எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வரும் 16ஆம் தேதி சனியன்று மாலை திருக்காட்டுப் பள்ளியில் திராவிடர் கழகத்தின் சார்பில் இரு பெரும் விழாக்கள்!

உலகின் மிகப் பழைமையான ஜோர்டான் நாட்டின் தலைநகரான ஜாவா அணை, எகிப்து நாட்டின் பாடி அல்-கரவி அணை, சிரியா நாட்டின் க்வாதினா அணை இவைகளையும் விஞ்சிய அளவிற்குப் பழமையானது  கரிகாலன் என்னும் தமிழ் மாவேந்தன் கட்டிய கல்லணை என்று பாராட்டப்படுகிறது.

களிமண் பாறைகளைக் கொண்டு 1080 அடி நீளம் 40 முதல் 60 அடி வரை அகலம். 15 முதல் 18 அடி வரை உயரம் ஆகிய பரிமாணங்களுடன் வளைந்து செல்லும் நாகம் போல் கட்டப்பட்டதே கல்லணை!

சிறீரங்கத்தின் கீழ் எல்லையில் காவிரி ஆற்றிலிருந்து சிறீரங்கத்தின் வடபுறத் தாழ்வுப் பகுதிக்கும் வெள்ளம் ஊடறுத்துச் செல்லுகிற அரிப்புப் பாறையின் குறுக்கே (முக்கொம்பு)  இந்தச் சாதனையைச் செய்து முடித்த செயற்கரிய வீரன் கரிகாலன்!

இது ஒன்றும் கற்பனைப் புராணமுமல்ல; நரேந்திரமோடி சொல்லும் சிவபெருமானின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அண்டப் புளுகும் அல்ல.

தமிழர்களின் தொழில் நுட்ப அறிவைப் பறைசாற்றும் கருவூலம் இது.  அந்தச் செயற்கரும், செயலை செய்து காட்டிய கரிகாலனுக்கு கோயில்களை கட்டி சோம்பேறிப் பார்ப்பனர்களை ஊட்டி வளர்த்த அரசர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனை.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இப்படியொரு அணையா என்று இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஆர்தர் காட்டன் என்னும் ஆங்கிலப் பொறியாளர் ஆச்சரியப்பட்டுப் பாராட்டியுள்ளார். 1829ஆம் ஆண்டில் அங்குப் பாசனப் பகுதியின் தனிப் பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டவர்தான் ஆர்தர்காட்டன்; கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கே எடுத்துக் கூறினார். கல்லணைக்கு அவர் சூட்டிய பெயர் 'கிரான்ட் அணைகட்" என்பதாகும்.

விவசாயம், பாவத் தொழில் என்று பழித்துரைத்தபார்ப்பனீயத்துக்கு எதிராக பாசன வசதியைப் பெருக்கும் பெரு நோக்கத்தோடு இப்படி ஒரு தமிழ் மன்னன் சிந்தித்தான் - செயல்பட்டான் என்பது எத்தகு சிறப்புக்குரியது!

இருட்டடிக்கப்பட்ட பகுதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுதானே திராவிடர் கழகத்தின் முன்னுரிமைப் பணி - அந்த அடிப்படையில் தான் கரிகாலனுக்குப் பெருவிழா!

அதேபோல புராணங்களிலும், இதிகாசங்களிலும் அசுரன் என்றும், இராட்சதன் என்றும், தஸ்யூக்கள் என்றும், இழித்துரைக்கப்படுவோர் எல்லாம் திராவிடர்களே என்று பார்ப்பன வரலாற்று ஆசிரியர்களேகூட மறுக்க முடியாமல் வரலாறாகப் பதிவு செய்துள்ளனர்.

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்ததெல்லாம் அத்தகு அசுரர்களை, திராவிடர்களை அழிக்கத்தானே! அப்படி அழிக்கப்பட்டவன் தான் நரகாகரன்.

என்ன கொடுமை என்றால் ஆரியர்களால் சூதாகக் கொல்லப்பட்ட அந்த நாளை 'தீபாவளி' என்று  நம்மையே நம்பவும் வைத்து விழாவாக நம்மை கொண்டாடவும் வைத்து விட்டானே! நம் கையைக் கொண்டே நம் கண்களை குத்தச் செய்து விட்டதே குள்ள நரிக் கூட்டம்!

பூதேவர்கள் என்று கூறப்படும் பார்ப்பனர்களை எதிர்த்த அசுரர்கள், நம் திராவிடர்கள் என்ற உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டாமா? அதற்காகத்தான் கரிகால் பெருவளத்தானோடு, நரகாசுரனுக்கும் விழா!

திராவிட இனவுணர்வாளர்களே! சனியன்று நீங்கள் இருக்க வேண்டிய இடம் திருவையாறையடுத்த திருக்காட்டுப் பள்ளி! தமிழர் தலைவர் பங்கேற்கிறார் - கருத்தரங்கம் - கலையரங்கம் களை கட்டும். மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பம்பரம் போல் பணியாற்றுகிறார்கள். மழையின் காரணமாக ஒரு முறை ஒத்தி வைக்கப்பட்டதால் பொருள் சேதம் உட்பட பல சிரமங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது - தமிழர் தலைவர் ஆணையைச் சிரமேற் கொண்டு செய்து முடிப்பவர்கள் ஆயிற்றே -  நம் கருஞ்சட்டைத் தோழர்களாம் கொள்கை மாமணிகள்!  அந்த உழைப்பை மதிப்போம்! நமது இனமானக் கொடியை உயர்த்துவோம். வாரீர்! வாரீர்!!

- மின்சாரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner