எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை வெறும் பசப்பு


உழவர் சந்தை அன்று (27.5.2017) ஒரு கலகலப்பாகத்தான் இருந்தது. மகளிரே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்த காட்சி அது. மேட்டூர் வசந்தி, தன் பாடலைத் தொடங்குமுன் இவ்வளவு எண்ணிக்கையில் கருப்புடை தரித்த மகளிரைப் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது - எழுச்சியாகவும் இருக்கிறது என்று சொன்னாரே - அது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

சகோதரி இரண்டு பாடல்களைத் தான் பாடினார். இன்னும் செவியில் ரீங்காரம் செய்து கொண்டுதான் இருக்கிறது இசையின்பம் மட்டுமல்ல பொருள் பொதிந்த சுருதியாகவும் இருந்தது.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய சொத்து வெறும் பசப்பு எனும் தொடங்கும் பாடல்

"இச்சைப் பொருளாய், போகப் பொருளாய்
இருப்பது தானா பெண் பொறுப்பு?
என்பதுதான் அந்தப் பாடல்
தேவதையும் இல்லை, தெய்வமும் இல்லை
மனுஷிதானே அம்மா நீயும்?
பிள்ளைப் பெறவே பெண்ணென்றால்
கர்ப்பப்பையை அறுத்தெறி!!

என்று தொடங்கும் இன்னொரு பாடல் ஆவேசத்தின் உச்சம்! இன்னும் பாட மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் எதிரே வந்து நிற்க - மறுபக்கம் மேடையை விட்டுச் சென்றபோது ஏமாற்றமாகவே இருந்தது.

சிவகங்கை கங்கைக்கருங்குயில் குழுவினரின் பறையாட்டம் சும்மா தூள் கிளப்பியது. பெண்கள் முழக்கம் சற்று தூக்கலாகவே இருந்தது. பறை என்றால் குறிப்பிட்ட ஜாதிக்குச் சொந்தம் -  சாவுக்குரியது என்றிருந்த நிலைப்பாட்டைத் தகர்த்ததில் திராவிடர் கழகத்திற்கு பங்கு உண்டு.

கழகத் தோழர்கள் வீட்டில் நடக்கும் திருமணம்,  புதுமனைப் புகு விழாக்களில் எல்லாம் சும்மா புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டனர் எம் தோழர்கள். எதிலும் புரட்சி என்பது தானே கருஞ்சட்டைச் சேனையின் தனி நடை உடைப் பாவனைகள்!

பறையாட்டத்தோடு முடிந்து விடவில்லை; கங்கைக் கருங்குயில் குழுவில் இடம் பெற்ற பெண்களில் சிலம்பாட்டம் சீறியது - ஆணுக்கென்று தனி உடைமை ஏதும் இல்லை என்று நிறுவுவதுதானே பெண்களின் போர்க் குணமாக இருக்க வேண்டும் என்பதற்கான அடையாளம்தான் அது.

சிறுமி யாழினியின் தூங்கும் புலியை என்று தொடங்கும் புரட்சிக் கவிஞர் பாடலுக்கான நடனம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கணேசன் அவர்களின் மகள்தான் அவர்.

(சில நாட்களுக்கு முன்தான் கழகத் தலைவர் முன்னிலையில் அரங்கேற்றம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது).

சின்ன உடல் அதில் அன்ன நடையில்லை புலியின் பாய்ச்சல் காணப்பட்டது. (பாராட்டுகள் - வாழ்த்துகள்)

ஈரோடு சிறுவர்கள் ச. இராவணன் - ச. எழிலன் ஆகியோரின் கேள்வி பதில் உரையாடல்களை இரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது எல்லாமே நறுக்குகள்தான் நச்சென்றசொல்லாடல்கள்தாம்!

அவ்வையார் வந்தார்

மறைந்த இலட்சியக் கவிஞர் இன்குலாப் எழுதிய அவ்வையார் நாடகம் (பேராசிரியர் மங்கை அவர்களின் இயக்கம்) புதுமையாகவே இருந்தது. அவ்வையாரை நோக்கிப் பல கேள்விக் கணைகள் சுருக்சுருக்கென்று இருந்தன. உண்டிச் சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்று பாடியிருக்கிறார் அவ்வைப் பாட்டி, ஏன் ஆணுக்கு அது அழகில்லையா? என்பது போன்ற இடக்கு முடக்கான கேள்விகள்.
நாடகத்தில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் சென்னையைச் சேர்ந்த கழகக் கண்மணிகள்தான். அதிலும் பெரியார் திடலைச் சேர்ந்தவர்கள்தான்.

பா. மணியம்மை, பவானி, யாழினி, அஞ்சு, உடுமலை வடிவேல், ஓவியச் செல்வன், பொழிசை, கண்ணன், சீர்த்தி, இனநலம், தொண்டறம், நதியா, வேலவன் ஆகியோரின் நடிப்பும் நகைச்சுவையும் தொழில் ரீதியான நடிகர்களே பிச்சை வாங்க வேண்டும் போங்க!. ஒப்பனை: தென் சென்னை மகளிர் அணி தலைவர் கனகா (ஒட்டு மொத்தத்தில் சபாஷ்! சபாஷ்!!)

தொடர்ந்து பத்தாம் வகுப்பிலும், +2 தேர்விலும் வெற்றி பெற்ற கழகக் குடும்பத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை கழகப் பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், தஞ்சை இரா. ஜெயக்குமார் வழங்கினார்.

உயர்ந்தது கழகக் கொடி!

கழகக் கொடியினை "பெரியார் களம்" அமைப்பின் தலைவர் இறைவி உயர்த்தினார்.

கழக மகளிர்ப் பாசறை மாநில செயலாளர் கோ. செந்தமிழ்ச் செல்வி வரவேற்புரையாற்றிட பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி மாநாட்டினைத் திறந்து வைத்து உரையாற்றினார்.

உரை வீச்சு

போர்த்தொடுப்போம்! வேரறுப்போம்!! எனும்  பொதுத் தலைப்பின்கீழ் மூடநம்பிக்கைகள் என்னும் பொருளில் சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா. மணியம்மை பாலியல் வன்கொடுமைகளை எனும் பொருளில் சே.மெ. மதிவதனி ஜாதி வெறிக் கொடுமைகளை என்றும் எனும் பொருளில் தேன்மொழி, தாராளமயமாக்குதல் எனும் பொருளில் வழக்குரைஞர் பானுமதி ஆகியோர் சிறப்பாக உரை மழை பொழிந்தனர்.

மணிமணியான 36 தீர்மானங்கள்

பெண்களின்  உரிமை குறித்த வகையிலும், மீட்சிப் பெற வேண்டிய உணர்வின் அடிப்படையிலும் பல்துறைகளையும் திசைகளையும் உள்ளடக்கிய 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை மாநாட்டின் மகுடமாக ஒளி வீசின. தோழர்கள் செந்தமிழ்ச்செல்வி, பொறியாளர் இ.சா. இன்பக்கனி, க. தேன்மொழி, கோவை ப. கலைச்செல்வி சேலம் கமலம், வேண்டா தீனதயாளன், வசந்தி கிருஷ்ணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். பலத்த கரஒலிக்கிடையே 36 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுத் தலைவர் டாக்டர் பிறைநுதல்செல்வி

மாநாட்டுத் தலைவரும் கழகப் பொருளாளருமான டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் சுருக்கமாக பெண்கள் உரிமையில்தான் மண் உரிமை இருக்கிறது.  பெண்கள் விளம்பரப் பொருளாக, நுகர்வுப்பொருளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். அழகுப் போட்டி  நடத்துகின்றனர். இவை ஒழிக்கப்பட வேண்டும். மூடநம்பிக்கை காரணமாக சாமியார்களின் பின்னால் பெண்கள் ஒடுவது தடுக்கப்பட்டாக வேண்டும். ஜாதி ஆவணக் கொலைகளை எதிர்த்துப் பெண்களே முன் வந்து போராடவும் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தமதுரையில் பெண்ணுரிமைக்குத் தடையாக இருப்பது இந்துத்துவாவே! பெண்கள் வீட்டு வேலைக்குத் தான் லாயக்கு என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா சொன்ன நிலையில், அவர் காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரைச் சந்திக்க வருகிறார் என்பதை அறிந்து கருப்புக் கொடி காட்டிட கழக மகளிர் அணியினர் கிளர்ந்தெழுந்ததால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பயணத்தை ரத்து செய்து திரும்பியதை நினைவுபடுத்தினார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆண்களுக்கு நிகராக படிப்பதாலும் கை நிறைய பணம் சம்பாதிப்பதாலும் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள்;  ஒரு வகை ஈகோ ஏற்படுகிறது. அந்த நிலையில் ஆண்கள் விவாகரத்து செய்ய முன் வர வேண்டும் என்று கூறியதை எடுத்துக்காட்டி, இந்துத்துவா பார்வையில் பெண் என்பவர் எந்த இடத்தில் வைக்கப்படுகிறார் என்பதை எடுத்துக்காட்டினார்.

பெண்களுக்கு தேவையான நாப்கினுக்கு 12 சதவீத வரியும், இந்து மதச் சின்னமான குங்குமம், பொட்டு முதலியவைகளுக்கு வரி விலக்கும் ஜி.எஸ்.டி. வரியில் அளிக்கப்பட்டு இருப்பதை எடுத்துக்காட்டி, மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி எதிலும் இந்துத்துவா கண்ணோட்டத்தோடு செயல்படுவதை எடுத்துக் காட்டினார்.

மாநாட்டு வரவேற்புக் குழுவின் சார்பில் சால்வைக்குப் பதில் கழகத் தலைவருக்கு வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் ச. ஈஸ்வரி விடுதலை சந்தாவை வழங்கினார்.

கழகப் பொதுக் குழு உறுப்பினர் சே. கிரேசி நன்றி கூறினார்.

தமிழர் தலைவரின் கருத்துரை

கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாநாட்டு நிறைவுரையை இரவு 9 மணிக்குத் தொடங்கினார். மாநாடு தொடங்கப்படுவதற்கு முன் சிறப்பான வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநாட்டில் மட்டுமல்ல - நாம் நடத்தும் கழகக் கூட்டங்களில்கூட இடையிடையே கலை நிகழ்ச் சிகள் பாடல்கள் இடம் பெற வேண்டும் சோவியத்து ஒன்றியத்திற்கு நான் சென் றிருந்தபோது இந்த நிலையை நேரில் பார்த்தேன்.

நமது வீதி நாடக வித்தகர் சித்தார்த்தன், செந் தமிழ்ச்செல்வி ஆகியோர் இதில் கவனம் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட 36 தீர்மானங்களும் மற்றவர்களால் எளிதில் சீரணிக்கப்பட முடியாதவை ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் கூட எந்த அளவுக்கு வெளியிடுவார்கள் என்று சொல்ல முடியாது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், காலந்தொட்டு நமது மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒவ்வொன்றும் பிற்காலத்தில் அரசின் சட்டங்களாக ஆக்கப்பட்டுள்ளன (பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி உரிமை, விதவைப் பெண்களுக்கு மறுமணம், விவாகரத்துரிமை போன்றவை நம் மாநாட்டுத் தீர்மானங்கள் இப்பொழுது சட்டங்களாக வடிவம் பெற்று மக்கள் அனுபவித்தும் வருகிறார்களே!)

பெண்களைப் பாலியல் பண்டமாகப் பார்க்கிறார்களே தவிர, உரிமைப் படைத்தவர்களாக பார்ப்பதில்லை என்பதை இடித்துச் சொன்ன கழகத் தலைவர் அவர்கள் நாட்டில் அறிவுப் போட்டிதான் தேவையே தவிர, அழகுப் போட்டியல்ல.

இரு கைகள் பலமாக இருக்க வேண்டும், இரு கால்கள் பலமாக இருக்க வேண்டும், இரண்டு கண்களின் பார்வையும் சம அளவில் இருக்க வேண்டும். அதேபோலத்தான் ஆண் பெண் இரு பாலரும் சமத்துவம் உள்ளவராக இருந்தால் தான் சமுதாயமும் வலிமையோடு இருக்க முடியும்.

பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், சாதித்துக் காட்டுவார்கள், பத்தாம், வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில்கூட மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம்தான் அதிகம்.

நம் நாட்டில் வளர்ப்பில் கூட ஆண் பிள்ளைகளுக்கு ஒரு மாதிரி, பெண் பிள்ளைகளுக்கு இன்னொரு அளவுகோல்தான்; பொம்மை வாங்கி கொடுப்பதிலிருந்து, உணவு கொடுப்பது வரை பாரபட்சம் உண்டு.

தந்தை பெரியார் சகாப்தம் பெண்ணுரிமை சகாப்தம்! தந்தை பெரியாரை அடையாளம் கண்டு பெரியார் என்று பட்டம் கொடுத்தவர்களே பெண்கள்தானே!

பெண்களைப் பற்றி தந்தை பெரியார் சிந்தித்த அளவுக்கு வேறு யாரும் சிந்தித்ததேயில்லை. தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்" எனும் ஒப்பரிய நூலை கழக மகளிர் அணியினர், பாசறையினர் வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தந்தை பெரியார் படம் பெற வேண்டும். பெண்களுக்கு இலக்கணம் என்று எதை வைத்தார்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று சொல்லி வைத்தனர். மற்ற மூன்றிற்கும் பொருள் சுலபமாக விளங்கும் கடைசியாக சொன்ன பயிர்ப்பு என்பதற்கு என்ன பொருள் என்று யாருக்குத் தெரியும்?

அகராதி என்ன சொல்லுகிறது? அதன் பொருளை தந்தை பெரியார்  அவர்கள் எடுத்துச் சொன்ன போது அதிர்ந்தே போனார்கள். பயிர்ப்பு என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா? அசிங்கம், அருவருப்பு என்று பொருளாகும்?

பதிவிரதை என்று வைத்துள்ளார்களே தவிர பதிவிரதன் என்ற சொல் வழக்கில் உண்டா? கற்பில்கூட தலைக் கற்பு, இடைக் கற்பு, கடைக் கற்பு என்று பிரித்து வைத்துள்ளார்களே.

திருவள்ளுவரைக்கூட விட்டு வைக்கவில்லை தந்தை பெரியார்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தெழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறளில்

பெண்ணானவள் கணவனைத் தொழுது எழ வேண்டும், என்று திருவள்ளுவர் சொன்னதில் தந்தை பெரியாருக்கு உடன்பாடு இல்லை அதை வெளிப்படையாகவும் கூறி வந்திருக்கிறார்.

கணவன் இறந்து விட்டால் மனைவியை அவளோடு தீயில் வைத்து எரிக்க வேண்டும் என்ற சதி, உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தில் இருந்ததற்குக் காரணமே - கணவன் மரணம் அடைந்த பிறகு, மனைவி வேறு ஜாதியில் மறுமணம் செய்து கொண்டால் வர்ணம் கெட்டுப் போய் விடும் அல்லவா அதனால்தான்; கீதையும் அதைத்தான் கூறுகிறது என்று விரிவாக எடுத்துரைத்தார் கழகத் தலைவர். சரியாக ஒரு மணிநேரம் அவரின் நிறைவுரை  அமைந்திருந்தது.

இம்மாநாட்டு வெற்றிக்கு வீறு கொண்டு  உழைத்த மகளிர் அணி, மகளிர்ப் பாசறை பொறுப்பாளர்கள் திருச்சி மண்டல மாவட்ட, நகரக் கழகப் பொறுப்பாளர்களைப் பாராட்டுகிறோம்! பாராட்டுகிறோம்!!இருவருக்கு விருதுகள்

பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் இரு பெண்மணிகளுக்குப் பாராட்டும் விருதும் வழங்கப்பட்டது. அதில் ஒருவர் திருநங்கை, மங்கை பானு ஆவார். திருநங்கையரில் முதல் பட்டதாரி இவர் ஆவார். அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படும் திரு நங்கைகளுக்கு குரல் கொடுக்கும் போராளியாவார். திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காகவும் போராடி வரக் கூடியவர் ஆவார். அவருக்கு சால்வை போர்த்தி விருது வழங்கிச் சிறப்பித்தார் தமிழர் தலைவர்.

கருப்புடை தரித்த பெரியார் இயக்கத்தைச் சேர்ந் தவர்கள் சமத்துவத்துக்காகப் பேராடக் கூடியவர்கள் அந்த இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் கையால் விருது பெறுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்று தன் ஏற்புரையில் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார்.

ஆர். தங்காத்தாள்

இரண்டாவதாக பாராட்டும் விருதும் அளிக்கப் பட்டவர். திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆர். தங்காத்தாள் ஆவார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவரை அறிமுகப்படுத்தினார்.

சிறுவயதில் அவரின் பெற்றோர்களால் திருச்சி நாகம்மையார் இல்லத்தில் கொண்டு வந்து விடப்பட்டவர் அந்த இல்லத்திலேயே வளர்க்கப்பட்டு, படித்து, கல்வி முடிந்த பின்னர் பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலேயே எழுத்தராகப் பணியாற்றினர். எந்த நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்தாரோ, அந்த இல்லத்திற்கே தாளாளராகவும் வந்தார் என்றால், அதன் சிறப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஓய்வுக்குப் பிறகு திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். அர்ப்பணிப்பும் உழைப்பும், நாணயமும் நிறுவனத்திற்கும், தலைமைக்கும் உண்மையான விசுவாசமும், கொண்டு பணியாற்றும் ஒருவருக்குத்தான் இந்தப் பாராட்டும், விருதும் கிடைக்கும் என்று கூறினார். கழகத் தலைவர் அவர்கள் தோழர் தங்காத்தாள் அவர்களுக்குச் சால்வை அணிவித்து விருதும் வழங்கினார்.

விருது பெற்ற இருவரையும் கழகத் தலைவர் பாராட்டினார். திருநங்கை என்றால் ஒதுக்கப்பட்டவர்கள் என்ற நிலை மாறி வருகிறது. அதிலும் படித்தவர்கள் வர ஆரம்பித்து விட்டனர். தான் மட்டும் வாய்ப்புப் பெற்றதோடு நில்லாமல் அந்தத் திருநங்கைகளின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும்,மங்கை பானு அவர்கள் பாடுபடுவது பாரட்டுக்குரியது. முதன் முதலாக ஒரு திருநங்கைக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம்தான்.

தங்காத்தாளுக்கு விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு உதவியாளராக, தன் வாழ்வை ஒப்படைத்துக் கொண்டு நாகம்மையார் இல்லத்துப் பிள்ளைகளுக்கு உடன் பிறவா அண்ணனாக விளங்கிய புலவர் இமயவரம்பன் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

அந்த இல்லத்தில் வளர்ந்த 32 பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளோம். வேறு எந்த இல்லத்திலும் இதனைக் கேள்விப்பட்டிருக்க முடியாது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி சொன்னது நினைவிற்கு வருகிறது. குறிப்பிட்ட சில பிள்ளைகளை எங்கு சேர்ப்பது என்ற பிரச்சினை வந்தபோது திருச்சியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் சேருங்கள் என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சொல்லும் அளவுக்கு அன்னை நாகம்மையார் இல்லம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

அந்த இல்லத்தின் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் காரணமாக இருப்பவர் தங்காத்தாள் ஆவார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரால் அடையாளம் காணப்பட்ட எவரும் சோடை போனது கிடையாது.

இதுவரை செய்த பணிக்கும், இனி செய்ய வேண்டிய பணிக்கும் சேர்த்துதான் இந்தப் பாராட்டு என்று குறிப்பிட்டார் கழகத் தலைவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner