எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று மாலை சென்னைப் பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் "தத்துவஞானி தந்தை பெரியாரை (சு)வாசிப்போம்" எனும் தலைப்பில் 75 மணித் துளிகள் உரையாற்றினார்.
அந்த உரை குறுந்தகடாக வலம் வரவிருக்கிறது. தந்தை பெரியாரைப் பற்றி நாம் அறிந்திருப்பது, புரிந்து கொண்டிருப்பது கை மண்ணளவு - கல்லாதது  கற்றுத் தெரிந்து கொள்ளாதது உலகளவு என்பது தான் உண்மை.

குறிப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாரின் "தத்துவ விளக்க" நூலை, தம் ஆய்வுக்கு உட்படுத்தினார். 15.11.1946 அன்று சேலம் நகராட்சிக் கல்லூரியின் தத்துவக் கலைக் கழகத்தில் தந்தை பெரியார் ஆற்றிய அரும் பெரும் சொற்பொழிவின் திரட்டு அது.

அந்நூலைப் படிக்கப் படிக்க படிப்போரின் பக்குவத்திற்கும், முதிர்ச்சிக்கும் ஏற்ப உள்வாங்கிக் கொள்ளும் தக உடைத்ததாகும்.
அந்தச் சிறப்புக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் கல்லூரி முதல்வர் ஏ. இராமசாமி கவுண்டர் ஆவார் நாமதாரி ஆனாலும் இனவுணர்வின் பெட்டகம். தந்தை பெரியார் பால் பேரன்பு கொண்டு ஒழுகிய ஒழுக்க சீலர். நீடாமங்கலத்தில் 23-24.2.1946 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் ஆவார்.

அவர் தலைமை தாங்கிய கல்லூரி சிறப்புக் கூட்டத்தில் தான் தந்தை பெரியார் தன் உரையை இவ்வாறு தொடங்கினார்.

"தலைவர் அவர்களே,

கல்லூரி முதல்வர் இராமசாமி அவர்களே!

இன்று இந்த சேலம் காலேஜ் தத்துவக் கலைக் கழகத்தின் சார்பாக நான் பேசவேண்டுமென்று அக்கழகத்தாரால் அழைக்கபட்டிருக்கிறேன். இங்கு மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் பலதிறப்பட்ட பொதுமக்களும் ஏராளமாய் கூடியிருக்கிறார்கள். உங்கள் யாவருக்கும் புரியும்படியோ, திருப்தி ஏற்படும்படியோ பேசுவது, கடினமான காரியமாகும். அதிலும் தத்துவக் கலைச் சார்புக் கூட்டத்தில் தத்துவங்களைப் பற்றிப் பேச வேண்டியது முதல் உரிமை, ஆதலால் இப்படிப்பட்ட கூட்டத்தில் தத்துவ விசாரணையைப் பற்றி பேசுவது மிகமிக கடினமான காரியம்.

தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது, உள்ளதை உள்ளபடி காண்பதும், அறிவதுமாகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.

நாம் தத்துவத்தையும், இயற்கையையும், வேறுபடுத்திய காட்சியையும், குணத்தையும், உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு வெறும் பச்சை உண்மை-தத்துவம் என்பது சங்கடமான காட்சியாகவும், கேள்வியாகவும் இருக்கும். உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதனைக் காண்பது என்பது இயற்கையை மறைத்துச் சாயலை வேறுபடுத்திய தோற்றத்தைக் காண்பது என்பதாகும். ஆனால், அதே மனிதனை இயற்கையாய் உள்ளபடி காண்பது என்பது அவனை நிர்வாணமாக, எவ்வித மறைவும் மாற்றமும் இல்லாமல் காண்பது என்பதாகும். இந்தக் காட்சி இன்றைய உலகுக்குப் பிடிக்காது. வெறுப்பையும், சங்கடத்தையும் உண்டுபண்ணக் கூடியதாகும். அப்படியே இன்றைய ஒவ்வொரு தன்மையையும், நிலைமையையும், நிர்வாணமாய், உண்மையாய்க் காண்பது என்பது இன்றைய உலகுக்கு வெறுப்பாகவும், அசூசையாகவும்,  அதிருப்தியாகவுமிருக்கும். அதனால்தான் தத்துவ விசாரணைக்கும், தத்துவம் அறிவதற்கும் மனிதன் சில பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்பார்கள்.

அதனால்தான், நானும் உண்மைத் தத்துவத்தைச் சொல்வது என்பது பலருக்கு அதிருப்திகரமானதாக இருக்கும் என்று சொன்னேன். பொதுவாகவே நாட்டில் ஒரு பழமொழி உண்டு. 'யதார்த்தவாதி பஹூஜனவிரோதி'  என்று சொல்வதுண்டு. இதன் கருத்து மக்கள் யாவரும் பொய்யர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. எது உண்மையோ, எது தத்துவமோ அது மக்களிடையில் மாற்றுருவம், மாற்றுப்பெயர், மாற்றுக்குணம் பெற்று இருக்கிறது. ஆதலால், உண்மை விளக்கம் திருப்தி அற்றதாகக் காணப்படும். எனவே, தத்துவ விசாரணை, விளக்கம் என்பதற்கு இயற்கையிலேயே  மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் சங்கடமிருந்தாலும் நான் அதாவது ஒரு சாதாரண மனிதனும், தலைவர் என்னைப்பற்றி எடுத்துச் சொன்னதுபோல் நாஸ்திகன், மதத் துவேஷ அரசியல் எதிரி என்கின்ற தன்மையில் பேர் வாங்கி இருக்கிறவனும் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதென்றால், அது மிகமிகச் சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.

என்றாலும்,  என்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு- குறைகளுக்கு சமாதானம் சொல்லும் முறையிலேயே   என் தகுதிக்கு ஏற்ற அளவு தத்துவதைப் பற்றி சொல்ல முயலுகிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட ஒரு அவையில் நான் எதைப்பற்றி பேசுவது என்பதாக எனக்குள் எழுந்த பிரச்சினை முடிவு பெறுவதற்கு முன்னதாகவே,  தலைவர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்துவதில்-இந்த  மேற்கண்ட சொற்களும் உச்சரிக்கப்பட்டதால், அவைகளே போதுமென்று கருதி அவைகளை பற்றிப் பேசலாம் என்றே நினைக்கிறேன்" என்ற பீடிகையோடு, தன் உரையைத் தொடங்குகிறார்.

இதிலிருந்து தெரிவது ஒன்று. இந்தத் தலைப்பில்தான் பேசுவது என்று தந்தை பெரியாரால் முன்னதாகவே முடிவு செய்யப்பட்ட ஒன்றல்ல. அந்தத் தருணத்திலேயே முடிவெடுக்கப்பட்டு ஆற்றப்பட்ட ஆற்றோட்ட உரை என்பது தெளிவாகிறது.

இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் தந்தை பெரியார், தன் சுய சிந்தனை ஊற்றிலிருந்து எந்த இடத்திலும் எந்தப் பொருள் குறித்தும் நீர் வீழ்ச்சியாகப் பீறிட்டுக் கொட்டும் பேரறிவாளர் என்பதை அறிய முடியும்.

இவ்வுரையே "தத்துவ விளக்கம்" எனும் தலைப்பில் நூலாக இதுவரை 15 பதிப்புகள் பல்லாயிரக்கணக்கில் வெளி வந்துள்ளது. Philosophy என்று ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளது.

இந்நூலுக்கு இணையாக இன்னொரு நூலை எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால் அதுதான் "இனிவரும் உலகம்" என்னும் தொலைநோக்கு நுண்ணாடி இனிவரும் காலத்தில் குழந்தைப் பிறப்பிற்கு ஆண் - பெண் சேர்க்கை தேவைப்படாது; சோதனைக் குழாய் குழந்தை உருவாக்கப்படும் என்று உரைத்தது - இன்றைக்கு நடைமுறைக்கு வந்து விட்டது உலகெங்கும் மருத்துவ விஞ்ஞானிகள் கனவு காணாத காலத்தில் இந்தச் சமுதாய விஞ்ஞானி தொலைநோக்கோடு அக்கருத்தைப் பிரசவித்தார். என்னே சுயசிந்தனைச் சூரியப் பிரகாசம். ஒரு திருமணத்தில் ஆற்றப்பட்ட அய்யாவின் உரை, அண்ணாவின் "திராவிட நாடு" இதழில் 21-28.3.1943 வெளிவந்ததாகும். அய்யாவின்  உரையை அண்ணாவே எழுதிய திரட்டாகும் இது.

பெரியாரைப் (சு)வாசிப்போம் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்த தலைவர் ஆசிரியர் அவர்கள் அவர் சுயசிந்தனையாளராக உருவெடுத்த சூழலை, மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

அது பெரியாரின் குழந்தைப் பருவத்திலிருந்தே கிடைத்ததாகக் கூறினார். திண்ணைப் பள்ளியில் படித்தபோது அந்தப் பள்ளி ஆசிரியரின் மகள் குடிக்க தண்ணீர்க் கொடுத்தபோது, குடித்து முடித்த பிறகு அந்தப் பாத்திரத்தைத் தண்ணீர் தெளித்து எடுத்த நிலையிலிருந்து பீறிட்டது. ஆம் அந்தப் பாத்திரம் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாட்டையில் சுயமரியாதை இயக்கப் பயணத்தில் தொடக்கப் புள்ளிப் பாத்திரமாகவே இருந்தது என்று கூட வைத்துக் கொள்ளலாம்.  இதைத்தான் தந்தை பெரியாரின் சுயமரியாதை உணர்வு விஞ்ஞானக் கூடத்தில்  உருவாக்கப்பட்டதல்ல, சமுதாயக் கூடத்திலே உருவானது என்று மிக நேர்த்தியாக அழகான சொற்களால் தீட்டிக் காட்டினார்.

"நியாயத்துக்காகப் போராடக் கூடாதா?" என்ற கேள்வி தந்தை பெரியார்  அவர்களிடத்தில் தோன்றியது எப்படி?

அதற்கொரு நிகழ்ச்சியையும் எடுத்துக் காட்டினார் ஆசிரியர் நெரிஞ்சிப் பேட்டை சாமியார் என்பவர் அந்தப் பகுதியில் பிரபலமானவர். அவரின் தம்பி ஓர் அயோக்கியன், ஊர் பூராவும் கடனை வாங்கி திருப்பிக் கொடுக்காத டிமிக்கிக்காரன்.

தந்தை பெரியாரோ அப்பொழுது ஈரோட்டில் மண்டிக்கார வியாபாரி என்ற தகுதியோடு மட்டுமல்ல. ஊர்ப் பொதுக் காரியங்களில் தலையிட்டு தீர்வு செய்யும் அளவுக்கு வளர்ந்து வரும் இளைஞர் - பிரமுகர்.

நெரிஞ்சிப்பேட்டை சாமியாரின் (சங்கராச்சாரியார் போன்றவர்) தம்பியிடம் கடன் கொடுத்து ஏமாந்த வியாபாரி ஒருவர். பெரியாரிடம் முறையிட்டார். அவசரமாய்ப் படி போட்டு வாரண்டுடன் வரச் சொன்னார் இராமசாமி (பெரியார்)
ஈரோட்டில் நெரிஞ்சிப்பேட்டை சாமியாருக்கான சமாராதனை, ஈரோடு எல்லையர் சத்திரத்தில் நடந்து கொண்டிருந்தது. அவரின் தம்பி அங்கு இருந்தான் என்பதை அறிந்து பொறி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டார் பெரியார்.

சம்பந்தப்பட்டவரைக் கூட்டிக் கொண்டு கோர்ட் சேவகனையும் அழைத்துக் கொண்டு சமாராதனை நடக்கும் இடத்திற்கே சென்று விட்டார். கையும் களவுமாகப் பிடிக்கும் நிலையில் சத்திரத்துக்குள் ஓடி கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு விட்டான். வாலிபர் பெரியார் (அப்போது வயது 23) விடுவாரா?

விடக் கூடியவர் தானா? வீட்டுக் கூரை மீதேறி உள்ளே குதித்து ஆளைப் பிடித்து வெளியில் கொண்டு வந்து கோர்ட் சேவகனிடம் ஒப்படைத்து விட்டார். இளங்கன்று பயமறியாது என்பதைவிட இந்த இராமசாமி இளங்கன்றல்ல - இளம் சிங்கக் குட்டியாயிற்றே!
நெரிஞ்சிப்பேட்டை சாமியாரின் சமாராதனை இந்தக் கூத்தில் அல்லோல கல்லோலமாகி விட்டது. பாதியில் முடிந்தது சமாராதனை. பார்ப்பனர்கள் யாரும் சாப்பிடவில்லை. அந்தக் கூட்டம் நேராக எங்கே படையெடுத்தது தெரியுமா?
பெரியாரின் தந்தையார் வெங்கிட்ட நாயக்கரின் மண்டிக்கு, என்ன காரணம்? சமாராதனைக்குக் கணிசமாகப் பணம் கொடுத்து உதவியவர் அவர்தானே!

நடந்ததைக் கேள்விப்பட்ட வெங்கிட்ட நாயக்கர் தன் மகன் இராமசாமியை தம் கால் செருப்பைக் கழற்றி ஆத்திரம் தீர அடித்து - என் முகத்தில் விழிக்காதே என்று காரித் துப்பினார் (அதோடு மறுபடியும் சமாராதனையை நடத்திடக் கணிசமான பணத்தையும் அந்தப் பார்ப்பனர்களுக்குக் கொட்டியழுதார் - இதுதானே விதைக்காது விளையும் பார்ப்பனீயம்!)

தமிழர் தலைவர் இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டி, பெரியாரின் பொது வாழ்வில் செருப்புக்கென்றே ஒரு தனி அத்தியாயம் உண்டு என்று இடைச் செருகலாக சொன்னது ஓர் இரசனைதான் (கடலூரில் செருப்பென்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்பதிலிருந்து ஆரம்பித்து விடலாமே!)

தந்தையிடம் செருப்படிபட்ட இராமசாமியின் சிந்தனையில் வெடித்த வினா முக்கியமானது.

அந்த வினா அவர் பொது வாழ்வின் தறியில் நெடுக்கும் குறுக்குமாக இருந்து வந்தே இருக்கிறது.

"அநியாயத்தைத் தட்டிக் கேட்கக் கூடாதா? நியாயத்துக்காகப் போராடக் கூடாதா?" - என்பது தான் அந்தச் செருப்படியின் எதிர்வினை.

இந்தக் கோணத்தில் எவரும் படம்பிடிக்காத ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் திரையிட்டுக் காட்டுவதுபோல மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

மானமும், அறிவும் மனிதனுக்கழகு என்று குறளை விடக் குறுகிய சொற்களால் மானுடத்திற்கு இலக்கணம் கற்பித்த தத்துவம் தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை அன்றிலிருந்து அரும்பி வளர்ந்து வனமாகி விட்டது.

தந்தையிடம் கோபித்து இராமசாமி வடநாடு சென்றதற்குக் காரணம் அந்த மான உணர்வும், அறிவுத் தேடலும்தானே!

தந்தை பெரியார் யார்? அவருக்குத் தோன்றிய உணர்வு எதிலிருந்து வேர் விட்டது? என்பதற்கான ஓர் ஆவணம் நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது.

அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையின் பகுதியிலி ருந்து ஒன்றை எடுத்து விளக்கினார் ஆசிரியர். (18.11.1967).

Periyar Ramasamy represents and symbolises the fury and frustration in a sizable section of society at this state of affairs.

பெரும்பான்மை மக்களின் கோபம், ஏமாற்றத்தின் வெளிப்பாட்டுச் சின்னமாக, பிரதிநிதியாகப் பெரியார் விளங்குகிறார் என்று அண்ணா சொன்னது சரியான படப்பிடிப்பு தானே!

தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்ற கோபத்தின் பிரதிபலிப்புதான் தந்தை பெரியார் என்பதை பல்கலைக் கழக மாணவர் மத்தியில் அண்ணா அவர்கள் - அதுவும் முதல் அமைச்சர் என்ற முறையில் முழங்கியது முத்தாய்ப்பானது அதனைப் பொருத்தமாக நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் ஆசிரியர் கொண்டு வந்து நிறுத்தினார்.

(வளரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner