேத்திரங்களாக அமைத்த தீர்க்கதரிசியான நம் முன்னோரின் குறிக்கோள் என்னவாக இருந்திருக் கும்? அவர்கள் முட்டாள்களல்ல என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

அவர்களுக்கு, கடவுளை நாம் நம் வீடுகளிலிருந்து வழிபடலாம் என்பது தெரியும். யாருடைய இதயத்தில் அறம் இருக்கிறதோ, அவர்கள் வீடுகளில் கங்கை இருக்கிறாள் என்று அவர்கள் நமக்குக் கூறியிருக் கிறார்கள். நம் நாட்டைப் பிரிக்க முடியாத ஒரு நாடாக இயற்கை படைத்திருப்பதை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்கள் நம் நாட்டை, ஒரே நாடு என்று அடித்துக் கூறி வந்தார்கள். அப்படிக் கூறிய அவர்கள், நாடு முழுவதும் பல இடங்களில் புண்ணிய ஸ்தலங்களை அமைத்து, உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாதவாறு நாம் ஒரு நாடு என்கிற சிந்தனையை நம் மக்களின் மனதில் ஆழமாக வளர்த்தார்கள். ஆகவே, இந்தியர் களாகிய நாம் அனைவரும் ஒன்றே. இரண்டு வெள்ளைக் காரர்கள் கூட நம்மைப் போல் ஒன்றல்ல'' என்று கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

(துக்ளக் - 8.8.2018 -பக்கம் 7)

புண்ணியஸ்தலங்களை இணைத்து - இந்தியர்கள் நாம் அனைவரும் ஒன்றே என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று துக்ளக்கில் திருவாளர் குருமூர்த்தி அய்யர் சும்மா வரைந்து தள்ளியுள்ளார்.

குருமூர்த்தியாரே, குருமூர்த்தியாரே - முதலில் உமது தோளில் தொங்கும் பூணூலை அறுத்து எரியுங்கள். நாங்கள் துவி ஜாதியினர் - இரு பிறப்பாளர் என்ற ஜாதி இறுமாப்பிலிருந்து வெளியேறிவிட்டு அதற்குப் பிறகு நாம் அனைவரும் ஒன்றே என்று பேச முயலுங்கள்.

கேள்வி: பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள் உள்ள வர்கள் எனது கட்சியில் உள்ளனர். நான் அரசியலுக்கு வந்திருப்பது பகுத்தறிவு கொள்கையை பரப்பி மூடநம்பிக்கையை ஒழிக்க அல்ல. ஏழ்மை ஊழலை ஒழிக்கவே என்ற கமலின் விளக்கம் பற்றி?

பதில்: பகுத்தறிவு ஜாம்பவானான தி.மு.க. விற்கே பகுத்தறிவு கை கொடுக்க வில்லை. எனவே நமக்குப் பகுத்தறிவு போனியாகாது. அதை நம்பி பிரயோஜன மில்லை என்பதால்தான் ஏழ்மையையும் ஊழலையும் பிடித்துக் கொள்ள முயலு கிறார் கமல்.

(துக்ளக் 8.8.2018, பக்கம் 10)

அப்படியா சேதி? 1971ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், இராமன் செருப்பால் அடிக்கப்பட்டதாகக் கூறி பிரச்சாரம் செய்யப்பட்டதே - துக்ளக் சிறப்பிதழையே வெளியிட்டதே.

இராமனை செருப்பாலடித்த தி.மு.க வுக்கா உங்கள் ஓட்டு என்று பெரிய பெரிய சுவரொட்டிகளை அடித்து ஓகோ என்று பிரச்சாரம் செய்யப்பட்டதே. தேர்தல் முடிவு என்ன?

இராமனை செருப்பால் அடிக்காத போது 1967ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்குக் கிடைத்த இடங்கள் 138, இராமனை செருப்பால் அடித்தபிறகு தி.மு.க.வுக்குக் கிடைத்த இடங்கள் 184.

இந்தநாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது என்று கனம் ராஜாஜியே அறிக்கை வெளியிட்டாரே! (கல்கி, 4.4.1971), உண்மை இவ்வாறெல்லாம் இருக்க பகுத்தறிவு தி.மு.க.வுக்கே கை கொடுக்க வில்லை என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர் எழுதியுள்ளது அப்பட்டமான அண்டப்புளுகு.

இங்கு ஆஸ்திகம் என்பது சிறுபான்மை மக்களின் நலம்; இங்கு நாஸ்திகம் என்பது பெரும்பான்மை மக்களின் நலம் -தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

கேள்வி: கொள்கைகளை முன்னி லைப்படுத்தாமல் பிழைப்பு சார்ந்த கட்சிகளாக மாறிய திராவிடக் கட்சிகளைப் பற்றி தங்கள் கருத்து?

பதில்: அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு என்று கூறி கட்சி துவங்கிய தி.மு.க. முடிவில் திராவிட நாட்டையே சுடுகாட்டுக்கு அனுப்பிய பிறகு கொள்கை ஏது. எல்லாம் பிழைப்பு தான் - அதுவும் சில குடும்பங்களின் பிழைப்புதான். (துக்ளக் - 8.8.2018, பக்கம் 10)

திமுக திராவிட நாடு பிரிவினையைக் கை விட்ட நிலையில் வரவேற்காமல் ஏன் குறைகூறுகிறார். கேட்டாலும் தப்பு, கேட்கா விட்டாலும் தப்பா? கடலைத் தாண்டி போகக்கூடாது, அது இந்துமதத்தின் படி தோஷமானது என்று கூறும் இந்தக் கூட்டம் தங்கள் பார்ப்பனத் தலைவரை ஜெகத்குரு என்று சொல்லு கிறார்களே - இவர்கள்தான் மற்றவர்களை விமர்சனம் செய்கிறார்கள். திராவிடநாடு பிரிவினையைக் கைவிட் டாலும் அதற்கான காரணம் இருக்கவே செய்கிறது என்றார்  அண்ணா. அந்தக் காரணங்களின் அடிப்படையில், எதிர்ப்பு நடவடிக்கைகளில் திமுக ஈடுபட்டுதானே வருகிறது.

கேள்வி: நம்பிக்கைக்கும் மூட நம்பிக் கைக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: அரசியல் தலைவர்களை போற்றுவது, புகழ்வது, சிலை வைப்பது, வணங்குவது - நம்பிக்கை; கடவுளைப் போற்றுவது, புகழ்வது, சிலை வைப்பது, வணங்குவது - மூடநம்பிக்கை (துக்ளக், 8.8.2018 - பக்கம் 13)

நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுகூர்ந்து சிலை வைப்பது, அவர்கள் கூறிய கருத்துகளை பீடத்தில் பொறிப்பது எப்படி  குற்றச்செயலாகும்? அந்த சிலை களிடம் யாரும் வரம் கேட்பதில்லையே. கடவுள் பொம்மை சிலை விவகாரம் அப்படியா? பொம்மைக்கு பொருளை வைத்து (கொடுக்கல் -வாங்கல்) தேவையானவற்றை கொடுக்குமாறு தோப்புக்கரணம் போடுவது பைத்தியக்காரத்தனமல்லவா! கேட்பதை கொடுக்குமா  இந்தச் சாமிசிலைகள்? அதுவும் கடவுளுக்கு உருவமில்லை. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்  என்று கூறிவிட்டு, கடவுள்களுக்கு உருவச்சிலைகள் வைப்பது, பொண்டாட்டி, வைப்பாட்டிகளை உருவாக்குவது கடைந் தெடுத்த மூடத்தனமும் பித்தலாட்ட மும்தானே.

 

மத்தூர், ஜூலை 29 தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாட்டினை யொட்டி, பேரணி நேற்று (28.7.2018) சனியன்று மாலை 5 மணிக்கு அ.மே..தி. பள்ளி அருகிலிருந்து புறப்பட்டது.

பேரணிக்கு கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.மதியழகன் தொடக்க வுரை ஆற்றினார்.

பேரணியை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முன்னிலையில் மாவட்ட இளைஞரணி துணைச் செய லாளர் ஆத்தூர் சுரேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணிக்குக் கீழ்க்கண்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

காமலாபுரம் இரா.கிருட்டிணன் (தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர்), இல.ஆறுமுகம் (கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர்), வே.புகழேந்தி (கிருஷ் ணகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர்), தே.சத்தியராஜ் (இளைஞரணி செயலாளர், தருமபுரி), வெற்றிகொண்டான் (திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்), அ.சுரேஷ் (மாநில இளை ஞரணி துணை செயலாளர்), தி.கதிரவன் (கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்),

மு.சிலம்பரசன் (திருப் பத்தூர் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்)

கொள்கைக் கொட்டுமுரசம்

இருவர் இருவராக அணி வகுத்துப் பெரியார் பிஞ்சுகள், மகளிர் இளைஞரணி, மாணவரணியினரும், கழகத் தோழர் களும், கழகக் கொடிகளை கையில் ஏந்தி இராணுவச் சிப்பாய்கள் போல அணி வகுத்தனர்.

அச்சடித்துக் கொடுக்கப்பட்ட ஒலி முழக்கங்களை உரிமை முரசமாக உரத்தக் குரலில் ஓங்கி எழுப்பி வந்தனர்.

வெடிக்கட்டும் வெடிக்கட்டும்!

பஞ்சமர் புரட்சி வெடிக்கட்டும்!!

வெடிக்கட்டும் வெடிக்கட்டும்!

சூத்திரர் புரட்சி வெடிக்கட்டும்!!

வேண்டாம் வேண்டாம்!

‘நீட்’ அறவே வேண்டாம்!!

கொண்டு வா கொண்டு வா!

மாநிலப் பட்டியலுக்கு

கல்வியை கொண்டு வா!!

திணிக்காதே திணிக்காதே!

இந்தியைத் திணிக்காதே!!

சமஸ்கிருதத்தை புகுத்தாதே!

தேசியக்கல்வி என்ற பெயரால்

குலக்கல்வியைக் கொண்டு வராதே!

இராமராஜ்ஜியம் என்று சொல்லி

இந்துத்துவாவைத் திணிக்காதே!

குழி தோண்டாதே! குழிதோண்டாதே!

மதச்சார்பின்மைக்குக் குழி தோண்டாதே!!

மத்திய அரசே, மத்திய அரசே புகுத்தாதே புகுத்தாதே!

மதவாதத்தை புகுத்தாதே!!

பரப்புவோம் பரப்புவோம்!

பகுத்தறிவைப் பரப்புவோம்!!

மனுதர்மத்தை வீழ்த்திடுவோம்!

மகளிர் உரிமை காத்திடுவோம்!!

ஒழிப்போம் ஒழிப்போம்!

ஜாதி ஒழிப்போடு

தீண்டாமையையும் ஒழிப்போம்!!

ஓங்கட்டும் ஓங்கட்டும்!

சமத்துவம் ஓங்கட்டும்!!

ஒழியட்டும் ஒழியட்டும்!

பேதங்கள் ஒழியட்டும்!!

பணி முடிப்போம் பணி முடிப்போம்!!

தந்தைபெரியார் பணிகளை

தமிழர் தலைவர் வீரமணி தலைமையிலே

முடிப்போம் - முடிப்போம்

எனும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலை சங்கநாதமாக ஒலித்தனர்.

தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக மாணவரணிச் செயலாளர்) மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந் திரையன், அண்ணா.சரவணன், வன வேந்தன், செல்வம், யாழ்திலீபன், தமிழ் செல்வன், கருபாலன், ஆறுமுகம் முதலி யோர் முழக்கமிட்டு வந்தனர்.

சங்கநாதமாக முரசு கொட்டினர். பெண்ணடிமையின் முதுகெலும்பை முறிக்கும் முழக்கமாக அவை இருந்தன.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை மீட்புக்குரலாக எதிரொலித்தன.

மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறியடித்த தீச்சட்டிகள்

கழக மகளிரணியினர் கையில் தீச் சட்டியை ஏந்தி தீச்சட்டி இங்கே - மாரி யாத்தா எங்கே என்று கழக வீராங்கனைகளின் கர்ஜனை காண்போரை ஆச்சரியக்குறியில் ஆழ்த்தியது. குறிப்பாக பெண்கள் இந்தக் காட்சியை கண் கொட்டாது பார்த்து அதிசயித்தனர்.

தோழர்கள் ஜான்சிராணி, வசந்தி, பிரியம்,  சவுந்தரி, மங்களதேவி, சுதா, வெண்ணிலா, சங்கீதா, சுமித்தா, முருகம் மாள், மணியம்மை, குமினி, மணிமேகலை, மேனகா முதலிய கழக வீராங்கனைகள், தீச்சட்டி ஏந்தி மூடநம்பிக்கையின் ஆணி வேரைத் தீய்த்தனர்.

தேவ சமுத்திரம் வேலன், கிருட்டினகிரி ஆறுமுகம், காமலாபுரம் இராமசாமி ஆகிய தோழர்கள் தீச்சட்டி ஏந்தி வந்தனர்.

சூடத்தை கொளுத்தி வாயில் போட்டுக் காட்டி கடவுள் இல்லை இல்லைவே இல்லை என்று முழங்கி வந்தார் கழகப்  பொதுக்குழு உறுப்பினர் அ.தமிழ்ச் செல்வன்.

‘கார் இழுக்கும் தோழர்களைப் பார்த்தீரா?’

‘தேர் இழுக்கும் பக்தனே, கார் இழுக்கும் கருப்புச் சட்டை தோழர்களை பார்த்தீரா?’ என்ற ஒலி முழக்கம் ஊர் வலத்தின் இறுதிப் பகுதியில் ஒலித்ததும் பொதுமக்களின் பார்வை அந்தப் பக்கம் திரும்பியது.

முதுகில் அலகுக் குத்தி பக்தர்கள் சிரத்தைதோடு தேரினை (சப்பரத்தினை) இழுத்து வருவார்கள் அல்லவா?

ஏதோ கடவுள் சக்தியால் தான் இவ்வாறெல்லாம் செய்ய முடிகிறது என்ற மூடநம்பிக்கை பிரச்சாரம் நடந்து வருவதை முறியடிக்கும்  விதமாக முதுகில் அலகுக் குத்தி காரினை இழுத்து வந்தனர் கருஞ்சட்டைக் காளையர்கள்.

காமலாபுரம் இராமசாமி, கிருட்டினகிரி மாவட்ட இளை ஞரணி தலைவர் இல.ஆறுமுகம், கிருட்டினகிரி ஒன்றிய செய லாளர் வேலன் ஆகிய தோழர்கள் முதுகில் அலகுக் குத்தி கடவுள் இல்லை இல்லைவே இல்லை முழக்கமிட்டு காரினை இழுத்து வந்தனர்.

பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக  இளைய தலைமுறையினர் மத்தியிலும் அந்தக் காட்சியை கவனமாக ஆர்வத் துடன் பார்த்தனர்.

வணிக பெருமக்களும் வழிநெடுக திராவிடர் கழகத்தின் கட்டுப்பாடான மூடநம்பிக்கை ஒழிப்புக் காட்சிகளையும், உள்ளடக்கிக் கொள்கை முழக்கமிட்டு வந்த காட்சியினையும் கண்டுகளித்தனர். கிருட்டினகிரி  முக்கிய நெடுஞ்சாலை வழியாக கட்டுப்பாட்டுடன் கர்ச்சனை எழுப்பி வந்த திராவிடர் கழகத் தோழர்களின் பேரணி என்னும்  நதி மாநாடு  நடைபெற்ற பேருந்து நிலையம் அருகே சங்கமித்தது.

ஆம், கழகப் பேரணி என்பது காட்டாறு போல கண்ட மாதிரியாக கூச்சல் போடும் ஒன்றல்ல. கொள்கை முழக்கங்கள் வாயிலாக கழகக்  கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு வகை யுக்தியாகும். மூடநம்பிக்கை ஒழிப்பை மக்கள் மத்தியில் படம் பிடித்துக் காட்டி மக்களை சிந்திக்கச் செய்யும் விழிப்புணர்வு பிரச்சார முறையாகும். அண்மைக் காலமாக இளைஞர்கள், மாணவர்கள், திராவிடர் கழகத்தை நோக்கி அலை அலையாக வரும்  உந்துதலை மத்தூர் மாநாட்டின் பேரணியிலும் காண முடிந்தது.

மத்தூர் திராவிடர் கழக மண்டல

இளைஞரணி மாநாட்டு நிகழ்ச்சிகள்

தலைமை: தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் ஆறுமுகம்

வரவேற்புரை: திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர் பழனிச்சாமி

முன்னிலை: தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் கிருட்டிணன், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர் புகழேந்தி, தருமபுரி மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்தியராஜ், திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வெற்றிக்கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிரவன், திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சிலம்பரசன்

பேரணியை தொடங்கி வைத்தவர்: மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ்

கழகக்கொடி ஏற்றி உரை: மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் யாழ்திலீபன்

தொடக்கவுரை: மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன்

உரைவீச்சு: தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன்

மந்திரமா, தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சி: ஈட்டிகணேசன்

சிறப்புரை: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,

கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கே.சி.எழிலரசன், கழக மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கழக திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அகிலா எழிலரசன், மாநில ப.க.துணைத் தலைவர் அண்ணா சரவணன், கழக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வி.ஜிஇளங்கோ, கலைமகள் கலாலயா பள்ளி தாளாளர் சிந்தை மு.இராஜேந்திரன், அரூர் ஒன்றிய ப.க. தலைவர் சா.இராஜேந்திரன்

தருமபுரி மண்டலத் தலைவர் மதிமணியன், தருமபுரி மண்டல செயலாளர் கரு.பாலன், தருமபுரி மாவட்டத் தலைவர் இளைய.மாதன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் துக்காராம், தருமபுரி மாவட்ட செயலாளர் காமராசு, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் திராவிடமணி, திருப்பத்தூர் மாவட்ட இணைச் செயிலாளர் அரங்க.இரவி, திமுக வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி

நன்றியுரை: மத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் அரசகுமார்

 

 

"அந்த மூன்று நாட்களில்

கோயிலுக்குச் செல்வது

தீட்டாகவே இருக்கட்டும்

எந்த மூன்று நாட்களில்

பெண் தெய்வங்கள்

கோயிலுக்குள் இருக்காதெனக்

கொஞ்சம் சொல்லுங்களேன்"

என்று பொன்ராஜ் என்ற கவிஞர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதினார். அந்தக் கேள்விக்கு, பதில் இன்றுவரை எந்த ஆத்திக சிரோன்மணிகளின் வாய்ப் பொந்திலிருந்தும் வெளி வரவில்லை.

அய்யப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையில் உள்ள பெண்கள் போகக் கூடாது என்ற "ஆகமப் புலிகளின்" கூச்சலுக்கு எதிர்ப்பாக விமர்சன சர வெடிகள் எங்கு பார்த்தாலும் காதை செவிடாக்கிக் கொண்டிருக்கின்றன.

புதிய தலைமுறை விவாதத்திலும் இந்தத் தலைப்பு இடம் பெற்றது. நெறியாளரான கார்த்திகேயன், கவிஞர் பொன்ராஜ் எழுதியதை எடுத்துக் காட்டிக் கேட்டார்.

அப்பாடா கா(லி)விகள் கச்சையைக் கட்டிக் கொண்டு வார்த்தைச் சாக்கடைகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டன. காரைக்குடி அம்பிப் பையனும் வழக்கம்போல வார்த்தை வஸ்தாத்து வேலையில் இறங்கினார்.

நெறியாளர் கார்த்திகேயனுக்கு நெருக்கடி சாத்துப்படிகள் ஒரு பக்கம். நிருவாகத்திலும் கூட!

வேறு வழியின்றி தன் வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் நெறியாளர் தோழர் கார்த்திகேயன்.

பெண்களுக்கு மாதவிடாய் இருப்பதால், அய்யப்பன் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்றால், பெண் தெய்வங்களே இருக்கின்றனவே. அந்தப் பெண் தெய்வங்களின் நிலைப்பாடு என்ன என்று புத்தியுள்ள எவரும் எழுப்பும் கேள்வியே! பகுத்தறிவு மனிதனுக்கு உண்டு என்று நம்புகிறவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக வெடித்தெழும் வினாதான்.

அதுவும் ஊடகத்தில் நெறியாளராகப் பணியாற்றக் கூடிய ஒருவர் கேட்டே தீர வேண்டிய ஒன்றே.

பெண் தெய்வங்களுக்கு வராத கோபக்கனல் இந்தப் பக்தவாள் கூட்டத்துக்கு ஏன் வருகிறது? இவர்கள் என்ன பெண் தெய்வங்களின் ஓசி வக்கீல்களா?

பெண் தெய்வம் இதில் அவமானப் பட்டிருந்தால், பெண் தெய்வத்துக்குச் சக்தியும் இருந்தால், நெறியாளரை நெரி கட்டச் செய்திருக்குமே!

அரசனை விஞ்சிய விசுவாசிகளாக சிலர் சிலம்பம் ஆடியதால், ஒரு நிறுவனத்தில் பணியாற்றித் தீர வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளான அருமைத் தோழர் கார்த்திகேயன், மிகுந்த பெருந்தன்மையின் உச்சத்திற்குச் சென்று தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார் (21.7.2018).

காயப்படுத்தும் எண்ணம் இல்லை. வருந்துகிறேன் என்று தலைப்பிட்டு அவர் பதிவு செய்திருப்பதாவது:

இரண்டு நாட்களுக்கு முன் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய (கவிஞர் பொன்ராஜ் எழுதிய அந்தக் கவிதைதான்) ஒரு சிலரின் மனதைக் காயப்படுத்தியிருக்கிறதை அறிகிறேன். ஒரு வார இதழில் வெளிவந்த அந்தக் கவிதையை குறிப்பிட்டதில் எந்த நோக்கமும் கிடையாது. யார் உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணமும் இல்லை எனினும், யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக முழு மனதுடன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தோழர் கார்த்திகேயன் பதிவு செய்துள்ளார்.

இது நெறியாளரின் உச்சக்கட்ட பெருந்தன்மையையும், இந்த நிலைக்கு அவரைத் தள்ளிவிட்ட அறிவு நாணயமற்ற மனிதர்களின் மட்ட ரகமான, சீர்கெட்ட மனப்பான்மையையும் தான் பச்சையாகப் படம் பிடித்துக் காட்டும்.

ஒரு தகவலை பக்தர்களும் சரி, வெகு மக்களும் சரி தெரிந்து கொள்வது அவர்களின் அறிவுத் துலக்கத்திற்குப் பயன்படும். கடவுளைக் கீழ்மைப்படுத்துபவர்கள் கறுப்புச் சட்டைக்காரர்கள் அல்லர் - கடவுள் மறுப்பாளர்களுமல்லர்.

பின் யார்? பக்தர்கள்தான், பாகவ தர்கள்தான், புராணங்களையும், இதிகாசங் களையும், சாஸ்திரங்களையும் சம்பிரதாயங் களையும், ஆகமங்களையும், ஆஸ்தீக சம்பந்தமாக எழுதிக் குவித்தவர்கள்தான்.

ஒழுக்கமான, ஆபாசமற்ற அறிவுக்குப் பூச்சூட்டும் வகையில் அவர்கள் எழுதிட வில்லையே! அவர்கள் எழுதிக் குவித்த வற்றை அறிவாளிகள், பகுத்தறிவுச் சிந்த னையாளர்கள், முற்போக்குத் திசையில் பயணிப்பவர்கள் எடுத்துக்காட்டும் பொழுது, அடேயப்பா, எரிதழல் ஆகி விட்டேனா பார் என்று மீசையை முறுக்கு கிறார்கள்.

பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கிறார்களே - சில பெண்கள் தலையில் வகிடு எடுக்கும் இடம் வரை நீட்டுவார்கள்.

அந்தக் குங்குமத்தின் கதை என்ன?

ஆன்மிக வாதியான திரு.செ.கணேச லிங்கன் எழுதுகிறார்.

மலட்டு நிலத்தை மாத விலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின், விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாத விலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்து வது என்பது உண்மையே. இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத் தில் மாத விலக்கு வேளையில் ஏற்படும் இரத்தக் கசிவை திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்னும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக, மங்கலச் சின்னமாக நாள்தோறும் பெண் களின் நெற்றியில் திகழ்வதைக் காண்கி றோம் (திரு செ.கணேசலிங்கன் எழுதிய பெண்ணடிமை தீர நூல்).

எழுதியவர் ஈரோட்டுக்காரரின் சீட ரல்ல. சாட்சாத் வைதீகப் புரியின் வாசகர் தான்.

மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் இரத்தக் கசிவுக்கு இப்படியொரு புண்ணிய சீலத்தை, வளத்தின் மேன்மையை இட்டுக் கட்டுபவர்கள் கடவுள் - மத - சாஸ்திரங் களை இழிவுபடுத்துபவர்களா - இதனை எடுத்துக்காட்டி சிந்தனைக்கு விருந்து வைப்பவர்கள் இழிவுபடுத்துபவர்களா?

இன்னும் ஒரு வேடிக்கை அல்லது வெட்கம் கெட்ட தன்மை உண்டு - கேரள மாநிலம் அலட்டி மாவட்டத்தில் செங் கண்ணூர் என்னும் ஊர். அந்த ஊரில் உள்ள பகவதி அம்மனுக்கு மாதம் தோறும் மாதவிடாய் வருகிறதாம்.

இதுகுறித்து மிர்ரர் என்னும் ஆங்கில இதழில் (ஏப்ரல் 1982) ஒரு விரிவான கட்டுரை வெளிவந்திருக்கிறது!

இதோ அந்த கட்டுரையின் முக்கிய பகுதி:

சென்ற 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கோவிலில் உதவியாளராகப் பணிபுரிந்துவரும் ஒரு வயது முதிர்ந்த, பாலகிருஷ்ண வர்மா என்பவரை இந்த குறிப்பிடத்தக்க பிரச்சினையைப்பற்றிக் கேட்டபோது புன்முறுவல் பூத்துக் கொண்டே கேட்டார். சிவன் ஒருசமயம் தன்னுடைய விருப்பம் இல்லாமலேயே சவமானார் என்று அதை நீங்கள் கேட்ட தில்லையா? என்று கேட்டுவிட்டு சௌந் தர்யலாகிரியினின்றும் ஒரு சுலோகத்தை எடுத்துக் கூறினார். அதன் நேரான பொருள் இதுதான்:-

பரமேஸ்வரன் சக்தியுடன் (தீ) கூடியிருக்கும் பொழுதுதான் இந்த அண்ட பிண்ட சராசரங்களை படைக்கமுடியும்! இல்லாவிடில் அவரால் எதுவுமே செய்ய இயலாது. உணர்வே இருக்காது சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், பார்வதி என்றும் வணங்கப்படும் பராசக்தியின், சக்தி இவ்வளவு மகத்தானது! அன்னபூரணி, ராஜ ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, லலிதாம்பிகா, துர்கா, பத்ர. காளி என்று இப்படிப்பட்ட இருபதுக்கும் - மேற்பட்ட பெயரினால் பக்தர்களால் வணங்கப்படும் பராசக்தியின் மகிமையே இதுதான். செங்கண்ணூர் பகவதி புவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இது சம்பந்தமாக, சிவனும் பார்வதியும் எப்படி செங்கண்ணூரில் வந்து தங்கினார் கள் என்பதற்கு மற்றும் ஒரு புராணக் கதையும் உண்டு! கைலாய மலையில் சிவன் - பார்வதி இருவருக்கும் திருமணம் நடை பெற்றது. திருமண நிகழ்ச்சியை காண்பதற் காக என்று முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும் கைலாய மலைக்கு வந்து குழுமியதால் பாரம் தாங்காமல் வடக்குப் பகுதி பக்கமாக இந்த பூமி சாய்ந்தது. சிவனார் கவலையடைந்தார். உடனே அகஸ்திய முனியை அழைத்தார். இரு பக்கமும் சமமாகப் போவதற்காக அகஸ்திய முனியை தெற்கே போகச் சொன்னார். சிவன் சொன்ன வேண்டுகோளைக் காதில் வாங்கியவுடனேயே திருமண நிகழ்ச்சியைக் காண முடியாதே என்று அகஸ்தியன் மனம் ஏங்கினார். பரமேஸ்வரன் அகஸ்திய முனியின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டார். தான் தனது ஞானக்கண்ணால் யாவற்றையுமே அறிவேன் என்றும், திருமணம் முடிந்து தானும் பார்வதிதேவியும் தெற்கே வந்து அகஸ்தியனுக்கு தரிசனம் கொடுப்போம் என்ற உறுதி கூறி வழிய னுப்பி வைத்தார். அதன்படியே அகஸ்திய முனிவன் தெற்கு நோக்கி பயணம் புறப் பட்டார். சோனாத்தி (Sonatri) எனும் சயாத்ரி (Sahyatri) என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்தான். அகஸ்தியனுக்கு வாக்குக் கொடுத்தபடியே சிவனும் பார்வதியும் இருவருமாக ஒருங்கே சென்று அகஸ்தி யனுக்கு தரிசனம் கொடுத்தார்கள். தரிசனம் கொடுத்த அந்த தினம்தான் பார்வதி தேவிக்கு மாதவிடாய் (மாத விலக்கு) தினம். மாதவிடாய் முடிந்து பார்வதிதேவி குளித்து மூழ்கியவுடன் ஜோடிகள் இருவரும் 28 நாட்கள் அந்த இடத்திலேயே தங்கியிருந் தனர். இன்றும்கூட பஞ்சலோகத்தினால் ஆன தேவியின் சிலைக்கு மாதா மாதம் தவறாது மாதவிடாய் வருகிறதாம். மற்ற எந்தக் கோவிலிலும் இப்படிக் கேள்விப்பட் டிராத செய்தி. இந்தக் கோவிலில் மட்டும் தான் இப்படி மாதவிடாய் வருகிறதாம்! இந்தப்படி அந்தக் கோயிலின் தலைமை குருக்கள் கூறினார். மேலும் பழைய நாட்களில் ஒவ்வொரு மாதமும் இப்படி இந்த விக்ரகத்துக்கு தவறாது மாத விடாய் வரும். தற்பொழுது ஒரு ஆண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகளில்தான் மாத விடாய் இந்த அம்மனுக்கு வருகிறது! என்று அந்தக் கோவிலின் தலைமைக் குருக்களான மாதவன் நம்பூதிரி கூறினார் மேலும் கூறுகையில்,

விடியற்காலையில் கோயில் திறக்கப் பட்டதும் தலைமை குருக்களும், இஷு சாந்தி எனும் அவருடைய உதவியாளரும் முதல் நாள் சிலையில் அணிவிக்கப்பட்டி ருக்கும் ஆடைகளைக் (நிர்மாலயம்) களைவர். தலைமைக் குருக்கள் தான் கண்ணால் பாராமலேயே பகவதியம் மனுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் உள் பாவாடையை அருகில் நிற்கும் வாரியார் எனும் உதவியாளரிடம் கொடுப்பாராம். (குறைந்த பட்சம் இதற்கு ஒரு பெண் பூசாரியையாவது நியமிக்கக் கூடாதா?) வாரியார் அந்த உள் ஆடையை நன்கு பரிசீலிப்பார். அந்த உள் பாவாடையில் ஏதும் இரத்தக் கறை தென்பட்டால், அந்த ஆடையை, தாழமன் மதம் எனும் கோயில் தாந்திரீகன் இல்லத்துக்கு அனுப்பு வானாம். அங்கே வீட்டில் உள்ள இல்லக் கிழத்தி அந்த உள் பாவாடைகளை நன்கு பரிசோதித்துப் பார்ப்பாளாம். இரத்தக்கறை அதில் காணப்பட்டால், அந்த பகவதி சிலைக்கு மாதவிடாய் வந்துள்ளது என்று உறுதி செய்து அறிவிப்பாளாம்.

உடையாடி எனும் அந்த உள் பாவாடை உடனே பொதுமக்களுக்கு விற் பனைக்கு வரும். தேவசம் போர்டுஅதன் விலையை சாதாரணமாக பத்து ரூபாய் என் விலை நிர்ணயம் செய்திருப்பர். ஆனால் பக்தர்கள் அதை நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்குவர். இன்னும் சில பக்தர்கள் முன்கூட்டியே பணம் கட்டி புக்' செய்து வைத்திருப்பர், ஏன்? முன்னாள் திருவாங்கூர் திவான் சி.பி.ராமசாமி அய்யர், முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி போன்றவர்கள் எல்லாம் இந்த உள் பாவாடைகளை வாங்கி இருக்கிறார்களாம். இவர்கள் எல்லாம் உலகம் போற்றும் அறிவாளி களாம் - சிரிக்காதீர்கள்

உலோகத்தினால் ஆன கடவுளச்சிக்கு மாதவிடாய் வருமா! என்பது பற்றிக்கூட சிந்திக்க மறுக்கும் மண்டூகங்களை என்ன என்று சொல்வதோ?

இப்படி எல்லாம் கோயில்களை எழுப்பி அதற்கு இவ்வளவுக் கழிசடைத் தனமாகத் தல புராணங்களை எழுதி வைத்திருப்பது குற்றமில்லையாம்.

இந்த ஆபாச ஊத்தைகளை நம்பி அறிவையும், ஒழுக்கத்தையும் இழக்கிறீர் களே என்று எடுத்துக் காட்டினால் மிகப் பெரிய குற்றமாம்.

எது சரி, சிந்தியுங்கள், மக்களே!

- மின்சாரம்

சுயமரியாதையை விதைத்தவர் தந்தை பெரியார், அவரது பாதச்சுவட்டை வட இந்திய தலைவர்கள் பலர் பின்பற்றி னாலும், அரசியல் மற்றும் சொந்த நம்பிக்கை காரணமாக சுயமரியாதை இழந்து அவமானப்பட்டு நிற்கின்றனர்.

பாபு ஜகஜீவன்ராம் சிலை ஒன்றை திறக்கப் போய் அவர் சென்ற பிறகு அந்தச்சிலை கழுவப்பட்டு பிறகு கங்கை நீரால் புனிதப்படுத்தப்பட்டது, இது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். இவர் அலகாபாத் சென்ற போது அங்கு உள்ள ஒரு கோவிலில் வழிபட்டார். அவர் சென்ற பிறகு அந்தக் கோவில் வளாகம் முழுவதும் கழுவிவிடப் பட்டு, கங்கை யமுனை நதிகளில் நீர் தெளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் யாகம் நடத்தியபிறகு கோவிலுக்குள் சென்று பார்ப்பனர்கள் பூசை நடத்தினார்கள்.

அதே போல் பீகார் முதல்வராக இருந்த ஜித்தன்ராம் மாஞ்ஜி கோவில் ஒன்றுக்குச் சென்று வந்த பிறகு அந்தக்கோவிலை இழுத்துமூடி முழுமையாகக் கழுவிய பிறகே பூசைகள் ஆரம்பித்தனர். அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த போது வாரணாசியில் உள்ள அனுமன் கோவில் ஒன்றுக்குச் சென்று வந்த பிறகு கோவில் சுத்திகரிக்கப்பட்டது.

காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் சைலஜா குமாரி 15.11.2015 அன்று துவாரகை கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்ற போது குறிப்பிட்ட பகுதியை கடக்கமுயன்றபோது அங்கிருந்தவர்கள் அவரது ஜாதி என்ன என்று கேட்டனர். அவர் கூறமறுத்த போது கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வில்லை, தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறிய பிறகும் நீ என்ன ஜாதி என்றுதான் கேட்டோம், உனது பதவியைப் பற்றி கேட்கவில்லை? என்று ஒருமையில் பேசினார்கள்., இதை அவரே 1.12.2015 அன்று டில்லியில் ஊடகவியலாளர்களிடம் கூறிக் குமுறினர்.

இவர்களை விட இந்தியாவின் தற் போதைய முதல் குடிமகனாகிய, குடியரசுத் தலைவரும் பாஜகவின் முன்னாள் தலைவரும் தீவிர ஆர்.எஸ்.எஸ் காரரு மாகிய ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தானில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் நுழைய விடாமல் கோவில்படியில் வைத்து வாழைப்பழமும், தேங்காயும் கொடுத்து திருப்பி அனுப்பினார்கள். இதுகுறித்து குடியரசுத்தலைவர் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. அவரைத் தடுத்த பார்ப்பன சாமியாரை தாக்கிய நிகழ்வு வெளியே வந்த பிறகுதான் குடியரசுத்தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாத அதிர்ச்சிகரமான நிகழ்வு வெளியானது.

அந்த அவமானத்தை தாங்கிக்கொண்ட ராம் நாத் கோவிந்த அவர்களால் பூரி ஜெகன்னாதர் கோவிலில் பார்ப்பனர் களால் கோவில் வாசலில் வைத்தே பாதுகாவலர்கள் புடைசூழ இருந்தவரை தள்ளிவிட்ட நிகழ்வு அவரது மனசாட்சியை உலுக்கி விட்டது, இதனால் தான் அவர் டில்லிக்கும் சென்ற பிறகு கோவில் நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சியாளருக்கும் தனக்கு பாதுகாப்பிற்கு இருந்த பாதுகாவலர் குழும தலைவருக்கும் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி இருந்தார்.

இதே போல் மகாராஷ்டிராவில் சரத்பவார் முதல்வராக இருந்த போது நாசிக் கோவிலில் இருந்து வந்த பிரசாதத்தை அவரது கையில் கொடுக்காமல் மேசையில் வைத்துவிட்டுச்சென்றனர். இப்படி பல நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் வட இந்தியாவில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி இதில் இருந்து மாறுபட்டவர்.

இதுவரை அவரைத் தேடி பார்ப்பனப் பூசாரிகள் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்களே ஒழிய, அவராக எந்தக் கோவிலுக்கும் சென்ற தில்லை. அவரது ஆட்சிகாலத்தில் (2007-12) குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா பாட்டில் வாரணாசி கோவிலுக்கு சென் றுள்ளார். ஒரு முதல்வராக குடியரசுத் தலைவரை வரவேற்றாரே தவிர அவருடன் கோவிலுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம்

 

திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பேரணியில் சாரட்டில் அழைத்து வரப்பட்டாராம்.

அடேயப்பா - சில ஆரிய அடிமைகளுக்கு எத்தகைய ஆத்திரம் - வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சந்திரமதி ஒப்பாரி வைப்பது ஏன்?

ஒரு மாநாட்டுப் பேரணியில் ஒரு இயக்கத்தின் தலைவரை சாரட்டில் அமர வைத்து அழைத்து வருவது "பஞ்சமா பாதகமா?"

தந்தை பெரியார் எத்தனை எத்தனை ஊர்வலங் களில் அவ்வாறு அழைத்துவரப்பட்டிருக்கிறார்.  மக்கள் வெள்ளத்தில் - பவனி வந்துள்ளார்!

ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரச மைப்புச் சட்டத்தின் பகுதி கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று விடுதலையான தோழர்க ளுக்கான பாராட்டு விழாவின்போது சிதம்பரத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் தந்தை பெரியார் இதேபோல அழைத்து வரப்படவில்லையா?

அந்தக் காட்சியைப் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்களால் பாடப்பட்டதுதான் “அவர்தாம் பெரியார்” என்ற அந்த ஒப்பற்ற பாடல்.

ஓர் உழவன் தன் மனைவியிடம் கூறுவதுபோல அமைந்த அந்தப் பாடல் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாயிற்றே!

அவர்தாம் பெரியார் - பார்

அன்பு மக்கள் கடலின் மீதில்

அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்

என்றார் புரட்சிக்கவிஞர்.

அந்த அறிவுத் தேக்கமான தந்தை பெரியார், தங்கத் தேரில் பவனி வந்ததாக மகிழ்ச்சிக் கூத்தாடுகிறாரே புரட்சிக் கவிஞர்.

அந்தத் தந்தை பெரியாரின் மாணவர் - அவரால் அடையாளம் காட்டப்பட்ட 75 ஆண்டு அப்பழுக்கற்ற பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரான தமிழர் தலைவரை ஒரு சாரட்டில் அழைத்து வந்தது கூடாத செயலா? கருஞ்சட்டை தோழர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் - சூத்திரப்பட்டத்தை ஒழிப்பதற்காகவே குடந்தையில் பிரசவித்த திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, சமூக நீதிக் கொடியை வானளாவப் பறக்கவிட்டு தந்தை பெரியார் கொள்கையை உலகெங்கும் பரவும் வகை செய்து மாதம் ஒன்றுக்கு 20 நாள்கள் சுற்றுப்பயணம் செய்து தன்மான பகுத்தறிவுப் பெரும் பணியை ஆற்றிவரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்களால் 'தமிழர் தலைவர்' என்று போற்றப்படும் மதிக்கப்படும் ஒரு தலைவரை இயக்கத் தொண்டர்கள் சாரட்டில் அமர வைத்து, கொள்கை முழக்கமிட்டு அழைத்து வந்தது கொள்கை பிரச்சாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க அணுகு முறையே!

அந்தப் பாடலில் புரட்சிக் கவிஞர் மேலும் பாடுகிறார்:

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு

வஞ்சகர்க்கோர் கொடிய நெருப்பு

மிக்க பண்பின் குடியிருப்பு

விடுதலைப்பெரும்படையின்தொகுப்பு

வஞ்சகர்க்கோர் கொடிய நெருப்பு என்று எவ் வளவுத் தொலைநோக்கோடு தொட்டுக் காட்டியுள்ளார் கவிஞர்.

அந்த வஞ்சகர்கள் இன்னும் வற்றிப் போய்விட வில்லை. விடுதலைப் படையினை - விடுதலை என்னும் போர் ஆயுதத்தை நாளும் சுழற்றிவரும் தலைவர்மீது சேற்றை வாரி இறைக்க ஆசைப்படும் அந்த வஞ்சகர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும். அவ்வளவுதான். குரைப்பதற்கெல்லாம் பதில் வேண்டாம். கொள்கையை நோக்குவதே நம் ஒரே குறி!

ஒரு வரலாறு தெரியுமா இந்தக் குட்டிச் சுவர் வாசிகளுக்கு? 1948ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24 நாள்களில் ஈரோட்டில் திராவிடர் கழக 19ஆம் மாநில தனி மாநாடு.

அந்த மாநாட்டு ஊர்வலத்தில் என்ன நடந்தது தெரியுமா?

அறிஞர் அண்ணாவை சாரட்டில் உட்கார வைத்த தந்தை பெரியார் அந்த ஊர்வலத்தில் கடைசி வரை நடந்தே வந்தார் என்ற வரலாறு தெரியுமா? இந்த வக்கிரங்களுக்கு.

கருப்புச்சட்டை அணிந்து மேல் துண்டை இடுப்பில் கட்டி அந்த 69 வயதில் சிங்க நடை போட்டு வந்தார் பெரியார் என்று கவிஞர் கருணானந்தம் அவர்கள் 'தந்தை பெரியார்' என்னும் வரலாற்று நூலில் அருமையாகக் குறிப்பிடுகிறார்.

தந்தை பெரியார் அவர்களோடு ஆசிரியர் வீரமணி அவர்களும் ஊர்வலத்தில் அமர்ந்து பவனி வந்த மற்ற பதியங்களை அறியுமா இந்தக் கத்துக்குட்டிகள்?

ஒன்றை நமது தோழர்கள் உணரவேண்டும். அவர்களின் கோபம் சாரட் வண்டியில் தமிழர் தலைவர் வந்ததல்ல.

சினத்துக்குக் காரணம் அந்தக் கும்பகோணம் மாநாடு! ஆத்திரத்துக்குக் காரணம் அந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கில் மாணவச் சிங்கக் குட்டிகள் கர்ச் சனை செய்து அணிவகுத்து வந்தார்களே அதுதான் காரணம்!

எங்கே இருந்து கிளம்பியது இந்த இளைஞர் சேனை - மாணவர் பட்டாளம்? திராவிடர் கழகம் இவ்வளவு பலம் வாய்ந்ததா? பெரியாருக்குப் பின் அஸ்தமனம் ஆகிவிடும் என்று அண்டா அண்டாவாக மனப்பால் குடித்துக் கிடந்தோமே - ஏமாந்து விட்டோம் - ஏமாந்து விட்டோம்!

இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளம் மேலும் மேலும் வாலிப வீரத்தோடு வளரத்தான் செய்யும் போலும் என்ற ஆற்றாமையால் அசிங்கத்தைப் பேனாவில் ஊற்றி எழுதுகிறார்கள்.

ஆரியம் எப்பொழுதும் நேருக்கு நேர் வராது, வந்த தும் இல்லை. அப்படி வந்தால் தானே என்றைக்கோ கதை முடிந்திருக்குமே! ஆனால் அதற்கு எடுபிடிகள் எப்பொழுதுமே மலிவாக நமது இனத்தில்தான் கிடைப்பார்களே - இது இன்று நேற்றல்ல காலந்தொட்டு தொடர்கிற தொடர்கதை தானே.

நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? அவர்களின் ஆபாச எழுத்துகளுக்கு அதே பாணியில் பதில் அளித்துக் காலத்தைக் கழிக்க வேண்டாம்.

'விடுதலை'யில் நேற்று நமது தலைவர் வெளியிட்ட அறிக்கையினைப் படியுங்கள் - படியுங்கள்.

இழிமொழிகளால் சோர்ந்தோமா? மாறாக வீறு கொண்டு எழுந்தோமா என்று காட்ட வேண்டிய தருணம் இது.

பள்ளிகளில் எல்லாம், கல்லூரிகளில் எல்லாம், பல்கலைக்கழகங்களில் எல்லாம் திராவிட மாணவர் கழக அமைப்பு தொடங்கப்படட்டும் - தொடங்கப் படட்டும்!

புறப்பட்டது காண் புலிப் போத்துகள் - சிங்கப் புயல்கள் என்று எதிரிகள் நடுநடுங்க வேண்டும், துரோகிகள் தொடை நடுங்கி பதுங்க வேண்டும்.

குடந்தை மாநாட்டை வெற்றி முகட்டில் நிறுத்தி விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு நம் பணி முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது.

குடந்தை மாநாடு புத்தெழுச்சியை - ஊட்டியது - புது வரலாற்றைப் படைக்கப் பல்லவியைக் கொடுத்து விட்டது - தந்தை பெரியார் பணியை தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் தலைமையில் முடித்திட - புதிய தலைமுறை புறப்பட்டு விட்டது - புதிய புறநானூற்றை எழுதத் துடிக்கிறது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.

அதுதான் குடந்தை மாநாடு முழு வெற்றி கண்டதற்கன பதவுரை - பொழிப்புரை - கருத்துரை!

கருஞ்சட்டை இளஞ்சேனையே - காரியத்தில் கண் வைத்துக் கடமையாற்றுவோம்.

காவிகள் விரிக்கும் வலைகளை, கூண்டுகளை நொறுக்குவோம் - காவியா - கருஞ்சட்டையா என்று ஒரு கை பார்ப்போம்.

தமிழ் மண் தந்தை பெரியார் மண்ணேதான் என்பதை வரலாற்றுக்கு மீண்டும் நிரூபிப்போம்!

தமிழ்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் நம் பாசறை நோக்கிப் பயணிக்க வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகளை இந்தக் கணம் முதலே தொடங்குவோம்.

நமக்குக் காரியம்தான் முக்கியமே தவிர வெத்து வேட்டு விளையாட்டு வீரியமல்ல!

கதிரவனைக் கண்டு குரைப்பதுகள் பக்கம் கவனச் சிதைவு வேண்டாம்.

கால்சட்டைப் பருவம் முதல்

தந்தை பெரியார்

தடத்தை விட்டு

தவறிக்கூட

கால் பதிக்காத

தன்மானத் தலைவர்

நமக்கு மட்டுமே உண்டு

86இல் அவரது பொது வாழ்வின் காலம்

76 - இந்த அளவுகோல் வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்று!

குடந்தையில் நமது மாணவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிப் பதிவையும் யாரும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்!

வேறு எங்கு எந்த அமைப்பில் இந்த ஒழுகலாறுகள் உண்டு? நமக்கு நிகர் நாமே! படை நடத்துவோம் பண்போடு, பணி முடித்திடுவோம் உறுதியோடு!

 

Banner
Banner