எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்


பட்டுக்கோட்டை என்றால் சாதாரணமா? பாயும் கொள்கை வேங்கைப் புலிகள் உலாவிய வீரப்பூமி அது!

பட்டுக்கோட்டை என்றால் அஞ்சா நெஞ்சனை (அழகிரியை) மறக்க முடியுமா? மாவீரர் மாப்பிள்ளையனைத் தானை மறக்க முடியுமா? மாஸ்டர் சி.நா. விசுவநாதன் அவர்களைத்தான் நினைக்காமல் இருக்க முடியுமா?

'மாமுண்டி' என்று செல்லப் பெயரால் அழைக்கப்படும் ந. இராமாமிர்தம்  என்ன சாதாரணமானவரா! அவரது சகோதரர் இரத்தினசாமி சாகும்வரை  கொள்கைச் சான்றோர் ஆயிற்றே! பட்டுக்கோட்டை டேவிட்ஸ் தன் இணையரோடு மாநாடுகளில் சண்டமாருதம் செய்பவர்களாயிற்றே! அந்தப் பட்டுக்கோட்டை போகலாமா? 89 ஆண்டுகளுக்கு முன் நாம் பயணிக்க வேண்டும்.

1929 மே 25, 26 நாள்களில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாடு.

அந்த மாநாட்டில் நடந்த சுவையும், சூடும் நிறைந்த நிகழ்வுகளைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

மாநாடு - சும்மா அனல் பறக்கிறது. பழைமைப் பஞ்சாங்கங்களுக்கெல்லாம் பகுத்தறிவுச் சாட்டையடி! மூடத்தனத் தின் முதுகெலும்புகள் எல்லாம் கழன்று கழன்று வீழ்ந்தன.

தீப்பொறி பறக்கும் தீர்மானங்களுக்கும் குறைச்சல் இல்லை.

மாநாடு முடிந்து பொதுக் கூட்டம். வழக்குரைஞர் சிவகங்கை இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் தான் அப்பொதுக் கூட்டம். செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடந்து முடிந்த மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அம்மாநாடு. செங்கற்பட்டு மாநாட்டில் ஜாதிப் பட்டங்கள் துறக்கப்பட்டபோது தன் சேர்வை பட்டத்தைப் பெயருக்கும் பின்னால் சேர்க்காமல் வெட்டி எறிந்த செம்மலாயிற்றே அவர்.

அவரது தலைமையுரைக்குப் பிறகு சொற்பொழிவாற்ற வந்தவர் 'குமரன்' ஏட்டின் ஆசிரியர் சொ. முருகப்பர். மணிக்கணக்கில் பேசும் ஆற்றலாளர். அவர் கூட்டமென்றால் சிரிப்பு சரவெடிகளுக்குப் பஞ்சமிருக்காது. அம்மாநாட்டில் அவர் சொற்பொழிவாற்றியது இரண்டு மணிநேரம் (இப்பொழுதெல்லாம் அது இயலுமா?)

வெறும் கைதட்டல், கேளிக்கை, சிரிப்பொலியோடு முடிந்து விடாது. அந்த உரை எல்லாம் சுருக்கென்றும் தைக்கும் - உடனே செயலுக்கும் அழைக்கும்.

அந்தப் பட்டுக்கோட்டை மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் குமரப்பர் பேசி முடிந்ததுதான் தாமதம், பார்க்க வேண்டுமே! கூட்டத்துக்கு வந்தபோது நாமதாரியாக வந்தவர்கள் குமரப்பர் பேச்சைக் கேட்ட மாத்திரத்திரத்திலேயே நாமங்களை அழித்துக் கொண்டனர்.  விபூதி பூசிக் கொண்டு வந்தவர்கள் வெட்கம் புரை ஏறி விபூதியை அழித்துக் கொண்டார்கள். ருத்திராட்சத்தைப் பிடுங்கி எறிந்தவர்களும் உண்டு.

உடனடியாக அப்படி அழித்துக் கொள்ள முடியாதவர்கள் வெட்கத்தால் நாணித் தலை குனிந்து நின்றார்கள் - மற்றவர்கள் கேலி செய்வார்களே என்பதால்.....

இவற்றையெல்லாம் விட இலட்சியப் பார்வையில் அரங்கேறிய காலா காலத் திற்கும் கண்ணில் ஒற்றிக் கொள்ளக் கூடியவை உண்டு.

ஜாதி மறுப்பு மணம், விதவை மணம் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது - ஓர் அறிவிப்பு மாநாட்டுப் பொறுப் பாளர்களால் கொடுக்கப்பட்டது.

இத்தீர்மானத்தை ஏற்று செயலில் காட்டத் தயாராக இருக்கக் கூடியவர்கள் கைகளை உயர்த்துமாறு கேட்டுக் கொண்ட போது - 200 வாலிபர்களும், இரண்டு மூன்று பெண்களும் கம்பீரமாகக் கரங்களை உயர்த் திக் காட்ட அப்பப்பா - அந்தக் காட்சியும், உணர்ச்சியும் சொல்லுந்தரமன்று! 89 ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது என்பதுதான்  கவனிக்கத்தக்கக் கருவூல மாகும்.

மற்றொரு முக்கிய தீர்மானம் அம்மா நாட்டில்!

"இழிவான பதங்களை உபயோகித்தல்: நாம் எவ்வளவு தூரம் கண்டித்து சொல்லியும் சிறிதும் கவனிக்காமல் நம்மை 'சூத்திரர்'கள் என்றும், நாலாவது வருணத்தார் என்றும், பஞ்சமர் என்றும் இழிவான பதங்களை திரு. மாளவியா முதல் - வருணாசிரம மகாநாடு, "இந்து" "சுதேசமித்திரன்" முதலிய பத்திரிக்கைகள் வரை உபயோகித்து வருவதால் இனியும் அம்மாதிரி பதங்களை எந்தப் பார்ப்பனராவது, பார்ப்பன பத்திரிக்கைகளாவது உபயோகித்தால் நாமும் நிகண்டு அகராதிகளில் உள்ளபடி பார்ப்பனர்களுக்கு மிலேச்சர்கள் என்ற பதத்தை உபயோகிக்க நேரிடும் என்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

'சூத்திரன்' என்பது பெருமையான வார்த்தையென்றும், சற்சூத்திரர் என்பது மிகவும் பெருமையான வார்த்தை யென்றும் பிரச்சாரஞ் செய்யும்படி பார்ப்பனர்கள் சில பார்ப்பனரல்லாதவர்களைப் பிடித்துக் கூலி கொடுத்தும், தங்களையே 'சூத்திரர்' என்று ஒப்புக் கொள்ளும்படி செய்தும் பிரசாரஞ் செய்விக்கிறவர்களுடையவும், செய்கிறவர்களுடை யவும் பேச்சைக் கேட்டு ஏமாறக் கூடாதென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது"

இத்தீர்மானம் எதைக் காட்டுகிறது? 1929ஆம் ஆண்டு களில்கூட சூத்திரர் என்றும், பஞ்சமர் என்றும் அழைக்கும் அவல நிலை இருந்திருக்கிறதே! பார்ப்பனத்தலைவர்களும், பார்ப்பன ஏடுகளும் எவ்வளவு ஜாதி ஆணவத்தோடு கொக்கரித்திருந்தனர் என்பது விளங்கவில்லையா?

3.5.1936 நாளிட்ட 'குடிஅரசு' இதழ் ஒன்றைக் குறிப்பிடு கிறது. "சென்னை ஓட்டல்களில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க்காரர்களும் நுழையக் கூடாது" என்று அறிவிப்பு போட்டிருப்பதையும், இரயில்வே ஓட்டல்களில் 'பிராமணாள் மாத்திரம்' என்று அறிவிப்புப் பலகைகள் தொங்குவதையும் மேட்டுப் பாளையம் இரயில்வே ஸ்டேஷனில் 'சூத்திரருக்கு' என்று அறிவிப்புப் போட்டியிருப்பதையும் 'குடிஅரசு' (1936) அம்பலப்படுத்தியதே!

இன்றைக்கு அந்த நிலை அகற்றப்பட்டுள்ளது என்றால் அதற்கான அடித்தளமிட்டு, அண்டங் குலுங்க ஆவேசப் போர் புரிந்து, புத்தியில் புரட்சித் தீயை ஊட்டிய தலைவர் தந்தை பெரியார் - அவர்கள் கண்ட சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் அல்லவா!

இன்றைக்கு நேரடியாக 'சூத்திரன்' என்று சொல்ல முடியாது; காரணம் 'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!' என்ற முழக்கம் ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரின் குருதி அணுக்களிலும் குத்திட்டு நிற்கிறதே!

அதே நேரத்தில் அதன் அடிப்படை ஆணி வேர் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தமிழன் கட்டிய கோயில் கருவறையில் ஒரு தமிழன் அர்ச்சகனாக நுழைய முடியவில்லையே! தனது இறுதிப் போராட்டம் என்று தந்தை பெரியார் அறி வித்து, அந்தப் போராட்டத்தின் களத்திலேயே தானே தனது இறுதி மூச்சைத் துறந்தார்.

அந்தப் போராட்டம் இன்றளவும் நமது தமிழர் தலைவர் தலைமையிலே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் அதற்கான சட்டங்களை இருமுறை இயற்றியும் இன்னும் ஆதிக்க புரிகளின் பூணூல்கள், கொள்கையில்லா ஆட்சியினர் தடைக் கற்களைப் போட்டுக் கொண்டு தானிருக்கின்றன.

அவற்றைத் தவிடு பொடியாக்குவோம் வாருங்கள்; வாலிபர்களே வாருங்கள்! வாருங்கள்!!

பட்டுக்கோட்டையிலே வரும் 29ஆம் தேதி இளைஞர் எழுச்சி உண்டு.

"திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!" என்று மாநாட்டின் இலச்சினையை முழக்கமாகத் தந்துள்ளார் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள்.

பட்டுக்கோட்டை மாநாட்டைப் பற்றிப் பறைசாற்றும் வகையில் பட்டுக்கோட்டையைச் சுற்றி மட்டுமல்ல - தஞ்சாவூர் மாவட்டம் முழுவதுமே தெருமுனைப் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது எத்தனைத் தெரியுமா? 60 கூட்டங்கள்.

நம்ப முடிகிறதா? வேறு எந்த மாநாட்டிற்காகவும் இத் தனைத் தெரு முனைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டதில்லை.

எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள், பம்பரமாய்ச் சுழன்று சுழன்று பணியாற்றும் இளைஞர் சேனை!

இதனுடைய தாக்கத்தை வட்டியும் முதலுமாக வரும் 29ஆம் தேதி பட்டுக்கோட்டையில் பார்க்கத்தான் போகி றோம்!

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி - ஆண்டு 50அய்க் கூடத் தொட்டுப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர் இரத்தம் கக்கக் கக்க ஆற்றிய உரை வீண் போகவில்லை. 95 ஆண்டு காலம் வரை நமது அய்யா அவர்கள் பாய்ச்சிய பகுத்தறிவு நீர்ப்பாசனம் வறண்டுப் போய் விடவில்லை.

இளைஞர்கள் கோட்டமாகி வருகிறது திராவிடர் கழகம். எங்கு நமது தலைவர் சென்றாலும் இளைஞர்கள், மாணவர்கள் இயக்கத்தை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். கடந்த சனியன்று (19.5.2018) தியாகதுருகம் சென்றபோதும் சரி, உளுந்தூர்பேட்டைக்கு சென்றபோதும் சரி மாணவர்கள் மேடைக்கே வந்து கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

சங்பரிவார்களின் விஷம் ஏற ஏற ஈரோடு மூலிகையை நோக்கி இளைஞர் பட்டாளம் அணி வகுத்திட ஆரம்பித்து விட்டது.

இந்தக் கால கட்டத்தில் இயக்கம் இளைஞர்களின் கோட்டமாக இருக்கிறது, கோட்டையாக இருக்கிறது என்பதைப் பட்டுக்கோட்டையில் (29.5.2018) பார்க்கத் தான் போகிறோம். எழுக இளைஞனே எழு! எழு!!

கனல் பறக்கும் கருத்தரங்கம் -  காலத்தின் பசியைப் போக்கும் தீர்மானங்கள் - அணி தேர்ப் புரவியாய் அணி வகுக்கும் பேரணி - தமிழர் தலைவரின் நிறைவுரை என நிரம்பவே உண்டு. பசியாறுவோம் வாரீர்! வாரீர்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner