எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தையில் உடைக்கப்பட்டது கல்லூரி தண்ணீர்ப் பானை

கொந்தளித்து எழுந்தது திராவிட மாணவர் சேனை

கும்பகோணம் என்ற ஊரின் உண்மையான பெயர் குடமூக்கு! அது சமஸ் கிருதமாக்கப்பட்டு கும்பகோணமாயிற்று. ஆரிய சமஸ்கிருதப் பண்பாட்டு படை எடுப்பால் தமிழும், தமிழரும், தமிழ் பண்பாடும் தவிடுப் பொடியாக்கப்பட்டது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

கும்பகோணம் என்றால் அது ஆரிய புரி! கோயில் பெருத்த ஊராச்சே - கொழிக்க மாட்டார்களா பார்ப்பனர்கள்?

ஒரு சோறு பதம்: 1935ஆம் ஆண்டில் நிகழ்ந்தது அது. கும்பகோணம் அக்ரகாரத் துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப்பட்ட வர்களை நியமிக்கக் கூடாது - அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மலம் எடுப்பதில் கூட தாழ்த்தப்பட்டவர்கள் கூடாது என்று நகராட்சி தீர்மானித்ததே - இந்தத் தகவல் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

அத்தகைய குடந்தையிலே திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்டதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அந்த வீரிய விதைகூட தன்மான, இன மான எரிமலை வெடிப்பில் வந்து விழுந்தது தான்.

அந்தக் காலகட்டத்தில் எல்லாம் இப்பொழுது போல கல்லூரிகள் கிடையாது. அத்தி பூத்தது போல அங்கொன்றும், இங் கொன்றும்தான் காண முடியும்.

குடந்தையில் ஓர் அரசு கல்லூரி காவிரியின் கரையிலே கம்பீரமாக எழுந்து நின்றது.

அந்தக் கல்லூரி விடுதியில் நடந்த அந்த அநியாயம் என்ன? பிராமண மாணவர் களுக்கென்று ஒரு தண்ணீர்ப் பானையாம் - இதராருக்கு ஒரு தண்ணீர்ப் பானையாம். சம்பந்தம் என்ற கதர்ச் சட்டை மாணவர் பிராமணாள் தண்ணீர்ப் பானையிலிருந்து தம்ளரை எடுத்து தண்ணீர்க் குடித்து விட்டாராம்.

அடேயப்பா! எவ்வளவுப் பெரிய தப்பு - பிர்மாவின் நெற்றியிலே உதித்த பிராம ணருக்கான தண்ணீர்ப் பானையில் பிர்மாவின் காலில் பிறந்த சூத்திரன், விபச்சாரி மகன் (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415) தண்ணீர் எடுக்கலாமா? அது வருணா சிரமக் குற்றமல்லவா?

வருணப் பிழை நடந்து விட்டால் பிராமணர்கள் ஆயு தம் எடுத்து யுத்தம் செய்ய வேண்டும். (மனுதர்மம், அத் தியாயம் 8, சுலோகம் 348). பிரச்சினை விடுதி காப் பாளர் கணேச அய்யரிடம் சென்றது. ருத்திர தாண்டவம் ஆடினார் அய்யர். ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தத் தகவல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட்டை முடித்துவிட்டு, பி.ஏ. வகுப்பில் குடந்தை அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்த எஸ்.தவமணிராசன் என்னும் மாணவர் காதில் விழுந்தது.

(அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் மாணவர் பிரச்சினைகளில் முன் னெடுப்பாக இருந்த மாணவர் தான் அவர். அவர் கேட்காமலேயே டி.சி. கொடுக்கப் பட்டது. பல்கலைக்கழக பேராசிரியர் அ.சிதம்பரநாதன் அவர்களின் பரிந்துரை யோடு குடந்தைக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் ஆவார்).

நேராக சம்பந்தப்பட்டமாணவர் சம் பந்தம் (இண்டர் மீடியட் முதலாண்டு மாணவர்) அறைக்குச் சென்றார் தனது நண்பர் டி.மகாலிங்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நிலையில், அருமை நண்பா! அபராதம் கட்டாதே - பார்த்து விடுவோம் அதைத்தான்! என்று அந்த ஒல்லி உருவம் அண்டங் குலுங்கக் குலுங்கக் கர்ச்சித்தது.

மாணவர் பட்டாளம் படபடத்தது. அப் பொழுது கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ விடுப்பில் இருந்தார். துணை முதல்வர் மார்க்க சகாயம் செட்டியாரிடம் முறை யிடப்பட்டது. விடுப்பில் சென்ற முதல்வர் வரட்டும்; அதுவரை அபராதம் கட்ட வேண்டாம் என்றார் துணை முதல்வர்.

முதல்வரும் ஆரியத்தின் பக்கம் நின் றால் பிரச்சினையை உள்ளூர் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்தவரிடம் எடுத்துச் செல்லலாம் என்கிற அளவுக்கு மாண வர்கள் தீப்பிழம்பாய்க் கொந்தளித்தனர்.

முதல்வரும் வந்தார், பதட்ட நிலை இருந்த சூழலையும் புரிந்து கொண்டார். அபராதத்தை ரத்து செய்தார் (மாணவர் களுக்கு முதல் வெற்றி!).

அதே கால கட்டத்தில் நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களின் இரு நாடகங்கள் குடந்தையில் நடைபெற்றன. விமலா அல்லது விதவையின் கண்ணீர் மற்றும் இழந்த காதல் என்னும் நாடகங்கள் அவை. தவமணிராசனும், நண்பர்களும் நாட கத்தைப் பார்க்கச் சென்றனர்.

நாடகம் முடிந்தபின் நடிகவேளையும் சந்தித்து தங்களின் பெரியார் கொள்கை ஈடுபாட்டைத் தெரிவித்து, குடந்தை கல்லூரி மாணவர்கள் சார்பாக உங்களுக்கு கேடயப் பரிசு வழங்க விரும்புகிறோம். அந்த நிகழ்ச்சிக்கு அறிஞர் அண்ணாவை யும் அழைக்க விருப்பம் என்றனர்.

நடிகவேளுக்கு மகிழ்ச்சி. அப்பொழுது சிதம்பரத்தில் திராவிட நாடு இதழ் வளர்ச் சிக்காக சிதம்பரத்தில் சந்திரோதயம் நாடகம் நடைபெறுவதை அறிந்த மாணவர் குழாம் சிதம்பரம் சென்றனர். நடிகவேளும் உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாவும் இசைந்தார்; சொன்னவு டனேயே குடந்தையில் நடைபெற்ற நடிக வேள் நாடகத்திற்கும் தலைமை வகித்து பாராட்டிப் பேசினார்.

எம்.ஆர்.இராதா விரும்பினால் சந்திரோதயம் நாடகத்தை நடத்தலாம் என்றும், ராதா விரும்பினால் அந்த நாடகத் தில் துரைராஜ் பாத்திரத்தில் தானே நடிக்கத் தயார் என்று அண்ணா கூறினார்.

ராதா அவர்கள் மளிகைக்கடையில் சோப் விற்பதைவிட சோப்புக் கடையையே தனியாக வைத்து மக்களின் அழுக்கைப் போக்கும் தொண்டைச் செய்யலாம் என்று அப்பொழுது அண்ணா பேசினார். நடிக வேள் சிந்தனையில் மின்பொறி தட்டியது.

மாணவர்கள் மத்தியில் மட்டும் நன் கொடை திரட்டப்பட்டு எம்.ஆர்.இராதா வுக்கு விருது வழங்கினர். மீதிக் கொஞ்சம் பணம் கையில் இருந்தது. அப்பொழுதெல்லாம் மாணவர்கள் சந்திக்கக் கூடிய பாசறை - குடந்தை பாணா துரை வடக்கு வீதியிலிருந்த போட்டோ கிராபர் சீராமுலு வீடுதான்.

அங்கே மாணவர்கள் கூடி எடுத்த முடிவுதான் திராவிட மாணவர் கழக அமைப்பு என்பதாகும்.

தலைவர்: எஸ்.தவமணிராசன், துணைத் தலைவர்: கருணானந்தம், செயலாளர்: பழனிவேல், பொருளாளர்: சொக்கப்பா.

அண்ணாவும் வருகை தந்து திராவிட மாணவர் கழக தொடக்க விழா நடை பெற்றது (1.12.1943).

இந்தத் துவக்க விழா கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் கல்லூரி விரிவுரை யாளர் (தமிழ்) இரா.சானகி ராமன் எம்.ஏ. எல்.டி., வடாற்காடு திமிரியைச் சேர்ந்தவர். அன்று காலையில் குடந்தை கல்லூரி பொதுப் பேரவைக்கு அண்ணா அழைக்கப் பட்டு கல்லூரி முதல்வர் கே.சி.சாக்கோ தலைமையில் ஆங்கிலத்தில் ஒன்றரை மணி நேரம் பேசினார்.

அண்ணாவை அழைத்தாயிற்று. அய்யா வையும் எப்படியும் கல்லூரிக்குள் கொண்டு வந்தாக வேண்டும். பார்ப்பன ஆதிக்கக் கோட்டையில் எதிர்ப்பு எழாமல் இருக்குமா? எதிர்ப்புக்கனல் சூடேற சூடேற கழக மாணவர்களும் களத்தில் குதித்தனர்.

தந்தை பெரியார் அழைக்கப்பட்டு, ஆள் உயர மாலை அணிவித்து விருந்தளித்து உபசரிக்கப்பட்டது. மாணவர்கள் மத்தியில் கருத்துரை வழங்கக் கேட்டு கொள்ளப் பட்டபோது - தந்தை பெரியார் தெரிவித்த கருத்து - அவர் பெரியார் - பெரியாருள் பெரியார்! என்பதை வெள்ளிக் கீற்றெனத் தெரிவித்தது.

நான் பேசுவதில்லை என்று கல்லூரி முதல்வருக்குத் தெரிவித்து இந்த விருந்தில் நான் கலந்து கொண்டிருப்பதால் நான் பேசு வது சரியல்ல - வெளியில் கூட்டம் போடுங்கள் - நான் வந்து பேசுகிறேன் என்று கூறித் தந்தை பெரியார் விடைபெற்ற செய்தியை என்னென்பது!

அதன் பின்னர் அதே கல்லூரியில் இலக்கிய மன்றத்தில் முதல்வர் வி.சி.சாக்கோ தலைமையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தந்தை பெரியார் 2 மணி நேரம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட மாணவர் கழகம் தோன்றி விட்டது. கல்லூரிக்குள் உரிமைச் சங்க நாதம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. இதில் மூன்று நிகழ்ச்சிகள் முத்தாய்ப்பா னவை.

குடந்தைக் கல்லூரியில் உ.வே. சாமிநாத அய்யர் நினைவுத் தங்கப்பதக்கப் பேச்சுப் போட்டி பல்வேறு கல்லூரிகளுக் கிடையே ஆண்டுதோறும் நிகழும். கல்லூ ரியில் திராவிட மாணவர் பாசறையிலே பல சொற்பொழிவாளர்கள் தயாராகி விட்டனர். அண்ணாவின் அடுக்கு மொழியும், அழகு தமிழும் மாணவர்கட்குத் தாரக மந்திரம்.

ஆனால் கல்லூரி யூனியன் அய்யங் காரின் ஆதிக்கத்தில் இருந்ததால், பேச்சுப் போட்டியிலேயே கலந்து கொள்ளாத ஒரு மாணவரை அனுப்பும் முடிவை ரகசியமா கவே வைத்திருந்து கடைசியில் அறிவித்து விட்டனர்.

அவ்வளவுதான்...! ஆரிய ஆசிரியரின் அநீதியைக் கண்டு ஆர்ப்பரித்தார் கரு ணானந்தம், விடுவாரா தவமணி?

மாணவர்களைத் திரட்டிக் கிளர்ச்சி செய்ய நேரமில்லை. என்றாலும் கருணா னந்தமும், தவமணியும் இரவோடு இரவா கத் தமிழாசிரியர் திரு.சானகிராமன் இல் லத்திற்குச் சென்று அநீதியைக் கண்டிக்க அவர் மூலமாக முதல்வரிடம் வற்புறுத் தினர்.

நேரமில்லாமல் போனதால் முதல் வரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆரியம் திராவிடத்தின் மேல் தன் ஆதிக்க வலுவைக் காட்டிவிட்டது. திராவிட இனத்திற்குத் தீங்கிழைக்கப்பட்டு விட்டது.

அன்று மாலையிலேயே குடந்தை திரா விடர் கழகக் கட்டிடத்தில் திராவிட மாண வர்களின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினர். ஆரியத்தின் அக்கிரமத்தை பலமாகக் கண்டித்தனர்.

கண்டனத் தீர்மானத்தைக் கருணானந் தம் படிக்கும் போதும், பேசும் போதும் அவர் அடைந்திருந்த கோபத்தின் உச்ச நிலை அவரது நெருங்கிய தோழர்களுக்குக்கூட வியப்பையூட்டியது.

அமைதியாயிருப்பவர் ஆவேசக் காரரானார்!

பொறுமையாயிருப்பவர் புலியாகக் காட்சி யளித்தார்!!

நிதானமாகப் பேசுபவர் நெருப்பைக் கக்கினார்!!!

அந்தக் கூட்டத்தில் தான், அதே பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக வந்திருந்த கே.ஏ. சோமசுந்தரம், மதியழ கனாக - மாறிக் கண்டனக் கூட்டத்திலும் கலந்து கொண்டு, திராவிட மாணவர்களின் விழிப்புணர்ச்சியை வியந்து பேசிப் பாராட்டினார்.

* * *

கல்லூரித் தமிழ் மன்ற நிதிக்காகக் கவிஞர் கருணானந்தத்தின் மூளையில் ஒரு திட்டம் உதயமாகியது. சற்று துணிச்சலான திட்டம் தான். ஒரு இசை விழா ஏற்பாடு செய்து நிதி திரட்ட, நன்கொடை ரசீதுகளும் அச்சடித்துப் பணியில் இறங்கி விட்டார்.

பொறுக்குமா பூசுரர்களுக்கு...? நிர் வாகத்தை நெருக்கினர்!

பயந்தார் முதல்வர்; பணிந்தார் முதல்வர்!

எப்படி என் அனுமதியின்றிப் பணம் வசூல் செய்யலாம்? என்று விளக்கம் கேட் டுத் தமிழாசிரியருக்கு தாக்கீது கொடுத்து விட்டார்.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ் சுமா...? அரைக்க அரைக்கச் சந்தனம் மணம் கமழும் அடிக்க அடிக்கப் பந்து உயர எழும்பும் அடக்க அடக்க ஆர்வம் பீறிட்டுக் கிளம்பும்

அந்த வகையில், இந்தப் பிரச்சினையில் உண்டு இல்லை என்று பார்த்து விடலாம் என்று தவமணியும், கருணானந்தமும் முடிவு செய்தனர். நடப்பது நடக்கட்டும் என்று தமிழாசிரியரும் தைரியமாகப் பச்சைக் கொடி காட்டி விட்டார்.

பணம் வசூல் செய்யப் பட்டுவிட்டது. இசை விழா விற்கு நாள் நெருங்கி விட்டது.

நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்தால் தானே விழா நடைபெற இயலும்?

மண்டபம் நிர்வாகத்தின் கையில்...!

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் ஏற்ற முடிவெடுக்கும் இயல்புடையவர் கருணானந்தம்.

துணிச்சலான முடிவு திராவிட மாணவர் கட்கு! சிக்கலான நிலை நிர்வாகத்தினருக்கு! விழா நாளும் வந்தது! அன்று கல்லூரியில் என்ன நடக்கப் போகிறதோ என்ற ஒரே பரபரப்பு ...!

இதை ஒரு கவுரவப் போராட்டமாக ஆரிய மாணவர்களும், ஆசிரியர்களும் கருதி அதற்கு ஆயத்தமாயினர்.

மாலையில் விழா....!

மண்டபம் பூட்டப்பட்டுக் கிடந்தது. அவ்வளவு தான்...!

தமிழ் - தவமணியின் போர்க்குரல்.

வாழ்க - திராவிட மாணவர்களின் இடிமுழக்கம்!

அய்யங்கார் - தவமணி ஒழிக - திராவிட மாணவர்கள்!

முதல்வர் சில ஆசிரியர்களுடன் தன் அறையிலிருந்து ஜன்னல் மூலம் ஆர்ப் பாட்டக் காட்சியைக் கண்டு அமைதியில் லாமல் அல்லாடிக் கொண்டிருந்தார். வெளி யிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேடிக்கை யான காட்சி.

திறந்த வெளி சிறையில் அய்யங்கார்...! கம்பியிட்ட சிறையில் முதல்வர்!!

இந்த அமளி எதையுமே கண்டு கொள்ளாதவர் போல் நிம்மதியாக ஆசிரியர்களின் ஓய்வறையில் தமிழாசிரியர்!

அய்யங்காருக்கு ஏற்பட்ட அவல நிலையைக் கண்டதும், அவருக்கு உதவக் கல்லூரிக் கரையில் ஆயத்தமாக நின்று கொண்டிருந்த ஆரிய மாணவர்கள் திபு திபு'வெனப் பாலத்தின் மேல் ஏறி இக்கரைக்கு விரைந்தனர்.

அவ்வளவுதான்...!

நிலைமை கட்டு மீறிப் போய் விட்டதைக் கண்ட முதல்வர், மேலும் மோசமாகாமல் தடுக்க விரைந்தோடி வெளியே வந்தார். இக்கரையிலிருந்த மாணவர்களைக் கண்டு பேசினார்.

தமிழாசிரியரை வரச் சொல் - ஏகோ பித்த இடி முழக்கம். ஆள் அனுப்பினார் அவரை அழைத்து வர.

புண்பட்டிருந்த தமிழாசிரியர் புன்னகை யுடன் புலி போன்று வந்து பொலிவாக நின்றார், போர் வீரர்கள் முன்பு. வரவேற் பொலி - வாழ்த்தொலி; வானைத் தொட்டது! பின் என்ன...?

திராவிட மாணவர்களின் திடத்தையும், திட்டத்தையும், பலத்தையும், படையையும் கண்ட முதல்வர், தமிழாசிரியரிடம் கேட்டி ருந்த விளக்க தாக்கீதை வாபஸ் பெற்றார்; விழாவிற்கு அனுமதியளித்தார்.

மண்டபத் திறவு கோல் மாணவர் கைக்கு வந்தது. திருவெண்காடு இசை மேதை டி.பி.சுப்பிரமணியம் அவர்கள் மேடையில் அமர்ந்து நாயனம் வாசித்தார். தம்புராசுதி, பிடில், மிருதங்கம் பக்க வாத்தியங்களுடன் புதுமை இசை விழா நடந்தது; வெற்றிகரமாக இனிது நடந்தது. சிறப்பு என்னவென்றால், கல்லூரி முதல்வரே தலைமை தாங்கி நடத்தித் தந்தார்.

குடந்தை அரசினர் கல்லூரியில் தகுதிமிக்க தமிழ்ப் பேராசிரியர்கள் இருந்தும் சமஸ்கிருதப் பேராசிரியர்களே கொடி கட்டிப் பறந்தனர். பெயருக்குத்தான் கல்லூரியில் தமிழ் மன்றம் - சமஸ்கிருதத் தைச் சார்ந்தே அது செயல்படும் நிலை.

இந்த நிலையில் மாணவர் தவமணி ராசனும், கருணானந்தமும் சேர்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர். அ.சிதம்பரநாதனுக்கு அழைப்பு விடுத்தனர். முறையாக மன்ற பொறுப்பாளர்களிடம் அனுமதி பெற வில்லை என்று சமஸ்கிருதவாதிகள் தடுத் தனர். மாணவர்கள் திரட்டப்பட்டனர். ஆரியர் சூழ்ச்சி அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட்டது, விளைவு அ.சிதம்பரநாதனே வந்தார். அரும் உரையும் தந்தார்.

* * *

திராவிட மாணவர் கழக மாநில மாநாடு குடந்தை வாணி விலாச சபாவில் 1944 பிப்ரவரியில் 19, 20 நாள்களில் கான்பகதூர் கலிபுல்லா, பேராசிரியர் முத்தையா ஆகியோர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. திறப்பாளர்: தமிழ்ப் பொழில் ஆசிரியர் கோ.சி.பெரியசாமி புலவர், வர வேற்புரை: எஸ்.தவமணி ராசன், அறிஞர் அண்ணா, புதுக்கோட்டை சமஸ்தான திவான் தாருல் இஸ்லாம், ஆசிரியர் தாவுத்சா, இரா.நெடுஞ்செழியன், ஏ.பி. ஜனார்த்தனம், கே.ஏ.மதியழகன், க.அன்ப ழகன், இளந்தாடி இரா.செழியன், இளம் வழுதி, பூ.கணேசன், மா.நன்னன், கி.தியா கராசன் முதலியோர் மாநாட்டில் பங்கேற்று சங்கநாதம் செய்தனர். தந்தை பெரியார் மாநாட்டுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியை மாணவர் க.அன்பழகன் படித்தார்.

அதே காலகட்டத்தில் திருவாரூரில் மாணவர் மு.கருணாநிதி தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழாவை நடத்தினார். தலைமை: ஈ.வெ.கி. சம்பத். பங்கேற்றோர்: அண்ணாமலைப் பல் கலைக்கழக மாணவர் இரா.நெடுஞ்செழி யன், கே.ஏ.மதியழகன், கடலூர் மாணவர் கி.வீரமணி ஆகியோர் ஆவர்.

அந்தக் காலகட்டத்தில் இணைந்து பணியாற்றிய மாணவர்கள்: கோ.இலட்சு மணன் (பிற்காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக வந்தவர்), நெடும் பலம் சாமியப்ப முதலியார் அவர்களின் மைத்துனர் மகன் சொக்கப்பா, அமீர் அலி, இராமதாஸ், திருஞானம், செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி - தற்போதைய தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் வழக்குரைஞர் அமர்சிங் மாமனார், மாநில மகளிரணி செயலாளர் கலைச் செல்வியின் தந்தையார்), செல்வராஜ், தம்புராஜ், ஊக்கச் சக்தியாக இருந்தவர் தமிழாசிரியர் இரா.சானகிராமன்.

குடந்தையில் அன்றைய இயக்கப் பிரமுகர்கள் - கே.கே.நீலமேகம், வி.சின்னத் தம்பி, பி.ஆர்.பொன்னுசாமி, வழக்குரைஞர் முத்து தனபால், ஆர்.சி.வெங்கட்ராமன், எஸ்.கே.சாமி முதலியோர் ஆவர். மாண வர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தனர்.

இந்த மாணவர் பட்டாளம்தான் பிறகு இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர். ஈரோட்டில் மாணவர் பயிற்சி முகாம் நடத்திட வரும்படி ரூ.10 பணவிடை (எம்.ஓ) அனுப்பி தவமணி ராசனுக்குத் தந்தை பெரியார் அழைப்பு விடுத்தார் என்றால் சாதாரணமா?

அந்த முதல் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்ற மாணவர்கள் 1944இல் முதன் முறையாக தெ.ஆ.மாவட்டத்துக்கு பிரச்சாரத்திற்கு அனுப்பப்பட்டனர். வழி நடத்தியவர் மா.பீட்டர் பி.ஏ. பிரச்சாரத்தில் பங்கு கொண்டவர்கள் கருணானந்தம், செங்குட்டு வன், பூண்டி கோபால்சாமி, இராமதாஸ், திருவேங்கடம், 11 வயது சிறுவன் வீரமணி - எடுத்த எடுப்பில் அந்த மாணவன் இயக்கப் பாடலைப் பாடுவார். பிறகு மேசை மீது ஏற்றப்பட்டுப் பேசுவார். கம்ப ராமாயணத் தில் காதல் கொண்ட என் தமிழா, வம் பளந்து பேசுவது ஏன்? வாய்த்த நிலை அறிந்ததுண்டோ? என்பது தான் அந்தப் பாட்டு - சிறுவன் வீரமணியை பூண்டி கோபால்சாமி உப்பு மூட்டை தூக்குவாராம்.

திராவிட இயக்க வரலாற்றில் வரலாறு படைத்த அதே குடந்தையில் வரும் ஜூலை 8ஆம் தேதி ஞாயிறன்று திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா (75ஆம் ஆண்டு) நடைபெறுவது - கழக வரலாற்றி லும் தமிழ்நாட்டு வரலாற்றிலும் காலங்கடந் தும் ஒளி வீசப்போகும் ஒப்பரும் மாநாடு.

ஆரியம் சலங்கை கட்டி ஆடும் ஒரு தருணத்தில், வருணாசிரமம் வாகை சூடலாம் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இந்தக் காலகட்டத்தில், சமூகநீதிக்கு சவால்கள் கிளம்பியிருக்கும் இந்தப் பரு வத்தில், இந்துத்துவா அறை கூவலிடும் பொழுதில்தான் இம்மாநாடு!

திராவிட மாணவர் கழகத்தின் வரலாறு மகத்தானது. குடந்தைதான் அதன் தாய்வீடு. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி 1944 ஆகஸ்டு 27இல் சேலத்தில் திராவிடர் கழகமாக முகிழ்த்தது என்றால் அதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே குடந்தைத் திருநகரில் (1.12.1943) திராவிட மாணவர் கழகம் உதித்தது. தாய்க்கு மூத்த தனயன் என்று சொல்லலாமோ!

(கோவில்பட்டி திராவிடர் கழகத்தின் 18ஆம் ஆண்டு விழாவில், 19.6.1927 அன்று வ.உ.சி.யுடன் தந்தை பெரியார் பங்கேற்றுப் பேசினார் (குடிஅரசு, 26.6.1927) என்ற தகவல் இருக்கிறதே).

பொங்கிற்று திராவிடர் மாணவர் பட்டாளம் என்னும் புது வெள்ளம் என்ற வரலாறு படைக்க வாரீர், வாரீர் என்று அழைக்கிறோம்.

கடந்த ஒரு மாதமாக குடந்தை மாந கரமே அல்லோலப்படுகிறது. தமிழ்நாட்டின் சுவர்கள் எல்லாம் குடந்தை மாநாட்டைக் குறித்தே பேசிக் கொண்டு இருக்கிறது.

ஆயிரக்கணக்கான மாணவச் சிப்பாய் களும், இளைஞர்களும் அணிவகுக்க இருக்கிறார்கள்.

இப்படைத் தோற்கின் எப்படை வெல் லும் என்று சங்கநாதம் செய்வோம் வாரீர்!

ஒழுங்குக்கும், நேர்த்திக்கும், கட்டுப் பாட்டுக்கும் கட்டியம் கூறும் கருஞ்சட்டைச் சேனையே வா, வா!

நிகழ்ச்சிகள் கொத்துக் கொத்தாக ஜொலிக்கின்றன. மாணவ இளைஞர் உலகிற்கு வழிகாட்டும் மாநாடு. அரிய தீர்மானங்கள் அணிவகுக்க உள்ளன. தமிழர் தலைவர் தருவார் புதிய திட்டங்களையும், அறிவிப்புகளையும்!

ஜூலை 8 என்பது நமது நிலையம் குடந்தையே! குடந்தையே!! குடந்தையே!!!

(ஆதாரங்கள்: எஸ்.தவமணிராசன்,

கவிஞர் கருணானந்தம் மணிவிழா

மலர்கள்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner