மின்சாரம்

 

- மின்சாரம்

பாகிஸ்தானின் உளவு அமைப்பான அய்.எஸ்.அய்-க்கும், பயங்கரவாத அய்.எஸ் அமைப்பிற்கும், இந்திய ராணுவ ரகசியங்கள், பொருளாதார முன்னேற்பாடு திட்டங்கள் (ஙிறீuமீ றிக்ஷீவீஸீt) போன்ற பல முக்கிய ரகசிய தகவல்களை அனுப்பிய 11 பாஜக வினர் கைதுசெய்யப்பட்டனர். விசாரணையில், பாஜக முக்கிய பெண் தலைவர் ஒருவர் இவர்களுக்கெல்லாம் மூளையாக செயல்பட்டதாகத் திடுக்கிடும் தகவல். அந்த பெண் குறித்த விசாரணை யில் சிறப்பு புலானாய்வுப் பிரிவு செயல் பட்டு வருகிறது.

அய்.எஸ். அமைப்பு மற்றும் பாகிஸ் தான் உளவு அமைப்பான அய்.எஸ்.அய்-க்கு இந்தியாவில் இருந்து பல்வேறு ரகசியங் கள் கடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் சிறப்பு புல னாய்வுத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சில முக்கிய தகவல்கள் மத்தியப் பிரதேசம் போபாலில் இருந்து தொடர்ந்து பரிமாறப் படுவது புலனாய்வுத் துறையின் கவனத் திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதை ரகசியமாக கண்காணித்த போது சில மின்னஞ்சல் முகவரிகள் புலனாய்வுத் துறைக்குக் கிடைத்தன. அதன் பிறகு அதனை இயக்குபவர்கள் அடையாளம் காணப்பட்டனர். சுமார் 18-ற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு குழுவாக ம.பி.-யில் உள்ள குவாலியர், போபால், இந்தூர் போன்ற நகரங்களில் இருந்து செயல்படுவதும், இவர்கள் அனைவரும் பாஜகவில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்றும் தெரிய வந்தது. விசாரணையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் துருவ் சக்சேனா என்பவர் பாஜக போபால் நகர செயலாளர் ஆகும்.  மேலும் இவர் ம.பி. மாநில பா.ஜ.க. அய்.டி தொழில் நுட்பப் பிரிவு தலைவராகவும் உள்ளார்.  பாஜகவின் தேசியத்தலைவர்களுடன் சேர்ந்து இவர் உள்ள பல புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

தேசபக்தர் போல்

வேடம் ஒரு கேடா?

மேலும் பாஜக நாடாளுமன்ற உறுப்பி னர் அலோக் சஞ்சார், மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், பாஜக தேசியச் செயலாளர் விஜயவர்கியா, போபால் மாநகர மேயர் அலோக் சர்மா போன் றோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இவர் தன்னுடைய உளவு செயலை மறைப்பதற்காக தன்னை தேச பக்தர் போல் காட்டிக்கொள்ள சமூக வலை தளங்களில் பல்வேறு விதமான செய்தி களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்.  இவருடன் முகநூல் மற்றும் டுவிட்டரில் தொடர்பில் உள்ளவர் யாருமே இவர்மீது சந்தேகம் கொள்ள முடியாத அளவிற்கு சாமர்த் தியமாக இரட்டை வேடம் போட்டு வந் ததும் தெரியவந்தது. புலனாய்வுத் துறை யினர் ஆரம்பத்தில் இவரின் நண்பர்கள் யாரேனும் இந்தச் செயலில் இவரது கணினியைப் பயன்படுத்தி செய்திருப்பார் கள் என்று எண்ணியிருந்ததுண்டு.

ஆனால், தொடர்ந்து கண்காணித்த போது இவரே குழுவில் ஒருவராக இருந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந் துள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது  இவரிடம் நடத்திய விசாரணையில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகவல் களை  பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு பரிமாறியுள்ளதை வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளார். இதற்குக் கூலியாக பல கோடி ரூபாய்களை ஹாவாலாமூலம் பெற்றுள்ளார். இவரது நண்பர்கள் உற வினர்கள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகளை சோதனை செய்தபோது இதுவரை ரூபாய் 4 கோடிக்கு மேல் பணம் அய்.எஸ் அமைப்பு மற்றும் அய்.எஸ்.அய். உளவு அமைப்பின் மூலமாக கைமாறியுள் ளது தெரிய வந்துள்ளது.

இவரிடம் தொடர்ந்து விசாரணை செய்த பிறகு போபாலில் இருந்து 3 பேர், குவாலியர் நகரில் இருந்து 2 பேர் மற்றும் இந்தூரில் இருந்தும் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொகித் அகர்வால், மனீஷ் சிங் காந்தி மற்றும் சந்தீப் குப்தா போன்ற பாஜகவினரைக் கைது செய்யச் சென்ற போது அவர்களின் குடும்பத்தார் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனை அடுத்து அவர்களின் வீடுகளை புலனாய்வுத் துறையினர் சீல் வைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மோகித் அகர்வால் மற்றும் துருவ் சக்சேனாவிடம் விலையுயர்ந்த கார்கள் இருந்தன. மோகித் அகர்வால் ரியல் எஸ்டேட் ஒன்றை சமீ பத்தில் துவக்கியிருந்தார். ஆனால் அவர் இதுவரை எந்த ஒரு ரியல் எஸ்டேட் வியா பாரமும் செய்யவில்லை என்று தெரிய வந்தது. இதனை அடுத்து நவீன விலை உயர்ந்த கார்கள் வாங்க பணம் எப்படி கிடைத்தது,  என்று விசாரித்துவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது, 6 பேர் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமறைவாகி இருக்கும் பேர்வழிகள்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்னா என்ற ஊரில் இருந்து பல்ராம் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் வெளிநாட்டி லிருந்து ஹவாலாமூலம் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டுவந்து துருவ் சக்சேனா கூட்டாளிகளுக்குப் பங்கிட்டு கொடுத்துள்ளார். இவருக்கு உதவி செய்த யூகேஷ் பாட்டில், ராஜீவ் பாட்டில் போன் றோரையும் சிறப்பு புலனாய்வுத் துறை யினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஹவாலா பணக்கடத்தல் குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.  கைது செய்யப்பட்ட அனைவருமே மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாஜகவில் பொறுப்புகளைப் பெற்றதில் இருந்து பெரும்செல்வந்தர் களாக மாறியுள்ளனர்.  இவர்களின் கூட் டாளிகள் தலைமறைவாக உள்ளனர். இந்த உளவுத்தகவல் பரிமாறப்பட்ட வழக்கில்

20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாகியுள்ளனர். சிலரை காவல்துறை விசாரணை செய்து வருகிறது.  கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மத்தியப் பிர தேசத்தின் பல்வேறு நகரங்களில் சோதனை மேற்கொண்ட போது அவர்களி டமிருந்து 3000 சிம்கார்டுகள். அதிநவீன வசதிகள் கொண்ட 60க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், விலைஉயர்ந்த உயர் ரக வேகம் கொண்ட நெட்வெர்க் இணைப் புகளுடன் கூடிய 15 மடிக்கணினிகள், புதிய 15 அப்லோட் செய்யப்படாத பிளாங்க் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களும் அவர்களின் பதவிகளும்

1. ஜிதேந்திர தாக்கூர், பாஜக இளை ஞரணி செயலாளர்

2. குஷ் பண்டித், பாஜக உறுப்பினர்

3. திரிலோக் சிங் பதரியா, பாஜக உறுப்பினர்

4. மனீஷ் சிங் காந்தி, பாஜக உறுப்பினர்

5. மோகித் அகர்வால், பாஜக உறுப்பினர்

6. துருவ் சக்சேனா, பாஜக (மாவட்ட செயலாளர் போபால்)

7. மோகன் பாரதி, பாஜக (மாநில செயற்குழு உறுப்பினர்)

8. சந்தீப் குப்தா, பாஜக உறுப்பினர்

9. பல்ராம சிங், பாஜக உறுப்பினர்

10. ரிதேஷ் குல்லார்,  பாஜக உறுப்பினர்

22 கேரட் தேசப் பக்தத் திலகங்கள் போல மீசை முறுக்கும் இந்தக் காவிக் கூட்டம் எப்படிப்பட்ட தேசத் துரோகக் கூட்டம் - நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கும்பல் என்பது புரிகிறதா?

ஒரு பாட்டில் விஸ்கிக்காக இந்திய இராணுவத்தின் இரகசியங்களை பாகிஸ் தானுக்குக் காட்டிக் கொடுத்த கூமர்நாரா யணன் போன்ற பார்ப்பனர்களின் வாரிசு கள்தானே இவர்கள்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

கருஞ்சட்டைக் குடும்பத்தினரே -

மதுரைப் பொதுக்குழுவில் நமது தலைவர் அவர்கள் கூறியபடி - இனிவரும் காலத்தில் களப்பணிகள் களேபரமாக இருக்கத்தான் செய்யும்.

காவிகள் ஒரு பக்கம் தங்களின் கைவரி சையைக் காட்டத் துடிக்கின்றன. தமிழ்நாட்டிலோ ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தலாம் என்று மனப்பால் குடிக்கும் போக்குகளும் மற்றொரு புறம்!

தாழ்த்தப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி குதிரை சவாரி செய்யலாம் என்று கருதுகிற குள்ள நரிகளும் உண்டு.

ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகம் இதனை அனுமதிக்காது - கண்டிப்பாக அனுமதிக்கவே அனுமதிக்காது.

தருமபுரி மாவட்டத்திலே ஜாதிவெறி நெருப்புக்குத் தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்ந்த குடியிருப்புகள் இரையாக்கப்பட்டு, அவர்களின் உடைமைகள் எல்லாம் சாம்பலாக்கப்பட்ட நேரத்தில் அடுத்த  பொழுது எப்படிப் போகும் என்று கைபிசைந்து கொண்டிருந்த நேரத்தில், நமது தமிழர் தலைவர் தலைமையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முடிந்த உதவிகளைச் செய்தவர்கள் நாம்.

அந்த ஜாதி வெறித் தீ அடுத்தடுத்துப் பரவி விடக் கூடாது என்று தீர்மானித்து, உடனடியாக தருமபுரியிலே ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கத்தையும், பொது மாநாட்டையும் நடத்தி, மக்கள் மத்தியில் ஜாதி எதிர்ப்பு, ஒழிப்பு உணர்வினை வளர்த்தோம்.

அதன் காரணமாக அந்தப் பகுதி அமைதித் தென்றலின் ஊட்டமாகக் காட்சியளித்தது.

இப்பொழுது சேதி - அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறுகடம்பூரில்  ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்த நமது சகோதரி நந்தினிக்கு இழைக்கப்பட்ட கொடூரம் - நமது பரம எதிரிகளுக்குக் கூட வந்துவிடக் கூடாது.

இந்து முன்னணி என்ற போர்வையிலே உலவி வந்த மிருகங்கள் அந்தப் பெண்ணை சின்னாபின்னப்படுத்திப் பாழுங் கிணற்றில் வீசியெறிந்தன.
அரசியல் கட்சிகளையும், சமூக அமைப்பு களையும் ஒன்று திரட்டி நமது கழகத் தோழர்கள் களம் அமைத்துப் போராடி காவல்துறையை ஓரளவு செயல்படுத்த வைத்தனர். ஆனாலும், இந்த ஜாதியக் கொடூரத்துக்கு மூளையாக இருந்த ஒரு ஆசாமி இன்னும் படகுக் காரில் உலா வந்து கொண்டுள்ளார். காவல்துறை ஏன் கைகட்டிக் கொண்டிருக்கிறது? இந்த மர்ம முடிச்சு  இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

அந்த செந்துறைப் பகுதி என்பது கழகக் கோட்டைக் கொத்தளம். தந்தை பெரியார் அவர்களின் புயல் வேகப் பிரச்சாரத்தால் எண் ணற்ற இளைஞர்கள் நம் இயக்கத்தை நோக்கி, அன்று மட்டுமல்ல - இன்றும்கூட எழுந்து நிற்கிறார்கள்.

ஜாதி ஒழிப்புப் போராட்டமான  சட்ட எரிப்புப் போராட்டத்தில் எண்ணற்றோர் கலந்துகொண்டு வெஞ்சிறை ஏகிய இலட்சிய வீரர்களின் பாசறை செந்துறைக் கோட்டம்.

தமிழ் மறவர் பொன்னம்பலனார் வீரநடை போட்ட பெரியார்  மண் இது.

அந்தக் கொள்கைப் பூமியிலே,  ஜாதி ஒழிப்பு மண்ணிலே வரும் 13 ஆம் தேதி திங்கள் மாலை மாபெரும் கவுரவக் கொலை என்னும் ஜாதி ஆணவ எதிர்ப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு எழுச்சியுடன் நடைபெற உள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே பங்கு கொள்கிறார்.

சென்னையில் இருந்துகூட வாகனங்களில் கழகக் குடும்பங்கள் புறப்படுகின்றனர்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், லால்குடி, பெரம்பலூர், அரியலூர், விருத்தாசலம் மாவட்டத் தோழர்களே,

வரும் திங்கள் மாலை நீங்கள் திரளவேண்டிய பூமி - கருஞ்சட்டைத் தீரர்கள் வீர உலா வந்த செந்துறை என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஜாதி ஒழிப்பு வீரர்கள் வீரநடை போட்ட பகுதியிலா ஜாதி நரிகளின் வாலாட்டம்? வாள் படை எனத் திரண்டது காண் கருஞ்சட்டைக் கடல் என காவிகளும், ஜாதி ஓநாய்களும் மருண்டோடத் திரள்வீர்! திரள்வீர்!! திரள்வீர்!!!

தொகுப்பு:
மின்சாரம்

(மனுதர்மம் கூறும் இழிக் குப்பைகள் இங்கே... இங்கே... ஆதாரத்தோடு)

அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் நாளில் மதுரை பொதுக்குழு (4.2.2017) தீர்மானத்தின்படி மாதர் தம்மை இழிவு செய்யும் மனுதர்ம சாத்திரம் பொசுங்கட்டும்! பொசுங்கட்டும்!!

மனுதர்மம் என்ன கூறுகிறது?

இதோ.....

சுலோகம்: அத்தியாயம் 5

147) பாலியமாகவிருந்தாலும், யௌவனமாக இருந் தாலும், வார்த்திபமாகவிருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளிலும் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.

148)       பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌ வனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டி யதே  யல்லது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது.

154)       கணவன் துர்ராச்சாரமுள்ளவனாகவிருந்தா லும், அந்நிய ஸ்திரி லோலனாயிருந்தாலும், நற்குண மில்லா தவனாயிருந்தாலும் பதிவிரதையான  ஸ்திரியா னவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.

162)       ஸ்திரிக்குத் தன் கணவனைவிட மற்றொரு வனால் உண்டாக்கப்பட்ட பிள்ளையும் சாஸ்திரத் தினாலொப்புக் கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டு பண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரிகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒரு சாஸ்த்திரத்திலுஞ் சொல்லப்படவில்லை.

163)       தாழ்ந்தவனான தன் புருஷனை நீக்கி உயர்ந்த வனான மற்றொருவனை எந்த ஸ்திரியடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்தவளென்றுஞ் சொல்லப்படுகிறாள். ஒருவராலும் கொண்டாடப்பட மாட்டாள்.

164)       ஸ்திரி விபச்சாரஞ் செய்கிறதினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல் இறந்த பின் குள்ளநரியாகவும் பிறந்து வெண்குட்டம் முதலிய கர்ம வியாதியையும் அனுபவிக்கிறாள்.

ஒன்பதாவது அத்தியாயம்

14)          மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத் தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.

15)          மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாகவுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

17)          படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

18)          மாதர்களுக்கு ஜாதகர்ம முதலியவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியுங் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோபதேசமுமில்லை. ஆகையால் அபரிசுத் தாளாயிருக்கிறார்கள்.

19)          மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச் சித்தத்தைத் கேளுங்கள்.

30)          கணவன் சொற்படி நடவாதவள் உலகத் தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.

46)          கணவன் மனையாளைத் தள்ளிவிட்டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ்விதமான பிறன் மனையாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்படமாட்டான்.

60)          ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனா யிருந்தால் மற்றுமொருவனையடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிருவருக்கும் பொதுவாயிருக்கட்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப்போல் ஒருவன் மனை யாளிடத்தில் மனையாளில்லாத  மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத் திய கூலமாகவே யிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்த நல்ல விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொருவனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற்பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்து கொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவிருப் பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.

59)          பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.

60)          விதவையிடத்தில் பெரியோர்களின் அனு மதிப் பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள்ளையை ஒரு போதும் உண்டு பண்ணக்கூடாது.

69)          ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம் செய்த பின் அந்த வான் இறந்துபோனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.

70)          அவனந்தப் பெண்ணை விதிப்படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ்திரமுடையவளாயும், திரிகரண சுத்தியுடையவளாயு மிருக்கச் செய்து, ருதுஸ்நாள மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வனாயிற் பார்த்து கருப்பமுண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமானவுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.

77)          கணவனை மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்காவிடில் அவளுக்குத் தான் கொடுத்த ஆடையாபரணம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு  அவளோடு பேசுதலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக்காகக் கொடுத்தது கலாத் தக்கதன்று.

78)          கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடிய னாகவிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவ னுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவனுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.

81)          மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறுபவளை பத்து வருஷத் திற்கு மேலும், பெண்ணையே பெறுபவளை பதினொரு வருஷத்திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.

88)          குலம், நல்லொழுக்கம் இவைகளாலுயர்ந்தவ னாயும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ளவனாயுமிருக்கிறவானுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும், விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்.

94)          முப்பது வயதுள்ளவரன் அழகான பன்னி ரெண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்திநாலு வயதுள்ள பெண்ணையும், இருபத்திநாலு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். இதற்கு முன் விவாகம் செய்து கொள்ள அவசரப்பட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான்.

பாரதத்தில் பெண்ணடிமைக் கருத்துகள்

பெண்கள் பாப ஜென்மங்கள், அவர்களுக்கு ஒழுக் கம் கிடையாது. பாதுகாக்கும் அளவுக்குத்தான் அவர்களிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்.

“மத்தளம், சூத்திரர், விலங்குகள், பெண்கள் தண்டிக் கப்பட வேண்டியவர்கள்”. இராமன், சுந்தரகாண்டம்.

1. அஸ்வமேதிக பர்வம், அத்யாயம் - 99

புகழ் பெற்ற உத்தமி (பக்கம் 282)

ருதுவாதற்கு முன் பிராம்மம் முதலான விவாஹங் களுள் (ஒன்றால்) விதிப்படி விவாஹம் செய்யப்பட்ட வளுமான கன்னிகையானவள் புகழ் பெற்ற உத்தமியாவாள்.

2. குருதாரம், பரதாரத்தைப் புணருதல்

வியாசர் - தருமருக்கு

சாந்தி பர்வம் - அத்தியாயம் 83, பக்கம் 12-113

குருவின் கட்டளைப்படி குருதாரத்தைச் சேருவதால் மனிதன் குற்றமுள்ளவனாக மாட்டான்.

தமையன் பதிதனாகவும், ஸந்யாசியாகவும் போய் விட்டால் தம்பிக்கு பாரிவித்தியமென்னும் தோஷ மாகாது. தர்மநிமித்தம் ஸ்திரிகளின் வேண்டுகோளின்படி அவர்களைச் சேருதல் பரதாரத்தைச் சேர்ந்த பாவமாகாது.

3. பெண் உரிமை மறுத்தல்

ஆதிபர்வம் - அத்யாயம் 94, பக்கம் 341

சகுந்தலை

இளமையில் பிதா காப்பாற்றுகிறான். பருவகாலத்தில் கொழுநன் காப்பாற்றுகிறான். முதிர்ந்த பிராயத்தில் புத்திரன் காப்பாற்றுகிறான். ஸ்திரி ஸ்வந்திரமாய் இருக்கத்தக்கவள் அல்லள்.

4. பெண்கள் உறவினர்களிடம்

நெடுங்காலம் வசிக்கலாகாது

ஆதிபர்வம் - அத்யாயம் 96, பக்கம் 352

சகுந்தலை

பெண்கள் தம்மைச் சேர்ந்த உறவினர்களிடம் நெடுங்காலம் வஸிப்பது புகழையும் ஒழுக்கத்தையும் தர்மத்தையும் கெடுக்கும். அதில் எனக்கு இஷ்ட மில்லை (உடன்பாடில்லை).

5. துஷ்யந்தன் பெண்களை ஏசியது

ஆதிபர்வம் - அத்யாயம் 98, பக்கம் 365

உலகத்தில் பெண்களனைவரும் கொடியவர்கள்; காமத்தை முக்கியமாகக் கொண்டவர்கள். எல்லாப் பெண்களும் அயலாருக்குட்படுகிறவர்கள். எல்லாரும் கோபத்தை மேற்கொண்டவர்கள். பெண்களெல்லாரும் பொய் சொல்லுகிறவர்கள். கண்ணுவரைப்பற்றி நீ பேசத்தகாது. உன் தாயாராகிய மேனகை தயை யற்றவள் வியபிசாரி அவள் உன்னை இமயமலைச் சரிவில் நிர்மாலியத்தைப்போல் எறிந்துவிட்டாள் அல்லவா?

நிர்மாலியம் = தேவதைகள் பூஜித்து கழித்த பொருள் - குப்பை

6. பாண்டு குந்திக்குக் கூறிய (அ)தர்மம்

ஆதிபர்வம் - அத்யாயம் 128 பக்கம் 469-470)

ராஜபுத்திரியே! பதிவ்ரதையே! ஒவ்வொரு ருதுகாலங் களில் மட்டும் ஸ்திரி கணவனை மீறி நடக்கக் கூடா தென்பதே தர்மமென்றும், மற்ற காலங்கள் எல்லாவற் றிலும் பெண் தன் இஷ்டப்படி நடப்பதற் குரியவளென் றும் தர்மந்தெரிந்தவர்கள் அறிகின்றனர். ஸாது ஜனங்கள் இவ்வாறாகவே பழைய காலத்துத் வதர்ம மிருப்பதாக நிச்சயித்திருக்கின்றனர். ராஜபுத்திரியே! தர்மமோ அதர்மமோ எதைப் பாரியைக்குப் பர்த்தா சொல்வதோ அதை அவள் செய்ய வேண்டுமென்று வேதந்தெரிந்தவர்கள் நிச்சயித்திருக்கின்றனர்.

என் கட்டளையினால் தவத்திற் சிறந்த பிராம் மணனைக்கொண்டு குணங்கள் நிரம்பின புத்திரங்களை உண்டாக்கிக் கொள்வதற்கு உரியவளாகிறாய்!

ஸாது ஜனம்: பார்ப்பனர்

7. புருஷனில்லா ஸ்திரி

கணவனுக்கு முன் இறக்கும் பெண்

ஆதிபர்வம் - அத்யாயம் 172, பக்கம் 641-642

தரையிற் போடப்பட்ட மாம்ஸத்தைப் பறவைகள் எவ்வாறு விரும்புகின்றனவோ அவ்வாறே புருஷனில் லாத ஸ்திரியை எல்லா ஜனங்களும் விரும்புகின்றனர். பிராமணோத்தமரே! புருஷனில்லாமல் கெட்டவர்களால் விரும்பப்பட்டு மனம் தடுமாறும்படி செய்யப்பட்ட நான் ஸாதுஜனங்கள் ஒப்பினமார்க்கத்தில் நிற்கச் சக்தியுள்ள வளாக மாட்டேன். நாதரே! துஷ்டஜனங்கள் (கெட்ட) மிகுந்த இவ்வுலகத்தில் பெண் ஜன்மம் இழிவானது. கன்னிகையாயிருக்கும் போது தாய் தந்தையர் வசத்திலும், விவாகமானபின் (திருமணம்) பர்த்தாவின் வசத்திலும், இவர்களில்லாதபோது புத்திரன் வசத்திலும் இருக்கவேண்டும். ஸ்வதந்திரையான ஸ்திரி இகழப் பட்டவள். நெய்யில் நனைக்கப்பட்ட வஸ்திரத்துண்டு நாய்களால் எப்படியிழுக்கப் படுகிறதோ அப்படி பெண்களுக்கு நாதனில்லாமலிருப்பது (கணவன்) துஷ்டர்களுக்கு (கெட்டவர்) வாயில் திறந்துவிட்டது போல் அல்லவா?

ஓ! பிராமணரே! கணவனுக்குமுன் பரலோகமடைவது புத்ரனுள்ள ஸ்திரிகளுக்குப் பெரும்பாக்கிய மென்று தர்சாஸ்திரஜ்ஞர்கள் அறிகின்றனர். இவ்வுலகத்தில் புத்திரர்கள் வசத்தில் திரிவது விரும்பத்தக்கதன்று. எவள் மஞ்சள், மை, புஷ்பம்பூ முதலிய ஸ்மங்கலி லக்ஷ ணங்களோடு கூடியவளாயிருந்து பர்த்தாவின் பாதங் களில் மனம் வைத்து அவன் கொடுத்த தர்ப்பண ஜலத் தைப் பானஞ்செய்பவளாகப் பர்த்தா முன்னிலையில் மரணமடைகிறாளோ அவள் பார்வதிலோகத்தை அடைகிறாள். பார்வதிக்குத் தோழியாயிருந்து அந்தப் பர்வதராஜ கன்னிகையுடன் கூட மகிழ்ந்திருக்கிறாள்.

கீதை என்ன சொல்லுகிறது?

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin) “மாம் ஹி பார்த்த வ்யாபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு: பாப-யோனய: ஸத்ரியோ வைச்யாஸ்-ததா சூத்ராஸ்-தே பி யாந்தி பராங்கதிம்”

(அத். 9 - சுலோகம் 32)

இந்துமதத்தில் பெண்கள் நிலை

* ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத் தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வன வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

* மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே-காம வேட் கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.

* பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே.

- பாரதம், அனுசான்ய பருவம்.

பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக்கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர் களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.

- பாகவத ஸ்கந்தம் 4-14-42.

இப்பொழுது சொல்லுங்கள் - பெண்களைக் கேவலப்படுத்தும், இழிவுப்படுத்தும் இந்த இந்து மத சாஸ்திரங்களை எரிக்கவேண்டுமா - வேண்டாமா?

- தொகுப்பு : மின்சாரம்

மத்திய அரசின் பொதுத்துறை நிறு வனங்களுக்கான முக்கிய பதவிகளுக்கு பாஜகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தனியார் மயமாக்கலுக்கு தடையாக இருப்பவர்களை மிரட்டும் வேலையில் இவர்கள் ஈடுபட்டு வரு கிறார்கள்.

இந்திய பொதுத்துறை நிறுவனங் களுக்கு மோடி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததில் இருந்தே கெட்ட வாய்ப்பு துவங்கிவிட்டது. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக மத்திய வரவு - செலவு கணக்குத்தாக்கலில் பொதுத்துறை நிறு வனங்கள் பற்றி எந்த ஒரு சலுகை அறிவிப்புகளும் அல்லது மேம்பாடு பற்றிய திட்டங்களும் இல்லாமல், நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படாமல் தொடர்ந்து செயல்படா நிலையில் வைத்துள்ளது. இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து பெரும் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த நிதி இழப்பைக் காரணம் காட்டி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலையில் மோடி யின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் நிர்வாக மேலாண்மை அமைச்சரகம் ஈடுபட்டு வருகிறது.

இந்தத் தனியார் மயமாக்கலுக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது, ஏர் இந்தியா நிறுவனம் சார்ந்த அய்ந்து முக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாக தனியார் மயாகிவிட்டன. இந்த நிலையில் தனியார் மயமாகிவிட்ட இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களாக மாற்றப்பட்டு பணியாற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 251 முக்கிய பொதுத்துறைநிறுவனங்களில் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நேரடியாக ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் சில அயல்நாட்டு நிறுவனங்களின் மறை முக கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. முக்கியமாக இயற்கை எரிவாயு, மருந்து தயாரிப்பு, கச்சாவேதிப்பொருள் தயாரிப்பு மற்றும் இரும்பு எஃகு உருக்காலைகளின் இயக்குநர்கள் தனித்து இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ‘டெக்கான் கிரானிகிள்’ என்ற ஆங்கில பத்திரிகை ஜனவரி 24 ஆம் தேதி வணிகச் செய்தி பக் கத்தில் மிகவும் சிறியதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

பொதுத்துறை நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், தனியார் மயமாக்கலுக்கு உள்ள தடை களை நீக்கவும், பொதுத்துறை நிறுவனங் களின் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவரவும் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் பாஜகவின் தலைவர் கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த செயல் பொதுத்துறை நிறுவனத்தில் இயக்குநர்கள் வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை பொதுத்துறை நிறு வனங்களுக்கான ஆலோசகர் பதவியில்  பா.ஜ.வினர் உறுப்பினர்களாக அதிக அள வில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்களை பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் களாக பிரதமர் நியமித்துள்ளார்.

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சமீபத்தில் வெளியிட்ட முக்கிய தலைமை நிர்வாகிகள் பட்டியலில் பாஜக உறுப் பினர்களின் பெயர் உள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு (ஏசிசி) அரசுக்குச் செந்தமான நிறுவனங்களின் வாரியங்களில், குறைந்தது 10 பிஜேபி உறுப்பினர்களை ஜனவரி 28 ஆம் தேதியில் நியமித்துள்ளதாக ‘இந்தி யன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டி ருந்தது. (31.1.2017)

இதில்,

ஒடிசா பாஜக துணைத் தலைவர் ராஜ்கிஷோர் தாஸ், 2014 இல் மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர். அவர் ஹிந்துஸ்தான் ஃபுளுரோகார்பன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு தனி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் வதோதரா மேயர் ஜோதி கவுஷல் செத், உரங்கள் மற்றும் ரசாய னங்கள் திருவாங்கூர் லிமிடெட் என்ற, நிறுவனத்தின் தலைமைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கங்கிடி மனோகர் ரெட்டி (2009 ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் பாஜக வேட்பாளர்)  ரசாயன கச்சாப் பொருள்  விநியோக நிறுவனக் குழுவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அவர் கொடுத்துள்ள உறுதிச்சான்றின்படி, ரெட்டி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.

குஜராத் பாஜக ஊடகத் துறை தொகுப் பாளர் ஹர்ஷத் ஏ படேல்,  மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு சின்ன ரத்னா பொதுத்துறை நிறு வனமான மின்பொருள் ஆய்வக நிறுவனம் (இந்தியா) லிமிடெட் என்ற நிறுவனத்தின் தனி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.க.வின் மகிளா மோர்ச்சா பிரிவின் தேசிய பொதுச் செயலாளர் எல்.விக் டோரியா கவுரி  கப்பல் அமைச்சகத்தின் கீழ் வரும் காமராஜர் போர்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் குழுவில் நியமிக்கப் பட்டுள்ளார்.

விசாகா ஷைலானி (டில்லியில் 2012 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தலில் போட்டி யிட்டவர்) தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தனி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்,  ஷாசியா இல்மி, ரஜிகா கச் சேரியா, அசிஃபா கான், சுரமா பதி மற்றும் கிரண் கய் சின்ஹா உட்பட 10 பா.ஜ.க. தலைவர்கள் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் நியமிக்கப்பட்டுள்ளதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

எலக்ட்ரிக் இந்தியா லிமிடெட், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், நேஷ னல் அலு மினியம் கம்பெனி லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரே ஷன் லிமிடெட், போன்ற உயர்ந்த பொதுத் துறை நிறுவனங்களின் வாரியங்களில், பா.ஜ.க. தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ள தாகத் தகவல் அளித்துள்ளது.  பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் வங்கிகளில் தனி இயக்குநர்களாக தங்களது கட்சியைச் சேர்ந்தவர்ளை தொடர்ந்து நியமித்து வந்ததும், இது குறித்து வங்கிகள் கூட்ட மைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித் திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சர்வமும் இந்துத்துவா ‘சர்க்கிரம்’ (ஆக்கிரமிப்பு).

மதுரையில் மரண சாசனங்கள்!

மின்சாரம்

மதுரை என்று சொல்லும் பொழுதே நம் கருஞ்சட்டை இயக்கத்திற்கு அலை அலையாகப் புரண்டு வந்த எதிர்ப்பு நெருப்பு அலைகள் - நமது நெஞ்சத் தடாகத்தில் துள்ளிக் குதிக்கும்.

1946ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டைப் படை மாநாட்டுக்குப் பூணூல் புல்லர்களின் நச்சுப் பாம்பு எண்ணத்தால் தீ வைக்கப்பட்டது.

அதுகுறித்து அறிஞர் அண்ணா 'திராவிட நாடு' இதழில் (26.5.1946) 'மரண சாசனம்' என்ற தலைப்பிட்டு, கருஞ்சட்டைகளின் கொள்கை இலட்சியச் சுடரை ஏந்தி நிற்பதால் நான் கொல்லப்பட்டேன் என்றால் அதைவிட மகிழ்ச்சி ஏது என்ற பொருளில் பூரித்த தோள்களை எழுதுகோலாகக் கொண்டு எழுச்சிக் கட்டுரை எரிமலையை  தமிழர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

நமது தமிழர் தலைவர் ஆசிரியரும்கூட அதே மதுரையில் (13.7.2001) "எனது மரண சாசனம்" எனும் தலைப்பில் கொள்கைக் கோபுரத்தின் மீது ஏறி நின்று முழக்கமிட்டார்.

30.9.1973 அதே மதுரையில் தந்தை பெரியாருக்குச் சிலை திறப்பும், கருஞ்சட்டைப் படை மாநாடும் எழுச்சியுடன் நடைபெற்றன.

தந்தை பெரியார் சிலையை அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் திறந்து வைத்து நாப்பறை கொட்டினார். அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுவுடைமைத் தீயில் குளித்தெழுந்த மணலி கந்தசாமி, திராவிடர் கழகத்தின் கொள்கையை எந்த அரசியல் கட்சி மேடையில் நின்றாலும் தீப்பொறி பறக்க பேசத் தவறிடாத "சுயமரியாதை சுடரொளி" மதுரை மேயர் முத்து நமது மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எல்லாம் அவ்விழாவில் பங்கேற்றுப் பகுத்தறிவுச் சாசனத்தையே எழுதினர்.

அய்யா சிலை திறப்புக்கு முன்னால் அண்ணா சிலையிலிருந்து, அய்யா சிலை திறக்கப்பட்ட மதுரை 'அவுட் போஸ்ட்' வரை அணிவகுத்த மாபெரும் கருஞ்சட்டைப்படை ஊர்வலம் மாநகரையே குலுக்கி எடுத்தது.

100 கழக வீராங்கனைகள் கையில் தீச்சட்டி ஏந்தி கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கி வந்த காட்சியைக் கண்டவர்கள், "காண்பது கனவா, நனவா?" என்று 'மூர்ச்சை'யானார்கள்.

அய்யா சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை முத்து அவர்கள் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று பகுத்தறிவுப் பகலவன் முன் முழக்கமிட்ட காட்சி எல்லாம் சாதாரணமானதா?

'1946 மாநாட்டையும் கண்டேன்; இன்று நடந்த கருஞ்சட்டை ஊர்வலத்தையும் கண்டு (அலங்கார வண்டியில் அய்யாவும், ஆசிரியர் மானமிகு கி. வீரமணியும்) உவகை கொண்டேன். இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்று ஆர்ப்பரித்தார்.

அப்பொழுது ஒரு தகவலை சொன்னார். 'மதுரை அரசு மருத்துவமனையில் 'பிராமணர்'களுக்கென்று ஒரு தனி வார்டே இருந்தது என்பதுதான் அவர் சொன்ன அந்தத் தகவல்! (சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையிலேயே பார்ப்பனர்களுக்குத் தனி வார்டு இருந்ததே - பைத்தியத்திலே கூட பார்ப்பனப் பைத்தியம் என்றால் தனி அந்தஸ்தோ - என்னே கிறுக்குத்தனம்?) சுயமரியாதைக் கொள்கை பரப்பப்படுவதற்குமுன் நாடு இருந்த அலங்கோலத்தைப் பார்த்தீர்களா?

இயக்க வரலாற்றில் எண்ணற்ற எழுச்சி ஏடுகளைப் பொறித்த அதே மதுரையில்தான் தோழர்களே, கழகப் பொதுக் குழுவும், சுயமரியாதை இயக்கத்தின் 90ஆம் ஆண்டு விழாவும், தமிழர் தலைவருக்கு மாணவரணியும், இளைஞரணியும் இணைந்து வழங்கும் பகுத்தறிவுப் பரப்புரைக்கான வாகன அளிப்பு விழாவும் முப்பெரும் நிகழ்ச்சிகளாய் நடைபெற உள்ளன. மிகச் சிறப்பான ஏற்பாடுகள் - என்று பிப்ரவரி 4 வரும் என்ற எதிர்பார்ப்பும் மிகுதியாக உள்ளது.  இந்த  அரிய விழாவில் நாங்களும் பங்கு கொண்டோம் என்று பிற்காலத்தில் பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டாமா?

வாருங்கள் - வாருங்கள் - வற்றாப் பெரு நதியாக குடும்பம் குடும்பமாக வாருங்கள் - வாருங்கள் - தோழர்களே!

Banner
Banner