எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

கேட்டீர்களா தோழர்களே! இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கே அவமானம்! இந்தியாவின் முதல் குடிமகனுக்கே மகத்தான அவமானம்! முப்படைகளின் தலைவருக்கே மன்னிக்கப்பட முடியாத பெரும் அவமானம் அவமானம்!

இந்தியாவின் குடியரசுத் தலைவரான மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள், தம் துணைவியாருடன் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலில் தான் அந்த அவமானம் நடத்தப்பட்டிருக்கிறது (தென்னாட்டில் பொதுவாக பிரம்மாவுக்குக் கோயில் கிடையாது - அவன் பொய் சொன்னதற்காக அந்தச் சாபமாம்!)

அந்த கோயிலுக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் தம் குடும்பத்துடன் வழிபடச் சென்றுள்ளார்.

தடபுடலான வரவேற்பா? பூர்ண கும்ப மரியாதையா? ஒரு மரியாதையும் இல்லை. நரி வலம் போகா விட்டாலும் ஆளை விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதாதா?

குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்?

எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோயிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறி விட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து பூஜை நடத்திப் புறப்பட்டு விட்டார்-  120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.

இந்தச் செய்தி எப்படியோ வெளி வந்து விட்டது; இதனைக் கூடைக்குள் போட்டு அமுக்கி விட வேண்டும் என்று பிரயாசைப்பட்டும், எப்படியோ கோணிப்பையைக் கிழித்துக் கொண்டு பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டது.

இது என்ன சாதாரண பிரச்சினையா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பகுதி  என்ற தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இதனைத் தீண்டவில்லையே ஏன்?

இதற்குக் காரணமானவர்களின் சிண்டைப் பிடித்து இழுத்து பிணையில் வர முடியாத அளவுக்குச் சிறைக் கொட்டடியில் தள்ளாதது ஏன்? ஏன்?

எங்கள் அமைப்பில் ஜாதியில்லை - தீண்டாமைக்கு இடம் இல்லை - எல்லோரும் பாரத மாதாவின் புத்திரர்கள் என்று பம்மாத்து அடிக்கும் பா.ஜ.க. பேர் வழிகள் எங்கே போனார்கள்? சங்பரிவார் சகதிகளின் பேச்சு மூச்சைக் காணோம் ஏன்?

56 அங்குலம்  மார்பளவுள்ள சண்டியர் பிரதமர் வாய்த் திறக்காதது ஏன்?

இது சுதந்திர நாடாம்; ஒரு குடியரசுத் தலைவரே தீண்டப்படாதவர் ஆகி விட்டாரே! இதுதான் ஆனந்த சுதந்திரமா?

ஒரு தாழ்த்தப்பட்டவர் சங்கராச்சாரியாராக வரும் நாள்தான் உண்மையான சுதந்திரம் வந்தநாள் என்று காகா கலேல்கர் கூறினாரே  - நினைவு இருக்கிறதா?

சங்கராச்சாரியார்கூட ஆக வேண்டாம். குறைந்தபட்சம் கோயில் அர்ச்சகராக ஆக முடியவில்லையே - கோயில் படிக்கட்டில் அமர்ந்துதான் இந்தியாவின் முதல் குடிமகன் பூஜை செய்ய வேண்டிய கீழமையை என்னவென்று சொல்ல!

2014ஆம் ஆண்டு ஆகஸ்டில் பீகாரில் நடந்த ஒரு நிகழ்வு நினைவிருக்கிறதா? நிதிஷ்குமார் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி அந்த இடத்திலே முதல் அமைச்சராக ஜிதன்ராம் மஞ்சி அமர்த்தப்பட்டாரே- நினைவிருக்கிறதா?

அவருக்கு என்ன நடந்தது? பீகாரிலே! மதுபால மாவட்டம், சிவன் கோயில் ஒன்றிற்கு வழிபடச் சென்றார் முதல் அமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி.

அவர் வழிபாடு செய்து வெளியில் வந்தது தான் தாமதம்  தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் அமைச்சர் சிவன் கோயிலுக்குள் நுழைந்ததால் கோயில் தீட்டுப்பட்டுவிட்டது; தோஷம் பட்டு விட்டது என்று கூறி கோவிலைக் கழுவி சடங்குகளைச் செய்து சுத்திகரித்தார்களா இல்லையா?

தனக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்தை முதல் அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியே கூறி புலம்பினாரா இல்லையா?

இந்தியா சுதந்திரம் அடைந்ததாகச் சொல்கிறார்கள் - ஒரு சுதந்திர இந்தியாவில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று கேட்டாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் - அந்தக் கேள்விக்கு விடை எங்கே? எங்கே?

மெத்தப் படித்த மேதாவிகள் பதில் சொல்லட்டும். பேனா பிடிக்கும் எழுத்தாளர்கள்தான் பதில் சொல்லட்டுமே!

ஆன்மிகவாதிகள் பதில் சொல்லட்டும்! சொல்லட்டும்!!

120 கோடி மக்களின் அரசமைப்புச் சட்ட ரீதியான மரியாதைக் குரிய முதல் குடிமகனுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை - மனித உரிமை மீறலை யாரும் கண்டுகொள்ளவில்லையே ஏன்?

வடக்கே நிகழ்ந்த இந்த மனித உரிமை மீறலை எதிர்த்து, -  வன்கொடுமையை எதிர்த்து குரல் கொடுக்க தெற்கே தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு தானே தோள் தட்டி எரிமலையாக எழுந்து நிற்கிறது.

ஒரே ஒரு தலைவர் மானமிகு வீரமணி அவர்களுக்கு மட்டும்தானே குருதி கொதிக்கிறது - ஒரே ஒரு இயக்கம் திராவிடர் கழகம் தானே போராட்டக் களம் அமைத்திருக்கிறது.

பரவாயில்லை தாங்களாக  களம் அமைக்காவிட்டாலும் திரா விடர் கழகம் முன்னின்று நடத்தும் இந்தப் போராட்டக் களத்திற்கு வாருங்கள் தலைவர்களே - வாருங்கள் தொண்டர்களே! வரும் 7.6.2018 வியாழன் காலை 10.30 மணிக்கு மாவட்டத் தலை நகரங்களில் எல்லாம் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மற்ற மற்ற மாவட்டங்களில் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து அரிமாக் குரல் கொடுப்பீர் தோழர்களே!

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner