எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதற்கு என்ன பதில்?

உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கர சாதியிற் பிறந்தவர்களில் சிலர் மிலேச்சபாஷையுள்ள வர்களாயும் சிலர் ஸமஸ்கிருதம் முதலிய உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.  ஆகிலும் அனைவரும் தஸ்யூக்களென்று சொல் லப்படுவார்கள்.

("தஸ்யூக்களென்பது - திருடர்கள்")
மனு - அத்தியாயம் 10 - சுலோகம் - 45

சோ. இராமசாமி மறைந்த பிறகு கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை யான திருவாளர் குருமூர்த்தி அய்யர், 'துக்ளக்' ஏட்டின் ஆசிரியராக அமர்த்தப்பட்டார். (பார்ப்பனரைத் தவிர வேறு யார்தான் வர முடியும்?)
'சோ'வின் பூணூல் தனம், பார்ப்பனத்தனம் அட்சரப் பிசகின்றி அப்படியே தொடர்ந்து கொண்டுள்ளது.

மணி சங்கர அய்யர், பிரதமர் மோடியை 'நீசன்' என்று பொருள்படும் படிக் கூறி விட்டாராம். அடேயப்பா குருமூர்த்தி அய்யருக்கு பொத்துக் கொண்டு வந்ததே ஆத்திரம்! உடனே அய்யா பெரியாரிடம் சாஷ்டாங்கமாகத் தண்டனிட்டு புலம்பித் தவிக்கிறார்.

ஆம் - இப்படியெல்லாம் அவதூறு செய்தால் அய்யராக இருந்தாலும் அய்யாவிடம் தானே சரணடைய வேண்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை 'சூத்திரர் என்று அடித்துச் சொல்லு வதற்கு இப்படியொரு சந்தர்ப்பத்தைத் தேடிக் கொண்டு இருந்தார் போலும்!

மாண்புமிகு நரேந்திர மோடி சூத்திரர்தான் முக்காலும் உண்மைதான்.

ஆனால் அந்த சூத்திரர் பட்டம் மிக மிக இழிவானது பிரம்மாவின் காலில் பிறந்த ஜாதி சூத்திரர் என்பது அவருக்குத் தெரியுமா?

அந்த மனுநீதியில் சூத்திரன் என்றால் என்ன என்று கூறியிருக்கிறதே அதுவும்தான் தெரியுமா?

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3) பிராமணனிடத்தில் பக்தியினால்  ஊழியம் செய்கிறவன், 4) விபச்சாரி மகன் 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன். (மனுதர்ம சாஸ்திரம்

அத்தியாயம் 8 சுலோகம் 415)

இந்த உண்மை எல்லாம் பிரதமர் மோடிக்குத் தெரிந்திருந்தால் திருவாளர் குருமூர்த்தி அய்யரை பார்த்து ஒரு கேள்வி கேட்டிருப்பாரே!

"குருமூர்த்தி அய்யரே குருமூர்த்தி அய்யரே, உம் தோளில் தொங்கும் பூணூலுக்கு என்ன பொருள்? துவி ஜாதி - இரு பிறவியாளன், பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் நீவீர் என்று சொல்லுவதாகத்தானே அர்த்தம் அந்த வகையில் பார்ப்பனரல் லாதானாகிய பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்  சார்ந்த என்னை நீவீர்  சூத்திரன் என்று இழிவுபடுத்துவதாகத் தானே பொருள்?

இந்தக் கேவலத்தையும் தாண்டியா மணிசங்கர அய்யர் கூறி விட்டார்" என்று கேட்டிருக்க வேண்டுமே! கேட்கவில்லையே! ஏன்?

அவர் கேட்க மாட்டார் - ஆம் கேட்கவே மாட்டார் ஏன்? அவர்தான் இந்துராஷ்டிரம் - ராமராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று சொல்பவராயிற்றே! இந்து ராஜ்ஜியத்தை ஒப்புக் கொண்டால், சூத்திரத் தன்மையை ஏற்றுக் கொள்பவராயிற்றே. சூத்திர இழிவை சுவையானதாக, சுகமானதாக நம்புகிறவர் - சுமப்பவர் ஆயிற்றே!

மணிசங்கர அய்யர், மோடியைப்பற்றி சொன்னதற்காக தாண்டித் தோண்டிக் கிணற்றில் விழும் திருவாளர் குருமூர்த்தி அவர்களே "நான் பிராமணன்" என்னும் ஜாதி ஆதிக்கத் திமிரின் அடையாளமான பூணூலை முதலில் அறுத்தெறிந்து விட்டு அதற்குப் பின் அரட்டையடிக்க வாரும் அனையும் சந்திக்கத் தயார்தான்!

சிண்டு முடிந்து சிரித்திடும் நரிகளே இந்தச் சில்லுண்டித்தனம் எல்லாம் எங்களிடம் வேண்டாம்!!

- மின்சாரம்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner