எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்து முன்னணி நிறுவனர் திருவாளர் இராம.கோபாலன் அய்யர்வாளின் பேட்டி ஒன்று ஆனந்த விகடன் (3.10.2018, பக்கம் 23-25) வெளிவந்துள்ளது.

முதுமையின் தள்ளாட்டம் ரொம்பவே தெரிகிறது. நல்ல வாலிபத்தில் இருந்தபோது மட்டும் என்ன வாழ்கிறது என்று கேட்டு விடாதீர்கள்.

20.1.2016 நாளிட்ட துக்ளக் இதழிலும் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதற்குரிய முறையில் விடுதலையில் பதிலும் எழுதப்பட்டது (விடுதலை, 13.1.2016, 14.1.2016).

அதோடு பேச்சு மூச்சு இல்லாமல் திரா விடர் கழகத்தின் பக்கமோ, அதன் தலைவர் வீரமணி அவர்களின் பக்கமோ தலை வைத்துப் படுப்பதை மறந்துவிட்டார்.

இப்பொழுது ஆனந்த விகடனில் பேட்டி கொடுக்க முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கதே.

அப்பொழுதுதானே இந்துத்துவாவின் முகலட்சணம் என்னவென்று வெளிச்சத் துக்கு வரும். தங்கள் வசம் தரமான கருத்துகள், விவாதிக்க வேண்டிய விடயங்கள் எந்தளவு இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும் முடியும்.

மத மாற்றத்துக்குக் காரணம் துட்டுதான் என்று இப்பொழுது சொல்லும் திருவாளர் இராம.கோபாலர் - 1982இல் என்ன சொன்னார்?

அந்தப் பேட்டியை படித்த எவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாகவே புரிந்துவிட்டது.

கேட்ட கேள்வியைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மனிதன் தள்ளாடிப் போய்விட்டார் என்பதை அறிய முடிகிறது.

எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டினை எடுத்துக் காட்டினாலே போதுமானது.

கேள்வி: செங்கோட்டையில் நடை பெற்ற கலவரத்துக்குத் திராவிடக் கட்சி கள்தான் காரணம் என்று சொல்கிறீர் களா?

இராம.கோபாலன் பதில்: கண்டிப் பாக. இந்தத் திராவிடக் கட்சியினர் தாம் முஸ்லிம்களைத் தூண்டி விடு கிறார்கள். திராவிடர் கழகத்தினரும், முஸ்லிம்களும் எங்கு அதிகமாக இருக் கிறார்களோ அங்குதான் கலவரம் நடக்கிறது...

கேள்வி: இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏதேனும் ஆதாரம் வைத்திருக்கிறீர் களா?

இராம.கோபலன் பதில்: எல்லா வற்றுக்கும் ஆதாரம் கேட்டுக் கொண் டிருந்தால் நான் என்ன செய்வது? என்னிடம் அப்படி எதுவும் இல்லை. நான் ஏற்கெனவே சுற்றுப்பயணம் சென்று கொண்டிருந்த வகையில் என் னுடைய அனுபவத்தைச் சொல்கி றேன்... அவ்வளவுதான்.

இராம.கோபாலன் அவர்களின் இந்தப் பதிலைப் படிப்பவர்கள் என்ன நினைப் பார்கள்? எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவிழ்த்துக் கொட்டுவதுதான் இவாளின் வேலையா? ஓர் அமைப்புக்குத் தலைவ ராக இருக்கக் கூடியவர் எதையும் ஆதாரத் துடன் பேச வேண்டாமா?

இவர் கையாளும் வழி முறையைப் பார்த்தால், யாரும் யார் மீதும் எந்தத் தவறையும், அக்கப்போரையும் வண்டி வண்டியாக அள்ளிக் கொட்டலாமே.

இவரைச் சொல்லிக் குற்றமென்ன? இவர்களின் மகா பெரியவாளான ஜெகத் குரு சங்கராச்சாரியார் சென்னை தியாக ராயர் நகரில் இரவோடு இரவாக (8.9.1970) திருட்டுத்தனமாகக் கொண்டு போய் வைத்த பிள்ளையாருக்கு வக்காலத்து வாங்கவில்லையா? சுயம்பு தானாக பூமியி லிருந்து வெடித்துக் கிளம்பும் என்று பேட்டிக் கொடுக்கவில்லையா? (26.9.1970)

அது திருட்டுத்தனம்தான் - மோசடிதான் என்று அந்தப் பிள்ளையாரைப் பூமியில் புதைத்த செல்வராஜ் என்ற போலீஸ்காரர் ஒப்புக் கொண்டாரே, அந்த மகா பெரி யவாள் ஜெகத் குரு முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொண்டார்?

உண்மையைச் சொல்லப்போனால் மதக் கலவரத்தை உண்டாக்கத்தானே இந்தப் பிள்ளையார் ஊர்வலம் திட்டமிட்டு உரு வாக்கப்பட்டது. 1893இல் திலகர் என்ற மராட்டிய பார்ப்பனரின் சித்து வேலை தானே இது.

இந்த ஊர்வலத்தில் என்னென்ன கோஷங்கள், பாடல்கள் ஒலிக்கப்படுகின் றன என்பதைத் தெரிந்து கொண்டாலே போதுமே.

இப்பாடல்களில் பக்தி மட்டுமின்றி இந்துக்களையும், இசுலாமியர்களையும் பிளவுபடுத்தும் மதவாதக் கருத்துகளும் இடம் பெற்றன. இதற்குச் சான்றாகப் பின் வரும் பாடலைக் குறிப்பிடலாம்.

இம்மதம் நம் மதம் இந்து மதம்

ஏன் இன்று இதனை மறுதலிக்கிறாய்?

கணங்களின் நாயகன் கணபதியையும்

சிவனையும் வாயுபுத்திரனையும் எங்ஙனம் மறந்தாய்?

வெற்றுச் சின்னங்களை வணங்கி எப்பேறு பெற்றாய்?

என்ன வரம் அல்லா அளித்தார் உனக்கு?

இன்று நீ முகமதியன் ஆகிவிட்டாய்

அந்நிய மதம் தனை அந்நியப்படுத்து

உன் மதத்தை மறந்திடில் நின் வீழ்ச்சி நிச்சயம்

சின்னங்களை மதியாதே!

நம் அன்னை கோமாதாவை மறந் திடாதே!

அழைத்திடுவீர் அனைவரையும்!

அருமையாகக் காத்திடுவீர் நம் மதத்தை!

தூக்கி எறிவீர் பஞ்சாசையும் நூல் களையும்!

(சாவித்திரி கண்ணன் 1996, மேயர் தேர்தலில் துக்ளக், - 21.1.1996)

(பஞ்சாஸ்-அய்ந்து விரல்களுடன் கூடிய உலோகக் கை)

சென்னையை எடுத்துக் கொண்டால் கூட பிள்ளையார் ஊர்வலம் காவல்துறை அனுமதித்த பாதையிலிருந்து விலகி - குறிப்பாக திருவல்லிக்கேணி முஸ்லிம்கள் பகுதியில் நுழைவதும் - அதற்கு இதே இராம.கோபாலன் தலைமை தாங்குவதும் - கைதாகி மாலையில் விடுதலை பெறுவதும் வழமையான ஒன்றுதானே.

இப்படிக் கலவரத்துக்குத் தலைமை தாங்குபவரே உண்மையைத் தலைகீழாகப் புரட்டிச் சொல்லுவது என்பது அவர்களின் அகராதியில் தனி அழகும், அத்தியாயமும் தான்.

பத்து பைசா முறுக்கு - பள்ளிவாசலை நொறுக்கு! என்று பாடும் கூட்டமா கட்டுப் பாட்டுக்கு இலக்கணம் வகுத்த திராவிடர் கழகத்தின் மீது பழி தூற்றுவது!

கேள்வி: மனுதர்மம் சொல்லும் சாதிப் பிரிவினையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வில்லையா?

இராமகோபாலன் பதில்: மனுதர்மத் தில் சாதிப்பிரிவினை இருப்பதாக யார் சொன்னார்கள்? அப்படி இருப்பதாகச் சொல்லும் ஒரு புத்தகத்தை வாங்கித் தாருங்களேன்.

- இந்தப் பதிலைப் படிக்கும்பொழுது இந்து மதத்தின் பால பாடம் கூட படிக்காத பாலகனாக இந்த முதியவர் இருக்கிறாரே என்று பரிதாபப்படத்தான் வேண்டும் (தெரிந் திருக்கும் - ஏதோ ஒரு சமாளிப்புத்தான் - ஒரு தப்பித்தல் தான்!)

அப்படி ஒரு நூலை வாங்கிக் கொடுங்கள் என்று செய்தி வந்ததுதான் தாமதம் - திரா விடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு கடிதத்தோடு அசல் மனுதர்ம நூலை அவருக்கு அனுப்பியும் வைத்தார் (28.9.2018). படித்தாரா தெரியவில்லை - படித்திருந்தால் தன்னுடைய அறியாமையை எண்ணி நொந்து போயிருப்பாரே?

மனுதர்மம் என்றாலே ஒரு குலத்துக் கொரு நீதி என்பது பாமரனுக்கும் தெரியும் - ஆனால் இந்தப் பார்ப்பனருக்குத் தெரிய வில்லை என்று நம்மை நம்பச் சொல்கிறார். இதுதான் பாப்பனர்களுக்கே உரித்தான குசும்பு!

அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகரமான கருமாக்களைத் தனித் தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் அத்தி யாயம் 1, சுலோகம் 87).

ஒவ்வொரு வருணத்திலும் ஏராள ஜாதிக் குவியல்கள் உண்டு.

ஜாதியை மட்டுமல்ல - தீண்டாமை யையே க்ஷேமகரமானது என்று சொன்ன வர்தான் இவாளின் ஜெகத் குருவான மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி யாவார்.

இவர்களின் ஆர்.எஸ்.எஸ். குருநாத ரான எம்.எஸ்.கோல்வாக்கர் என்ன சொல் கிறார்?

சிலர் நீண்ட காலமாக ஜாதி அமைப்பு முறையை எதிர்த்துக் கொண்டே வரு கிறார்கள். பழங்காலத்தில் ஜாதி அமைப்பு முறை இருந்தது. நாம் அதன் உச்சியிலே இருந்தோம். ஆனால் இந்த ஜாதி அமைப்பு முறை நமது முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உண்மையிலே இந்த ஜாதி அமைப்பு சமூகத்தில் ஒற்று மையைக் காப்பதற்கே உதவி செய்திருக் கிறது.

இராம.கோபாலர்களின் குருநாதர் ஜாதியைப் பற்றி இப்படி சொன்னது தெரியாதா?

கேள்வி: சாதிய ஏற்றத்தாழ்வுகள் தானே மத மாற்றத்திற்குப் முக்கிய காரணமாக இருக்கிறது?

இராம.கோபாலன் பதில்: மக்கள் மதம் மாறுவதற்கு அது காரணமல்ல, துட்டுக் கொடுப்பதால்தான் மதம் மாறுகிறார்கள்.

கிறிஸ்தவ மத மாற்றத்துக்காகவே அமெரிக்காவிலிருந்து இருபத்து மூன் றாயிரம் கோடி ரூபாய் பாரத நாட்டுக் குள் வந்திருக்கிறது. வெளிப் பார் வைக்கு இது தெரியாது - என்கிறார் இராம.கோபாலய்யர்.

மதம் மாறுவதற்குப் பணம்தான் கார ணமா? இதே இராம.கோபாலன் மதமாற்றத் திற்கான உண்மையான காரணத்தைச் சொல்லியிருக்கிறாரே - ஒருக்கால் மறதி (AMNESIA)யால் தாக்கப்பட்டுள்ளாரோ!

இதோ இராம.கோபாலர்:

நம்முடைய கடந்த கால செயல் களின் மூலம் இப்பொழுது நடை பெறும் மத மாற்றங்களுக்கு வழி வகுத்துவிட்டோம் மதத்துக்குள்ளேயே ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத்தி, நம்மை விட்டுச் செல்லும் அளவுக்குத் தூண்டி விட்டோம்.

இதைச் சொன்னவர் இதே சாட்சாத் இராம.கோபாலய்யர் தான். ஆதாரம் வேண்டுமா? அவாளின் தினமலர் ஏடுதான் (2.2.1982, பக்கம் 6).

கேள்வி: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழில் வழிபாட்டு உரிமை, சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை வரவேற்கிறீர்களா?

இராமகோபாலன் பதில்: கண்டிப் பாக வரவேற்கிறேன் - என்று பதில் கூறியிருக்கிறார்.

அப்படியா? இதுவரை இவற்றுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்ட துண்டா? உண்மையைச் சொல்லப் போனால் இவற்றை எதிர்க்கிறவர்களின் பக்கத்தில் நின்று ஜால்ரா அடித்தவர் கள்தான் இவர்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை திமுக ஆட்சியில் மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் தமிழ்நாடு சட்டப் பேர வையில் ஒருமனதாக சட்டத்தை நிறை வேற்றிக் கொடுத்த போது, அதனை எதிர்த்து 13 பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றத் தில் நின்றார்களே - அப்பொழுது இந்த இராம.கோபாலய்யர்கள் என்ன செய்தார்களாம்?

கேள்வி என்ற வரும்போது, சமாளிக்க வேண்டுமே, அதற்காக எதையாவது சொல்லித் தொலைக்க வேண்டுமா? எதிலும் அறிவு நாணயம் கிடையவே கிடையாது!

உண்மையைச் சொன்னால் - எப் பொழுது கேட்டாலும் அந்த உண்மையின் தடம் மாறாது, நிறமும் மாறாது, பொய்யைச் சொல்ல ஆரம்பித்தால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முரண்பாடுகள் தான் முந்திக் கொண்டுதான் பல்லிளிக்கும்.

ஆனந்த விகடன் பேட்டியின்போது வேறு சில கேள்வி பதில்களும் உண்டு. எந்தக் கேள்விக்கும் உருப்படியாக பதில் சொல்ல கோபாலய்யரிடம் சரக்கு இல்லை.

இன்னும் சொல்லப்போனால் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பிதற்றுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணத்திற்கு இதோ:

கேள்வி: திருமயம் அருகே தடையை மீறி ஊர்வலம் நடத்தியதோடு, நீதிமன் றத்தையும் அவமரியாதையாகப் பேசிய எச்.ராஜாவின் செய்கையை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

இராம.கோபாலன் பதில்: எச்.ராஜா என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அதனால் நான் எப்படி இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியும்?

இது ஒரு பதிலா? உண்மையிலேயே எச்.ராஜா என்ன சொன்னார் என்பது இவருக்குத் தெரியவே தெரியாதா?

பார்ப்பனர்களின் பம்மாத்துகளைப் பார்த்தேளா? கண்டிக்கவில்லை என்பதை விட காப்பாற்ற வேண்டும் என்னும் பதைப்புதான் இதில் கவனிக்கத் தக்கதாகும்.

பார்ப்பனப் பாசம் என்பது இதுதான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner