எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தக வெளியீட்டு விழாவல்ல - போர்ச் சங்கு!

தொகுப்பு:மின்சாரம்

சென்னை - தமிழ் மண் பதிப்பகத்தின் உரிமையாளரான மானமிகு இளவழகன் அவர்கள் அடிப்படையில் பெரியாரி யல்வாதி! தமிழ் மானம், தமிழர் மானம் என்கிற தண்ட வாளத்தில் பயணிக்கக் கூடியவர்.

எத்தனையோ பதிப்பகங்கள் நாட்டில் உண்டு ஆனால் தமிழ் மண் பதிப்பகம் உண்மையிலேயே வித்தியாசமானது.

சிறுசிறு நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் உண்டு. இளவழகனின் தமிழ்மண் பதிப்பகமோ எதனையும் முழுமை யாக முடிக்க வேண்டும் என்ற முனைப்புக்குச் சொந்தக்காரர்.

பாரதிதாசன் அவர்களின் படைப்புகளைப் "பாவேந்தம்" என்ற தலைப்பில் வெளியிட்டது போலவே இப்பொழுது மறைமலையடிகளாரின் படைப்புகளை "மறைமலையம்" எனும் தலைப்பின்கீழ் 34 தொகுதிகளாக கொண்டு வந்ததற் காக தமிழுலகம், காலங் கடந்ததும் அவருக்கு வணக்கத் தையும், வாழ்த்தையும் நன்றியுணர்ச்சியோடு கூறும் என்பதில் அய்யமில்லை.

இதுவரை கா. அப்பா துரையார், உரைவேந்தர் தமிழ்த் தொகை  தொகுதி, சாமி. சிதம்பரனார் நூற்களஞ்சியம்,  மயிலை சீனி வெங்கடசாமி ஆய்வு களஞ்சியம்  தொகுதி, தமிழ்ச் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார்  தொகுதி, மறைமலையம் மறைமலையடிகள் பேச்சும் எழுத்தும்  தொகுதி, மு. ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக் களஞ்சியம், பாவேந்தம் தொகுதி, வள்ளுவர் வளம் தொகுதி,  இளவரசு இரா. முனைவர், ராமநாதன் க.மு.ச.இ, அன்பரசு முனைவர்,  இளங்குமரனார் முதுமுனைவர் ஆகியோர் தம் முழுப் படைப்புகளையும், பதிப்பித்துள்ளார் மானமிகு இளவழகன்.

இந்த 34 தொகுதிகள் வெளியீட்டு விழா, சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில் நேற்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகள் வெறும் சம்பிரதாயமாக அமைந்து விடும்; நேற்று நடைபெற்ற அந்தப் புத்தக வெளியீட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அவ்விழாவில் மிகச் சரியாகக் குறிப்பிட்டதுபோல் - அது வெறும் புத்தக வெளியீட்டு விழா அல்ல - போர்ச்சங்கு முழக்கமேயாகும்.

நிகழ்ச்சியில் பார்வை யாளராகக் கலந்து கொண்டவர்கள் அத்தகு உணர்ச்சியைத் தான் பெற்றார்கள் என்றே சொல்ல வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரு மக்கள் ஆற்றிய உரை என்பது - 'வாள் வீச்சாகவே' இருந்தது என்பதோடு - ஏராளமான அரிய தகவல்களின் பெரு மழையாகவே இருந்தது. இளை ஞர்கள் ஏராளம் கூடியிருந்த நிலையில் அந்தப் புத்தம் புதுத் தகவல் களை உள் வாங்கிக் கொண்டனர். அரிய வாய்ப்பு இது.

அறிமுகவுரையாற்றிய புலவர் செந்தலைக் கவுதமன் பல அரிய தகவல்களை அள்ளிக் கொடுத்தார். அதிலும் குறிப்பாக தந்தை பெரியார் அவர்கள் பற்றிக் கூறிய அந்தத் தகவல்கள் சிறப்பானவை.

தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தொண்டாற்றிய புலவர் பெரு மக்களைத் தாங்கிப் பிடித்தவர் தந்தை பெரியார் என்பதற்குப் பல தகவல்களைக் கூறினார்.

எம்.எல். பிள்ளை என்று தமிழ்நாட்டில் சொன்னால், அவர்தான் கா.சு. பிள்ளை (கா. சுப்பிரமணியன்பிள்ளை).

10ஆம் வகுப்பு படிக்கும் போதே ஆங்கிலக் கவிஞன் மில்டனின் பேரடைஸ்லாண்ட் (12 தொகுதிகள்) எனும் நூலை மனப்பாடமாகச் சொல்லக் கூடியவர், கல்கத்தா பல்கலைக் கழகத்தில் "குற்றங்களின் நெறி முறைகள்" எனும் தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசாக  10 ஆயிரம் ரூபாய் பெற்றவர் என்றால் இந்தப் பெருமைக்குரிய தமிழ் அறிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமே.

இவ்வளவு சிறப்பையும் பெருமையையும் அணிகலனாகக் கொண்ட கா.சு. பிள்ளை அவர்கள்,  முதுமைக் காலத்தில் நெல்லையிலே வறுமை நெருப்பு அரித்துத் தின்னும் நிலை யிலே உழல்கிறார் என்று அறிந்த நிலையில் மாதா மாதம் ரூ.50 அனுப்பியுள்ளார் தந்தை பெரியார். இந்தத் தகவலை ஒரு போதும் தந்தை பெரியார் வெளிப்படுத்தியதில்லை. மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு எழுதியுள்ளார்.

அதேபோல மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களைக் காட்பாடிக்குச் செல்லும் பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்களே நேரில் சென்று ஒவ்வொரு முறையும் ரூபாய் 250 அளித்த தகவலையும் செந்தலைக் கவுதமன் குறிப்பிட்டார். இப்படி, தான் செய்த உதவியை எந்த நிலையிலும் தந்தை பெரியார் வெளிப்படுத்தியதேயில்லை. வலது கை செய்வதை இடது கை அறியாது என்று சொல்லப்படும் அந்தப் பண்பாட்டை தந்தை பெரியாரிடத்தில் முழுமையாக காண முடிகிறது.

இதுபோன்ற அரிய தகவல்களை செந்தலைக் கவுதமன் எடுத்துக் கூறினார்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் செந் தலைக் கவுதமன் அவர்களைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பற்றிய ஒரு தகவலையும் கூறினார்.

எங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி தமிழ்நாடு புகுந்து வறுமையின் பிடியில் என்னைப் போன்றவர்கள் தந்தளித் திருந்த அந்தக் கால கட்டத்தில் மதுரையில் நடைபெற்ற தமிழீழ விடுதலை மாநாட்டில் (18.12.1983) தமிழர் தலைவர் ஆசிரியர்  வீரமணி அவர்கள் பத்தாயிரம் ரூபாய் எனக்களித் ததை நன்றியோடு நினைவு கூர்கிறேன் என்றார்.

தனித் தமிழ் இயக்க நூற் றாண்டு விழாவில், மறைமலை அடிகளார் அவர்களின் நூல் வெளியிடப்படும் இந்தக் கால கட்டம் எந்த நிலையில் இருக் கிறது என்பதை மனப் புண் ணுடன், தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

திரைப்படங்களில்கூட உன்னை நான் காதலிக்கிறேன். விரும்புகிறேன் என்று சொல்லு வதில்லையே, "அய் லவ் யு"  என்றுதான் சொல்ல வேண்டுமா என்று உணர்ச்சிக் கவிஞர் குறிப்பிட்டது நியாயம்தான்.

ஓர் உணவு விடுதியில், ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன், என்ன எழுதப்பட்டு இருந்தது தெரியுமா? 'பீப் பிரியாணி' என்று எழுதப்பட்டு இருந்தது. மாட்டுக்கறி (ஙிமீமீயீ) என்பதைத்தான் தமிழில் இப்படி எழுதியிருந்தனர் என்று அவர் கூறியதில் என்ன தவறு இருக்கிறது மொழிக் கலப்புத் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே.

ஓவியர் வீர சந்தானம் அவர்கள் தனக்கே உரித்தான முறையில் வீரம் கொப்பளிக்க உரை நிகழ்த்தினார்.

நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அந்த நிலையை ஓர் இதழில் நான் அளித்த பேட்டி மூலம் அறிந்த நிலையில் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். உங்கள் உடல் நலனுக்குத் தேவையான மருத்துவ உதவியை கடைசி வரை திராவிடர் கழகத் தலைமை ஏற்கும் என்று எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார் அந்தக் கடிதத்தை இன்று வரை தான் தலையணையின் கீழ், வைத்துப் படுத்திருப்பதாக நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

சிறுவனாக இருந்த காலத்திலிருந்து தந்தை பெரியார் வருகிறார் என்றால் கும்பகோணத்திலிருந்து தஞ்சை வரை நடந்துகூட சென்ற அந்த உணர்வை எல்லாம் வெளிப் படுத்தினார்.

நடப்பது ஆரியர் - தமிழர் போராட்டமே என்பதை அறிவித்திட வேண்டும் என்று கூறிய ஓவியர் சந்தானம். 25 ஆண்டு காலமாக சிறையில் வாடும் அந்த இளைஞர்களை  எப்பொழுது விடுதலை செய்யப் போகிறீர்கள் வீணாக சட்டம் என்றெல்லாம் சொல் லிக் காலத்தை விரயப்படுத் தாமல் - எங்களுக்குள்ள அதி காரத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே என்று தனக்கே உரித்தான முறையில் உறுமினார்.

பேராசிரியர் திருமாறன் அவர்கள் பேச்சு சுருக்கமாக அதே நேரத்தில் செறிவுச் சாணை பிடிக்கப்பட்டதாக இருந்தது.

அறிவியல் முகமூடி அணிந்து மதவாதம் தமிழ் மண்ணில் ஊடுருவுகிறது என்று அடையாளம் காட்டினார். இரண்டாவது, ஜாதி வெறி, ஜாதி சங்கங்கள், ஜாதி சங்கத் தலைவர்கள் நாட்டுக்குள் கேடு விளைவிக்கக் கூடியது என்று விளாசினார்.

தமிழ் தேசியம் என்று சொல்லி தந்தை பெரியார் அவர்களையும், மறைமலை அடிகளாரையும் மோதவிடும் சக்திகளின் முகத் திரையைக் கிழித்துக் காட்டினார். தந்தை பெரியார் அவர்களைத் தவறான வகையில் விமர்சனம் செய்வோர், யாராக இருந்தாலும்  அது ஆரிய மீட்சிக்கே வழி வகுக்கும் - இதை அறியாதது மிகவும் கவலைக்குரியது என்று பேராசிரியர் திருமாறன் கூறிய கூற்று காலத்துக்கேற்றக்  கருத்துக் கருவூலமே!

பெரும் புலவர் பேராசிரியர் க. இராமசாமி அவர்கள், தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் மாணவன் என்ற அறிமுகத்தோடு தன் சுருக்கமான உரையைப் பதிவு செய்தார். பிற மொழிச் சொற்களைக் கலவாமை வேண்டும் என்பது  அவர் உரையின் சுருக்கமாக இருந்தது தனித்தமிழ் இல்லை யென்றால் வெற்றியில்லை என்றும் உறுதியாகவே கூறினார்.

மேனாள் புலவர் குழுவின் தலைவர் கி.த. பச்சையப்பன் அவர்கள். தமிழ் மண் பதிப்பக உரிமையாளர், சோதனை களையும் வேதனைகளையும் கடந்து மலை போன்ற பெரும் பணியைச் செய்துள்ளார் என்று பாராட்டினார்.

மறைமலையம் தொகுப்பினை வெளியிட்ட "புதிய பார்வை" ஆசிரியர் மானமிகு ம. நடராசன் அவர்கள் இன்று நிலவும் அரசியல் சூழல் மேகங்களை சிலேடையாகவே குறிப்பிட்டார் என்று சொன்னால் தவறில்லை.

நெருக்கடி நெருக்கடி என்கிறவர்கள்தான் நெருக்கடியில் உள்ளவர்கள் என்று அவர் சொன்னபொழுது எங்கும் சிரிப்பொலிதான்.

தந்தை பெரியார் தந்த அந்த தன்மான உணர்வுடன் - அந்தப் பலத்தின் மேல், தான் நிற்பதாக எடுத்த எடுப்பிலேயே தன் சுயமுகவரியை வெளிப்படுத்தினார்.

கொல்லைப்புற வழியாக சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மொழித் திணிப்பைத் தான் சொல்லுகிறேன். நாங்கள் அதனைச் சந்திப்போம் என்றார். நாங்களாகப் பேசவில்லை நீங்கள் எங்களைப் பேச வைக்கிறீர்கள். தேசியம் என்ற பெயராலே எங்கள் கலை, பண்பாட்டினை ஒடுக்க முயற்சி செய்கிறீர்கள் என்று குற்றஞ் சாட்டினார்.

தமிழ் பட்டுப் போய் விட்டது. நலிந்துப் போய் விட்டது என்று சொல்ல வேண்டாம்.

தமிழ் நாட்டில் தமிழில் பயின்றவர்கள் தான் உலகில் 10 லட்சம் பேர் உயர் பதவிகளில் ஒளி வீசுகிறார்கள். அமெரிக் காவில் தமிழர்கள் செனட்டாராக ஆகியிருக்கிறார்கள்.

இந்தி படிக்காமல் தமிழையும், ஆங்கிலத்தையும் படித்த தால்தான் இந்த உயர்வினை நம் தமிழர்கள் பெற்று இருக்கிறார்கள் என்று மார்தட்டினார் ம.ந.  நம்மைச் சுற்றி வல்லூறுகள் வட்டமிடுகின்றன எச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டும் - இருப்போம் என்று பேசினார்.

நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை வகித்த திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர் களின் 25 நிமிட உரை கேட்டோரை நிமிரச் செய்தது.

மறைமலை அடிகளாரின் இந்த நூல்கள் சிறப்பானவை தமிழருக்கானவை. 11472 பக்கங்கள் 34 தொகுதிகளாக கொண்டு வந்த நமது இளவழகன் அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்.

மலைக்க வைக்கக் கூடிய மறைமலை அடிகளாரின் எழுத்துகள், பேச்சுகள்  எதிர் காலத் தமிழர்களையும் அறியச் செய்யும் இந்த முயற்சியை மேற்கொண்டவர் நமது இளவ ழகனார்  என்று பாராட்டினார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத் தொகுப்புகளை வெறும் நூல்களாக மட்டும் தந்தை பெரியார் நோக்கவில்லை. தமிழர் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் ஆயுதங்களாகக் கருதினார். தமிழர் விடுதலைக்கு மொழியை ஒரு கருவியாகவே கருதினார். மொழி ஒரு போர்க் கருவி என்பது தந்தை பெரியாரின் கணிப்பு.

அரசியல் அடிமை என்பது கையில் மாட்டப்பட்ட விலங்கு, பொருளாதார அடிமைத்தனம் என்பது காலில் மாட்டப்பட்ட விலங்கு, பண்பாட்டுப் படையெடுப்பு என்பது மூளையில் மாட்டப்பட்ட விலங்கு. அந்த விலங்கை உடைத்திட நூல்கள் என்ற ஆயுதங்களைத் தந்தவர் தான் நமது மறைமலை அடிகளார். இவை வெறும் புத்தகங்கள் அல்ல - போர்க் கருவிகள் என்று சொன்னபொழுது அரங்கே குலுங்க பெருத்த கைதட்டல்!

இப்படி உரையாற்றிக் கொண்டே வரும் பொழுது அவரது கையில் ஒரு செய்தி திணிக்கப்பட்டது.

அவ்வளவுதான் ஆசிரியரின் ஆற்றொழுக்கவுரை காட்டாறாக பேருரு எடுத்தது.

ஒரு செய்தி - இப்பொழுது என் கைக்குக் கிடைத்திருக்கிறது என்று அவர் சொன்ன பொழுது, ஆயிரக்கணக்கான பார்வை யாளர்கள் கண்களும் தமிழர் தலைவரை ஒரு சேர மொய்த்தன.

தோழர்களே, அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல் இப்பொழுது கிடைத்திருக்கிறது. மத்தியில் ஆளக்கூடிய மத்திய பிஜேபி அரசு தன் இந்துத்துவ வெறித்தனத்தை அளவுக்குமேல் நம்மீது ஏவுகிறது.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு என்று  ஒவ்வொன்றாக ஆரம்பித்து இப்பொழுது நமது இனப் பண்பாட்டு விழாவான - மதச் சார்பற்ற தன்மைக்கு இலக் கணமான பொங்கல் விழாவுக்கு இதுவரை மத்திய அரசு அளித்து வந்த அரசு விடுமுறையை மாற்றி ஆணை பிறப் பித்துள்ளது.

பொங்கலுக்கென்று விடுமுறை கிடையாதாம் தேவைப் படுவோர்  வேண்டுமானால் விடுப்பு எடுத்துக் கொள்ளலாமாம் - எவ்வளவு அலட்சியம்!

இதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. பூணூல் போடுவதற்குக்கூட விடுமுறை இருக்கிறது. தீபாவளிக்கு விடுமுறை; ஆனால் தமிழரின் பண்பாட்டுத் திருவிழாவை விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்குகிறார்கள் என்றால் இதன் பொருள் என்ன?

உடனே இந்த ஆணையை மத்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அந்த ஆணை வெளிவரும் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளுக்கு உயிர்க் கொடுப்போம்!

இலட்சியத்துக்காக உயிர்க் கொடுக்கக் கூடிய நூறு பேர் இருந்தால் போதும் - எதையும் சாதித்துக் காட்ட முடியும்.

திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ் செம்மொழியானது எந்த ஆட்சியில் - திமுக ஆட்சியில்தானே, கலைஞர்தானே அதனை சாதித்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் அறிவுரைக் கொத்து நூலை தடை செய்தபோது அதனைத் தடுத்து நிறுத்தியவர் தந்தை பெரியார் அல்லவா.

சமஸ்கிருதம் தொடர்பான அடிகளாரின் கட்டுரையைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் குரல் கொடுத்தபோது டாக்டர் மு.வ. தலைமையில் குழு ஒன்றைப் போட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் பாடத் திட்டத்தில் அதனை நிலை பெறச் செய்தவர் முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா அல்லவா என்று அலை பாயும் கடல் போல எடுத்துச் சொல்லிக் கொந்தளித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

அவர் தம் 25 மணித்துளி உரை அனல் பிழம்பாகவே இருந்தது என்றால் அது சரியானதே!

இறுதியாக தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் இளவழகன் மிகவும் சுருக்கமாக நன்றி கூறினார். தொடக்கத்தில் விடுதலை வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். தொகுப்புரை அ. மதி வாணன் ஆற்றினார்.

ஈரோடு தமிழ் ஆர்வலர் தெட்சிணாமூர்த்தி ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்து தமிழ்த் தொண்டர் இளவழகனாரை ஊக்கப்படுத்தினார்.

எந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கும் இல்லாத அளவுக்கு மக்கள் திறள் உணர்வுடன் காட்சியளித்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner