மின்சாரம்

 

 

திப்பு சுல்தானைப் பற்றி அவதூறு பரப்புவது பார்ப்பனர்களின் - பாரதீய ஜனதாகாரர்களின் வாடிக்கையாகி விட்டது. இவ்வார ‘துக்ளக்’கில் கூட (16.11.2017) வந்த ஒரு கேள்வி பதிலைப் பாருங்கள்.

கே: கர்நாடக பா.ஜ.க.வினரின் திப்புசுல்தான் எதிர்ப்புணர்வு சரியானதா? இது தேவையற்ற மத மோதலுக்கும், மனக் கசப்பிற்கும் வித்திடாதா?

பதில்: திப்புசுல்தான் கேரளாவில் செய்த அட்டூழியங்கள் சரித்திரத்தில் இடம் பெற்றி ருக்கின்றன. நம் நாட்டில் காசி, மதுரா கோவில்களை இடித்த ஔரங்கசீப்புக்கு பின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவது கூட மத மோதலை ஏற்படுத்தும் என்று, அபத்தமாகப் பேசுவது மதச்சார்பற்ற அரசியலின் தத்துவமாகி விட்டது. சரித்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவான உண்மை. அதை ஏற்க வேண்டும். அப்போதுதான் அது திரும்ப நடக்காது. சரித்திரம் தவறாக இருந்தால், அதைத் திருத்த வேண்டுமே தவிர, அதை மறைக்கவோ, மறுக்கவோ கூடாது.

என்று பதில் எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர், ஆனால் உண்மை வரலாறு என்ன? இந்தக் கட்டுரையை படியுங்கள். உண்மை தெரியும்.

இந்தியாவில் முஸ்லீம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் கூட - பார்ப்பனர்கள் தான் அவர்களை ஆட்டி படைத்திருக்கிறார்கள். திப்பு சுல்தான் காலத்திலும் இதுதான் நிலைமை. ஆனால் திப்பு சுல்தான், இஸ்லாம் மார்க்கத்தில் சேருமாறு கட்டாயப்படுத்திய தால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று டாக்டர் ஹர்பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பன வரலாற்று ஆசிரியர் உண்மைக்கு மாறான தகவலை எழுதினார். இது எந்த ஆதாரமும் இல்லாத ஒரு புரட்டு என்பது - பிறகு ஆதாரத்துடன் தெரிய வந்தது.

திப்பு சுல்தான் என்ற முஸ்லீம் மன்னர் காலத்திலும் - பார்ப்பனர்களே  ஆட்சியை ஆட்டிப்படைத்தார்கள் என்பதையும் அந்த ஆட்சியில் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வரலாற்றுப் புரட்டையும், பி.என்.பாண்டே எனும் வர லாற்று அறிஞர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இந்த சுவையான தகவல் ‘முஸ்லீம் இந்தியா’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

செய்தி விவரம்:

ஒரிசா மாநில கவர்னராக இருப்பவர் பி.என்.பாண்டே வரலாற்று அறிஞர் - நூலாசிரியர் - முன்னாள் எம்.பி.யும் கூட. 1986 டிசம்பர் 19இல் ‘குதாபக்ஷ் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்த்தினார். முஸ்லீம் மன்னர்களைப் பற்றி அவதூறுகள், பொய் யுரைகள், கற்பனைகள், துவேஷக் கருத்துகள் எவ்வளவு எழுப்பப்படுகின்றன; திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார். அவரின் சொற்பொழிவில் ‘திப்பு சுல்தான்’ பற்றிய ஒரு வரலாற்றுப் புரட்டு விளக்கப்பட் டுள்ளது.

1928இல் அலகாபாத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். என் ஆய்வுக்குரிய பொருள் திப்பு சுல்தான்! ஆங்கிலோ - பெங்காளி மாணவர் பேரவையினர் என்னை அணுகி, சரித்திரப் பேரவையைத் தொடங்கி வைத்து உரையாற்ற வேண்டுமென வேண்டினர். கல்லூரியில் இருந்த வந்த மாணவர்கள் வரலாற்றுப் புத்தகங்களுடன் இருந்தனர். அவர்களிடத்தில் உள்ள சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். திப்புசுல்தான் பற்றி அதில் எழுதப்பட்டிருந்த தைப் பார்த்ததும் அது என்னை மிகவும் கவர்ந்தது. படித்தேன்; என் மனம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.

“மக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மார்க்கத்தில் மத மாற்றம் செய்யப்பட்டதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டனர்”

திப்பு சுல்தான் இதைச் செய்தார் என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த சரித்திர பாடப்புத்தகத்தை எழுதியவர் மகா மஹோபாத்தியாயா டாக்டர் ஹர்பிரசாத் சாஸ்திரி - அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்துறைத் தலைவராக இருப்பவர்.

ஆதாரம் என்ன?

திப்புவைப் பற்றிய இந்தச் செய்தியைப் பார்த்த நான், சாஸ்திரிக்கு உடனே கடிதம் எழுதினேன். இந்த மதமாற்றம், தற்கொலை பற்றிய செய்திக்கு ஆதாரம் எங்கே கண்டீர்கள் என்று கேட்டு  பலமுறை கடிதம்  எழுதிய பிறகு பதில் வந்தது. அதில் மைசூர் கெஜட்டீயர் ஆதார நூல் என்று கூறப்பட்டது.

மைசூர் கெஜட்டீயரை அலகாபாத்திலோ கல்கத்தாவில் உள்ள இம்பீரியல் நூலகத் திலோ காண முடியவில்லை. மைசூர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சர் பிரிஜ்ஜேந்திரநாத்சீல் அவர்களுக்கு எழுதி, சாஸ்திரியாரின் கூற்றுக்கு மைசூர் கெஜட்டீரியல் ஆதாரமிருக்கிறதா? எனக் கேட்டேன். துணைவேந்தர் அவர்கள் என் கடிதத்தை பேராசிரியர் சிறீகாந்தையா அவர்களிடம் அனுப்பினார். காரணம் அவர் தான் மைசூர் கெஜட்டீயரின் மறு பதிப்பு அச்சிடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பேராசிரியர் சிறீகாந்தையா எனக்கு எழுதிய கடிதத்தில், 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெஜட்டீயரில் எந்த இடத்திலும் குறிப்பிட வில்லையே என எழுதினார்.

அதோடு  அவர் மைசூர் வரலாற்றில் ஆய்வு செய்தவரும் ஆவார்.  அப்படியொரு சம்பவம் மைசூர் வரலாற்றில் நிகழ்ந்ததே இல்லை என்று தீர்க்கமாகக் கூற முடியும் என்றும் எழுதி இருந்தார்.

அவர் மேலும் எழுதியிருந்ததாவது:

திப்பு சுல்தானின் பிரதம மந்திரி ஒரு பார்ப்பனர்தான். அவர் பெயர் பூர்ணியா. அவரின் சேனாதிபதியும் ஒரு பார்ப்பனரே. அவரின் பெயர் கிருஷ்ணாராவ். (இந்த இடத்தில் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்வது நல்லது. மைசூரில் வாழ்ந்த ராவ்களுக்கு ‘ஆலமென்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. திப்பு சுல்தான் ஆட்சியில், ‘அல் அமீல்’ என்ற அரபிப் பதத்தின் சிதைவானதே ‘ஆலமென்’ ஆகும். அதாவது திப்பு சுல்தானின் ‘நம்பிக்கைக்கு உரியவர்கள்’ ஆக கருதப்பட்டு, நம்பப்பட்டவர்கள் பார்ப்பனர்கள் ஆகும். அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் வாழ்ந்து வரலாறு படைத்தார்களா என்பது கேள்விக்குறியாகும். இருப்பினும் திப்பு சுல்தான் பார்ப்பனர்களை முழுமையாக நம்பியிருந்தார் என்பது தான் உண்மை வரலாறு - ஆசிரியர் குறிப்பு)

அதோடு வேறு சில தகவல்களையும் எனக்கு அனுப்பி இருந்தார். ஆண்டுதோறும் மான்யங்கள் வழங்கப்பட்டு வந்த 156 கோயில் களின் பட்டியல் வந்தது. சிருங்கேரிநாத் ஜகத்குரு சங்கராச்சாரி அவர்களுடன் திப்புசுல்தான் மிக அணுக்கமான உறவு கொண்டிருந்தார். ஆச்சாரியாருக்கு சுல்தான் எழுதிய 30 கடிதங்களின் போட்டோ நகல்களும் வந்தன.

மைசூர் மன்னர்களிடையே ஒரு பழக்கமிருந்தது. ரங்கநாதர் கோவிலுக்கு காலை உணவுக்கு முன் சென்று பார்வையிட்டு வருவது ஒவ்வொரு அரசரின் வழக்கமாகும். அதே பழக்கத்தை திப்புவும் மேற்கொண்டிருந்தார்.

பேராசிரியர் சிறீகாந்தையா ஒரு அனுமானத்தையும் கூறி இருந்தார். கர்னல் மைல்ஸ் என்பவர் ‘ஹிஸ்டரி ஆஃப் மைசூர் என்னும் நூல் எழுதி இருக்கிறார். அதில் தப்பும், தவறும் ஏராளமுண்டு. ஒரு வேளை டாக்டர் சாஸ்திரி அந்தப் புத்தகத்தைப் பார்த்து எழுதி இருந்தாலும் இருக்கலாம்’  என்று எழுதி இருந்தார். கைல்ஸ் எழுதிய புத்தகம் திப்பு சுல்தான் வரலாறு என்னும் பாரசீக புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டதெனவும் அந்நூல் விக்டோரியா மகாராணியின் சொந்த நூலகத்தில் உள்ளதென்றும் கூறப்பட்டது. அதையும் விசாரித்துப் பார்த்ததில் விக்டோரியா மகாராணி நூலகத்தில் அப்படியொரு நூலோ, அதன் கையேட்டுப் பிரதியோ கிடையாது என்று தெரிய வந்தது.

ஆனால் விந்தை என்னவென்றால் டாக்டர் சாஸ்திரி எழுதிய வரலாற்றுப் புத்தகம், வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நிலை பள்ளிக்கூடங்களில் சரித்திரப் பாடப் புத்தகமாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சர் அஷூகோஸ் சவுத்திரிக்கு, எல்லா விவரங்களையும் எழுதினேன். டாக்டர் சாஸ்திரி, மைசூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர். பிரஜேந்திரநாத் சீல், பேராசிரியர் சிறீகாந்தையா ஆகியோருடன் கொண்ட கடிதத் தொடர்புகளின் நகல் களையும் அனுப்பி வைத்தேன். டாக்டர் சாஸ் திரியின் சரித்திரப் பாடப் புத்தகத்திலுள்ள சரித்திரப்புரட்டு நீக்கப்படுவதற்கு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.

சாஸ்திரியின் பாடப்புத்தகத்தை பாட நூலாக ஏற்றதை நீக்கி, அதைப் போதிக்கக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டதாக சர் அஷூகோஷ் சவுத்திரி உடனே பதில் எழுதினார்.

ஆனால் இந்த பார்ப்பன தற்கொலை பொய்யுரை இன்றுங்கூட சில பாடப்புத்தகங் களில் இடம் பெற்றிருப்பதைக் காணும் போது எனக்கு பேராச்சரியம் ஏற்படுகிறது!

இவ்வாறு பி.என்.பாண்டே தனது சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவேதான் பிரிட்டிஷார் வருகைக்கு முன் இந்தநாட்டில் நிலவியது ‘பார்ப்பன பொருள் உற்பத்தி முறை’ என்று நாம் கூறுகிறோம்!

உண்மை புரிகிறதா? பார்ப்பன உன்மத்தர் களின் புரட்டின் உயரமும் ஆழமும் எத்தகையது என்பது விளங்குகிறதா!

மின்சாரம்

வரும் சனியன்று (4.11.2017) திருக்காட்டுப் பள்ளியிலே ஒரு திராவிடர் திருவிழா. தீபாவளி என்று நரகாசுரன் வதையைக் கொண்டாடிய கால கட்டத்தில், சதயவிழா என்று பார்ப்பன அடிமை ராஜராஜ சோழனைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு தருணத்திலே - திராவிடர் கழகம், திருக்காட்டுப் பள்ளியிலே இப்படி ஒரு விழாவை நடத்திட உள்ளது.

நாட்டில் நடப்பது ஓர் இனப் போராட்டம்தானே. இதனைப் புரிந்து கொள்வதற்கு ஈரோட்டு நுண்ணாடி தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டு மன்னர்கள் வரிசையில் கரிகாலனுக் கென்று ஒரு தனித்த மகுடம் உண்டு. இரண்டாம் நூற்றாண்டில், 19 நூற்றாண்டுகளுக்குமுன் ஒரு மன்னன் இப்படி ஒரு கல்லணையைக் கட்டினான் என்பது சாதாரணமானதுதானா?

தொழிற் நுணுக்கம் வளர்ந்திராத காலத்தில் 19 நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலனால் கட்டப்பட்ட அந்த அணை எத்தனையோ இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்து உற்பாதங்களைப் பார்த்து, தன் உறுதிப்பாட்டை உலகிற்கு இன்றும் தெரிவித்துக் கொண்டிருக்கிறதே!

இம்மண்ணுக்குரிய வேளாண் தொழிலுக்கான ஓர் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று 19 நூற்றாண்டுக்குமுன் ஏற்பட்ட சிந்தனை சீர்தூக்கத் தகுந்ததாகும்.

நம் அரசர்கள் எல்லாம் கோயில்களைக் கட்டிக் கொண்டிருந்த கால கட்டத்தில், மக்களுக்குப் பசிப் பிணியைப் போக்கும் திசையில் சிந்தித்த அந்த மாமன்னனைப் போற்றுவோம்! போற்றுவோம். நாட்டின் வளத்தில் கண்வைத்தக் காரணத்தால் அவன் திருமா வளவனாக கரிகாற் பெருவளத்தானாக இன்று மட்டுமல்ல என்றும் போற்றப்படுவான்.

1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது இந்தக் கல்லணை! பெரிய பாறைக் கற்களைக் கொண்டு கம்பீரமாகக் கட்டப்பட்டுள்ளது.

பெரும் பாறைகளைக் கொண்டு வந்து ஒன்றின்மீது மற்றொன்றைப் போட்டு அவற்றைத் தரையில் ஆழமாக ஊன்றச் செய்து கல்லணை கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணைக் கட்டுமானங்களுக்குக் கல்லணை ஒரு சிறந்த முன் மாதிரியாக ஒளி வீசுகிறது. ஆங்கிலேயப் பொறியாளரான ஆர்தர் காட்டன், கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு முன் இக்கல்லணையை, நன்கு ஆராய்ந்த பிறகே கட்டினேன் என்றார். கரிகாற்பெருவளத்தானின் கூர்த்த அறிவை என்ன வென்று சொல்லுவது!

கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பல இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. ஆண்பாற், பெண்பாற் புலவர்களுக்கும் புரவலனாக இருந்திருக் கிறான்.

சிறிய வயதிலேயே தந்தை இளஞ்சேட் சென்னியை இழந்தவன். இவன் உயிருக்குக் குறி வைத்தவர்கள் உண்டு இவன் ஓடி ஒளிந்த வீட்டிற்குப் பகைவர்கள் தீமூட்டினர். அதில் கால் கருதியதால் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான் என்று கூறப்படுகிறது. பகைவர் களாகிய யானைக்கு அதாவது கரிக்கும் காலனாக இருந்ததால்  இப்பெயர் ஏற்பட்டது என்று சொல்லப் படுவதும் உண்டு.

போர்க்களத்திலும் புலிக் குட்டியாகவே இருந்து புவியை ஆண்டான். நீடாமங்கலத்தையடுத்த வெண்ணி என்னும் இடத்தில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், அவனுடன் வந்த பாண்டியனையும் ஒரு சேர வென்ற வீரன்!

இவன் வெற்றியைப் பொறாத ஒன்பது மன்னர்கள் ஒன்று திரண்டு, வாகை என்னும் இடத்தில் வாகை சூட முனைந்த போது புறமுதுகாட்டி அவர்களை ஓடச் செய்த ஒப்பற்ற போர் வீரன் கரிகாலன்! வெற்றிப் போரைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இத்தகைய வீரனைக் கொண்டாடுவதா - பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் - பூமிக்கும், பன்றிக்கும் ஒரு அசுரன் பிறந்தான் அவன் நரகாசுரன், அவனை கடவுள் கிருஷ்ணனும் அவன் பெண்டாட்டியும் கொன்றனர் - அந்த நாள் தான் தீபாவளியென்று கொண்டாடுவதா?

ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

கல்லணை கட்டிய கரிகாலனுக்கு திருக்காட்டுபள்ளியில் விழா எடுக்கும் இதே கால கட்டத்திலே தஞ்சையிலே ஒரு மன்னனுக்கு சதயவிழா கொண்டாடப்பட்டுக் கொண்டு இருக்கிறது - ஆம் அரசே கொண்டாடுகிறது. எங்கு பார்த்தாலும் பதாகைகள் - கட் அவுட்டுகள்!

வண்ண வண்ணமயமான சுவரொட்டிகள்! ஒவ்வொரு ஜாதி சங்கத்தின் பேரிலும் மன்னன் ராஜராஜனுக்கு வாழ்த்துக்கள். சுவரொட்டிகள்!

'ராஜராஜன் எங்கள் ஜாதி எங்கள் ஜாதி!' என்று பல்வேறு ஜாதி சங்கத்தலைவர்கள் சில ஆண்டுகளாக உரிமை கொண்டாடும் இழி நிலையை என்னென்று சொல்லுவது!

ராஜராஜன் சிலை அருகில் போலீஸ் குவியல்! என்னவென்று கேட்டால் மன்னன் சிலைக்கு மாலை போட வருவோரிடையே மோதல் வந்துவிடக் கூடா தல்லவா!

அப்படி என்ன செய்துதான் கிழித்துவிட்டான் ராஜ ராஜன்? அவன் கட்டிய பெருவுடையார் கோயில் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின், அடிமைகளின் ரத்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது!

2692 கிலோ தங்கத்தை அந்தப் பெருங்கோயிலின் கடவுளுக்குச் சாத்தி மகிழ்ந்தவன். குடிகளிடமிருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோயிலுக்குக் கொட்டியழ கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

கோவில் நிதிக் குவியலிலிருந்து குடிகளுக்குக் கடன் வழங்கப்பட்டது. 12 சதவீதம் வட்டியாம் (அப்பொழுதே கந்து வட்டியோ!)

வறுமையால் வாடிய மக்கள் தங்களைக் கோயிலுக்கு விற்றுக் கொண்ட கொடுமையும் நடந்ததுண்டு.

கோவிலைச் சார்ந்து விதிக்கப்படும் வரி விதிப்பு போன்றவற்றை குடிமக்கள் எதிர்த்தால் அவர்களுக்கு "சிவத்துரோகி" என்று பட்டம் கொடுத்து ஒடுக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் பிரம்மதேயம் என்ற பேரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் இனாமாக வழங்கப்பட்டன. மங்கலம் மங்கலம் என்று எந்த ஊர்ப் பெயர் வந்தாலும் அவை எல்லாம் ராஜராஜனால் பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தூக்கிக் கொடுக்கப்பட்டவைதான். தாரை வார்க்கப்பட்டவைதான்! இவ்வாறு 250 ஊர்கள் வாரி வழங்கப்பபட்டன.

பார்ப்பனர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் மற்றவர்கள் நிலம் வைத்திருந்தால் அவற்றைப் பார்ப்பனர்களிடம் விற்றுவிட வேண்டும் என்பது ராஜராஜனின் ஆணை.

பார்ப்பனர்களுக்கு ஆங்காங்கே வேத பாடசாலைகள், உணவு, உறைவிட வசதிகளுடன், மாணவன் ஒருவனுக்கு ஒரு பொன் உபகாரச் சம்பளம் - 6 கலம் நெல்லும் உண்டு

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பதுதான் ராஜராஜசோழன் காலத்து நிலை!

பீகார் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர் களைக் கொண்டு வந்து குடியமர்த்தினான்.

வரலாற்றில் முதன் முதலாக ராஜகுரு என்ற பதவியை உருவாக்கிய பார்ப்பனர் அடிமையும் அவன்தான். ஈசான சிவப் பண்டிதர் என்னும் காஷ்மீரப் பார்ப்பனரை அந்தப் பதவியில் அமர்த்தினான்.

அடுத்த நாட்டின்மீது படையெடுப்பது மட்டும்தான் மன்னன் பணி, நிருவாகம் முழுவதும் ராஜகுருவின் காலடியில். களத்தில் வெங்குருதி கொட்ட, உயிர்துறக்க தமிழன்! கோலாகல இன்ப வாழ்க்கைக் குளியலுக்கோ பார்ப்பனர்கள்.

பார்ப்பனர்களுக்கு, தன் எடைக்கு எடை துலாபாரமாக தங்கமும், தானியமும் பல முறை வாரி வழங்கிய பார்ப்பன அடிமையாக வாழ்ந்து கெட்டவன்!

கோவிலுக்குள் பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்தை நுழைத்து - நம் பண்பாட்டை பார்ப்பன நுகத்தடியில் பூட்டச் செய்த பூர்ஷ்வாவும் ராஜராஜனே!

அருண்மொழித்தேவன் என்ற தமிழ்ப் பெயரை, ராஜராஜன் என்று சமஸ்கிருத்தில் மாற்றிக் கொண்ட கிறுக்கனும் இவனே!

400க்கும் மேற்பட்ட பெண்களை சூடுபோட்டு தேவரடியாள்களாக மாற்றி - அவர்களைக் கோயிலுக்கு ஒப்படைத்தவனும் இவனே! பத்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கொடுமை சுயமரியாதை இயக்க எழுச்சியால் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் அந்தக் கேவலத்துக்கும் சாவோலை எழுதப்பட்டது. (வாழ்க டாக்டர் முத்துலட்சுமி)

தீண்டாச்சேரிகளும் இவன் காலத்தில்தான் - தனி ஜாதி - சுடுகாட்டுக்குச் சுழிபோட்ட சூத்திரதாரியும் ராஜராஜனே! இவனுக்குத்தான் தஞ்சையிலே அரசு சார்பில் கோலாகல விழா.

கோயில் கட்டி பார்ப்பனப் பெருச்சாளிகளுக்கு கொட்டியளந்த ஒருவனுக்கு சதயவிழா. அணை கட்டி விவசாயிகளைக் குடிகளை வாழ வைத்த கரிகாற் பெரு வளத்தானோ நாதியற்றவன் - இதுதான் இன்றைய தமிழ்நாடு இதனைத் தட்டிக் கேட்கத்தான் திருக் காட்டுப்பள்ளித் திருவிழா!

மக்கள் நலன் சார்ந்த மாமன்னன் கரிகாலனுக்குதான் திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் சனியன்று தித்திக்கும் திருவிழா - இனமானப் பெருவிழா.

இனவுணர்வு, மொழி உணர்வு எங்கு தலைதூக்க வேண்டுமோ அங்கு திராவிடர் கழகம் இருக்கும் - அதன் தலைவரும் கண்டிப்பாக இருப்பார்.

ஆம், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி.வீரமணி அவர்கள் பங்கு கொண்டு பரப்புரை செய்வார்; பகுத்தறிவு இனமானப் பெரு மழைக்கும்,  மொழி மான உணர்வுக்கும் பஞ்சமில்லை. சுவையான சூடு பறக்கும்  சொற்போர் - பல்வேறு தேவையான தலைப்புகளில். பெண்ணடிமையை ஒழிப்போம்! பகுத்தறிவுச் சுடர் ஏந்துவோம்! பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்போம்! பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம், “தமிழக உரிமையை மீட்டெடுப்போம்'' எனும் தலைப்புகளில் கழகச் சொற்பொழிவாளர்கள் கொட்டு முரசமாய் தோள் தட்டி துடை தட்டிக் கிளர்ச்சி இடி முழக்கம் செய்வார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலவித்தாக இருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, கரிகாற் பெருவளத்தான் பெருவிழா, புராண, இதிகாசங்களில் இழிவுபடுத்தப்பட்ட நம் இன வீரர்களை அடையாளம்காட்ட நரகாசுரன் விழா என்ற முப்பெரும் விழாவாக அரங்கேறுகின்றன.

இதனை ஒரு கட்சி விழாவாக யாரும் கருதத் தேவையில்லை. இன மக்களுக்காகத்தான் இவ்விழாவை ஓர் இயக்கம் நடத்துகிறது என்று கருத வேண்டும்.

ஆரியர்கள் தங்கள் பண்பாட்டைப் புதுப்பிக்கவும், மேலும் மேலும் நமது சிந்தனையில் ஆணியடித்து நிலை நிறுத்தவும் ஏராளமான பண்டிகைகள் உண்டு.. உண்டு.

உறவு எது, பகை எது என்று தெரியாமல் பழிகாரர்களின் குழிகளில் வீழ்ந்து வீழ்ந்து முதுகொடிந்த நமக்கு -
நம் இனத்தின் முகவரியைக் காட்ட, நமது மொழியின் மூத்த பெரு நிலையை வெளிப்படுத்த, திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க, திருக்காட்டுப் பள்ளியில் திரு முகங்களைக் காட்டுவீர்! சுற்றுவட்டார மாவட்டங்களி லிருந்து திரள்வீர்!

குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு, உறவினர் களோடு, நண்பர்களோடு திராவிடர் திருவிழாவுக்கு வாரீர், வாரீர் என்று அழைக்கிறோம்! அழைக்கிறோம்!!


தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று மாலை சென்னைப் பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் "தத்துவஞானி தந்தை பெரியாரை (சு)வாசிப்போம்" எனும் தலைப்பில் 75 மணித் துளிகள் உரையாற்றினார்.
அந்த உரை குறுந்தகடாக வலம் வரவிருக்கிறது. தந்தை பெரியாரைப் பற்றி நாம் அறிந்திருப்பது, புரிந்து கொண்டிருப்பது கை மண்ணளவு - கல்லாதது  கற்றுத் தெரிந்து கொள்ளாதது உலகளவு என்பது தான் உண்மை.

குறிப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாரின் "தத்துவ விளக்க" நூலை, தம் ஆய்வுக்கு உட்படுத்தினார். 15.11.1946 அன்று சேலம் நகராட்சிக் கல்லூரியின் தத்துவக் கலைக் கழகத்தில் தந்தை பெரியார் ஆற்றிய அரும் பெரும் சொற்பொழிவின் திரட்டு அது.

அந்நூலைப் படிக்கப் படிக்க படிப்போரின் பக்குவத்திற்கும், முதிர்ச்சிக்கும் ஏற்ப உள்வாங்கிக் கொள்ளும் தக உடைத்ததாகும்.
அந்தச் சிறப்புக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் கல்லூரி முதல்வர் ஏ. இராமசாமி கவுண்டர் ஆவார் நாமதாரி ஆனாலும் இனவுணர்வின் பெட்டகம். தந்தை பெரியார் பால் பேரன்பு கொண்டு ஒழுகிய ஒழுக்க சீலர். நீடாமங்கலத்தில் 23-24.2.1946 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் ஆவார்.

அவர் தலைமை தாங்கிய கல்லூரி சிறப்புக் கூட்டத்தில் தான் தந்தை பெரியார் தன் உரையை இவ்வாறு தொடங்கினார்.

"தலைவர் அவர்களே,

கல்லூரி முதல்வர் இராமசாமி அவர்களே!

இன்று இந்த சேலம் காலேஜ் தத்துவக் கலைக் கழகத்தின் சார்பாக நான் பேசவேண்டுமென்று அக்கழகத்தாரால் அழைக்கபட்டிருக்கிறேன். இங்கு மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பலதிறப்பட்ட பொதுமக்களும் ஏராளமாய் கூடியிருக்கிறார்கள். உங்கள் யாவருக்கும் புரியும்படியோ, திருப்தி ஏற்படும்படியோ பேசுவது, கடினமான காரியமாகும். அதிலும் தத்துவக் கலைச் சார்புக் கூட்டத்தில் தத்துவங்களைப் பற்றிப் பேச வேண்டியது முதல் உரிமை, ஆதலால் இப்படிப்பட்ட கூட்டத்தில் தத்துவ விசாரணையைப் பற்றி பேசுவது மிகமிக கடினமான காரியம்.

தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது, உள்ளதை உள்ளபடி காண்பதும், அறிவதுமாகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.

நாம் தத்துவத்தையும், இயற்கையையும், வேறுபடுத்திய காட்சியையும், குணத்தையும், உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு வெறும் பச்சை உண்மை-தத்துவம் என்பது சங்கடமான காட்சியாகவும், கேள்வியாகவும் இருக்கும். உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதனைக் காண்பது என்பது இயற்கையை மறைத்துச் சாயலை வேறுபடுத்திய தோற்றத்தைக் காண்பது என்பதாகும். ஆனால், அதே மனிதனை இயற்கையாய் உள்ளபடி காண்பது என்பது அவனை நிர்வாணமாக, எவ்வித மறைவும் மாற்றமும் இல்லாமல் காண்பது என்பதாகும். இந்தக் காட்சி இன்றைய உலகுக்குப் பிடிக்காது. வெறுப்பையும், சங்கடத்தையும் உண்டுபண்ணக் கூடியதாகும். அப்படியே இன்றைய ஒவ்வொரு தன்மையையும், நிலைமையையும், நிர்வாணமாய், உண்மையாய்க் காண்பது என்பது இன்றைய உலகுக்கு வெறுப்பாகவும், அசூசையாகவும்,  அதிருப்தியாகவுமிருக்கும். அதனால்தான் தத்துவ விசாரணைக்கும், தத்துவம் அறிவதற்கும் மனிதன் சில பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்பார்கள்.

அதனால்தான், நானும் உண்மைத் தத்துவத்தைச் சொல்வது என்பது பலருக்கு அதிருப்திகரமானதாக இருக்கும் என்று சொன்னேன். பொதுவாகவே நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 'யதார்த்தவாதி பஹூஜனவிரோதி'  என்று சொல்வதுண்டு. இதன் கருத்து மக்கள் யாவரும் பொய்யர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. எது உண்மையோ, எது தத்துவமோ அது மக்களிடையில் மாற்றுருவம், மாற்றுப்பெயர், மாற்றுக்குணம் பெற்று இருக்கிறது. ஆதலால், உண்மை விளக்கம் திருப்தி அற்றதாகக் காணப்படும். எனவே, தத்துவ விசாரணை, விளக்கம் என்பதற்கு இயற்கையிலேயே  மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் சங்கடமிருந்தாலும் நான் அதாவது ஒரு சாதாரண மனிதனும், தலைவர் என்னைப்பற்றி எடுத்துச் சொன்னதுபோல் நாஸ்திகன், மதத் துவேஷ அரசியல் எதிரி என்கின்ற தன்மையில் பேர் வாங்கி இருக்கிறவனும் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதென்றால், அது மிகமிகச் சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.

என்றாலும்,  என்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு- குறைகளுக்கு சமாதானம் சொல்லும் முறையிலேயே   என் தகுதிக்கு ஏற்ற அளவு தத்துவதைப் பற்றி சொல்ல முயலுகிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட ஒரு அவையில் நான் எதைப்பற்றி பேசுவது என்பதாக எனக்குள் எழுந்த பிரச்சினை முடிவு பெறுவதற்கு முன்னதாகவே,  தலைவர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்துவதில்-இந்த  மேற்கண்ட சொற்களும் உச்சரிக்கப்பட்டதால், அவைகளே போதுமென்று கருதி அவைகளை பற்றிப் பேசலாம் என்றே நினைக்கிறேன்" என்ற பீடிகையோடு, தன் உரையைத் தொடங்குகிறார்.

இதிலிருந்து தெரிவது ஒன்று. இந்தத் தலைப்பில்தான் பேசுவது என்று தந்தை பெரியாரால் முன்னதாகவே முடிவு செய்யப்பட்ட ஒன்றல்ல. அந்தத் தருணத்திலேயே முடிவெடுக்கப்பட்டு ஆற்றப்பட்ட ஆற்றோட்ட உரை என்பது தெளிவாகிறது.

இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் தந்தை பெரியார், தன் சுய சிந்தனை ஊற்றிலிருந்து எந்த இடத்திலும் எந்தப் பொருள் குறித்தும் நீர் வீழ்ச்சியாகப் பீறிட்டுக் கொட்டும் பேரறிவாளர் என்பதை அறிய முடியும்.

இவ்வுரையே "தத்துவ விளக்கம்" எனும் தலைப்பில் நூலாக இதுவரை 15 பதிப்புகள் பல்லாயிரக்கணக்கில் வெளி வந்துள்ளது. Philosophy என்று ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளது.

இந்நூலுக்கு இணையாக இன்னொரு நூலை எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால் அதுதான் "இனிவரும் உலகம்" என்னும் தொலைநோக்கு நுண்ணாடி இனிவரும் காலத்தில் குழந்தைப் பிறப்பிற்கு ஆண் - பெண் சேர்க்கை தேவைப்படாது; சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்படும் என்று உரைத்தது - இன்றைக்கு நடைமுறைக்கு வந்து விட்டது உலகெங்கும் மருத்துவ விஞ்ஞானிகள் கனவு காணாத காலத்தில் இந்தச் சமுதாய விஞ்ஞானி தொலைநோக்கோடு அக்கருத்தைப் பிரசவித்தார். என்னே சுயசிந்தனைச் சூரியப் பிரகாசம். ஒரு திருமணத்தில் ஆற்றப்பட்ட அய்யாவின் உரை, அண்ணாவின் "திராவிட நாடு" இதழில் 21-28.3.1943 வெளிவந்ததாகும். அய்யாவின்  உரையை அண்ணாவே எழுதிய திரட்டாகும் இது.

பெரியாரைப் (சு)வாசிப்போம் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்த தலைவர் ஆசிரியர் அவர்கள் அவர் சுயசிந்தனையாளராக உருவெடுத்த சூழலை, மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

அது பெரியாரின் குழந்தைப் பருவத்திலிருந்தே கிடைத்ததாகக் கூறினார். திண்ணைப் பள்ளியில் படித்தபோது அந்தப் பள்ளி ஆசிரியரின் மகள் குடிக்க தண்ணீர்க் கொடுத்தபோது, குடித்து முடித்த பிறகு அந்தப் பாத்திரத்தைத் தண்ணீர் தெளித்து எடுத்த நிலையிலிருந்து பீறிட்டது. ஆம் அந்தப் பாத்திரம் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாட்டையில் சுயமரியாதை இயக்கப் பயணத்தில் தொடக்கப் புள்ளிப் பாத்திரமாகவே இருந்தது என்று கூட வைத்துக் கொள்ளலாம்.  இதைத்தான் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வு விஞ்ஞானக் கூடத்தில்  உருவாக்கப்பட்டதல்ல, சமுதாயக் கூடத்திலே உருவானது என்று மிக நேர்த்தியாக அழகான சொற்களால் தீட்டிக் காட்டினார்.

"நியாயத்துக்காகப் போராடக் கூடாதா?" என்ற கேள்வி தந்தை பெரியார்  அவர்களிடத்தில் தோன்றியது எப்படி?

அதற்கொரு நிகழ்ச்சியையும் எடுத்துக் காட்டினார் ஆசிரியர் நெரிஞ்சிப் பேட்டை சாமியார் என்பவர் அந்தப் பகுதியில் பிரபலமானவர். அவரின் தம்பி ஓர் அயோக்கியன், ஊர் பூராவும் கடனை வாங்கி திருப்பிக் கொடுக்காத டிமிக்கிக்காரன்.

தந்தை பெரியாரோ அப்பொழுது ஈரோட்டில் மண்டிக்கார வியாபாரி என்ற தகுதியோடு மட்டுமல்ல. ஊர்ப் பொதுக் காரியங்களில் தலையிட்டு தீர்வு செய்யும் அளவுக்கு வளர்ந்து வரும் இளைஞர் - பிரமுகர்.

நெரிஞ்சிப்பேட்டை சாமியாரின் (சங்கராச்சாரியார் போன்றவர்) தம்பியிடம் கடன் கொடுத்து ஏமாந்த வியாபாரி ஒருவர். பெரியாரிடம் முறையிட்டார். அவசரமாய்ப் படி போட்டு வாரண்டுடன் வரச் சொன்னார் இராமசாமி (பெரியார்)
ஈரோட்டில் நெரிஞ்சிப்பேட்டை சாமியாருக்கான சமாராதனை, ஈரோடு எல்லையர் சத்திரத்தில் நடந்து கொண்டிருந்தது. அவரின் தம்பி அங்கு இருந்தான் என்பதை அறிந்து பொறி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டார் பெரியார்.

சம்பந்தப்பட்டவரைக் கூட்டிக் கொண்டு கோர்ட் சேவகனையும் அழைத்துக் கொண்டு சமாராதனை நடக்கும் இடத்திற்கே சென்று விட்டார். கையும் களவுமாகப் பிடிக்கும் நிலையில் சத்திரத்துக்குள் ஓடி கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு விட்டான். வாலிபர் பெரியார் (அப்போது வயது 23) விடுவாரா?

விடக் கூடியவர் தானா? வீட்டுக் கூரை மீதேறி உள்ளே குதித்து ஆளைப் பிடித்து வெளியில் கொண்டு வந்து கோர்ட் சேவகனிடம் ஒப்படைத்து விட்டார். இளங்கன்று பயமறியாது என்பதைவிட இந்த இராமசாமி இளங்கன்றல்ல - இளம் சிங்கக் குட்டியாயிற்றே!
நெரிஞ்சிப்பேட்டை சாமியாரின் சமாராதனை இந்தக் கூத்தில் அல்லோல கல்லோலமாகி விட்டது. பாதியில் முடிந்தது சமாராதனை. பார்ப்பனர்கள் யாரும் சாப்பிடவில்லை. அந்தக் கூட்டம் நேராக எங்கே படையெடுத்தது தெரியுமா?
பெரியாரின் தந்தையார் வெங்கிட்ட நாயக்கரின் மண்டிக்கு, என்ன காரணம்? சமாராதனைக்குக் கணிசமாகப் பணம் கொடுத்து உதவியவர் அவர்தானே!

நடந்ததைக் கேள்விப்பட்ட வெங்கிட்ட நாயக்கர் தன் மகன் இராமசாமியை தம் கால் செருப்பைக் கழற்றி ஆத்திரம் தீர அடித்து - என் முகத்தில் விழிக்காதே என்று காரித் துப்பினார் (அதோடு மறுபடியும் சமாராதனையை நடத்திடக் கணிசமான பணத்தையும் அந்தப் பார்ப்பனர்களுக்குக் கொட்டியழுதார் - இதுதானே விதைக்காது விளையும் பார்ப்பனீயம்!)

தமிழர் தலைவர் இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டி, பெரியாரின் பொது வாழ்வில் செருப்புக்கென்றே ஒரு தனி அத்தியாயம் உண்டு என்று இடைச் செருகலாக சொன்னது ஓர் இரசனைதான் (கடலூரில் செருப்பென்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்பதிலிருந்து ஆரம்பித்து விடலாமே!)

தந்தையிடம் செருப்படிபட்ட இராமசாமியின் சிந்தனையில் வெடித்த வினா முக்கியமானது.

அந்த வினா அவர் பொது வாழ்வின் தறியில் நெடுக்கும் குறுக்குமாக இருந்து வந்தே இருக்கிறது.

"அநியாயத்தைத் தட்டிக் கேட்கக் கூடாதா? நியாயத்துக்காகப் போராடக் கூடாதா?" - என்பது தான் அந்தச் செருப்படியின் எதிர்வினை.

இந்தக் கோணத்தில் எவரும் படம்பிடிக்காத ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் திரையிட்டுக் காட்டுவதுபோல மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

மானமும், அறிவும் மனிதனுக்கழகு என்று குறளை விடக் குறுகிய சொற்களால் மானுடத்திற்கு இலக்கணம் கற்பித்த தத்துவம் தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை அன்றிலிருந்து அரும்பி வளர்ந்து வனமாகி விட்டது.

தந்தையிடம் கோபித்து இராமசாமி வடநாடு சென்றதற்குக் காரணம் அந்த மான உணர்வும், அறிவுத் தேடலும்தானே!

தந்தை பெரியார் யார்? அவருக்குத் தோன்றிய உணர்வு எதிலிருந்து வேர் விட்டது? என்பதற்கான ஓர் ஆவணம் நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது.

அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் பகுதியிலி ருந்து ஒன்றை எடுத்து விளக்கினார் ஆசிரியர். (18.11.1967).

Periyar Ramasamy represents and symbolises the fury and frustration in a sizable section of society at this state of affairs.

பெரும்பான்மை மக்களின் கோபம், ஏமாற்றத்தின் வெளிப்பாட்டுச் சின்னமாக, பிரதிநிதியாகப் பெரியார் விளங்குகிறார் என்று அண்ணா சொன்னது சரியான படப்பிடிப்பு தானே!

தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்ற கோபத்தின் பிரதிபலிப்புதான் தந்தை பெரியார் என்பதை பல்கலைக் கழக மாணவர் மத்தியில் அண்ணா அவர்கள் - அதுவும் முதல் அமைச்சர் என்ற முறையில் முழங்கியது முத்தாய்ப்பானது அதனைப் பொருத்தமாக நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் ஆசிரியர் கொண்டு வந்து நிறுத்தினார்.

(வளரும்)


மின்சாரம்

கேள்வி: உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களை இந்தியாவில் உருவாக்க, அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இருப்பதை மத்திய அரசு தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு ரூபாய் 10 ஆயிரம் கோடியை 5 ஆண்டு காலத்தில் வழங்க உள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளாரே?

பதில்: உலகின் சிறந்த பல்கலைக்கழகங் களை உருவாக்க பணம் மட்டும் போதாது. ஆசிரியர்களைத் தேர்வு செய்வதிலும், மாணவர்களை அனுமதிப்பதிலும்  தகு தியை மட்டுமே அடிப்படையாக வைத்து எந்த இந்தியப் பல்கலைக்கழகம் நடக் கிறதோ, அது தானாகவே நிச்சயம் உலகின் சிறந்த பல்கலைக் கழகமாகும். 69 சதவிகித இடஒதுக்கீடு என்பதை வைத்துக் கொண்டு, எப்படி உலகத்தில் சிறந்த பல்கலைக்கழகங் களை உருவாக்க முடியும்?
(‘துக்ளக்’, 1.11.2017)

எங்கே சுற்றினாலும் பார்ப்பனர்கள் எங்கே வந்து நிற்கிறார்கள் பார்த்தீர்களா? சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வி யைக் கொடுக்காதே என்பதுதானே பார்ப் பனர்களின் மனுதர்மம். அந்தப் புத்தி இந்தப் பூணூல் குருமூர்த்திகளின் குருதியிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியேறி விடுமா?

மார்க்குதான் தகுதி திறமையின் அளவு கோல் என்றால் 69 சதவிகிதத்திற்கு அப்பால் 31 சதவிகித ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் வாங்கிக் கல்லூரிகளில் சேர்க்கிறார்களே அவர்கள்தான் கடைசி வரை தகுதியிலும் திறமையிலும் ஜொலிக்கிறார்களா?

அய்.அய்.டி.களில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு உண்டா? எய்ம்ஸ்களிலும், ஜிப் மரிலும் 69 சதவிகித இடஒதுக்கீடு உண்டா?

பல்கலைக்கழகங்களில் ஜோதிடத்தைச் சொல்லிக் கொடுத்தது யார்? வாஜ்பேயி பிர தமராக இருந்தபோது பச்சைப் பார்ப்பன ரான முரளி மனோகர் ஜோஷி மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது புகுத்தினாரே - ஜோதிடம் என்பது அறிவியலா? அது போலி விஞ்ஞானம்(Pseudo Science) என்பது கூட தெரியாத பார்ப்பனக் கும்பல் தகுதி திறமை பற்றி யெல்லாம் பேசலாமா?

சராசரி மதிப்பெண் (37) பெற்ற டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவின் அரசமைப் புச் சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தார் என்பதைப் பூணூல் குருமூர்த்திகள் புரிந்து கொள்ளட்டும்! காந்தியார் பெற்ற மார்க் அம்பேத்கரை விடக் குறைவே - அவர் தானே இந்நாட்டு “மகாத்மா”! (ஓ காந்தி என் றால்தான் இவர்களுக்குக் கசப்பாயிற்றே!)

குருட்டு நெட்ருப் போட்டு வாந்தி எடுத்து வாங்கும் மார்க்குதான் தகுதியின் அளவுகோலா? கல்வியாளர்கள் இதை ஏற்கிறார்களா?

69 சதவிகித இடஒதுக்கீடு அதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவருக்கு 18 சதவிகிதம், மலை வாழ் மக்களுக்கு ஒரு சதவிகிதம் கொடுத் ததால்தான் தகுதி கெட்டுவிட்டது என்று சுற்றி வளைத்துச் சொல்ல வருகிறார் என் பதை மறந்து விடக்கூடாது.

அதுசரி, பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி இடஒதுக்கீடு கேட்கிறார்களே, அதற்கு என்ன பதில் வைத்துள்ளார் குருமூர்த்தி அய்யர்?

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக் குக் கதவைத் திறந்துவிடத் துடிக்கிறதே மோடி அரசு - ஒருக்கால் தகுதி திறமையை வளர்க்கத்தானோ! வெளிநாட்டுப் பல் கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு கிடையாது - சூத்திரர்களுக்கு, பஞ்சமர்களுக்கு இட மில்லை என்று போர்டு மாட்டினாலும் மாட்டுவார்கள்.

பறையர்களும், நாய்களும், குஷ்டரோகி களும் உள்ளே நுழையக் கூடாது என்று சென்னையில் ஜார்ஜ் டவுனிலும், அன்றைய மவுண்ட் ரோட்டிலும் உள்ள உணவு விடுதிகளில் போர்டு மாட்டியிருந்த மனுதர்மக் கும்பல் என்னதான் செய்யாது?

பத்திரிகைகள் மீது பாய்கிறார்!

பத்திரிகைகளின் தரம் இறங்க இன்னும் ஒரு காரணம், முற்போக்கு என்கிற பெயரில் கலாசார சீரழிவு சிந்தனைகள் பவனி வருவதுதான். முன்பு எதை எழுதவும் பேசவும் கூச்சப்படுவார்களோ, அதை வெட்கமில்லாமல் துணிந்து கூற நவீன முற்போக்குச் சிந்தனைகள் தூண்டுகின்றன. உயர்ந்த விஷயங்களைக் கூட இழிவு படுத்த அரசியல் சாஸனத்திலேயே அடிப் படை எழுத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று நீதிமன்றங்கள் கூடத் தீர்ப்புகள் கொடுக் கின்றன. கொங்கு நாட்டுப் பெண்களையும், அவர்களது நம்பிக்கையையும் கேவலப் படுத்தும் ‘மாதொருபாகன்' நூலுக்கு எதிராக வெகுண்டு எழுந்த கொங்கு மக்களை, பிற்போக்குவாதிகள் என்று வர்ணித்து, அதை எழுதிய ‘முற்போக்கு எழுத்தாள ருக்கு’ அனைத்துப் பத்திரிகையாளர்களும் வக்காலத்து வாங்கினர். பின்பு நீதிமன்றமும், அதற்கு ஒப்புதல் அளித்தது. இது எதைக் காட்டுகிறது? கலாசாரத் தரக் குறைவை! ‘சிந்தனை மற்றும் பத்திரிகை சுதந்திரம்' என்று கொண்டாடுவதைத்தான் காட்டு கிறது. கலாசாரத் தரக்குறைவை முற் போக்கு என்று பட்டுக் குஞ்சம் கட்டி அலங் காரமும் செய்கிறார்கள்.

(‘துக்ளக்’, 1.11.2017)

என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் குமுறுகிறார்.

இதன் நோக்கம் புரிந்து கொள்ளத் தக்கதே! தங்களுக்கு ஆகாதது எதுவுமே அவர்கள் பார்வையில் ஆபாசம்தான்.

சிவனும், பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்தார்கள் என்ற புராணங்களை எல்லாம் கண்ணில் ஒத்திக் கொள்ளக் கூடியவர்கள்தான் இவர்கள்.

கோயில் கோபுரங்களில் உள்ள ஆபாசங்களுக்கு எல்லாம் தத்துவார்த்தம் பேசுவார்கள்.

சிவலிங்கம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். சிவனின் ஆண் உறுப் பும் - பார்வதியின் பெண் உறுப்பும் இணைந்தது என்பதற்கு உலக சிருஷ்டிக் கான மூல வித்து என்று முலாம் பூசுவார்கள்.

ஏற்கெனவே இருக்கும் ஏற்பாடுகள் அவர்களுக்குக் குளு குளு பஞ்சு மெத்தை கள். சமுதாய அமைப்பில் முதல் வருணத் தவர்கள் பிச்சை எடுத்தாலும் அவர்கள் பிரபுக்கள் தானாம். தானம் வாங்க பார்ப் பானே பிரபுவாகிறான் (மனுதர்மம், அத்தி யாயம் 1, சுலோகம் 100). மூடனானாலும் பிராமணனே ஞானியாவான்.

இந்த மனுதர்மத்தை இன்று வரை ‘துக்ளக்’ தூக்கிப் பிடித்துக் கொண்டுதான் திரிகிறது.

மாதர்களின் சுபாவமே மனிதர்களுக்கு சிருங்கார சேஷ்ட்டைகளினால் தோஷத்தை உண்டு பண்ணும். ஆதலால் தெரிந்தவர்கள் மாதர்களிடத்தில் அஜாக்கிரதையாயிரார்கள்.

(மனு, அத்தியாயம் 2, சுலோகம் 213)

தாய், தங்கை இவர்களுடனும் தனியா ளாய் ஆண் உட்காரக் கூடாது. இந்திரியங் களின் கூட்டமானது மிகவும் பலமுள்ளது.

(மனு, அத்தியாயம் 2, சுலோகம் 215)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற் றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

(மனு, அத்தியாம் 9, சுலோகம் 171)

பெண்களை இதற்கு மேல் கேவலப் படுத்த முடியாது என்னும் எல்லைக்குச் சென்று சிலம்பம் ஆடும் சிண்டுகள் கூட்டம் தான் “மாதொருபாகன்” நாவலைக் குறித்து அய்யயோ மோசம் என்று அலறுகின்றது.
குழந்தைப் பேற்றுக்காக உடல் முழு வதும் நெய்யைப் பூசிக் கொண்டு யாரு டனும் புணரலாம் என்கிற பூணூல் கூட்டம் ஒரு நாவலுக்காக விட்டேனா பார் என்று வியர்த்து விறுவிறுக்க பேனா பிடிக்கிறது.

மாற்றம் என்றாலே மருந்து குடிப்பது - எதிர்ப்பு என்றாலே எரியும் நெருப்பிலே வீழ்ந்தது போலத் துடிப்பது எல்லாமே பார்ப்பனர்களுக்கே உரித்தானது; அவர் களின் பரமாச்சாரியாரிடமிருந்து  ‘வரம்’ பெற்றது.

யோசித்துப் பார்த்தால் “நம் தேசத் திலும் கூடப் பழமை வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய் எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப் பிராயம் வந்த பிறகு தான் இப்படி மத உணர்ச்சி குன்றி நாஸ்திகம் அதிகமாகி இருக்கிறது என்று தெரிகிறது. சந் தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது.”

- காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந் திர சரஸ்வதி (‘தெய்வத்தின் குரல்’ வர்ணத் தத்துவம் எனும் தலைப்பில் பக். 162).

எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்று சொல்லுவது குற்றமாம் - அது நாஸ்திகமாம்.

குருமூர்த்தி வகையறாக்கள், கொலை வழக்குக் குற்றவாளியையே ஜெகத்குரு என்று தலையில் தூக்கி வைத்து ஆடும் போது - மூத்த பரமாச்சார்யார் கூற்றை எப்படியெல்லாம் ஆராதிப்பார்கள் என்பது தெரியாதா?

மாற்றம் என்றாலே அவர்களுக்கு மரண மருந்து. புரிந்து கொள்வீர் புரி நூலார்களை!

- மின்சாரம் -

ஸ்டாலினின் “பிற்போக்குத்தனம்” என்ற தலைப் பில் நவம்பர் முதல் தேதி ‘துக்ளக்கில்’ ஓர் கட்டுரை வெளியாகியுள்ளது.

திராவிடம் என்பதெல்லாம்  எப்பொழுதோ காலாவதியாகி விட்டதாம்.

நவோதயா பள்ளி மாணவர்களுக்கான செலவை மத்திய அரசு ஏற்கிறது. இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் படித்தால் அவர்களும், அவர்களுடைய குடும்பமும் மத்திய அரசுக்கு விசுவாசமாகி விடும். அவர்களுக்கு தேசிய சிந்தனை வந்து விடும். இந்த நிலை தமிழ், தமிழன் என்றெல்லாம் தமிழர்களை ஏமாற்றி வரும் திமுகவுக்கு ஆபத்தாயிற்றே! அதனால்தான் ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் பாஜகவை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கிறார்கள். அண்ணா துரையின்  திராவிடன், திராவிட நாடு என்ற கனவு எப்பொழுதோ சிதைந்து விட்டது. இப்போது திராவிடம், திராவிடனை எல்லாம் விட்டு விட்டு தமிழ், தமிழன் என்று அவர்கள் சுருக்கி கொண்டாயிற்று. இதற்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற திருவாளர் ஸ்டாலின் நடுநடுங்குகிறார். கோவில்களில் ‘தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்று போர்டு போட்டிருந்தாலும் தங்கள் இன அபிமானம் பெயர் அபிமானத்தை எல்லாம் மறந்து போன தமிழர்கள். சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிறார்கள். கோவில்களில் சமஸ்கிருத அர்ச்சனையை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் தமிழ் நாட்டுப் பக்தர்களிடம் போய் ‘சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாதே’ என்று ஸ்டாலின் சொல்லத் தயாரா? என்று குருமூர்த்தி அய்யர்வாளை ஆசிரியராகக் கொண்ட ‘துக்ளக்‘ விஷம் கக்குகிறது. சவால் விடுகிறது.

திராவிடர், தமிழர், தமிழ்  என்று சொன்னால் இந்தப் பார்ப்பனர்களுக்கு அஸ்தியில் ஜூரம் கண்டு விடுகிறதே!

(பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்கிற தமிழ்த் தேசியவாதிகள் இந்த இடத்தில் கொஞ்சம் அறிவைச் செலுத்துவார்களாக)

இந்தக் கட்டுரையின் மூலம் பார்ப்பனர் அல்லாதாருக்கு தமிழர்களுக்கு உடனடியாக ஒரு வேலையைத் தந்திருக்கிறது ‘துக்ளக்’

கோயில்களில் சமஸ்கிருதத்தில் தான்,  அர்ச் சனை நடந்து கொண்டு வருகிறது. அங்கு போய் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுவாரா ஸ்டாலின் என்ற சவாலை விட்டிருக்கிறார்கள் பார்ப் பனர்கள் ‘துக்ளக்’ ஏட்டின்மூலம்.

நல்ல சவால்தான்; இந்தக் காலத்துக்கேற்ற சவால் தான்! திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பாக இந்தச் சவாலை ஏற்பார் என்பதில் அய்யமில்லை.

தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ் நாட்டில் வேலையில்லை என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் - மானமிகு சுயமரியாதைக்காரான கலைஞர் அவர்கள்.

அவர்வழி வந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயங்கவா போகிறார்?
பக்தர்களாகிவிட்ட காரணத்தாலேயே தமிழர் களுக்கு மொழி மானம், தன்மானம் இல்லாமலா போகும்?

தமிழின பக்தர்கள் இனி கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்க என்று வலியுறுத்துதல் அவசியம். தமிழ் தெய்வத்தமிழ் என்று சொல்லப்படுவதில்லையா? இனி கோயில்களுக்குள்ளும் உரிமை முழக்கம் கேட்கப் போகிறது- கேட்கவும் வேண்டும். அதற் கான அடியை ‘துக்ளக்’ எடுத்துக் கொடுத்து விட்டதே!

Banner
Banner