மின்சாரம்

 

தென்னாட்டைப் பிரிக்கப் போகிறார்களா?

 

மண்ணின் மைந்தர்கள் குரலை எழுப்பிய மல்லிகார்ஜுன் கார்கே, நிறவெறிப் பேச்சிற்கு எதிராக மீண்டும் தன்னுடைய போர்க்குணத்தை காட்டினார். தொடர்ந்து நிறவெறிப் பேதத்தை எங்கள்மீது காட்டி வந்தால் தென்னகம் தனியாக பிரிந்து செல்லும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

தென் மாநிலங்கள் தனிநாடாகப் பிரிய நேரிடும் என்று மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் இந்தியர்களை கறுப்பர்கள் என பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் குறிப்பிட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். டில்லியில் அண்மையில் ஆப்பிரிக்கா மாணவர்கள் தாக்கப்பட்டது சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் அளித்த பேட்டியில்,

‘‘இந்தியர்கள் இனவெறியர்கள் இல்லை. நாங்கள் இனவெறியர்களாக இருந்தால் எப்படி தென்னிந்திய மக்களுடன் இணைந்து வாழ முடியும்? இந்தியாவிலும் கறுப்பர்கள் உள்ளனர். எங்களைச் சுற்றியும் கறுப்பின மக்கள் உள்ளனர்’’ என்று இனவெறியைத் தூண்டும் வகையில் அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் மக்களவையிலும் எதிரொலித்தது. இதுகுறித்து  எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,

தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்தி யர்களா? இல்லையா? என அரசு விளக்கமளிக்க வேண்டும் என காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும் தென் மாநிலங்களை பற்றி தவறாக பேசிய தருண் விஜய்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இது போன்ற பேச்சுக்களை அனுமதித்தால் தென் மாநிலங்கள் தனி நாடாக பிரிந்து செல்ல முற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார் மல்லி கார்ஜூன கார்கே.

கார்கே பேச்சுக்கு எதிர்கட்சிகளின் மற்ற எம்பிக் களும் ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரியர்கள் எந்த ஒரு காலத்திலும் தங்களை மண்ணின் மைந்தர்களோடு ஒப்பிட்டுப் பேசுவதே கிடையாது, அவர்களைப் பொறுத்தவரை திராவிடர்கள் அவர்களுக்கு இன்றளவும் பகையாளிகள்தான்; சூத்திரர்கள் தான் இதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு ஜெர்மானியருக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ, அதுபோலவே பார்ப்பான் - அடிமை வகுப்பினர்களான சூத்திரர்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் அன்னியனாவான். இவர்களுக்கு அன்னியர்கள் மட்டுமல்ல. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான் என்று கூறுகிறார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர். (ஆதாரம்: காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்ததென்ன எனும் நூல்).

இதே கருத்தைத் தந்தை பெரியார் அவர்கள் வேறு சொற்களில் தத்துவார்த்தமாகச் சொல்லியுள்ளார்.

என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வர வேண்டாம், தொட வேண்டாம் என்பவனும் - கிட்ட வந்தாலே, கண்ணில் பட்டாலே தோஷம் என்பவனும் நான் தொட்டதைச் சாப்பிட்டால் - என் எதிரில் சாப்பிட்டால் நரகன் என்பவனும் அந்நியனா? அல்லது உனக்கும், எனக்கும் வித்தியாசம் இல்லை, தொட்டாலும் பரவாயில்லை நாம் எல்லோரும் சமம்தான் என்று சொல்லுகிறவன் அந்நியானா? என்பதை யோசித்துப் பாருங்கள் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (‘குடிஅரசு’,6.9.1931)

மறக்க முடியாத நவம்பர் 25 2015

மதச்சார்பின்மை தொடர்பான விவாதத்தின் போது உள்துறை அமைச்சருக்கு பதிலளித்த மல்லிக்கார்ஜுன கார்கே கூறியதாவது (25.11.2015).

அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தில்

மதச் சார்பின்மை என்ற வார்த்தையைச் சேர்க்க எவ் வளவோ முயற்சி செய்தார். ஆனால், நாடாளு மன்றத்தில் இருந்த பார்ப்பனர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

‘‘அம்பேத்கரும், நாங்களும் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் - மண்ணின் மைந்தர்கள்! ஆரியக் கூட் டமே ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு இங்கு வந்தது. எங்களுக்குத்தான் இந்த மண்ணின் உரிமை உள்ளது. ஆயிரம் ஆண்டு காலமாக ஆரியர்களின் கொடுமைகளைச் சகித்து வந்தோம்!’’ என்று ஆர்ப்பரித்தார்.

தந்தை பெரியாரின் குரல் நாடாளு மன்றத்திலும் ஒலிக்கத் தொடங்கி விட்டது.

நம்மைப் பார்த்து பிரிவினைவாதி என்றவர்கள் இப்பொழுது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரசு) மல்லிகார்ஜூன கார்கே தென்னாடு பிரியும் என நாடாளுமன்றத்திலேயே அறிவித்துள்ளாரே, என்ன பதில்?

நம்மைப் பார்த்து இனவாதம் பேசு வதாகச் சொல்லுகிறார்களே - ஆரியர் கள் இங்கு வந்து குடியேறியவர்கள் - நாங்கள்தான் இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் என்று சிங்கநாதம் செய்துள்ளாரே நாடாளுமன்றத்தில் - எண்ணிப் பார்த்தீர்களா?

தந்தை பெரியார் மறைந்திருக்கலாம் - அவர்கள் ஊட்டிய திராவிட சித்தாந்தக் குரல் நாடாளுமன்றத்திலேயே எதிரொ லிக்கிறதே - பார்த்தீர்களா - பார்த்தீர் களா?

வடநாடு - தென்னாடு

ஆரியர் - திராவிடர்

இது வரலாறு - மாற்றியமைக்க முடியாது - இது கல்வெட்டு!

இந்தியா ஒரே நாடு - ஒரே கலாச் சாரம் - ஒரே மொழி என்ற சப்பைக் கட்டுகள் எல்லாம் செல்லுபடியாகாது!

தந்தை பெரியாரின் திராவிட சித் தாந்தம் நாடாளுமன்றம்வரை சென்று விட்டதே!

மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!

- மின்சாரம்

கர்ப்பக்கிரகம் என்றால் சாதாரணமா? கடவுள் உறையும் இடமாயிற்றே! கண்டவன் எல்லாம் உள்ளே நுழைய முடியுமா? அதற்கென்று ஆஷ்டானங்கள் தேவையில்லையா? ஆகமங்கள் அங்கீகரிக்க வேண்டாமா? என்று ஆலா பரணம் செய்யும் அய்யன்மார்கள் உண்டு; ஆமாம் சாமி போடும் ஆசாமிகள் உண்டு. அதிகாரபீடத்தின் உச்சிக்கிளையில் ஆசனம் போட்டு அமர்ந்திருக்கும் உச்சநீதிமன்ற உச்சிக்குடுமி நீதிபதிகளுக்கும் குறைச்சல் இல்லை.

ஆனால், எத்தனை எத்தனை அசிங்க மனிதர்கள் அக்கிரகாரத்தில் பிறந்த ஒரே காரணத்தால், அர்ச்சகர்களாகி ஆபாசக் கும்பியில் நாளும் குளித்து வருகின்றனர் என்பதை அரசு அமைத்த அய்யர் கமிஷன் (சர்.சி.பி.ராமசாமி அய்யர்) அக்கக்காக ஆணிவேர் வரை சென்று பிடுங்கி எறியவில்லையா?

வெகுதூரம் போகவேண்டாம் - காஞ்சிபுரம் மச்சேந்திரநாதன் கோவில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் அடித்த காமக் களியாட்டம் கொஞ்சமா நஞ்சமா?

கர்ப்பக்கிரகத்தை கர்ப்பத்தை உண்டு பண்ணும் அறையாக மாற்றிய அயோக்கியப் பதர் அல்லவா!

பக்தைகளைக் கசக்கி சாறு பிழிந்து குடித்த காமுகன் அல்லவா! அந்தக் கண்ணராவிக் காட்சியைக் கைப்பேசியில் படம் எடுத்து, அந்தப் பக்தைகளிடம் அதனைக் காட்டிக் காட்டி மிரட்டி மீண்டும் மீண்டும் வேட்டையாடிய வீணன் அல்லவா!

அதைப்பற்றி எந்தத் ‘துக்ளக்’ எழுதியது? எந்தத் ‘தினமணி’ சாடியது? எந்த ‘இந்து’ கண்டித்தது? எந்தத் ‘தினமலர்’ திட்டித் தீர்த்தது? குருமூர்த்திகளின் குடுமிகள் கூண்டுக்குள் அடைபட்டதேன்? சோ ராமசாமிகள் பேனாவைத் தூக்காதது ஏன்?

‘பிராமணன்’ அல்லவா - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் அல்லவா! விட்டுக் கொடுத்துவிடுவார்களா?

இதோ இப்பொழுது வெளிவந்த ஒரு செய்தி. பூரி ஜெகந்நாதக் கோவிலிலிருந்து வெளிவந்த ஒரு செய்தி.

11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியைச் சீரழித்து இருக்கிறான் ஒரு சிண்டுப் பார்ப்பான். அவன் யாரோ அனாமதேயம் அல்ல - பிரபல பூரி ஜெகந்நாதர் கோவில் அர்ச்சகப் பார்பபான். அவன் பெயர் குருசரண்பெக்ரா என்ற 28 வயது தடியன் (31.3.2017).

கதறக் கதற எப்படி சீரழித்து இருக்கிறான் - சாக் லெட்டைக் கையில் கொடுத்து, கோவில் தீர்த்தத் தொட்டிக்குக் கொண்டு சென்றல்லவா கொலை பாதகன் வேட்டையாடியிருக்கிறான்.

குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடந்த அந்த மாற்றுத் திறனாளி சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.

பொதுமக்களின் கைகளில் சிக்கிய அந்தச் சிண்டன் சரமாரியாக அடித்து உதைக்கப்பட்டுள்ளான். கடைசி யில் காவல்துறை அந்தக் கயவனைக் காபபாற்றி வழக்குப் பதிவு செய்து சிறைக்குள் தள்ளியுள்ளது. கடுமையான தண்டனையை அந்தக் காமவெறிப் பார்ப்பான் அர்ச்சகனுக்குக் கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் -பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள் ளனர்.

கோவில் விபச்சார விடுதி என்று காந்தியார் சும்மாவா சொன்னார்.

***

கேள்வி: தீண்டாமைபற்றி ஸ்ரீ ராமானுஜர் கருத்தென்ன?

பதில்: ஸ்ரீ ராமானுஜர் காவிரியில் குளிக்கச் செல்லும்முன் பிராமண சீடர்களின் தோளில் கைபோட்டுச் செல்வார். குளித்து திரும்பி கோவிலுக்கு வரும்போது பின் தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த உறங்காவில்லிதாசர் தோளில் கைபோட்டு வருவார். அவருக்கு ஜாதி வேறுபாட்டில் துளியும் நம்பிக்கை கிடையாது. தீண்டாமையைத் தகர்த்தெறிந்தார். இன்றைக்குத் தலித் என்கிறார்களே அவர்களுக்கு ராமானுஜர் கொடுத்த பெயர் திருக்குளத்தார்.

(ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்’, 7.4.2017, பக்கம் 35).

அப்படியா சேதி! (அப்படி சொன்னதற்காகவும், நடந்துகொண்டதற்காகவும் அவரைக் கொன்றவர்களே பார்ப்பனர்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்).

சரி, ராமானுஜர் தீண்டாமையை ஏற்றுக் கொள்ளா ததைப் பாராட்டவேண்டும். ஜாதி வேறுபாடு அவ ருக்குக் கிடையாது - அது உண்மையென்றால், ராமானுஜரால் திருக்குளத்தார் என்று பட்டை தீட்டப்பட்ட அந்தத் திருக்குளத்தார் ஆகமம் படித்து, அர்ச்சர்களுக்கான பயிற்சியும் பெற்று ரெங்கநாதன் கோவில் பட்டராக, அர்ச்சகராக நியமிப்பதை ‘விஜயபாரதங்கள்’ ஏற்றுக்கொள்கின்றனவா?

தந்தை பெரியார் குரல் கொடுத்து, தி.மு.க. ஆட்சியில் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகருக்கான சட்டம் இயற்றி, அர்ச்சகர் பயிற்சியும் அளித்து, அர்ச்சகராக கோவில்களில் நியமனம் செய்யவிருந்த காலகட்டத்தில், உச்சநீதிமன் றத்திற்குப் படையெடுத்தார்களே பார்ப்பனர்கள் - அப்பொழுது இந்த ‘விஜயபாரதக்’ கும்பல் எங்கே போயினவாம்? குரங்குக் குட்டிக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தனவா?

சரி, ராமானுஜர் தீண்டாமையை அனுசரிக்காதவர், ஜாதி வேறுபாடு பார்க்காதவர் என்கிற ‘விஜய பாரத’த்தை நோக்கி ஒரு வினா!

உங்கள் ஜெகத்குரு சங்கராச்சாரியார்கள் ராமானுஜர் கடைப்பிடித்ததாகக் கூறுகிறீர்களே - அந்த வழியை ஏற்றுக் கொள்கிறார்களா?

செத்துப் போன மேனாள் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி ‘‘தீண்டாமை க்ஷேமகர மானது’’ என்று கூறியிருக்கிறாரே - ஜாதி வித்தியாசம் அவசியம் என்று அடித்துக் கூறுகிறாரே - இதற்கு என்ன பதில்?

உலகத்தில் உயர்ந்த சோப்புகளைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், தீண்டாதவர்கள்மீது படிந்த தீட்டினைப் போக்கவே முடியாது - முடியவே முடியாது என்கிறாரே சிருங்கேரி சங்கராச்சாரியார். ரத்தத்தில் நான்கு பிரிவுகள் இருப்பதுபோன்றதுதான் ஜாதிப் பிரிவு என்கிறாரே பூரி சங்கராச்சாரியார் - இவர்களை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிவார்களா?

அவ்வளவு தூரம் கூடப் போகவேண்டாம். ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்’ ஆர்.எஸ். எஸின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் ஜாதியின் பெருமையைத் தூக்கிப் பிடித்து எழுதி இருக்கிறாரே - அவர் எழுதிய ‘ஞானகங்கை’ (Bunch of Thoughts)  நூலை பகிரங்கமாக பட்டப்பகலில் தீ வைத்துக் கொளுத்தத் தயார்தானா? சவால்! சவால்!!

----------------

இதற்குப் பதில் என்ன விஜயபாரதமே?

ஜாதிபற்றி கோல்வால்கர்

‘‘சிலர் நீண்ட காலமாக ஜாதி அமைப்பு முறையை எதிர்த்துக் கொண்டே வருகிறார்கள். பழங்காலத்தில் ஜாதி அமைப்பு முறை இருந்தது. நாம் அதன் உச்சியில் இருந்தோம். ஆனால், இந்த ஜாதி அமைப்பு முறை நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உண்மையில் இந்த ஜாதி அமைப்பு சமூகத்தில் ஒற்றுமையை காப்பதற்கே உதவி செய்திருக்கிறது.

(‘‘There is nothing to prove that the caste system ever hindered our social development. Actually the caste system has helped to preserve the unity to our society.)’’

ராமானுஜரைக் காப்பாற்றப் போகிறதா? அல்லது அவர்களின் குருநாதரான கோல்வால்கரைக் காப்பாற்றப் போகிறதா ஆர்.எஸ்.எஸ், விஜயபாரதம்?

----------------

ஜாதிபற்றி சங்கராச்சாரியார்

‘‘இவன் (பிராமணன்) ஸ்தூலமாக அவனோடு (பிராமணரல்லாதான்) ரொம்பவும் ஒட்டி வாழ்ந்தால், அவனுடனேயே உட்கார்ந்து கொண்டு இவனும் சாப்பிட்டால், அவனுடைய ஆகாராதிகளை நாமும்தான் ருசிபார்ப்போமே என்ற சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக்கொண்டு போய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும். அந்தந்தச் சமுதாயத்துக்கு அந்தந்தக் குலதர்மம், பழக்கவழக்கம், ஆகார முறைகள் உகந்தவை. ஆனால், சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, இந்தத் தனித்தனி ஏற்பாடுகளையெல்லாம பலப் பட்டறையாகக் குழப்ப ஆரம்பித்தால், அத்தனை காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக்காரியமே சீர் குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள்.’’

(‘தெய்வத்தின் குரல்’ பாகம் 1, பக்கம் 192)

காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்த) சந்திரசேகரேந்திர சரசுவதி

ஆழ்வார் பட்டம் விபீஷணனோடு முடியட்டும்!

கவிஞர் கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

"இந்திய அரசியல் அரங்கில் இன்று திராவிடக் கட்சிகளுக்கான தேவை எங்கே இருக்கிறது என்றால், சமூக நீதிக்கும், நல்லிணக்கத்துக்குமான முன்னுதாரன மாநிலமாகத் தமிழகத்தை நீடிக்கச் செய்வதிலும், மாநில சுயாட்சிக்கான முன்னுதாரன மாநிலமாகத் தமிழகத்தை நீடிக்கச் செய்வதிலும், மாநிலக் குரலுக்கான தேசியக் குரலின் வலுவான மய்யமாகத் தமிழகத்தை வளர்த்தெடுப்பதிலுமே இருக்கிறது; அதற்குத் தென்னிந்தியாவில் தொடர்ந்து காஷ்மீர் வரை மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் புள்ளியாக அவை மாற வேண்டும் என்றால் வெளித் தோற்றத்தில் இனப்பாகுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பெயர் சுமையிலிருந்து அவை விடுபட வேண்டும்" என்று திருப்பித் திருப்பி இந்தத் திராவிடத்தின்மீதுதான் தம் கண்களைக் குத்திக் குத்திப் பார்க்கிறார்.

திராவிடத்துக்கு இனிமேல் தமிழ்நாட்டில் என்ன வேலை இருக்கிறது என்று எழுதிய தோழர் சமஸ், இங்கு என்ன சொல்லுகிறார்? சமூகநீதிக்கும், நல்லிணக்கத்துக்குமான முன்னுதாரன மாநிலமாக தமிழகத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்று இந்த இடத்தில் கூறுகிறார். இதன் மூலம் திராவிட இயக்கத்தின் தேவையை இங்கு வலி யுறுத்துவதைக் கவனிக்க வேண்டும்.

இதற்காக இந்தியா முழுவதையும் ஒருங்கிணைக்க திராவிடம்  என்ற பெயர் எப்படி தடையாக இருக்கிறது என்பதை விளக்காமலேயே அதை ஒரு குற்றச்சாட்டாக வைப்பது - அவரிடம் அதற்கான சரக்கு இல்லை  என்ற வெறுமையைத் தான் வெளிப்படுத்துகிறது.

மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற் காக இந்திய அளவில் அனைத்து மாநில சமூக நீதியாளர்களையும் ஒருங்கிணைத்து 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும்  நடத்திடவில்லையா? (டில்லி நாடாளுமன்றம் முன்பாகவும், பிரதமர் இந்திரா காந்தி வீட்டு முன்பாகவும், திராவிடர் கழகம் - இந்தப் பெயரிலேயே நடத்தி வெற்றி காணவில்லையா?) அந்தக் கால கட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தை ஒரு முறை தெரிந்து கொள்ள முயற் சிக்கட்டும். இந்தியாவின் பல மாநிலங்களிலும் திராவிடர் கழகம் தன் பெயரை மாற்றிக் கொண்டா மாநாடுகளை நடத்திட ஒருங்கிணைத்தது?

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் சமஸ் தன் கட்டுரையில் எந்தப் பார்ப்பனர்களுக்காக இனாம்  வக்கீலாக வாதிடுகிறாரோ  அந்தப் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களையும் தாண்டி வடபுலத்துத் தலைவர்கள் சண்டமாருதம் பொழிந்தனரே!

ராம்விலாஸ் பஸ்வானாகட்டும் (இன்றைய மத்திய அமைச்சர்), சந்திர ஜித்தாகட்டும், டி.பி. யாதவாகட்டும் - பிரம்பிரகாஷாகட்டும், மவுரியாவாகட்டும்,  (திராவிடர் கழகக் கொடியையே தமது அமைப்புக்காகப் பெற்றுச் சென்றார்) கர்ப்பூரி தாகூராகட்டும் ஒரு நீண்ட பட்டியலே உண்டு. அவர்கள் உரைகள் எல்லாம் பார்ப்பனர்களின் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை, எதிர்க் குரலை எதிர்த்து அனல் புயலாக அல்லவா வீசினர்!

ஆம், சமூக நீதி என்று எடுத்துக் கொண்டால் அது பார்ப்பனர் எதிர்ப்பில் தான் கொண்டு போய் விடும் என்பதை தமிழ்நாட்டில் வாசம் செய்யும் சமஸ் எப்படி மறந்தார் அல்லது அறியாமை இருட்டில் முடங்கினார்? ஒருகால் பார்ப்பனர் மீதான பாசத்தால் கண்கள் இருண்டு விட்டனவா?

அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26இல் அமலுக்கு வந்தாலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அறவேயில்லை;  அதற்காக மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்தக் கோரி பிற்படுத்தப்பட்டோர் போராடும் நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் பார்ப்பன சங்கத்தின் அழைப்பை ஏற்று பார்ப்பனர்கள் உண்ணாவிரதம் இருந்ததை (1.10.1990) சமஸ் அறிவாரா? அதனை எதிர்த்து திராவிடர் கழகம் உண்ணும் விரதம் நடத்தியதுதான் தெரியுமா?

இடஒதுக்கீட்டுக்கான உரிமைகளை ஈட்டிட அங்குல அங்குலமாக ஆரியப் பார்ப்பனர்களை எதிர்த்து போராட  வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை வரலாறு!

சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங்  அவர்கள் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினார் என்பதற்காக, அவரது ஆட்சியைக் கவிழ்த்த 'மகானுபவர்'கள்! தான் சமஸ் தூக்கி சுமக்கும் பா(பார்ப்பன)ஜ.க.!

அய்யோ பாவம் பார்ப்பனர்களை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும் என்று திராவிட இயக்கத்தினரைக் கெஞ்சுகிறாரே .

திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற திராவிடக் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் சேர்ந்து கொள்ள இப்பொழுது கூடத் தடையில்லையே. ஒரு வி.பி. ராமன் திமுகவுக்கு வந்து செய்த காரியம் என்ன? ஆச்சாரியாரை சந்திக்க வைத்தது தானா?

ஒரு ஜெயலலிதாவை திராவிட இயக்கத்தில் சேர்த்து திராவிட இயக்கத்தின் அடையாளத்தையே அழித்து விடவில்லையா? அண்ணா பெயரையும், 'திராவிட' என்ற இனவியல் சித்தாந்தத்தையும் தலைகீழாகப் புரட்டியடிக்கவில்லையா? தொண்டர்களை மண் சோறு சாப்பிட வைக்கவில்லையா?

பார்ப்பனர்கள் புகுந்த புத்த மார்க்கம் இந்தியாவில் என்னாயிற்று?  எந்த வைதிக, சனாதன, வருணாசிரம ஆரிய கலாச்சாரத்தை வீழ்த்த புத்தம் தோன்றியதோ, அந்த புத்தம் இந்தியாவிலேயே காலூன்ற முடியாதபடி ஊடுருவி அழித்த வரலாற்றையெல்லாம் சமஸ் அறிவாரா?

பார்ப்பனர்களை நோக்கி திராவிட இயக்கத்தின் பார்வை துவேஷமல்ல  - அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் சித்தாந்த பார்வை.

அதற்குத் தடையாக இருப்பது எதுவாக இருந்தாலும் தந்தை பெரியார் பார்வையில் தூள் தூள்தான் - அது அரசமைப்புச் சட்டமாக இருந்தாலும் சரியே!

அதற்கு எதிர் நிலை சித்தாந்தத்தை  கொண்டதுதான் பார்ப்பன ஆரியம் என்பது. நியாயமாக தோழர் சமஸ் அவர்கள் அறிவுரை கூறுவதாக இருந்தால் அதனை பார்ப்பனர்களிடமும், சங்கராச்சாரியார்களிடமும், இராம கோபாலன் வகையறாக்களிடமும் அல்லவா சொல்ல வேண்டும்.

"துவி ஜாதி - இரு பிறப்பாளன் என்று உங்களை அழுத்தமாக அடையாளம் காட்ட அல்லவா பூணூல் அணிகிறீர்கள்; ஆண்டுதோறும் எதற்காக ஆவணி அவிட்டத்தில் அதை புதுப்பித்துக் கொள்கிறீர்கள்?

பிராமணர்களே! பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவர்கள் என்ற இறுமாப்பிலிருந்து கீழே இறங்கி வாருங்கள். நீங்கள் பிராமணர் என்றால் நாங்கள் யார்? சூத்திரர்கள் தானே - சூத்திரர் என்றால் அடிமைகள்தானே - வேசி மக்கள் தானே - கல்வி கற்கக் கூடாதவர்கள் தானே!

ஒரு புது யுகத்துக்குள் நுழைய வேண்டாமா? (இதைச் சொல்லிதான் கட்டுரையைத் தொடங்கியுள்ளார் சமஸ்) "நீங்கள் உங்கள் பிறவி உயர்வை நிலை நிறுத்த, நிலை நிறுத்த உங்கள் மீதான வெறுப்பு மேலும் மேலும் வளரத் தானே செய்யும்?" என்று ஏன் சமஸ் பார்ப்பனர்களை வற்புறுத்தக் கூடாது? ஏன்? அந்த அடிப்படையில் எழுதக் கூடாது?

இதே பாணியில் விவேகானந்தரேகூட பார்ப்பனர் களைப் பார்த்துக் கேட்டதுண்டு.

இந்துக்களே ஒன்று சேர்வீர் என்கிறீர்கள். ஆனால் அந்த இந்துக்களில் தாழ்த்தப்பட்டோர் கோயில் கரு வறைக்குள் அர்ச்சகராகலாம் (உரிய பயிற்சி பெற்று) என்று சட்டம் வந்தால் அதனை எதிர்த்து ஏன் உச்சநீதிமன்றம் செல்கிறீர்கள்? என்று சமஸ் கேட்க வேண்டாமா?

(வழக்கைத் தொடுத்தவர்கள் 13 பார்ப்பனர்கள்; சங்கராச்சாரியார், ஆசியோடு - பிரபல வழக்குரைஞர் பல்கி வாலாவுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தவர் ராஜாஜி)

பார்ப்பனர்கள் நடத்திய அமைப்பான சென்னை இராயபுரம் லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் அழைப்பை ஏற்று தந்தை பெரியார் சென்று உரையாற்றினாரே (5.1.1953).

நம்மில் சிலர் அமர்ந்து பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம் - நம் பின் சந்ததிகள் அகிம்சைவாதிகளாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது என்று பார்ப் பனர்கள் மத்தியிலேயே பேசியதுண்டே! யார் முன் வந்தார்கள்?

அதைவிட 55 ஆண்டுகளுக்குமுன் 'விடுதலை'யில் தம் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கையொன்றை வெளியிட்டார்களே -

தலைப்பு: பார்ப்பனத் தோழர்களுக்கு!

"பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ் நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட் டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது."

('விடுதலை 1.4.1962)

இதைவிட என்ன வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்று சமஸ்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்?

கோயில் கருவறைக்குள் எங்களைத் தவிர வேறு ஜாதியினர் சென்று பூஜை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடும் சாமி செத்துப் போய் விடும் என்று வைகனாக ஆகமத்தைத் தூக்கிக் கொண்டு உச்சநீதிமன்றம் செல்லுகிறார்களே.

தீட்டுப்பட்டு விட்டதால் சம்ப்ரட்சணம் செய்ய வேண்டும்; 1008 புது கலசங்கள் செய்து வைக்க வேண்டும்; பிராமணப் போஜனம் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்ற படிக்கட்டு ஏறிச் சொல்லுகிறார்களே - இவை எல்லாம் பார்ப்பனர்களின் பெருந் தன்மையைக் காட்டுகிறது என்று சொல்லப் போகிறாரா சமஸ்?!

யாருக்கோ சொல்ல வேண்டியதை எல்லாம் இடம் மாறி இடமாறு தோற்றுப் பிழையாக எழுதலாமா?

பாதிக்கப்படுபவன் யார்? பாதிப்புக்குக் காரணமானவர் யார்? என்று அறிவதில்கூடத் தடுமாற்றமா?

வெறும் கல்வி, உத்தியோகம் என்பதைவிட பெரும் பாலான மக்களின் சுயமரியாதைக்கும், அடிப்படை உரிமை களுக்கும் சவாலானது பார்ப்பனீயம் - இழிவுபடுத்தக் கூடியது - பார்ப்பனீய - கடவுள், மதம், சாத்திரம், சம்பிரதாயங்களின் பெயரால். இதுதான் முக்கியப் பிரச்சினையே!

பார்ப்பனீயம் மற்றவர்களிடமும் இருக்கிறதே என்று சமாளிக்கிறார் சமஸ். உண்மைதான் பார்ப்பனீயத்துக்கு மூலம் பார்ப்பனர்! அதன் தாக்கம் பார்ப்பனர் அல்லா தாரிடம்; நிஜத்துக்கும், நிழலுக்கும் வித்தியாசம் உண்டு என்பது நினைவிருக்கட்டும்.

"அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்" எனும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சி சங்கராச்சாரியார்  ஜெயேந்திர சரஸ்வதி (கொலைக் குற்ற வழக்கில் சிறைக்குச் சென்றவர்) என்ன பேசினார்?

"தமிழ்நாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் என பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, அது கடவுள் எதிர்ப்பு, நாஸ்திக உணர்வு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் நாடும், தமிழ் மொழியும் தோன்றிய நாளிலிருந்து பிராமணர் இங்கு இருக்கின்றனர். தமிழில் தோன்றிய முதல் நூலே தொல்காப்பியன் என்ற பிராமணன் எழுதியதுதான். சமஸ்கிருதம்தான் இந்தியக் கலாச்சாரத்தின் வேர். அதைக் கைவிட்டால் கலாச்சாரம் அழிந்து விடும். இதையெல்லாம் வருங்கால பிராமணர்கள் மறந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது"

"எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. ராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொல்படிதான் நடந்தார். மதுரையை  நாயக்கர்கள்  ஆண்ட போதும் அந்தணர்தாம் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சி பெரியவாள்! ஆண்டவன்கூட அப்புறம் தான் அந்தணன்தான் முதலில்.

ஈஸ்வரனைத் துவேஷித்தால் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் அந்தணனைத் துவேஷித்தால் மன்னிப்பு கிடையாது" என்று பேசினாரே! (9.10.2002)

பார்ப்பனர்கள் திருந்தி விட்டனர் என்பதற்கு "ஜெகத் குருவின்" இந்த ஜெகம் புகழ் அமுத வாக்குப் போதாதா என்று புகழ்ந்து எழுதினாலும் எழுதுவார் சமஸ்.

மதவாத சங்கராச்சாரியார் இப்படிப் பேசுகிறார் என்றால்  அரசியல்வாதி 'மூதறிஞர்' ராஜாஜி என்ன சொல்லுகிறார்?

In fact one occasion Rajaji proudly said that he valued his Brahminhood than his Chief Ministership (Caravan 21.4.1928 - Gandhiji's Crusade Against Casteism)

தான் முதல் அமைச்சராக இருப்பதைவிட பிராமணன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமைப்படுகிறாராம் - மதிக்கிறாராம்.

இதற்கு மேலும் என்ன சொல்ல!

ராஜாஜியின் இந்தத் தன்மையைச் சுட்டிக் காட்டி இனி யாரை மனதில் வைத்துக் கொண்டு எல்லாப் பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா என்று நினைப்பது?! என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு பார்ப்பன நீதிபதிகள் முன்னதாக தந்தை பெரியார் கூறியதுண்டே! ("நீதி கெட்டது யாரால்?")

தோழர் சமஸ் செல்ல வேண்டிய இடமும் வேறு - சொல்ல வேண்டிய இடமும் வேறு.

இன்னொன்று முக்கியமாக ஏதோ திராவிட இயக்கம்தான் பார்ப்பனர்களை எதிர்க்கிறது என்று எண்ண வேண்டாம் வரலாறு நெடுக எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. அது சரியாக  பெரியாரிடம் அடி வாங்கி "மரணப் படுக்கையில்" கிடக்கிறது என்றாலும் அதன் திமிரும், ஆணவமும் அடங்கிய பாடில்லை.

மறைமலை அடிகள், கா.சு. பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் எல்லாம் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் - அவர்கள் எல்லாம் பார்ப்பன எதிர்ப்பாளர்களாக மாற வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதையும் கொஞ்சம் அறிவைச் செலுத்திச் சிந்திப்பது நல்லது.

ஆழ்வார் பட்டம் விபீஷணர்களோடு முடிந்தால் நல்லது!

 

--------------------

 

கோயிலைச் சாத்தி தீட்டுக் கழித்தது எந்த உறவில்?

2002 செப்டம்பரில் கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் மணிமுத்தீசுவரர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ததற்காக, கோயில் தீட்டுப் பட்டு விட்டது என்று மூன்று நாள்கள் கோயிலைச் சாத்தி தீட்டுக் கழித்ததும், தமிழில் குடமுழுக்குச் செய்ததை சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கண்டித்ததும் எதைக் காட்டுகிறது? சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீஷப் பாஷை என்று கூறும் பார்ப்பனர்களுக்காக சமஸ் வாதிடுவது எந்த உறவில்?

தமிழில் அர்ச்சனை செய்தால் பொருள் இருக்கும் - அருள் இருக்காது என்று 'சோ' ராமசாமி எழுதிடவில்லையா? ('துக்ளக்' 18.11.1998).

அரசியல் விமர்சகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஆன்மிகத்தில் அவாளின் உணர்வு எப்படி இருக்கிறது? சோவுக்கு உள்ள உணர்வு சமஸ்களுக்கு ஏனில்லை?

 

----------------------

வரலாற்றைத் தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது

முசுலீம்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஆளுமை இடத்துக்கு நகர்த்திட திராவிடக் கட்சிகள் முயல வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார் தோழர் சமஸ்.

சிறுபான்மையினர் பாதுகாப்புக்கும், தாழ்த்தப்பட்ட வர்களின் இழிவை ஒழிப்பதற்கும், அவர்களின் சமூக நீதிக்கான இலக்கு  எட்டப்படவும் தொடர்ந்து பாடுபட்டு வருவதுதான் திராவிட இயக்கம். அவர்கள் எந்த உயரத் திற்கு செல்வதற்கும் எந்த வித மன ஒதுக்கீடும் இல்லாமல் சிந்திக்கவும், செயல்படவும்  நாங்கள் தயார்தான். இதனை சமஸ் தூக்கிப்பிடிக்க நினைக்கும் பிஜேபியிடம் அல்லவா சொல்லவேண்டும்? மித்ரபேதம் செய்யும் வேலையில் பார்ப்பனத்தனமாக சமஸ்கள் ஈடுபட வேண்டாம்.

கலைஞர் பிறந்த சமூகத்தை நினைத்தோ, அண்ணாவை அதேபோல  நினைத்தோ முதலமைச்சராக திராவிட இயக்கம் கொண்டு வரவில்லை. இயக்கப்பணி, பொதுப் பணி, உழைப்பு அடிப்படையில் சிறுபான்மையினரோ, தாழ்த்தப்பட்டவர்களோ ஆட்சியில் ஆளுமை இடத்துக்கு வர திராவிட இயக்கத்தில் தாராளமாகவே வாய்ப்பும், இடமும் உண்டு என்பதை சமஸ்கள் அறியட் டும். சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் முதல் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதியாக செம்மாந்து அமரச் செய்வதற்கு குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். செயலாக்கம் தந்தவர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அல்லவா? வரலாற்றைத் தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது.

தமிழ் இந்துக்கு மறுப்பு

சமஸ்கிருதமயமான சமஸ்

- கவிஞர் கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

"அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?" எனும் தலைப்பில் தோழர் சமஸ் 'தி இந்து' (தமிழ்) ஏட்டில் நேற்று (5.4.2017) கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.

திராவிடர் இயக்கத்துக்குக் கருத்துதானம் செய்ய முன் வந்துள்ளார்.

எந்தத் தளத்தில் நின்று கொண்டு என்பதுதான் முக்கியம். பார்ப்பனர்களுக்கு வக்காலத்துப் போட்டு என்னென்ன வார்த்தைகளை எல்லாமோ போட்டு ஓர் அவியலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

"ஆரியர் - திராவிடர் கருத்தைத் தாண்டி, சமகால இந்திய அரசியலில் திராவிட" எனும் சொல்லுக்கான பொருத்தப்பாடு என்ன? ஒரு காலத்தில் தோராயமாக தென்னிந்தியாவைக் குறிப்பிட்ட சொல் அது. இந்தப் பிராந்தியத்தைத் தனி நாடாக அங்கீகரித்து, ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு அர்த்தம் இருந்தது. இன்றைக்கு"  - என்று கட்டுரை தொடங்கப்பட்டுள்ளது.

திராவிடர் என்ற ஓர் இனம் இல்லை, கிடையவே கிடையாது என்பது தோழர் சமஸின் ஊர்ஜிதமா? திராவிடர் என்ற இனச் சொல் திராவிடர் இயக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சொல்லா?

ஒரு காலத்தில் தோராயமாக தென்னிந்தியாவைக் குறிப்பிடும் சொல்லாம். அப்படியானால் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்பதெல்லாம் திராவிடர் நாகரிகம் என்பதும், நாகர்கள் திராவிடர்களே என்றும் அண்ணல் அம்பேத்கர் சொன்னதெல்லாம் கற்பனைக் கதை என்கிறாரா?

மனுதர்ம சாஸ்திரத்திலும், வேதத்திலும்கூட திராவிட என்ற சொற்கள் இடம் பெற்றதும் அந்தப் பொருளில் தானா? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட மொழிகள் திராவிட மொழிக் குடும்பம் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பரிதிமாற்கலைஞர் போன்ற ஆய்வாளர்கள் சொன்னதற்கெல்லாம் அடிப் படை கிடையாது என்பதுதான் அறிஞர் சமஸின் இந்த முடிவா?

இந்தியத் தேசிய பாடலில் இடம் பெற்ற 'திராவிட' என்பதை எல்லாம்கூட நீக்கிட வேண்டும் என்கிற அளவுக்குக் கூட அவரின் பேனா நாக்கு நீளும் போலும்.

திராவிட மொழி ஆய்வு அறிஞர் மறைந்த வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் திராவிடக் கலைக் களஞ்சியத்தைத் தயாரித்து ஒரு நகலை அன்றைய மத்திய மனிதவளத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியிடம் (பிஜேபி) கொடுத்தபோது அந்த திராவிட என்பதை எடுத்து விடலாமே என்று சொன்ன பொழுது - சட்டென்று "தேசிய கீதத்திலிருந்து திராவிடத்தை எடுத்து விட்டால், நானும் நீக்கிவிடத் தயார்தான்" என்று முகத்துக்கு எதிரே சொல்லவில்லையா? முரளி மனோகர் ஜோஷியின் இடத்தைக் கொஞ்சம் கடன் வாங்கி சமஸ் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றுதான் தெரியவில்லை.

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்றும், அதில் கூறப்பட்டுள்ள ராட்ச தர்கள், அரக்கர்கள், குரங்குகள், கரடிகள் என்பவை எல்லாம் திராவிடர்களே என்று தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவுமா கண்டுபிடித்துக் கூறினார்கள்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பி வந்த விவேகானந்தர், ஜவகர்லால் நேரு, பி.டி. சீனிவாசய்யங்கார் போன்றவர்கள் எழுதியுள்ளதற்கு எந்த உள் நோக்கத்தை சமஸ் வைத்திருக்கிறாரோ நாம் அறியோம்.

"இந்தி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நாம், திராவிட அரசியல் கருத்தாக்கம் என்பது மறைமுகமாகத் தமிழ் மேலாதிக்கத்தை முன் வைக்கும் அரசியல் என்பதை ஏன் உணர மறுக்கிறோம்?" என்று கேட்கிறார்.

இதைவிட ஒரு சிறுபிள்ளைத்தனமான கருத்து ஒன்று இருக்கவே முடியாது. தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்குத் தான் முதலிடம் என்பது ஆதிக்க மனப்பான்மையா? எங்களை எந்த மொழியும் ஆதிக்கம் செய்யக் கூடாது என்பது ஆதிக்க மனப்பான்மையா? ஆமாம் சமசுக்கு என்னாச்சு? அய்யோ பாவம்!

முதலாளிகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் உரிமை கோரினால் - அது தொழிலாளிகளின் ஆதிக்க மனப்பான்மை என்று கூறுவாரா? ஜாதி ஆதிக்க வாதிகளை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராடினால் அதற்குப் பெயர் தாழ்த்தப்பட்டோர் மேலாதிக்கக் கோட்பாடா?

நம்முடைய அண்டை மாநிலங்களில் திராவிட அரசியல் முழக்கம் இல்லை - அப்படி இருக்கும் பொழுது எதற்குத் திராவிடம் என்று கேள்வி எழுப்புகிறார்.

திராவிடர் என்பது ஓர் இனத்தின் பெயர்; யார் எங்கு குடியிருந்தாலும் இந்தப் பெயர் எப்படி மாற்றம் அடையும்?

ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் பிரிந்து சென்றார்கள் என்பதற்காக அந்தக் குடும்பப் பெயர் இல்லை என்று ஆகி விடுமா? அப்பன் பெயர் தான் மாறுமா?

அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராகச் சென்றபோது அவர் ஆற்றிய அந்த முதல் உரையிலேயே 'நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். அப்படி நான் சொல்லுவதால் வங்காளிக்கோ மற்றவர்களுக்கோ எதிரானவன் அல்ல!' என்று சொன்னாரே - அண்ணாவை வேறு இடங்களில் எடுத்துக் காட்டும் கட்டுரையாளர் இந்த இடத்தை வசதியாக மறந்தது ஏன்? அல்லது மறைப்பது ஏன்?

ஒரு தாயிடமிருந்து கிளைத்த மொழியினர் என்றாலும் தென்னிந்தியாவில் இன்று தமிழர்கள் தலைமைக்கு யார் காத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார்.

இதன் மூலம் திராவிடர் என்பது தாய்க்குரிய இடம் என்பதை அவரை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டாரே!

"அந்த அளவிலேதான் நாமும் சொல்லுகிறோம் - மொழி வாரி மாநிலம் என்று அமைந்து விட்ட பிறகு அந்தந்த மாநிலம் அதற்குரிய தலைமைத்துவத்தோடு செயல்படும் என்பது பால பாடம்.

மேற்கு வங்கத்தினர் தங்களை வங்காளிகள் என்று சொல்லிக் கொண்டால், பங்களாதேசையும் ஆதிக்கம் செய்ய விரும்புகிறார்கள் என்று பொருள் படுமா?

உலக வரலாற்றில் முக்கியமான இனங்களில் திராவிடர் அடங்குவர். மானிட இன வர்ணனை (யிணீஸீஷீரீக்ஷீணீஜீலீஹ்) வல்லாரும் ஆதி மக்களினம் தோன்றிய இடங்களில் தென்னிந்தியாவும் ஒன்றெனக் கருதினர். தமிழ் மொழியை உருவாக்கி திராவிடர் வழிவழியே இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வாழ்ந்த ஆதி மக்களே! ('கலைக்களஞ்சியம்' தொகுதி 5 பக்.703-704).

என் இனப் பெயரை நான் சொல்லிக் கொண்டால் அது எப்படி எனக்குச் சுமையாகும்? என்னை ஈன்றவரை நான் தாயென்று சொல்லக் கூடாதா? தோழர் சமசுக்குத்தான் வெளிச்சம்.

திராவிடர் என்பது வெளித் தோற்றத்திற்கு இனப் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறதாம். அப்படியானால் எந்த இனமும், தன் இனப் பெயரைச் சொல்லக் கூடாது என்பதுதான் அவரின் கருத்தா?

ஆரிய ஜனதா கட்சி அல்லது இந்து ஜனதா கட்சி அல்லது என்றல்ல; பாரதிய ஜனதா கட்சி என்றே தன் அரசியல் முகத்துக்குப் பெயரிட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். என்கிறார்.

கோணிப் பைக்குள்ளிலிருந்து பூனைக்குடி வெளியில் வந்தது என்று தந்தை பெரியார் கூறுவார். சமஸ் விடயத்தில் அது நடந்தே விட்டது.

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கை மாநிலங் களே கூடாது என்பதுதான்;  ஒரே நாடு - அது பாரத நாடு; ஒரே கலாச்சாரம் - அது இந்துக் கலாச்சாரம்; ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கரின் சீடராக எப்பொழுது சமஸ் மாறினார் என்று தெரியவில்லை. விரைவில் அவர் உடை காவிமயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

திராவிடர் என்று சொன்னால் இனத் துவேஷியாகப் பார்க்கப்படுமாம்.  பிராமணர்களை, திராவிட இயக்கம் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டுமாம்.

திராவிடர் என்றால் இனத் துவேஷம் - பிராமணர் என்றால் மனிதநேயம் என்ற புதிய அகராதியைப் பூதேவர்களுக்காக உருவாக்கியிருக்கிறார் போலும்.

உன் சூத்திரப்பட்டம் ஒழிய பார்ப்பானை பிராமணன் என்று சொல்லாதே  என்று சொன்னவர் தந்தை பெரியார்.

உண்மையில் பிராமணன் என்று சொல்லுவதுதான் "துவேஷம்!"

அவன் பிராமணன் என்றால் நீ யார்? சூத்திரன் தானே? சூத்திரன் என்றால் இந்து வருண அமைப்பு - மனுதர்ம சாஸ்திரப்படி வேசி மகன்தானே, சந்தேகமே வேண்டாம்! சமஸ்கள் ஒரே ஒரு முறை மனு தர்மத்தை ஒரு புரட்டுப் புரட்டட்டும்! (அத்தியாயம் 8 சுலோகம் 415).

இது போதாது, கீதைதான் வேண்டும் என்றால், பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் (கீதை  அத்தியாயம் 9 சுலோகம் 32)  எனும் அத்தியாயத்தை பார்க்கட்டும். இந்த இரண்டும் பெருமைக்குரியவை என்று சமஸ்கள் வரித்துக் கொண்டால் நமக்கென்ன நோக்காடு!

பிராமண சமூகத்தை தமிழ் அரசியல் களத்தை விட்டே திராவிட இயக்கம் வெளியில் தள்ளி விட்டது. தமிழகத்தில் நடப்பு சட்டசபையில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே பிராமணர், இதுவும் அநீதியானதே! என்று மிகவும் துக்கப்படுகிறார்.

ஏனிந்த அவல நிலை என்பது தோழர் சமஸ் அறிவாரா? அவர்களின் ஆதிக்க நுகத்தடியில் இந்தச் சமுதாயம் ஆண்டாண்டுக் காலமாக அழுந்திக் கிடந்தது. சற்றும் ஈவு இரக்கம் இல்லாமல் மதத்தில் பெயரால் பிறப்பின் பெயரால், தன் காலடிக்குள் புதைத்து வைத்திருந்தது. திராவிட இயக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் வீறு கொண்டு எழுந்தார்கள் என்பதற்கான அடையாளமே இது. அதே நேரத்தில் திராவிட இயக்கத்தின் போர்வையில் பார்ப்பன அம்மையார் 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததை சமஸ் ஒப்புக் கொண்டு எழுதிய பிறகு இந்த 'அய்யோ பாவம்' எங்கிருந்து குதிக்கிறதாம்?

பார்ப்பனர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 சதவீதம் பார்ப்பனர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பெரியார் சொன்னதை எடுத்துக் காட்டியுள்ளார்.

அறிவு நாணயத்தோடு தோழர் சமஸ் கூறட்டும்; பார்ப்பனர் கல்வி, வேலை வாய்ப்புகளில் மூன்று சதவீதத்துக்கு மேல் இல்லை என்று கூற முன் வருவாரா?

பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி 20 சதவீதம் கேட்டார்களே, அவர்களை மூன்று சதவீதம் கேட்கச் செய்யட்டும் - பிரச்சினைக்கு அப்பொழுதே தீர்வு எட்டப்பட்டு விடுமே!

மூன்று சதவீதத்தினர் மூக்கு முட்ட அனுபவிப்பது தானே பிரச்சினைக்கே காரணம். இந்திய அளவில் அவர்களின் ஆதிக்க நிலை என்ன?

கோயில்களில் 100%, இந்திய ஊடகங்களில் 90%, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் அலுவலக செயலாளர்கள் 80%, அய்.ஏ.எஸ். 70%, அய்.பி.எஸ்.61% உச்சநீதிமன்ற நீதிபதிகள் 56%, மாநிலத் தலைமை செயலாளர் 54%, ஆளுநர்கள் 54%, மாநிலங்களவை உறுப்பினர்கள் 41%, மக்களவை உறுப்பினர்கள் 48%, மத்திய அமைச்சர் 36% (ஆதாரம்: லோக் சந்தா  - மராட்டிய ஏடு - 8.8.2016).

இதுதான் பார்ப்பனர்கள் பரிதாபமாக வீழ்ச்சி அடைந்துவிட்டனர் என்பதற்கு அடையாளமா?

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பொது மேலாளர் பதவிகள் 420 இல் தாழ்த்தப்பட்டவர் 3.9%, பிற்படுத்தப்பட்டோர் 1.19%, மலைவாழ் மக்கள் 1.42% என்ற நிலை எதை காட்டுகிறது?

மத்திய அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்டோர் 7 சதவீதத்தை இன்னும் தாண்டவில்லை. சுத்திகரிப்புப் பணிகளில்தான் அதிக இடம் பெற்றுள்ளனர் ('டைம்ஸ் ஆஃப் இந்தியா' 1.9.2010) என்பதிலிருந்து என்ன தெரிகிறது?

தனியார் நிறுவனங்களில் 9052 அதில் இயக்குநர் பதவிகளில் 8387 (92.6%) பேர் உயர் ஜாதியினர் என்பதை அறிந்து வைத்திருந்தால் கட்டுரையாளர் அக்ரகாரத்துக்காக மூக்கு சிந்துவாரா? அடிப்படை விவரங்கள் ஏதும் அறியாமல்,  ஆதாரங்களும் இல்லாமல் சில்லுக்கோடு விளையாட்டுக் கட்டுரைகளை எழுத வேண்டாம் தோழர் சமஸ்.

(நாளை பார்ப்போம்)

நான்தான் சேலம் முத்துக்கிருஷ்ணன். ஆதி திராவிடர்ப் பெருங்குடியில் பிறந்தவன்.

இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் அதுவும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிக்க ஆசைப்பட்டேன்.

நான் ஆசைப்பட்டது தப்பா? ‘மாடு தின்னும் புலையா - உனக்கு மார்கழி திருநாளா?’ என்று அன்று அய்யமார் கேட்டார்கள் நந்தனைப் பார்த்து.

இந்த நந்தனை அந்தப் பச்சை வார்த்தையால் அடிக்கவில்லைதான்.

ஆனாலும், நான் எடுத்து வைக்க ஆசைப்பட்ட அடியை அடி தெரியாமல் அடித்து நொறுக்கி விட்டார்களே!

என்ன சொல்லுகிறார்கள் அந்த அக்ரகாரவாசிகள்?

‘பெரியார் பாடுபட்டு, அம்பேத்கர் முயற்சித்து இட ஒதுக்கீடு உங்களுக்குக் கிடைத்துவிட்டால்...

நாங்கள் சும்மா இருப்போமா? எங்கள் கை பூப்பறித்துக் கொண்டா கிடக்கும்?

நீங்கள் எப்படித் தேர்வு எழுதுவீர்கள் பார்ப்போம்? அப்படியே தேர்வு எழுதினாலும் மார்க் போடுவது  அக்னி குடிகொண்டிருக்கும் எங்கள் கைதானே - சுட்டு எரித்துவிட மாட்டோமா?

பட்டம் பெற அய்ந்தாண்டுகள் தேவைதான் - அவ்வளவு சுலபமாக உங்களைக் கரை ஏறிட விடுவோமா?

அய்ந்து வருடம் உங்களைப் படிக்க விட்டால்தானே! - அன்றாடம் அணுஅணுவாக நாங்கள் கொடுக்கும் சித்ரவதையையும் தாண்டித் தாக்குப் பிடிக்க முடியுமா உங்களால்?

நாங்கள் உங்களைத் தீண்டமாட்டோம்; நீங்களே ஒரு தூக்குக் கயிற்றைத் தீண்டுவதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா?

எத்தனை சாம்ராஜ்ஜியங்களை கவிழ்த்தவர்கள் நாங்கள். சோழவேந்தனின் வாரிசு ஆதித்த கரிகால னையே தீர்த்துக் கட்டிய தீட்சதர்க் கூட்டமாயிற்றே நாங்கள்.

சூத்திரனையும், பஞ்சமனையும் படிக்கவிட்டு, நாங்கள் சலாம் போட்டுக் கொண்டு இருப்போம் என்று எண்ணாதீர்கள்!

இஸ்லாமியர்கள்மீது படையெடுப்பை நிகழ்த்தி நாட்டை உருவாக்கினான் சூத்திர சிவாஜி - அவனை ஆளவிட்டோமா?

என்ன இருந்தாலும் அவன் சூத்திரன்தானே!

ஒருவனை அரியாசனத்தில் உட்கார வைக்கும் சூத்திரக் கயிறு எங்கள் கையில்தானே இருக்கிறது.

அவனை என்ன செய்தோம் என்ற வரலாறு தெரியுமா உங்களவாளுக்கு?

அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் ரோகித் வெமுலாவுக்கு என்ன நடந்தது? அவனும் பஞ்சமன் தானே!

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் சரவணனுக்கு என்ன நடந்தது?

தெரிந்துகொண்டுமா டிகிரி வாங்க டில்லிப் பட்டணம் வந்தாய்?

அவனை சாகடித்து அந்த ஒரு இடத்தைப் பிடித்தது எங்களாத்துப் பெண்ணுதானே!

கான்பூர் அய்.அய்.டி.யில் - 20

கோரக்பூரில் - 13

மெட்ராசில் - 13

பாம்பே - 11

டில்லி - 6

ரூர்கி - 5

கவுகாத்தி (அகமதாபாத்) - 4

அய்தராபாத் - 4

இவையெல்லாம் அய்.அய்.டி.,களில் தற்கொலைக் குத் தள்ளப்பட்ட கீழ்ஜாதிக்காரன் பட்டியல்.

டில்லி எய்ம்ஸில் ஒருவர்.

இவ்வளவு நடந்த பிறகும் ஏன் உங்களவாளுக்கு மேல்படிப்பு?

என்ன நாலு நாளைக்குக் கத்துவேள் - போராட்டம், கீராட்டம் நடத்துவேள் - உங்க கட்சிக்காரன் வந்து கொடி பிடிப்பான் - ஏதோ இரண்டு பத்திரிகையில் ரெண்டு நாளைக்கு எழுதுவான்?

அதுக்குமேல் என்ன செய்ய முடியும்?

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்கள் எல்லாம் எங்களவாள்... அதுவும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்ற ‘பொறுக்கி’ எடுக்கப்பட்டவாள்!

ஒவ்வொரு துறையிலும் ‘ஹெட்’ எங்களவாள். ரிஜிஸ்ட்ரார் எங்களவாள்!

மத்தியில் ஆட்சி அதிகாரம் எங்கள் கையில்? நீதிமன்றம் மட்டும் என்ன வாழுது?

ஏதோ தமிழ்நாட்டுல உங்கப் பருப்பு வேகுது; நாயக்கர் ஆட்கள் இருக்காள் - ஆட்சி அதிகாரமுன்னு கொழிக்க றேள்.

மற்ற ஸ்டேட்டு எல்லாம் எங்கள் ரியல் எஸ்டேட்டுதானே!

தமிழ், கிமிழ்னு சத்தம் போட்டுக் கிடக்கவேண்டியதுதான். வெள்ளைக் காரன் காலத்திலேயிருந்து இங்கிலீ ஷைப் படிக்க ஆரம்பிச்சோம். என்ன தான் குட்டிக்கரணம் நீங்கள் போட்டா லும் எங்களைப் போல் நுனி நாக்கு இங்கிலீஷ் உங்களால் பேச முடியுமா?

இந்த இங்கிலீசு எங்களிடம் இருக்கும்வரை உங்களால் எங்களை ஆட்ட முடியாது - அசைக்க முடியாது!

சோஷலிசம், தேசிய மயமுன்னு கத்தினேள் - இப்ப என்னாச்சு? எல்லாம் பிரைவேட்டைசேஷன். அங்கெல்லாம் டாப்பில் எங்களவாள்தானே!

ரிசர்வேஷன் எல்லாம் கவர்ன்மென் டுக்குள்ளேதான்.

இங்கே நாங்க வைச்சதுதான் சட்டம். கருவிலே இருக்கிற அக்ரகார சிசுவுக் குக்கூட நாங்கள் எங்களுக்குள்ளே ரிசர்வ் செய்து வைத்துவிட்டோமே!

உங்களால் என்ன செய்ய முடியும்?

இதுதான் பார்ப்பனர்களின் இன் றைய நிலைப்பாடு.

வறட்டுத் தத்துவம் பேசிக்கிட்டு, பார்ப்பன ஆதிக்கத்தை வளரவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் இங்குள்ள இடதுசாரித்தனத்தின் போக்கா?

ஒரு பாசிசம் - ஒரு மத வாதம் - மதம் பிடித்துத் திரிகிறதே அதனை அடக்குவதற்கு எந்த ‘ஆயுதம்’ கிடைத் தாலும் பயன்படுத்திக் கொள்வோம் என்ற யுக்தி கிடையாது.

விளைவு....

பாசிசத்திற்குத் தண்ணீர்ப் பாய்ச்சல்!

மதவாதத்திற்கு வேலி கட்டல்!

பார்ப்பனீயத்துக்கு பாதை அமைத் தல்!

ராமராஜ்ஜியத்துக்கு முடிசூட்டல்!

இன்னும் எத்தனை எத்தனை  முத் துக்கிருஷ்ணன்களும், ரோகித் வெமு லாக்களும் தற்கொலை செய்துகொண் டால் யதார்த்த நிலைக்கு இவர்கள் வருவார்கள்?

காங்கிரசும், யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இறங்கி வரவேண்டாமா?

தேசியம் மட்டும் பேசினால் வெறும் தேங்காய் மூடிதான். மாநிலக் கட்சிகளின் தோள்களில் கைபோட்டும் பேசுங்கள் - கவனம்! கவனம்!!

- மின்சாரம்

Banner
Banner