எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

உடுமலைப்பேட்டை, தாராபுரம் அருகே உள்ள ஓர் ஊர் கணியூர். இயக்க வரலாற்றில் அதற்கென்று ஒரு தனியிடம் உண்டு.

கணியூர்க் குடும்பம் என்று கூறப்படும் மறைந்த சுய மரியாதைச் சுடரொளி கே.ஏ.மதியழகன் சகோதரர்களின் ஊர் அது.

அவ்வூரில்தான் வரும் 6.5.2018 ஞாயிறன்று நாள் முழுவதும் ஒரு மாநாடு.

மக்கள் தொகையில் சரி பகுதியினரான மகளிருக் கானது - திராவிட மகளிர் எழுச்சி மாநாடு!

காலை 9 மணி முதல் களைகட்டும் மாநாடு. கருத்தரங்கம் கழகப் பிரச்சார செயலாளர் தலைமையில் - தலைப்புகளோ  இந்தக் கால கட்டத்தில் சந்தித்தே தீரவேண்டிய உரைகல்.

பெண்ணினம் விடுதலை பெற - மூடநம்பிக்கைகளை ஒழிப்போம்! பொதுவாழ்வில் அழியா இடம் பெறுவோம்! பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்போம்! ஜாதி ஆணவக் கொலைகளைக் கண்டிப்போம்! எனும் அரிய தலைப்பில் முற்றிலும் மகளிரே பங்கேற்று முழங்கிட உள்ளனர்.

பிற்பகல் 2 முதல் 3 மணி வரை பெரியார் பிஞ்சுகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் விருந்து! பிஞ்சுகளுக்காக ஓர் அமைப்பும் இதழும் இருப்பது நமது இயக்கத்தில் மட்டும்தானே... பிஞ்சுகளுக்காக ஆண்டு தோறும் பழகு முகாம் நடத்துவதும் நாம்தானே!

அந்தப் பிஞ்சுகளுக்காகவே ஆகஸ்டு மாதத்தில் ஒரு மாநாடு (திண்டுக்கல்லில்) நடக்கிறது என்றால் சாதார ணமா? அந்தப் பிஞ்சுகளுக்குள் புதைந்து கிடக்கும் ஆற்றல்களை திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அரங்கேற்றப்படுவதுதான் கணியூர் - பெரியார் பிஞ்சுகளின் கலை நிகழ்ச்சிகள்.

மாலை பேரணியும் உண்டு. மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி தலைமையேற்க, மகளிர் வீர விளையாட்டுகள் கண்டுகளிக்கத்தக்கவை.

பெண்கள் என்றால் போகப் பொருள்கள் எனும் மனுதர்மப் புத்தி - இன்று வரை தொடரும் நிலையில் பெண்களுக்குப் பாதுகாப்புப் பயிற்சி - கராத்தே பயிற்சி - துப்பாக்கிப் பயிற்சிகள் தேவை என்பதை நீண்ட நெடுங்காலமாகவே கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வற்புறுத்தி வருகிறார்.

அதன் முன்னோட்டமாக நமது மகளிரின் வீர விளையாட்டுகளைக் கண்டுகளிக்க இருக்கிறோம்.

மாலை திறந்த வெளி மாநாடு - கழகத்தின் பொரு ளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தலைமையேற்கும் மாநாட்டைத் திறந்து வைத்து உரை நிகழ்த்த இருப்பவர் யார் தெரியுமா?

கடந்த மாதம் ஈரோட்டில் நடைபெற்ற திமுக மாநாட் டுக்குத் தலைமை வகித்து எழுச்சி முரசம் கொட்டினாரே - திராவிட இயக்க மகளிரின் போர் முரசான - மேனாள் மாநில - மத்திய அமைச்சர் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி செகதீசன் அவர்கள். ஈரோட்டி லிருந்து வருகை தர இருக்கிறார்கள்.

கழகத்தின் மகளிர் அணிக்கு என்று தனி முத்திரை உண்டு. கொள்கைப் பிடிப்பில் ஆண்களையும் விஞ்சக் கூடிவர்கள். நம் மகளிர் பாசறையைச் சேர்ந்த இயக்கத்தில் ஈட்டி முனையான இளைஞர்கள் பங்கேற்று பழைமை களைப் பந்தாடப் புறப்பட்டு வருகின்றார்கள்; மனுதர் மத்தை ஒழிப்போம்! புராண இதிகாசங்களைப் புறக் கணிப்போம்! ஊடகங்களைக் கண்டிப்போம் எனும் தலைப்புகளில் இயக்க மகளிர் பாசறை இளைஞர்கள் தூள் கிளப்ப இருக்கிறார்கள்.

கழகக் கொடியை மாநில மகளிரணி மகளிர் பாசறையின் அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஏற்றி வைத்து ஏற்றமிகு உரையை வழங்கிட உள்ளார். இணைப்புரையை மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி சிறப்பாக செய்யவிருக்கிறார்.

“மந்திரமா - தந்திரமா?” நிகழ்ச்சியைக் கூட நிகழ்த்திக் காட்டுபவர் ஒரு மகளிர் தான். இயக்கத்தில் இந்தக் கலையை அறிமுகப்படுத்தி பெரும் அளவில் மூடநம் பிக்கை ஒழிப்பு முத்திரை பொறித்த நீடாமங்கலம் புரபசர் கே.ஆர்.குமார் அவர்களின் வாழ்விணையர் ஜெயமணிக் குமார் அவர்கள்தான் அந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட இருப்பவர்.

திமுக இளைஞரணி மாநில செயலாளர் மு.பெ.சாமி நாதனும் பங்கேற்கிறார். திராவிடர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர்களும் மகளிரணிப் பொறுப்பாளர்களும் பங்கேற்கும் இம்மாநாட்டின் நிறைவுரையை - கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழங்கிட உள்ளார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் நூற்றாண்டுத் தொடக்கம் அடுத்த ஆண்டு மார்ச்; ஆம் மார்ச்சை நோக்கி “மார்ச்சு” செய்ய இருக்கிறோம் - அதற்கான முன் னோட்டமாக கனிந்ததுதான் இந்தக் கணியூர் மாநாடு!

நமது மாநாடு என்றாலே அதன் முத்தாய்ப்பு அதன் தீர்மானங்கள்தான்! காலத்தை வென்று புதுமைக்குச் கைலாகு கொடுப்பவை, அவை. காலத்தின் நிலைக்கண் ணாடியும் கூட.

1929 சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடான செங்கற்பட்டு மாநாட்டை இன்றுவரை வரலாறு பேசிக் கொண்டிருக்கவில்லையா!

1928 தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்களின் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட - பெண்களுக்கு சொத்துரிமை தீர்மானம். 1990இல் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் தலை மையிலான ஆட்சியில் சட்டமாக்கப்பட்டதே - அத னைத் தொடர்ந்து மத்திய அரசும் சட்டம் இயற்றியதே!

ஒரு தலைவர் (தந்தை பெரியார்) வீதிகளில் முழங்கிய உரைகளும், மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களும் பிற்காலத்தில் மாநில மத்திய அரசுகளின் சட்டங் களாக மலர்கின்றன என்பது வேறு எந்த இயக்கத்தில் நடத்திக் காட்டப்படக் கூடியவை?

மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வெறும் 11 விழுக்காடுதான் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அகில இந்திய அளவில் வெறும் எட்டே எட்டு விழுக்காடுதான்.

இதுதான் ஜனநாயகமா? 1996இல் மகளிருக்கு 33 விழுக்காடு (நியாயமாக 50 விழுக்காடு அளிக்கப்பட வேண்டும்) நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் அளிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 22 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதுவரை ஏன் நிறைவேற்றப்படவில்லை?

காரணம் எளிதே! இது ஓர் ஆண் ஆதிக்கச் சமுதாயம். பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டா? அதைப் போன்றதுதான் ஆண்களால் பெண்களுக்கு விடுதலை என்பதும் என்று வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் கூறியதை நினைத்துப் பாருங்கள்.

ஆனாலும் நாம் வாளாயிருக்க முடியாது. கணியூர் மாநாட்டில் கண்டிப்பாகக் கனத்த குரல் கொடுப்போம்! கொடுப்போம்!!

கொலையில் அது என்ன கவுரவக் கொலை? விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கேடா?

சட்டப்படியான வயது நிறைந்த ஓர் ஆணும் - பெண்ணும் வாழ்வில் இணைந்து பயணிப்பதில் மூன்றா வது மனிதனுக்கு என்ன வேலை என்று கேட்டவர் தந்தை பெரியார்.

அது ஒரு வகையான மூர்க்கத்தனமும், அதிகப் பிரசங்கித்தனமும் அல்லவா?

ஜாதிக் கண் கொண்டு பார்த்து பெற்ற மகள் என்று கூடப் பாராமல் கொலை செய்கிறார்களே - இந்தப் படு பாதகக் கொடு நஞ்சை என்னவென்று சொல்லுவது!

இதற்குப் பெயர் கவுரவக் கொலை என்றால் 'இந்தக் கவுரவம்' எனும் சொல் மீதே கடுகடுப்புக் கோபம் கொந் தளித்து வெடித்துக் கிளம்புகிறது.

இதுகுறித்து தீர்மானிப்போம்

கணியூர் நோக்கி வாருங்கள்

ஒரு வயது பெண் குழந்தையைக்கூட சூறையாடி யிருக்கிறான் ஒரு வெறியன் - இந்தியாவின் தலைநகர மான டில்லியில் என்கிறபோது - எழுதிடவே கைகள் கூசுகின்றன - நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. இப்பொழுது தான் மரண தண்டனை சட்டமாக வந்திருக்கிறது.

உருவத்தால் மனிதன் என்றாலும் உணர்வால் மிருகமாக அல்லவா அலைகிறான்.

மிருகத்தையும் மனிதனையும் பிரிப்பது பகுத்தறிவு தானே - அந்தப் பகுத்தறிவு வளர்ச்சிக்காகப் பாடுபடும் - பிரச்சாரம் செய்யும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம் தானே!

முதலில் பகுத்தறிவு என்ற என்ஜினைப் பூட்டிடு வோம்.  அது மற்றவற்றைச் சரி செய்துவிடும். இயக்கி விடும் என்றார், எதிலும் தொலைநோக்குப் பார்வை கொண்டவரான தந்தை பெரியார்.

சவால்களைச் சந்திக்க வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் தான் கணியூர் மாநாடு எழுச்சி மாநாடு - பேரணி என்பதை மறந்து விடாதீர்கள்.

குடும்பம் குடும்பமாக வாருங்கள். கல்விக் கூடங் களுக்கும் விடுமுறைதான், வசதியாகவே போய்விட்டது. பெரியார் பிஞ்சுகளையும் கூட்டி வாருங்கள்.

பிஞ்சுப் பருவத்தில் போடப்படும். பகுத்தறிவு முற் போக்குச் சிந்தனை விதைகள்தான் பிற்காலத்தில் ஆல மாக - ஆழமாக - கனிதரும் சோலை மரங்களாக தழைக் கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

நமது தலைவர் மாநாட்டு நிறைவுரையில் நிறைய தர இருக்கிறார் வாரீர்! வாரீர்! பெரு நதியாகப் பெருகி வாரீர்! வாரீர்!!

மாநாட்டு ஏற்பாடுகளைக் கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தக்க வகையில் செய்துள்ளார்கள் - அவர்களின் நெஞ்சைக் குளிர வைப்போம் - கோடை மழையாகக் கூடு வோம்! கூடுவோம்!!

 

தந்தை பெரியாரின் அழைப்பு

“பெண் அடிமை என்பது மனித சமூக அடிமை என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம், பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டு வருகிறது.”

- “குடிஅரசு”, 16.6.1935

“தனிப்பட்ட ஸ்திரிகளும், தங்களை விதவை என்றோ, வேசி என்றோ நினைத்துக் கொண்டிருப்ப வர்களும் செங்கற்பட்டில் நடக்க இருக்கும் மாகாண சுயமரியாதை மாநாட்டுக்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.”

- “குடிஅரசு”, 13.1.1929

“திருமணம் என்பது வயதுவந்த அறிவு வந்த ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட காரியமே ஒழிய மற்ற யாருக்கும், வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல.”
- “விடுதலை”, 22.6.1940

“பொய் சொல்லிப் பிழைப்பு நடத்தும் வக்கீலையும், வியாபாரிகளையும் மதிக்கிற நாம், பொய் சொல்லிப் பிழைப்பு நடத்தும் மற்றொரு தொழிற்காரரை (தேவ தாசிகளை) ஏன் இழிவாக நடத்தவேண்டும்?”.
- “குடிஅரசு”, 26.10.1930

“எந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற கூட்டம் ஏற்பட்டதோ, எந்தக் காலத்தில் எந்தக் கூட்டத்தார்கள், தாழ்த்தப்பட்டவர்க்கு அறிவு வளர்ச் சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்தனரோ, அக் காலத்திலேயே அந்தக் கூட்டத்தாராலேயே பெண் மக்களுக்கும், அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் இல்லாமல் செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்டு அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது”.
“சமையல் பெண்களுக்கானதே என்னும் ஏற் பாடானது மலமள்ள ஒரு ஜாதி, துணி வெளுக்க ஒரு ஜாதி என்பது போன்ற வருணாசிரம கொடுமையாகும்.”

பாலியல் நீதியில் - தந்தை பெரியாரின் மேற்கண்ட சிந்தனைச் சீலங்களுக்கு இணையாக இன்னார் சொன்னார் என்று எடுத்துக்கூற இயலாத அளவுக்கு ஒப்புவமையற்றவை.

கணியூர் மாநாட்டுக்கு வாருங்கள் - இருபால் தோழர்களே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner