எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* மின்சாரம்

தோழர்களே, தோழர்களே!

வரும் சனியன்று (8.9.2018) அனைவரும் மன்னார் குடியிலே சந்திக்க இருக்கின்றோம்.

இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்று வரும் 8ஆம் தேதி மன்னையிலே நடக்கவிருக்கிறது.

திராவிட இயக்க வரலாற்றில் மன்னார்குடிக்கு எத்தனை எத்தனையோ புகழ் மணக்கும் அத்தியாயங்கள் உண்டு. எதைச் செய்தாலும் எழுச்சியோடு செய்து பழக்கப் பட்டவர்களாயிற்றே -  அந்த வகையில் சனியன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாகவே இருக்கும் என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு விடலாம்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் இயக்கப் போராட்டத்தின் வெற்றி விழா மாநாடு தான் அது.

அப்படி என்ன மன்னார்குடிக்கு சிறப்பு? தஞ்சை மாவட்ட மன்னார்குடி கழகக் கட்டடத்தில் 20.10.1969 அன்று தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் தலைமையில் கூடியது.

அந்தக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் மன்னார்குடி இராஜகோபால்சாமி கோயிலில் சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான கோயில் கர்ப்பக் கிரக நுழைவுக் கிளர்ச்சியை நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டது. மறைந்தும் நம் நெஞ்சில் மறையாத சுயமரியாதைச் சுடரொளி மன்னை ஆர்.பி. சாரங்கன் கிளர்ச்சிக் கமிட்டியின் தலைவர்.

இன்றைக்கு 49 ஆண்டுகளுக்கு முன் மன்னார்குடியில் எடுக்கப்பட்ட அந்தத் தீர்மானத்திற்கு இப்பொழுது வெற்றி கிடைத்திருக்கிறது என்றால் அதன் மணத்தைச் சுவைக்க வேண்டிய இடம் மன்னார்குடியாகத்தானே இருக்க முடியும்.

எப்பொழுதோ இந்த வெற்றி நமக்குக் கிடைத்திருக்க வேண்டும். நாம் தமிழ் நாட்டில் போட்ட விதை கேரளாவில் முன்னதாகவே முளைத்து விட்டது. ஆறு தாழ்த்தப்பட்டவர் உட்பட 36 பார்ப்பனர் அல்லாதார் கோயில் அர்ச்சகர்களாக அங்கு நியமிக்கப்பட்டனர்.

இந்தியா முழுமைக்கும் ஒரே சட்டம்தானே - கேரளாவுக்குப் பொருந்தக் கூடியது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாதா?

2015இல்  உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தும் மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் தூக்கம் கலைந்தது. இவ்வளவுக்கும் தீர்ப்பை நினைவூட்டி முதல் அமைச்சருக்கு அதிகாரப் பூர்வமாக கடிதமே எழுதினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள். நேரிலும் வற்புறுத்தப்பட்டது அசைவதாகத் தெரியவில்லை.

அதற்குப் பிறகு மாநாட்டை நடத்தினோம். மறியல் போராட்டத்தை நடத்தி 5000 கருஞ்சட்டையினர் கைதும் செய்யப்பட்டதுண்டு.

1937ஆம் ஆண்டு முதலே தந்தை பெரியார் குரல் கொடுத்து வந்திருக்கிறார். 1958இல் திருச்சியில் கூடிய ஜாதி ஒழிப்பு மாநாட்டில் கூடத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதுண்டு.

எந்த உரிமையையும் நாம் இலவசமாகப் பெற்ற தில்லையே -  அதற்குரிய கஷ்ட நஷ்டம் என்னும் விலை கொடுத்துதானே வந்திருக்கிறது கழகம்.

இப்பொழுது மதுரையில் அர்ச்சகராகத் தேர்வு செய்யப்பட்ட பார்ப்பனர் அல்லாத தோழரான மாரிசாமி கூட  தகுதி - திறமையின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓர் இடத்திற்கு ஆறு பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அதில் நால்வர் பார்ப்பனர், இருவர் பார்ப்பனர் அல்லாதார்.

இந்த அறுவரில் ஆகமங்களைத் தெரிந்து வைத்திருந்த திலும், மந்திரங்களை சரியாக உச்சரிப்பதிலும் முதல் இடம் பிடித்தவர் பார்ப்பனர் அல்லாத தோழரான மாரிசாமி.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

108 வைணவக் கோயில்களுள் உள்ள பட்டர்களுள் வெறும் 30 கோயிலில் உள்ளவர்களுக்குத்தான் ஆகமம், மந்திரங்கள் தெரிந்துள்ளன என்று நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 116 அர்ச்சகர்கள் இருக்கின்றனர் என்றால் 28 பேர் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள். சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களுள் நான்கு அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஆகமம் தெரிந்துள்ளது.

இவ்வளவுக்கும் நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையிலான அந்தக் குழுவில் சிவாச்சாரியார்களும், பட்டர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு காலத்திற்குத் தான் ஆதிக்கப்புரியினர் ஆட்டம் போட முடியும்?

தந்தை பெரியார் தொடங்கியதில் எது தோல்வி கண்டிருக்கிறது? தந்தை பெரியார் அவர்களின் அந்த இறுதிப் போராட்டம் - அவர்கள் இன்று உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் கொள்கை வென்று விட்டதே - அய்யாவின் கட்டளையை ஏற்று சட்டமியற்றிய மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் அவர்கள் மறைவதற்கு முன்பாகவே தோழர் மாரிசாமி மதுரைக் கோயில் ஒன்றில் அர்ச்சகராகி விட்டார்.

எஞ்சியிருக்கும் 200க்கும் மேற்பட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்றோர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

அதற்கான அழுத்தத்தையும் மன்னார்குடி மாநாடு கொடுக்கும். பயிற்சி பெற்று பணி நியமனத்துக்கு முன்னதாகவே மரணத்தைத் தழுவிக் கொண்டோர் தம் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு அர்ச்சகர் உரிமை என்ற நமது அடுத்த கட்ட போர்க் குரலை தமிழர் தலைவர் கொடுத்து விட்டார். இதுகூட புதிதல்ல; 1981 மே 9 இல் கரூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் அது.

மகாராட்டிர மாநிலத்தில் பாந்தார்ப்பூர் நகரில் உள்ள 900 ஆண்டு பழமை வாய்ந்த விட்டல் ருக்மணி அம்மன் கோயிலில் உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி 16 பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு விட்டனரே!

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஒரு முக்கிய மைல் கல்லைக் கடந்து விட்டோம் என்று சொல்லும் பொழுது ஒரு கம்பீரம் நம்மை அறியாமலே ஏற்படவில்லையா! நமது நடையில் ஒரு புது மிடுக்கு இருக்கவில்லையா!

அந்த உணர்வோடு மன்னை நோக்கி வாரீர் வாரீர் என்று அழைக்கிறோம். தமிழர் தலைவரோடு, நமது தோழர் முத்தரசன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்) அவர்கள்  முழக்கமிட இருக்கிறார்கள் - மிடுக்கோடு வாரீர் தோழர்களே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner