மின்சாரம்


மின்சாரம்

நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த டி.கே.மாடசாமி என்னும் தோழர் ‘தின மலரில்’ வெளி வந்த ஒரு கத்தரிப்பை நமக்கு அனுப்பி வைத்தார். அது பெட்டிச் செய்தியாக தனியே இதே பக்கத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

* பார்ப்பனத் துவேஷம்

* ஹிந்தி எதிர்ப்பு

* சமஸ்கிருத எதிர்ப்பு

இந்த மூன்றையும் வைத்து தி.க.வும், தி.மு.க.வும் சுயநல வியாபாரத்தை செய் கின்றனவாம்.

லாலா லஜபதி ஒருமுறை சொன்னது தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது.

“தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங் களே துவேஷ வாதியாக இருந்து, மற்றவர் களைப் பார்த்து ‘பிராமண துவேஷி, பிரா மண துவேஷி’ என்று சொல்லுவார்கள்” என்று சொன்னதுதான் அது.

பார்ப்பனர்களும், இந்துத்துவாவாதி களும் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டு இருக்கிறார்களே, அந்த விவே கானந்தர்தான் என்ன சொல்லுகிறார்?

“ஓ, பிராமணர்களே! சமுதாயத்தில் நீங்கள் கக்கிய விஷத்தை  நீங்கள் தான் உறிஞ்சி எடுக்க வேண்டும்” என்று சொன்னாரே எந்த அர்த்தத்தில்?

நான்கு வருணத்தையும் நானே படைத் தேன். படைத்தவனாகிய நானே நினைத் தாலும் அதனை மாற்றி அமைக்க முடியாது.

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவயோனியில் பிறந்தவர்கள் (அத்தியாயம் 9, சுலோகம் 32)

இவற்றை எல்லாம் சொன்னவர் பகவான் கிருஷ்ணன் என்று சொல்லுவது யார்? இந்த கீதையை தேசிய நூலாக அறிவிக்கப் போகிறோம் என்கிற சுஷ்மா ஸ்வராஜ் யார்?

சூத்திரர்களையும், பெண்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது துவேஷம் இல்லையாம்!

எங்களை சூத்திரர்கள், வேசி புத்திரர்கள் என்று சொல்லலாமாம் -  அது துவேஷம் இல்லையாம். அதே நேரத்தில் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானக் குரல் கொடுத்தால், அதற்குப் பெயர் பிராமண துவேஷமாம்.

அந்தப் பிரம்மானானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங் களைத் தனித் தனியாகப் பகுத்தார்.

(அத்தியாயம் 1 சுலோகம் 100)

சூத்திரன் என்றால் யார்?

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்.

3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்.

4. விபசாரி மகன்

5. விலைக்கு வாங்கப்பட்டவன்.

6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.

7. தலைமுறை தலைமுறையாக ஊழி யம் செய்கிறவன்.

(அத்தியாயம் 8, சுலோகம் 415)

இவ்வளவையும் சொல்லுகிற மனுதர்ம சாத்திரத்தை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அலங்கரித்து எடுத்துச் செல்லுகிறார்களே, இவர்கள் துவேஷவாதிகள் இல்லையா?

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணை ஒத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும் மேடு பள்ளமில்லா மல் மெல்லியதாகப் பின்னி மூன்று வட மேலறை ஞாண் கட்ட வேண்டியது

(மனுதர்மம் அத்தியாயம் 2,

சுலோகம் 42)

இதில் சூத்திரர்களுக்கு  பஞ்சமர்களுக்கு இடமில்லை என்பதைக் கவனிக்க வேண் டும். இதன் பொருள் என்ன? ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பனர்கள் ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப் பதன் தாத்பரீயம் என்ன?

நாங்கள் பிராமணர் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், நீங்களோ சூத்திரர்கள் - வேசி மக்கள் என்பதை அடையாளப்படுத்தத்தானே இந்தப் பூணூல் அடையாளம்.

இந்த இழிவை எதிர்த்து குரல் கொடுத் தால் துவேஷமா? இந்த இழிவுக்குக் காரண மானவர்கள் துவேஷமே அறியாத பரிசுத்த ஆவியில் பொரித்து எடுக்கப்பட்டவர் களாம்.

மனுவாதி ஒரு குலத்துகொரு நீதி என்று மனோன்மணியம் சுந்தரனார் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதானே!
எந்தக் காலத்திலோ நடந்தவையை யெல்லாம் எடுத்துக்காட்டி பேசலாமா என்று சில அதிமேதாவிகள் துள்ளி குதிக்கக் கூடும்!

இன்றைக்கும் பூணூல் அணியவில் லையா? இப்பொழுதும் ஒவ்வொரு வருட மும் பூணூலைப் புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண்டாட வில்லையா பார்ப்பனர்கள்?

பூணூல் அணிவதே துவிஜாதி (இரு பிறவியாளன்) பார்ப்பான் என்ற உயர்ஜாதி தத்துவத்தின் ஏற்பாடுதானே.

இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் - அதற்குரிய பயிற்சியைப் பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பெரியார் திட்டத்தை செயல் வடிவமாக்க அரசு சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் பார்ப் பனர்கள் செல்லுவது ஏன்?

சூத்திரன் சாமி சிலையைத் தொட்டால் அந்த சாமி தீட்டுப்பட்டு விடும், சாமி செத்து விடும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்பவர்கள் துவேஷம் சிறிதும் அற்ற தூய மாமணிகளா?

பார்ப்பான் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் வரை அதன் அடையாளமாக பூணூலைத் தரித்துக் கொண்டிருக்கும் வரை, ஜாதியின் கடைசிச் செதில் இருக்கும் வரை - சங்கரமடத்தில் பார்ப்பனர் தவிர மற்றவரும் அமரும் நிலை ஏற்படும் வரை - அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை என்ற நிலைப்பாடு நிலை நிறுத்தப்படும் வரை, நீங்கள் சொல் லும் ‘அந்தப் “பிராமண துவேஷம்”, ஓங்கி ஒலிக்கவே செய்யும். ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி’ என்பது இடி முழக்க மாகவே ஒலிக்கும்!  ஒலிக்கும்!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசும், அதன் வழிகாட்டியான ஆர்.எஸ். எசும் அவ்வப்போது இட ஒதுக்கீடு தேவை யில்லை என்று தொடர்ந்து பேசிவந்தது, இந்தப் பேச்சுகள் பிகார் தேர்தலில் பலமாக எதிரொலித்தது. இதன் காரணமாக வரும் 2019-ஆம் தேர்தல் வரை இட ஒதுக்கீடு குறித்து எதுவும் பேசப்போவதில்லை என்று முடிவிற்கு பாஜகவும் அதன் குருவான மோகன் பகவத்தும் முடிவெடுத்துவிட்டார் கள் போலும், ஆனால் இந்த அமைதியின் பின்னால் ஒரு பெரும் ஆபத்து உள்ளது.

இவர்கள் துவக்கத்தில் இருந்தே இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றனர். இவர் களின் மனுதர்மம் சூத்திரர்களுக்கு கூலி கூட கொடுக்கக் கூடாது என்று தான் எழுதி வைத்துள்ளது, அதைத்தான் அரசமைப்புச் சட்டமாக கொண்டுவர கனவு கண்டு கொண்டு வருகின்றனர்.

மண்டல் ஆணையம் பரிந்துரையை ஏற்று வி.பி.சிங் ஆட்சி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அறிவித்த பேது, அதன்விளைவாக அவரது ஆட்சியையே கவிழ்த்தவர்கள் இவர்கள்.

பாஜக 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் மத்திய அரசின் ஒவ்வோரு பதவியிலும் இடஒதுக்கீடு எள்ளி நகை யாடப்பட்டு வருகிறது, மத்திய உளவுத்துறை பிரிவின் வேலைவாய்ப்பிற்கான அறி விப்பை சமீபத்தில் உளவுத்துறை வெளி யிட்டுள்ளது.

பொதுவாக அரசமைப்புச் சட்டத்தின் படி

மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 27 விழுக்காடு, பட்டியலினத்தவர்கள் 15 விழுக்காடு, பழங் குடியினர் 7.5 விழுக்காடு என இருக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றமும் உறுதிபடுத்தியுள்ளது, இதுநாள் வரை இதன் படிதான் வேலை வாய்ப்புகள் நடந்து வந்தது.

இந்த ஆண்டு மத்திய புலனாய்வுத் துறைக்கான அதிகாரிகள் தேர்வுகள் நடை பெற உள்ளன. 1300 பணியிடங்களில் இட ஒதுக்கீடு விதிகளின்படி இதர பிற்படுத்தப் பட்டவர்களில் 351 பேர், பட்டியலினத்த வர்களில் 195 பேர், பழங்குடியினத்தவர் களில் 97 பேர் என்று இருக்கவேண்டும்.  ஆனால் எந்த ஒரு விதியையும் கடை பிடிக்காமல் அவர்களாகவே ஒரு கணக்கை வைத்துக்கொண்டு உயர்ஜாதியினருக்கு 75 விழுக்காடு இடம் ஒதுக்கிவிட்டனர் அதாவது 1300 இடங்களில் 951 இடங்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வெறும் 184 இடங்கள், பட்டியலினத்தவர்களுக்கு 109 இடங்கள், பழங்குடியினத்தவருக்கு 56 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எந்த விதியின் படி இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. சமீப காலமாக அரசமைப்புச்சட்ட திருத்தம் நடந்ததாக தெரியவில்லை. ஒருவேளை இந்த அரசு ரகசியமாக  இடஒதுக்கீட்டு சட்டத்தை திருத்தம் செய்துள்ளதா? இப்படி அரசமைப்புச்சட்ட விதிகளை படுகொலை செய்யும் துணிச்சல் இந்த அரசுக்கு எப்படி வந்தது?

மோடி - தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதை வெளிப் படையாகவே கூறி வாக்குகளைப் பெற்றார். அப்படி வாக்குகளைப் பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த மக்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடைக்கும் உரிமையை பறிக்கும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத் தார்கள்.

(குறிப்பு: திறந்த போட்டிக்குப் பதிலாக UR - Unreserved என்று குறிப்பிட்டு இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடியல்லவா?)


இதற்குப் பெயர் தான் பார்ப்பன தந்திரம்

தமிழ் நாட்டில் நீட் தேர்வு வேண்டாம், விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி, அரசுக்கு அழுத்தம் தந்த  திராவிடர் கழகம், திமுக, இடதுசாரி கட்சிகள் பொதுக்கல்வி பாதுகாப்புக்கான மேடை அமைப்பு இவைகள் காரணமில்லையாம்.

நீட் விலக்கு குறித்து தமிழக அரசு இயற்றிய சட்டம் மத்திய அரசின் எந்த துறையில் இருக்கிறது என்று எனக்கு தெரியாது என்று சொன்ன மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், நீட் தேர்வு விலக்கு தமிழகத்திற்கு கிடையாது என்று சொன்ன அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தான் காரணம் என்று ஹிந்து பத்திரிக்கை செய்தி வருகிறது என்று சொன்னால், இதற்குப் பெயர் பார்ப்பன திமிர் என்பதல்லாமல் வேறு என்ன?

சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட முக நூல் (13.8.2017) பதிவை மீண்டும் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும்:

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரோ, தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய உள்துறை அமைச்சரோ, நீட் தேர்வு பற்றி பதில் சொல்லாத நிலையில், இதற்கு சம்மந்தமே இல்லாத, வணிகத்துறை அமைச்சர் பதில் சொல்வதில் இருக்கிறது, பாஜகவின் அரசியல்.

NEET waiver: Nirmala Sitharaman efforts helped Tamil Nadu,
It is audacious and shameful to write a news item in the HINDU that the efforts of Nirmala Seetharaman yielded one-year exemption to NEET for Tamilnadu, ignoring her earlier statement that she is not aware where the file relating to NEET exemption of TN govt. is lying and Minister Pon.Radhakrishnan’s earlier statement that exemption to TN for NEET is not possible.
The news is published with the sole aim of suppressing the consistent opposition to NEET waged by social organisations, DK, DMK, Left Parties and Teacher’s front.
This is the cunningness of brahminism.

நிர்மலா சீதாராமனை முன்னிறுத்துவதன் பின்னணி என்னவோ!‘பெரியார் நாடு’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பாராட்டப்பட்ட உரத்தநாடு - அதன் சாதனைத் திசையில் மேலும் ஒரு மைல்கல்லைப் பதிக்க இருக்கிறது.

வரும் 19ஆம் தேதி சனி மாலையில்தான் அந்த மகத்தான நிகழ்ச்சிக்கு மாலை சூட்டப்படுகிறது.

ஆம். ஆயிரம் ‘விடுதலை’ சந்தாக்களை 55ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியரிடம் அளித்து மகிழ இருக்கிறது.

அவர்கள் மட்டுமா? அந்த நிகழ்ச்சிக்கு நேரில் வருபவர்கள் மட்டுமா. இனவுணர்வுள்ள சுயமரியாதையுள்ள தமிழர்கள், எங்கு வாழ்ந்தாலும் இந்தச் செய்தியை கேட்டு இறும்பூதெய்துவார்கள் என்பதிலும் அய்யமுண்டா?

நமது இனத்துக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவாளர் களும் பலபட மகிழ்வார்கள் என்பதில் அய்யமில்லை.

27.11.1999 தொடங்கி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தமிழர்களின் ‘விடுதலைக்காக’ தனது ஒவ்வொரு மூச்சையும் விட்டுக் கொண்டிருக்கும் ‘விடுதலை’க்கான சந்தாக்களை அளித்துக் கொண்டே இருக்கின்றனர். முதன்முறையாக 525 சந்தாக்களை அளித்தனர். 17ஆண்டுகளாக இந்த அரும்பெரும் சாதனைகளை சலிக்காமல் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றனர். தவணை முறை கணக்குச் சொன்னால் இப்பொழுது அவர்கள் அளிக்கப் போகும் தவணையின் எண்ணிக்கை 32 ஆகும்.

இந்தச் சாதனைகளை மற்றக் கழக மாவட்டங்கள் நிகழ்த்தியது இல்லை என்பதை விட எந்த அரசியல், சமூகக் கட்சிகளும் கூட நிகழ்த்தியதில்லை.

‘விடுதலை’யால் நீக்கப்படாத கெடுதலைகள் இல்லை - மட்டம் தட்டப்படாத தறுதலைகளும் கிடையாது.

இனமானமும், பகுத்தறிவும் ‘விடுதலையின் இரு விழிகள், மானமும், அறிவும் மனிதனுக்கழகு என்று - குறளைவிட குறுகிய சொற்களால் உலகளந்த உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உயரிய எண்ணங்களை உலகெங்கும் எடுத்துச் சொல்லும் தூதுவன் அன்றோ ‘விடுதலை’.

தந்தை பெரியாரின் போர்வாள் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் மொழியில் கூறவேண்டும் என்றால் - தமிழரின் இல்லம் என்பதற்கு அடையாளம் தானே ‘விடுதலை’.

‘விடுதலை’ வாழ்ந்தால், வளர்ந்தால் தமிழர்கள் வாழ்வார்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தலை நிமிர்வார்கள். பெண்கள்  பீடு நடை போடுவார்கள். சமூக நீதிக்கு உத்தரவாதம் கிடைக்கும். ஜாதிக்குச் சாவு மணி அடிக்கப்படும். மூட நம்பிக்கைக்கு முடிவுக் கொள்ளி வைக்கப்படும். பகுத்தறிவுக் கொடி பட்டொளி வீசும்.

பிற்போக்குத்தனங்கள் குதிகால் பிடறியில் அடிபட ஓட்டம் பிடிக்கும்! முற்போக்குத் தத்துவங்கள் முதல் வரிசையில் கொடி பிடித்து அணி வகுக்கும்.

சமதர்மமும் - சமத்துவமும் கைகோர்த்து சரி நிகர் சமாதானத்தை சரித்திரத்தில் நிலை நாட்டும்.

கழகத் தோழர்களே! தஞ்சாவூர் மாவட்டத் தோழர்களால், உரத்தநாடு வட்டார தோழர்களால் முடியக் கூடியது உங்களால் முடியாதா, ஏன் முடியாது? கண்டிப்பாக முடியும். தேவை முயற்சியும், தன்னம்பிக்கையும், சரியான திட்டமிடலுமே!

‘விடுதலை’ யால் பலன் பெறாத பயன் துய்க்காத ஒரே ஒரு தமிழன் உண்டா? தமிழ்நாட்டில் நன்றி உணர்வு வற்றிடவில்லையே! அதனை பயன்படுத்திக் கொள்வோம். பாடுபடுவோம்!

பகுத்தறிவுப் பெரு நதியை நாடெங்கும் பாய்ச்சுவோம்! உரத்தநாடு வழிகாட்டி விட்டது - ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - ஓங்கிப்  பணி முடிக்க எழுவீர்! எழுவீர்!!  எதையும் கேட்டிராத நம் தலைவர் ‘விடுதலை’ சந்தாவைத் தானே வாய்விட்டுக் கேட்கிறார். உயிரையும் தருவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் விடுதலை சந்தாக்களைத் தருவோம் - வாரி வாரி வழங்குவோம்.

வாழ்க பெரியார்! வெல்க விடுதலை!
- மின்சாரம்

- கவிஞர் கலி.பூங்குன்றன்

உத்திரப்பிரதேச மாநிலம் ஜாமியத் உலாமா இ ஹிந்த் என்னும் இசுலாமியர் களின் அமைப்பு மூன்று நாள் மாநாட்டினை டியோ பாண்ட் எனும் இடத்தில் நடத்தி, ‘வந்தே மாதரம்’ பாடலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாடல் இசுலாத்துக்கு எதிரானது என்றும் தீர்மானம் கூறியது. அம்மாநாட்டில் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க் ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம்யெச்சூரி போன்றவர்கள் பங்கு கொண்டனர்.

‘வந்தே மாதரம்’ பாடல் தேசபக்திப் பாடல் என்றும், தாய்நாட்டை வணங்குகி றோம் என்பது பொருள் என்றும், அதனை எதிர்த்துத் தீர்மானம் போட்ட மாநாட்டில் எப்படி உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்கேற்கலாம் என்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட சங்பரிவார்க் கூடாரம் கூச்சல் போடுகிறது.

1) “வந்தே மாதரம்” பாடல் என்பது என்ன?

ஒரு தேச பக்திப் பாடலை இசுலாமி யர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அப்படி யென்றால் இசுலாமியர்களுக்குத் தேசபக்தி இல்லையா? சங்பரிவார் வகையறாக்கள் கூறி வருவது மெய்தானோ என்ற அய்யப் பாடு மக்கள் மத்தியில் நிலவுதல் இயற் கையே!

அந்தப் பாடல் எங்கிருந்து வந்தது? அதனை எழுதியவர் யார்?அதன் உள்ள டக்கம் என்ன?  என்பதுதான் முக்கியமாகும். வங்காளத்தில் கண்டபுரத்தில் 1838  ஆம் ஆண்டில் பிறந்து  1894-இல் மரணமுற்ற பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப் பனரால் வங்கமொழியில் எழுதப்பட்ட ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் இடம் பெற்ற பாடலே இந்த “வந்தே மாதரம்”

2) இசுலாமியர்களுக்கு இந்தப் பாடலின் மீது என்ன வெறுப்பு?

ஆனந்த மடம் நாவலில் காணப்படும் கதையம்சமும், உரையாடலும் இசுலாமியர் களுக்கு விரோதமானவை என்கிற அள வில் மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்கிற உணர்வுதான் இந்த நாவலின் அடி நாதமாகும்.

நாவலின் கதை நாயகன் பவாநந்தன் வங்காள முசுலிம் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்கப் படை திரட்டுகிறான்.

மகேந்திரன் என்ற ஒருவனைச் சந்தித்து தமது படையில் சேருமாறு அழைக்கின்றான். தாய்நாட்டை முசுலிம்களிடமிருந்து காப் பாற்ற வேண்டும் என்று கூறுகிறான். ஏன் முசுலிம் மன்னனின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்?  மகேந்திரனின் கேள்வி இது.

நமது மதம் போச்சு, நமது வருணாசிரம தருமம் போச்சு. ஏன், இப்பொழுது நமது உயிரக்குக்கூட ஆபத்து வந்து விட்டது. இந்த முசுலிம்களை விரட்டாவிட்டால் நமது இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது!  என்றெல்லாம் வீராவேசம் பேசுகிறான்.

உன் ஒருவனால் இதனை சாதிக்க முடியுமா?  மீண்டும் மகேந்திரனின் வினா இது. பவாநந்தன் பேசுகிறான். “வந்தே மாதரம்” பாடலிலிருந்து சில வரிகளை மட்டும் கம்பீரமாகப் பாடுகிறான். அதற்கு விளக்கமும் கூறுகிறான். “ஏழு கோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடி கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரத மாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதுதான் அந்தப் பாடல் வரிகளின் பொருள்.

மகேந்திரன் மசியவில்லை. முசுலிம் களின் வீரத்தையும், படைபலத்தையும் எடுத்துக் கூறுகிறான். விடவில்லை பவா நந்தன்.

“முசுலிம்களா? அவர்கள் பயங்காளிகள், கடைந்தெடுத்த கோழைகள். உயிருக்கு ஆபத்து நேரும்போது, ஆங்கிலேயர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட மாட்டார் கள். வியர்வை வடியத் தொடங்கும்போது முசுலிம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் வெடிகுண்டு விழுந்தால் போதும், முசுலிம்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்!  என்கிறான் கதை நாயகன் பவாநந்தன். ஆனாலும் மகேந்திரன் அவன் விரித்த வலையில் வீழ்ந்தான் இல்லை.

முயற்சியைக் கைவிடவில்லை - அந்த முசுலிம் எதிரி. மறுநாள் என்ன செய்கி றான்? ஆனந்த மட ஆலயத்துக்கு அழைத் துச் செல்லுகிறான். ஒரு விஷ்ணுவின் விக்கிரகம், அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் உருவம்!

“யார் அந்தத் தேவி” கேட்கிறான் மகேந் திரன். “ஆ! அவள்தான் நம் பாரத மாதா. நாமெல்லோரும் அந்த பாரத மாதாவின் புத்திரர்கள்”  என்கிறான் கோயில் பூசாரி.

அடுத்து ஒரு காட்சி “ஜெகத்தாத்ரி” ஒளிமயமாகக் காட்சி அளிக்கும் ஒரு சிலை காட்டப்படுகிறது.

ஆதியிலே நமது பாரத மாதா இப்படித் தான் ‘ஜெகஜோதி’யாகக் காணப்பட்டாள். இப்பொழுது எப்படியிருக்கிறாள் தெரி யுமா? இதோ ஒரு காட்சி! நிர்வாணமாகக் காட்சியளிக்கும் ஒரு கருங்காளி. யார் இவள்?  கேட்கிறான் மகேந்திரன்.

“அன்று ஜெகஜோதியாகக் காட்சிய ளித்த நமது பாரத மாதா இப்போழுது இந்த அலங்கோலத்திற்கு ஆளானாள்” என்று கூறுகிறான்.

மூன்றாவது ஒரு காட்சி: பத்து கரங் களுடைய துர்க்காதேவி! “நமது எதிரிகள் முசுலிம்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால் நமது அன்னை பாரததேவி இந்தக் கண் கொள்ளாக் காட்சியைத் தருவாள்” என்றான் ஆனந்தமட பூசாரி.

அதோடு விடவில்லை. மூளையில் காவி சாயத்தை ஏற்ற வேண்டுமே! லட்சுமி, சரஸ்வதி விக்கிரகங்களையும் மகேந்தி ரனுக்குக்காட்டி, “பத்துக் கரங்களையுடைய துர்க்காவே” தாமரைமலர்மேல் வீற்றிருக் கும் லட்சுமிதேவியே! கல்வித் தாயான சரஸ்வதியே! போற்றி! போற்றி!!” என்கிற பூசாரி புளகாங்கிதமாகப் பாடி ஆனந்த தாண்டவமே ஆடுகிறான்.

இவ்வளவு வரைதான் தாக்குப்பிடிக்க முடிந்தது மகேந்திரனால். ஆம்! தடுமாறி விடுகிறான்  பவாநந்தன் விரித்த வலை யிலே முற்றிலுமாக சரணாகதி அடைந்து விடுகிறான்.

படைக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார் கள். திரட்டப்படுபவர்கள் ஒவ்வொருவரும் சனாதன தருமத்தைக் காப்பாற்றுவதற்காக உற்றார் உறவினரை மறந்து, உயிர்த்தியாகம் செய்யக்கூடத்தயார் என்று சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அந்தப் ‘புரட்சிக்காரர்கள்’ அனுப்பப் பட்ட கிராமப் பகுதிகளில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்களாம்?

பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம் நாவலில் இப்படி வருணிக்கிறார்:

“சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா?  என இளைஞர்களைத் திரட் டிச் சென்று முசுலிம் கிராமங்களுக்குச் சென்று தீயிடுவார்கள். முசுலிம்கள் நாலா திசைகளிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். முசுலிம்களின் சொத்துக் கள் சூறையாடப்படுகின்றன. கொள்ளை யடிக்கப்படும் பொருள்கள் விஷ்ணு பக் தர்களுக்குக் காணிக்கையாக்கப்படுகின் றன. பொருள்கள் கிடைக்கக் கிடைக்க இந்தப் படையில் தாங்களும் சேர்ந்து கொள்வதாக பலரும் முன் வருகிறார்கள்.

ஆனந்த மடம் நாவல், எட்டாம் அத்தி யாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றி சொல்கிறது.

“திடீரென ஒரு முழக்கம். முஸ்லிம் களைக் கொல்லு!  கொல்லு! என ஒரே ஆர்ப்பரிப்பு! வந்தே மாதரம்”  என்ற பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.

அடுத்து ஒரு குரல் “சகோதரர்களே! மசூதிகளையெல்லாம் தரை மட்டமாக்கி, அந்த இடத்திலே ராதா மாதவர் ஆலயத் தைக் கட்டும் நாள் விரைவில் வரும்!”  என்று பிரசங்கம்.

“வந்தே மாதரம்” பாடலின் தாத்பரியமும் பின்புலமும் இதுதான்.

ஆனந்த மடம் நாவலின் நடுநாயகமான வந்தே மாதரம் பாடலினை முசுலிம்கள் கடுமையாக எதிர்ப்பதன் நியாயம் இப் போழுது புரிந்திருக்க வேண்டுமே!

ஒரு கால கட்டத்தில் இந்த வந்தே மாதரத்தைத் தூக்கிப் பிடித்தது காங்கிரசு! அப்பொழுது காங்கிரசு என்றாலே, பார்ப் பன தர்பார்தானே! - அன்றைய பா.ஜ.க. சங்பரிவார் என்றுகூட அதனைச் சொல்ல முடியும்.

பாரதியார் கூட வந்தே மாதரத்துக்கு வக்காலத்து வாங்கியவர்தான்!

நொந்தே போயினும்

வெந்தே மாயினும்

நந்தேசத்தவர்

உவந்து சொல்வது

வந்தே மாதரம்

பாரதியைத் தொற்றிப் பிடித்த பார்ப்பன வாடைக்கு இந்த ஒருசோறு பதம்போதும்.

3) சட்டமன்றங்களில் என்ன நடந்தது?

1937-இல், ஒரிசா சட்டப் பேரவையில், “வந்தே மாதரம்” தேசியகீதமாகப் பாடப்பட் டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. அமர்ந்தேயிருந்தனர். இது சட்டப் பேர வைத்தலைவரிடமும் முறையிடப்பட்டது. தேசிய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப் பதும் எழுந்திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறிக் கழன்று கொண்டு விட்டார் சபாநாயகர்.

ஒரிசாவில் மட்டுமல்ல அதே காலகட்டத் தில் (1938-இல்)சென்னை மாநிலத்தில் என்ன நடந்தது? சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) அப்பொழுது பிரதமர். (அப்பொழுது பிரதமர் என்றுதான் பெயர்)

சட்டப் பேரவைத் தலைவராக இருந் தவர் ஆந்திரப் பகுதி  - கிழக்கு கோதாவரி யைச் சேர்ந்த புலுசுசாம்பமூர்த்தி  வழக்கு ரைஞர்  சுதந்திரப் போராட்டத்துக்காக அத்தொழிலை உதறி எறிந்தவர் - மேல் சட்டை கூட அணியாதவர்.

வந்தே மாதரம் பாடலை சட்டமன்றம் தொடங்கப்படும் போது பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் ஆசை! ஆசை நிறைவேற்றப்பட்டது. முசுலிம் லீக் உறுப் பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்.

வறட்டுத்தனமாகக் கூச்சல் போட வில்லை அவர்கள்; வளமான காரணத்தை யும் எடுத்துக் கூறினார்கள். இந்துக் கடவுள் களைப் போற்றித் துதிக்கும் ஒரு பாடலை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்க் கேள்வி வைத்தார்கள்.

பார்வதி, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய இந்து மத முத்தேவிகளும் அப்பாடலில் துதிக்கப்படுகிறார்கள். எனவேதான் இந்த எதிர்ப்பு. குல்லுகப்பட்டர் ஆச்சாரியார் (ராஜாஜி) பிரதம அமைச்சர்ஆயிற்றே! இதற்கு ஏதாவது ஓரு வழி செய்ய வேண் டாமா? அப்படி செய்யாவிட்டால் அவர் எப்படி ராஜாதந்திரி யாவார்?

சபை அலுவல் தொடங்கும் நேரம் காலை 11.00 மணி; இதற்குமுன்னதாக “வந்தே மாதரம்” பாடிவிடலாம்; மற்றவர்கள் இதற்குப் பின் சபைக்கு வரலாம்  என்பது தான் அந்த சமாதான நடவடிக்கை.

இன்னொன்றையும் கூட அவர் சேர்த் துக் கூறினார்: வேண்டுமானால் வந்தே மாதரத்துடன் மற்ற மதத்துப்பாடல்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்!  என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார்.

ஆனால் முசுலிம்களிடம் அந்தப் பருப்பு வேகவில்லை. சட்டமன்றத்தில் குறிப்பிட்ட மதத்தின் கடவுள்கள் பெயரில் பாடல் இடம் பெறக் கூடாது என்பதிலே மிக உறுதியாக இருந்தார்கள்.

வேறுவழியில்லை, வந்தே மாதரம், கைவிடப்பட்டது. கெஞ்சினால் மிஞ்சுவா ர்கள். மிஞ்சினால் கெஞ்சக் கூடியவர்களா யிற்றே பார்ப்பனர்கள்.

72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரச்சினை தலைதூக்கி நிற்கிறது.

சவுத்துப்போய்க் கிடக்கும் சங்பரிவார்க் கூடாரம் இதனைக் தூக்கிப்பிடித்து உயிர் தப்பித்துக் கொள்ளலாமா என்று முண்டிப் பார்க்கிறது. இது ஏதோ குறிப்பிட்ட முசுலிம்களின் பிரச்சினை மட்டுமல்ல.

மதச்சார்பற்ற சக்திகளின் மகத்தான பிரச்சினையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்திலே உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்றித் தீர வேண் டிய பிரச்சினையும் கூட!

4) பார்ப்பனியத்தின் நிலைப்பாடு என்ன?

சங்பரிவார் என்பது ஒரு முகமூடி; அதனுள் உறைந்திருப்பது பங்கிம் சந்திர சட்டர்ஜி என்னும் பார்ப்பனியம். அதற்குள் பதுங்கிக் கிடப்பது ‘ஆனந்த மடங்கள்’ என்பதை மறந்துவிடக்கூடாது.

முசுலிம் மசூதிகளை இடியுங்கள்! அந்த இடத்திலே ராதா மாதவரின் ஆலயத்தைக் கட்டுங்கள்!  என்று ‘ஆனந்தமடம்’ நாவலில் கேட்ட அதே சூளுரை தானே 1992 டிசம்ப ரில் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பின் போது கேட்டோம்.

அன்றைக்கு “வந்தே மாதரம்” பாட வேண்டும் என்று வலியுறுத்திய அதே குரலைத்தான் பாரதிய ஜனதா ஆட்சியின் போது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ‘சரஸ்வதி வந்தனா’ பாடவேண்டும் என்ற குரலாக ஒலித்தது.

காலம் மாறலாம்; ஆனால் காவிகளின் பார்ப்பனியத்தின் கபடநெஞ்சம் மட்டும் மாறுவதில்லை; மாறுவதேயில்லை!

 

திருவாரூர் மண்டல திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (16.7.2017) 6 மணிக்கு திருவாரூர் வி.பி.மகாலில் நடைபெற்றது.

ஒரு கலந்துரையாடலா? கழகத் தோழர்கள், மகளிர் அணியினரின் எழுச்சி மிக்கப் பாசறைக் கூட்டமா? என்று வியக்கும் அளவில் அக்கலந்துரையாடல் இருந்தது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கூடத் தந்தது!

எப்பாழுதும் திருவாரூர், நாகை மாவட்டங்கள் என்பவை கருஞ்சட்டைத் தோழர்களின் பாடி வீடாகவே இருந்து வந்திருக்கின்றன. 1957 இல் தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்புப் போராட்டமான - ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தில் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த கருஞ்சட்டைத் தோழர்கள் ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களுமாக குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றனர் என்பது சாதாரணமா?

திராவிடர் கழக விவசாய சங்கம் என்று சொன் னாலும், அவை வெறும் தொழிற்சங்கமல்ல - கழகக் கோட்பாடுகளை, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அணுவும் பிறழாது கடைப்பிடிக்கும் கருத்தோட்டமிக்கக் குடும்பங்கள் அவை.

கழகப் போராட்டம் என்றால், ஆண்களைவிட பெண்கள் முன்வரிசையில் நிற்கக் கூடியவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் காவிரி நீர் உரிமைப் போராட்டம் திருவாரூரில் நடைபெற்றபோது ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.

அவ்வளவுப் பேர்களையும் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் செல்ல இயலாத கையறு நிலைக்குக் காவல்துறை ஆளானபோது - பகுதிப் பேர்களை மட்டும் கைது செய்கிறோம் - மற்றவர்களை ஊர் திரும்பச் சொல்லுங்கள் என்று காவல்துறையினரே கேட்டுக் கொண்ட நிலையில், பெண்கள் திரும்பிச் செல்லத் தயாராக இல்லை என்பது இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய செய்தியாகும்.

அரசியல் கட்சிகள் அப்பகுதிகளில் காலூன்ற எடுத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாம் முறியடிக்கப்பட்டதும் உண்டு!
ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கலந்துரையாடலில் கழகத் தலைவர் சந்திக்கிறார் என்றவுடன் குடும்பம் குடும்பமாக திருவாரூரில் கூடிவிட்டனர்.

மாலையில்தான் கலந்துரையாடல் என்றாலும், காலைமுதலே கழகக் குடும்பத்தினர் திரள ஆரம்பித்துவிட்டனர் கழகத் தலைவர் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சந்தித்த வண்ணமாகவே இருந்தனர்.

பழங்களை அளித்தும், மாலைக்குப் பதில் ரூபாய் அளித்தும், பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டக் கோரியும், ஒளிப்படங்களை எடுத்துக்கொண்டும் தங்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

அந்த ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரடியாகவே அறிந்தவர் தமிழர் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், பிள்ளைகள்பற்றி எல்லாம் பெயர் சொல்லி விசாரித்தார்.

கழகக் குடும்பத்தினர் மட்டுமன்றி, பல கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கழகத் தலைவரைச் சந்தித்த வண்ணம் இருந்தனர்.

நேற்று காலை 10 மணியளவில் நீடாமங்கலத்தில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளிகள் ஆ.சுப்பிரமணியம், மேனாள் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கா.கணபதி (மூலங்குடியில்) ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அந்தச் சுயமரியாதைச் சுடரொளிகளின் படங்களைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார் கழகத் தலைவர்.

அவ்விரு நிகழ்ச்சிகளிலும் கழகத்திற்கு அப்பாற்பட்ட தோழர்களும், கட்சிப் பிரமுகர்களும் கலந்துகொண்டு கழகத் தோழர்களின் கொள்கைப்பற்று பற்றியும், திராவிடர் கழகத்தில் மட்டுமேதான் வாழையடி வாழையாக குடும்பம் குடும்பமாகக் கொள்கை வழுவாமல் வாழ்ந்து காட்டும் வெற்றியையும் மனந்திறந்து பாராட்டினார்கள்.

மறைந்து கழகத் தோழர்கள் அந்தப் பகுதி மக்களால் கட்சிகளைக் கடந்து எந்த அளவு மதிக்கப்பட்டனர் - மதிக்கும் அளவுக்கு வாழ்ந்து காட்டினார்கள் என்பதை எண்ணும்பொழுது கழகத்திற்கு மிகவும் பெருமையானதாகவும், பெருமிதமாகவும் இருப்பதை உணர முடிந்தது.
எங்கள் தோழர்கள் துறவிகளுக்கும் மேலானவர்கள். துறவிக்குக்கூட அடுத்த ஜென்மத்தில் மோட்சத்திற்குப் போகவேண்டும் என்ற ஆசை உண்டு; எங்கள் தோழர்களுக்கு அந்த மூடத்தனமான மோட்சத்திலும் நம்பிக்கை கிடையாது.

தங்கள் வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டு ஊருக்கு உழைக்கக் கூடியவர்கள். எந்தப் பலனையும் கைமாறாக எதிர்பாராமல் இலட்சியத்தை ஈடேற்ற பாடுபடக் கூடியவர்கள்; இலட்சியத்திற்காக இன்னுயிரையும் இழக்கத் தயாராக உள்ளவர்கள் என்று குறிப்பிடுவார் தந்தை பெரியார் அவர்கள்.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் போராட்டத்தில் கைதாகி சிறைச்சாலையில் பிறந்த அந்தக் குழந்தைக்குச் ‘‘சிறைப் பறவை'' என்று பெயர் சூட்டப்பட்ட வரலாறு எந்த நாட்டில் உண்டு - எந்தக் கட்சியில்தான் உண்டு?
கலந்துரையாடல் கூட்டத்தில் இயக்கத்தின் செயல்பாடுகள், கால வளர்ச்சிக்கு ஏற்ப செயல்பாடுகள் முன்னெடுப்பது குறித்துக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி விருந்துடன் கூடிய குடும்பங்களின் சங்கமம், சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனை வளாகத்தில் மகளிர் பயிலரங்கம், மருத்துவப் பரிசோதனைகள் - மாலை மகளிர் விவசாய மாநாடு - விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அடுத்த வாரிசுகளுக்கான பயிற்சிப் பட்டறை - கழகப் பொறுப்புகளுக்கு அடுத்த தலைமுறையினரை வழிகூட்டுதல், புதிய பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

மகளிரணி, மகளிர்ப் பாசறைகளின் செயல்பாடுகளைப் பாராட்டிய கழகத் தலைவர் அவர்கள், மாணவர், இளைஞரணியினரியின் செயல்பாடுகள் பக்கம் கவனம் செலுத்தி மேலும் வேகமாக எழுச்சியுடன் செயல்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார்.
நாகையில் கோட்டவாசலில் நகரின் நுழைவு வாயிலில் திராவிடர் கழகம் வரவேற்பு அளிப்பதுபோல, அமைந்துள்ள பெரியார் கோட்டப் புதுப்பிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்படவேண்டும் என்று கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

கழகம் மேலும் வலுவுடன் தீவிரமாக செயல்படுவதற்கு ஏற்ற வகையில் மண்டல, மாவட்ட, ஒன்றிய பகுதிகளுக்குப் புதிய பொறுப்பாளர்களைக் கழகத் தோழர் அறிவித்தார்.

ஆர்வப் பெருக்குடன் மண்டலக் கலந்துரையாடலில் பங்கேற்க வந்த கழகக் குடும்பத்தினர் புதிய முறுக்குடன், உத்வேகத்துடன் பிரியா விடை பெற்றுச் சென்றனர். கழகத் தலைவரோ கடுஞ் சுற்றுப் பயணத்திலும் இளைப்பாறக் கிடைத்த குளிர் நிழலாய், தருநிழலாய் இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் திருவாரூரில் நடைபெற்றது ஒரு கலந்துரையாடல் அல்ல- ஒரு காவியம்!
குறிப்பு: இந்நிகழ்ச்சிகளில் எல்லாம் கழகத் தலைவருடன் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.

Banner
Banner