எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம்

"உயர் ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடா?" என்னும் தலைப்பில், காந்தியார் அண்ணா நினைவு நாளை நினைவு கூர்ந்து வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக் கூட்டம் வில்லி வாக்கம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர் தங்கமணி குணசீலன், பெரியார் பெருந்தொண்டர் அர. சிங்கார வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்ட ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக அமைந் திருந்தன.

முக்கிய சாலையிலிருந்து கூட்டம் நடைபெற்ற இடம் வரை இருமருங்கிலும் திராவிடர் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. விதவிதமான வண்ணத்தில் சுவரொட்டிகள் கூட்டத்திற்குக் கட்டியம் கூறின!

மிகப் பெரிய அளவு திறந்த மேடை; மிகவும் பொருத் தமாக "முரட்டு கருஞ்சட்டை வீரரான" குணசீலன் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். சமூக நீதிக் காரணத்துக்காக நடத்தப்படும் பொதுக் கூட்டம் காந்தியார் - அண்ணா நினைவு நாளை முன்னிறுத்தி நடத்தப்படுவதன் அவசியத்தை விளக்கிக் கூறினார்.

மு. வீரபாண்டியன்

இந்தியக் கம் யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர் மு. வீர பாண்டியன்  அவர்கள் தனது உரையில், இந்தியாவிலேயே தமிழ் மண் சமூகநீதியில் முன்வரிசையில் இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும்தான் என்றாலும் இத்திசையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பங்களிப்புத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை என்பது எளிமையானது - எந்த வகையிலும்  தன் பிம்பங்களை கட்டமைக்கும் தன்மை கொண்டதல்ல - பொதுக் கூட்டங்களுக்குச் செல்லும் தந்தை பெரியார் மற்ற பேச்சாளர்கள் மேடைக்கு வருவதற்கு முன்பே மேடையில் அமர்ந்து விடும் அந்தத் தன்மையை வெகுவாக சிலாகித்தார் தோழர் வீரபாண்டியன்.

தமிழர் தலைவருக்கு வீரவாள்

கடலூர் சுப்ரமணியம் தொடங்கி அய்ந்தாம் தலைமுறை கண்ட இந்தி எதிர்ப்பு வீரர் கடலூர் கேசவனின் கொள்ளு பெயரன்கள் சமூகநீதி காவலர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு வீரவாள் வழங்குகிறார்கள்.

பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா

தொடர்ந்து உரையாற்றிய மனிதநேய  மக்கள் கட்சியின் நிறுவனர் - தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் சமூக நீதித் திசையில் தந்தை பெரியார், திராவிடர் கழகம், திராவிட கட்சிகள் பொறித்த முத்திரைகளை வெகுவாகப் பாராட்டினார்.

உயர் ஜாதிக் காரர்கள் இப்பொ ழுதுள்ள இடஒதுக் கீட்டு முறையால் ஏதோ பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்ல முயல்வது அடிப் படைத் தவறு - உண் மைக்கு எதிரானது என்று எடுத்துரைத்த பேராசிரியர் உயர் ஜாதியினர் குறிப்பாகப் பார்ப்பனர்  உயர் பதவிகளில் எந்த அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதற்கான புள்ளி விவரத்தை எடுத்து விளக்கினார்.

எடுத்துக்காட்டாக குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகங்களில் உயர் பதவிகளின் நிலையை ஆதாரத் துடன் எடுத்துக் காட்டினார்.

குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் உள்ள 49 உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் - 39; தாழ்த்தப்பட்டோர், மலை வாழ் மக்கள் - 4 பேர்; பிற்படுத்தப்பட்டோர் - 6. துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் உள்ள ஏழு உயர் பதவிகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிரதமரின் அலுவலகத்தில் 35 உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் - 31, தாழ்த்தப்பட்டோர் - 2, பிற்படுத்தப்பட்டோர் - 2, கவர்னர் மற்றும்  லெப்டினண்ட் கவர்னர் 27 பேர்களில் பார்ப்பனர்கள் 25, தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள் ஒருவரும் இலர், பிற்படுத் தப்பட்டோர் இருவர்.

3600 அய்.ஏ.எஸ். பதவிகளில் பார்ப்பனர்கள் 2750, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் 300, பிற்படுத்தப் பட்டோர் 350. உயர் ஜாதியினர், குறிப்பாகப் பார்ப் பனர்கள் 70 விழுக்காடு, 80 விழுக்காடு அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் நிலையில் ஏதோ உயர் ஜாதியினர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லுவது அசல் ஏமாற்று வேலை என்று அழுத்தம் திருத்தமாக தம் கருத்தைப் பதிவு செய்தார்.

பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன்

இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆற்றி வரும், சாதித்துவரும் சமூக நீதிக்கான சாதனைகளை மனந் திறந்து பாராட் டினார்.

மண்டல் குழுப் பரிந்துரைகள் இன்றைக்கு இந்தியா முழுவதும் சட்டரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைத்தது என்றால் அதற்கு முதற் காரணம் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள்தான்.

சமூகநீதி, மதச் சார்பின்மை, பகுத்தறிவு கொள்கை களில் தந்தை பெரியாரின் சாதனைக்கு நிகர் தந்தை பெரியார்தான்.

இந்தக் கொள்கை களுக்கு எதிராக யார் எண்ணினாலும், செய்ய முற்பட்டாலும் அவர்கள் தேய்ந்து போவார்களே தவிர வெற்றி பெற முடியாது.

தந்தை பெரியார் கொள்கைகளை ஆசிரியர் வீரமணி அவர்கள் உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளார். பெரியார் கொள்கை உலகம் முழுவதும் இன்று பரவிக் கொண்டிருக்கிறது.

திராவிடர் கழகம் அறிவுத் துறையில் மகத்தான பணியைச் செய்து கொண்டுள்ளது. அத்தகைய இளை ஞர்களையும் உருவாக்கிக் கொடுக்கிறது.

இண்டலிஜன்ஷியாவை வளர்த்து வருகிறது. ஒவ்வொரு  மாநிலத்திலும் இதுபோன்ற நூறு இளைஞர்கள் உருவாக்கப்படுவார்களானால், பெரிய மாற்றமே ஏற்படும் என்று பேராசிரியர் காதர்மொய்தீன் தன் கணிப்பை வெளிப்படுத்தினார்.

இன்றைக்குப் பல வகைகளிலும் மத்திய பிஜேபி ஆட்சியில் மக்களுக்கு அச்சுறுத்தல்களும், இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு ஒரே தீர்வு மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியை வரும் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவதுதான் என்று அழுத்தம் திருத்தமாக தம் கருத்துகளை பதிவு செய்தார் இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் அவர்கள்.

வில்லிவாக்கம் - அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் (1.2.2019)

டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. எஸ். இளங்கோவன் அவர்கள் தம் உரையில் பதிவு செய்த தாவது:

உயர் ஜாதியில் பொரு ளாதாரத்தில் பின் தங்கி யவர்கள் என்று மத்திய அரசு யாரை சொல்லுகிறது?  ஆண்டு வருவாய் ரூபாய் எட்டு லட்சம் உள்ளவர்கள் ஏழைகளா? இதன்படி நாள் ஒன்றுக்கு ரூ.2300 வருமானம் பெறக் கூடியவர்கள் ஏழைகளா? என்ற கேள்வியை எழுப்பினார் டி.கே.எஸ்.

(பொருளாதாரத்தில் உயர் ஜாதி என்றால் ஆண்டு வருமானம் 8 லட்சம் - மற்ற ஜாதியினர் என்றால் வேறு அளவுகோலா? இதிலும் ஒரு மனுதர்மம் இருக்கிறதே!)

உச்சநீதிமன்றம் இரு முக்கிய வழக்குகளில் சரியான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

1992இல் இந்திரா  சகானி என்கிற மண்டல் குழு பரிந்துரை தொடர்பான வழக்கில் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று தீர்ப்பு கூறி விட்டது.

கேசவானந்த பாரதி வழக்கில் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை அம்சத்திற்கு எதிராக எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இந்த இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிராக மோடி அரசு நடந்து கொண்டு வருகிறது.

பொருளாதாரக் கண்ணோட்டப்படி பார்த்தாலும் ஏழைகளாக பெரும்பாலும் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே - உயர் ஜாதியினர் தாம் பொருளாதாரத்திலும் மேம்பட்ட நிலையில் இருக் கின்றனர் என்பதற்கு தக்க புள்ளி விவரங்களை எடுத்து வைத்தார் டி.கே.எஸ்.

தாழ்த்தப்பட்டவர்களுள் சம்பாதிப்பவர்கள் 78.9%, மலை வாழ் மக்களில் சம்பாதிப்போர் 66.5%, இதர பிற்படுத்தப்பட்டவர்களுள் சம்பாதிப்பவர்கள் 91.9%, பார்ப்பனர்களில் சம்பாதிப்பவர்கள் 147.5% இதர உயர் ஜாதியினரில் சம்பாதிப்பவர்கள் 145.5%.

இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன?

பொருளாதார நிலையிலும் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்டோர்தான் தாழ் நிலையில் இருக்கின்றனர் - உயர் ஜாதியினர் தான் மேல் நிலையில் உள்ளனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கும் பொழுது உயர் ஜாதியினரில் ஏழைகளுக்காக ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வருவது என்ன நியாயம் என்ற வினாவை டி.கே.எஸ். இளங்கோவன் எழுப்பியது விவேகம் நிறைந்த ஒன்றாகும்.

மதிமுக பொதுச் செயலாளர்

திராவிட இயக்கப் போர்வாள் வைகோ

காந்தியார், அண்ணா நினைவு நாளில் அவர்கள் சான்றாண்மைகளைப் பலபட பிரித்துப் பேசினார் திராவிட இயக்கப் போர் வாளாம் வைகோ.

சமூகநீதியில் கலங்கரை விளக்கமாக, தூண்டும் சக்தியாக இருப்பவர் எனது அண்ணன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி ஆவார்கள்.

இன்றைக்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அரசு நம்மை எல்லாம் சவுக்கால் அடித்து எழுப்பி விட்டிருக்கிறது. தூங்கும் புலியை இடறி விட்டது. அதன் பலனை மத்திய அரசு அனுபவிக்கத் தயாராக இருக்கட்டும்.

உயர் ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பி விட்டது.

அறிவு ஆசான் இன்று நம்மிடையே இல்லை. அறிஞர் அண்ணாவை இழந்துவிட்டோம்! அண்ணன் கலைஞரையும் பறி கொடுத்து விட்டோம்! இப்பொழுது நம்மிடம் இருக்கும் பலமான சக்தி என்று சொன்னால், அது அண்ணன்  வீரமணியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று வைகோ அவர்கள் சொன்னபொழுது பார்வையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு!

இன்றைக்கு தமிழ்நாடு மக்கள் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர் என்றால் அதற்கான முழு முதற் காரணம் நமது ஆசிரியர் அவர்கள்தான்! ஆட்சியினருக்குச் சட்ட ரீதியான ஆலோசனைகளைக் கூறி செயல்பட வைத்தவரும் அவரே! ( 31சி சட்டத்திற்கான நகலைத் தயாரித்துக் கொடுத்தவர் ஆசிரியர் வீரமணி அவர்களே!)

அன்றைக்குத் துரோணாச்சாரிகள் ஏகலைவனின் கட்டை விரலை வாங்கி இருக்கலாம். இன்றைக்குக் கோடிக்கணக்கான ஏகலைவன்கள் தோன்றி விட்டார்கள் - அத்தனைப் பேர்களின் கட்டை விரல்களை  வெட்ட முடியுமா என்று வேங்கை எனச் சீறி எழுந்தது அந்தப் புரட்சிப் புயல்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

நேரத்தின் நெருக் கடிக் கிடையே தன் உரையைத் தொடங்கிய திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அந்தக் குறு கிய காலத்திலும் மூன்று முக்கிய தகவல் களை எடுத்துக் கூறினார்.

முதலாவதாக தந்தை பெரியார் தனது நாட் குறிப்பில் பதிவு செய்த தகவல்தான் அது.

"இந்தியா 'சுதந்திரம்' பெற்றது 15.8.1947இல், காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948இல் அதாவது சுதந்திரம் பெற்ற 165ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி இந்தியாவை மதச்சார்பற்றநாடு என்று சொன்னது 7.12.1947இல் காந்தி கொல்லப்பட்டது 30.1.1948இல், அதாவது அவர் "நம் நாடு மதச்சார்பற்றது" என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப் பட்டார்.

காந்தி இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து சுயமரியாதைக்காரராகி விட்டார்.  அவர் கொல்லப்படா விட்டால் இந்த நாடு சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்" என்று தந்தை பெரியார் அவர்கள் தமது டைரியில் எழுதியிருந்த குறிப்பினை தலைவர் ஆசிரியர் வெளிப்படுத்தியபோது, மேடையில் அமர்ந்திருந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஆர்வமுடன் கவனித்து உள் வாங்கினர்.

காந்தியார் படுகொலை செய்யப்பட்டதற்கான கார ணத்தை தந்தை பெரியார் எவ்வாறு கணித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதும், ஆச்சரியப்படத்தக்கது மாகும்.

இன்னொரு முக்கிய தகவலையும் தமிழர் தலைவர் கூறினார். ஒழுக்க சீலர் ஓமாந்தூரார் முதல் அமைச்சர். அவர் பார்ப்பனர்களை உதாசீனப்படுத்துகிறார்.தாடி யில்லாத ராமசாமி நாயக்கர் என்பது பார்ப்பனர்களின் கருத்தாக இருந்தது.

இதனை காந்தியாரைச் சந்தித்துத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் முறையிட்டனர். ஓமாந்தூரர் அவர்கள் காந்தியாரைச் சந்தித்து உண்மை நிலைகளை எடுத்துக் கூறினார். பார்ப்பனர்கள் மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதம், அதே நேரத்தில் கல்வியிலும், உத்தியோகத் திலும் எத்தனை மடங்கு அனுபவிக்கின்றனர் என்பதைப் புள்ளி விவரங்களுடன் காந்தியாரிடம் எடுத்து வைத்தார் முதல் அமைச்சர் ஓமாந்தூரார். உண்மை நிலையை புரிந்து கொண்டார் காந்தியார்.

மறுபடியும் பார்ப்பனர்கள் காந்தியாரைச் சந்தித்துக் கேட்ட பொழுது காந்தியாருக்கு மகா கோபம் வந்தது. பார்ப்பனர்களைப் பார்த்துக் கேட்டார்.

"ஆமாம் நீங்கள் பிராமணர்கள்தானே - நீங்கள் வேதம் படிக்க வேண்டியவர்கள் தானே - அதை விட்டு விட்டு இன்ஜினியரிங் படிக்க ஏன் ஆசைப்படுகிறீர்கள்? வருண தர்மப்படி வேதம் ஓத வேண்டியது தானே உங்கள் வேலை? உங்கள் கைகளில் 'டி'ஸ்கொயர் எதற்கு? பிணம் அறுக்கும் டாக்டர் வேலை எதற்கு என்று கேட்டார் காந்தியார்.

அன்றே முடிவு செய்துவிட்டனர் பார்ப்பனர்கள். காந்தியாரிடம் குடிகொண்டிருந்த சமூக நீதி உணர்வைப் புரிந்து கொண்டனர்.

காந்தியாரை விட்டு வைப்பது ஆபத்து என்று உணர்ந்தனர். அந்தஉணர்வுதான் கோட்சே உருவில் கைத் துப்பாக்கியாக காந்தியாரின் மார்பைப் பிளந்தது.

காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தைபெரியார் மீண்டும் காங்கிரசுக்கு வந்து அவர் தொண்டு தொடர வேண்டும் என்று காந்தியார் விரும்பினார். அவரைப் போன்ற பொதுத் தொண்டு ஆர்வலர்களைக் காண்பது அரிது என்று கருதினார் காந்தியார்.

அந்த எண்ணம் பெங்களூருவில் 1927ஆம் ஆண்டில் காந்தியார் - பெரியார் சந்திப்பாக அமைந்தது. பெரியாருடன் ராமநாதனும் உடன் சென்றிருந்தார்.

அந்த உரையாடல் சற்றுக் காரசாரமாகவும் அமைந்தது.

பார்ப்பனர்களைப் பற்றிய சர்ச்சையில் காந்தியார் பெரியாரைப் பார்த்துக் கேட்டார். "என்ன ராமசாமி உலகத்திலேயே ஒரு  பிராமணன்கூட நல்லவர் இல்லை என்பது உங்கள் கருத்தா?" என்று கேட்டார்.

"அப்படிப்பட்ட ஒரு பார்ப்பனரை நான் பார்த்த தில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்", என்று பெரியார் கேட்டபொழுது "கோபாலகிருஷ்ண கோகலே உத்தமப் பிராமணர் அல்லவா!" என்றார் காந்தியார்.

அதற்குப் பெரியார் சொன்ன  பதில்தான் முக்கியம் - ஏன் சுவையானதும்கூட.

"நீங்களோ மகாத்மா, எனக்கு சாதாரண ஆத்மா விலுமே நம்பிக்கை கிடையாது. மகாத்மாவாகிய தங் களுக்கே உலகத்தில் ஒரே ஒரு பார்ப்பான் மட்டும்தான் நல்லவனாகத் தெரிகிறார். என்னைப் போன்றவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரே ஒருவர் எப்படி தெரிய முடியும்?" என்று தந்தை பெரியார் சொன்ன பொழுது காந்தியாருக்கே ஆச்சரியம்.

தொடர்ந்து இந்துமதம் பற்றி விவாதம் நடந்தது. இந்துமதத்தில் சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக் கொண்ட காந்தியார், அதனை நாம் மாற்றியமைக்கலாம் என்று சொன்னபொழுது குறுக்கிட்ட தந்தை பெரியார் "அப்படி கை வைத்தவர்களைப் பார்ப்பனர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். நீங்கள் கை வைத்தாலும் உங்களையும் விட்டு வைக்க மாட்டார்கள்" என்று 1927இல் தந்தை பெரியார் சொன்னதுதானே 1948இல் நிகழ்ந்தது.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு எவ்வளவு துல்லியமானது என்று குறுகிய நேரத்திலும் செறிவான தகவல்களைச் சொன்ன திராவிடர் கழகத் தலைவர் இறுதியாக  தந்தை பெரியார் சொன்னதை நினைவூட் டினார்.

"வாழ்ந்த காந்தியார் வருணாசிரமவாதி; மறைந்த காந்தியார் வருணாசிரமத்தை ஒழிக்க விரும்பிய காந்தியார். காந்தியார் சுயமரியாதைக்காரராகி விட்டார்" என்று தந்தை பெரியார் தனது நாட்குறிப்பில் எழுதியது அந்தப் பொருளில்தான் என்று கூறிய தமிழர் தலைவர்  - மதச்சார்பின்மையும், சமூகநீதியும் தேவை என்று உணர்ந்த காந்தியார் கோட்சே உருவில் பார்ப்பனர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றார்.

(பார்ப்பனர்களை, பார்ப்பனீயத்தை எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டது வரலாற்றில் காணப்படும் தகவல்கள் தானே!)

கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் உரையாற்றினர். வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன் நன்றி கூறினார். கூட்டத்தின் துவக்கத் தில் மயிலை நாத்திகன் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது,. மக்கள் இரசித்து மகிழ்ந் தனர்.

கலந்துகொண்டவர்கள்

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.இ.இன்பக்கனி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மண்டல இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணைச் செயலாளர் கெடார் மும்மூர்த்தி, அமைப்பாளர் புரசை சு.அன்பு செல்வன், துணை அமைப்பாளர் சி.பாசுகர், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன்,  கருங்குழி கண்ணன், ஆத்தூர் சேகர், கொடுங்கையூர்  கோ.தங்கமணி,காரல்மார்க்ஸ், வேல வன்,  பெரம்பூர் ப.கோபாலகிருஷ்ணன்,சி.வாசு,

ச.முகிலரசு, க.சிட்டிபாபு, கு.ஜீவரத்தினம்,   மகளிரணித் தோழர்கள் வி.வளர்மதி, சி.வெற்றிசெல்வி, சுமதி,

த.மரகதமணி, தங்க.தனலட்சுமி, பொன்னேரி செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ் சாக்ரட்டீஸ், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், மா.குண சேகரன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் க.இளவரசன், ஆவடி மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல், வை.கலை யரசன், ஆவடி வெ.கார்வேந்தன், கலைமணி,  கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், செயலாளர் இரமேஷ், க.ச.க.இரணியன், புழல் ஏழுமலை,  வழக்குரைஞர்கள் சு.ந.விவேகானந்தன், ம.வீ.அருள் மொழி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாணவர் கழகத் துணைச் செயலாளர் நா.பார்த்திபன், மாணவர் கழக இணை   செயலாளர் பா.மணியம்மை, மாணவர் கழகம்

க.ஆற்றலரசி, தே.ஒளிவண்ணன், பெரு.இளங்கோ, கொரட்டூர் பன்னீர் செல்வம், நாகூர் சி.காமராஜ், கோபால்,  பெரியார் மாணாக்கன், கூடுவாஞ்சேரி ராசு,   ஆயிரம்விளக்கு சேகர், ஆனந்தன்,  சிவக்குமார், மகேஷ்வரன், விமல் ராஜ், சக்திவேல், திண்டிவனம் சிறீராமுலு,  விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் பாலாஜி,  செல்வம், இந்திய யூனியன் முசுலீம்லீக்  ஜெய்னுலாபிதீன், குலாம் முகமது யூசூப், கரீம், ஜாபர் சாதிக், சஞ்சய்குமார், அருண்குமார், ஏழுமலை, முகமது யூசுப், மற்றும் திமுக, மதிமுக, விடுதலைசிறுத்தைகள்கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள், அமைப்புகளின்  பொறுப்பாளர்கள், தென் சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் உள் ளிட்ட சென்னை மண்டல கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கண்டனப் பொதுக்கூட்ட முடிவில் மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன் நன்றி கூறினார்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

மதிமுக ஜீவன், புழல் த.ஆனந்தன், கெடார் மும்மூர்த்தி, த.கு.திவாகரன், கவிஞர் கண்மதியன், இளவரசன், பூவை செல்வி, பெரியார்செல்வி, ச.இ. இன்பக்கனி,கோ.நாத்திகன், தங்க.தனலட்சுமி, பொய் யாமொழி, ராமு, புழல் இராசேந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பலரும் நூல்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

 

வில்லிவாக்கத்தில் வெடித்த கேள்விகள்

சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் தான் இடஒதுக்கீடு என்று திட்டவட்டமாக அரசமைப்புச் சட்டம் சொல்லும் பொழுது பொருளாதார அளவுகோல் எங்கிருந்து வந்தது?

உச்சநீதிமன்றம் உட்பட பொருளாதார அளவுகோலை நிராகரித்தபோது இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைத் திணித்தது ஏன்?

ஜாதி அளவுகோல் என்பது மாறாதது. ஆனால் பொருளாதார அளவுகோல் என்பது அடிக்கடி மாறக் கூடிய எலாஸ்டிக் தன்மை கொண்டது.

ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் உள்ளவர்கள் ஏழைகளா?

இடஒதுக்கீடு வந்தால் தகுதி - திறமை போய் விடும் என்று சொன்ன பார்ப்பனர்கள், இப்பொழுது தங்களுக்கு இடஒதுக்கீடு கேட்பானேன்?

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர் ஜாதியினர் கல்வியிலும், சமூக ரீதியிலும் பின் தங்கியுள்ளனர் என்பதற்கான புள்ளி விவரம் எங்கே? எங்கே?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner