எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் நெகிழ்ச்சி

மின்சாரம்

தஞ்சை கழகப் பொதுக் குழுவில் உரையாற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியுறச் செய்தார்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து அவர் உரையாற்றுகையில், என்னைப் பெறாது பெற்றவர் அன்னை மணியம்மையார் என்று தழுதழுத்த குரலில் அவர் குறிப்பிட்டபோது பொதுக் குழுக் கூட்டத்தில் கூடியிருந்த அனைவரின் கண்களும் கலங்கின.

அன்னை மணியம்மையார் சாதாரண ஒரு குடும்பத்தில்  - கழகத் தொண்டர் குடும்பத்தில் வேலூரில் பிறந்தவர். தந்தை பெரியார் அருகில் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்று அவரின் தந்தையார் கனகசபை அவர்களால் தந்தை பெரியாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்.

தந்தைபெரியாருக்குத் தொண்டாற்றுவதே தனது ஒரே பணி என்பதற்காக திருமணமே வேண்டாம் என்று இளமையை - தனி வாழ்வைத் துறந்தவர்!

இந்நினைவைப்பற்றி கழகத் தலைவர் குறிப்பிடும் போது, தனிப்பட்ட முறையில் ஒரு பெண் ஏச்சுப் பேச்சுகள், ஏகடி யங்கள், தூற்றல்கள், வசைமொழிகள் இவற்றை அன்னை மணியம்மையார் சந்தித்த அளவுக்கு வேறு எந்த ஒரு பெண்மணியும் சந்தித்து  இருக்க முடியாது என்று மிகத் துல்லியமாகவே குறிப்பிட்டார்.

யாரும் எதையும் தியாகம் செய்யலாம். இளமையை ஒருவர் தியாகம் செய்வது என்பது சாதாரணமானதல்ல என்றும் குறிப்பிட்டார்.

அன்னையாரை துற்றியவர்களே பிற்காலத்தில் அன்னை மணியம்மையாரின் தொண்டறத்தைப் பற்றியும், தந்தை பெரியார் அவர்களைப் பேணி காத்து, சமுதாயத்துக்கு அய்யாவின் தொண்டு தொடருவதற்கான அவரின் பங்களிப்புக் குறித்தும் ஒப்புக் கொண்டு பாராட்டியதையும் கழகத் தலைவர் எடுத்துரைத்தார். இது அன்னையாருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றும் கழகத் தலைவர் குறிப்பிட்ட போது மீண்டும் மண்டபம் அதிர கரவொலி!

அய்யா அவர்களிடம் அம்மா எப்படி தயாரானார் என்பதற்கு ஒரு முக்கிய நிகழ்வை நிரல்படுத்தினார் ஆசிரியர்.

தந்தை பெரியார் அவர்கள் தம் சொந்த சொத்துக்கள் அனைத்தையும் இயக்கத்திற்கே ஒப்படைத்தார் - ஓர் அறக்கட்டளையாக நிறுவி தக்கவர்களை  அதில் நியமித்தார். அன்னையார் தலைமை ஏற்று அய்யாவின் நோக்கங்கள் நிறைவேறும் வகையில் அறக்கட்டளையையும், இயக் கத்தையும் கண்டோர் வியக்க, எதிரிகள் அதிர்ச்சியுற நடத்திக் காட்டினார்.

தந்தை பெரியார் அவர்கள்  இன்னொரு ஏற்பாட்டையும் செய்திருந்தார். குறிப்பிட்ட சொத்துகளை அன்னை மணியம் மையார் பெயரில் ஏற்பாடு செய்திருந்தார். அந்தத் தகவல் அம்மா அவர்களுக்கே கூடத் தெரியாது. (தெரிந் திருந்தால், அதனை அவர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்பதை அன்னையாரை அறிந்தவர்கள் அறிவார்களே!)

நமது ஆசிரியர் அவர்களுக்கு அந்த ஏற்பாடு தெரியும் என்றாலும், அய்யா நினைவுக்கு - நிலைக்கு மாறாக அதனை வெளிப்படுத்தக் கூடாதல்லவா - இதுதான் கழகத்திற்கே உரித்தான தனித் தன்மையான அறிவு நாணயத்தின் தலை சிறந்த ஒழுகலாறாகும். அந்தப் பண்பாட்டின் நுட்பமாக ஆசிரியர் அவர்கள் அன்னையாரிடமும்  கூறவில்லை. பின்னர் அது தெரிந்தபோது அம்மா அவர்கள் ஆசிரியர் அவர்களை .உரிமையாகக் கடிந்து கொண்டதும் உண்டு (கழகத் தோழர்கள் கற்க வேண்டிய - கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியமான கருவூலமான உயர் பண்பாடு இது!

அய்யா அவர்கள் தன் பெயரில் ஏற்பாடு செய்து வைத் திருந்த அந்த சொத்துகளை என்ன செய்தார் அன்னையார்? உற்றார், உறவினர்களுக்கு அதிலிருந்து கடுகளவுப் பொருளையும்  கொடுத்தாரா? அங்கே தான் நெருப்பில் அழுக்குச் சேராது என்ற இலக்கணத்தின் காவியமாக ஒளி வீசினார் - வீசுகிறார்  - வீசுவார்.

அன்னையார் அவர்கள் சென்னைப் பொது மருத்துவ மனையில் இருந்தபோது ஒரு முடிவுக்கு வந்தார். தன் உடல் நிலைபற்றி அவர் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். தான் கண் மூடுவதற்கு முன் தனக்கு அய்யா ஏற்பாடு செய்து வைத்திருந்த அந்தச் சொத்துக்களை ஓர் அறக்கட்டளையாக்கி, தந்தை பெரியார் அறக்கட்டளை போலவே கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்று சீரிய நோக்கில் ஒரு ஏற்பாடு செய்தார். அதற்கான  ஆவணங்களை யும் மருத்துவமனையில் இருந்து கொண்டே தக்கார் மூலம் ஏற்பாடு செய்து  விட்ட நிலையில், நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களை  அழைத்து நடந்தவற்றைச் சொன் னார் அன்னையார்.

"உன்மீது நம்பிக்கையை வைத்து, நீ அதைச் சரியாகவே செய்வாய் என்ற உறுதியான எண்ணத்தின் பேரில் உன்னை முக்கிய பொறுப்பாக்கி இந்த அறக்கட்டளையை உருவாக் கியுள்ளேன் - உறுப்பினர்களையும் போட்டுள்ளேன்" என்று அன்னையார் சொன்ன பொழுது நமது ஆசிரியர் அவர்கள் அதிர்ந்தே போனார் - அதைவிட நெகிழ்ந்தே போனார் என்றே சொல்ல வேண்டும் அதற்கு இரண்டு காரணம். ஒன்று அன்னை மணியம்மையார் அவர்களிடத்திலே குடிகொண்டிருந்த அந்த உன்னதத் தொண்டற உள்ளம். இரண்டாவது தன்மீது அம்மா அவர்கள் வைத்திருந்த அந்த மிகப் பெரிய நம்பிக்கை.

அன்னையார் அவர்கள் உருவாக்கிய அந்த அறக்கட்டளைக்குச் சாட்சியாக கையொப்பமிட்ட பெருமக்கள் யார் யார் தெரியுமா? அதனையும் நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் வெளிப்படுத் தினார் நமது கழகத் தலைவர். ஒருவர், கல்வி நெறிக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலு, இரண்டாம வர், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளரும், பகுத்தறிவாளர் கழகத்தின் முதல் மாநிலத் தலைவருமான சி.டி.நடராசன், மூன்றா வது, தந்தை பெரியார் அவர்களின் தனி மருத்துவராக இருந்த சென்னைப் பொது மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் கே.இராமச்சந்திரா!

எத்தகைய ஏற்பாடு - எத்தகையோரின் சாட்சியங்கள் - எத்த கைய ஒருவரைத் தேர்வு செய்து தன் எண்ணத்தை நிறைவேற்று வதற்கான முடிவு - இவை அன்னை மணியம்மையார் அவர்களின் தலைமைத்துவத் தகைமையின் தகத்தகாய ஒளியல்லவா!

அன்னை மணியம்மையாரின் இத்தகு ஏற்பாடுகளையும், அவர்தம் தொண்டுள்ளத்தின் சீலத்தையும் நிரல்பட எடுத்துரைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

சுருக்கமாகச் சொன்னால் அன்னை மணியம்மையார் கண்களுக்குத் தெரியாத ஒரு கட்டடத்தின் அஸ்திவாரம் என்று மிகச் சரியாகவே கணித்துச் சொன்னார் ஆசிரியர்.

தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை பொறுப் பேற்று நடத்தும் வாய்ப்பைப் பெற்ற நான் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவையும் நடத்தக்கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது என்று சொன்னபொழுது கலகலப்பான வரவேற்பு!

(ஆசிரியர் நூற்றாண்டு விழாவையும் நாம் நடத்துவோம் - அவர் முன்னிலையிலேயே என்று பலத்த கரவொலிக்கிடையே கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் குறிப்பிட்டது ஒரு இன்ப அதிர்ச்சியின் தகவலாகும்).

சுருக்கமாகச் சொன்னால் 'இயற்கைக் கலவரங்களுக்கிடையே' தஞ்சையில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு செறிவாகவும், சிறப்பான தீர்மானங்களை உள்ளடக்கியதாகவும், பல புதிய தகவல்களைத் தோழர்கள் தெரிந்து கொள்ளும் வகுப்பு அறையாகவும், எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒளி விளக்காகவும், கழகத் தோழர்கள் மத்தியிலே புத்தெழுச்சி ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது என்று சொன்னால் கடுகளவும்கூட மிகையாகாது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner