எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொகுப்பு: மின்சாரம்

கடந்த 30 ஆம் தேதி மாலை திருவாவடுதுறை ராஜரத்தினம் முத்தமிழ் அரங்கத்தில் ஒரு முக்கியமான விழா. உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ச. மோகன் அவர் களுக்குப் "பல்துறை வித்தகர்" விருது வழங்கும் விழா.

மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமிராஜூ தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதினை வழங்கிச் சிறப்பித்தார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் ஆற்றிய உரையைக் குறிப்பிட்டாக வேண்டும்.

"நீதியரசர் அவர்கள் சட்டக்கல்லூரியில் எங்களுக் கெல்லாம் பேராசிரியர். அவர் தி.க., நாங்கள் எல்லாம் திமுக. இவர் வகுப்புக்கு மட்டும் தவறாமல் சென்றிடு வோம் - எதிலும் ஸ்டிரிக்ட்.

இந்த விழாவில் ஒன்றைப் பதிவு செய்ய விரும்பு கிறேன். அதை ஒரு கடமையாகவும் கருதுகிறேன். இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்று இருக்கிறார். பதவிப் பக்கம் போகாமல், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்புவதே - அதற்காகப் போராடுவதே தன் உயிர் மூச்சு என்று  கொண்டு அயராது பாடுபட்டு வருகிறார்.

இன்று காலைகூட முக்கியமான நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு இருந்தபோது சொல்லிக் கொண்டு இருந்தேன். நமது திமுக என்பது வெறும் ஒரு கட்சியல்ல - இது ஓர் இயக்கம் - மூவ்மென்ட்! திராவிட இயக்கக் கொள்கை களை, தந்தை பெரியார் சொன்ன தத்துவத்தை உள்ளடக்கமாகக் கொண்டது. மூடநம்பிக்கைகளாலும் பண்பாட்டுப் படையெடுப்பாலும் பாழ்பட்டுப் போன இந்த சமுதாயத்தை  மாற்றியமைப்பதற்கான மறுமலர்ச்சிக் கொள்கைகளை  - சித்தாந்தத்தைத் தாங்கும் இயக்கம் நம்முடையது.

நமது அடிப்படை இதுதான். நாம் அரசியலுக்கு வந்திருக்கலாம்; பதவிகளில் அமர்ந்திருக்கலாம் - இது தான் நமது கொள்கை, கோட்பாடு என்று நினைத்துவிடக் கூடாது. ஆளும் கட்சியாக திமுக வர முடிந்தது என்றால் தந்தை பெரியார் பலமாக உருவாக்கிக் கொடுத்த அந்த அஸ்திவாரம்தான். அதனை மறந்தால், அந்த அஸ்தி வாரம் பழுதடைந்தால் நமது பலம் கலகலத்து விடும். இதனைப் பல நேரங்களில் நமது தலைவர் கலைஞர் அவர்கள் அழுத்தமாகவே பதிவு செய்து வந்திருக்கிறார்.

சிலர் என்னிடமே கேட்கிறார்கள். பெரியாரின் தாக்கம் இளைஞர்களிடத்தில், புதிய தலைமுறையினரி டத்தில் போய்ச் சேரவில்லையே - தாக்கத்தை ஏற்படுத்த வில்லையே என்று எங்களிடம் கேட்கிறார்கள்.

இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. நான் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவன். தாசில்தாரிடம் ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு 10 மைல் தூரம் நடந்து சென்று, இரவு தங்கி காலையில் தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்று அந்த பியூனிடம் 2 ரூபாய் கொடுத்து, அதற்குப் பின் தாசில்தாரின் கையொப்பத்தையும் பெற்று சான்றி தழை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அதைக் கொண்டு போய்க் கொடுத்தால்தான் அரைக் கட்டணம்.

பள்ளிகளுக்குச் செல்வது என்பது இப்பொழுது போல் சுலபமானது அல்ல. பல மைல்கள் நடந்து செல்ல வேண்டும். கடும் மழை, வெயில் ஒண்டுவதற்குக்கூட இடம் இருக்காது அப்படி எல்லாம் கஷ்டப்பட்டவர்கள் நாங்கள்!

இந்த நிலை மாறுவதற்கு யார் காரணம்? பின்னணியில் இருப்பது எந்த சித்தாந்தம்?

இடஒதுக்கீட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் அயராது பாடுபட்டவர்கள் யார்? எந்த இயக்கம்?

காமராசர் பள்ளிகளைத் திறந்ததால் இலவசக் கல்வி எல்லாம் கிடைத்தது. தொடர்ந்து வந்த திராவிட இயக்க ஆட்சிகள் இவற்றின் காரணமாக கல்வி வெள்ளம் கரைபுரண்டு ஓடவில்லையா?

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் நமக்குக் கிடைத்த இடஒதுக்கீடு என்பது நமது முன்னேற்றத்துக்கான ஏணியல்லவா?

இன்று குப்பன் - சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் வெளி நாடுகளில் பெரிய பதவிகளில் அலங்கரிக்கின்றனரே  - இதற்கெல்லாம் எது அடிப்படை? இதன் பின்னணி யிலும், எவ்வளவு உழைப்பு - தியாகம்?

ஒற்றை மரத்தின் கீழ் நிழலுக்காக ஒதுங்கின எங்களுக்கு எங்கள் வலி என்னவென்று தெரியும்.

இந்தத் தலைமுறைக்கு அந்த வலிகள்  தெரிய வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. ஒற்றை மரத்தின் கீழ் நாங்கள் நின்றோம் என்றால் இப்பொழுது எங்கும் நிழல் பரப்புகள் - அதிலே வலம் வரும் வாலிபர்களுக்கு அந்தக் கால வெயில் மழை, வெள்ளம் இவற்றின் வலிகள் தெரிய வாய்ப்பில்லை.

இந்தத் தலைமுறைக்கு எங்களிடம் ஏற்பட்ட அந்த உணர்வு இன்றைக்கு இல்லாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.

இதனை நியாயப்படுத்த விரும்பவில்லை. கண்டிப் பாக  புதிய தலைமுறைகளுக்கு இவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். நமது அடிப்படை அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் 'பழைய நிலை திரும்பாது' என்று மனப்பால் குடிக்கக் கூடாது. தி.மு.க. தலைவர் தளபதி அவர்களிடமும் இதனைத் தான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

தந்தை பெரியார் தோன்றினார் - 95 ஆண்டு காலம் வரை இறுதி மூச்சு அடங்கும் வரை பாடுபட்டார், அதனைத் தொடர்ந்து ஆசிரியர் வீரமணி தொய்வில்லாது அந்த இயக்கத்தைக் கொண்டு செல்கிறார்.

அய்யாவின் தளபதியாக அண்ணா  இருந்தார்; ஆற்றல் நிறைந்த தமது எழுத்தாலும்,பேச்சாலும் சுயமரி யாதை இயக்க, திராவிட இயக்க இலட்சியங்களை இளைஞர்களிடம் கொண்டு சென்றார் தலைவர் கலைஞர். அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்த இயக்கத்தை இலட்சியப் பாதையில் வழி நடத்தி உங்கள் கைகளில் கொடுத்து சென்றுள்ளார்.

திமுக  தலைவராக பொறுப்பேற்றுள்ள உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இந்த வகையில் இருக்கிறது.

அதனை நீங்கள் நிறைவேற்றிக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் எங்களைப் போன்றவர்கள் உங்கள் தலைமையினை ஏற்று செயல்பட முன் வந்திருக்கிறோம் என்று திமுக தலைவரிடம்  நேரடியாகவே கூறினேன்.

அவரும் அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொண் டுள்ளார். உழைக்கத் தயாராகவும் உள்ளார். வேறு எந்த காலத்தையும்விட இந்தக் காலத்தில் திராவிட இயக்கத் தின் தேவை, தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் தேவைப்படுகின்றன என்பதை நாம் மட்டுமல்ல. நாடே உணர்ந்திருக்கிறது இலட்சியப் பாதையில் பயணிப்போம்" என்று கொட்டு முரசாக, கொள்கைக் கொண்டலாக அதே நேரத்தில் தமக்கே உள்ள நகைச்சுவையுடன் (சற்றுக் குறைவுதான்; ஏனெனில் இலட்சிய முறுக்கேறிய உரை வீச்சு என்பதால்) ஜீவ நதியாகப் பாய்ந்தது அவரது உரை என்றால் மிகையாகாது.

(திமுக சொற்பொழிவாளர்களும், எழுத்தாளர்களும் எப்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்கான கருப்பொருளை எடுத்துக் கொடுக்கும் உரை வீச்சாக திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் உரை அமைந்தது என்றே கொள்ள வேண்டும்.)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner