எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

வரும் சனியன்று (4.11.2017) திருக்காட்டுப் பள்ளியிலே ஒரு திராவிடர் திருவிழா. தீபாவளி என்று நரகாசுரன் வதையைக் கொண்டாடிய கால கட்டத்தில், சதயவிழா என்று பார்ப்பன அடிமை ராஜராஜ சோழனைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு தருணத்திலே - திராவிடர் கழகம், திருக்காட்டுப் பள்ளியிலே இப்படி ஒரு விழாவை நடத்திட உள்ளது.

நாட்டில் நடப்பது ஓர் இனப் போராட்டம்தானே. இதனைப் புரிந்து கொள்வதற்கு ஈரோட்டு நுண்ணாடி தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டு மன்னர்கள் வரிசையில் கரிகாலனுக் கென்று ஒரு தனித்த மகுடம் உண்டு. இரண்டாம் நூற்றாண்டில், 19 நூற்றாண்டுகளுக்குமுன் ஒரு மன்னன் இப்படி ஒரு கல்லணையைக் கட்டினான் என்பது சாதாரணமானதுதானா?

தொழிற் நுணுக்கம் வளர்ந்திராத காலத்தில் 19 நூற்றாண்டுகளுக்கு முன் கரிகாலனால் கட்டப்பட்ட அந்த அணை எத்தனையோ இயற்கைச் சீற்றங்களைச் சந்தித்து உற்பாதங்களைப் பார்த்து, தன் உறுதிப்பாட்டை உலகிற்கு இன்றும் தெரிவித்துக் கொண்டிருக்கிறதே!

இம்மண்ணுக்குரிய வேளாண் தொழிலுக்கான ஓர் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று 19 நூற்றாண்டுக்குமுன் ஏற்பட்ட சிந்தனை சீர்தூக்கத் தகுந்ததாகும்.

நம் அரசர்கள் எல்லாம் கோயில்களைக் கட்டிக் கொண்டிருந்த கால கட்டத்தில், மக்களுக்குப் பசிப் பிணியைப் போக்கும் திசையில் சிந்தித்த அந்த மாமன்னனைப் போற்றுவோம்! போற்றுவோம். நாட்டின் வளத்தில் கண்வைத்தக் காரணத்தால் அவன் திருமா வளவனாக கரிகாற் பெருவளத்தானாக இன்று மட்டுமல்ல என்றும் போற்றப்படுவான்.

1080 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது இந்தக் கல்லணை! பெரிய பாறைக் கற்களைக் கொண்டு கம்பீரமாகக் கட்டப்பட்டுள்ளது.

பெரும் பாறைகளைக் கொண்டு வந்து ஒன்றின்மீது மற்றொன்றைப் போட்டு அவற்றைத் தரையில் ஆழமாக ஊன்றச் செய்து கல்லணை கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டப்படும் பல பாசன அணைக் கட்டுமானங்களுக்குக் கல்லணை ஒரு சிறந்த முன் மாதிரியாக ஒளி வீசுகிறது. ஆங்கிலேயப் பொறியாளரான ஆர்தர் காட்டன், கொள்ளிடம் அணையைக் கட்டுவதற்கு முன் இக்கல்லணையை, நன்கு ஆராய்ந்த பிறகே கட்டினேன் என்றார். கரிகாற்பெருவளத்தானின் கூர்த்த அறிவை என்ன வென்று சொல்லுவது!

கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பல இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. ஆண்பாற், பெண்பாற் புலவர்களுக்கும் புரவலனாக இருந்திருக் கிறான்.

சிறிய வயதிலேயே தந்தை இளஞ்சேட் சென்னியை இழந்தவன். இவன் உயிருக்குக் குறி வைத்தவர்கள் உண்டு இவன் ஓடி ஒளிந்த வீட்டிற்குப் பகைவர்கள் தீமூட்டினர். அதில் கால் கருதியதால் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான் என்று கூறப்படுகிறது. பகைவர் களாகிய யானைக்கு அதாவது கரிக்கும் காலனாக இருந்ததால்  இப்பெயர் ஏற்பட்டது என்று சொல்லப் படுவதும் உண்டு.

போர்க்களத்திலும் புலிக் குட்டியாகவே இருந்து புவியை ஆண்டான். நீடாமங்கலத்தையடுத்த வெண்ணி என்னும் இடத்தில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், அவனுடன் வந்த பாண்டியனையும் ஒரு சேர வென்ற வீரன்!

இவன் வெற்றியைப் பொறாத ஒன்பது மன்னர்கள் ஒன்று திரண்டு, வாகை என்னும் இடத்தில் வாகை சூட முனைந்த போது புறமுதுகாட்டி அவர்களை ஓடச் செய்த ஒப்பற்ற போர் வீரன் கரிகாலன்! வெற்றிப் போரைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இத்தகைய வீரனைக் கொண்டாடுவதா - பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் - பூமிக்கும், பன்றிக்கும் ஒரு அசுரன் பிறந்தான் அவன் நரகாசுரன், அவனை கடவுள் கிருஷ்ணனும் அவன் பெண்டாட்டியும் கொன்றனர் - அந்த நாள் தான் தீபாவளியென்று கொண்டாடுவதா?

ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

கல்லணை கட்டிய கரிகாலனுக்கு திருக்காட்டுபள்ளியில் விழா எடுக்கும் இதே கால கட்டத்திலே தஞ்சையிலே ஒரு மன்னனுக்கு சதயவிழா கொண்டாடப்பட்டுக் கொண்டு இருக்கிறது - ஆம் அரசே கொண்டாடுகிறது. எங்கு பார்த்தாலும் பதாகைகள் - கட் அவுட்டுகள்!

வண்ண வண்ணமயமான சுவரொட்டிகள்! ஒவ்வொரு ஜாதி சங்கத்தின் பேரிலும் மன்னன் ராஜராஜனுக்கு வாழ்த்துக்கள். சுவரொட்டிகள்!

'ராஜராஜன் எங்கள் ஜாதி எங்கள் ஜாதி!' என்று பல்வேறு ஜாதி சங்கத்தலைவர்கள் சில ஆண்டுகளாக உரிமை கொண்டாடும் இழி நிலையை என்னென்று சொல்லுவது!

ராஜராஜன் சிலை அருகில் போலீஸ் குவியல்! என்னவென்று கேட்டால் மன்னன் சிலைக்கு மாலை போட வருவோரிடையே மோதல் வந்துவிடக் கூடா தல்லவா!

அப்படி என்ன செய்துதான் கிழித்துவிட்டான் ராஜ ராஜன்? அவன் கட்டிய பெருவுடையார் கோயில் எத்தனை ஆயிரம் தொழிலாளர்களின், அடிமைகளின் ரத்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது!

2692 கிலோ தங்கத்தை அந்தப் பெருங்கோயிலின் கடவுளுக்குச் சாத்தி மகிழ்ந்தவன். குடிகளிடமிருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோயிலுக்குக் கொட்டியழ கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.

கோவில் நிதிக் குவியலிலிருந்து குடிகளுக்குக் கடன் வழங்கப்பட்டது. 12 சதவீதம் வட்டியாம் (அப்பொழுதே கந்து வட்டியோ!)

வறுமையால் வாடிய மக்கள் தங்களைக் கோயிலுக்கு விற்றுக் கொண்ட கொடுமையும் நடந்ததுண்டு.

கோவிலைச் சார்ந்து விதிக்கப்படும் வரி விதிப்பு போன்றவற்றை குடிமக்கள் எதிர்த்தால் அவர்களுக்கு "சிவத்துரோகி" என்று பட்டம் கொடுத்து ஒடுக்கப்பட்டனர்.

அதே நேரத்தில் பிரம்மதேயம் என்ற பேரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் இனாமாக வழங்கப்பட்டன. மங்கலம் மங்கலம் என்று எந்த ஊர்ப் பெயர் வந்தாலும் அவை எல்லாம் ராஜராஜனால் பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தூக்கிக் கொடுக்கப்பட்டவைதான். தாரை வார்க்கப்பட்டவைதான்! இவ்வாறு 250 ஊர்கள் வாரி வழங்கப்பபட்டன.

பார்ப்பனர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் மற்றவர்கள் நிலம் வைத்திருந்தால் அவற்றைப் பார்ப்பனர்களிடம் விற்றுவிட வேண்டும் என்பது ராஜராஜனின் ஆணை.

பார்ப்பனர்களுக்கு ஆங்காங்கே வேத பாடசாலைகள், உணவு, உறைவிட வசதிகளுடன், மாணவன் ஒருவனுக்கு ஒரு பொன் உபகாரச் சம்பளம் - 6 கலம் நெல்லும் உண்டு

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பதுதான் ராஜராஜசோழன் காலத்து நிலை!

பீகார் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர் களைக் கொண்டு வந்து குடியமர்த்தினான்.

வரலாற்றில் முதன் முதலாக ராஜகுரு என்ற பதவியை உருவாக்கிய பார்ப்பனர் அடிமையும் அவன்தான். ஈசான சிவப் பண்டிதர் என்னும் காஷ்மீரப் பார்ப்பனரை அந்தப் பதவியில் அமர்த்தினான்.

அடுத்த நாட்டின்மீது படையெடுப்பது மட்டும்தான் மன்னன் பணி, நிருவாகம் முழுவதும் ராஜகுருவின் காலடியில். களத்தில் வெங்குருதி கொட்ட, உயிர்துறக்க தமிழன்! கோலாகல இன்ப வாழ்க்கைக் குளியலுக்கோ பார்ப்பனர்கள்.

பார்ப்பனர்களுக்கு, தன் எடைக்கு எடை துலாபாரமாக தங்கமும், தானியமும் பல முறை வாரி வழங்கிய பார்ப்பன அடிமையாக வாழ்ந்து கெட்டவன்!

கோவிலுக்குள் பார்ப்பனர்களின் சமஸ்கிருதத்தை நுழைத்து - நம் பண்பாட்டை பார்ப்பன நுகத்தடியில் பூட்டச் செய்த பூர்ஷ்வாவும் ராஜராஜனே!

அருண்மொழித்தேவன் என்ற தமிழ்ப் பெயரை, ராஜராஜன் என்று சமஸ்கிருத்தில் மாற்றிக் கொண்ட கிறுக்கனும் இவனே!

400க்கும் மேற்பட்ட பெண்களை சூடுபோட்டு தேவரடியாள்களாக மாற்றி - அவர்களைக் கோயிலுக்கு ஒப்படைத்தவனும் இவனே! பத்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கொடுமை சுயமரியாதை இயக்க எழுச்சியால் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் அந்தக் கேவலத்துக்கும் சாவோலை எழுதப்பட்டது. (வாழ்க டாக்டர் முத்துலட்சுமி)

தீண்டாச்சேரிகளும் இவன் காலத்தில்தான் - தனி ஜாதி - சுடுகாட்டுக்குச் சுழிபோட்ட சூத்திரதாரியும் ராஜராஜனே! இவனுக்குத்தான் தஞ்சையிலே அரசு சார்பில் கோலாகல விழா.

கோயில் கட்டி பார்ப்பனப் பெருச்சாளிகளுக்கு கொட்டியளந்த ஒருவனுக்கு சதயவிழா. அணை கட்டி விவசாயிகளைக் குடிகளை வாழ வைத்த கரிகாற் பெரு வளத்தானோ நாதியற்றவன் - இதுதான் இன்றைய தமிழ்நாடு இதனைத் தட்டிக் கேட்கத்தான் திருக் காட்டுப்பள்ளித் திருவிழா!

மக்கள் நலன் சார்ந்த மாமன்னன் கரிகாலனுக்குதான் திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் சனியன்று தித்திக்கும் திருவிழா - இனமானப் பெருவிழா.

இனவுணர்வு, மொழி உணர்வு எங்கு தலைதூக்க வேண்டுமோ அங்கு திராவிடர் கழகம் இருக்கும் - அதன் தலைவரும் கண்டிப்பாக இருப்பார்.

ஆம், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு

கி.வீரமணி அவர்கள் பங்கு கொண்டு பரப்புரை செய்வார்; பகுத்தறிவு இனமானப் பெரு மழைக்கும்,  மொழி மான உணர்வுக்கும் பஞ்சமில்லை. சுவையான சூடு பறக்கும்  சொற்போர் - பல்வேறு தேவையான தலைப்புகளில். பெண்ணடிமையை ஒழிப்போம்! பகுத்தறிவுச் சுடர் ஏந்துவோம்! பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்போம்! பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம், “தமிழக உரிமையை மீட்டெடுப்போம்'' எனும் தலைப்புகளில் கழகச் சொற்பொழிவாளர்கள் கொட்டு முரசமாய் தோள் தட்டி துடை தட்டிக் கிளர்ச்சி இடி முழக்கம் செய்வார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலவித்தாக இருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, கரிகாற் பெருவளத்தான் பெருவிழா, புராண, இதிகாசங்களில் இழிவுபடுத்தப்பட்ட நம் இன வீரர்களை அடையாளம்காட்ட நரகாசுரன் விழா என்ற முப்பெரும் விழாவாக அரங்கேறுகின்றன.

இதனை ஒரு கட்சி விழாவாக யாரும் கருதத் தேவையில்லை. இன மக்களுக்காகத்தான் இவ்விழாவை ஓர் இயக்கம் நடத்துகிறது என்று கருத வேண்டும்.

ஆரியர்கள் தங்கள் பண்பாட்டைப் புதுப்பிக்கவும், மேலும் மேலும் நமது சிந்தனையில் ஆணியடித்து நிலை நிறுத்தவும் ஏராளமான பண்டிகைகள் உண்டு.. உண்டு.

உறவு எது, பகை எது என்று தெரியாமல் பழிகாரர்களின் குழிகளில் வீழ்ந்து வீழ்ந்து முதுகொடிந்த நமக்கு -
நம் இனத்தின் முகவரியைக் காட்ட, நமது மொழியின் மூத்த பெரு நிலையை வெளிப்படுத்த, திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க, திருக்காட்டுப் பள்ளியில் திரு முகங்களைக் காட்டுவீர்! சுற்றுவட்டார மாவட்டங்களி லிருந்து திரள்வீர்!

குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு, உறவினர் களோடு, நண்பர்களோடு திராவிடர் திருவிழாவுக்கு வாரீர், வாரீர் என்று அழைக்கிறோம்! அழைக்கிறோம்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner