எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாட்டு நடப்புகள் கோடை வெயிலைவிட சுட்டெரிக்கிறது. நீட் டெனும்  பெயரால்  தமிழ் மண் கட்டிக்காத்த சமூக நீதியின் கழுத்தில் கட்டாரி பாய்ச்சப்பட்டு விட்டது. அதன் விளைவு பட்டிக்காட்டானும், பஞ்சமனும், சூத்திரனும்  மருத்துவக்கல்லூரிக்குள் நுழைந்து ஸ்டெதாஸ் கோப்புடன் டாக்டர் என்ற தகுதியுடன் கம்பீரமாக வெளிவந்தானே - அந்த மாதிரியெல்லாம் இனி வரமுடியாது.

மாடு தின்னும் பறையா - உனக்கு மார்கழி திருநாளா? என்று நந்தனைப் பார்த்துக் கேட்ட கூட்டம், நீயெல்லாம் டாக்டரா - நாங்கள் எல்லாம் நோயாளிகளா? என்று ஆரியம் கேட்காமல் கேட்டு மருத்துவக் கல்லூரி இடங்களை யெல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு விட்டது. எந்த நுழைவுத்தேர்வை திமுக ஆட்சி ஒழித்ததோ, அந்த நுழைவுத் தேர்வுக்கு  நீட் என்று குஞ்சம் கட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் டாக்டர் கனவை தீவிர அவசரப் பிரிவில் படுக்க வைத்து விட்டது.

2017 நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் எத்தனை தெரியுமா? அய்ந்தே அய்ந்துதான்.

குதிரை குப்புறத் தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாக - ஏ குப்பனே, சுப்பனே - நீ தேர்வு எழுத சிக்கிமுக்குப்போ - ராஜஸ்தானுக்குப் போ என்று போகாத ஊருக்கு வழிகாட்டி விட்டது.

ஆரியம் எப்பொழுதும் மார்பை நிமிர்த்தி சமருக்கு  நேருக்கு நேர் வந்ததில்லை. மரத்தின் பின்னால் ஒளிந்து வாலியைக் கொன்ற இராமன் பரம்பரை இப்பொழுது அதே வேலையை செய்து விட்டது. நுழைவுத் தேர்வை ஒழித்த கருணாநிதியே - இதோ பார் அதிலும் கூர்மையான நீட் என்னும் வாளால் உங்கள் சமூக நீதி என்னும் சம்பூகனின் தலையை வெட்டுகிறோம் பார் என்று சவால் விட்டு கொல்லைப்புற வழியாகப் புகுந்து நம் கதையை முடித்து விட்டது ஆரியம். பார்ப்பனீயமும், கார்ப்பரேட்டும் கைக்கோத்து கலகம் விளைவிக்கிறது என்கிறார் நிவேதா சுந்தர் என்ற பெண்மணி முகநூலில். உயர்ஜாதிக் கூட்டம் நான்கு மடங்கு அதிகமாகத் தட்டிப் பறித்திருக்கிறது என்று முகநூல் நண்பர் ஒருவர் கூறுகிறார்.

நீட்டை ஆதரிப்பவர்கள் எல்லாம் யார்? எதிர்ப்பவர்கள் எல்லாம் யார்? என்று பார்த்தாலே சொடக்குப் போடுவதற்குள் விஷயம் தெரிந்து விடும்.

நீட் எழுத வெளிமாநிலம் சென்ற மூன்று மாண வர்களின் தந்தையர்கள் மாரடைப்பால் மரணக் குழிக்குத் தள்ளப்பட்டனர். இன்னும் எத்தனை நரபலிகள் ஆரியத்திற்குத் தேவையோ!

கொதிநிலையில் இருக்கிறது நாடு - இது ஒரு பக்கம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற உன்னதத்தை உலகுக்கு வழங்கிய தமிழ்நாட்டு வயல்கள் எல்லாம் வறண்டு போய் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி விட்டன. விவசாயம் பாவத் தொழில் என்கிற மனுதர்ம வாதிகள் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறார்கள் - விவ சாயம் என்னும் விலா எலும்பை முறித்து விட்டார்கள். இந்தப் பஞ்சமனும், சூத்திரனும் பிறகு என்ன செய்வார்கள் பார்ப்போம் என்று பழி தீர்த்துக் கொண்டுள்ளனர். இது ஒரு பக்கம். வேலையில்லா திண்டாட்டம் என்னும் வெப்பு நோய் வாட்டி வதைக்கிறது.

பெண்கள் என்றால் போகப் பொருள் என்ற நிலையை உருவாக்கி விட்டது இந்துத்துவா கூட்டம்.

பச்சிளம் பெண்ணை கோயில் கர்ப்பக் கிரகத்தில் அடைத்து பலநாள்கள் பதறப்பதறச் சிதைத்து எச்சிலைப் போல தூக்கி எறிந்து விட்டனர்.

பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்த வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்திற்கும் லாடம் கட்டியாயிற்று!. எங்கும் அவலம் - அவலம்! எங்கும் போதாமை - போதாமை! எங்கும் பற்றாக்குறை- பற்றாக்குறை!

செத்துச் சுண்ணாம்பான சமஸ்கிருதத்துக்குச் சிம்மாசனம்.

மூன்றாவது மொழியாக இருந்த ஜெர்மன் மொழிக்குக் கல்தா கொடுத்து விட்டு, அந்த இடத்தில் இறந்து போன பார்ப்பன சமஸ்கிருதத்துக்கு சட்டாம்பிள்ளை அந்தஸ்து.

தேசியக் கல்விக் கொள்கை என்று ஒன்று வருகிறதாம். குஷ்டரோகியின் கைகளில் வெண் ணெய் புட்டுப் போல இந்துத்துவாவாதிகளின்  கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டதால், இப்பொழுது  இல்லையென்றால் வேறு எப்பொழுது? என்று  ஆரியம் அவசர அவசரமாக  ஆதிக்கபுரிக்கான  அஸ்திவாரத்தை பலமாகப் போட்டு வருகிறது.

இராமனை முன்னிறுத்துகிறார்கள் என்றால் என்ன பொருள்? திராவிடர்களைச் சிதைப்பதற்கான கத்தி தீட்டும் படலம் தொடங்கி விட்டது என்பதுதான்.

செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டத் தோழர்களின் தோலை உரிக்கிறான் சங்பரிவார்க்காரன். அவனை யானைமேல் அம்பாரி வைத்து மாப்பிள்ளை ஊர்வலம் போல அழைத்துச் செல் கிறார்கள் குஜராத் பிஜேபி ஆட்சியில். என்னதான் வழி? இந்த வன்முறைப் போக்கின் விஷவேரை வீழ்த்துவது எப்படி? சமூகநீதியைக் காப்பது எப்படி?சம்பூக வதை யைத் தொடர விடாமல் தடுப்பது எப்படி? மண்ணின் உரிமையை மீட்பது எப்படி? ஆட்சி அதிகாரத்துடன் நீதிமன்றமும் கூட்டுச் சேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குப் புதை குழியை உருவாக்குவது எப்படி? பிரச்சாரம், பரப்புரைப் பிரச்சாரம்  - போராட்டம் - மக்களை இயக்கும் ஈர்க்கும் போராட்டம்!

திட்டங்கள்- இளைஞர்களை ஈர்க்கும் திட்டங்கள்! அணிவகுப்புகள் - ஆர்.எஸ்.எஸை வீழ்த்தும் அணி வகுப்புகள்!

முழக்கங்கள் -  மக்கள் மத்தியில் நம் கொள்கைகள் போய்ச் சேருவதற்கான முழக்கங்கள்!

தீர்மானங்கள் - திசை காட்டும் வழித்தடங்களைக் காட்டும் தீர்மானங்கள்!

சமதர்ம சமத்துவ ஒப்புரவு உலகிற்கான  வழி காட்டுதல்கள் தேவை - தேவை!

கொழுக் கொம்பில்லாது  தவிக்கும்   இளை ஞர்களே வாருங்கள்! நீட் தேர்வால் நிலைகுலைந்து போன இருபால் மாணவர்களே வாருங்கள்! - வாருங்கள்!!

மோடி அரசின் பொருந்தாப் பொருளாதாரக் கொள்கைகளால் கொள்ளை போன குடிமக்களே வாருங்கள்! புதிய பாசறை அமைப்போம்!

புதிய போர்முகம் காண்போம்!

பொன்னேரியில் வரும் 12ஆம் தேதி சென்னை மண்டல இளைஞரணி மாநாடு - மாநாடு!

விஞ்ஞான மனப்பான்மையை வெளிப்படுத்தும் பேரணி!

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பது வெறும் பேச்சல்ல. திராவிடர் கழகம் கூட்டும் இந்த மாநாட்டுக்கு வந்துப் பாருங்கள். புத்தொளி கிடைக்கும் - புதுத்தெம்பும் வெடிக்கும்! புதிய வரலாறு படைப்போம்! - பொன்னேரிக்கு வாருங்கள்! பிற்பகல் பேரணியோடு தொடங்குகிறது எழுச்சி மாநாடு. இனம் எழுச்சிப் பெற - இளைஞர்கள் உணர்ச்சிப் பெற - மாணவர்கள் மான உணர்வு பெற - மங்கை யர்கள் மாண்புப் பெற புறப்படுங்கள்! புறப்படுங்கள்!! - பொன்னேரிக்கு.

இப்பொழுதே மாநாடு களைகட்டி விட்டது. சென்னை மண்டலம் முழுவதும் சுவரெழுத்துகள் - ஊரெங்கும் கழகக் கொடிக்காடுகள்.

கணியூரில் சனாதனத்தைச்சாடி சமதர்மத்தைத் தேடிய தாய்குலமே! பொன்னேரிக்கு வருக! புலிப் பாய்ச்சலாக வருக!

அறிவு ஆசான் காண விரும்பிய புத்துலகைப் படைப்போம் வாரீர்! வாரீர்!! தமிழர் தலைவர் தலைமை யிலே தந்தைபெரியார் பணி முடிப்போம் வாரீர்! வாரீர்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner