எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

சபரிமலை சென்று இரு பெண்கள் அய்யப்பனைத் தரிசித்து விட்டார்களாம்! அடேயப்பா, எவ்வளவுக் கூச்சல்! கோயில் தீட்டுப்பட்டு விட்டதாம். சொல்லு கிறவர்கள் யார்? அர்ச்சகர்கள்தான்! இதே அய்யப்பன் கோயிலில் - அர்ச்சகர்கள் தங்கிய அறைகளில் மதுப் பாட்டில்கள் கிடந்தது எல்லாம் கண்டுபிடிக்கப்பட வில்லையா? ஒரு விபச்சாரி வீட்டில், அய்யப்பன் கோயில் பிரதம தந்திரி கண்டரரு மோகனரு கண்டு பிடிக்கப்பட்ட கதை நாற்றம் எடுக்கவில்லையா?

அப்பொழுதெல்லாம் இந்த அய்யப்பன் கடவுள் கோபித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்துவிட்டு வெளிநாடு ஓடி விட்டாரா? அல்லது அவமானத்தைத் தாங்க முடியாமல் தூக்க மாத்திரைதான் சாப்பிட்டாரா?

காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோயிலை தேவநாதனும், திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை பத்ரிநாத்தும் விபச்சார விடுதியாக்கினார்களே, அந்தக் கடவுள்கள் கர்ப்பகிரகத்தைவிட்டு வெளியேறினவா?

எல்லாம் வல்லக் கடவுளுக்கு (?) ஆசாபாசம் உண்டா? ஆசாபாசம் இருந்தால் அது கடவுளா?

சிவனின் தலையிலும், பக்கத்திலும் இரு பெண்டாட்டிகள் இருக்கின்றனரே - அவர்களின் மாத விடாய்க் குறித்து சிவன் என்றைக்காவது சீறியிருப்பதாக மாதவிடாய்ப் புராணம் எழுதப்பட்டுள்ளதா?

அடப் பைத்தியங்களே! எவனோ ஒரு கிறுக்கன் எந்த காலத்திலோ உளறி வைத்ததை எல்லாம் இந்த 21ஆம் நூற்றாண்டில் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு 'தை  தை' என்று ஆடுவது எந்த நோக்கத்தில்?

இதில் எல்லாம் பார்ப்பனர்களுக்குக் கொழுத்த சுரண்டல் கொடி கட்டிப் பறக்கிறது என்பதுதானே!

இப்பொழுது சபரிமலையில் என்ன நடக்கிறது? இரு பெண்கள் அய்யப்பனைக் கும்பிட்டதால் தீட்டுக் கழித்தார்களாம் - சுத்திகரிப்பு நடந்ததால் அதன் பலன் யாருக்குப் போய் சேர்ந்திருக்கிறது?

'டைம்ஸ் ஆப் இந்தியா' ஏட்டில் நேற்று வெளி வந்ததை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கருத்தூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாரே.

'பிராமணப் போஜனம்' செய்யப்பட்டதாம்; பட்டு வேட்டியும், அங்கவஸ்திரங்களும் அளிக்கப்பட்டதாம். நல்லது நடந்தாலும் அவாளுக்கு வேட்டைதான் - அல்லது நடந்தாலும் அவாள் வயிற்றில்தான் அறுத்துக் கட்டப்படுகிறது - எத்தகைய சாமர்த்தியமான இனம்!

கோயில் கலசம் விழுந்தால், கோபுரம் இடிந்து விழுந்தால் அல்லது கோயில் தீப்பற்றி எரிந்தால் உடனே பரிகாரங்கள் என்ன - பூஜை புனஷ்காரங்கள் என்ன - யாகங்கள் என்ன! எல்லாவற்றையும் கூட்டிக் கழித்தால் அவாளின் அர்ச்சகர்களின் வருமானத்தில்தான் போய் முடியும்!

பக்தி என்ற போதை மூளையில் ஏற்றப்பட்டால் அம்மணமாக ஆடுவதற்கும் கூடக் கூச்சப்படுவ தில்லையே, வட நாட்டு சாமியார்கள் கதை  தெரிந்தது தானே! வேப்பிலையை சேலையாகக் கட்டுவதுகூட நடந்து கொண்டுதானே இருக்கிறது. (பெரியபாளையத் தம்மன்)

என்ன வெட்கக் கேடு என்றால் எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் அளவுக்குக் கெட்டுப் போக வேண்டுமா?

இதில்கூட இன பேதம் உண்டு, எந்தப் பார்ப்பான் எச்சில் இலையில் உருளுவான்?

சங்கராச்சாரியார் உருளுவாரா? பக்தி முற்றிய குருமூர்த்திகள் உருளுவார்களா? இராம கோபாலனோ, எச்.சிகளோ உருளுவார்களா?

இதோ ஒரு 'தினமணி' செய்தி (8.5.2006)

கரூர் அருகே நேர்த்திக் கடனை செலுத்த எச்சில் இலைகள்மீது உருளும் விநோதத் திருவிழா நடைபெற்றது.

கரூர் அருகேயுள்ள நெரூரில் ஸ்ரீசதாசிவ பிரம்மேந் திராள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மேந்திராளுக்கு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 92வது ஆண்டாக உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீசதாசிவ பிரம்மேந் திராளுக்கு சிறப்பு அபிஷேகம். இலட்சார்ச்சனை செய்யப்பட்டது. அவரது திருவுருவப் படம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, நெரூர் அக்ரஹாரத்தில் உள்ள பஜனை மடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது.

இதையடுத்து அக்ரஹார வீதியில் பிரம்மாண்ட அன்னதானம் நடைபெற்றது. அதில் ஒரே நேரத்தில் சுமார் 500க்கும் அதிகமானோர் சாப்பிட்டனர்.

பின்னர் அனைவரும் எழுந்த பிறகு, மூடப்படாத எச்சில் இலைமீது சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் உருண்டனர். "நெரூரில் ஜீவ சமாதி யடைந்த ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள். அன்னதானத்தின் போது ஒரு இலையில் அமர்ந்து உண்பார். அது எந்த இலை எனத் தெரியாததால், அனைத்து இலைகளின்மீதும் பக்தர்கள் உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவது அய்தீகம்" என்றனர் பக்தர்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். வேண்டுதல்கள் நிறைவேறியதும், இலையின் மீது உருளுவோரும் உண்டு. கோயிலுக்கு வருபவர்கள் யாராயினும் சாப்பிட மாட்டேன் எனக் கூறினால், அவரைக் கட்டாயப்படுத்தியாவது சாப்பிட வைப்பது வழக்கம். காரணம், அவரது உருவில்கூட பிரம்மேந்திராள் வந்திருக்கலாம் எனக் கருதியே. இதற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

('தினமணி' 8.5.2006)

(கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றால் மூக்குப் புடைக்கும் ஆன்மீக சிரோன்மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களாம்?)

இதைவிட இன்னொரு அருவருப்பான தகவல் உண்டு. பரலோகம்போக வைக்கத்தில் சாப்பிட்ட எச்சில் இலையை விலைக்கு விற்று காசு சம்பாதிக்கும் சங்கதி.

'குடிஅரசு' இதழில் வெளி வந்த தகவல்கள் இதோ:

"வைக்கம் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை ஒன்று சில சமயங்களில் 0.0.6 வீதம் விற்கப்படுகிறது. (அந்நாளில் இது அரையணா மதிப்பு)

வியாதியஸ்தர்களுக்கு வியாதி சவுக்கரியமாகி விடும் என்றும், சந்தானமில்லாத வர்களுக்குச் சந்தான விருத் தியாகுமென்றும் அங்குள்ள பிராமணரல்லாத ஜனங் களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, 500 என்று விகிதம் பேசி நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டி பூசை செய்துஅந்தக் கால் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால் தனது பாபம் போய் விடும் என்று நம்பும்படியாக செய்கிறதை விடப் பெரிய மோசடியல்ல"

(ஆதாரம்: 'குடிஅரசு' 9.8.1925)

இதைத் தொடர்ந்து  குடிஅரசு இதழில் 'லோகோபகாரி' ஏட்டில் வந்த செய்தி இது. இதன் தலைப்பும் 'வைக்கம் எச்சிலை" தான்.

"வைக்கத்திலே பிறந்து வளர்ந்து வாழ்பவரும் வைக்கத்திலுள்ள சத்தியாக்கிரக ஆசிரமத்தின் தற்காலக் காரியதரிசியுமான ஸ்ரீமான் கே. நாராயணன் இதுபற்றி நமக்கு  எழுதியிருக்கிறார். அவர் சொல்லுவதின் சுருக்கம்: வைக்கம் எச்சிலை சகல நோய்களையும், முக்கியமாக வயிற்று நோய்களையும், மலட்டுத்தன்மையையும் நீக்கவல்ல தென்ற நம்பிக்கை பாமர ஜனங்களுக்குள் உண்டு. வைக்கத்தம்மன் கோயில் எச்சிலைகள் பரம்பரையாக வாரியர் குடும்பத்தாருக்கு உரியன. அவர்களே கோயிலில் தாழ்ந்த வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களே பிராமணர்கள் சாப்பிட்ட பின் இலைகளை எடுத்து அப்புறப்படுத்துகிறார்கள். அவர்கள் இலைகளை வெளியே கொண்டு போய் மொத்தமாக நாயர்களுக்கு விற்று விடுகிறார்கள். நாயர்கள் எச் சிலைகளில் உள்ளவற்றையெல்லாம் அவற்றின் சீர் கேட்டைச் சொல்ல வேண்டியதில்லை. நன்றாகக் கலந்து கடைத் தெருவுக்குக் கொண்டு போய் பகிரங்கமாக விற்கிறார்கள். நகர பரிபாலன சபைக்கும் இந்த எச்சிலை லாபத்தில் பங்கு உண்டு. ஒரு பிராமண போஜனத்தில் வரும் எச்சிலையால் வாரியருக்குச் சுமார் 10 ரூபாய் லாபம் கிடைக்கும்.

வாரியர்களிடமிருந்து வாங்கி விற்கும் நாயர்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். சில காலத்திற்கு முன் தெய்வ பக்தியுள்ள உயர் வகுப்பார் பலர் இதனை வாங்கித் தங்கள் நோய் தீருமென்று உட்கொண்டு வந்தார்கள். ஆனால், இப்பொழுது பக்தியை விடப் பசி காரணமாகவே தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் இந்த எச்சிலைகளை வாங்கி உண்கிறார்கள்."

('குடிஅரசு' 30.8.1925)

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார் ஆனால் பக்தி என்று வந்து விட்டால் மானமாவது - அறிவாவது!

சேலம் அன்னதானபட்டியில் பக்தர்கள் செருப்படி படும் செருப்படி திருவிழா இன்னும் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது.

இது பகுத்தறிவுக்கு அழகா என்று கேட்டால் 'சோ' போன்ற பார்ப்பனர்கள் என்ன எழுதினார்கள் தெரியுமா?

இதோ ஒரு கேள்வி - பதில்.

கேள்வி: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

சோவின் பதில்: ஏன் நிறுத்தி விட்டீர்கள்? "பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேடம் என்றெல்லாம் சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?"  என்று கேட்க வேண்டியதுதானே! இப்போதுதானே உங்கள் கேள்வி முழுமை அடையும். ('துக்ளக்' 4.3.2009).

பகுத்தறிவைப் பித்தலாட்டம் என்று சொல்லும்  ஆசாமி அவாளின் அகராதியில் அறிவு ஜீவிகளாம்!

அந்த அறிவு ஜீவிதம் என்பது - அக்ரகாரத்துப் பக்கம் வருவாய் நதி புரண்டு ஓடுவதற்காகத்தான்.

இல்லாவிட்டால் எச்சில் இலையை விலைக்கு விற்று பணத்தை எக்கில் சொருகிக் கொள்வார்களா?

ஆதாயமில்லாமல் அக்கிரகாரக் கூட்டம் ஆற்றைக் கட்டி இறைக்காது; அறிவை அழிக்கும் வேலையில் இறங்கினால்தானே அவர்களால் அறுவடை செய்ய முடியும்!

அதனால்தான் அறிஞர் அண்ணா சொன்னார் "முதலில்லா வியாபாரம், விதைக்காது விளையும் கழனி" என்று அழகாகப் படம் பிடித்துக் காட்டினார்.

இன்று "ஆஸ்திகம்" என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று "நாஸ்திகம்" என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்" என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியதுதான் (19.2.1971) இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.

பக்தியைக் பகிஷ்கரிப்பீர்!

பகுத்தறிவைப் பயன்படுத்துவீர்!


ஏன் கொளுத்த வேண்டும் மனுதர்மத்தை?

மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 148: பெண் சுயவிருப்பத்தில் வாழக்கூடாது. சிறுவயதில் தந்தை கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது.

மனுதர்மம் - அத்யாயம் 5 - சுலோகம் 154: கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!

மனுதர்மம் - அத்யாயம் 8 - சுலோகம் 379: கொலைத் தொழில் புரிந்த மற்ற ஜாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக்குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டையடித்தலே தண்டனையாகும்.

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 19: பெண்கள் பெரும்பாலும் விபசாரிகள் என்று அநேக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 35: ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இவற்றில் ஆணுறுப்பே உயர்ந்தது.

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 52: மற்றவன் மனைவியிடத்தில் மனைவியில்லாத வேறொருவன் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 60: கணவனை இழந்த பெண்ணை ஒரு ஆண் தன் உடல் முழுக்க நெய்யைப் பூசிக்கொண்டு, இரவில், இருட்டில் உடலுறவு கொண்டு பிள்ளை பெறலாம்!

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 78: கணவன் சூதாடுகிறவனாய் இருந்தாலும், குடிகாரனாயிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், மனைவி அவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவளுக்கு ஆடை, அலங்காரம், படுக்கை தராமல் விலக்கி வைக்க வேண்டும்.

மனுதர்மம் - அத்யாயம் 9 - சுலோகம் 94: முப்பது வயது ஆண், அழகான 12 வயது பெண்ணையும், இருபத்து நான்கு வயது ஆண் எட்டு வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

பெண்களை அடிமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்தக் கேடுகெட்ட, ஒழுக்கங்கெட்ட, மோசமான மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டாமா? கொளுத்துவோம் வாரீர்! வாரீர்!

பிப்ரவரி 7ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மனுதர்ம எரிப்புப் போராட்டம்....

தயாராகட்டும் பட்டியல்!

தயாராகட்டும் பட்டியல்!!

 

 

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner