எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆரியராவது - திராவிடராவது; எல்லாம் வெள்ளைக்காரன், கிறிஸ்தவன் கட்டிவிட்ட சரடு -‘பிரித்தாளும் சூழ்ச்சி என்று ‘பிராமணர்கள்’ என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் பிலாக்கணம் பாடி வருவதுண்டு.

ஒருக்காலம் இருந்தது ‘நாங்கள் பிராம ணர்கள், பிர்மாவின் நெற்றியிலே பிறந்த வர்கள், பிர்மா இந்த உலகத்தை எங்களுக்கே படைத்தான் - நீங்கள் சூத்திரர்கள் - எங்களுக்குக் குற்றேவல் செய்து கிடக்க வேண்டியவர்கள்’ என்று கித்தாப்பாக, வீராப்பாக வெடுக்கு வெடுக்காகப் பேசினார் கள்.

தந்தை பெரியார் சகாப்தத்தில் அவர்க ளின் சப்த நாடிகளும் ஒடுக்கப்பட்டன. திராவிடர் இயக்கத்தினர் தோள் தூக்கி திசை எட்டும் பிரச்சாரப் புயலைக் கிளப்பியதுதான் தாமதம், இடுப்பு ஒடிந்தது ஆரியம்.

பூணூல் மார்போடு திரிந்தவர்கள் - பூதேவர்கள் என்று பூரிப்போடு பேசியவர்கள் பெட்டிப் பாம்பானார்கள். உச்சிக் குடுமி வைத்து சாலையில் சென்றால் கோலி விளையாடும் சிறுவன் கூடக் கல்லால் அடித்துக் கேலி செய்யும் காலம் கனிந்தது.

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதைக் கூடத் தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்; பார்ப்பனர் என்று சொன்னால் எதிர்வினைதான் என்கிற எதிர்ப்புப் புயல் கிளம்பியது.

திராவிடர் கழகம் அரசியலுக்குள் நுழைய வில்லை. சமூகப் புரட்சி இயக்கத்தை நடத்தி வருகிறது. அதிலிருந்து பிரிந்து சென்ற திமுக அரசியலில் காலடி எடுத்து வைத்தது. முதல் முதலாக 1957இல் தேர்தலைச் சந்தித்தது. படிப்படியாக 1967இல் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆனார்.

தொடர்ந்து திமுக - அஇஅதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் என்ற நிலை உறுதிப்படுத் தப்பட்டது. தேசியக் கட்சிகள் எல்லாம் இந்த இரு கட்சிகளோடு கூட்டணி வைத்துத் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையும் நிலைநாட்டப்பட்டது.

அ.இ.அதிமுகவில் அசைக்க முடியாத முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அ.இ.அதிமுகவுக்கு நெருக்கடியும், பலகீனமும் சூழ்ந்த நிலையில், அந்த வெற்று இடத்திற்கு நகரலாம் என்ற நப்பாசையில் பார்ப்பனீய கருத்துகளைச் சூள்கொண்ட பாரதிய ஜனதா கட்சி நாக்கில் எச்சில் சொட்டச் சொட்ட வேவு பார்த்துக் கொண்டு திரிகிறது.

மத்தியில் அதிகாரத்தில் அமர்ந்திருப் பதாலும், மாநிலத்தை ஆளும் அஇஅதி முக அமைச்சர்களின் மடியில் கனம் இருப்பதாலும், உருட்டி மிரட்டி தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற மனதில் கொண்ட தீரா ஆசையால் பார்ப்பனீய ஜனதா படம் எடுத்து ஆகிறது.

கழகம் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஆரம்பித்தார்கள், திரா விடத்தால் வீழ்ந்தோம் என்றார்கள். (அவர் கள் விரும்பும் இந்துத்துவாவினருக்குத் திராவிடம் என்பது எதிர்வினை யாற்றும் தத்துவமாச்சே!)

சென்னை இராதாகிருஷ்ணன் நகரில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளைப் பெற்று, டெபாசிட்டைப் பறிகொடுத்த பா.ஜ.க. இப்பொழுது ஒரு புது மூடியை முகத்தில் மாட்டிக் கொண்டு வர முடிவு செய்கிறது.

தமிழ்நாட்டில் ஒரே ஒரு பிஜேபி எம்.பி.யான பொன்.இராதாகிருஷ்ணன் வாய்வழியாக அது வெளிவந்திருக்கிறது.

“கடலூரில்  நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாஜகவினரை கடுமையாக விமர்சித்திருந்தார். புறம்போக்குகளாகிய நீங்கள் பேசுவதற்கும் மேடை அமைத்து கொடுத்தது திராவிட மண் எனவும் சாடி யிருந்தார்.

தளபதி ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சு விவாத பொருளாகிப் போனது. இதையடுத்து ஈரோடு வேப்பம்பாளையத் தில் அஸ்வமேத ராஜரூபா யாகம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ் ணன் அவர்கள் கூறியதாவது,  “ஸ்டாலின் என்ன திராவிடத்துக்கு சொந்தக்காரரா? 50 வருஷமா ஆட்சியில் இருந்தவர்கள் திரா விடப் பகுதிகளை இணைத்து முன்னேறிய பகுதியாக மாற்றியிருக்க முடியும், ஆனால் அவங்க அப்படி செய்யவில்லை. திரா விடம் என்பது ஒரு பகுதி 4, 5 மாநிலங்கள் சேர்ந்த பகுதி; நான் திராவிடத்தை ஒழிக்கவேண்டும் என்று எப்போதுமே கூற வில்லை, நான் திராவிடன் பச்சை திராவிடன், இங்கு உள்ள அனைவருமே திராவிடர்கள் தான், பச்சைத் திராவிடர்கள், பாரதீய ஜனதா கட்சியும் திராவிடக் கட்சிதான்,  நான் ஒழிக்கவேண்டும் என்று சொல்வது அவர்கள் கட்சியை, அய்ம்பது வருசமா ஆட்சி நடத்தியிருக் கிறார்கள், அது தோற்றுப் போய்விட்டது, அதை மாற்றவேண்டும் என்று மக்கள் நினைக் கின்றார்கள்.   பாஜகவும் திராவிடக் கட்சியே!” எனப் பேசியுள்ளார். இதை முன்மொழிந்து பாஜகவினரும் இப்போது தங்களை திராவிடர்கள்; திராவிட கட்சி என பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

மனம் நிறைந்து பேசுகிறார்களா? அல்லது மனம் திருந்திப் பேசியிருக் கிறார்களா? என்று ஆராய்வதை விட ‘திராவிட’ என்பதைச் சொல்லித்தான் தீர வேண்டும். அதைப் பயன்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டில் போணியாகாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைத் தானே இது காட்டுகிறது. இது திராவிடத் துக்குக் கிடைத்த வெற்றியே!

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழராகிய பொன்.இராதாகிருஷ்ணன் இப்படி சொல்லியிருந்தாலும், அக்கட்சிக்குள் இது ‘இரணகளத்தை’ ஏற்படுத்தத்தான் செய்யும்.

‘திராவிடம்’ என்றாலே அவர்களுக்கு ஒரு மாதிரியாகிவிடும் - ஒவ்வாமையை ஏற்படுத்தி உடலையும் உள்ளத்தையும் அரிப்பெடுக்கத் தான் செய்யும்.

ஆரியமாவது - திராவிடமாவது - அதெல்லாம் கட்டுக்கதை, வெள்ளைக் காரனின் பிரித்தாளும் பெரும் சூழ்ச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மத்தியிலிருந்து ‘நாங்களும் திராவிடர் கள்தான்!’ என்று குரல் வருகிறது என்றால் அது என்ன சாதாரணமா?

அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளுமா? பார்ப்பனக் கட்சியான இந்துத்துவாவை குருதியோட்டமாகக் கொண்ட அக்கட்சி அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தயங்கும்தான்!

திருவனந்தபுரத்தில் திராவிட ஆய்வு மய்யம் நடத்தி வந்தவரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வி.அய்.சுப்பிரமணி யம் அவர்கள் 2000-2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து ‘திராவிடியன் என்சைக்ளோபீடியா’ என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங் கினார்.

இந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள ‘திராவிடியன்’ என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்று சொன்னார். இதற்குப் பதில் தந்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள், அமைச்சரை நோக்கி ‘நீங்கள் நாட்டுப் பண்ணிலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கிவிடுங்கள், நானும் திரா விடக் களஞ்சியம் என்பதிலிருந்து ‘திரா விடம்’ என்ற பெயரை நீக்கி விடுகிறேன்’ என்றார் (ஆதாரம் 2003 பிப்ரவரி ஞிலிகி ழிமீஷ்s).

தமிழறிஞர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் மறைந்து விட்டாலும் பிஜேபியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் கடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிஜேபிக்குத் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி இன்னும் உயிரோடு தான் இருந்து கொண் டுள்ளார். அவர்கள் எல்லாம் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் முன்மொழிந்ததை வழி மொழிவார்களா?

தமிழ்நாட்டுப் பிஜேபியின் ‘அவதார புருஷரான’ திருவாளர் எஸ்.குருமூர்த்தி அய்யர் இப்பொழுது துக்ளக்கில் ஆசிரிய ராக இருந்து வருகிறாரோ - துக்ளக்கில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

ஆரிய, திராவிட பேதம் கட்டுக்கதை என்று பிபிசி இணையதளத்தில் கூறப் பட்டு உள்ளது என்று துக்ளக் இதழில் (2.11.2015) திருவாளர் எஸ்.குருமூர்த்தி எழுதி இருந்தார். பிபிசி அவ்வாறு கூறுகிறது என்று எடுத்துக் காட்டித் துள்ளிக் குதித்தார்.

கரூர் வழக்குரைஞர் பூ.அர.குப்புசாமி, இரா.ஜீவானந்தம் ஆகியோர்களால் ஆடிட் டர் எஸ்.குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஆசிரியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதப்பட்டது.

‘துக்ளக்’ கூறும் அந்த பிபிசி இணைய தளத்துக்குள்ளும் சென்று பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறான கட்டுரையோ, தகவலோ பிபிசி இணைய தளத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டு, அதன்பின், பிபிசி நிறுவனத்துக்கே மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்கப்பட்டது. அவ்வாறு ஏதும் பிபிசி இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை என்று பிபிசி நிறுவனத்திடமிருந்து பதில் வந்தது.

ஆனால் பிபிசி வெளியிட்டதாகத் ‘துக் ளக்கில்’ எழுதினாரே திருவாளர் எஸ்.குரு மூர்த்தி அய்யர் (இன்றைய துக்ளக் ஆசிரியர்).

இதைப் பற்றி மூச்சுப் பேச்சு விடவில்லை. இதுதான் பார்ப்பனர்களின் அறிவு நாணயம் - எந்த எல்லைக்கும் சென்று பித்தலாட்டங் களில் ஈடுபடுவார்கள் என்பது வெளிப் படையே!

மத்திய அமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளதை நிச்சய மாக சொந்தக் கருத்தாக இருக்கவே முடி யாது.

பிஜேபிக்குள் தொடர்ந்து இருந்து வரும் ஆரியர் திராவிடர் போராட்டத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு கூறாகத்தான் இது வெளிவந்திருக்கின்றது என்று கருது வதற்கு இடமுண்டு.

இன்னொரு மத்திய அமைச்சராக இருக்கும் செல்வி உமாபாரதி அவர்கள் பிஜேபி உயர்ஜாதி பார்ப்பனர்களின் கட்சி என்று கூறியதுண்டே! பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் அவர்களும் சரி, தமிழ்நாடு பிஜேபியின் தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதி அவர்களும் சரி, உ.பி.மேனாள் முதல் அமைச்சர் கல்யாண் சிங் அவர்களும் சரி - பா.ஜ.க. பார்ப்பன உயர் ஜாதிகளின் கூடாரம் என்று கூறியதுண்டே!

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் கருத்தையும் கருத வேண்டும்.

தமிழ்நாட்டில் கட்சியை ஆட்டிப் படைக்க நினைக்கும் பார்ப்பனப் பிரமுகர் களுக்கு மறைமுகமான மிரட்டலா? அல்லது கட்சிக்குள் வெடிக்க இருக்கும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்துக்கான கட்டியங் கூறவா? காத்திருப்போம்! நாட்டில் நடப்பது அரசியல் அல்ல. ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் (‘விடுதலை’, 22.5.1967) என்று தந்தை பெரியார் சொன்னது பொய்க்காது அல்லவா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner