எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- கவிஞர் கலி.பூங்குன்றன்

நியூஸ் 18 தொலைக்காட்சியில் கடந்த பொங்கலன்று சேலத்தில் ஒரு பட்டிமன்றம் ஒளிபரப்பப்பட்டது. பட்டிமன்றத்தின் தலைப்பு ‘50 ஆண்டு திராவிட ஆட்சி வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா? என்பதாகும்.

நேரம் கருதியோ, வேறு என்ன காரணம் கருதியோ திராவிட இயக்க ஆட்சியில் நடைபெற்ற சமூக ரீதியான சாதனைகள் இடம்பெறவில்லை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இடம் பெறாத சிந்தனை, சாதனை என்பது சமூதாய ரீதியான செயல்பாடுகளாகும்.

1. எடுத்துக்காட்டாக, சுயமரியாதை திருமணச் சட்டமும், பார்ப்பனீய புரோகித மூடத்தன பெண்ணடி மைக்கு கட்டியம் கூறும் வைதீகக் கல்யாணத்திற்கு மாற்றாக தந்தை பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரி யாதைத் திருமணம் திமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்குமுன் நடை பெற்ற அத்தகு திருமணங் களும், இனி நடக்கவிருக்கும் அத்தகு திருமணங்களும் சட்டஅங்கீகாரம் பெற்றது சாதாரணமானதல்ல.

மார்க்சிஸ்ட்கள் ஆட்சி நடத்திய மாநிலங் களில் கூட இந்த புரட்சிகர மாற்றத்திற்கான சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

தமிழர் வீட்டுத் திருமணத்தில் அவனு டைய தாய்மொழிக்கு இடமில்லை. அந்த நிலையை மாற்றியது திராவிட ஆட்சியல்லவா!

2. இரண்டாவது சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் - இந்தியா விலேயே ஒரு நாடாக இருப்பது (தமிழ்நாடு) நமது மாநிலம்தானே!

3. மூன்றாவதாக தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை. இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ், இன்னொன்று ஆங்கிலம்.

4. ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொள்பவர் களுக்கு தங்கம் வழங்கும் திட்டம்.

5. அன்னை நாகம்மையார், அன்னை மணியம் மையார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டர் தருமாம்பாள், அன்னை தெரசா, டாக்டர் சத்தியவாணி முத்து போன்ற வீராங் கனைகளின் பெயரில் மகளிர் உயர்வுக்கான மறுமலர்ச்சி திட்டங்கள் - இந்தியாவிலேயே திராவிட ஆட்சியைத் தவிர்த்து வேறு எங்கு உண்டு?

6. ஏழை மகளிர் இலவச படிப்புத் திட்டம், திருமண உதவித் திட்டம், மகப்பேறு நிதி உதவித் திட்டம், ஏழை விதவைத் தாய்மார் களின் மகள் திருமண உதவித் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான திருமணஉதவித் திட்டம் என்று பெண்கல்வியில் தொடங்கி, திருமணம், மகப்பேறு வரை உதவி செய்த ஆட்சி எந்த ஆட்சி?

அரசுப் பணிகளில் பெண்கள் பங்கேற் பினை அதிகரிக்கும் வகையில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு, உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்பவையெல்லாம் திராவிட ஆட்சியின் அரும் பெருஞ்சாதனைகள் அல்லவா!

7. அரவாணிகள் என்பவர்களை - சமுதாயத்தின் அவலமாக நினைக்கப்பட்ட வர்களை திருநங்கைகளாக்கி அவர்களை மூன்றாம் பாலினத்தவர்களாக்கி தனி வாரி யமும் அமைக்கப்பட்டது என்ன சாதாரணமா?

8. தமிழை பயிற்றுமொழியாகக் கொண் டவர்களுக்கு அரசுப்பணி நியமனங்களில் 20 விழுக்காடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றம். தமிழுக்கு, செம்மொழி அங்கீகாரம் இவை யெல்லாம் திராவிடக் கட்சி ஆட்சிகளின் தனித்தன்மையான சாதனை முத்துக்கள் என்பதை மறுக்க முடியுமா?

9. ஜாதி ஒழிப்புத் திசையில் பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள், சாதனை சரித்திரத்தின் கல்வெட்டு அல்லவா!

10. இந்தியாவிலேயே முதன் முதலாக குடிசை மாற்று வாரியம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான வாரியங்கள், உழவர் சந்தை என்பதெல்லாம் அடித்தட்டு மக்கள்பால் திராவிட ஆட்சிகளுக்கு இருந்த அளப்பரிய அக்கறையை பறைச்சாற்றுமே!

11. மாநில உரிமைகள் கோட்பாட்டுத் திசையில் நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலை மையில் குழு அமைத்து இந்திய துணைக் கண்டத்தில் ஆக்கரீதியான புதுவெளிச்சத்தை பாய்ச்சியவர் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அல்லவா!

12. இந்தியாவிலேயே இடஒதுக்கீடு 69 விழுக்காடு என்பது சட்டரீதியாக ஆக்கப் பட்டது எந்த ஆட்சியில்? திராவிட இயக்க ஆட்சியில் அல்லவா! சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டதுண்டே!

50 வயது கடந்த நிலையிலும் திருமண மாகாமல் வறுமையில் வாடும் பெண்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை.

வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை -இவையெல்லாம் மக்கள் நல ஆட்சியின் மகத்தானவை தானே!

மக்களின் அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்ஸ்.

பொது விநியோகத் திட்டத்தில் இந்தியா விலேயே தமிழ்நாடு (கலைஞர் அரசு) முன் னிலையில் இருக்கிறது. மற்ற மற்ற மாநிலங் களும் தமிழ்நாடு அரசை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றமே பாராட்டு. (12.8.2010) திராவிடக் கட்சியின் நிருவாகத் திறமைக்கு இது ஒரு பொன்னாடை!

சாலைகள் போடுதல், தெருவிளக்கு களுக்கு வகை செய்தல் போன்றவை எல்லா ஆட்சிக்காலத்திலும் சாதாரணமாக நடை பெறக்கூடியவைதான். ஆனால் வரலாற்று கண்ணோட்டத்தோடு சமூக மாற்றத்திற்கான  சீர்திருத்தத்துக்கான அடிப்படைச் சட்டங் களையும் திட்டங்களையும் வகுத்து சாதனைச் சிகரத்தில் சாகா ஒளி பெற்றது திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில்தான்.

சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடி யேற்றும் உரிமையை இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்தவரும் திராவிட ஆட்சி வித்தகராம் அதே கலைஞர் பெருமான்தானே.

இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராசர் பச்சைத்தமிழர் ஆனதும், கர்மவீரர் ஆனதும் கல்வி வள்ளலாகச் சுடர் விட்டதும் எல்லாம் கூட தந்தை பெரியார் அவர்களின் தோளில் காமராசர் நிறுத்தப்பட்டதுதான் என்பது வரலாறு. அதனால்தானே கதர் சட் டைக்குள் கருப்புச்சட்டை என்று ‘கல்கி’கள் கார்ட்டூன் போட்டனவே.

இந்திய துணைக் கண்டத்திலேயே கடந்த 50 ஆண்டு திராவிட இயக்க ஆட்சித்தான்  தன்னிகரற்று ஒளி வீசுகிறது.

திராவிட இயக்கத்தின் அரை நூற்றாண்டு ஆட்சி வளர்ச்சி இல்லையென்றால், வளர்ச்சி என்பதற்கு என்ன பொருளை தங்கள் கைவசம் வைத்துள்ளார்களோ யார் கண்டது?

 

 

=====================

அட அண்டப்புளுகே!

வாயில் சாக்கடையைத் தவிர வேறு எதுவும் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமாக தனிக்காட்டு ராஜாவாக இருக்கக்கூடிய பிஜேபி அம்பி ஒருவர். சேலம் பட்டிமன்றத்தில் ஓர் அண்டப்புளுகை - ஆகாசப் புளுகை அள்ளி விட்டாரே பார்க்கலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப் பட்டவர்களை நுழையச் செய்தவர் மதுரை வைத்திய நாதய்யர்தானாம். தாழ்த்தப்பட்டவர்கள் அக்கோயிலில் நுழைவதற்கு எதிராக ஈ.வெ.ரா. இருந்தார் என்பதுதான் அந்த அம்பியின் ஆலாபனம்.

உண்மை என்னவென்றால் 1922 ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நடந்தது என்ன? இதுபற்றி திரு.வி.க. அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்பு -2 பக்கம் 274இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாடு காங்கிரஸ் கூடிய போது நாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யரும், கிருஷ்ணய்யங்காரும் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளாரே. அவர்தான் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். ஈ.வெ.ரா எதிர்த்தார் என்று வாய் நிறைய பொய் புழுக்களை தேக்கி அப்படியே பொலபொலவென்று கொட்டியுள்ளாரே!.

இந்த இடத்திலும் பார்ப்பனக்கூட்டத்திற்கு ரொம்பவே இனிக்கும் திருவாளர் இராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜி) கொண்டு வந்து நிறுத்துவோம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் 8.7.1939 சனிக்கிழமை அன்று தாழ்த்தப்பட்ட வர்களுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி 30.7.1939 அன்று மதுரையில் பேசிய மாண்புமிகு முதல் அமைச்சர் (கனம்) சி.இராஜகோபாலாச்சாரியார்.

“இந்த வெற்றி காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றி யுமல்ல. இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷ யத்தில் காங்கிரஸ்காரர்களும், சுயமரியாதைக்காரர்களும், ஜஸ்டிஸ்காரர்களும் “இன்னும் இதரர்களும் சேவை செய்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

இச்செய்தி 31.7.1939 நாளிட்ட ‘சுதேசமித்தரன்’ ஏட்டில் வெளிவந்தது. (விடுதலை, 1.8.1939) பாவம் எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களுக்கு தோல்வி மயம்தான்.

மதுரை ஏ.வைத்தியநாதய்யர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அழைத்துச் சென்றார் என்று பிரச்சாரம் செய்கிறார்களே - சங்கதி என்ன தெரியுமா?

யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு சில தாழ்த்தப்பட்ட தோழர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார் என்பதுதான் உண்மை.

அதற்குக் கூட உதவி செய்தவர் நீதிக்கட்சிக்காரரான ஆர்.எஸ். நாயுடுதான்.  அவர்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாவார். அவரது அனுமதியின் காரணமாகத் தான் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக  சில தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்ற வீராதி வீரர் தான் இந்த வைத்தியநாத அய்யர்.

இதில் ஒரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதற்காகக் கோயில் கருவறையைப் பூட்டியும், மறுநாள் கோயிலுக்கு வராமல் இருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவரும், கோயில் நிருவாக அதிகாரியான அந்த நீதிக்கட்சிக்காரர்தான்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner