மின்சாரம்

உத்தரபிரதேசத்தில் மதிய உணவு வழங்கும் ஒப்பந்தத்தை ராம் தேவிற்கு தருவதற்கு மத்திய மற்றும் உத்தரப்பிரதேச சாமியார் தலைமையிலான அரசு தயாராகி விட்டது. நாடு முழுவதும் தரமற்ற பொருட் களை தருகிறார்கள் என்று பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் கோடிக் கணக் கான குழந்தைகளின் உணவு கொடுக்கும் ஒப்பந்தம் நிறைவேற விருக்கிறது,

வட மாநிலங்களில் மதிய உணவு என்பது தமிழகத்தைப் போன்று பள்ளி களிலேயே சமைத்து வழங்கப்படுவது அல்ல, எடுத்துக்காட்டாக கர்நாடகா, மகா ராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங் களில் அரே ராதா, அரே கிருஷ்ணா அமைப்பான இஸ்கான் என்ற அமைப்பு கிச்சடி எனப்படும் கூட்டாஞ்சோற்றை வழங்கி வருகிறது. அதனுடன் சேர்ந்து சில தொண்டு நிறுவனங்கள் பழம் ரொட்டி மற்றும் பால் உணவுகளை வழங்கி வருகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 10 கோடி பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை, நெய், கோதுமை மற்றும் உடைக்கப்பட்ட கொண்டைக்கடலை கலந்து செய்யப்படும் தலியா என்ற உணவு, பழம், பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாநிலத்தில் 10 கல்வி மாவட்டங்களிலும் 10 பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்து கடந்த 18 ஆண்டுகளாக உணவு வழங்கி வருகிறது, இதற்காக ஆண்டுதோறும் ரூ.1,100 கோடிவரை அந்த நிறுவனங்களுக்கு மாநில அரசின் கல்வி அமைச்சகம் சார்பில் வழங்குகிறது .

இந்த நிலையில், மார்ச் மாதம் நடந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மையைப் பெற்று சாமியார் ஆதித்தியநாத் தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அதுமுதல் மதம் தொடர்பான பல முடிவுகள் அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்படுத்தி வருகிறது.

ஒரே நபருக்கு உணவு ஒப்பந்தங்களை கொடுக்கக் கூடாது என்ற விதிமுறை களையும் மீறி பதஞ்சலி நிறுவனத்தில் உத்தரப்பிரதேசத்தின் அனைத்துப் பள்ளி களிலும் உணவு வழங்கும் ஒப்பந்தத்தை கொடுக்க உள்ளது. இதற்கு சாதகமாக விதிமுறைகளை திருத்தி வருகிறது,  ஜூலை மாதமே முடியவேண்டிய புதிய ஒப்பந்தங் களை திருத்தி அக்டோபர் வரை நீடித் துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உணவுப்பொருட் களை வழங்கும் ஒப்பந்தம் 12 மாதங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிடும். இந்த ஓராண்டு காலத்தில் தொழிற்சாலை அமைத்தல், பள்ளிக்கு எளிதாக வரும் வகையில் வாகனங்கள் வாங்குதல்  போன்ற பல பணிகளை ஒப்பந்ததாரர்கள் செய்து விடுவார்கள். ஆனால் தற்போது உள்ள அரசு  ராம்தேவின் பதஞ்சலி நிறு வனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கும் விதமாக தொடர்ந்து ஒப்பந்த முடிவை தள்ளிவைத்து வருகிறது, தற்போது அக்டோபர் வரை தள்ளிவைக்கப்பட் டுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் மதிய உணவை மாநிலம் முழுவதும் ஒரே நிறுவனம் வழங்கக் கூடாது என்ற விதியை திருத்தி ஒரே நிறுவனம் (பதஞ்சலி) இருக்கலாம் என்ற திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளது, ஏற்கெனவே உள்ள ஒப்பந்த தாரர்களை பதஞ்சலி நிறுவனத்திட மிருந்து உணவுப்பொருட்களை வாங்குங்கள் என்று மறைமுகமாக உத்தரவிட்ட உபி அரசு தற்போது நேரடியாகவே பதஞ்சலி நிறுவன உணவுகளை வாங்க முடிவு செய்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆயுர் வேத தாவரங்களை மேம்படுத்தும் மிகப் பெரிய ஒப்பந்தத்தை  பெற்றுள்ளது.

இதன் மூலம் சுமார் ரூ.1,200 கோடி வருவாயை மாநில அரசிடமிருந்து ஆண்டு தோறும் பெற உள்ளது. இந்த நிலையில் உபி அரசின் பள்ளிகளிலும் தலையை நுழைத்துள்ளது, உத்தரப்பிரதேச அரசின் மதிய உணவு ஒப்பந்தத்தைப் பெற்று விட்டால் இந்தியாவிலேயே மிகப் பெரிய நிறுவனம் என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் பெற்றுவிடும். ஆண்டுக்கு சுமார் ரூ 1,100 கோடிகள் வருவாய் கிடைக்கும்.

இதே பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள் போலியானவை, தரமற்றவை என்று தினசரி வழக்குகள் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு இந்திய ராணுவ உணவு விடுதிகளில் இந்த நிறுவனத்தில் குளிர்பானங்கள் குடிக்க தகுதியற்றவை என்பதுமல்லாமல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலங்களுக்கும் பாதிப்புகளை விளை விக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக பதஞ்சலி நெல்லிக்காய் சாறு குடிக்கத்தகுதியற்றது என்று ராணுவமே கூறியுள்ளது. அது இன்றளவிலும் வெளி யிடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல் சமீபத்தில் கடும் மழை யினால் பாதிக்கப்பட்ட குஜராத் மற்றும் அசாமிற்கு பதஞ்சலி நிறுவனம் நிவாரணப்பொருட்களை அனுப்பியது. அந்தப் பொருட்கள் அனைத்தும் தரமற்ற வை மற்றும் காலாவதியானவை என்று தொலைக்காட்சியில் காண்பித்தனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிஸ் கட்டுகள் அனைத்து நொறுங்கிப்போய் ஈரமுடன் காணப்பட்டன.

குடிசைத்தொழிலாளர்களை மிரட்டி அவர்களது தயாரிப்புகளில் தங்களது பதஞ்சலி லேபில் ஒட்டி விற்பனை செய்ய பதஞ்சலி நிறுவனத்தினரால் வற்புறுத்தப்படு கிறோம் என்று டில்லியில் குடிசைத் தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் முக்கிய பிரமுகர் ஒருவரின் நேரடி தலையீடு காரணமாக  இந்த ஆர்ப்பாட்டத்தை எந்த ஒரு செய்தி தொலைக் காட்சியும் அச்சு  ஊடகமும் வெளியிட வில்லை.

இவ்வளவு மோசடியான ஒரு நிறுவனத்திற்கு உத்தரப்பிரதேச அரசு மதிய உணவு திட்ட ஒப்பந்தத்தை தாரைவார்க்க உள்ளது.  ராம்தேவ் கடந்த ஜூன் யோகா தினத்தன்று லக்னோவிற்கு சென்று யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்தார். அப்போது பதஞ்சலிக்கு மதிய உணவு வழங்கும் ஒப்பந்தம் தரப்படும் என்று முடிவாகி விட்டது.  ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்திற் காக பதஞ்சலி ராம்தேவின் பணியாளர்கள் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச் சர்களை நேரில் சந்தித்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

அக்டோபர் இறுதியில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று தெரிகிறது, ஏற்கெனவே ஆக்சிஜன் குறைபாட்டால் குழந்தைகள் தொடர்ந்து மரணமடைந்து கொண்டு இருக்கும் போது தற்போது எதிர்கால தலைமுறையின் உடல் நிலையில் பெருத்த பாதிப்பு ஏற்படும் வகையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு உணவு ஒப்பந்தமும் தரப்பட உள்ளது.

பா.ஜ.க ஆட்சி சாமியார்களின் - கார்ப்பரேட்டுகளின்ஆட்சியே தவிர, மக்களுக்கான ஆட்சி அல்ல - அல்லவே அல்ல.

 

சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களி லிருந்தும் தோழர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு மேல் தலைநகரமான சென்னையின் போக்குவரத்து நிலை குலைந்தது.

ஒய்.எம்.சி.ஏ. திடலில் கூடிய மக்கள் வெள்ளத்துக்கு இணையாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாநாட்டுக்காக வந்தவர்கள் தேங்கி நின்றனர். வாகனங்கள் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டது.

கேரள மாநில முதல் அமைச்சர் பினராய்விஜயன்

மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய கேரள மாநில முதல் அமைச்சர் பினராய்விஜயன் அவர்கள் தன் உரையில் வெளியிட்ட கருத்து முத்துக்கள்.

கூட்டாட்சித் தத்துவம் பற்றியெல்லாம் பெரிதாகப் பேசப்பட்டாலும் நடைமுறையில் ஒற்றை ஆட்சி முறையே நிலவுகிறது என்று முத்தாய்ப்பாகக் குற்றம் சாட்டினார்.

இந்திய அரசியலில் 1957ஆம் ஆண்டில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சி கலைக்கப்பட்டதை நினைவூட்டினார். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் ஜனநாயகப் படுகொலை அது என்று 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கறுப்பு அத்தியாயத்தை நினைவூட்டினார்.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான கொள்கை உடையது ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பிஜேபி. இவர்களிடமிருந்து கூட்டாட்சியை எதிர்ப்பார்க்க முடியாது என்று மிகச் சரியாகவே சொன்னார். (அதிபர் முறை ஆட்சிதானே அவர்கள் கொள்கை).

இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஒற்றை இலக்கினை நோக்கிப் பயணிப்பதுதான் இவர்களின் நோக்கும், போக்கும் என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார் கேரள மாநில முதல் அமைச்சர்.

மத்தியிலும், மாநிலங்களிலும் பெரும்பாலும் ஒரு கட்சி ஆட்சி  அமைந்திருந்ததால் மாநில சுயாட்சிபற்றி அதிகமாகப் பேசப்படவில்லை. இப்பொழுது அந்த நிலை மாறி வரும் சூழலில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் இந்த மாநில சுயாட்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவர் திருமாவளவனையும் பாராட்டுகிறேன். மாநாட்டின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார் கேரள முதல் அமைச்சர்.

உரத்த குரலில் பேராசிரியர் ஜவாஹிருல்லா!

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தொடக்க முதல் கடைசி வரை உரத்தக் குரலில் முழங்கினார்.

எடுத்த எடுப்பிலேயே மதவாத சக்திகளை வீழ்த்தும் மிகப் பெரிய மாநாடு என்று கூறியபோது மிகப் பெரிய கரஒலி!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றால், அது ஏதோ தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக மட்டும் பாடுபடும் கட்சி என்று குறுகலாகப் பார்க்கக் கூடாது. அதையும் கடந்து மக்கள் பிரச்சினையில் அதற்கு அக்கறை உண்டு என்பதற்கு அடையாளம் தான் இந்த மாநாடு என்றும் குறிப்பிட்டார். முஸ்லிம் அமைப்புகளும், சிறுபான்மையினர் உரிமைகளையும் தாண்டி நாட்டின் ஒட்டு மொத்தமான பிரச்சினைகளில் அக்கறை கொண்டு பாடுபட்டு வருகின்றன என்றும் கூறினார்.

2007 ஆகஸ்டு 15ஆம் நாள் 'இந்து' ஏட்டில் திமுக தலைவர் கலைஞர் எழுதிய கட்டுரையை எடுத்துக் காட்டிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அக்கட்டுரையில் ஒற்றை ஆட்சி முறை  வரப் பார்க்கிறது என்று எச்சரித்திருந்ததை சரியாக நினைவூட்டினார்.

இரா. முத்தரசன் எழுச்சியுரை

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் வழக்கம்போல எளிமையாக கருத்துகளை எடுத்து வைத்தார்.
மாநிலங்கள் இப்பொழுது பெற்றுள்ள சிறிய உரிமைகள்கூட போராடிப் பெற்றவைதான். இனிப் பெற வேண்டியவைதான் அதிகம் - அந்த வகையில் சரியான கால கட்டத்தில் இந்த மாநாட்டைக் கூட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், அதன் தலைவர் திருமாவள வனுக்கும் தன் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

நிதி ஆயோக் என்ற ஒன்றைக் கொண்டு வந்துள்ளனர் - அதை நிதி அயோக்(கியத்தனம்) என்று கூற வேண்டும். பள்ளிகள் தனியார் மயம், மருத்துவம் தனியார்மயம்; இந்த இரண்டு முக்கிய அம்சங்களில்கூட மக்கள் தனியாரிடம் கையேந்த வேண்டிய நிலைதான்!

மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயைக்கூட தரவில்லை. அதைக் கேட்கும் திராணியும் தமிழக அரசுக்கும் இல்லை என்று குற்றஞ் சாட்டினார் தோழர் முத்தரசன்.

இங்கு அனைவரும் கைகோத்து நின்றோம் - இது இன்றைய தேவை - மத்தியில் உள்ள மதவாத பிஜேபி அரசை வீழ்த்த இந்த ஒற்றுமை இக்கால கட்டத்தில் தேவை என்று முத்தாய்ப்பாக முழங்கினார் தோழர் இரா. முத்தரசன்.

பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன்

இந்திய யூனியன் முசுலிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்கள் மிகவும் சுருக்கமாக நேரம் கருதி முடித்துக் கொண்டார்.

மாநில சுயாட்சி என்ற உணர்வு தமிழ்நாட்டுத் தடாகத்தில் பூத்தமலர் என்று இலக்கிய நயமாகத் தன் உரையைத் தொடங்கினார் தேசிய தலைவர். இம்மாநாடு ஒரு திருப்பு முனையாக  அமையப் போகிறது என்பதை வெகு அழுத்தமாகவே பதிவு செய்தார்.

தோழர் ஜி. இராமகிருஷ்ணன்


இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்டு) தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தன் உரையில் முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தார்.

மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்ததாகவே அவர் பேச்சு அமைந்திருந்தது. ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்  என்ற தீர்மானம் இக்கால கட்டத்தில் அவசியமானது என்று அழுத்தமாகவே கூறினார்.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர் பொறுப்பு ஆளுநர் - அவரை சென்னையில் பார்க்க முடியாது. ஆனால் ஓ.பி.எஸ்.  - இ.பி.எஸ். அணிகள் ஒன்று சேர்கின்றன என்றால் ஓடோடி வந்து விடுவார்.

அதிகாரப் பகிர்வு என்பது மாநில அளவோடு நின்று விடாமல் அது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வரை கொண்டு வரப்பட வேண்டும். அந்த வகையிலும் ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் தேவை என்றார் தோழர் ஜி.ஆர். (அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு உடனடியாக மாநாட்டின் தீர்மானங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு, மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்)
நிருவாக அதிகாரம், சட்டம் இயற்றும் அதிகாரம், நிதி உரிமைகளில் மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம் தேவை என்ற மூன்று நிலைப்பாடுகளையும் அவர் முத்திரையாகப் பதித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி


மாநாட்டுக்கு முன்னிலை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரத்தின் நெருக்கடியைக் கருதி வேகவேகமாகத் தம் கருத்தினை முத்திரையாகப் பதித்தார்.

சரியான நேரத்தில் சரியானவர்களின் முயற்சியில் சரியான முடிவுகளைத் தீர்மானமாக நிறைவேற்றிய சரியான மாநாடு இது என்று தொடங்கினார் தன் உரையை (பலத்த கரஒலி!).

பாய்ச்சலுக்கு என்றும் தயங்காத சிறுத்தைகள் நடத்தும் மாநாடு அல்லவா - என்று சொன்ன போது மிகப் பெரிய ஆரவாரம்.

எப்பொழுதும் தென்னாடுதான் வடநாட்டுக்கும் வழிகாட்டும். இடஒதுக்கீட்டுக்காக முதல் திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்படுவதற்குக் காரணமே தமிழ்நாடு தானே! (தந்தை பெரியார் முயற்சியால் போராட்டத்தால் 1951இல் நடைபெற்ற முதல் திருத்தம்).

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ராமராஜ்ஜியத்தை உருவாக்க இருப்பதாகக் குறிப்பிட்டு வருகிறது. ராமராஜ்ஜியம் என்பது என்ன?

சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்பதற்காக ராமன் வாளால் வெட்டிக் கொன்றான் அல்லவா! வருணாசிரமத்துக்கு விரோதமாக சூத்திரன் தவம் இருந்த காரணத்தால் பார்ப்பனக்  குழந்தை செத்து விட்டது என்றும், அந்தச் சூத்திரனை ராமன் வெட்டிக் கொன்ற வுடனேயே செத்துப் போன அந்தப் பார்ப்பனக் குழந் தைக்கு உயிர் வந்து விட்டது என்பதன் தத்துவம் என்ன?

சூத்திரன் கற்றால் பார்ப்பானுக்கு ஆபத்து என்பது தானே அதன் தத்துவம். அன்றைக்கு 14 ஆண்டுகள் ராமன் காட்டுக்குச் சென்றான். அந்த ராமன் பெயரால் நடக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட இம்மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகப் பொருத்திக் காட்டினார் தமிழர் தலைவர்.

எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பதைக்கூட முடிவு செய்வது ஓர் அரசின் வேலையல்ல. உழைப்பாளி மாட்டுக் கறி சாப்பிடுகிறான். உழைப்பு என்றால் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் இதுபற்றிப் பேசலாமா?

மாநில சுயாட்சி பற்றி மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா பேசிதையும் பொருத்தமாக நினைவூட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்.

குறிப்பிட்ட சில துறைகளைத் தவிர, மற்றவற்றிற்கு எதற்காக மத்தியில் அமைச்சர்கள்? கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு எல்லாம் மத்திய அமைச்சர்கள் தேவையா என்று அண்ணா அவர்கள் பேசியதை எடுத்துக் காட்டினார்.

1969இல் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கூட்டிய மாநில சுயாட்சி மாநாட்டை நினை வூட்டிய தமிழர் தலைவர் அவர்கள் அம்மாநாட்டில் தந்தை பெரியார் கூறிய கருத்தையும் ஞாபகப்படுத்தினார்.

கணவன் - மனைவி என்றால் இயல்பாக அன்பாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பழக வேண்டும், வாழ வேண்டுமே தவிர  'என்னிடம் ஆசையாக இரு, ஆசை யாக இரு' என்று அடித்துத் துன்புறுத்தினால் ஆசையாக மனைவியால் இருக்க முடியுமா? என்று மத்திய - மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்குத் தந்தை பெரியார் கூறிய கருத்தை எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் காட்டினார் தமிழர் தலைவர்.

கடல் வற்றி மீன் கருவாடாகிக் கொத்தித் தின்ன குடல் வற்றிக் காத்திருந்ததாம் கொக்கு என்பதுபோல தமிழ்நாட்டிலே கால் ஊன்ற மதவாத சக்திகள் துடிக்கின்றன. கருப்புடை தரித்தோர் உண்டு, நறுக்கியே திரும்பும் வாட்கள் என்ற மானமிகு கலைஞர் அவர்களின் கவிதை வரியைச் சொல்லி உரையை நிறைவு செய்தார்.

சு. திருநாவுக்கரசர் கருத்து

தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக் கரசர் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிடத்தாவது:

அதிகாரப் பரவலாக்கப்படாமல் ஓரிடத்திலேயே குவிக்கப்பட்டால், அங்கு சர்வாதிகாரமும், பாசிசமும் தான் தலை தூக்கும் என்று கூறிய தமிழகக் காங்கிரஸ் தலைவர் இம்மாநாட்டைக் கூட்டிய திருமாவளவனும் - வளர்ந்து வரும் சிறந்த தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

புதுவை முதல் அமைச்சர் வி. நாராயணசாமி


இந்த மாநாடு ஒரு பொருத்தமான நேரத்தில் நடைபெறுவதற்காக தன் பாராட்டைப் பதிவு செய்த புதுவை முதல் அமைச்சர் - புதுச்சேரியில் ஒரு துணை நிலை ஆளுநருடன் அன்றாடம் போராட வேண்டிய நிலை இருப்பதை நிதர்சனமாகக் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் தேர்தல் நடந்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னதாக திடீரென்று துணை ஆளுநர் மாற்றப்பட்டு புதியவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் - தாழ்த்தப்பட்டோருக்கு தொழிற் கல்லூரி வரை இலவசக் கல்வி, ஏழை, எளிய மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி என்ற மூன்று திட்டங்களையும் செயல்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்த நிலையில், இந்த மூன்றுக்கும் முட்டுக் கட்டை போடும் துணை ஆளுநரின் தான் தோன்றித்தனத்தை அம்பலப்படுத்தினார் புதுச்சேரி முதல் அமைச்சர்.

மாநாட்டில் 7ஆம் தீர்மானமான - ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை இரங்கல் தீர்மானத்துக்கு அடுத்து இரண்டாவது தீர்மானமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

(அதன்படியே இரண்டாவது தீர்மானமாக அறிவித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்).

மத்திய அரசு சி.பி.அய்., ரா என்று எதை  அனுப்பி அச்சுறுத்தினாலும் நாங்கள் தன்மானத்தோடு கொள்கை வழி உறுதியாக நின்று பணி ஆற்றுவதில் பின் வாங்க மாட்டோம் என்று வீர உரை நிகழ்த்தினார் புதுவை முதல்வர்.

(தொடக்கத்தில் மாநாட்டில் பங்கேற்ற - மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்தார் புதுச்சேரி முதல் அமைச்சர் மாண்புமிகு வி. நாராயணசாமி அவர்கள்).

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தன் உரையில் முக்கியமாக கூறியதாவது:

மாநில  சுயாட்சிக் குரலை முதன் முதலாக விடுதலைச் சிறுத்தைகள் தான் கொடுக்கிறது என்று நான் சொல்ல முன் வரவில்லை. அந்தக் குரலைக் கொடுத்தது திமுக - அறிஞர் அண்ணா, கலைஞர் அவர்கள் தான் என்றார்.

இங்கே பல்வேறு கட்சிகளின் தலைவர்களைப் பங்கேற்க அழைத்துள்ளோம். இது தேர்தல் கூட்டணியா என்று சிலர் கேட்கிறார்கள். இது தேர்தல் கூட்டணியல்ல - மக்கள்மீது அக்கறை உணர்வோடு கூட்டப்பட்ட மாநாடு.

இந்தியா வல்லரசாக இருக்க வேண்டும் என்றால் மாநிலங்கள் வலிமையாக இருக்க வேண்டும். அவர்கள் டிஜிட்டல் இந்தியா தேவை என்கிறார்கள்; நாமோ ஃபெடரல் இந்தியா வேண்டும் என்கிறோம்.

அவர்கள் இந்தி மொழிதான் ஆட்சி மொழியாக வர வேண்டும் என்கிறார்கள். நாங்கள் தமிழ் உட்பட மாநில  மொழிகள் அந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்கிறோம்.

கேந்திர வித்யாலயாக்களையும், நவோதயாக்களையும் கொண்டு வருவது இந்தியைக் கொல்லைப் புறமாகத் திணிக்கத்தான் என்று தீர்க்கமாகச் சொன்னார் தொல்.திருமாவளவன்..

இப்பொழுது நம் முன் இரு முக்கியப் பிரச்சினைகள் - ஒன்று நீட், இன்னொன்று ஜி.எஸ்.டி. இரண்டும் ஒழிக்கப்பட வேண்டியவையாகும்.
மத்தியில் பிஜேபி ஆட்சியில் இருப்பது பொலிட்டிக்கல் மெஜாரிட்டியல்ல. மாறாக கம்யூனல் மெஜாரிட்டி என்று கூறிய அவர் தமிழ்நாட்டில் மதவாத காவி சக்திகள் கால் ஊன்றக் கூடாது -

காங்கிரஸ் இல்லாத இந்தியா, கழகம் இல்லாத தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல வகையிலும் சமத்துவ உணர்வு மேலோங்கி இருப்பதற்கே காரணம் திராவிடர் இயக்கம்தான். திராவிடர் கழகமும், திமுகவும் தான்! இதனை நன்றி உணர்ச்சியோடு தெரிவிக்கிறேன். (பலத்த கரஒலி)

தேர்தலில் ஈடுபட்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் வேட்கை யல்ல. வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தளத்திலே நிற்போம். வாய்ப்புக் கிட்டவில்லையென்றால் அதற்காக முடங்கிவிட மாட்டோம். எங்கள் பணி மகிழ்ச்சியோடு தொடரத்தான் செய்யும் என்று .. கருத்துகளை வாரி வழங்கினார் எழுச்சித் தமிழர்.

தளபதி மு.க.ஸ்டாலின்


திமுக செயல் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநாட்டு நிறை வுரையை நிகழ்த்தினார்.

திமுகவின் கொள்கை முழக்கத்தை முக்கிய மாக எடுத்துக் கூறினார்.

1) அண்ணா வழியில் அயராதுழைப்போம்.
2) இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
3) ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்.
4) மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி.

அண்ணல் அம்பேத்கர் நெடு நேரம் கண் விழித்துக் கொண்டு செயல்படுபவர். செய்தியாளர்கள் அவரை ஒரு முறை கேட்டனர். மற்ற மற்ற தலைவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நீங்கள் மட்டும் வெகு நேரம் ஆகியும் விழித்துக் கொண்டு இருப்பது ஏன் என்று கேட்டபோது -

"அவர்களின் மக்கள் எல்லாம் விழிப்போடு இருக்கிறார்கள். நான் யாருக்காகப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோனோ, அந்த மக்களோ விழிப்புடன் இல்லாமல் தூங்கிக் கொண்டுள்ளனர். அவர்களை விழிப்படையச் செய்யத் தான் நான் நள்ளிரவு நேரமானாலும் விழித்துக் கொண்டுள்ளேன்" என்றாராம்.

அம்பேத்கர் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் இப்பொழுது என்ன சொல்லுவார்? திருமாவளவன் இருக்கிறார், நான் தூங்கப் போகிறேன் என்பார் என்று தளபதி கூறியபோது கரஒலியும், ஆரவாரமும் அடங்க வெகு நேரமாயிற்று.

மத்திய அரசு என்பது அதிகாரக் குவியலின் மய்யமாகவே இருந்து வருகிறது. 1957இல் கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டின் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள்; திமுக ஆட்சியை இரு முறை கவிழ்த்தார்கள்.

அந்த வகையில் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில முதல் அமைச்சரும், திமுக.வின் சார்பில் நானும் இம்மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமே!

இன்று மத்தியில் உள்ள பிஜேபி அரசைப் பொறுத்தவரை - தேர்தலில் கொடுத்தவாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாடாளுமன்றத்தில் நுழையும்போது அதன் படிகளைத் தொட்டுக் கும்பிட்டே உள்ளே சென்றார். அதனால் என்ன நல்ல பலன் நடந்து விட்டது? மத்திய அமைச்சர்களைக்கூட மதிப்பதில்லை. மாநில அரசுகளை -  ஏன் பிஜேபி ஆளும் மாநில அரசுகளைக்கூட மதிப்பதில்லை பிரதமர் நரேந்திர மோடி.

மத்தியில் உள்ள ஆட்சியும், மாநிலத்தில் உள்ள ஆட்சியும் அகற்றப்பட வேண்டியவைகளே!

ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல - இந்த அணி! நாட்டு மக்களுக்காகவே, நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே ஆட்சி என்பது எங்களுக்கு ஒரு கருவி அவ்வளவே!

இது ஒரு தொடக்கம் தான் - இதனை இந்தியா முழுமையும் சமூக நீதியாளர்களை ஒன்றிணைத்துச் செயல்படுவோம். அதனை திமுக முன்னின்று செயல் படுத்தும் என்றார் திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.

தொடக்கத்தில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்புரை   (இணைப்புரையும்) ஆற்றினார். நோக்கவுரையைக் கட்சியின் மற்றொரு பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆற்றினார். மாநாட்டின் இறுதியில் கட்சியின் பொருளாளர் முகம்மது யூசுப் நன்றி கூற இரவு 12 மணிக்கு மாநாடு சிறப்புடன் நிறைவுற்றது.

பேசுகிறது சமுதாயம்

‘கும்பிடுகிறேன் சாமி!’

என்ற

குரலில்

புதைந்திருந்த

கிருமிகளை அழித்து

கும்பிடப் படுவோனின்

குதிகால் எலும்பை

நொறுக்கி

முதுகெலும்பை

முறித்த

யுகத் தலைவர்

ஆதலால்

அவர் எங்கள் தந்தை!

 

பேசுகிறது பெண்ணினம்

பேசா மடந்தை

என்றும்

பேயென்றும்

பெயர் சூட்டப்பட்ட

எங்களின் குருதியை

வெளியேற்றி

புது ரத்தம் பாய்ச்சிய

பூகம்ப மருத்துவர்

என்பதால்

அவர் எங்கள் தந்தை!

 

பேசுகிறார் தொழிலாளி

சூத்திரன் என்றால்

தொழிலாளியாம்

பிறவியிலேயே அவன்

இழிமகனாம்...

‘ஆத்திரம் கொண்டடி!’

என்ற

ஆவேசக்

குதிரையை

எங்கள் அணுக்கில்

எல்லாம்

பூட்டியதால்

அவர் எங்கள் தந்தை!

பேசுகிறது பகுத்தறிவு

படித்தவன் மூளையிலும்

மூடக் குப்பைகளை

ஒட்டடைகளாய்

தொங்கவிட்ட

கடவுளைக்

காயடித்தும்

மதத்தின் மூச்சை

மரித்தும்

சிந்தனைப் புலத்தையும்

தூர்வாரியதால்

அவர் எங்களின் தந்தை!

 

பேசுகிறது சமூகநீதி

‘பரதேசிகளே -

உங்களுக்குப்

படிப்பு ஒரு கேடா?’

என்று

பாதத்தினால்

சிதம்பரம்

நடராஜனாய்

எங்களை நசுக்கிய

நரியார்களின்

நடுமார்பைப்

பிளந்து

‘கல்வி சரசுவதியை’

சந்து பொந்துகளில்

எல்லாம்

சிண்டைப் பிடித்து

இழுத்து வந்து

நடனமாடச் செய்ததால்

அவர் எங்களின் தந்தை!

 

பேசுகிறது மானுடம்

சிக்கல் பிக்கல்

சேட்டைகள்

சூழ்ச்சிகள்

ஒடுக்கல்

சுரண்டல்

எனும்

மானிட  உயிரின்

வேரை

அரித்துத் தின்னும்

புழுக்கள்

அத்தனைக்கும்

ஒரு பெயர்

ஆரியம் என்றால்

அவற்றை

ஆணிவேரோடு கெல்லி

அஸ்தமனம் செய்யும்

அரிமா என்பதால்

அய்யா பெரியாரே

எங்களின் தந்தை!

 

பேசுகிறது ஜாதி

சுதந்திர நாடென்றால்

ஜாதி ஒழிப்பு என்ற

மாராப்பு இருக்க

வேண்டாமா?

ஜாதி நோய்த் தொற்றினால்

சுதந்திரம் என்ற

குழந்தைக்கு

சுகாதாரம் ஏது?

ஜாதி இருக்கும் நாட்டில்

சுதந்திரம் இருக்குமா?

சுதந்திரம் இருக்கும்

நாட்டில்

ஜாதி இருக்கலாமா?

சட்டத்திலே ஜாதி -

சுதந்திரத்தின் வியாதி!

கொளுத்தினர்

சட்டத்தை

அனுப்பினர் சாம்பலை

மூட்டை மூட்டையாய்

கருஞ்சட்டை மாவீரர்கள்

பத்தாயிரம் பேர்!

மூன்றாண்டு வரை

முத்தமிட்டனர் சிறையை!

இன்னும் அத்தீ நம் கையில்!

உலகப் பந்தை

அதிர வைத்த

இந்தப் புரட்சியை

உசுப்பிய தலைவர்

என்பதால்

அவரே எங்கள் தந்தை!

 

இதில்

குற்றமென்ன

சொல்வீர்

‘மேதைகளே?’

பிழை என்ன

காண்டீர்

‘பெருமான்களே?’

 

கூட்டிக் கழித்தால் -

தந்தை பெரியார்

தரணிக்கோர்

புதுவிளக்கு!

மானுடத்துக்கோர்

சூரியக் கிழக்கு!

மாற்றத்திற்கெல்லாம்

புதுக் கணக்கு!

மாற்றுத் திறனாளியான

ஒட்டுமொத்த

மனித குலத்துக்கே

மானமும் அறிவுமான

மன்பதையின்

வெள்ளப் பெருக்கு!

வாழ்க எங்கள் தந்தை!

 

- கவிஞர் கலி.பூங்குன்றன்

 


பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை என்று கேட்டானாம் - அந்தப் பட்டியலில் ஒரு டாக்டர் போய்விட்டாரே என்ன செய்வது!

கன்றோடு சேர்ந்து என்ற ஒரு பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பெரியார் சொத்து நாட்டுடைமை செய்யப்பட்டதுதான். தந்தை பெரியார் விட்டுச் சென்ற ஒவ்வொரு காசும் நாட்டு மக்களுக்குத்தான் பயன்படுகிறது!

ஆதரவற்ற குழந்தைகள் இல்லமாக, முதியோர் இல்லமாக, நடுநிலைப் பள்ளியாக, மேனிலைப்பள்ளி யாக, மருந்தியல் கல்லூரியாக, பல்கலைக் கழகமாக பகுத் தறிவுப் பிரச்சாரப் பணியாக பரிணமித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சமூகநீதிக்காகக் கருஞ்சட்டைத் தொண்டர்கள் கொடுத்த உயிரின் விலையைத்தான் தமிழிசைகள் அனு பவித்துக் கொண்டுள்ளனர் - டாக்டர்களாக வந்திருக் கின்றனர்.

டாக்டராவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்கவேண் டும் என்றிருந்த நிபந்தனையை இந்த இயக்கம் ஒழித்ததால் தான் இவர் டாக்டர் என்பதை நன்றி மறந்து பேசலாமா?

கடந்த வரலாற்றைப் புரட்டினால், வீரமணியாரே உங்கள் புரட்டுகள்தான் வெளிப்படும் என்கிறார்.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப் படுகிறார் அம்மையார்.

பெண்களுக்குக் கல்வி உரிமை வேண்டும், வேலை வாய்ப்பில் இடம் வேண்டும், இராணுவம், காவல்துறை களில் எல்லாம்கூடப் பெண்கள் வரவேண்டும் பெண் களுக்குச் சொத்துரிமை வேண்டும் - பெண்களை கோவிலுக்குப் பொட்டுக் கட்டிவிடும் இந்து மதக் கேவலம் ஒழிக்கப்படவேண்டும் - விதவைப் பெண்களுக்கு மறுமண உரிமை வேண்டும் - விவா கரத்து உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்துப் போராடி பெண்களுக் கான உரிமைப்பங்கினை வாங்கிக் கொடுத்த இயக்கம் இந்த இயக்கம்.
இவற்றை எல்லாம் புரட்டுகள் என்கிறாரா திரு வாட்டி தமிழிசை?

இவர்கள் நம்பும் இந்துத்துவாவின் வரலாறு என்ன? புரட்டிப் பார்க்கலாமா?

பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்பது தானே!

வருணாசிரமத்தில் அவர்ணஸ்தர்களுக்கும் கீழா னவர்கள்தானே பெண்கள்?

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17) என்பதுதான் தமிழிசை அம்மையார் போற் றும் இந்துத்துவாவின் பின்புல வரலாறு, புரட்டிப் பார்க்கலாமா?

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதையின் தாத்பரியம்தானே (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32) இவர்களின் பின்புல வரலாறு.

பெண்களைக் கேவலப்படுத்தும் இந்த இந்துமத இழிவுகளை எதிர்த்து அழிப்பதுதான் திராவிடர் கழகத் தலைவரின் வரலாற்றுப் பின்புலம் - இவை எல்லாம் புரட்டு என்கிறாரா தமிழக பா.ஜ.க. தலைவர்?

இன்றைக்குத் தமிழக பா.ஜ.க. தலைவராக  ஒரு பெண்மணி- ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் இருக்கிறார் என்றால், அதற்கான பின்புலம், பின்பலம், வரலாறு என்பது எங்களுடையது அல்லவா! இல்லாவிட்டால் தமிழக பி.ஜே.பி.,க்குத் தலைவராக யார் வந்திருக்க முடியும்? ஓர் அக்கிரகார அம்பிதானே அந்த இடத்தில் அமர்ந்திருப்பார்.

நீட்டைப்பற்றி நீட்டி முழங்கும் அம்மையாரிடம் ஒரே ஒரு கேள்வி. தாங்கள் எத்தனை மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தீர்கள்?

பிற்படுத்தப்பட்டோர் கோட்டாவில் வந்தீர்களா? அல்லது

திறந்த போட்டியில் வந்தீர்களா?

ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள், டாக்டராக வரவேண்டும் - அதற்காக உயிரையும் கொடுப்போம் என்ற தந்தை பெரியார் கொள்கையை நெஞ்சில் தாங்கி ஓயாது பாடுபட்டு வரும் தலைவரைக் கொச்சைப்படுத்த விரும்பினால், அதைவிட சமூக நீதியைக் கொச்சைப் படுத்துவது எதுவாக இருக்க முடியும்?

ஏற்கெனவே மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பி.ஜே.பி.யின் சமூக அநீதிக்கு எதிர்ப்பாக நெருப்புப் புயல் சுழன்றடித்துக் கொண்டுள்ளது; எரியும் நெருப்பில் பெட் ரோல் ஊற்றுவதுபோல, உளறித் தொலைப்பானேன்?

இப்படியே நீங்கள் பேசுங்கள் - அதுதான் உங்கள் கட்சிக்கும் வளர்ச்சியைக் கெ(£)டுக்கும்.

கடைசியாக ஒரு கேள்வி:

காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த சுப்பிரமணிய சாமி - சங்கராச்சாரியாருக்கு இணையாகப் பக்கத்தில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்க - உங்கள் பொன்.ராதாகிருஷ்ணன் தரையில் அமர வைக்கப்படுகிறாரே - ஏன்? இந்து மதத்தின் ‘பிராமண', ‘சூத்திர' பேதம்தானே!

சிந்தித்தீர்களா?

திராவிடர் கழகத்தின் பின்புலமும் - பி.ஜே.பி.யின் பின்புலமும் என்ன என்பது இதன்மூலம் தெரிந்து கொள்க!

கருப்புச் சட்டையிடம் வீண் வம்புக்கு வந்தால் - ஒன்று கொடுத்து ஒன்பது வாங்கவேண்டும் - எச்சரிக்கை!

கடைசியாக ஒன்று - உங்கள் தந்தையார் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் அவர்களைக் கேட்டுப்பாருங் கள் -  அவரும், ஆசிரியர் வீரமணியும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகவே படித்தவர்கள் - அவரைக் கேட்டுப்பாருங்கள் - வீரமணியின் வரலாறு புரட்டா? புரட்சியா? என்பது தெரியும்.

குமரி அனந்தன் அவர்கள் சென்னைப் புத்தக விழாவில் (22-4-2015) திருமரைக்காடு வேதாரண்யம் ஆன சமஸ்கிருதப் புரட்டைப்பற்றியும், ‘சூத்திரன்' என்ற பதத்தையும் விமர்சித்துள்ளாரே - கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது!

அரைகுறையாக உளற வேண்டாம் அம்மையார்!

- மின்சாரம் -


மின்சாரம்

நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த டி.கே.மாடசாமி என்னும் தோழர் ‘தின மலரில்’ வெளி வந்த ஒரு கத்தரிப்பை நமக்கு அனுப்பி வைத்தார். அது பெட்டிச் செய்தியாக தனியே இதே பக்கத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

* பார்ப்பனத் துவேஷம்

* ஹிந்தி எதிர்ப்பு

* சமஸ்கிருத எதிர்ப்பு

இந்த மூன்றையும் வைத்து தி.க.வும், தி.மு.க.வும் சுயநல வியாபாரத்தை செய் கின்றனவாம்.

லாலா லஜபதி ஒருமுறை சொன்னது தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது.

“தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங் களே துவேஷ வாதியாக இருந்து, மற்றவர் களைப் பார்த்து ‘பிராமண துவேஷி, பிரா மண துவேஷி’ என்று சொல்லுவார்கள்” என்று சொன்னதுதான் அது.

பார்ப்பனர்களும், இந்துத்துவாவாதி களும் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டு இருக்கிறார்களே, அந்த விவே கானந்தர்தான் என்ன சொல்லுகிறார்?

“ஓ, பிராமணர்களே! சமுதாயத்தில் நீங்கள் கக்கிய விஷத்தை  நீங்கள் தான் உறிஞ்சி எடுக்க வேண்டும்” என்று சொன்னாரே எந்த அர்த்தத்தில்?

நான்கு வருணத்தையும் நானே படைத் தேன். படைத்தவனாகிய நானே நினைத் தாலும் அதனை மாற்றி அமைக்க முடியாது.

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவயோனியில் பிறந்தவர்கள் (அத்தியாயம் 9, சுலோகம் 32)

இவற்றை எல்லாம் சொன்னவர் பகவான் கிருஷ்ணன் என்று சொல்லுவது யார்? இந்த கீதையை தேசிய நூலாக அறிவிக்கப் போகிறோம் என்கிற சுஷ்மா ஸ்வராஜ் யார்?

சூத்திரர்களையும், பெண்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது துவேஷம் இல்லையாம்!

எங்களை சூத்திரர்கள், வேசி புத்திரர்கள் என்று சொல்லலாமாம் -  அது துவேஷம் இல்லையாம். அதே நேரத்தில் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானக் குரல் கொடுத்தால், அதற்குப் பெயர் பிராமண துவேஷமாம்.

அந்தப் பிரம்மானானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங் களைத் தனித் தனியாகப் பகுத்தார்.

(அத்தியாயம் 1 சுலோகம் 100)

சூத்திரன் என்றால் யார்?

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்.

3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்.

4. விபசாரி மகன்

5. விலைக்கு வாங்கப்பட்டவன்.

6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.

7. தலைமுறை தலைமுறையாக ஊழி யம் செய்கிறவன்.

(அத்தியாயம் 8, சுலோகம் 415)

இவ்வளவையும் சொல்லுகிற மனுதர்ம சாத்திரத்தை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அலங்கரித்து எடுத்துச் செல்லுகிறார்களே, இவர்கள் துவேஷவாதிகள் இல்லையா?

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணை ஒத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும் மேடு பள்ளமில்லா மல் மெல்லியதாகப் பின்னி மூன்று வட மேலறை ஞாண் கட்ட வேண்டியது

(மனுதர்மம் அத்தியாயம் 2,

சுலோகம் 42)

இதில் சூத்திரர்களுக்கு  பஞ்சமர்களுக்கு இடமில்லை என்பதைக் கவனிக்க வேண் டும். இதன் பொருள் என்ன? ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பனர்கள் ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப் பதன் தாத்பரீயம் என்ன?

நாங்கள் பிராமணர் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், நீங்களோ சூத்திரர்கள் - வேசி மக்கள் என்பதை அடையாளப்படுத்தத்தானே இந்தப் பூணூல் அடையாளம்.

இந்த இழிவை எதிர்த்து குரல் கொடுத் தால் துவேஷமா? இந்த இழிவுக்குக் காரண மானவர்கள் துவேஷமே அறியாத பரிசுத்த ஆவியில் பொரித்து எடுக்கப்பட்டவர் களாம்.

மனுவாதி ஒரு குலத்துகொரு நீதி என்று மனோன்மணியம் சுந்தரனார் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதானே!
எந்தக் காலத்திலோ நடந்தவையை யெல்லாம் எடுத்துக்காட்டி பேசலாமா என்று சில அதிமேதாவிகள் துள்ளி குதிக்கக் கூடும்!

இன்றைக்கும் பூணூல் அணியவில் லையா? இப்பொழுதும் ஒவ்வொரு வருட மும் பூணூலைப் புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண்டாட வில்லையா பார்ப்பனர்கள்?

பூணூல் அணிவதே துவிஜாதி (இரு பிறவியாளன்) பார்ப்பான் என்ற உயர்ஜாதி தத்துவத்தின் ஏற்பாடுதானே.

இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் - அதற்குரிய பயிற்சியைப் பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பெரியார் திட்டத்தை செயல் வடிவமாக்க அரசு சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் பார்ப் பனர்கள் செல்லுவது ஏன்?

சூத்திரன் சாமி சிலையைத் தொட்டால் அந்த சாமி தீட்டுப்பட்டு விடும், சாமி செத்து விடும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்பவர்கள் துவேஷம் சிறிதும் அற்ற தூய மாமணிகளா?

பார்ப்பான் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் வரை அதன் அடையாளமாக பூணூலைத் தரித்துக் கொண்டிருக்கும் வரை, ஜாதியின் கடைசிச் செதில் இருக்கும் வரை - சங்கரமடத்தில் பார்ப்பனர் தவிர மற்றவரும் அமரும் நிலை ஏற்படும் வரை - அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை என்ற நிலைப்பாடு நிலை நிறுத்தப்படும் வரை, நீங்கள் சொல் லும் ‘அந்தப் “பிராமண துவேஷம்”, ஓங்கி ஒலிக்கவே செய்யும். ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி’ என்பது இடி முழக்க மாகவே ஒலிக்கும்!  ஒலிக்கும்!!

Banner
Banner