மின்சாரம்

Image may contain: 3 people

‘துக்ளக்‘, 10.1.2018, அட்டைப்படம் இது

‘ஒழுக்கம், ஆன்மிகம், நேர்மை’ன்னு ஒருவர் பேசிவிட்டால் போதும் - அவரை மக்கள் அப்படியே சுத்த நெய்யால் பொரிக்கப்பட்டு ‘பரிசுத்த இந்திரன்' என்று நம்பிடுவார்கள் என்று ‘துக்ளக்‘ நினைக்கிறது போலும்.

கேட்க மாட்டார்களா மக்கள்? வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள் ளுங்கள் என்று கேட்கமாட்டார்களா?

சினிமாவில் கருப்புப் பணம் வாங்காத நடிகர் யார்? நான் என்று முதலில் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் பட ரிலீஸின்போது தியேட்டர்களில் நூறு ரூபாய் டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்குக் கள்ளத் தனமாக விற்கப்படுகிறதே - அதைக் கண்டிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் - தடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆன்மிகம், நேர்மை, ஒழுக்கத்துக்கு இங்கு இடமில்லை. இது பெரியார் மண் என்று தி.க. தலைவர் வீரமணி தி.மு.க. செயல் தலைவரிடம் ஆறுதல் சொல்லுகிறாராம்.

காஞ்சி சங்கராச்சாரியார்கள்கூட ஆன்மிக சிகா மணிகள்தாம். அவர்களின் ஒழுக்கம் நாடறிந்த ஒன்றாயிற்றே! ‘செத்துப்போன அனுராதா ரமணன்' சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே - மற்றவர்களைவிட இந்த விடயத்தில் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாளுக்கு நன்னா தெரியுமே!

உடம்பு பூராவும் நெய்யைத் தடவிக்கொண்டு பிள்ளைப் பெறுவதற்காக யாருடனும் கூடலாம் என்ற ‘இந்து’ சாஸ்திர யோக்கியதை தெரியாதா?

குரு பத்தினியைக் கற்பழித்த சந்திரனும் உங் களுக்குக் கடவுள்தானே! அவனைத் தானே முழு முதற்கடவுள் சிவன் தலையில் சூடிக்கொண்டு இருக் கிறான்.

குருமூர்த்தியாரே ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கவேண்டாம்.

இதில் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி பூணூல் போட்டுக்கிட்டுக் கோவில் கோவிலா போகலாம் என்று  இலவச ஆலோசனையை அள்ளித் தந்துள் ளார்.

கோவிலுக்குப் போவது ஒன்றும் அப்படியொரு புனிதமானதா என்ன?

கோவில்களில் தேவநாதன்கள் என்னென்ன வெல்லாம் செய்தார்கள் என்பதைத் தெரிந்துகொண் டால், எந்த யோக்கியன் கோவிலுக்குப் போவான்?

காந்தியார் சும்மாவா சொன்னார், கோவில்கள் தாசிகளின் விடுதி என்று.

ரஜினிகளை நம்பிக் கரையேறலாம் என்று பி.ஜே.பி. நினைக்கிறதே - அந்தப் பரிதாபத்தை என்னவென்று சொல்ல!


- கவிஞர் கலி.பூங்குன்றன்

மறந்தால்தானே
அய்யா
தங்களை
நினைக்க முடியும்?

மறக்க வேண்டுமென்று
மல்லுகட்டி
நினைத்தாலும்
மறுக்க முடியாத
ஆளுமை வெளிச்சமாய்
அடித்து எழுப்பும்
ஆதவனாக அல்லவா
அல்லும் பகலும்
ஆட்டிப் படைக்கின்றாய்!

பாடம் படிக்க
பள்ளி சென்றாலும்
கேள்வித் தோழனையும்
எங்களோடு
துணைக்கு
அனுப்புகின்றாய்

நீ என்ன
‘சூனா’ ‘மானாவா’
என்று
ஆசிரியரையும்
கேட்க வைக்கின்றாய்

ஏடெடுத்துக்
கொஞ்சம்
புரட்டினாலோ
‘எது ராசி
ஏது பலன்?‘
உன் காசுக்கு
வந்த கேடென்று
செக்குலக்கையால்
மொத்துகின்றாய்
பகுத்தறிவுத்
‘தார்க்குச்சி’யும்
போடுகின்றாய்

காலண்டரைக்
கிழித்து
நல்லநேரம்
பார்த்தாலோ
உழைப்பவனுக்கு
எல்லாம் நல்ல
நேரமென்று
காதைத் திருகிப்
பாடம்
கற்பிக்கின்றாய்

அடுத்த பக்கத்தைக்
கொஞ்சம் புரட்டி
அரசியல்
செய்திகளில்
கண்களைக்
கொஞ்சம்
மேய விட்டாலோ
ஆயிரம் ஆயிரம்
வினாக்களோடு
ஆசானுபாகுவாய்
எங்களை
மிரட்டுகின்றாய்

எதிலும்
அய்யப்படு யென்ற
ஆயுத எழுத்தை
கூர்தீட்டிக்
கொடுக்கின்றாய்
வேண்டாம் அந்த அரசியல்
பிழைப்பென்று
சமுதாய வெளியில்
புண்களுக்கு
மருந்திடும்
மார்க்கத்தைக்
காட்டுகின்றாய்

விட்டுத் தொலைத்து
தொலைக்காட்சிப் பக்கம்
கண்களைத்
திருப்பினாலோ
குறுக்கே வந்து
நிற்கின்றாய்
காலத்தைக்
கண்ணாய்க் கருது
கரியாக்காதே யென்று
கன்னத்தில்
அறைகின்றாய்

சட்டைப் பையிலிருந்து
பணத்தை எடுத்து - ஒரு
பொருளை
வாங்க முனைந்தாலோ
கையைப்பிடித்து
சரியாகக் கவனி
சரக்கு சரியில்லை
போலி யென்று
தலையில்
குட்டுகின்றாய்

சிக்கன
சுருக்கெழுத்தையும்
சொல்லிக்
கொடுக்கின்றாய்

“ஏண்டி யென்று
இல்லாளை அழைத்தாலோ
ஏண்டா என்று
கேளடிப் பெண்ணே”
யென்று
குடும்பத்தில் கைகாட்டி
மரமாய் நிற்கின்றாய்

நாங்கள் எங்கு
சென்றாலும்
முன்னாலே விழும்
அதிசய நிழலாக
அவதானிக்கின்றாய்
முக்கால் நூற்றாண்டு
பொது வாழ்வில்
முக்காலும்
கற்றவன்நீ!
பள்ளிப் படிப்பிலிருந்து
தப்பிநீ பிழைத்ததாலே
பகுத்தறிவுப்
பகலவன் ஆனாய்!
நாங்களும்
மனிதரானோம்!

உம்மை மறந்திட
எங்கே இடம்
கொடுத்தாய்?
மறந்தால்தானே
உங்களை
நினைக்கவும் முடியும்?

நினைவுநாள்
என்பதற்கு
இன்னொரு
சொல்லைத்
தேடுகின்றோம் அய்யா!

 

 

புயல் புகுந்ததோ புலிகள் பாய்ந்தனவோ புது வெள்ளம் புரண்டதோ என்றும் திகைக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளியில் நேற்று திராவிடர் கழகம் நடத்திய பேரணி கிடுகிடுக்க வைத்தது.

மாலை 5 மணிக்கு திருக்காட்டுப்பள்ளி லூர்து மேனிலைப் பள்ளி எதிரிலிருந்து பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் பேரணி புறப்பட்டது.

திராவிடர் கழகப் பேரணி என்றாலே எப்பொழுதும் பெண்களுக்குத்தான் முன்னுரிமை! இருவர் இருவராகக் கட்டுப்பாட்டுடன் தோழர்கள் அணி வகுத்து நின்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட விவசாய அணித் தலைவர் இரா.பால சுப்பிரமணியன் பேரணிக்குத் தலைமை வகித்தார்.  கழகப் பொதுக்குழு உறுப்பினர் கை. முகிலன் கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

சோம.நீலகண்டன் (மண்டல இளைஞரணி செயலாளர்),

இரா. வெற்றிக்குமார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), அண்ணா. மாதவன் (மண்டல மாணவரணி செயலாளர்), இரா. மணிகண்டன் (மாவட்ட மாணவரணி அமைப்பாளர்), லெ.கவுதமன் (பூதலூர் ஒன்றிய அமைப்பாளர்) அ.தனபால் (மாவட்ட இளைஞரணி தலைவர்)

ப. விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி து.தலைவர்), வே.தமிழ்ச்செல்வன் (மாவட்ட மாணவரணி தலைவர்), கா. பேரறிவாளன் (பூதலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர்), ச. பிரபு (பூதலூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்) வே. இராஜவேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) இரா. இராஜ்கிரண் (மாவட்ட இளைஞரணி து.செயலாளர்) இரா.கதிரவன் (மாவட்ட மாணவரணி செயலாளர்), ந. அரிமாத்தமிழன் (பூதலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர்) போட்டோ சக்ரவர்த்தி (திருவையாறு ஒன்றிய இளைஞரணி தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதுகில் அலகுக் குத்தி கோயில் விழாக்களில் சிறு தேர்களைப் பக்தர்கள் இழுப்பதுண்டு; கேட்டால் கடவுள் சக்தி என்று கதை அளப்பார்கள். அந்த மூடநம்பிக்கையை முறியடிக்கும் வகையில்  கருஞ்சட்டைத் தோழர்கள் முதுகில் அலகு குத்தி கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கர்ச்சித்து கார்களை இழுத்து வருவர்.

திருக்காட்டுப் பள்ளியில் தஞ்சை ஒன்றிய கழக செயலாளர் ஆட்டோ ஏகாம்பரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆட்டோ செந்தில் ஆகியோர் முதுகில் அலகுக் குத்திக் கொண்டு அதன் வழியாக வேன் ஒன்றை இழுத்து வந்து அசத்தினர். கடவுள் சக்தி என்று சொல்லி தேர் இழுக்கும் பக்தர்களே, கடவுள் இல்லை என்று சொல்லிக் கார் இழுக்கும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பாரீர் பாரீர் என்று முழக்கமிட்டும், கடவுள் இல்லை இல்லவே என்று முழக்கமிட்டும் அவர்கள் சென்றபோது பொது மக்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றனர்.

அதுபோல கழகத் தோழர்கள் அலகுக் காவடி எடுத்து வந்தது பார்த்தோரைப் பிரமிக்கச் செய்தனர்.

தோழர்கள் கோ.பிளாட்டோ, அண்ணா மாதவன், பி.அறிவுக்கரசு, மூ.முகில்வேந்தன், ஆகியோர் அலகுக் காவடி எடுத்து வந்தனர்.

தீச்சட்டி ஏந்தி வந்த மகளிர்

எரியும் சூடத்தைப் வாயில் போட்டு அணைத்துக் கடவுள் சக்தி என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்று தோழர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். அரங்க.பகீரதன், ஏ.லெனின் ஆகியோர் இதனைச் செய்து காட்டி வந்தனர். மண்ணச்சநல்லூர்  அட்டலிங்கம் உடுக்கடிப் பிரச்சாரம் செய்து வந்தார். தீச்சட்டி ஏந்தி வந்த கழக மகளிரணியினர் தீச்சட்டி இங்கே - மாரியாத்தாள் எங்கே? காளியாத்தாள் எங்கே? என்று முழக்கமிட்டு வந்தது பொதுமக்களை - குறிப்பாக பெண்களை மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது.

மகளிர் தோழர்கள், மாநில மகளிரணிச் செயலாளர் கலைச்செல்வி, எஸ்.மலர்க்கொடி, சி.அஞ்சுகம், ஏ.பாக்கியம், கலைவாணி, அல்லிராணி, விடுதலை அரசி, பரிமளா, துரை.அல்பேனியா, சமத்துவம் ஆகிய மகளிரணித் தோழர்கள் கம்பீரமாக தீச்சட்டி ஏந்தி வந்து கடவுள் சக்தியின் ஏமாற்றுத்தனத்தை தோலுரித்து காட்டி வந்தனர்.

சிலம்ப விளையாட்டு

தஞ்சாவூர் கலைத்தாய் சிலம்பாட்டக்குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் எம்.பி.சந்திரன், சே.ஆர்.பி.மணி, ஆர்.மாயக்கண்ணன் ஆகியோர் தமிழர்களின் கலையான சிலம்பாட்டத்தை செய்து காட்டி மெய்சிலிர்க்க செய்தனர்.

மயிலாடுதுறை எம்.ஆற்றலரசு மேளம், தஞ்சை சிறீதர் வாசுகி ஆண்கள், பெண்கள் தப்பாட்டக் குழுவினர், பறை முழக்கம் செய்து பொதுமக்களுக்கு கட்டியம் கூறினர். தஞ்சை ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த தோழர்கள் இவர்கள்.

லூர்து மாதா மேனிலைப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட கழகப் பேரணி பழமநேரி, லயன்கரை, ஒன்பது வேலி, அங்காடி கடைவீதி வழியாக வந்தது. இருபக்கமும் பொதுமக்கள், தாய்மார்கள், இளைஞர்கள் கடைவீதி வியாபாரிகளும் ஆர்வமுடனும் ஆச்சரியத்துடனும் கண் குளிர பேரணியைப் பார்த்து ரசித்தனர். கைதட்டி ஆரவாரமும் செய்தனர். இது ஒரு பண்பாட்டு மீட்பு பணியாகவே கருதப்பட்டது.

மாலை 5 மணிக்கு புறப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி 6.30 மணிக்கு முப்பெரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அப்பொழுதே ஏராளமான பொதுமக்கள் இருக்கைகளில் அமர்ந்து மேடையில் நடைபெற்ற பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தனர்.

உரந்தை கருங்குயில் கணேசன், வழக்குரைஞர் சிங்கார வேலு, ஆசிரியர் ராஜூ, தா.போகன்ராஜ் ஆகியோர் சீர்திருத்தப் பாடல்களை பாடி பார்வையாளர் நெஞ்சங்களை கொள்ளை கொண்டனர்.

வீதி நாடகம்

மாநிலக் கலைத்துறைச் செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில வீதி நாடகக் கலைக்குழு அமைப்பாளர் சி.பெரியார்நேசன் குழுவினரின் ‘திராவிட வீரன்’ எனும் தலைப்பில் வீதி நாடகம் கருத்தாக்கம் கொண்டதாக நடத்தப்பட்டது.

கைபர் கணவாய் வழியாக ஆடு மாடுகளை ஓட்டி வந்த ஆரியக் கூட்டம் திராவிடர்களை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தியது, கரிகாற்சோழப் பெருவளத்தான், இன்றைக்கு 19 நூற்றாண்டுகளுக்கு முன் கல்லணையைக் கட்டிய அருஞ்செயல், திராவிட மாவீரன் இராவணனின் கீர்த்தி பற்றியெல்லாம் இசைப்பாடல்களுடனும், வலிமை யான வசனங்களுடனும் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

‘தென்திசையைப் பார்க்கிறேன், என் தோள் களெல்லாம் பூரிக்குதடடா!’ என்ற புரட்சிக்கவிஞரின் வீரம் கொப்பளிக்கும் பாடல் வரிகளுக்கு தெற்கு நத்தம் சித்தார்த்தன் வேடமும், நடிப்புத் திறனும் போற்றத் தக்கதாகும்.

வால்மீகி இராமாயணத்தின்படி குதிரைக்கு நாம் பிறந்தவர்கள் என்பதால் நாம் (இராமனும், இலட்சுமணனும்) இன்றைக்கும் காட்டில் அலைகிறோமோ என்ற வசனம் சிரிப்பலைகளை ஏற்படுத்தும்.

பெரியார்நேசன் தனக்கே உரித்தான தனித்தன்மை யோடு நடித்தார். உடன் நடித்த தோழர்களும் பாராட்டுக் குரியவர்களே!

அறிவூட்டும் முழக்கங்கள்
கடவுள் இல்லை இல்லவே இல்லை
கடவுளை மற  - மனிதனை நினை
ஒழிப்போம் ஒழிப்போம்
ஜாதியை ஒழிப்போம்!
மாய்ப்போம் மாய்ப்போம்
மதவெறியை மாய்ப்போம்!
காப்போம் காப்போம்
மனிதநேயம் காப்போம்!
முறியடிப்போம் முறியடிப்போம்
மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்!
உள்ளிட்ட முழக்கங்களை மாணவரணித் தோழர்கள்

அஜிதன், மதிவதினி, யாழ் திலீபன் ஆகியோர் முழங்கி வந்தனர்.

 


தொகுப்பு: மின்சாரம்

 

கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

24 வயது நிறைந்த ஒரு பெண் சுதந்திரமாக தன் வாழ்க்கைத் துணை வரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள சட்டப்படி உரிமை கிடையாதா?

24 வயது நிறைந்த ஒரு பெண் தன் விருப்பப்படி மத மாற்றம் செய்து கொள்ள உரிமை கிடையாதா?

சட்டப்படி அந்தப் பெண்ணுக்கு அத்தகு உரிமைகள் உண்டு தான். ஆனாலும் குடும் பம் உருட்டல், மிரட்டல் செய்கிறது. உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூட சட்டத்தின் நிலையைத் தாண்டி உத்தரவு களைப் பிறப்பிக்கின்றன!

இவ்வளவுக்கும் முசுலிம் மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அகிலா என்ற தன் பெயரை ஹாதியா என்று மாற்றிக் கொண்ட அந்தப் பெண் +2 தேர்ச்சி பெற்று அதன்பின் சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பி.எச்., எம்.எஸ் படித்துக் கொண்டிருக்கிறார். தன் விருப்பப் படி ஷபின்ஜகான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மதம் மாறி ஓராண் டுக்குப் பிறகுதான் திருமணமும் நடந்திருக் கிறது.

சட்டப்படியான வயதில் திருமணம் செய்து கொண்டார்களா? கட்டாய மத மாற்றம் நடந்ததா? என்கிற அளவில் முடித் துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று - அவ் வளவே! ஆனால் என்ன நடக்கிறது?

பிரச்சினையே அந்தப் பெண் முசுலிம் மதத்திற்கு மாறியதுதானா? ஆனாலும் அந்தப் பெண் மூளைச் சலவை செய்யப் பட்டார், மனோநிலை சரியில்லை என்று குறுக்கு வழியில் மூளை வேலை செய்கிறது. பெண்ணின் பெற்றோருக்கு ஏனிந்த புத்தி? ஆனால் அனைத்தும் அறிந்த, அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மெத்த படித்த நீதிபதிகளுக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்றா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலை யில் இவற்றையெல்லாம் டக் டக் என்று  தயக்கமின்றிக் கூறவே செய்தார் ஹாதியா.

பிரச்சினை முடிந்ததே - இதில் நீதி மன்றமோ, தேசிய புலனாய்வுத் துறையோ (என்.அய்.ஏ) தலையிடுவதற்கு என்ன இருக்கிறது? மனநிலை சரியில்லாத பெண் என்று சந்தேகப்பட்டால் மருத்துவரிடம் அனுப்பிட வேண்டியதுதானே!

“எனக்கு அரசு உதவி தேவையில்லை, இப்பொழுது நான் படித்துக்கொண்டிருக்கும் சேலம் சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் என் படிப்பை நான் தொடரத் தயார் - பண உதவியையெல்லாம் என் துணைவரே பார்த்துக் கொள்வார் - அவரே எனக்குப் பாதுகாப்பாகவும் இருப்பார்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்பாகவே 24 வயது நிறைந்த ஹாதியா சொன்ன பிறகும் கூட “உம் கணவன் உமக் குப் பாதுகாவலன் அல்ல - கல்லூரி முதல் வரே பாதுகாவலர்” என்றெல்லாம் நீதி மன்றம் சொல்லுவது எந்த அடிப்படையில்?

அப்படியென்றால் பெண்ணுக்குக் கண வனோ கணவனுக்குப் பெண்ணோ பாது காப்பு இல்லை என்பதுதான் இருப்பதி லேயே உச்ச அதிகாரம் படைத்த உச்சநீதி மன்றத்தின் மனநிலையா? தீர்ப்பா?

விசாரணையின் போக்கைப் புரிந்து கொண்ட மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெயசிங் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து  குறுக்கிட்டு ஒரு கேள்வியை நறுக்கென்று கேட்டார். ‘ஹாதியா ஒரு ஆணாக இருந் திருந்தால் அவன் மூளைச் சலவை செய் யப்பட்டானா? அவன் மனநிலை எப்படிப் பட்டது? என்றெல்லாம் இந்த நீதிமன்றம் கேள்விக் கேட்டுத் துளைக்குமா?’ என்பது தான் அந்த நறுக்கான நாணயமான கேள்வி!

அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வில்லை. “ஹாதியா ஒரு டாக்டர், வயது 24, அவருக்கு உணர்வுகள் உண்டு, அவரிடம் நீங்கள் பேசுங்கள், இங்கே என்ன நடக் கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரி யும்” என்று மூத்த வழக்குரைஞர் மூளும் நெருப்புச் சொற்களால் சுடச்சுட சொன்ன பிறகே கனம் நீதிபதி வாயைத் திறக்க வில்லை.

நாட்டில் நடக்கும் மதவாத அரசியல் அங்கு இங்கு எனாதபடி எங்கெங்கும் தாக் கத்தின் சூட்டை விநியோகம் செய்திருக் கிறது.

‘லவ்ஜிகாத்’ என்ற புது மொழியை உண் டாக்கி ஒரு உலுக்கு உலுக்கப் பார்க்கிறார் கள்.

நீதிமன்றமே தடுமாறுமேயானால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

எவ்வளவு சீக்கிரம் மதவாத தலைக் கனத்தை சமுதாயத்தின் மண்டையிலிருந்து நீக்கி இறக்க முடியுமோ, அந்த வினாடிதான் நாட்டுக்கு நல்லது. 24 வயது நிறைந்த மருத்துவம் படிக்கும் ஒரு பெண்ணுக்கே இப்படி ஒரு நெருக்கடி என்றால் யாரை நம்பி, எதை நம்பி மக்கள் நடமாடுவது?

பக்தியோ! பக்தி!! - பார், பார்!

3.12.2017 நாளிட்ட ‘தினமலர்’ நாளேட்டின் வார மலரில் வந்துள்ள கேள்வியும் - பதிலும் இதோ:

‘‘ஜி.தேவி, நிலக்கோட்டை

கேள்வி: தற்போது, கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறதே.... காரணம் என்ன?

பதில்: தப்பு செய்பவர்கள் பெருகி விட்டனரோ என்னமோ.... செய்யும் தப்புக்குப் பரிகாரம் தேட, நியாயம் கற்பித்துக்கொள்ள கோவிலை நாடுகின்றனர் போலும்!

‘‘கோவிலில் கூட்டம் சேருவதற்குக் காரணம் கடவுள் பக்தி அதிகரித்து, எல்லோரும் ஆஸ்திகர்களாகி விட்டார்கள் என்பதற்கு இது அடையாளம்; நாத்திகத்தின் செல்வாக்கு சரிந்தே வருகிறது'' என்று வழக்கமாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக் கூட்டத்தினர்போல -முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்யாமல், ‘தினமலர்’ ஏட்டில் உண்மைகளைச் சொல்லியுள்ளனர். பலே! பலே! உண்மை ஒரு நாள் வெளியாகித்தானே தீரும்.

முன்பே திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் மிகுந்த சலிப்பு - சங்கடத்துடன் ‘‘கோவிலில் கூட்டம் சேருகிறது; பக்தி பெருகி விட்டதா என்று பார்த்தால், ஏமாற் றம்தான்! ஒழுக்கம் வளரவில்லையே. கட வுளைவேண்டுகிறவர்கள்கூடமுன்பு‘அரகர மகாதேவா’ என்று ஓங்கி ஒருமித்துக் கூறுவார்கள்.

இப்போது பக்தியுடன் கண்ணைமூடிக் கொண்டதுபோலக் காட்சியளிக்கும் புது இளம் பக்தன் எப்படிக் கூறுகிறான் அதை - தெரியுமா? ‘அர, கர மாதே வா!’ என்று அல்லவா கூவுகிறான்! இதுவா பக்தி?‘‘ இப்படிக் கூறினார்!

முன்பு, தந்தை பெரியார் சொல்வார்; சுயமரி யாதை மேடைகளிலும் பேசுவார்கள்:

‘‘ஆண்களுக்கு மட்டும் ஒரு நாள் கடவுள் தரிசனம்; பெண்களுக்கு வேறு ஒரு நாள் கடவுள் தரிசனம் என்று தனித்தனியே பார்த்து அனுப்பினால், வண்டாட்டம் - கொண்டாட்டம் குறைந்து, உண்டியல் வசூலே குறைந்துவிடுமே!

கடவுள் பிறகு தர்மகர்த்தா கனவில் தோன்றி, ‘அய்யோ இப்படி ஆண் - பெண் பிரிவினை ஏற்படுத்தி, என் பொழப்பைக் கெடுத்துவிட்டீர்களே பாவிகளே; உடனே இந்த சிஸ்டத்தை மாற்றி, பழையபடி ஆண் - பெண் பேதமின்றி அனுப்புங்கள்’’ என்றல்லவா உத்தரவு போடுவார்!

அட கடவுள் பக்தர்களே, அந்த பக்தி வியா பாரத் தரகர்களான அர்ச்சகர்களே, உங்கள் பிழைப்பு நடந்து வசூல் குறையாமல் இருந்தால் சரி!

******

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அவ்வப்போது ‘சோதனைகள்’ ஏற்பட்ட வண்ணமே உள்ளது!

‘வைதாரையும் வாழ வைப்பான் என்னப்பன் முருகன்’ என்பார் வாரியார்!

‘முருகன் என் முப்பாட்டன்' என்று சொந்தங் கொண்டாடி முருகனடியில் ஓட்டுத் தேடுவார் சிலர்!

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, வள்ளி - தெய்வானை சமேதரராக அமர்ந்துள்ள, அவரது மண்டம் இடிந்து விழுந்து, பரிதாபமாக ஒரு பெண் பக்தை சாவு; பலருக்குப் படுகாயம்!

கந்தன் கருணை இப்படியா காட்சியளிப்பது? பக்தர்களை இப்படியா உயிர்ப்பலி வாங்கி சோதிப்பது!

எல்லாம் வல்ல முத்தித்திரு சக்திப் பெற்ற முருகனே, உன் பக்தர்களை திருச்செந்தூரில் இப்படியா இடிபாடுகளில் சிக்க வைத்து சோதிப்பது?

கடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகத்தினன், கருணையே வடிவானவன். எல்லாம் ‘புஸ்‘சென போய்விட்டதே! இன்னமுமா கடவுள் நம்பிக்கை - பக்தி வியாபாரம்?

 

ஊசிமிளகாய்

Banner
Banner