மின்சாரம்

- மின்சாரம் -

ஸ்டாலினின் “பிற்போக்குத்தனம்” என்ற தலைப் பில் நவம்பர் முதல் தேதி ‘துக்ளக்கில்’ ஓர் கட்டுரை வெளியாகியுள்ளது.

திராவிடம் என்பதெல்லாம்  எப்பொழுதோ காலாவதியாகி விட்டதாம்.

நவோதயா பள்ளி மாணவர்களுக்கான செலவை மத்திய அரசு ஏற்கிறது. இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் படித்தால் அவர்களும், அவர்களுடைய குடும்பமும் மத்திய அரசுக்கு விசுவாசமாகி விடும். அவர்களுக்கு தேசிய சிந்தனை வந்து விடும். இந்த நிலை தமிழ், தமிழன் என்றெல்லாம் தமிழர்களை ஏமாற்றி வரும் திமுகவுக்கு ஆபத்தாயிற்றே! அதனால்தான் ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் பாஜகவை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கிறார்கள். அண்ணா துரையின்  திராவிடன், திராவிட நாடு என்ற கனவு எப்பொழுதோ சிதைந்து விட்டது. இப்போது திராவிடம், திராவிடனை எல்லாம் விட்டு விட்டு தமிழ், தமிழன் என்று அவர்கள் சுருக்கி கொண்டாயிற்று. இதற்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற திருவாளர் ஸ்டாலின் நடுநடுங்குகிறார். கோவில்களில் ‘தமிழில் அர்ச்சனை செய்யப்படும்’ என்று போர்டு போட்டிருந்தாலும் தங்கள் இன அபிமானம் பெயர் அபிமானத்தை எல்லாம் மறந்து போன தமிழர்கள். சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிறார்கள். கோவில்களில் சமஸ்கிருத அர்ச்சனையை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் தமிழ் நாட்டுப் பக்தர்களிடம் போய் ‘சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாதே’ என்று ஸ்டாலின் சொல்லத் தயாரா? என்று குருமூர்த்தி அய்யர்வாளை ஆசிரியராகக் கொண்ட ‘துக்ளக்‘ விஷம் கக்குகிறது. சவால் விடுகிறது.

திராவிடர், தமிழர், தமிழ்  என்று சொன்னால் இந்தப் பார்ப்பனர்களுக்கு அஸ்தியில் ஜூரம் கண்டு விடுகிறதே!

(பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்கிற தமிழ்த் தேசியவாதிகள் இந்த இடத்தில் கொஞ்சம் அறிவைச் செலுத்துவார்களாக)

இந்தக் கட்டுரையின் மூலம் பார்ப்பனர் அல்லாதாருக்கு தமிழர்களுக்கு உடனடியாக ஒரு வேலையைத் தந்திருக்கிறது ‘துக்ளக்’

கோயில்களில் சமஸ்கிருதத்தில் தான்,  அர்ச் சனை நடந்து கொண்டு வருகிறது. அங்கு போய் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுவாரா ஸ்டாலின் என்ற சவாலை விட்டிருக்கிறார்கள் பார்ப் பனர்கள் ‘துக்ளக்’ ஏட்டின்மூலம்.

நல்ல சவால்தான்; இந்தக் காலத்துக்கேற்ற சவால் தான்! திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டிப்பாக இந்தச் சவாலை ஏற்பார் என்பதில் அய்யமில்லை.

தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ் நாட்டில் வேலையில்லை என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் - மானமிகு சுயமரியாதைக்காரான கலைஞர் அவர்கள்.

அவர்வழி வந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயங்கவா போகிறார்?
பக்தர்களாகிவிட்ட காரணத்தாலேயே தமிழர் களுக்கு மொழி மானம், தன்மானம் இல்லாமலா போகும்?

தமிழின பக்தர்கள் இனி கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்க என்று வலியுறுத்துதல் அவசியம். தமிழ் தெய்வத்தமிழ் என்று சொல்லப்படுவதில்லையா? இனி கோயில்களுக்குள்ளும் உரிமை முழக்கம் கேட்கப் போகிறது- கேட்கவும் வேண்டும். அதற் கான அடியை ‘துக்ளக்’ எடுத்துக் கொடுத்து விட்டதே!

மின்சாரம்

டில்லி தசரா விழாவில் இராமன் லட்சுமணன் வேடமிட்டவர்களை பூசை செய்து வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அப்படியே!

வேதங்களானாலும் சரி, அவை வேதப் புரத்தாருக்கு உரியது - இதிகாசங்களானாலும் சரி - அவை பார்ப்பனர் அல்லாதாரைக் குரங்குகள் என்றும், ராட்சதர்கள் என்றும், கரடிகள் என்றும் தூற்றுகின்றன. புராணங்கள் என்பவையும், பூதேவர்களை உயர்த்திப் பிடிக்கும் புனைச் சுருட்டுகள்தான்.

இவற்றை நாம் சொல்லவில்லை - வரலாற்றுப் பேராசிரியர்களே உரைக் கின்றனர்.

இந்து மதச் சரக்கை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்த விவேகானந் தர்கூட என்ன சொல்லுகிறார்?

‘‘தென்னிந்தியாவில் இருந்த மக்களே தான் இராமாயணத்தில் குரங்குகள்      என் றும்,  அரக்கர்கள்  என்றும்  அழைக்கப்பட்டி ருக்கிறார்கள்.’’ (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், “இராமா யணம்’’ என்னும் தலைப்பில், 587-589 ஆம் பக்கம்).

‘‘திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திரா விடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்.’’ (ஜோஷிட சந்தர்டட் எழுதிய ‘‘இந்தியா அன்றும் இன்றும்‘’ நூல், பக்கம் 15).

‘‘ஆரியக் கடவுளாகிய இந்திரனையும், இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர் கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.’’

‘‘இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே வந்தது.’’ (ஏ.சி.தாஸ் எம்.ஏ.,பி.எல்., எழுதிய ‘ரிக் வேத காலத்து இந்தியா’ எனும் நூல், பக்கம் 151).

‘‘மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமா யணக் கதையானது உவமையுரையோ (கிறீறீமீரீஷீக்ஷீஹ்), சரித்திரமோ அல்ல. கட்டுக் கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதைதான்!’’ (கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம், பக்கம் 34).

இன்னும் ஏராளம் உண்டு. சாஸ்திரிகளும், அய்யர்களும், அய்யங்கார்களும் கூட எப்படி எல்லாம் எடுத்துரைத்துள்ளனர்.

இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று இராவணனைத் தீயிட்டுக் கொளுத்துவதும், அதில் மதச்சார்பற்ற அரசின் குடியரசுத் தலைவரும், பிரதமரும் குடும்பத்தாருடன் பங்கேற்று குதூகலிப்பதும் எப்படி?

வடநாட்டார்கள் தென்னாட்டவர்களை இழிவுபடுத்தும் ஈன செயல் அல்லவா! நடப்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று தந்தை பெரியார் சொன்னது துல்லிய மானது - நூற்றுக்கு நூறு சரியானது என்பது புரியவில்லையா?

இந்த அடிப்படையில்தானே அன்னை மணியம்மையார் அவர்கள் 1974 டிசம்பர் 25 ஆம் தேதி ‘இராவண லீலா’ நடத்தி இராமன், இலக்குமணன், சீதை உருவங் களைத் தீமூட்டிச் சாம்பலாக்கினார்.

வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், ‘‘இராவண லீலா’’ நடத்தப்பட்டது சரியே - குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட வில்லையா?

டில்லியில் ராம் லீலா நடத்தி இராவணன் உருவத்தைக் கொளுத்துவதுபோல, மீண்டும் தமிழ்நாட்டில் இராவண லீலா நடத்தப்பட வேண்டுமா?

இன்னும் கூடுதல் தகவல் இதுபற்றி உண்டே! இராவணனை எதிர்க்கக் கூடாது என்று உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட வர்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியதுண்டே! (தனியே பெட்டிச் செய்தி காண்க).

இராவணனைக் குலதெய்வமாகக் கொண்டாடுபவர்கள் வடமாநிலங்களில் உண்டே!

ராஜஸ்தான் மாநிலத்தில் தவே கொடே என்பவர்கள் சிறீமாலி என்னும் பார்ப்பனர் களில் ஒரு உள் ஜாதியினர் தங்களை இராவணனின் பரம்பரை என்று கூறிக் கொள்கின்றனர். இந்தப் பிரிவினர் மத்திய பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர்.

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் சிவன் கோவிலின் ஒரு பகுதியில் இராவணனுக்கு பூஜை செய்து வருகிறார்கள். இதுகுறித்து 2007 ஆம் ஆண்டிலேயே ‘விடுதலை’ முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட் டுள்ளதே! (‘விடுதலை’, 30.10.2007).

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில், சிவன் கோவிலின் ஒரு பகுதியில் ராவணனுக்குக் கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் பூசை செய்து வந்தார்கள். கடந்த ஆண்டு அந்தக் கோவிலைப் புதுப்பிப்பது என முடிவு செய்து, ஆறு அடி உயரம் உள்ள ராவண னின் சிலையை ஒரு மாதத்திற்கு முன்பு நிறுவினர். அதற்குப் “பிரான்பிரதிஷ்ட” பூசையை அக்டோபர் 25இல் நடத்த இருந்தார்கள்; சரத் பூர்ணிமாவின் பொழுது அவர்கள் அந்தப் பூசை செய்வது வழக்கம். ஆனால், அதற்கு முந்தைய நாள் ஜோத்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர், ராவணனுக் குப் பூசை செய்யக் கூடாது எனத் தடை விதித்துவிட்டார்.

தடையை நிறைவேற்ற வந்த அலு வலர்கள், ராவணனின் சிலையை நிறுவ அனுமதி பெறவில்லை என்றும், ஆகை யால் பூசை செய்ய அனுமதி இல்லை என்றும் சொன்னார்கள். அதைப் பற்றிக் கோவிலின் தலைமைப் பூசாரி அஜய்தவே கூறும்பொழுது, “இதற்கு எல்லாம் அனுமதி தேவை என்று நாங்கள் கேள்விப்பட்டது இல்லை. மக்களில் ஒவ்வொருவரும் அவர்களுடைய கடவுள்களை வழி படலாம்; ஆனால், ராவணனை வழிபடக் கூடாது என்கிறார்கள் இது என்ன நியாயம்?” என்றார்.

கோவிலின் ஆலோசகர் பண்டிட் கமலேஷ் தவே கூறுகையில்,

“நாங்கள் ராவணனின் இலங்கையில் இருந்து எப்பொழுது வந்தோம் எனத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் எக் காலத்திலும் அந்தச் சிறந்த மேதைக்கு மரியாதை செலுத்துவோம். தசராவை நாங்கள் கொண்டாடுவது இல்லை. மற்றவர்கள் “ராவணன் தகனத்தில்” ஈடுபடும் பொழுது, அதை எங்கள் வீட்டில் நிகழ்ந்த இழவு எனக் கருதுவோம்’’என்று தெரிவித்தார். ராவணன் எழுதிய “சிவதாண்டவத்தைக்’’ கோடிக்கணக் கானவர்கள் ஓதுகிறார்கள்; ஆனால், கற்றறிந்த ராவணனின் பெருமையை அவர்கள் உணர வில்லை; இந்நிலை மாற வேண்டும் எனக் கமலேஷ் கூறினார்.

ஜோத்பூரில் ராவணனுக்குப் பூசை நடப்பதை ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்புகள் விரும்பவில்லை. அதைப்பற்றி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூறி, பூசையை நிறுத்தக் கோரினார்கள்.

ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் என்.பி.கங் காராம் தெரிவிக்கையில், சமுதாயத்தில் ஒரு பிரிவினர் ராவணன் வழிபாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், அதைத் தடை செய்திருப்ப தாகக் கூறினார். “சில பிரிவினரின் மத உணர்வை ராவண வழிபாடு புண்படுத்துகிறது. பூசைக்கு நாங்கள் தடை விதிக்கவில்லை; தள்ளி வைத்துள்ளோம்’’ என கங்காராம் சொன்னார்.

தங்களுடைய பரம்பரையான வழிபாட் டிற்கு அரசு தடை விதித்துள்ளது குறித்து தவே கொடே ஜாதியார் குறுமுகிறார்கள்.

மனம் புண்படுவது என்பது என்ன ஒரு வழிப் பாதைதானா?-மின்சாரம்புத்தரின் போதனை சூறாவளியான போது புல்லேந்திகள் சுருண்டனர். யாகங்கள் அழிந்தன; ஹோமங்களும் ஒழிந்தன. தர்ப்பைப் புல் கூட்டம் தரை மட்டமானது.

ஆனால் அவரின் மறைவிற்குப் பிறகு எதிர்த்து ஒழிக்க முடியாத ஆரியம் ஊடுருவி ஒழித்தது.

எந்த வருணாசிரம மதத்தை வாரி சுருட்டி ஓடச் செய்தாரோ - அந்த புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரமாக அணைத்து அழித்து விட்டது ஆரியம்.

அணைப்பதிலும், அழிப்பதிலும் தான் அவர்கள் அசகாய சூரர்களாயிற்றே!

“இந்துவாகப் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்!” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் 5 லட்சம் பேர்களுக்கு மேலாக இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு புத்தம் தழுவிய அண்ணல் அம்பேத்கருக்கே (1956 அக்டோபர் 14, 15இல்) கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடும் அறிவு நாணய மற்ற கூட்டமாயிற்றே!

திராவிட இயக்கத்தை ஒழித்தே தீருவோம் - திராவிட இயக்கத்திற்கு மாற்று நாங்கள்தான் என்று மார்தட்டிய கும்பல் இப்பொழுது எங்கே வந்து வாலைக் குழைத்து நிற்கிறது பார்த்தீர்களா? அண்ணாவின் காலடியின் கீழ் நிற்கும் நிலைமைதான் என்னே! என்னே!

“அறிஞர் அண்ணாதுரை மறுபிறவி எடுத்து வந்தால் திமுகவை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்திடுவார்” என்று திருவாய் மலர்ந்துள்ளார் திருவாளர் முரளிதரராவ்.

இவர் தமிழ்நாட்டு பிஜேபிக்கான பொறுப்பாளர். இவர் பொறுப்பாளராக இருந்து சாதித்தது என்ன என்று எவருக்குமே தெரியுமே!

இப்பொழுது ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்!

“மிஸ்டுகால் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்த்துப் பார்த்தனர். சொந்தக்கால் இல்லாதவர்கள் அல்லவா - அதனால்தான் மிஸ்டுகாலில் தொங்குகிறார்கள்!” என்று வெகு நேர்த்தியாகச் சொன்னார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘மிஸ்டுகால்’ ராங்க் காலாக ஆனது என்றவுடன் பதவியை இழந்தவர்கள் - எங்கே பதவிப் பிச்சை கிடைக்கும் என்று மோப்பம் பிடித்துக் கிடப்பதுகளின் முகவரிகளைத் தேடித் தேடி அலைகிறார்கள் - இந்த இராப்பிச்சைக்காரர்கள். அப்படி கிடைத்த ஒருவருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் நெல்லையில் திருவாளர் முரளிதரராவ், மூளையைக் கழற்றி வைத்து விட்டு மூக்கால் பேசியிருக்கிறார்.

“அண்ணாதுரை மறுபிறவி எடுத்திருந்தால்...” ஆரம்பமே சரியில்லையே! மறுபிறவி முட்டாள் தனத்தை மோதி மிதித்தவர் அண்ணாவாயிற்றே! பா.ஜ.க.வில் அண்ணா இணைந்திருப்பாராம்!

அண்ணாவை அறிந்து சொன்ன வார்த்தைகளா இவை!

அண்ணாவின் ‘ஆரிய மாயை’ நூலை அறியுமா இந்த அற்பப் பதர்க்கூட்டம்!

அண்ணாவின் ஆரிய - திராவிடர் வாதங்களைச் சந்திக்க ஆர்.எஸ்.எஸ். கூட்டம் தயார்தானா?

எத்தனை எத்தனை எடுத்துக்காட்டுகளை, ஆதாரங்களை எடுத்துக்காட்டியவர் அந்த அறிவின் பெருந்தகை!
இதே அண்ணா பேசுகிறார்:

போதை ஏறியவன், கல்தடுக்கியோ, காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான். ஆரியரும் திராவிட இனத்திடையே கருத்திலே போதை மூண்டிடச் செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டிவிட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமைதாங்கியானான். சோர்ந்தான், சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே.

‘அய்யன்மீர் இப்போது நீவிர் வணங்கும் உருவாரங்கள், ‘ஆரியக் கற்பனை’ என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக்கொண்டுள்ள தமிழர்கள், நம்புவதில்லை. நையாண்டி செய்கின்றனர்! எதற்கெடுத்தாலும் ஆரியச்சூது, ஆரியச்சதி, புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள்’ என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர். ‘மழையாம் மழை’ மழை நம்மை என்ன செய்யும்? என்று எருமை கூறுவதில்லை, அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோலர் உளர், நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப்போல! வீணான மனப்பிராந்தியால் சிலர், இதுபோல ஆரியர்-திராவிடர் எனப் பிதற்றுகின்றனர் என்று கூறும் ஏமாளிகளுக்கு எத்தனை ஏடுகளைக் காட்டினாலும் கருத்துத் துலங்குவதில்லை. சுயமரியாதைக்காரர்களுக்குத்தான், ஆரியரிடம் வீணான  துவேஷமிருக்கிறது என்று எளிதில் கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு என்ன குற்றங் கூறமுடியும்?

(நூல்: ‘ஆரியமாயை’, பக்கம் 10, 11 )

எடுத்துக்காட்டுக்கு இது ஒன்று. எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால்  ஏடு தாங்காது. முரளிதரர்களும் துண்டைக் காணோம் - வேட்டியைக் காணோம் என்று காத தூரம் ஓட வேண்டிய நிலைதான் ஏற்படும்.

இந்து ராஷ்டிரம், இராமராஜ்ஜியம் என்று நாமாவளி பாடிக் கொண்டு அலையும் பார்ப்பனர் கூட்டத்துக்கு அண்ணா அவர்கள் போட்ட சூட்டுக்கோல் ஒன்றா - இரண்டா?

இதோ ஒன்றிரண்டு!

நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை “இந்து” என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்? “இந்து மதம்” என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் “இந்து’ என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதிதுலங்கும் விஷயங்களை விட்டு, மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாள வழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழிபிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்தபிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் “இந்து மார்க்கத்தில்”, போய்ச்சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்துப் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!

(நூல்: ‘ஆரியமாயை’, பக்கம் 32 - 33)

முரளிதர ராவ்கள் பிற்காலத்தில் இப்படி உளறுவார்கள் என்று தெரிந்து சொன்னதுபோல் இருக்கிறதல்லவா!
போதும்... போதும்...

இன்னும் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால், நெல்லையிலிருந்து சாமியார் ஆதித்யநாத் வரை புரை ஏறிவிடும்.

இராமயணத்தை ஏன் கொளுத்த வேண்டும் என்று அறிஞர் அண்ணா வைத்த வாதங்களுக்கு எந்த வருணாசிரம   வாத்தியார்களும் ஒரே ஒரு வரிக்கூட பதில் கூற முடியவில்லையே - இதுவரை!

அண்ணாவின் புராண மதங்கள் பற்றி அறிவார்களா? ‘ஏ தாழ்ந்த தமிழகமே!’ என்ற அண்ணாவின் அறைகூவல் நூல் பற்றி கேள்விப்பட்டது தான் உண்டோ?

மாஜி கடவுள்கள்  அறிவார்களா?

“விடுதலைப் போரின்” முழக்கத்தை கேள்வியாவது பட்டதுண்டா?

இந்து கண்ட சாம்ராஜ்ஜியம் நாடகத்தைப் பற்றி செவி வழிதான் கேட்டதுண்டா?

நக்கீரன் என்றும், சௌமியன் என்றும், பரதன் என்றும், பார்ப்பனீயத்தை நார் நாராகக் கிழித்த நாயகனை நாக்கில் நரம்பின்றி அசிங்கப்படுத்துவதா? அதனை ஏற்றுக் கொள்ள தமிழ்நாடு ஒன்றும் சோற்றால் அடித்த பிண்டம் அல்ல, அல்ல!

நான் கண்ட கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் என்று  சொன்னவர் ஆயிற்றே அறிஞர் அண்ணா! அவரா அய்யர், அய்யங்கார் கும்பலின் மனுதர்மப் பாசறையாகிய பா.ஜ.க.வில் கை கோர்ப்பார்?

மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் வி.கே.ஆர்.வீ.ராவ் - தூத்துக்குடி துறைமுகத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதின் மகிழ்வாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு முதல் அமைச்சர் அண்ணாவை அழைத்த போது, ‘அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை; உங்களுக்குத் தேவைப்பட்டால் பக்தர் ஒருவரை துணைக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்று முகத்துக்கு முகம் சொன்ன  அண்ணா எங்கே  - இந்த ஆஷாட பூதிகள் எங்கே?

திராவிட எதிர்ப்புப் பருப்பு இங்கு வேகாது என்று தெரிந்தவுடன் திராவிடத்தின் தெருவாசலில் கையேந்தி நிற்கும் கைபர் கணவாய்களை நினைத்தால் ஒரு வகையில் பரிதாபம்தான்.

அண்ணாவின் பெயரோடு ‘திராவிட’ என்ற இனச் சுட்டுப் பெயரையும் கட்சியில் தாங்கி வைத்திருக்கும் அண்ணா திமுகவின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர்கள். அண்ணாவின் அடிப்படை கொள்கைக்கு விரோதமாகவும், திராவிட சித்தாந்தத்துக்கு எதிராகவும் உள்ள ஒரு பாசிச கட்சியுடன் கைகோர்த்துப் பல்லிளித்து நிற்கிறார்கள் என்றால் இதைவிட பச்சைத் துரோகமும், விலை போகும் விபீடணத் தனமும் வேறு உண்டா?

அண்ணாவின் கொள்கைக்காக அக்கட்சியில் இன்னும் நீடிப்பதாகக் கருதும் ஒரே ஒரு தோழர் கூட உணர்ச்சியில் எழுந்து எதிர்ப்புக் குரல் கொடுக்காதது வெட்கக்கேடே!

அண்ணாவை தொட வேண்டுமானால் ஆரியமாயையை அறிய வேண்டும். மனுதர்மத்தைச் சுட்டெரித்து அதன் சாம்பலை அவரின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். கீதையைக் கிழித்தெறிந்து கெஞ்சி கூத்தாடி அண்ணாவின் வீட்டு வாசலில் கையேந்தி நிற்க வேண்டும்.

‘தீ பரவட்டும்’ என்றவர் அண்ணா! அந்த தீச்சுடரை கையில் ஏந்தி ஆரிய சனாதன வருணாசிரமக் காட்டினை சுட்டுப் பொசுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் வழியாக ஈரோட்டுக்கு வந்து காலக் கதிரவனாய் ஒளி வீசும் தலைவனின் கைத்தடிக்குத் தலைவணங்கி சரணாகதி அடைய வேண்டும்.  அண்ணாவை எப்படியும் பயன்படுத்தலாம் - திரிக்கலாம்  - கொள்கையற்றவர் - சந்தர்ப்பவாதி என்று காட்டலாம் என்று திரிநூல்கள் மனப்பால் குடித்தால் தட்டிக் கேட்பதற்கு ஆளில்லை என்று நினைக்க வேண்டாம், எச்சரிக்கை!

 

கேள்வி: உயர்ந்த பிரார்த்தனை எது?

பதில்: “இறைவா! எனக்கு யாரிட மும் குற்றம் குறை பார்க்காத மன தைக் கொடு” - என்று அன்னை சாரதா தேவி கேட்ட பிரார்த்தனை தான். அடுத்தவர்களுடைய குறை களையே சதா பார்த்துக் கொண்டி ருந்தால் நம் மனசும் கெட்டுப் போய் விடும்.

ஊருக்குத்தான் உபதேசமா? இந்து மதக் கடவுள்களே மனிதனைக் கூறு போடுபவைதானே! பிர்மா நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், பிர்மா வின் தோளில் பிறந்தவன் சத்திரியன் என்றும், பிர்மாவின் இடுப்பில் பிறந்த வன் வைசியன் என்றும், காலில் பிறந்த வன் சூத்திரன் என்றும் எழுதி வைத் துள்ளனரே! மனுதர்மத்தைச் சுமப்ப வர்கள் வெட்கமில்லாமல் இது போன்ற பதில்களைக் கூறலாமா?

வைசியர்களும், சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்த வர்கள் என்று இந்து மதக் கடவுளான ‘பகவான் கிருஷ்ணனே’ சொன்னதாகக் கூறும் கீதையை இந்தியத் தேசிய நூலாக ஆக்க வேண்டும் என்று சொல்லு பவர்கள் - எந்த இறைவனிடம் பிரார்த் திக்கப் போகிறார்களாம்? பிறப்பிலேயே குற்றம் குறை பார்ப்பவர்கள் குற்றம் குறை பார்க்காத மனதைக் கொடு என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்வார் களாம்.

கசாப்புக் கடைக்காரன் ஜீவகாருண் யம் பேசுவதும், இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல்காரன் காய்கறிகளின் மகத்துவத்தைச் சிலாகிப்பதும் நல்ல தமாஷ்தான்!

கேள்வி: கோயில்களில் பணம் கொடுத்தால் கர்ப்பக் கிரஹகம் அருகில் வரை சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது சரிதானா?

பதில்: “கோயில்களில் கட்டண தரிசனமே கூடாது என்கிறது ஹிந்து முன்னணி. இது ஒரு பக்கம் இருக் கட்டும். சன்னிதானம் அருகில் சென்று தரிசிப்பதால் மட்டும் கட வுளை நெருங்கிவிட முடியாது. நீங்கள் சாமிக்கு எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. உங்கள் மனதில் பக்தி எப்படி இருக் கிறது என்பதுதான் முக்கியம்.”

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக் கிறது. கட்டண தரிசனமே கூடாது என் பதுதான் ஹிந்து முன்னணியின் கருத்து என்றால் கட்டணம் கூடாது என்பதற்காக எடுத்துக் கொண்ட நடவடிக்கை என்ன? முதலில் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலிருந்து போராட்டத்தைத் தொடங்க வேண்டியதுதானே. அல்லது திருப்பதி ஏழுமலையானே திருப்பதி தேவஸ்தானக்காரர்களுக்கு நல்ல புத்தியைக் கொடு - தரிசனத்துக்குக் கட்டணம் கூடாது என்று அவர்கள் முடிவுக்கு வர அருள் புரிக என்று கூறி யாகம், ஹோமம் நடத்தலாமே - செய்வீர்களா?

ஏழுமலையான் தன் கல்யாணத் துக்காக குபேரனிடம் கடன் வாங்கி யதை அடைப்பதற்காகத்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டதாகக் கோயில் தல புராணம் கூறுகிறதே - அதை எங்கே வைத்துக் கொளுத்த?

சாமிக் கும்பிடுவதில் கூட இந்து மதத்தில் வேறு பாடுகள் உண்டே!

துவிஜதர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர்களான பார்ப்பனர்களுக்குத் தெய்வம் அக்கினியில், முனிவர்களுக் குத் தெய்வம் இருதயத்தில், புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலையில், சமப் பார்வையுள்ளவர் களுக்குத் தெய்வம் எங்கும்! (‘உத்தர கீதை’, பாரதத்தில் ஒரு பாகமான வேதாந்த நூலில்).

கேள்வி: ராணுவ அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டி ருப்பது பற்றி?

பதில்: “தகுதி, நேர்மை என்ற ஒரே அடிப்படையில் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது. பெண்களும் சாதனை படைப்பார்கள் என்று மோடி நம்புகிறார். மதுரை தான் இவருக்கு சொந்த ஊர். தமிழர் என்பதால் நமக்கு இரட்டிப்பு சந்தோஷம் தானே!”

அப்படியா சங்கதி? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் சம்மதத் துடன்தான் நிர்மலா அம்மையார் பாதுகாப்புத் துறைக்கு அமர்த்தப்பட் டாரா என்பதில் சந்தேகம் இருக்கிறது.

“பெண்கள் என்றால் வீட்டு வேலை யைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஆண்களுக்கு நிகராகப் படித் தாலோ, சம்பாதித்தாலோ, ஆணுக்குக் கட்டுப்பட மாட்டார்கள். அத்தகைய பெண்களை டைவர்ஸ் செய்துவிட வேண்டும்” என்று சொன்னவர் ஆர்.எஸ்.எஸ். தலைவராயிற்றே!

‘விஜயபாரதத்தின்’ (29.9.2017) கேள்விகளுக்கு...

கேள்வி: பரதனாரே... சக்தி வாய்ந்த ராம மந்திரம் எது?

பதில்: “ராம மந்திரம் எல்லாமே சக்தி வாய்ந்தது தான். “ஸ்ரீராமராம ராமேதி ராமே ராமே மனோரமே ஸகஸ்ர ராம் ததிகம்பய ராம ராம வரானனே” விஷ்ணுவை ஸஹஸ்ர நாம பாராயணம் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ அது இந்த மந் திரத்தைச் சொன்னாலே கிடைக்கும்!”

அப்படியா... பாபர் மசூதியை ஏன் வேலை மெனக்கெட்டு இடிப்பானேன்? வாஜ்பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்றவர்கள் குற்றவாளிப் பட்டியலில் இடம் பெறுவா னேன்?

ராமநாமத்தை ஜெபித்தால் போதாதா பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் எழும்பி விடுமே!

கேள்வி: தெய்வம் நின்று கொல் லும் என்பது ஏன்?

பதில்: “மனிதன் செய்யும் தவறுக ளுக்கு கடவுள் அப்போதைக்கப் போதே தண்டனை கொடுக்க ஆரம் பித்தால் உலகில் ஒரு மனிதனும் இருக்க மாட்டான்.”

கொலை வழக்கில் ஜெகத் குருக்கள் ஜெயிலுக்குச் சென்றார்களே, அது யார் கொடுத்த தண்டனையாம்?

கேள்வி: தமிழகத்தில் நவோதயா பள்ளி துவங்க எதிர்ப்பு ஏன்?

பதில்: “ஹிந்தி நுழைந்து விடும் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். நவோதயா பள்ளியில் கல்வி, உறை விடம் எல்லாமே இலவசம். ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசா தம். இவ்வளவுக்குப் பிறகும் எதிர்ப் பவர்கள் தேச விரோதிகளே.”

அப்படியா சங்கதி; ஹிந்தி நுழைந்து விடும் என்பது உண்மைதானே - இதனைப் பூச்சாண்டிக் காட்டுகிறார்கள் என்று சொல்லுவது பித்தலாட்டம்தானே.

நவோதயா பள்ளிகளில் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதும் உண்மை தானே. இவற்றையெல்லாம் மறைத்து எழுதுவது மக்கள் விரோதம் தானே.

கேள்வி: வேலூர் சிஎம்சி மருத்து வக் கல்லூரி ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி?

பதில்: “எந்த முறை இருந்தாலும் அங்கு மலையாள கிறிஸ்தவர்களுக்கே பெரும்பான்மையான இடங்கள்... இது பற்றியெல்லாம் சீமான் வாயே திறக் கலியே? எப்படி திறப்பார்? அவரும் ஒரு கிறிஸ்தவர்தானே...!”

பத்தரை மாற்றுத் தேசியவாதிகள் என்று தங்கள் முதுகில் தம்பட்டம் கட்டி அடித்துக் கொள்பவர்களுக்கு ஏன் இந்தக் ‘குறுகிய’ பார்வை? (இப்படித்தான் மற்றவர்களைப் பார்த்துக் கூறுவார்கள் விஜய பாரதத்துக்காரர்கள்).

சீமான்கள் ஒரு வகையில் ‘ரத்தப் பரிசோதனை’ செய்து பார்க்கிறார்கள் - ஆர்.எஸ்.எஸ்.காரர்களோ ரத்தத்தில் மத ‘குரூப்’பைத் தேடுகிறார்கள். பார்ப்பனர் களைத் தமிழர்கள் என்று மெச்சும் ‘சீமான்’ வகையறாக்களுக்கு இதுவும் ‘தேவை’தான்.

 

- மின்சாரம்

 


- மின்சாரம் -

எந்தக்கட்சியாக இருந்தாலும், அங்கு நிலைக்காமல் திருவிழா வியாபாரிகள் போல டேரா தூக்கும் ஒரு கோமாளி நடிகர் - அவருக்கு பெயர் சேகர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை விமர்சிக்க முயற்சிக்கிறாராம். விமர்சிப்பது தவறு இல்லை, விவேகத்துடன் விமர்சிக்கும் புத்தி இருந்தால் அதனை தாராளமாக செய்ய முன் வரட்டும்!

நடிகர்களைப் பற்றிப் பேச கி.வீரமணிக்கு அருகதையில்லையாம். அடேயப்பா அதற்கான அருகதைகள் என்னென்ன என்று பட்டியலிட்டு இருந்தால், அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம். அவற்றையெல்லாம் இதுகளிடம் எதிர்பார்க்க முடியுமா? வீரமணியைப் பற்றிப் பேச உங்களுக்கு அருகதையில்லை என்று அதே பாணியில் கேட்க முடியாதா? என்னே சிறு பிள்ளைத் தனம்!

பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிக்கும் காலாடி போல கழிசடைத்தனமாக சேற்றை வாரி இறைக்கக் கூடாதல்லவா?

திராவிடர் கழகத் தலைவர் எந்த போராட்டத்திலாவது ஈடுபட்டதுண்டா? சிறை சென்றதுண்டா? அதுபற்றியெல்லாம் நான் படித்தது இல்லை என்று பல்லிளிக்கிறார்.

பத்திரிகைகளைப் படிக்காமல் வெறும் பஞ்சாங்கத்தையே படித்துக் கொண்டிருந்தால் நாட்டு நடப்பு எப்படி விளங்கும்?. ஓராண்டு மிசாவில் இருந்தாரே அதுகூட தெரியாதா? ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் வேலூர் சிறையில் இருந்ததெல்லாம் தெரியுமா? இரயில் நிலையங்களில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்திலும் சென்னை மத்திய சிறையில் இருந்தது புரியுமா? காவிரி நீருக்காக திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடத்திய மறியல் போராட்டத்திலும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட விவரம் அறிவாரா?

சமூக நீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவிகள் எரிப்புப் போராட்டத்தில் வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்ட சங்கதியெல்லாம் தெரியுமா சங்கராச்சாரியாரின் சீடருக்கு? (அந்த வேலூர் சிறையில் ஒரு கொலைக் குற்றத்தில் அவர்களின் லோகக்குரு கம்பி எண்ணினார் என்பது வேறு செய்தி)

மண்டல் குழுப் பரிந்துரைகளை அமலாக்கக் கோரி டில்லி நாடாளுமன்றம் முன் மறியல் - பிரதமர் இந்திராகாந்தி வீட்டு முன் மறியல் - கைது விவரங்கள் எல்லாம் இந்த கைபர் கணவாய்களுக்குத் தெரிய நியாயமில்லை. (49 முறை - சிறை!)

ஒரு தலைவரைப் பற்றி ஒரு விவரமும் தெரியாமல் இப்படி உளறுகிறோமே  - நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கூச்சமாவது - வெட்கமாவது உண்டா இந்த வேதியக் கும்பலுக்கு?

அறக்கட்டளை பெயரில் வியாபாரம் நடத்தும் கல்லூரிகளில் கொள்ளையாக நன்கொடை வாங்கிக் கொண்டு மாணவர்களை சேர்க்கிறார்கள் என்று அபாண்டமாக பழிதூற்றும் இந்த அய்யரை சவால் விட்டே கேட்கிறோம் - முடிந்தால் நிரூபியுங்கள் பார்க்கலாம்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு கனகாபிஷேகம் என்று சொல்லி தங்கக்கட்டிகளை சுங்கவரி இல்லாமல் சோதனை இல்லாமல் காஞ்சிபுரத்திற்கு கொண்டு வந்த தகவல் எல்லாம் சிரிப்பாய் சிரித்ததே.

கோயிலில் கொள்ளை அடிப்பவர்கள் பக்தர்களே! கொலை கொள்ளை செய்யத் துணிபவர்களில் அநேகம் பேர் பக்தர்களாக இருந்து ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்ளுவதற்கு வழிதேடுகிறார்கள்: நாத்திகத்திற்கு சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை  ஜாஸ்தியாகி விட்டது. பணமுடை அதிகரித்து விட்டது என்று பேட்டி கொடுத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் நடிகர் சேகரின் லோகக் குருவான ஜெயேந்திர சரஸ்வதிதான்.

(குமுதம் பேட்டி 12.9.1996)

இந்த யோக்கியர்கள்தான் நம்மைப் பார்த்து கொள்ளையடிப்பதாகக் கூச்சமின்றி கூறுகிறார்கள்.

வீரமணி பொதுமேடையில் பேசுவதற்கும், இவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று பெரிய கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஒன்றே ஒன்றை எடுத்துக்காட்டாகச் சொல்லியிருந்தாலும் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம். அறிவு நாணயம் என்ன என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் கூட்டமாயிற்றே. அதனிடம் எதிர்பார்க்கலாமா?

வீரமணியின் வீட்டில் உள்ளவர்கள் எங்கள் மடத்துக்கு வந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் என்று ஜெயேந்திர சரஸ்வதி கூற - அதன் மீது வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது என்பதை  அக்கிரகார வாசிகளுக்கு ஞாபகப்படுத்துகிறோம். நீதிமன்றத்தில் கூண்டில் ஏறி உங்கள் லோகக் குரு சொல்லட்டும் அப்பொழுது இருக்கிறது சங்கதி!

அப்பொழுது அவர்களின் பித்தாலாட்டம் அம்பலமாகும். திராவிடர் கழகத்தை தனக்குப் பின் தன் மகனுக்கு எழுதி வைத்திருக்கிறாராம். கோமாளி நடிகர் அல்லவா? கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கப் பார்க்கிறார். திராவிடர் கழகம் நிலமோ கட்டடமோ அல்ல - யாருக்கோ எழுதி வைப்பதற்கு! திராவிடர் கழகத்திற்கு தொண்டு செய்ய யாரும் முன் வரலாம்.  உழைப்பதற்கும் செலவு செய்வதற்குமான பாசறையே தவிர, வருமானம் ஈட்டுவதற்கான மடம் அல்ல. இங்கு உழைக்க வரலாம், பிழைக்க அல்ல! இருப்பது பதவியும் அல்ல - பொறுப்புதான்  புரிந்து கொள்வீர்!

சினிமாவில் இருந்த அண்ணா, கலைஞரை ஆதரிக்கவில்லையா? என்று அறிவாளித்தனமாக கேள்வி கேட்டதாக நினைப்பு.

அவர்கள் சினிமாவை பகுத்தறிவுக் கொள்கையை பரப்புவதற்கான கருவியாக பயன்படுத்தினார்கள். “அம்பாள் என்றைக்கடா பேசினாள்? அது பேசாது கல்!” என்று பராசக்தியில் பேச வைத்தவர் கலைஞர்.

ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? ஆகும் நெறி என்றால் நாத்திகம், ஆகா நெறி என்றால் ஆத்திகம் என்ற கருத்தை பரப்பியவர் அறிஞர் அண்ணா.

சினிமாவைக் கருவியாகப் பயன்படுத்திய இவர்களுக்கு யாரும் ரசிகர் மன்றம் வைக்கவில்லை. ஆனால் சேகர் வகையறாக்கள் தூக்கிப் பிடிக்கும் சினிமா நடிகர்கள் சமாச்சாரமே வேறு.

கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், பிடித்த நடிகைகளுக்கு கோயில் கட்டுவது வரை அல்லவா வால் நீண்டு இருக்கிறது!

நடிகர் குடித்துத் தூக்கி எறிந்த சோடாவை அண்டாவில் கரைத்துக் குடிக்கும் கலாச்சாரம், சுவரொட்டிகளை கிழித்து விரித்து அதன் மேலே உருளும் கலாச்சாரம் சினிமாவுக்கே உள்ள ஆபாசம் அல்லவா!

யார் ஆட்சியில் இருக்கிறார்களோ, அவர்களிடம் மண்டியிட்டு அண்டிப் பிழைக்குமாம் திராவிடர் கழகம். அட மண்டூகங்களே, அரசியலுக்குள் செல்லாமல் தேர்தலில் நிற்காமல் அதே நேரத்தில் ஆட்சியில் உள்ளவர்களிடம் அடித்து வேலைவாங்குவது திராவிடர் கழகம்.

எந்த சட்டமன்றத்திற்கும் செல்லாத தந்தை பெரியாருக்கு இந்த அமைச்சரவையே காணிக்கை என்று அறிவித்தவர் முதலமைச்சர் அண்ணா என்ற வரலாறெல்லாம் இந்த உஞ்சி விருத்திகளுக்குத் தெரியுமா? தந்தை பெரியார் மொழியில் சொல்லுகிறோம் - இது சூத்திர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் அரசு என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் சட்டப்பேரவையிலேயே முழங்கவில்லையா?

ஆட்சிப் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆரை 13 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்தது திராவிடர் கழகம் என்ற பாலபாடம் கூடவா  தெரியாது இந்த குடுமிகளுக்கு?

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையை கொண்டு வந்த போது அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதன் விளைவாக நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க.  39 இடங்களில் 37 இடங்களில் கடும் தோல்வியை தழுவியதெல்லாம் இந்த தகரடப்பாக்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது.

அந்தத் தோல்வியைத் தொடர்ந்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கினாலே போதுமானது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். சொன்னதன் அடிப்படையில் ஆசிரியர் வீரமணி அவர்கள் கொடுத்த விளக்கமும் (கேள்வி - பதிலாக அச்சிட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது) விவரமும் எம்.ஜி.ஆர். நிலைப்பாட்டை மாற்றிய சமூக நீதி வரலாறு சாதாரணமானதல்ல.
வருமான வரம்பு ஆணையை விலக்கிக் கொண்டதுடன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது - உச்சிக் குடுமியில் தீ வைத்ததுபோல் இருந்தால் அதற்கு நாம் என்ன செய்யட்டும்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்ற நிலையில் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு  ஆபத்து வந்த போது, அதற்கான சட்ட ஆலோசனையை வழங்கியதோடு மட்டுமல்லாமல் சட்டமுன் வரைவையும் தயாரித்துக் கொடுத்தவர் வீரமணி என்ற உண்மை இந்த உதவாக்கரைகளுக்குத் தெரியுமா?

முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு பார்ப்பனப் பெண், பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஒரு பார்ப்பனர், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஒரு பார்ப்பனர், இந்த மூன்றுபார்ப்பனர்களையும் பயன்படுத்தி (வேலை வாங்கி) தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு நிரந்தரப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்க வைத்து பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டியவர்தானே சமூகநீதியின் உயிர்மூச்சு வீரமணி என்பதை இந்த விளங்கா விலாசங்கள் தெரிந்து கொள்ளட்டும்!

இராவணன் தம்பியைப் பயன்படுத்தி இராவணனை வீழ்த்திய காரணத்தால் விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டம் கொடுக்கப்படவில்லையா? சமூக நீதி காத்த வீராங்கனை என்பதையும் அந்தப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமே!.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பற்றி இவ்வளவு எழுதும் சேகர் அய்யர் யார்?

பிராமணர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தேவை  - அதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று பெரியார் திடலுக்கு வந்து வீரமணியிடம் கூழைக்கும்பிடு போட்டு குனிந்து வளைந்து நின்றவர்தானே!

முதலில் கோபாலபுரம் சென்று கலைஞர் அவர்களை பார்க்க, அவரோ, பெரியார் திடலுக்குப் போய் வீரமணி அவர்களைப் பாருங்கள் என்று கைகாட்ட, ஓடோடி வந்ததெல்லாம் மறந்து போயிற்றா?

நீதிக்கட்சிக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு 14 சதவீதம் அளிக்கப்பட்டதே - அதனை கெடுத்துக் கொண்டவர்கள் நீங்கள்தானே என்று மரியாதை கலந்த வார்த்தைகளில் ஆசிரியர் சொன்ன அறிவுரை எல்லாம் இந்த அய்யர்களுக்கு எங்கே உறைக்கப்போகிறது? இந்த விவரம் எல்லாம் எனக்கு தெரியாதுங்கோ என்று அசடு வழியச் சொன்ன ஆசாமிதானே இவர்!

பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவேன் என்று கமலகாசன் சொன்னதுதான் வீரமணிக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் கமலகாசன் மீது வீரமணிக்கு கோபம் என்கிறார் இவர். (கமலகாசன் என்னதான் சமாதானம் சொன்னாலும் சமாளித்தாலும் நிலைமை என்ன என்பது இப்பொழுது கமலகாசன் சிந்திக்கட்டும்)

இந்த இடத்தில் பார்ப்பனர்களின் இரட்டை நாக்கை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஊழலாட்சி என்றும், அதை அகற்ற வேண்டும் என்றும் கமலகாசன் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக டுவிட்டரிலும், பேட்டிகளிலும் கூறியபோது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை தலையாட்டி பொம்மையாகப் பாவித்து  ஆட்டுவித்த  - அடைகாத்த பிஜேபி முன்னணியினர் கமலகாசன் மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தனர்.

அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல் மீது விழுந்து பிராண்டினார்.  மாலை மலர் வெளியிட்ட செய்தி இதோ:

கமல்ஹாசன் தி.மு.க.வின் கைக்கூலியாக மாறி விட்டார்: எச்.ராஜா கடும் தாக்கு

சென்னை, ஆகஸ்ட் 13 நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதாக விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் வரிந்து கட்டி கமலுக்கு எதிராக கணைகளை வீசினார்கள்.

கமலுக்கு ஆதரவாக தி.மு.க. குரல் கொடுத்தது. இதையடுத்து கமலுக்கு எதிரான நிலைப்பாட்டை பா.ஜனதா எடுத்தது. ஆன்மீக நாட்டம் கொண்ட ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்பும் பா.ஜனதா கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட கமலின் அரசியல் பிரவேசத்தை விரும்பவில்லை.

இதனால் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கமலை விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே கமல் முதுகெலும்பு இல்லாதவர் என்று எச்.ராஜா விமர்சித்தார். அதற்கு கமல் ஹாசன் ‘எலும்பு நிபுணர்’ என்ற அடைமொழியோடு எச்.ராஜாவை குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய எச்.ராஜா கமல்ஹாசன் பற்றி கூறியதாவது:-

விஸ்வரூபம் பட பிரச்சினையில் கமல்ஹாசன் தனக்கு ஒரு பிரச்சினை என்றதும் அழுதார், புரண்டார். நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும் அளவுக்கு கோழைத்தனமாக செயல்பட்டார்.

தற்போது முரசொலி பவள விழாவில் பங்கேற்றதன் மூலம் தான் ஒரு தி.மு.க.வின் கைக்கூலி, ஊதுகுழல் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

-மாலைமலர், 13.8.2017

இன்னொரு சமயத்தில் விசுவரூபம் படம் வெளியிடும் பொழுது எதிர்ப்பு வந்த பொழுது நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறிய முதுகெலும்பில்லாத கோழை கமலகாசன் என்றும், காட்டமாக தாக்கினார் அந்தக் காரைக்குடி ராஜா.

எச்.ராஜாவுக்கு கமலகாசனும் கிண்டலாக பதிலடி கொடுத்தார்.

நான் எப்பொழுதோ அரசியலுக்கு வந்து விட்டேன். எலும்பு வல்லுநர் எச்.ராஜா தம்மை அரசியலுக்கு இப்பொழுது வரவேண்டுமென்று அழைப்பது நகைப்பை வரவழைக்கிறது என்று கமலகாசன் பதிலடி கொடுத்தார்.

எலும்புத் துண்டுக்காக வாழ்வதை விட எலும்பு வல்லுநர் பரவாயில்லை என்று ராஜா கூறும் லாவணி வெகு ஜோராக நடந்தது.

இப்பொழுது இதிலும் இன்னொரு திருப்பம். பா.ஜ.க.வுடன் கை கோர்க்க தயார் என்றவுடன் நிலைமை என்ன தெரியுமா?

“கமலுக்கு எதிராகப் பேசக்கூடாது” - தமிழிசை, எச்.ராஜாவுக்கு அமித்ஷா எச்சரிக்கை என்பதுதான் அந்தச் செய்தி.

நடிகர் சேகர் கமலகாசனுக்காக வலைதளம் வாயிலாக வக்காலத்து வாங்குவது இதன் அடிப்படையில்தான்.

தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர் கைகளில் போக வேண்டுமா? என்று அர்த்தமிக்க வினாவை திராவிடர் கழகத் தலைவர் எழுப்பினார். (விடுதலை, 29.9.2017) அது மிகப்பெரிய அளவிற்கு பலம் வாய்ந்த அலைகளை எழுப்பி விட்ட நிலையில், கமலகாசனை கட்டித்தழுவும் நிலைக்கு பார்ப்பனர்களும், பி.ஜே.பி.யினரும் தள்ளப்பட்டுள்ளதைத் தானே இது காட்டுகிறது.

ஆரியர் - திராவிடர் போராட்டம் ஏதோ ஒரு வகையில் நடைபெறுவதுதானே இந்நாட்டு அரசியல்.

Banner
Banner