எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

- மின்சாரம்

யாரோ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி யாம், பா.ஜ.க.காரர் ஒருவர்  தமிழக அமைச்சரவையில் இல்லாத குறைக்கு இவர் இருக்கிறார் போலும்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் மன்ற ரசிகர்கள் எல்லாம் அமைச்சராகி விட்டார்கள் அல்லவா! அவர்களுக்கு பெரியார் தெரியுமா? அண்ணா தெரியுமா? திராவிட இயக்கம் என்றால் என்னவென்று தெரியுமா?

அவற்றை எல்லாம் தெரிந்திருந்தால் அவர் எப்படி அந்தக்கட்சியில் தான் இருப்பார்?

கடவுளே இல்லை என்று சொல்லக் கூடியவர் வீரமணி (கண்டுபிடித்து விட்டா ராய்யா - சபாஷ்! சபாஷ்!!) இந்து மத கடவுள்களை இழிவுப்படுத்துவதற்கு பதிலாக வீரமணி வேறு வேலை பார்க்கலாம் என்று அட்வைஸ் செய்துள்ளார். (தினமலர் -21.1.2018)

“கடவுள் இல்லை

இல்லவே இல்லை” என்பதுதான் தந்தைபெரியாரின் கருத்து.

அதைத் தொடர்ந்து சொல்லுவதற்குத் தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி உள்ளார். இந்நாட்டு அறியாப் பிள்ளைகளுக்குக் கூடத் தெரிந்த செய்தி இது.

“மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நல்லொழுக்கத்தை போதித்ததே ராமரும், ராமாயணமும் தான் - வீரமணி போன்றோர் அரசியல் செய்ய இந்துக் கடவுள்கள்தான் கிடைத்தார்களா? வீரமணி பேச்சு கண்டிக்கத்தக்கது” என்று ‘வீரவசனம்’ பேசியுள்ளார்.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், அண்ணாவின் உருவத்தை கட்சிக் கொடியிலும் பறக்க விட்டுக் கொண்டி ருக்கும் ஒருகட்சியைச் சேர்ந்தவர், அதுவும் அக்கட்சியில் அமைச்சராக இருக்கக்கூடிய வருக்கு இராமாயணம் பற்றி அண்ணாவின் கருத்தென்ன? இந்து மதத்தைப் பற்றி அண்ணாவின் கொள்கை என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அடிப்படைக் கூட தெரியாத ஆசாமிகள் எல்லாம் அமைச்சர்கள் என்றால் இதனை நினைத்து வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா? - விட்டுத்தள்ளுங்கள்!

இந்த விவரங்கெட்டவர்களை பற்றி என்ன முடிவுக்கு வருவது என்று மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இராமாயணத்தையும், பெரிய புராணத் தையும் கொளுத்துவதா? கூடாதா? என்ற வாதப் போரில் அறிஞர் அண்ணாவுடன் பொதுமேடையில் வாதிட்ட வரலாறு எல்லாம் நெற்றியில் திருநீற்றுப் பட்டையும், குங்குமப் பொட்டையும் வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு எங்கிருந்து தெரியப்போகிறது?

சொல்லின் செல்வர் என்று சொல்லப் பட்ட ரா.பி.சேதுபிள்ளை, நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றவர்களெல்லாம் அண்ணாவுடன் வாதிட்டு தோற்றோடி யதும், அந்த வாதங்கள் ‘தீ பரவட்டும்’ எனும் நூலாக வெளிவந்ததையெல்லாம் கேள்விப் பட்டதாவது உண்டா?

இந்து மதம் கிள்ளுக்கீரையா? என்று கேள்வி கேட்டுள்ளாரே  - இதற்கு அண்ணாவே பதில் சொல்லியிருக்கிறாரே - அண்ணா திமுக அமைச்சர் அறிவாரா?

அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை’ என்ற நூலை படிக்க வேண்டாம் - பார்த்ததாவது உண்டா? அந்த நூலின் 31-33 ஆம் பக்கத்திற்கு வாருமய்யா வாத்தியாரே! என்று அழைக்கத்தான் ஆசை!

இதோ அண்ணாவின் ஆராய்ச்சி வரிகள்:

“நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று  தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலைச் சாமி, ஆனைமுகச் சாமி, ஆளிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணை களிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக் கொண்டு தொழ வேண்டுமே.  இந்தச் சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண் ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.

நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊண் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல், அலங்கா ராதிகள், அப்பம், பாயசம் அக்காரவடிசல் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும், நம்மிடத்திலிருந்து "தியானத்தைப்" பெறட் டும், அருளைத் தரட்டும்; நம்மிடத்திலிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.

ஆள் நடமாட ஒரு உலகம், ஆவி உலவ மற்றோர் உலகம், இந்திரன் இருக்க ஒரு உலகம், நாகன் தங்க ஒரு உலகம், மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம்! அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபோலோக, மகாலோக, சத்தியலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே. நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும் புன்செயும், சாலையும் சோலையும், வாவியும், நதியும், மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும். காம தேனுவும் கற்பகவிருட்சமும், ரம்பையும் ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடிசூட்டிக் கொள்ளட்டும்! நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ்ஜாதி என்று கொடுமை இன்றி, "நாமார்க்குங் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண் ணத்தினால் தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே  தரகர் கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக, யாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை "இந்து" என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித் தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்? "இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் "இந்து" என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதிதுலங்கும் விஷயங்களை விட்டு, மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாள வழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்தபிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் ‘இந்து மார்க்கத்தில்,’ போய்ச்சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்துப் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!” இவை எல்லாம் அறிஞர் அண்ணாவின் அறிவுலகம் போற்றும் ஆய்த எழுத்துக்களாகும்.

மாண்புமிகு அமைச்சர் இராஜேந்திர பாலாஜி அவர்களே! திராவிடர் கழகத்தலைவர் மானமிகு. கி.வீரமணியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளீர்களே - அதே கேள்வியை அண்ணாவை நோக்கி கேட்கத் தயார்தானா?

எங்கள் கொள்கை அண்ணாவுடையது அல்லது எம்.ஜி.ஆருடையது என்று சொன்னாலும் சொல்லுவீர்கள்!  அண் ணாயிசம் என்றால் சோசலிசம், கம்யூனிசம், கேப்பிட்டலிசம் என்று வெண்டைக்காய் விளக்கெண்ணெய் விளக்கம் அளித்தவர் அல்லவா எம்.ஜி.ஆர்! அவரின் தொண்டரடி பொடியாழ்வார் என்று சொல்லித் தொலைத்து விட்டுப் போங்கள்!

மண்சோறு சாப்பிடச் சொன்ன அம்மா வழி என்றாவது சொல்லித் தொலையுங்கள். ஆனால் அண்ணா வழி என்று சொல்லி அண்ணாவை கொச்சைப்படுத்தாதீர்கள் - ஆண்டாளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.

முதலில் கட்சியின் பெயரிலிருந்து அண்ணாவையும், கட்சிக் கொடியிலிருந்து அண்ணா உருவத்தையும் தூக்கி எறியுங்கள் - அதுதான் அறிவு நாணயம்!

ஆம். என்க!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner