எழுத்துரு அளவு Larger Font Smaller Font


துவார பாலகர்களா வீரமணியும் - வைகோவும்?

மின்சாரம்

தி.மு.க.வுக்கு ஒரு பக்கம் கே. வீரமணியும், இன்னொரு பக்கம் வைகோவும் துவாரபாலகர்கள் போல் இருப்பார்கள். தி.க. போல ம.தி.மு.க.வும் இருக்கும் என்று 'துக்ளக்'கில் (13.6.2018 பக்கம் 10) திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் எழுதியுள்ளார்.

நாராயணக் கடவுளைப் பார்க்க வந்த சனாகதி முனிவரை அனுமதிக்காத துவாரபாலகர்களை சபித்த சனாகதி முனிவராக குருமூர்த்திகள் இருக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை.

இந்தப் பார்ப்பனர் எந்தப் பொருளில் சொல்லி யிருந்தாலும் தி.மு.க.வுக்கு அப்படி இருப்பதில் ஒன்றும் தவறும் இல்லை.

திமுகவை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால் இந்தப் பலம் வாய்ந்த துவாரபாலகர்கள் இருந்து தொலைகிறார்களே என்ற ஆத்திரத்தில் அய்யர்வாளின் பேனா முள் இப்படி எழுதுகிறது என்றே கொள்ள வேண்டும்.

திமுக செயல் தலைவர் போக்கில் மாறுதல் வேண்டும் - பழைய திராவிட இயக்கச் சிந்தனைகளை விட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லிப் பார்த்தார் இந்தக் குருமூர்த்தி அய்யர்.

அது நடக்காது என்று தெரிந்த நிலையில் தான் இப்படிச் சொல்லியிருக்கிறார். இந்த இரு துவாரபாலகர்கள் இருந்து தொலைக்கிறார்களே என்ற ஆத்திரம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டிருக்கிறது.

234 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் இப்பொழுது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ஆகிவிட்டோமே!

அக்ரகார அம்மையார் ஜெயலலிதா இருந்தார்  அவர் மரணத்துக்குப் பின் உள்ளதும் போச்சே நொள்ளைக் கண்ணா என்று புலம்பித் தவிக்கின்றனர். இனி எந்த ஒரு யுகத்தில் அக்கிரகாரத்து ஆசாமி தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வரப் போகிறார் என்ற ஆற்றாமையில் எதை எதையோ கிறுக்குகிறது 'துக்ளக்'!

சமுதாயப் புரட்சி இயக்கமாக இருக்கக் கூடிய திராவிடர் கழகம், ஒரு பக்கம் அரசியலில் இருந்தாலும் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தினால் அவர்களைத் துவம்சம் செய்யும் வைகோவும் இருக்கும் நிலையில் சுயமரியாதைக்காரரான கலைஞரின் மகன் தளபதி மு.க. ஸ்டாலின் அந்தத் திராவிட இயக்கச் சித்தாந்த பாதையில்தான் பயணிக்க முடியும் என்பதை உணர்ந்த நிலையில்தான் உலக்கையை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறது அக்கிரகாரம்.

தமிழ்த் தேசியவாதிகள் இந்த இடத்தைத்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திராவிடம் - ஆரியம் என்பதுதான் ஒன்றுக்கொன்று எதிரணியிலிருந்து செயல்பட முடியும் என்பதை உணர வேண்டும்; தமிழர் என்று சொன்னால் சுலபத்தில் பார்ப்பனீயம் "சுவாகா" செய்து விடும் என்பதை உணர்வார்களாக!

திராவிடர் கழகத் தலைவரும், மதிமுக பொதுச் செயலாளரும் துவார பாலகர்களாக இருப்பது பெருமை தானே தவிர சிறுமையல்ல!

ரஜினியை விமர்சிப்பது வீரமணிக்கு விளம்பரமா?

கேள்வி: ஜனநாயகத்தில் பாலபாடம் கூடத் தெரியாதவர் என்று ரஜினியை தி.க. தலைவர் கி. வீரமணி விமர்சித்துள்ளாரே?

பதில்: ரஜினியை விமர்சிப்பதன் மூலமாக அவருடைய பெயர் பத்திரிக்கைகளில் கொட்டை எழுத்துகளில் வருகிறது. எப்போதடா பத்திரிகையில் பெயர் வரும் என்று காத்திருக்கும் வீரமணி போன்றவர்களுக்கு, அது பெரும் லாபம் தானே. ஜனநாயகத்தைப் பற்றிப் பேச வீரமணிக்கு ஏராளமான தகுதிகள் இருக்கின்றன. ஜனநாயக தத்துவத்தை முழுமையாகக் கரைத்துக் குடித்ததால்தான் வீரமணி 1978லிருந்து இன்று வரை 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்ப்பே இல்லாமல் திராவிடர் கழகத் தலைவராக இருந்து வருகிறார்.

('துக்ளக்' 20.6.2018 பக்கம் 15)

கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை திருவாளர் எஸ். குருமூர்த்தி அய்யரின் மேதா விலாசத்தை என்னென்று பறைசாற்றுவதோ!

ரஜினியை விமர்சித்தால்தான் வீரமணியினுடைய பெயர் பத்திரிகைகளில் கொட்டை கொட்டையாக வெளி வருமாம். அதற்காகத்தான் வீரமணி, ரஜினியை விமர்சிக் கிறாராம் கண்டுபிடித்து விட்டார் இந்த அக்ரகாரக் கொலம்பசு.

பத்து வயது பாலகனாக மேடை ஏறித் தமிழ்நாட்டை வலம் வந்தவர் வீரமணி; 85 ஆண்டு வாழ்வில் 75 ஆண்டுப் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்ற விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் மானமிகு வீரமணி அவர்களுக்கே உண்டு.

அந்தப் பதினோறு (29.7.1944) வயது பாலகனின் மேடைப் பேச்சைக் கேட்டு பெரும் பேச்சாளரான அறிஞர் அண்ணா அவர்களே இப்பொழுது இங்குப் பேசிய சிறுவன் வீரமணியின் நெற்றியில் திருநீறும், காதிலே குண்டலமும், கழுத்திலே உருத்திராட்சக் கொட்டையும் இருந்தால் திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தன் என்று கூறி விடலாம். ஆனால் இவர் உண்டதெல்லாம் பார்வதியாரின் ஞானப்பால் அல்ல -  "பகுத்தறிவு ஈரோட்டுப்பால்!" என்ற பாராட்டைப் பெற்றவர்.

கல்லூரிகளில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் தங்க மெடல் வாங்கியவர். சிதம்பரம் நடராஜர் கோயில் பெயரில் அளிக்கப்படும் தங்க மெடலையும் தட்டிச் சென்றவர் வீரமணி என்ற விவேக வரலாறு இந்த வேதியப் பூணூல் கும்பலுக்குத் தெரியுமா?

75 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இவர் கால் படாத ஊர் கிடையாது, பேசாத இடம் கிடையாது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல- இந்தியத் துணைக் கண்டம் மட்டுமல்ல - உலகில் பல்வேறு நாடுகளையும் சுற்றி வந்தவர். சென்ற இடமெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை - திராவிடக் கருத்தியலைப் பரப்பி வரக் கூடியவர்.

அவர் தொண்டையும், கருத்தியலையும், சொற்பொழிவுகளையும் மய்யப்படுத்தி முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் உண்டு. பெற்றுக் கொண்டும் இருக்கிறார்.

அத்தகைய தமிழ்நாட்டின் மூத்த தலைவர் ஒருவருக்கு ஒரு சினிமா நடிகரை விமர்சிப்பதன் மூலமாகத்தான் பத்திரிகை விளம்பரம் கிடைக்கிறது என்று எழுதும் பேர் வழிகள் ஒன்று கிறுக்கர்களாக இருக்க வேண்டும் அல்லது பொறாமை நோய் கொண்ட வயிற்றெரிச்சல் பூணூல் திருமேனிகளாக இருக்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டுப் பொது வாழ்வின் பால பாடத்தைக்கூட அறியாத கை சூப்பும் பாலகர்களாக இருக்க வேண்டும்.

இந்த மூன்றும் சேர்ந்த "முக்காலி" என்ற பட்டத்தை திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாளுக்குத் தாராளமாகவே சூட்டலாம்.

40 ஆண்டு காலமாக திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்திருக்கிறாராம்  வீரமணி - அவர்தான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறார் என்ற கிண்டல் வேறு.

அவர் ஒன்றைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல - ஒரு சரியான தலைமைத் தேர்ந்தெடுத்து இராணுவ சிப்பாய்கள் போல கட்டுப்பாட்டுடன் பணியாற்றும் பாசறை இது.

மானமிகு வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களாலும், அன்னை மணியம்மையார் அவர்களாலும் அடையாளம் காட்டப்பட்டவர் - அதனைத் தொண்டர்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுதான் அவர் தலைமை கிடைத்தற்கரிய ஒன்று என்ற உறுதியான எண்ணத்துடன், எவ்வித எதிர்பார்ப்புமின்றிப் பணியாற்றி வரக் கூடியவர்.

எவ்வித எதிர்ப்புமின்றி 40 ஆண்டுகாலமாக திராவிடர் கழகத் தலைவராக இருந்து வருகிறார் என்று திருவாளர் குருமூர்த்திவாள் அவரை அறியாமலேயே ஒப்புக் கொண்டுள்ளார். எவ்வித எதிர்ப்பின்றி ஒருவர் தலைவராக இருக்கிறார் 40 ஆண்டுகாலம்  என்றால் அதன் பொருள் என்ன?

அதே நேரத்தில் திராவிடர் கழகம் ஆர்.எஸ்.எஸ். போன்றதல்ல; ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பதவி என்றால் அது பார்ப்பனருக்கு மட்டுமே (ஒரே ஒரு ராஜேந்திர சிங் தவிர) என்ற நிலை எல்லாம் இங்குக் கிடையாது.

இந்த இயக்கத்திற்குத் தலைமை ஏற்று இருப்பவர் 75 ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்ற பெருமிதம் இருக்கிறது. தமிழ்நாட்டின் மூத்த தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களாலேயே தமிழர் தலைவர் என்று அழைக்கப்படுபவர் - எங்களின் அரசியல் "ராஜகுரு" வீரமணி என்று மதிப்பிற்குரிய மூப்பனார் அவர்களால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர்.

பார்ப்பன முதல் அமைச்சர் ஜெயலலிதா - பார்ப்பனப் பிரதமர் நரசிம்மராவ், பார்ப்பனக் குடியரசுத் தலைவர் சங்கர்தயாளர் சர்மா என்ற மூன்று பார்ப்பனர்களின் கைகளைக் கொண்டே தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு அட்டவணையில்  சேர்த்து பாது காப்புக்கு ஏற்பாடு செய்தவர்.

மண்டல் குழுப் பரிந்துரை அவ்வளவுதான் - பத்தாண்டுகள் பறந்து விட்டன; மண் மூடிப் போய்விட்டது என்று மனப்பால் குடித்துக் கிடந்தார்களே பார்ப்பனர்கள் அவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டவர்தான் ஆசிரியர் வீரமணி.

இந்தியா முழுவதும் உள்ள சமூகநீதியாளர்களை இணைத்து 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்த சீலர் வீரமணி என்பதை சிண்டுகள் உணரட்டும்.

நண்பர் வீரமணியை காணும் பொழுதெல்லாம் சமூகநீதி உணர்வினைப் பெறுகிறேன் என்று பிரதமர் வி.பி. சிங் அவர்களால் பாராட்டப் பெற்றவர் ; நாடாளுமன்றத்தில் மண்டல் குழுப் பரிந்துரை குறித்த பிரகடனத்தை வெளியிட்ட போது பிரதமர் வி.பி. சிங், தந்தை பெரியார் கனவு நனவாயிற்று என்று சொல்லுவதற்கு வித்தாக இருந்தவர் மானமிகு வீரமணி.

இன்னும் எவ்வளவோ எழுதலாம்.

கரையான் புற்றெடுக்கக் கருநாடகம் குடி புகுந்தது போல 'துக்ளக்'  அலுவலகத்துக்குள் புகுந்து கொண்டு ('சோ' அவர்கள் குடும்பத்தார் எதிர்ப்பையும் மீறி) அய்யர் அதிகமாகவே ஆட்டம் போடுகிறார். அதிகாரம் இருக்கும் வரை ஆடட்டும் ஆடட்டும் - வானரமாய்க் குதிக்கட்டும் குதிக்கட்டும்!

ஆனானப்பட்ட ஆச்சாரியாரையே (ராஜாஜியே) துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம்  என்று ஓட வைத்தது தந்தை பெரியாரின் கருஞ்சட்டைப் பட்டாளம் - வீணாக வாலை நீட்டி வசமாக மாட்டிக் கொள்ள வேண்டாம் - எச்சரிக்கை!