எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தகச் சந்தையில் ஒரு பொன்னேடு!

சென்னை புத்தகச் சந்தையில் எத்தனை எத்த னையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனாலும், நேற்று பிற்பகல் (17.1.2019) புத்தகக் கண்காட்சி விழா அரங்கில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒரு பொன்னேட்டை உருவாக்கிக் கொடுத்தது.

"தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?'' தலைப்பே சற்று வித்தியாசமானதுதான்.

தந்தை பெரியார் எதைச் செய்தாலும், எந்தக் கருத்தை வெளியிட்டாலும் அவை ஏதோ ஓடுகிற ஆற் றோட்டத்தோடு ஓடும் தென்னை மட்டைகள் அல்ல.

மூடத்தனத்திலும், பிற்போக்குத்தனத்திலும் தலைக்குப்புற வீழ்ந்து கிடக்கும் - ஆரிய ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட ஓர் அழுக்குச் சமுதாயத்தில் - அவற்றின் ஆணிவேரை ஒட்ட நறுக்கி அக்னித் திராவகத்தில் வீசும் புரட்சி எரிமலையான தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைச் சீலங்களும், கருத்துக் கருவூலங்களும் எதிர்நீச்சல் போட்டு எதிரிகளை மூர்ச்சடையச் செய்யும் பேராற்றல் பெற்றவையாகும்.

''தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?'' என்பதை விட, தமிழுக்கு என்ன செய்யவில்லை பெரியார் என்று கேட்டிருந்தால், அது மேலும் பொருத்தமானதாகவே இருந்திருக்கும்.

247 எழுத்துகளைக் கொண்ட தமிழ் கற்பதற்கு எளிதாகவில்லை. பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு ஒரு மலைப்பாகவேகூடத் தோன்றும்.

இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஆங் கிலம் உலகை ஆட்கொள்ளவில்லையா? அந்த வகையில், தமிழிலும் சீர்திருத்தம் செய்து, எளிதாக்கி உலகப் பரப்பின் பக்கமெல்லாம் - தேமதுரத் தமிழைத் தேசமெல்லாம் கொண்டு செல்லுவோம் என்பதற் கொப்ப தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின்மூலம் அதனைச் செயல்படுத்திய ஆசான் தந்தை பெரியார்.

1935 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி நாளிட்ட குடிஅரசு' இதழில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை செயல்படுத்தியவர் தந்தை பெரியார்.  44  ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் பாடப் புத்தகங்கள் முதல் அனைத்திலும் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் செயல்பாட்டுக்கு வந்தது. லை' என்றால், அது விடுதலை' லை' என்று  சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் மலிவுப் பதிப்பாகச்' சென்றடைந்தது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ் மொழி தவழும் அனைத்து நாடுகளிலும் தந்தை பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் மூலமாகவும் உலா வருகிறார்.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தந்தை பெரியார், ஏன் இந்த எழுத்துச் சீர்திருத்தத்தைச் செய்தார்?

தமிழ் வளர்ச்சி அடையவேண்டும். உலகெங்கும் எளிதில் பரவவேண்டும் என்ற நல்லெண்ணத்தால் அல்லவா!

நேற்று நடைபெற்ற தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?'' என்ற நூலினை வெளியிட்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

தந்தை பெரியார் தமிழைப்பற்றி தெரிவித்த விமர்சனம் என்பது நட்பு விமர்சனமாகும்; எதிரிகள் வைத்ததோ பகை விமர்சனம் என்று ஆழமான கருத் துச் செறிவினை முன் வைத்தார் ஈரோடு தமிழன்பன்.

இதுதானே துல்லியமான கருத்தாழமிக்க படப் பிடிப்பு.

இதழ்களுக்குப் பெயர் சூட்டியதில்கூட தந்தை பெரியார் தமிழுக்கு சிறந்த அணிகலன்களைப் பூட்டி னார்.

குடிஅரசு', புரட்சி', பகுத்தறிவு', விடுதலை', உண்மை' என்று தனித்தமிழில்தானே சூட்டினார். அழகு தமிழ் மட்டும் இதில் குடிகொண்டு மணம் வீசுவதாகக் கருதக்கூடாது. இதழின், ஏட்டின் பெயரேகூட, அதன் நோக்கினை வெளிப்படுத்தச் செய்த தந்தை பெரியார் அவர்களின் நுண்மான் நுழைபுலத்தை எண்ணிப் பார்க்கவேண்டும்.

முதலையுண்ட பாலகனை மீட்டது தமிழ், எலும்பைப் பெண்ணுருவாக்கியது தமிழ், மறைக்கதவைத் திறந்தது தமிழ் என்று அற்புதங்கள் என்ற பெயரால் மூடநம்பிக் கைகளைப் பூட்டித் தமிழை ஊர்வலமாகக் கொண்டு செல்லுவதை எள்ளி நகையாடி, தமிழை அறிவியல் ஆசனத்தில் அமர்த்தவேண்டும் என்று எண்ணியவர், செயல்பட்டவர் தந்தை பெரியார்.

அந்த வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப் பெற்ற, தொகுக்கப் பெற்ற தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?'' என்ற நூல், காலத்தின் தேவையைக் கருதி திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வெளிவந்தது.

வெளியீட்டு விழா மேடையிலேயே வரிசை வரிசையாக வந்து வெகுமக்கள் நூலாசிரியரிடம் பெற்றுச் சென்றனர். ரூ.180 இந்நூலின் நன்கொடை - வெளியீட்டு விழாவின் சிறப்புக் கருதி, பொங்கல் பரிசாக ரூ.30 தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.150-க்கு வழங்கப்பட்டது.

புத்தகச் சந்தையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் நான்கு கடைகள் இயங்கின. அக்கடையில் வாசகர்களைச் சந்தித்தார் நூல் ஆசிரியர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள். அங்கும் ஏராளமான தோழர்கள் நூல்களை வாங்கி, நூலாசிரியரிடம் கையொப்பம் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

நூல் வெளியீட்டு விழாவின் வரவேற்புரையை திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் வழங் கினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். நூலினைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட்டார்.

அவர் தன் உரையில் முத்தாய்ப்பாகக் கூறியதாவது:

1949 ஜனவரி 15 16 ஆகிய நாள்களில் பொங்கல் விழாவினையொட்டி சென்னை பிராட்வேயில் தந்தை பெரியார் திருக்குறள் மாநாட்டினை நடத்தினார்.

அதேபோல, தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்'' எனும் இந்நூலினை நமது ஆசிரியர் அவர்கள் எழுதி, அதன் வெளியீட்டு விழாவையும் பொங்கலையொட்டி இங்கு வெளியிட்டு இருப்பது மிகவும் பொருத்தமானது'' என்று எடுத்த எடுப்பிலேயே கூறி, ஒரு கலகலப்பை ஏற்படுத்தினார். இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்த அரிய பொங்கல் பரிசு என்றும் கூறினார்.

கொள்கைப் பிரச்சார நோக்குதான் தந்தை பெரியாரிடத்தில் இருந்தது - என்பதை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.

திருக்குறள் நூலை தொடக்கத்தில் எட்டணா விலை போட்டு மக்கள் மத்தியில் பரப்பினார். அடுத்த பதிப்பின் விலை அய்ந்தணா என்றார்.

அய்ந்தணா என்பது கட்டுப்படியாகும் விலை என்பதால், அதன் விலையைக் குறைத்ததாக தந்தை பெரியார் குறிப்பிட்டதை கவிஞர் தமிழன்பன் அவர்கள் சொன்னபோது, பெரும்பாலோருக்கு அது ஒரு புதிய தகவலாக இருந்ததோடு மட்டுமல்லாமல், தந்தை பெரியாரின் தன்னிகரில்லா பண்பாட்டின் பெற்றியைப் பறைச்சாற்றுவதாக இருந்தது.

தமிழுக்குப் பெருமை என்பது கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றியது என்பது அல்ல'' என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதை எடுத்துச் சொன்ன கவிஞர் அவர்கள், தமது படைப்பால், கருத்தால் மனிதன் ஒரு அங்குலமாக வளர்ச்சியடைய, பயனடையச் செய்யும் ஒருவனே புலவன்'' என்று தந்தை பெரியார் சொன்னதையும் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் இமையம்

நூலினைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய எழுத்தாளர் இமையம் அவர்கள் முழு நூலினையும் பிழிந்து சாறாகக் கொடுத்தார்.

இப்படி ஒரு நூலினைக் கொண்டு வந்த ஆசிரியரின் வயது 86 என்று நம்பவே முடியவில்லை. 26 வயது இளைஞனின் உழைப்பு இந்நூலில் காணப்படுகிறது என்றார்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார்மீது சுமத்தப்பட்ட பழியை இந்நூல் பழிவாங்கி விட்டது என்று அவர் சொன்னபொழுது பலத்த கரவொலி பார்வையாளர் பகுதியிலிருந்து.

காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்டு அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக வெளியிட்டவர் தந்தை பெரியார். அதுபோலவே, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஜாதி ஒழிப்பு' என்ற நூலையும் தமிழில் கொண்டு வந்தவரும் தந்தை பெரியாரே!

இந்நூலில் இடம்பெற்றுள்ள மொழி ஆராய்ச்சி'' என்னும் தந்தை பெரியார் அவர்களின் கட்டுரையை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மட்டுமல்ல, தமிழிசையை வளர்த்தெடுப் பதற்கு தமிழிசை மாநாட்டை நடத்தியவரும் தந்தை பெரியாரே!

தமிழ்மீது வெறும் கற்பிதங்களை சுமத்தக்கூடாது என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தாக இருந்ததையும் எழுத்தாளர் இமையம் எடுத்துக்காட்டினார்.

பேராசிரியர் அவ்வை நடராசன்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் அவர்கள்,

இந்நூல் தமிழர்களிடையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்தக் கூடியது என்றார்.

தமிழ்நாட்டில் தமிழ் - தமிழர் நிலை என்னவாக இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வை நினைவுபடுத்தினார்.

திருவையாற்றில் தியாகையர் உற்சவம் நடந்தது. அதில் தண்டபாணி தேசிகர் சித்தி விநாயகனே'' என்ற ஒரு தமிழ்ப் பாடலைப் பாடினார். அவ்வளவுதான், தமிழில் பாடியதால் சந்நிதானம் தீட்டாயிடுத்து என்று கூறி, அதனை சுத்திகரித்த பிறகுதான் - தீட்டுக் கழித்த பிறகுதான் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாடினார் என்பதை நினைவுபடுத்தினார் - நமக்கு அவ்வையாகக் கிடைத்த பேராசிரியர் அவ்வை நடராசன் அவர்கள். (அதனை மய்யப்படுத்திதான் கலைஞர் அவர்கள் குடிஅரசு' இதழில் (9.2.1946) தீட்டாயிடுத்து' என்ற கட்டுரையைத் தீட்டினார்).

நூலாசிரியரின் ஏற்புரை

ஏற்புரை வழங்கிய நூலாசிரியர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 25 மணித்துளிகளில் அரிய கருத்துகளையும், தகவல்களையும் வாரி வழங்கினார்.

தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவர் வகுப்புகள் எல்லாம் மாலைப் பல்கலைக் கழகமாக மக்கள் மத்தியில் அந்த வகுப்புகள் நடைபெறும் என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார்.

தமிழ்மொழி படித்த பேராசிரியர்களின் அன்றைய நிலை என்ன? என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரி யராக இருந்த பெரும்புலவர் கா.நமச்சிவாயனார் அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.81. அதேநேரத்தில், சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கோ ரூ.300. இந்த வருண வேறுபாட்டை ஒழித்து தமிழுக் குரிய தன்மானத்தை மீட்டுத் தந்தவர் தந்தை பெரியார்.

வறுமையில் வாடிய தமிழ்ப் புலவர்களுக்கு வலது கை செய்ததை இடது கை அறியாது என்பதுபோல, அவர்களுக்கு அவ்வப்பொழுது உதவி செய்து வந்தவரும் தந்தை பெரியாரே!

சென்னை பல்கலைக் கழகத்தில் மறைமலை அடிகளாரின் அறிவுரைக் கொத்து' நூல் பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. சமஸ்கிருதத்தைப் பற்றி அடிகளார் குறிப்பிட்ட பகுதியை எதிர்த்துப் பார்ப்பனர்கள் குரல் கொடுத்தனர். தந்தை பெரியாரோ அறிவுரைக் கொத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்பொழுது அண்ணா அவர்கள் முதலமைச்சர். அதுகுறித்து ஆய்வு செய்ய  டாக்டர் மு.வ. அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அடிகளாரின் நூல் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் தொடர்ந்தது என்ற ஒரு தகவலை தன் உரையில் பகன்றார் நூல் ஆசிரியர். இதுபோன்ற தகவல்கள் புதிய தலைமுறையினருக்குப் புதிய விருந்து என்பதில் அய்யமில்லை.

பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் நன்றி கூறிட, பிற்பகல் 5.30 மணியளவில் நூல் வெளியீட்டு விழா நிறைவு பெற்றது. ஏராளமான பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு பங்குகொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner