எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆடவருக்கும் இடம் உண்டு என்ற வகையில் நடைபெற்ற கணியூர் மகளிர் எழுச்சி மாநாடு

தொகுப்பு: மின்சாரம்

கோவை மண்டல திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் தாராபுரம் கணியூரில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு பெண்ணுரிமை வரலாற்றிலும், கழகத்தின் வரலாற்றிலும் நிரந்தர நங்கூரம் பாய்ச்சக் கூடியது.

திகைக்க வைத்த கணியூர் மங்கையர்ப் பேரணி

ஒவ்வொரு சிறு நிகழ்வும் கூட திட்டமிட்ட வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பேரணி சரியாக பிற்பகல் 4 மணிக்கு கடத்தூர்சாலை யிலிருந்து, சென்னை - பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைக்க, கோவை மண்டல திராவிடர் கழக மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி தலைமையில் வீறு கொண்டு புறப்பட்டது.

தாராபுரம் மாவட்ட மகளிரணி செயலாளர் எம்.ஜெயந்தி, கோவை மாவட்ட மகளிரணி செயலாளர் சி.கவிதா, திருப்பூர் மாவட்ட மகளிரணி செயலாளர் த.வசந்தி, நீலமலை மாவட்ட மகளிரணி செயலாளர் நா.சாரதாமணி, தாராபுரம் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சாந்தி, கோவை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்செ.தனலட்சுமி, திருப்பூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்பா.சிந்துமணி, மேட்டுப்பாளையம் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் இரா.நாகம்மை உள்ளிட்டவர்கள் முன்னிலையேற்க கணியூர் அதிர மகளிர் பேரணி நடைபெற்றது.

பேரணி கடத்தூர் சாலை, கிழக்குத் தெரு வழியாக மாநாடு நடக்கும் பெரியார் திடலை வந்தடைந்தது. பெரியார் பிஞ்சுகளும், மகளிரும் கழகக் கொடி  ஏந்தி கொள்கை முழக்கமிட்டு அணிவகுத்து வந்த காட்சி இராணுவ மிடுக்காகச் சிலிர்த்தது.

கழகக் கொள்கை விளக்க முழக்கங்கள் அவை. சோழ மாதேவி மாயவன் குழுவினரின் சிலம்பாட்டம் மற்றும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் பொது மக்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்த வீர விளையாட்டுகளில் மகளிர் 'வித்தை'கள் வித்தியாசமாக இருந்தன.

திராவிடர் கழகப் பேரணி என்றால் மூடநம்பிக்கை ஒழிப்பு விளக்கக் காட்சிகள் முக்கியமாக இடம் பெறும். ஆறறிவுள்ள மனிதனை அடிமைப்படுத்துவதில், சிந்தனா சக்தியைச் சிதறடிப்பதில், தன்னம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைப்பதில், பாடுபட்டுச் சேர்த்த பொருளை விரயமாக்கி தலைகுப்புறத் தள்ளுவதில், காசைக் கரியாக்குவதில் முதலிடத்தில், முண்டாதட்டி நிற்பதில் மூடநம்பிக்கைகளுக்குத்தானே முதலிடம்!

அந்தக் கும்மிருட்டிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது மானிடத்திற்குச் செய்யும் மகத்தான பணியல்லவா - அதனைத்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், அவர்கள் கண்ட திராவிடர் கழகமும் தொடர்ந்து செய்து கொண்டே வருகிறது.

இந்தியாவிலேயே தென்னாட்டில் மகத்தான மக்கள் எழுச்சி, முற்போக்குச் சிந்தனைகள் தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.இராமசாமி என்பது அமெரிக்காவின் மூத்த பேராசிரியர்களின் கருத்து என்று ஜான் ரைலி குறிப்பிட்டிருந்ததை 'ஆனந்த விகடன்' வெளியிட்டதுண்டு.

தீச்சட்டி இங்கே - மாரியாத்தா எங்கே?

இத்தகு திட்டமிட்ட பணிகளால், பிரச்சாரத்தால், போராட்டங்களால் அவை நிகழ்ந்தன என்பதுதான் உண்மை - உண்மையிலும் உண்மை! கணியூர் வீதிகளில் மகளிரே தீச்சட்டி ஏந்தி தீச்சட்டி இங்கே  - மரியாத்தாள் எங்கே? என்று உணர்ச்சிப் பூர்வமாக முழக்கமிட்டு வீர நடை போட்டு வந்தகாட்சி புதிய புறநானூறாகும்.

கோவை தோழர்கள் கலைச்செல்வி, தேவிகா, திலகா, யாழினி, புனிதா, காரமடை அன்புமதி, கவுசல்யா, திருச்சி அம்பிகா, கணியூர் சரசுவதி, காரமடை  அம்ச வேணி, இரா.நாகமணி, காரத்தொழுவு நா.சரசுவதி ஆகியோர் தீச்சட்டி ஏந்தி அரிமா முழக்கமிட்டு வந்தனர்.

அலகுக் குத்தி சப்பரம் இழுப்பது ஆண்டவன் செயல் என்ற அடிமுட்டாள் தனத்தைத் தோலுரித்துக் காட்டும் வகையில் சிவகிரி தோழர் சண்முகம் தலைமையில் தாராபுரம் கழகத் தோழர்கள் முனீஸ்வரன், சின்னப்பதாசு ஆகியோர் முதுகில் அலகுக் குத்தி கார் இழுத்ததோடு, கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு வந்த காட்சி இளைஞர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும். மக்கள் கையசைத்து ஆதரவு காட்ட, கழக மகளிர் அணியினரின் பேரணி மாலை நேர மூடநம்பிக்கை ஒழிப்புச் செயல் விளக்கமாக (ஞிமீனீஷீஸீக்ஷீணீவீஷீஸீ) இருந்தது இப்பேரணிக்கான தனிச் சிறப்பாகும்.

பேரணியின் இரு மருங்கிலும் பொது மக்களும், வியாபாரிகளும், இளைஞர்களும், மாணவர்களும், பிஞ்சுகளும், பெரும் அளவில் திரண்டனர். திராவிட மகளிர் அணி - மகளிர்ப் பாசறை நடத்திக் காட்டிய மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியின் நேர்த்தியைக் கண்டு வாய்விட்டுப் பேசி மகிழ்ந்தனர்.

களிப்பூட்டும் கலை நிகழ்ச்சிகள்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாராபுரம் மானமிகு வடிவேலு அவர்களின் வாழ்விணையரும், கழக மகளிரணித் தோழருமான வ.துளசியம்மாள் நினைவரங்க மேடையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் அரங்கேறின.

கழக குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளின் கொள்கை விளக்கப் பாடலுக்கான நடனம் இரசிக்கத்தக்க முறையில் அமைந்திருந்தது. பாவலர் அறிவுமதியின் பெரியாரை நம்படா நம்பு எனும் பாடலுக்கு திருச்சி யாழினியும், கவிஞர் காளமேகம் அவர்களின் வா தோழா என்ற பாடலுக்கு பெரியார் பிஞ்சுகள் கண்மணி, கவுசல்யா ஆகியோரும், ஆறறிவு மனிதனுக்கு ஜாதி எதற்கு? என்ற பாடலுக்கு திருவாரூர் மாவட்டம் - கண்கொடுத்தவனிதம் கு.குணவதி, பகுத்தறிவு சந்துரு ஆகியோர் கரகாட்ட முறையில் நடனத்தை அமைத்துக் கொண்டது வெகு சிறப்பு.

மாநாட்டில் தருமபுரி அன்பு, கலை இலக்கிய அணியின் சார்பாக கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாடக பயிற்சி அளிக்கப்பட்டது. மாரவாடி கிராம பெரியார் பிஞ்சுகள், மென்மை, தென்னரசு பெரியார், செந்தமிழ்ச்செல்வன், சஞ்சய், ஹரிஷ், கொட்டாவூர் கிராம செம்மொழி, வீரமணி, பந்தரள்ளி கிராம மு.க.ஸ்டாலின், மத்தூர் கிராம சிறீதர், அகரன், புதுப்பட்டி கிராம அஸ்மிதா, அபிநயா ஆகிய பெரியார் பிஞ்சுகள் கலந்து கொண்டு நடத்தினர்.

நடத்தப்பட்ட நாடகங்கள்

1. ஈ.வெ.ராமசாமி நாயக்கராகிய நான்!

2. ஆம்பளை வாயா? பொம் பளை வாயா?

3. எனக்கும் கொஞ்சம் பூ கொடுங்க!

4. ரத்தம் என்ன க்ரூப்?

நடனம்

5. மகளிர் சார்பாக தமிழர் தலை வருக்கு அளிக்கப்பட்ட வர வேற்பு நடனம். பயிற்சியாளர்: தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில அமைப்பாளர், மகளிரணி மற்றும் மகளிர் பாசறை.

நிமிர வைத்த நிமிர்வுக் கலைக் குழுவினர்

கோவையைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டு இருக்கக் கூடியவர்களும், முதுநிலைப் பட்டதாரிகளும் அடங்கிய இருபால் இளைஞர்களும் மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்ற தந்தை பெரியார் அவர்களின் புரட்சி மொழியை முன்மொழிந்து பெரியாரைப் படி - அம்பேத்கரைப் படி என்ற சூளுரையுடன் போர்ப் பறையாக நடத்திக் காட்டினர்.

உண்மையிலேயே அது போர்ப்பறைதான்! கண்டோர் ஒவ்வொருவரின் உணர்வையும் சமுதாய விடுதலைப் போர்க் களத்திற்கு அழைத்துச் செல்லும் பறையோசையாக, இடி முழக்கமாக அமைந்தது என்பதில் அய்யமில்லை.

தாளம் தவறாமல் அவர்கள் பறையை முழக்கின போதெல்லாம் பார்வையாளர்களின் காலடிகளும் அவர்களை அறியாமலேயே அசைந்தாடியதையும் காண முடிந்தது.

திறந்த வெளி மாநாடு

கோவை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர்ப் பாசறை சார்பாக நடத்தப்பட்ட திராவிட மகளிர் எழுச்சி திறந்த வெளி மாநாட்டுக்குத் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி தலைமை வகித்தார்.

கோவை மாவட்ட மகளிரணி தலைவர் செ.முத்துமணி, கோவை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கு.தேவிகா, திருப்பூர் மாவட்ட மகளிரணி தலைவர் க.திவ்யா, திருப்பூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் லெ.திவ்யா, நீலமலை மாவட்ட மகளிரணி தலைவர் க.ஜோதிமணி, நீலமலை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் வே.அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்தியில் ஒரு மதவாத ஆட்சி - மாநிலத்திலோ அதற்கு ஆமாம் சாமி ஆட்சி நடைபெறுகிறது. இவ்விரண்டையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும், மனுதர்மமும், கீதையும் பெண்களை இழிவுப்படுத்தும் இந்து மதநூல்கள் என்றும் எடுத்துக்காட்டி தலைமை உரை நிகழ்த்தினார் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி.

மாநாட்டு வரவேற்புரையாற்றிய வடசென்னை மாவட்டக் கழக மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்கள், குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், வாலிபத்தில் கணவருக்கும், வயோதிகப் பருவத்தில் மகனுக்கும் கட்டுப்பட்டுத் தான் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை எடுத்துக்காட்டி, மனுதர்மத்தை எரிப்பது மகளிர் கடமை என்றும், அதனை எரித்துக் காட்டியது திராவிடர் கழகம் என்றும் எடுத்துரைத்தார்.

திராவிடர் கழக மகளிரணி - மகளிர்ப் பாசறை ஆகியவற்றின் மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் திராவிடர் கழகக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிபோது - தந்தை பெரியார் அவர்களின் கொள்கை இழையால் பின்னப்பட்டது தான் திராவிடர் கழகக் கொடி என்றும், நம் இனத்தைச் சூழ்ந்திருக்கும்  இழிவை வெளிப்படுத்துவதுதான் கழகக் கொடியின் கருப்பின் அடையாளம் என்றும், இந்த இழிவை ஒழிக்கப் புரட்சி செய் என்பதுதான் கழகக் கொடியின் சிவப்பு வண்ணம் என்றும் எடுத்துரைத்தார்.

மனுதர்மத்தை ஒழிப்போம் எனும் தலைப்பில் உரையாற்றிய வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி அவர்கள், பெண்ணுரிமை பற்றி நினைக்கும் பொழுது, நீங்கள் உங்கள் மனைவியை மட்டும் நினைத்துச் சிந்திக்காதீர்கள்; உங்கள் அருமை மகளையும், சகோ தரியையும் நினைத்து யோசியுங்கள் என்று தந்தை பெரியார் தெரிவித்த அரிய கருத்தை விளக்கிப் பேசினார்.

சென்னை மண்டல மாணவரணி அமைப்பாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தன்னுரையில், கீதையைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று சங்பரி வார்கள் கூறுகிறார்கள். உண்மையில் தேசிய நூலாக வைக்கத் தகுதியான நூல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற நூல்தான் என்று அறிவித்தபோது பலத்த கரஒலி!

மாநில மாணவரணி துணைச் செயலாளர் - சட்டக் கல்லூரி மாணவி மதிவதனி தனது உரையில், இன்றைக்கு வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரி கோலமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதற்கு என்ன தீர்வு என்று கேட்டால் பிரதமர் நரேந்திர மோடி பக்கோடா விற்கச் சொல்கிறார். இதனைப் பார்ப்பனர்களிடத்தில் போய்ச் சொல்லுவாரா என்ற வினாவை எழுப்பினார்.

கற்பழிக்கக் கடவுளிடம் விண்ணப்பம் போட்ட திருஞான சம்பந்தனின் வாரிசாக பா.ஜ.க. செயல்படுவதையும் கண்டித்துப் பேசினார்.

மாநில திமுக இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தனது உரையில், திராவிடர் கழகம் நடத்தும் மகளிர் மாநாடு பழம் புறநானூற்று வீரத்தினைப் பறைசாற்றுகிறது என்று குறிப்பிட்டார்.

திமுக மாவட்டச் செயலாளர் இள.பத்மநாபன் அவர்கள் தனது உரையில், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளும், அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களும் பாடுபட்டுக் காத்த பெண்ணுரிமையை மனுதர்மவாதிகளால் அழிக்க முடியாது என்று ஆணித்தரமாகப் பேசினார்.

மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினர் இரா.செயராமகிருஷ்ணன் அவர்கள், இன்றைக்கு மக்களுக்கு இருக்க வேண்டிய முதற்கட்ட வேலையே மத்திய - மாநில அரசுகளை வெளியேற்றுவதே என்று குறிப்பிட்டார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன்

திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி செகதீசன் அவர்கள் மாநாட்டுத் திறப்பாளர் உரையைச் சுருக்கமாகவும், செறிவாகவும் எடுத்துரைத்தார்.

திராவிடர் கழக மகளிர் மாநாடு நடத்தும்போதெல்லாம் என்னைத் தவறாமல் அழைக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். நானும் பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணைச் சேர்ந்தவள் என்ற கூறும் உரிமையும் எனக்குக் கிடைத்துவிடுகிறது.

தந்தை பெரியார் கொள்கைகளை நூற்றுக்கு நூறு ஏற்றுக் கொள்பவள்நான் என்று சொன்னபொழுது பெருத்த கரஒலி.

பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கூறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் கல்வி, அரசுப் பணிகள் அனைத்திலும் ஆக்கிரமிப்பை நடத்தினர், வருணாசிரமத்தையும், ஜாதியையும் புகுத்தி மக்களைப் பிளவுப் படுத்தினர்.

இதற்கெல்லாம் முடிவுரையை எழுதினார் தந்தை பெரியார். திராவிடர் இயக்க ஆட்சியால் நாம் எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறோம். அதனை ஒழிக்கத் திட்டம் தீட்டி வருகிறார்கள் அதனை முறியடிக்கும் வல்லமை நமக்குண்டு.

பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தேவை என்றார் தந்தை பெரியார். கலைஞர் ஆட்சியில் முதற்கட்டமாக 30 சதவீதத்திற்கு வழி செய்யப்பட்டது.

ஆரியம் மீண்டும் தலைதூக்குமேயானால் தந்தை பெரியார் தந்த கைத்தடி எங்களிடம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

மாநாட்டுக்கு வந்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் பத்துப் பேர்களுக்கு மாநாட்டைப் பற்றி சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நிறைவுரையாய் தமிழர் தலைவர்

மாநாட்டு நிறைவுரையை வழங்கிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இயக்க வரலாற்றில் கணியூருக்குள்ள சிறப்புகளை எடுத்துரைத்தார்கள். கே.ஏ.மதியழகன் குடும்பம் - கணியூர் குடும்பம் என்று சொல்லத்தக்க வகையில் இப்பகுதியில் தந்தை பெரியார் கொள்கையை, இயக்கத்தை வளர்த்த அந்த வரலாற்றை நினைவூட்டியபோது பலத்த கரஒலி! (அவர்கள் வீட்டில்தான் தமிழர் தலைவருக்கும், கழகப் பொறுப்பாளர்களுக்கும் உணவு அளித்து உபசரிக்கப்பட்டது. மூத்தவரான கே.ஏ.முருகேசன் அவர்கள் பெயரன் இளங்குமரன் அவர்கள் இதற்காகவே சென்னையிலிருந்து வருகை தந்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

இங்கே ஆறு செல்விகள் இருக்கிறார்கள். மாநாட்டுத் தலைவர் டாக்டர் பிறைநுதற் செல்வி, மாநில மகளிர்ப் பாசறை செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி, பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி செயலாளர் தஞ்சை கலைச்செல்வி, கோவை மண்டல மகளிரணிச் செயலாளர் பா.கலைச்செல்வி, சென்னை சி.வெற்றிச்செல்வி என்று கழகத்திற்குச் செல்விகளுக்குப் பஞ்சமில்லை என்று கழகத் தலைவர் குறிப்பிட்டபோது ஒரே ஆரவாரம்.

இந்த மாநாட்டின் குறிக்கோள் செயற்களாக - பெண்ணே.... பெண்ணே... சனாதனத்தைச் சாடு...! சமதர்மத்தை நாடு! என்பதாகும். இதன் விளக்கத்தை விரிவுபடுத்தினார் கழகத் தலைவர். (முழு உரை வரும்)

ஆண்களுக்கு இடம் உண்டு, என்று கூறும் அளவுக்கு இப்பெண்கள் மாநாடு பெரு வெற்றி பெற்று இருப்பதைப் பாராட்டினார்.

நீண்ட நேரம் பேசவேண்டும் என்று எண்ணினாலும் எனக்குப் போதாத காலமாக இருக்கிறது. இரயிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்று ஆசிரியர் சொன்னபோது ஒரே சிரிப்பும், கைதட்டலும் அலை மோதின.

மனமில்லாமல் உங்களை விட்டுச் செல்லுகிறேன் என்றாலும் இதே கணியூரில் மீண்டும் உங்களைச் சந்திப்பேன் என்று தமிழர் தலைவர் உருக்கமாக சொன்னபோது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

எங்குப் பார்த்தாலும் கருப்புடை தரித்த மகளிர் பட்டாளத்தைப் பார்க்க முடிந்தது. மாலை திறந்த வெளி மாநாட்டிற்கு கணியூர்ப் பொதுமக்கள் மட்டுமல்ல; மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஆயிரக் கணக்கில் கூடி ஆசிரியரின் உரையைச் செவிமடுத்தனர்.

மாநாட்டுத் தீர்மானங்களை மாநில மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி முன்மொழிந்தார்.  மக்கள் அவற்றை வழிமொழியும் வகையில் பலத்த கரஒலி எழுப்பினர். தாராபுரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர் த.விஜயா நன்றி கூற மாநாடு இரவு 9.30 மணி அளவில் வரலாற்றுச் சிறப்புடன் நிறைவுற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner