எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- கலி.பூங்குன்றன்

1. ரஜினி அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?

18 வயது நிறைந்த மனநோயாளியாக இல்லாத இந்தியக் குடிமகன் எவரும் வாக்களிக்கவும், அரசியலில் ஈடுபடவும் தகுதி உடையவர்தான். அந்த அடிப் படையிலே ‘நான்’ அரசியலில் குதிப்பேன்!’ என்றுகூற நடிகர் ரஜினிக்கு உரிமை உண்டு - உண்டு - உண்டு.

பல ஆண்டுகளுக்கு முன் அரசியல் ஒரு  சாக்கடை. அதில் இறங்க தமக்கு விருப்பமில்லை என்று கூறியவர்தான் இந்த ரஜினி. (தீக்கதிர் 2.01.2018 - பக்கம் 5)

அத்தகைய ஒருவர் இப்பொழுது அந்த சாக்கடையில் ‘நீராட’ ‘நீச்சலடிக்க’ குதிப்பது ஏன்? அன்று சாக்கடையாக இருந்தது. இன்று சந்தனம் கமழும் தடாகமாக மாறி விட்டதா? இதற்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டி ருக்கிறார் நடிகர் ரஜினி.

மற்றொன்று - அரசியலுக்கு வருமுன் தமிழ்நாட்டு மக்களைச் சார்ந்த எந்தப் பிரச் சினைக்காவது குரல் கொடுத்தது உண்டா? வீதிக்கு வந்து போராடியதுண்டா? குறைந்த பட்சம் துணிவாக விமர்சனங்களையாவது முன் வைத்தது உண்டா?

இயற்கை பேரிடரில் தமிழ் மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கி அவதிப்பட்ட போது உதட்டை அசைத்ததுண்டா? உதவிக்கரம் நீட்டியதுண்டா? காவிரி நீர் பிரச்சினையில் கருநாடகம் தொடர்ந்து துரோகம் செய்து வரும் நிலையில் இந்த ரஜினி எங்கே போயிருந்தார்? ஆயிரக் கணக்கான தமிழர்கள் குடும்பம் குடும்பமாக அடித்து விரட்டியடிக்கப்பட்டபோதும் கூட ரஜினி நடித்துக் கொண்டிருந்தாரா- ரசித்துக் கொண்டிருந்தாரா? என்ற கேள்விகள் எழத்தான் செய்யும். கடைசிவரை இவையெலாம் அவரைத் துரத்தியடித்துக் கொண்டுதானே இருக்கும்.

பொதுவாழ்வில் ஒரு  சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் நேரடியாக தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிப்பேன். முதலமைச்சர் நாற்காலியில் அமருவேன் என்று இன்று ஆவேச போர்ப்பாட்டு பாடுவது - தமிழர்களை கிள்ளுக் கீரையாக ஏமாளிகளாக நினைப்பது என்பதில்லாமல் வேறு என்னவாம்?

வெறும் சினிமா ரசிகர் தன்மை என்னும் மண் புழுவைத் தூண்டிலில் வைத்து மக்களின் வாக்குகளைக் பிடிக்கும் தந்திர யுக்தி அல்லாமல் இதனை வேறு எந்த தரத்தில் வைத்து மதிப்பிடுவது?

திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக இருப்பதுவே, நாட்டை ஆளும் தகுதிக்குப் போதுமானது என்று நினைப்பதை பகுத்தறிவுள்ள எந்த மனிதன் தான் ஏற்றுக் கொள்வான்?

கிரிக்கெட் ஆட்டக்காரர் விராட் கோலி, நம்பர் ஒன் பேட்ஸ் மேனாக இருப்பதால் அவரை இந்தியப் பிரதமராக ஆக்கிடலாமா?

சிவாஜிகணேசன் மணிமண்டபம் 1.10.2017 அன்று சென்னையில் திறக்கப் பட்டது. அவ்விழாவிலே இதே சிவாஜிராவ் (ரஜினி) என்ன பேசினார்?

“சிவாஜி தனிக்கட்சி ஆரம்பித்து அவரு டைய தொகுதியிலேயே நின்று தோற்று விட்டார்.இதில் ஒரு செய்தியை சிவாஜி சொல்லி விட்டு போயிருக்கிறார். அரசியலில் வந்து வெற்றியடைய வேண்டுமென்றால் சினிமா, புகழ், பெயர், செல் வாக்கு மட்டுமிருந்தால் போதாது,  அதற்கு மேல் ஏதோஒன்று ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எனக்கு சத்தியமாக தெரியாது”

என்று இதே சாட்சாத் ரஜினிகாந்த் பேசினாரா இல்லையா?

மக்களைப் பற்றி ஏதும் தெரியாத ஒருவர் மக்களை ஆள ஆசைப்படலாமா?

சாய்வு நாற்காலியில் ஏர் கண்டிசன் அறையில் அமர்ந்து, இசை இன்பத்தை நுகர்ந்து ஆடி அசைவதுதான் - அரசியலா? ஆட்சிப்பீடமா - பொதுவாழ்க்கையா? சினி மாவில் சிறை என்பது வேறு. நிஜவாழ்க்கையில் சிறைச்சாலை என்பது வேறு என்பதை நினைத்துப் பார்க்கட்டும்!

2. கட்சியின் கொள்கை என்ன?

கோட்பாடு என்ன?

அரசியலில் குதித்து விட்டேன், அரசியல் கட்சியை ஆரம்பிப்பேன் என்று அறிவித்தவர், அப்படி ஆரம்பிக்கப் போகும் கட்சியின் கொள்கை என்ன? திட்டமென்ன? அணுகு முறை என்ன? என்று தெரிவிப்பதுதானே அறிவு, நாணயம்?

கண்டக்டராக ஆக வேண்டுமானாலும் கூட அதற்குரிய உடை, விசில் அல்லது சீட்டி, எழுதுகோல், பணப்பை இருக்க வேண்டும். பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே பேருந்துக்குள் நடந்து  செல்லுவது எப்படி?, டிக்கெட்டை கிழித்துக் கொடுப்பது எப்படி? சார்ட் எழுதுவது எப்படி? எந்தெந்த இடம் ஸ்டாப்பிங் என்பதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?

ஒரு கண்டக்டர் வேலைக்கே இவ்வளவு தெரிந்திருக்க வேண்டும் என்றால், முதல மைச்சர் வேலைக்கு எவ்வளவு தெரிந்தி ருக்க வேண்டும்.

கட்சியின் கொள்கை பற்றி அவர் என்ன சொல்கிறார்?

‘நேற்று முன்தினம் வரும் போது, சார் உங்கள் கொள்கைகள் என்ன என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். உடனே எனக்கு தலை சுத்திடுச்சி’ என்று கூறியிருக் கிறார். (மாலை மலர் - 31.12.2017 -பக்கம் 4)

எப்படி இருக்கிறது?

உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்றால், அதற்கும் பதில் சொல்ல முடியவில்லை; தலை சுத்திடுச்சி என்கிறார்.

இப்படிப்பட்ட ஒருவர்தான் அரசியல் கட்சியை தொடங்கப் போகிறாராம் - ஆட் சியைப் பிடிக்கப் போகிறாராம். முதலமைச்சர் ஆகப் போகிறாராம்.

‘அண்ட காகசம் அபூக ஹூகும்’ திறந்து விடு சீசே.... என்ற மாயாஜால சினிமாக் காட்சியா அரசியலும் - ஆட்சியும்?

3. ஆன்மிக அரசியலில் ஈடுபடப்போவதாக

அறிவித்துள்ளாரே ரஜினி?

அவர் சொல்லும் அந்த ஆன்மிகம் தான் என்ன?ஆள் ஆளுக்குப் பலரும் பாஷ் யங்கள் சொல்லிக் கொண்டு இருக்கி றார்களே. அதற்கு அவர் விளக்கம் அளிக்க கடமைப் பட்டவர் இல்லையா?

ஆன்மா என்பதில் இருந்து வருவதுதான் ஆன்மிகம். ஆன்மா என்ற ஒன்று இருக் கிறதா?அது அறிவியல் முன் நிற்கக் கூடியதா? பாவ புண்ணியத்திற்கு ஏற்ப ஆன்மா கூடு விட்டு கூடு பாய்கிறது என்கிறார்கள். இந்தப்பிறவியில் படும் துயரங்களுக்குப் போன ஜென்மத்தில் செய்த பாவம்தான் காரணம் என்பதை ஒப்புக் கொண்டால், மனிதன் தன் உரிமைகளுக்காகப் போராடுவது கூட குற்றமாகி விடுமே - எல்லாம் ஆண் டவன் பார்த்துப்பான் என்கிற அவரின் வழக்கமான டயலாக்குக்கு வசதியாக போய்விட்டது என்று நினைப்பாரோ!

ரசிகர்களின் சந்திப்பின் போது கீதையில் இருந்து சுலோகங்களைச் எடுத்துச் சொல்லி யிருக்கிறார்.

‘கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே’ என்று பகவான் கிருஷ்ணன் கீதை யில் சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அப்படியென்றால் ரஜினி ஆட்சியில் தொழிற்சங்கங்கள் இருக்காதா? தொழி லாளர்களின் கோரிக்கைகளுக்கு இடமில் லையா? அப்படியே கொடிபிடித்து வீதிக்கு வந்தால் ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்று பகவான் கிருஷ்ணன் கீதையில் சொல்லிருக்கிறார் என்று ‘பாபா’ முத்திரையைக் காட்டுவாரோ!

நான் சொல்லும் ஆன்மிகத்துக்கும், மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். அப்படியென்றால் கீதை எங்கே அங்கு வந்தது?  அது இந்துமதத்தில் முக்கிய நூல் அல்லவா? பகவான் ‘பாபா’ வின் முத்திரை எங்கு வந்தது? அவர் இந்துமதத்துக்கு சம்பந்தம் அற்றவரா?

அவரின் முக்கிய குருநாதரான சச்சி தானந்தர் இந்து மத யோகா சாமியார் அல் லவா? அமெரிக்காவில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் வாழ்த்து வந்த கார்ப் பரேட் சாமியார் அல்லவா! (பாவம் - ரஜினியின் பாபா படம் பார்க்க வந்து அத்தருணத்திலேயே உயிரை விட்டவர். அதுவும் கர்ம பலன்தானோ - விதிவசம்தானோ!)

இவரது குருநாதர்களும் - கீதையும் இந்துமதத்தின் சட்டைப் பைக்குள் இருக்கும் போது நான் கூறும் ஆன்மிகத்துக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவது யாரை ஏமாற்றிட?

இவர் கூறும் ஆன்மிகம் இந்தமத்திற்குச் சம்பந்தமில்லை என்றால் குருமூர்த்தி அய்யரின் குடுமிகள் குதிக்குமா? ஆர்.எஸ். எஸ்.சின் விஜயபாரதங்கள் ரஜினிகளுக்குப் பராக்குதான் பாடுமா?

ஜாதி, மதத்துக்கு சம்பந்தமில்லாதது தனது ஆன்மிகம் என்று சொல்லி விட்டு கீதையை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்சுகிறாரே - அந்த கீதைதானே சதுர்வர்ணம், மயா சிருஷ்டம் என்று கூறுகிறது.

நான்கு வகை வருணங்களையும் நானே படைத்தேன். படைத்தவனாகிய என் னாலேயே அதனை மாற்றியமைக்க முடியாது. (கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13) என்று கூறும் ‘கிருஷ்ண பரமாத்மா’ பற்றியெல்லாம் சிலாகித்துள்ளாரே - இதனை எதிர்ப்பது தான் திராவிட அரசியல். இந்த திராவிட அரசியலை எதிர்ப்பது தான் ரஜினி அரசியல் என்றால் இதனைத் தந்தை பெரியார் உழைத்த - திராவிட இயக்கம் வேரூன்றிய, தமிழ் மண் அடையாளம் காணாதா? இவருக்குப் பின்னால் இருப்பவர்களின் முகமும் கரங்களும் யாருடையது என்பது தெரியாதா?

‘என்னுடையது ஆன்மிக அரசியல்’  என்று அடித்துக் கூறுகிறாரே - இதே ரஜினி ஆன்மிகத்துக்கும், அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்புகுறித்து ஏற்கெனவே என்ன சொல்லியிருக்கிறார்?

1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பிறந்தநாளையொட்டி 12, 13 நாட்களில் தூர் தர்ஷனுக்கு இதே ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் சொல்லியிருப்பது என்ன?

கேள்வி: “அரசியல் - ஆன்மிகம், ஒப்பிடுங்க?”

ரஜினியின் பதில்: “ஒப்பிடமுடியாது, ஒப்பிடவும் கூடாது. ஏன்னா அது பாம்பும் கீரியும் மாதிரி, எதிர்திசையில் உள்ளன”

- ஆம், இப்படிசொன்ன அதே ரஜினிதான் இப்பொழுது என்னுடையது “ஆன்மிக அரசியல்” என்கிறார்.

இதற்கு விமர்சனம் தேவையா? எவ்வளவு பெரிய மோசடி இது? - எவ்வளவு பெரிய திருகுதாளம் இது?

சிந்தனையில் சுத்தமில்லையே - வார்த் தையில் வாய்மை இல்லையே.  முழு பூசணிக்காயையும் ஒருபிடி சோற்றில் மறைக்கும் இத்தகையவர்களை முழுமையாக அடையாளம் காண இது ஒன்றே போதாதா? மக்களின் மறதிமீது மனக்கோட்டை கட்ட எண்ணமா?

ஆன்மிகவாதிகளின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது - என்பதற்கு இந்த ஒரு சோற்றுப்பதமே போதுமானது.

4. சிஸ்டம் கெட்டுப்போய் விட்டது அதை சரி செய்ய வேண்டும் என்று ரஜினி கூறுகிறாரே?

சிஸ்டம் எதில் கெட்டுப்போயிருக்கிறது என்று முதலில் சொல்லட்டும். அதன்பின் கெட்டுப்போன அந்த சிஸ்டத்தை சரிசெய்ய எந்தக் கருவியை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை சொல் லட்டும்! முதலில் சமுதாய அடிப்படை சிஸ்டமே பிறப்பின் அடிப்படையில் ஜாதி  - ஜாதிக்குள் பேதாபேதம், உயர்வு தாழ்வு என்ற பேதாபேதம் இருக்கிறதே!

சமூக பொருளாதார அரசியல் அத்த னைக்குமே இந்த ஜாதிய அமைப்பு சிஸ்டம் தானே மூலவேர். இதனை மாற்றியமைப் பாரா திருவாளர் ரஜினி?

கீதையின் சுலோகத்தை சொல்லி ரசிகர்களின் சந்திப்பை தொடங்குபவர் இதுபற்றி எப்படி சிந்திக்க முடியும்?

அது ஒருபுறம் இருக்கட்டும்; ரஜினிக்காக கொடி கட்டி ஆடும் அந்த சினிமா உலகம் இருக்கிறதே அந்த சிஸ்டம் எப்படி இருக்கிறது?

கருப்புப்பணம் ராஜநடை போடும் இடத்தில் சினிமா உலகம் முக்கிய இடத்தில் இல்லையா?

நேரடியாகவே கேட்கிறோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருப்புப் பணம் வாங்குகிறாரா? இல்லையா? வாங்குவது எல்லாம் வெள்ளைப் பணம் தான் என்று அவர் நம்பிக்கைப்படி ‘சத்தியம்‘ செய்வாரா?

அவர் நடித்து வெளிவரும் படங்களில் திரையரங்குகளில் 100 ரூபாய் டிக்கெட், 1000 ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்கப்படுகிறதே. இதில் ரஜினி ரசிகர்களின் பங்கு என்ன? ‘மனச்சாட்சியை’தொட்டு பதில் சொல்லட்டும் திருவாளர் ரஜினிகாந்த் - முதலில் இந்த சிஸ்டத்தை மாற்றட்டும்! அதன்பின் அரசிலுக்கு வரட்டும் - அதுதான் நாணயம்.

5. ரஜினி நேரடியாகவா? மறைமுகமாகவா?

நடிகர் ரஜினிகாந்த் பின்னால் இருந்து இயக்குவது பாஜக என்று பரவலாக குற்றம் சாற்றப்படுகிறது. அது தவறாக இருந்தால் இது வரை ரஜினி சார்பில் மறுத்திருக்க வேண்டாமா? மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்று எடுத்துக் கொள்ள லாமா? ஆர்.எஸ்.எஸ். ஆலோசகர் பிஜேபி சார்பில் தரகு செய்விக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கக் கூடிய திருவாளர் குருமூர்த்தி அய்யர் என்ன சொல்லுகிறார்?

“ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி கருத்து. ரஜினியின் அரசியல் வருகை தமிழகத்தில் 60 ஆண்டுகளாக உள்ள திராவிட அரசியலில் பல அடுக்கு மாற்றங்களை ஏற்படுத்தும். ரஜினியின் ஆன்மிக அரசியல் கருத்து பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்க மானது.”

(தினமணி - 1.1.2018 - பக்கம் 7)

ரஜினிக்குப் பின்னால் யார் இருக் கிறார் கள்? அவரின் ஆன்மிக தத்துவம் எந்த வேரில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. என் பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா?

“பத்திரிகையாளர் ‘சோ’வை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். சோ என்னுடன் இருந் திருந்தால் 10 யானைகளின் பலம் இருந்திருக்கும்” என்று ரசிகர்களின் சந்திப்பில் கூறியிருக்கிறார் ரஜினி.

சோ யார்? கடைந்தெடுத்த இந்துத்துவா வாதி - சங் பரிவார், பிஜேபி வட்டாரத்தின் நட்சத்திர ஒளி. அவர் என்னென்ன வெல்லாம் எழுதியிருக்கிறார் இதோ: “தமிழை வளர்க்கிறேன் என்று அரசு நிர்வாகத்தில் நுழைந்து குட்டிச்சுவராக்கும் இவர்களை (திமுகவினரை) மொழி நக்சலைட்டுகள் என்றுதான் கூற வேண்டும்.” (துக்ளக், 15.9.2010)

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட நிலையில் கன்னட வெறியர்கள் அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதும். (துக்ளக் - 19.8.2009)என்று ஜாடைக் காட்டியவர்.

கோயில்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் வரத்தகுதியில்லை. தமிழ்வழிபாட் டால் அருள் இருக்காது. (துக்ளக் - 18.11.1998 - தலையங்கம்) இந்த சோ தான் ரஜினிக்கு 10 யானைகளின் பலமாம். திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் எல்லாம் ரஜினிக்கு நாட்டமிகு நண்பர்கள் என்றால் இந்த ரஜினி யார் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே. ரஜினியின் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதை வைத்தே ரஜினி எந்தத் திசையில் பயணிக்கப் போகிறார் என்பதைக் கண்டுபிடிப்பது எளிது.

6. திராவிட அரசியலுக்கு எதிரான

ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி...

திராவிட அரசியல் என்றால் சமூகநீதி, மதச் சார்பற்றத்தன்மை, இவற்றை கால்கோளாக கொண்டது. ரஜினியின் அரசியல் என்றால் இவற்றுக்கு எதிரானது என்று பொருள்.

தந்தை பெரியாரின் சமூக நீதியின் மண் இந்தத் தமிழ் பூமி. திராவிட இயக்கம், திராவிட அரசியலின் ஆணிவேர். ஆரியத்தின் நெடுங் கால ஆதிக்கப்புரியை சுட்டு  வீழ்த்துவதுதான் திராவிட அரசியல்.

ஆரிய வலையில் சிக்கிய எம்.ஜி.ஆர். இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவு கோலைத் திணித்துத் தோற்றார். தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே தெரிந்திராத எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க. 1980 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் 37 இடங்களில் தோல்வி கண்டதே! அதன் நிலையை உணர்ந்த முதலமைச்சர் எம்ஜிஆர் பிற்படுத்தப் பட்டவர்களின் இடஒதுக் கீட்டை 31 சதவிகித் திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தினாரே!

எம்.ஜி.ஆரால் முடியாததை ரஜினியை பயன்படுத்தி சாதிக்கலாம் என்று பாஜக கருதுவதாகத் தெரிகிறது.

இரண்டாவதாக மதச்சார்பின்மை என்பது திராவிட இயக்க அரசியலில் மிகவும் முக்கிய மானது. ரஜினியின் ஆன்மிகம் மதச்சார்பற்ற தன்மை கொண்டதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான மதச்சார்பின்மைக்கு

(SECULARISM)  எதிராக நடை போடுவாரா ரஜினி?

இப்பொழுது வெளிவந்துள்ள ஒரு தகவல்... மதச்சார்பின்மைக்கு விரோதமாக அவர் நடந்து கொள்ளப் போகிறார் என்பதை தெரிவிக்கிறது - சமூக வலை தளங்களில் அது படத்துடன் உலா வந்து கொண்டுமுள்ளது. அது இதோ.

புத்தாண்டையொட்டி சென்னை ராம கிருஷ்ணா மடத்திற்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள ஆன்மிகத் தலைவர் கவுதமானந்தாஜி மகாராஜை சந்தித்தார்.

அப்போது அவர்கள் பேசிக் கொண்டி ருந்தபோது பதிவு செய்யப்பட்ட காட்சி ஒன்று ஊடகங்களுக்கு வந்துள்ளது. அதில் சினிமா குறித்தும், அதில் செய்யப்பட வேண்டியன குறித்தும் கவுதமானந்தாஜி பின்வருமாறு கூறுகிறார்.

Every Possibility

இது பவர்புல் மீடியா

Good films can change the world.
National Spirit
அந்தக் காலத்தில் எல்லாத்திலயும் I am an Indian.

. பிரிட்டிஷ் காரன் ஒழிஞ்சு போ.

Every Film... Social-ல, புராணிக்ல... அய்யயோ... “It would happen again” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது இடைமறிக்கும் அவரது சீடர் ஒருவர், “He has mentioned.... அரசியல்ல ஆன்மீகம் இருக்கணும்னு ஓப்பனா சொல்லிருக்கார். The so called Secularism இல்ல” என்று சொல்லிச் சிரிக்கிறார். அதைப் புன்புறுவலோடு ஆமோதிக்கிறார் ரஜினி.

“மதவாதம் இல்லாத ஆன்மீக அரசியல்” என்று நடிகர் ரஜினி சொன்ன மறுநாளே, “மதச்சார்பற்ற தன்மை இல்லாத ஆன்மிகம் தான் ரஜினி சொல்வது” என்று ரஜினியின் ஆமோதிப்போடு ராமகிருஷ்ணன் மடத் தின் சீடர் சொல்ல... பல்லிளிக்கிறது ரஜினி யின் ஆன்மீக அரசியல்!

கோணிப்பைக்குள் இருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டதே! பிஜேபி ரஜினியை தோளில் சுமக்கிறது என்றால் சும்மாவா? சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

7.மூடநம்பிக்கையில் சவாரியா?

நடிகர் ரஜினி ரசிகர்களின் சந்திப்பின் போது பாபா முத்திரையை காட்டுகிறார். பின்திரையில் பாபா முத்திரை படம் இடம் பெற்றுள்ளது. எதற்கெடுத்தாலும் ஆண் டவன் பார்த்துப்பான் என்கிறார். இது அரசி யலில் எடுபடுமா?

அடிக்கடி இமயமலைக்கு ஓடிப்போய் தியானம்

(MEDITATION)  செய்ய ஆரம்பித்து விடுவார். இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா அவதார் பாபாஜியை சந்திப்பேன் என்று ரஜினி சொல்லுவார். அதனை நாட்டுமக்களும் நம்பித் தொலைக்க வேண்டுமா? ஒரு பழமொழி உண்டு. கேட்பவன்  கேனையனாக இருந்தால் எருமைமாடு ஏரோப் பிளேன் ஓட்டியது என்பானாம்! தனி மனிதன் மூடநம்பிக்கை வாதியாக இருந்தாலே கேடு. ஓர் ஆட்சித் தலைவரே மூடநம்பிக்கைவாதியானால், நாட்டின் நிலை என்ன?

8. அரசியல் ரசிகர் மயம் ஆகவேண்டுமா?

சினிமா ரசிகர்கள் என்றால், நடிகர் பெயரால் மன்றம் அமைக்க வேண்டும். அவர் படம் வந்தால் சுவரொட்டிகள் ஒட்ட வேண்டும். கட்அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்யவேண்டும். கள்ள டிக்கெட்டுகள் விற்கவேண்டும். இன்னோ ரன்ன கிறுக்கல்பணிகள் அனந்தம்! அனந்தம்!!

இந்த ரசிகர் எல்லாம் அரசியல் வாதிகளானால் நாட்டின் நிலை என்ன வாகும்? தாங்கள் வழிபடும் கடவுளாகத் தானே முதலமைச்சரை துதிப்பார்கள். கேள்விக்கு அங்கே இடம் ஏது? கேளிக்கை வேண்டுமானால் கூத்தாடும்.

இப்படி ஒரு பிம்பத்தோடு  முதல மைச்சர் வருவாரானால் நாட்டின் நிலை என்ன ஆகும்?

அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல, அதை விட பேராபத்து ஜனநாய கத்துக்கு இருக்க முடியுமா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஏ (எச்), மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும் (SCIENTIFIC TEMPER)
கேள்வி கேட்கும் உணர்வினையும் (SPIRIT OF ENQUIRY) வளர்க்க வேண்டும். அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றுகூறுகிறது. ஆன்மா அரசியல் நடத்தும் ரஜினியின் நிலைப்பாடு இதில்என்ன? ரசிகர்கள் வேண்டுமானால் கேள்வி கேட்க மாட்டார்கள் - மக்கள் எல்லாம் ரசிக மந்தைகள் என்ற நினைப்பா?

9. அரசியலுக்கு வர மூன்று ஆண்டு ஒத்தி வைப்பு ஏன்?

அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று பலமுறை ரஜினி சொல்லிவிட்டார். இந்த முறை கறாராக சொல்லா விட்டால் ரசிகர்கள் விரக்தி அடைவார்கள். நீயும் சரி, உன் அரசியலும் சரி. என்று ‘குட்பை’ செய்து விட்டு விடை பெற்றுப் போய் விடுவார்கள்.  இந்நிலையில் அரசியலுக்கு வருவேன் என்று கூறி ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டார்.

சரி, ஏன் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டி? இடையில் உள்ளாட்சி தேர்தல், நாடாளு மன்றத் தேர்தலில் ஏன் போட்டியில்லை? சட்டப் பேரவைத் தேர்தல் வர இன்னும் மூன்றாண்டுகள் இருக்கின்றன. ‘பொழைச்சிக் கிடந்தால்’ மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். அப்பொழுது சால்ஜாப் சொல்லுவதற்கு காரணம் கிடைக் காமலா போகும் என்ற எண்ணத்தில் தான் இப்படி சொல்லியிருக்கிறார் என்ற கருத்தும் உண்டு. இந்த இடைவெளியில் பெரிய முதலீட்டுடன் தயாரிக்கப்படும் ரஜினியின் இரண்டொரு திரைப்படங்களையும் ‘ஓகோ’ என்று ஓட்டி பணத்தை வாரி சுருட்டி விடலாம் என்ற உள்நோக்குத் தந்திரமும் இதில் பொதிந்து இருப்பதாக சினிமா வட்டாரங்களே கூட தெரிவிக்கின்றன.

சுருக்கமாக சொன்னால் ரஜினி நிஜக் குதிரையல்ல, மண் குதிரையே! இவரைக் கருவியாக்கிடத் துடிக்கிறது- ஆர்.எஸ்.எஸ். - பிஜேபி  ஆரிய வட்டாரம். கீதையின் - மனுதர்மத்தின் ஒரு குலத்துக்கொரு நீதியை அரங்கேற்றத் துடிக்கிறது. திராவிட அரசியல் கூடாது என்றால்  அதன் பொருள் - ஆரிய  ஆன்மிக அரசியலே என்பதுதான் -எச்சரிக்கை! எச்சரிக்கை!!

 

====================

 

“அரசியல் -ஆன்மிகம்”

என்பது கீரியும் பாம்பும் மாதிரி என்று சொன்னவர் யார்?

1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பிறந்தநாளான 12, 13ஆகிய இருநாட்கள் தூர்தர்ஷன் தொலைக் காட்சிக்கு நடிகர் ரஜினி அளித்த பதில்களில் ஒன்று.

“அரசியல் -ஆன்மிகம் ஒப்பிடுங்க?

ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஏன்னா அது பாம்பும் கீரியும் மாதிரி. எதிர்த்திசையில் உள்ளவை.”

இன்று அவரேதான் “ஆன்மிக அரசியல்” என்கிறார். எது சரி? 2021இல் சொல்வாரோ?

சான்று: லீttஜீs://ஷ்ஷ்ஷ்.வீமீtணீனீவீறீ.நீஷீனீ/tணீனீவீறீஸீணீபீu/ஷ்லீஷீ-வீs-க்ஷீணீழீவீஸீவீs-யீணீஸ்ஷீக்ஷீவீtமீ-ஜீஷீறீவீtவீநீவீணீஸீ/

 

====================

சொன்னதும் நீர்தானா?

சொல், சொல், சொல்!

எல்லாம் தெய்வச் செயல், கடவுளே எல்லாம் பார்த்திருப்பாருன்னு விட்டி ருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோகத்தை விட்டு விட்டு தைரிய மாக சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது எனது முயற்சிதான்”  (ராணி, 20.7.2008)

கடவுள் காப்பாற்றவில்லை என்று இப்படி சொன்ன இந்த ரஜினிதான் ஊரை ஏமாற்றிட எதற்கெடுத்தாலும் ஆண்டவன் இருக்கிறார் - பார்த்துப் பான் என்கிறார் ..... ஏமாறாதீர்!

 

====================

சத்யராஜ் படத்துக்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது எங்கே போயிருந்தார் ‘ரஜினி’?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாகுபலி 2 திரைப்படத்தை வெளியிடத் தடை கோரி கன்னட அமைப்புகள்  போராட்டத்தில் இறங்கின. இப்படத்தில் ‘கட்டப்பா’ என்ற வேடமேற்றிருக்கும் சத்யராஜ், கன்னடர்களை இழிவாகப் பேசினார் என்று கூறி மன்னிப்புக் கோரி கடிதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாகவும் கருநாடக ரக்சன வேதிகே என்ற அந்த அமைப்பு கூறியது. (24.3.2017)

‘பாகுபலி 2’ என்ற படத்தை கருநாடகாவில் உள்ள திரையரங்கு ஒன்றும் வெளியிட முயற்சித்தது. அப்போது அங்கு வந்த கருநாடக ரக்சன வேதிகே அமைப்பின் உறுப்பினர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

‘காவிரிப் பிரச்சினையில் கன்னடாவை கன்னா பின்னாவென்று திட்டிய சத்யராஜ் நடித்திருக்கும் திரைப்படத்தை கருநாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்’ என்று அவர்கள் முழக்கமிட்டனர். ‘கன்னடர்களை தரக் குறைவாகப் பேசிய சத்யராஜ், தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தாலன்றி படத்தை வெளியிடவே முடியாது’ என்றும் அவர்கள் தெரிவித்தனர். (அப்படி என்னதான் சத்யராஜ் கூறி விட்டார்?)

அந்த இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப் பட்ட போதும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் காவல்துறையினரால் எதுவும் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து பாகுபலி 2 முன்னோட்டத்தைத் திரையிடுவதை  திரையரங்க உரிமையாளரால் திரையிட முடியவில்லை.

தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட மறுத்த கருநாடகத்தை கண்டித்து தமிழ் சினிமாத் துறையினர் ஒன்றுகூடி ஒரு நாள் போராட்டம் நடத்தினர். இதில், சத்யராஜ் கர்னாடகா பற்றி கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து விட்டாராம். எனினும், இச்சம்பவம் இடம்பெற்றதோ 2008ஆம் ஆண்டு!

9ஆண்டுகள் கழித்து, யானையை போல் மனதில் அடக்கி வைத்துக் கொண்டு சத்யராஜ் படத்தைத் திரையிடக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்களே, சக நடிகர் என்ற முறையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அதுபற்றி மூச்சு விட்டதுண்டா? அப்படிப்பட்டவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் என்றால் தமிழர்கள் எல்லாம் இளித்த வாயர்களா?

====================

 

ரஜினி பாபா முத்திரையில்

தாமரை திடீர் மாயம் ஏன்?

பாபா முத்திரையில் தாமரை மலர் நீக்கப்பட்டு, முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகங்களை அமைத்து ரஜினி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார்.

நடிகர் ரஜினி 3.1.2018 அன்று தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்ட போது, அவர் நின்ற மேடையின் பின்புறம் பாபா முத்திரை சின்னம் கொண்ட லோகோ இடம் பெற்றிருந்தது.

தாமரை மலர் மீது பாபா முத்திரை இடம் பெற்றிருப்பது போன்று அந்த சின்னம் அமைந்திருந்தது.

இதையடுத்து ரஜினி தொடங்கும் அரசியல் கட்சியின் சின்னமாக பாபா முத்திரை தேர்வாகக் கூடும் என்று தகவல்கள் வெளியாயின. இமய மலையில் இன்றும் வாழ்பவராக சொல்கிறார் ரஜினி.

வலது கையின் ஆள் காட்டி விரலையும், சுண்டு விரலையும் உயர்த்தி மற்ற 3 விரல்களையும் மடக்கி இருப் பதே பாபா முத்திரையாகும். இந்த முத்திரைக்கு அபான முத்திரை என்று பெயராம்.

இந்த முத்திரையை முறைப்படி செய்து வந்தால் உடல், உயிர், அறிவு மூன்றிலும் சிலிர்ப்பு ஏற்பட்டு பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. (ரஜினி ஏன் மருத்துவத்திற்காக சிங்கப்பூர் சென்றாராம்?)

ஆன்மிக அரசியலை மேற் கொள்ளப் போவதாக கூறியுள்ள ரஜினிக்கு இந்த பாபா முத்திரை சின்னம் மிகவும் கை கொடுக்குமாம். ஆனால் சமூக வலைத் தளங்களில் பலரும் பாபா முத்திரை சின்னத்தை விமர்சித்தனர்.

தாமரை மீது பாபா முத்திரை இருப்பது, ரஜினியின் அரசியல் பின்ன ணியில் பா.ஜ.க. இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக விமர் சனம் எழுந்தது. சமூக வலைத் தளங்களில் இது வைரலாக பரவியது.

இதையடுத்து பாபா முத்திரை விவகாரத்தில் அதிரடி மாற்றங்கள். பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலரைக் காணவில்லை.

பாபா முத்திரை வட்டத்தில் முன்பு கருப்பு வண்ணம் இருந்தது. அதையும் அகற்றி விட்டு நீல நிற வண்ணத்தை சேர்த் துள்ளனர்.

தாமரை மலர் நீக்கப்பட்ட பாபா முத்திரையின் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகம் புதிதாக இடம் பிடித்துள்ளது. (இது சரவணா ஸ்டோர்ஸ் வாசகம்)

பாபா முத்திரை வட்டத்தை சுற்றி ஒரு பாம்பு படம் வரையப்பட்டுள்ளது. பாபா முத்திரை வட்டத்து உச்சியில் பாம்பு படம் எடுத்திருப்பது போன்று உள்ளது. இந்த பாம்பு, பாபா முத்தி ரையில் எப்படி வந்தது என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள பேளூர் மடத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ராமகிருஷ்ணா மடம் தனக்கென ஒரு சின்னத்தை வைத் துள்ளது. சூரியன் உதிக்கும் பின்ன ணியில் உள்ள தடாகத்தில் தாமரையும், வாத்தும் உள்ளன.

அந்த சின்னத்தை சுற்றி பாம்பு படம் இருக்கிறது. அதே போன்று தனது பாபா முத்திரை சின்னத்திலும் பாம்பு சுற்றி இருப்பது போல சின்னத்தை ரஜினி வடிவமைத்து இருப்பதாக சொல்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் 2.1.2018 அன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கோவிலுக்குச் சென்றார். அங்கு அவர் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கௌதமானந்தா மகராஜை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகே பாபா முத்திரை சின்னமும், ராமகிருஷ்ணா மடத்தின் சின்னமும் ஒரே மாதிரி பாம்பு சுற்றி இருப்பது போன்று இருப்பது தெரிய வந்தது. (லோகோவில் உள்ள பாம்பு என்பது பார்ப்பனீய நாகத்தைக் குறிக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம்) பார்ப்பன நச்சப்பல்லைப் பிடுங்க வேண்டும் என்று சொல்லுகிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் - நியாயம்தானே!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner