எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பல்டியடிக்கும் பாசிஸ்டுகள்!

மின்சாரம்

அறிஞர் ஆபிடுயூபே கூறிய ‘‘Double Tongue’’ என்ற அர்ச்சனைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் ‘‘பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!’’ என்று அவருக்கே உரித்தான அழகு தமிழில் படம் பிடித்துக் காட்டினார் - ‘ஆரிய மாயை’ என்னும் அசைக்க முடியாத ஆதாரச் சரக்குகளைக் கொண்ட அந்த அரிய நூலில்.

அந்த நூல் தடையும் செய்யப்பட்டது - அந்த நூலுக்காக அறிஞர் அண்ணா அவர்களுக்கு 700 ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது என்பது மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் வரலாற்றுக் குறிப்பாகும்.

1943 ஆம் ஆண்டிலேயே வெளிவந்த அந்த நூல் ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1950 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. (153-ஏ பிரிவு சட்டப்படி) அதே காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் ‘பொன்மொழி’ நூலுக்கும் தடை - தந்தை பெரியார் அவர்களுக்கும் அதே தண்டனை என்ப தெல்லாம் நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய - திராவிடர் இயக்கத் தீரத்தைக் குறித்த ‘தித்திக்கும்’ அத்தியாயங்கள்!

அறிஞர் ஆபிடுயூபே அப்படி என்னென்னதான் கூறினார்? தெரிந்து கொள்ள ஆர்வம்தானே இருக்கச் செய்யும்.
இதோ:

1807 ஆம்  ஆண்டில் ஆபிடுயூபே ஆரியம்பற்றி இவ்வாறு அடுக்கி யதைத்தான் அண்ணா அவர்கள் 1943 ஆம் ஆண்டில் எடுத்துக்காட்டினார்.

ஏதோ இனம் தெரியாத வெறுப்புணர்வால் அல்ல - இனவெறுப்பின் எதிரொலியும் அல்ல - பகையுணர்ச்சியும் கிடையாது. பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதாரை எப்படியெல்லாம் இழித்துப் பழித்து எழுதி வைத்துள்ளனர்- நடத்துகின்றனர் என்பதால் ஏற்பட்ட தன் மான உணர்ச்சியின் உந்துதல்தான் திரா விடர் இயக்கம் பார்ப்பனர்களைப் படம் பிடித்ததும் - பிடித்துக் காட்டுவதுமாகும்.

கடந்த ஒரு வார காலமாக ஒரு பிரச் சினை சர்ச்சையாகி இருக்கிறது. ஆர்.எஸ். எஸின் செய்தித் தொடர்பாளரான மன் மோகன் வைத்யாவின் உரைதான் அந்த சர்ச்சைக்குக் காரணம்.

இதோ அவர்....

நாங்கள் எது பேசினாலும் அது அரசிய லாகிவிடும், இருப்பினும் காலத்தின் கட் டாயம் மற்றும் நாட்டின் நலன் கருதி சமூகத்திற்கு தற்போது எது தேவையோ அதை நாங்கள் பேசவேண்டிய சூழல் எழும்பியுள்ளது.

இட இதுக்கீட்டைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு சில கலாச்சார வேறுபாடுகளின் காரணமாக அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை நடைமுறையைத் தேர்ந்தெடுத் துக் கொண்டனர். இதனால் அவர்கள் சமூகத்தில் வேறுபட்டு பார்க்கப்பட்டனர். இது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தால் அவர்களுக்கு பெரும்பான்மைச் சமூகத்தில் கிடைக்கும் மரியாதை, வசதி கல்வி போன்றவை கிடைக்காமல் போய் விட்டது, காலப்போக்கில் அந்த சாதிப் பிரிவில் பிறந்தவர்களும் சமூகத்தில் ஏற் பட்ட சில தடைகள் மற்றும் கருத்து வேறு பாடுகள் காரணமாக தொடர்ந்து பாதிக்கப் பட்டுவந்தனர்.

ஆம், சில நேரத்தில் இது தவறென்று கூறுகிறார்கள், நாங்களும் இதை ஆமோதிக்கிறோம். அதற் காகத்தான் இட ஒதுக்கீடு என்னும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டது, டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கூறினார், “எந்த ஒரு காலத்திலும் நீண்ட கால இட ஒதுக்கீடு என்பது ஆபத்தை விளை விக்கும்” இது அவருடைய கருத்தாகும்.  (எங்கே சொன்னார்? ஆதாரம் எங்கே?) இதையே பலமுறை மொழி பெயர்ப் பாளர்கள் பல்வேறு வகையில் திரித்து மூலக்கருத்தை திசைதிருப்பி அவர் சொல்ல வந்த கருத்தையே முற்றிலும் மறுப்பதுபோல் தற்போது பிரச்சாரம் செய்துவரு கின்றனர்.

(சில கலாச்சார வேறுபாடுகள் காரண மாக தாழ்த்தப்பட்டவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டார்களாம். என்ன அயோக்கியத்தனம் - அவர் களை வருணாசிரம தர்மத்துக்குள் கூடக் கொண்டுவராமல் வெளியே தள்ளிய  (Out caste) நயவஞ்சகர்கள் எப்படி எல்லாம் பம்மாத்து செய்கின்றார் கள் பார்த்தீர்களா?)
மேலும் வைத்யா பேசுகிறார்.

ஆனால், இன்று நாம் விழிப்படைந்த சமூகமாகி விட்டோம், அதே நேரத்தில் அம்பேத்கரின் இந்தப் பொன்னான வாக்கி யத்தை நாம் மக்களிடையே கொண்டுச் செல்ல - உண்மையான காரணத்தை கொண்டுச் செல்ல கடமைப்பட்டுள் ளோம். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலில் கோரிக்கையை வைக்கவேண்டும், இதற்கான காலச் சூழல் உருவாகியுள்ளது, இது அம்பேத் கரின் கனவு ஆகும்.

இட ஒதுக்கீடு என்ற பெயரில் இன்னும் எத்தனை நாள் தான் குறிப்பிட்ட சமூகங்களுக்கே நாம் வசதிகளை வாரிவழங்கிக் கொண் டிருப்போம்? தொடர்ந்து அவர்களுக்கு கல்வியில் பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கிக்கொண்டிருக்கிறோம். இனி மேலும் நாம் இட ஒதுக்கீட்டை தொடர்வது சர்வாதிகாரத்தை நோக்கி செல்ல வாய்ப்புகளை உருவாக்கிவிடும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும், அதே நேரத்தில் சமூகத்தில் இவர் களுக்கான மாற்று ஏற்பாடுகளையும் தயார் செய்யவேண்டும்.

இந்துக்களாக இருக்கும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக் களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் ரத்துசெய்யும் வழிமுறைகள் குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறிய வழியில் எங்கள் சிந்தனைகளை கொண்டு செல்லும் போது வாக்குவங்கி அரசிய லுக்காக சுயலாபம் கருதி சிலர் இஸ்லாமியர்களுக்கும், இந்துக்கள் அல்லாத சில பிரிவினருக்கும் இடஒதுக் கீடு குறித்து அறிக்கைகள் விடுகின்றனர். இது வாக்குவங்கி அரசியலுக்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும்;

ஆனால் எதிர்கால சமூகத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தி விடும். சில ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இளைய சமூதாயங்களிடையே ஒரு விழிப்புணர்வு உருவாகியுள்ளது, இட ஒதுக்கீட்டால் பயன்பெறுபவர்கள் தங்களை சமூகத்தில் இருந்து தனித்துப் பார்ப்பது போன்ற உணர்வை கொண் டுள்ளனர். ஆகவே அவர்கள் சமூகத் தின் நீரோட்டத்தில் கலக்க இட ஒதுக் கீட்டை ரத்து செய்வது குறித்து அம் பேத்கரின் வழியில் சிந்திக்க வேண்டும் என்று வைத்யா கூறினார்.

எங்கே பேசினார்? ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சர்வதேச எழுத் தாளர் மாநாடு நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கலாச்சாரப் பிரிவான பாரதீய விசார் கேந்திரா (இந்தியாவின் புதிய சிந்தனை அமைப்பு) விஷ்வ சாம் வேத் (கணினி தொழில்நுட்பப் பிரிவு மற்றும் மென் பொறியாளர் பிரிவு) இணைந்து நடத்திய மாநாடு இது.

அம்மாநாட்டில்தான் ஆர்.எஸ். எஸின் பிரச்சார செயலாளரான மன்மோகன் வைத்யா மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்.

இதில் மிகவும் வெளிப்படையாக தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின ருக்கான இட ஒதுக்கீடுகளை ரத்து செய்யவேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசி இருக்கிறார். வைத்யா இரு பொருளுக்கு வேலை யின்றி வெகு வெளிச்சமாகவே ‘விளாசி’ இருக்கிறார்.

இதனை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத், பி.ஜே.பி. கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி யின் தலைவரும், பி.ஜே.பி. கூட்டணி அரசில் உணவு மற்றும் பொது விநி யோகத் துறை அமைச்சராக இருக்கக் கூடியவருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி யுள்ளார்.

உத்தரப்பிரதேசம் உள்பட அய்ந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்த மனுசர் இப்படி உளறிக் கொட்டி விட்டாரே - குளவிக் கூட்டில் கை வைத்து இருக்கிறாரே - என்று குருதி சூடேறிட பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஏதேதோ சப்பைக் கட்டு கட்டப் பார்க்கிறார்கள்.

வைத்யா மத அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லி யிருக்கிறாரே தவிர, தாழ்த்தப்பட்ட வர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக் குமான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்று ‘அய்யயோ பேசவில்லை; சத்தியமாகப் பேச வில்லை’ என்று துண்டைப் போட்டுத் தாண்ட ஆரம்பித்துள்ளனர்.

வைத்யா பேச்சு ஒரு ஏடு, இரு ஏடு அல்ல, பல ஏடுகளிலும் ஒரே மாதிரியாக வெளிவந்து, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மூக்கை வெளுக்க வைத்துவிட்டது.

இப்படி இந்தக் கூட்டம் ஒன்றைச் சொல்லுவது - ஆழம் பார்ப்பது - அதற்கு எதிர்ப்பு எரிமலை நெருப்பைக் கக்கியது தெரிந்ததும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் பேசுவது - அப்படியெல்லாம் பேசவேயில்லை - ஏடுகள் திரித்துக் கூறிவிட்டன; அல்லது நாங்கள் பேசியதை சரியாகப் புரிதல் இல்லாமல் வெளியிட்டுள்ளனர் என்று புளுகுவது இவர்களுக்கே உரித்தான புடம்போட்ட பித்தலாட்ட பிழைப்பாகும்.

எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு. எடுத்துச் சொல்ல விரும்பினால் ஏடு கொள்ளாது - தாங்காது.

ஆர்.எஸ்.எஸின் சர்சங் சாலக் (தலைவர்)கான மோகன் பாகவத் இப்படித்தான் உளறித் தொலைத்தார்.

பொதுக்கூட்ட மேடையிலே அல்ல - பேட்டியே கொடுத்துத் தொலைத்து விட்டார். கட்சிக்கு அப்பாற்பட்ட ஏடுகளுக்கோ, இதழுக்கோ கூட அல்ல. ஆர்.எஸ்.எஸின் அதிகாரப்பூர்வமான இதழான ‘பஞ்சான்யா’வுக்கே பேட்டி கொடுத்தார்.

‘‘இந்தியா போன்ற பெரிய மக் களாட்சி நாட்டில் அனைவருக்கும், அனைத்து மக்களுக்கும் சரி சமமாக அனைத்தும் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும்போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால், இங்கே பலருடைய வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டும் கொடுக்கும் சூழ்நிலை இட ஒதுக்கீடு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடு ஆகும்.

கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டில் இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இட ஒதுக்கீடு என்ற பெயரில் கலாச்சாரக் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக் கும் வகையில் செயல்படுவது பெரும் பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும்.

இந்நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்கவேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரின் பார்வைகளும் விரிவாக இருக்கவேண் டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடு படுகிறான். ஆகவே, அரசு வளர்ச்சிக் காக தியாகம் செய்யத் துணிச்சலுடன் இருக்கும் மக்களை வஞ்சிக்கும் செய லில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான் இதுபோன்ற இட ஒதுக் கீட்டை எதிர்க்கும் போராட்டம் வெடிக்கும்.

Arguing that the policy of reservation based on social backgroundness being extended now is not in the line with what the makers of Indian Constitution had in mind, Bhagwat said had quotas been implemented as per the vision of the constitution makers questions on the issue would not have surfaced.

ஆகவே, இதுவரை உள்ள இட ஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என்று ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ ஏட்டுக்குப் பேட்டியளித்தார் ஆர்.எஸ்.எஸ். தலை வர் மோகன்பாகவத்.

அப்படி கருத்துத் தெரிவித்த நேரம், பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் காலகட்டம். இந்தக் கால கட்டத்தில் இந்த மனுசன் இப்படி உளறிக் கொட்டிவிட்டாரே என்ற பதை பதைப்பில், தேள் கொட்டிய திருடன் கதையாக ஏதேதோ சொல்லி மழுப்பி னார்கள்.
இப்பொழுதுள்ள இட ஒதுக்கீடு முறை என்பது சட்டத்தை உருவாக் கியவர்களின் எண்ணத்தை நிறை வேற்றவில்லை என்று எப்படிப்பட்ட புரட்டான கருத்தை வெளியிட் டுள்ளார் பார்த்தீர்களா?

சமூக ரீதியாகவும், கல்வி ரீதி யாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர் களுக்கு இட ஒதுக்கீடு என்ற சட்டம் சரியாகத்தானே இயற்றப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக என்ற திருத்தம் தோற்கடிக்கப்பட்டதே! வாக்கெடுப்புக்கு விட்டபோது பொருளாதார அளவுகோல் என்பதற்கு வெறும் அய்ந்து வாக்கு களும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தது எல்லாம் மோகன் பாகவத் களுக்குத் தெரியாதா? என்னே வாய் ஜாலம்!

இதே மோகன் பாகவத்தே பல்டி யடித்துப் பேசினார். லக்னோ நகரில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் கூட்டத்தில் (15.10.2015) என்ன பேசினார் தெரியுமா?

‘‘சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களுக்காக நாம் பாடுபடவேண்டும். அதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்ளவேண் டும். முக்கியமாக தலித்துகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக மதிக்கப் படவேண்டும். அதற்காக நாம் சிறப்பாக செயலாற்றவேண்டும். இட ஒதுக்கீடு என்பது  ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கும் ஒரு அங்கமாக உள்ளது.

இட ஒதுக்கீடுபற்றி நான் கூறும்போது சமூகத்தில் கீழ்மட்ட நிலையில் உள்ள மக்களுக்குப் பயன் படுமாறு இருக்கவேண்டும் என்றுதான் கூறினேனே தவிர எந்த ஒரு கால கட்டத்திலும் - இட ஒதுக்கீட்டை நிறுத் தவோ அல்லது இட ஒதுக்கீடுபற்றி மாறுபட்ட கருத்தையோ கூறிட வில்லை’’ என்று போட்டாரே ஒரு போடு; இதைவிட அந்தர்பல்டி, ஆகாசப் புளுகு வேறு எவரால்தான் அள்ளிக் கொட்ட முடியும்.

பீகார் தேர்தல் வந்ததால் இந்த அந் தர்பல்டி என்பது நினைவிருக்கட்டும்!

இதில் இன்னும் ஒரு சுவையான - வயிறு வெடிக்க சிரிக்கும் தகவல் ஒன்றுண்டு.
இன்றைக்கு எந்த மன்மோகன் வைத்யா இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உளறிக் கொட்டி நாலாத் திசைகளிலும் வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறாரோ - அதே வைத்யாதான் அன்றைக்கு மோகன் பாகவத்தைக் காப்பாற்றிட முண்டா தட்டி கோதாவில் குதித்தார்.

‘‘இட ஒதுக்கீடுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தவறான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவை சார்ந்தவர்களுக்கு அரசமைப்புச் சட் டத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாக வத் கூறினார்’’ என்று ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளர் மன்மோகன் வைத்யா கூறினார். (‘எக்னாமிக் டைம்ஸ்’, 21.10.2015).

எப்படி இருக்கிறது?

மோகன் பாகவத்தை எந்தப் பிரச்சினையில் காப்பாற்றிட இந்த வைத்யா வந்தாரோ அதே வைத்யா தான் - அன்று மோகன் பாகவத் சொன்ன இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அதே கருத்தைச் சொல்லி வசமாக சிக்கிக் கொண்டார். ‘அந்தோ பரிதாபம், ‘தரும அடி’ இந்த மனுசனுக்கு எல்லாத் திசைகளிலும் விழுந்துகொண்டே இருக்கிறது. அனுதாபம் தெரிவிக்க ஆசைப்படுபவர்கள் தாராளமாகத் தெரிவிக்கலாமே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner