எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவையொட்டி வந்த அவரது 41ஆம் ஆண்டு நினைவு நாளும் இவ்வாண்டு எழுச்சியுடன் நடைபெற்றது.

அய்யா, அம்மா சிலைகளுக்கும், நினைவிடங்களுக்கும் மலர் வளையம், மரக்கன்றுகள் நடுதல் இவற்றோடு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.

அன்னை மணியம்மையார் பவுண்டேஷன்  சார்பாக லால்குடியையடுத்த தச்சன்குறிச்சி என்னும் கிராமத்தில் ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளிக்கான அடிக்கல் நாட்டுவிழா. நேற்று சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்றது.

நமது நிதி ஆலோசகர் ச. இராசரத்தினம் அவர்கள் தலைமையில் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தார் தமிழர்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

பெரியாருக்குப்பின் இயக்கத்தையும், அறக்கட்டளையை யும் காப்பாற்றிக் கொடுத்த மணியம்மையார் அவர்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளை எல்லாம் நமது ஆசிரியர் செய்து வருவதைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டினார் வரியியல் அறிஞர் இராசரத்தினம் அவர்கள்.

அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி  'ஈ.வெ.ரா. மணியம்மை பவுண்டேஷன்'  அமைக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும் அதற்கு ஆதரவு பெருகி வரும் வகையில்  நன்கொடைகளைக் கழகத் தோழர்களும், ஆதரவாளர்களும் அளித்து வருவது குறித்தும், லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் ஈ.வெ.ரா. மணியம்மை நூற்றாண்டு மெட்ரிக் பள்ளி தொடங்கப்படுவதற்கு இன்று அவர் நினைவு நாளில் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருப்பது குறித்தும் உணர்வு பொங்க கருத்துக்களை வெளியிட்டார் தமிழர் தலைவர்.

கருத்தரங்கம்

தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் அன்னையாரின் நினைவு நாள் கருத்தரங்கம் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி தலைமையில் தொடங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் க. பார்வதி வரவேற்புரையாற் றினார். கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி தொடக்கவுரை  - அறிமுகவுரையாற்றினார்.

அன்னை மணியம்மையார் பற்றி குறிப்பிடும் பொழு தெல்லாம் தந்தை பெரியார் நீண்ட காலம் வாழ்வதற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், பெரியாருக்குப் பின் இயக்கத்தையும், அறக்கட்டளையையும் காப்பாற்றியவர் என்று சொல்லப்படுவது வழக்கமாகும். மணியம்மையார் அவர்கள் வயது 25 இருக்கும் பொழுது பொதுத் தொண்டாற்ற முன் வந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அந்த வயதில் எளிதாக யாருக்கும் அத்தகு தொண்டுள்ளம் வருவது இயல்பான ஒன்றல்ல. அதைவிட பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருந்தார் என்பதுதான் தலையானது. பெரியார் ஒருவரை நம்பினார் - கணித்தார்  என்றால் அது சாதாரணமானதல்ல என்று பிரச்சார செயலாளர் குறிப்பிட்டது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

அன்னையார் மீது ஏவப்பட்ட பழிச் சொற்களும், வசவுகளும் ஏராளமானவை. பெரியாரிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. அவற்றை அனுபவிக்க ஒருவர் வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் என்றுகூட சிலர் நினைக்கலாம். அந்த நினைப்பு அப்பட்டமாய் தவறானது என்பதற்கு என்ன அடையாளம் என்றால், அந்தச் சொத்துக் களின் பலனை - பயனை எந்த வகையிலும் மணியம்மையார் அனுபவித்தவர் இல்லை.

தலையைக்கூட சீவாமல் இயக்கத்திற்குத் தலைமை வகித்தவர் அன்னை மணியம்மையார் என்று அழகாகக் குறிப்பிட்டார் அருள்மொழி.

பொள்ளாச்சி வன்கொடுமையைப் பற்றிச் சொல்லும் பொழுது, பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதைக் கூட சொல்லுவதற்குத் துணிவு இல்லை, தயக்கம் இருக்கிறது, வெளியில் தெரிந்தால் நம் எதிர்காலம் என்னாவது என்ற எண்ணம் நிலவி வரும் ஒரு கால கட்டத்தில், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை எடுத்துச் சொல்லவும், பரிகாரம் தேடவும் ஒரு இடம் இருக்கிறது - அது பெரியார் திடல் என்ற நம்பிக்கை வளர்ந்து வருகிறது - டாக்டரிடம் பரிசோதனைக்காக செல்லும் ஒரு பெண்தன் உடலைக் காட்டும் மனநிலையை ஒப்பிட்டு இதனைக் கூறினார் பிரச்சார செயலாளர்.

ஊடக இயலாளர் இரா. உமா

கலைஞர் தொலைக்காட்சி ஊடக இயலாளர் உமா தன் உரையில் குறிப்பிட்டதாவது: தன் வாழ்வை எவர்  தீர்மானித்துக் கொள்கிறார்களோ அவர்தான் தலைவர் ஆகும் தகுதி உடையவராக இருக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டானவர்தான் நமது அன்னை மணியம்மையார்.

சிறு வயது முதற் கொண்டே தன்னைச் சுற்றி நிகழும் உரையாடல்கள் அவரிடத்தில் தந்தை பெரியார் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிறு வயதிலேயே பெரியாருக்கு எந்தவகையிலாவது உதவிட வேண்டும் என்ற எண்ணம் அவரை உந்தித் தள்ளியது.

அன்னை மணியம்மையார் அவர்களின் கொடியேற்று விழா உரையை நான் படித்திருக்கிறேன் தேசியக் கொடியில் தொடக்கத்தில் முதலில் வெள்ளை, இரண்டாவது பச்சை, மூன்றாவது சிவப்பு இருந்தது; அதற்குப் பிறகு பச்சை, வெள்ளை மூன்றாவது சிகப்பு என்பது காவி வண்ணமாக மாறியதை எல்லாம் அம்மா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். அந்தக் காவியின் அபாயம் நமக்கு இப்பொழுது நன்றாகவே புரிகிறது.

இன்றைய தினம் இணைய தளங்களின் போக்கினைக் குறித்தும் உமா கருத்துத் தெரிவித்தார். நாம் செய்யும் பதிவுகளுக்கு, விடைகளுக்குப் பதில் கூற முடியாதவர்கள் கீழ்த்தரமான விமர்சனங்களில் இறங்குகிறார்கள். நாங்கள் அஞ்சுவதில்லை. அவற்றையெல்லாம் புறந்தள்ளி பதிலடி கொடுத்து வருகிறோம். அன்னை மணியம்மையார் சந்திக்காத ஏச்சுகளா - அவதூறுகளா - பழிச் சொற்களா? அந்த வகையில் அன்னையார் தான் எங்களுக்கு வழிகாட்டி என்று மிகப் பொருத்தமாக சொன்னார் உமா.

சட்ட எரிப்புப் போராட்டத்தில் சிறையில் மரணமடைந்த இரு கருஞ்சட்டைத் தோழர்கள் சிறைக்குள்ளேயே புதைக் கப்பட்டனர். அன்னை மணியம்மை அவர்கள் முதல்அமைச்சர் காமராசர் வரை சந்தித்து, புதைக்கப்பட்ட பிணங்களைத் தோண்டி எடுக்கச் செய்து அந்த ஜாதி ஒழிப்பு வீரர்களின் பிணங்களை திருச்சி மாநகரில் கம்பீரமாக ஊர்வலமாக எடுத்துச் சென்றாரே - அந்தச் செயல் அன்னையாரின் போராட்டப் பெருங் குணத்துக்கோர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டார்.

நான் எப்பொழுதும் உரிமையுடன் நினைப்பது  - நமக்கு என்று ஒரு இடம் இருக்கிறது அது பெரியார் திடல் - நமது உரிமைக்குரலை ஒலிப்பதற்கென்று - ஓரிடம் பெரியார் திடலே என்று சொன்ன உமா இறுதியாக அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான மார்ச்சு 10ஆம் தேதியை தமிழகப் பெண்கள் உரிமை நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்று முத்தாய்ப்பாக கூறினார்.

பேராசிரியர் முனைவர் திராவிட ராணி

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் திராவிடராணி அவர்கள் தன்னுரையில் குறிப்பிட்டதாவது:

திராவிடர் கழக மாநாட்டுப் பந்தலில் தொட்டில் கட்டி அதில்  வளர்ந்தவள் தான் இந்தத் திராவிடராணி  என் தந்தை காவல்துறையில் பணியாற்றியவர். தந்தை பெரியார் கொள்கைகளை, திராவிடர் கழகக் கொள்கைகளை, எனக்குச் சிறு வயது முதற் கொண்டே ஊட்டி வளர்த்தவர் என்  தந்தையார் என்று பெருமிதமாகக் குறிப்பிட்டு தன் பேச்சைத் தொடங்கினார்.

யார் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் இது திராவிட இயக்க மண்தான் - பெரியார் பூமிதான். அதன் காரணமாகத்தான் திராவிட இயக்கத்தைத் தவிர வேறு யாராலும் ஆட்சிக்கு வர முடியவில்லை.

தந்தை பெரியாரைப் பாராட்டப் பலரும் இருக்கிறார்கள் - அதனால் அவர்கள் பெருமையும் கொள்கிறார்கள். ஆனால் பெரியார் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றவர்கள்தான் திராவிடர் கழகத் தோழர்கள் - பாராட்டுவது என்பது வேறு, கொள்கையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு.

நாம் அணிந்திருக்கும் கருப்பு உடையின் அடையாளம் இன்னும் நாம்  அடிமைத்தளத்தில்,  உழலுகிறோம் என்பதற்கான அடையாளம்!

அன்னை மணியம்மையார்பற்றி நாட்டு மக்களுக்கு குறிப்பாகக் கிராமப் பகுதிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளிப் பாடங்களில் அவர்கள் பற்றிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.

இராமாயணம், மகாபாரதம் கற்பனைக் கதைகள் - உண்மையில் நடந்தவையல்ல; அவற்றை எல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் வாழ்ந்த வரலாறு படைத்த மாந்தர்களைப் பாடத் திட்டத்தில் வைக்கத் தயங்குவது சரியல்ல.

பெரியாருக்குப் பிறகு நிறுவனப்படுத்தியது - நூல்கள் வெளியீடு என்பவற்றை முறைப்படுத்தியவர் அன்னை மணியம்மையார் என்று புகழாரம் சூட்டினார் பேராசிரியர் திராவிட ராணி அவர்கள்.

என்னைப் பொறுத்தவரை போதிய படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்தவள், ஜாக்கெட் போடக் கூடாது என்று ஆக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவள், செருப்புப் போடக் கூடாது என்று உரிமை மறுக்கப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவள் - இன்று இவற்றையெல்லாம் அணியும், அனுபவிக்கும் நிலைக்கு உயர்ந்ததற்குக் காரணம் தந்தை பெரியாரே என்று முத்திரை பதித்தார் முனைவர் திராவிடராணி (அவருக்கு "அன்னை மணியம்மையார் களஞ்சியம்" எனும்  நூலை பரிசளித்தார் தமிழர் தலைவர்).

தமிழர் தலைவர் தெரிவித்த பல்வேறு தகவல்கள்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

அன்னை மணியம்மையார் அவர்கள் நெருக்கடிக் காலம் என்னும் நெருப்பாற்றைத் தாண்டி வந்தவர். 'விடுதலை' ஏட்டுக்குத் தணிக்கை என்ற பெயரால் தொல்லை, இன்னொரு பக்கம் வருமான வரித் துறையின் தொல்லை, இயக்கத்திற்கு வரும் வாடகை உள்ளிட்ட வருவாய்களை வருமான வரித் துறைக்குத் திருப்ப வேண்டும் என்று உத்தரவு போட்டனர். இந்த சவால்களை எல்லாம் சந்தித்தவர் அம்மா அவர்கள்.

மிசா சிறையிலிருந்து நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். வருமான வரித்துறை அதிகாரியைச் சந்தித்து நியாயம் கேட்டேன்.

வருமான வரித்துறைக்கு நாங்கள் செலுத்த வேண்டிய வரி பாக்கியை தவணை முறையில் செலுத்தத் தயார் - நாங்கள் கல்வி நிறுவனங்களை நடத்துகிறோம், இயக்க ஏடுகளை நடத்துகிறோம், அதற்குப் பணம் தேவைப்படுகிறது என்று சொன்னபோது வருமானவரித்துறையின் அந்த அதிகாரி என்னிடம் சொன்னார், உங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கையொப்பமிட்டு இந்தக் கடிதத்தை எங்களுக்கு அனுப்பியுள்ளார்கள்' என்று சொல்லி, அந்தக் கடிதத்தை என்னிடம் காட்டினார்.

அடுத்து அவர் சொன்னதுதான் அதிர்ச்சிக்குரியது. வருமான வரித் தொடர்பானதாவாவைத் தீர்த்துக் கொள்வதற்கு சுலமபான ஒரே வழி - 'விடுதலை' ஏட்டை நிறுத்தினால் போதும் என்றார்.

ஒரு பக்கத்தில் எனக்கு அதிர்ச்சி! அப்பொழுது அந்த அதிகாரியிடம் சொன்னேன். 'விடுதலை'  ஏட்டை நிறுத்த ஒப்புக் கொண்டு விட்டால் எங்கள் தோழர்களை எங்களால் சந்திக்க முடியாது. இரண்டாவது எங்கள் தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு, நேராக உங்கள் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்துதான் முற்றுகையிட நேரும் என்று நான் சொன்னபொழுது, "என்ன இப்படிசொல்லுகிறீர்கள்" என்று என்னைத் திருப்பிக் கேட்டார். உண்மையைத் தான் சொல்லுகிறேன் என்றேன். அதற்குமேல் மேல் முறையீடு சென்று அதில் வெற்றி பெற்றோம் என்று ஆசிரியர் கூறிய தகவல்கள் எல்லாம் பலருக்குப் புதியதாகவே இருந்தன.

நெருக்கடி நிலை காலத்தில் அம்மா என்ன செய்தார்கள்? தம் கையில் இருந்த எல்லாப் பணத்தையும் போட்டு பெரியார் திடல் முகப்பில் இருக்கும் ஏழு மாடி கட்டடத்தைக் கட்டி முடித்தார்.

இன்னொரு முக்கிய தகவலைத் தெரிவித்தார் ஆசிரியர். இந்தப் பெரியார் திடலை நமக்கு முன்னின்று வாங்கிக் கொடுத்தவர் கோவை ஜி.டி. நாயுடு அவர்கள்  - அப்பொழுது ஒரு லட்ச ரூபாய்.

பக்கத்தில் இருக்கும் 'தினத்தந்தி' பகுதியை ஆதித்தனார் வாங்கினார். இந்த இடத்தையும் வாங்கிட வேண்டும் என்று விரும்பினார்.

அய்யாவையும் சந்தித்தார் ஒரு லட்ச ரூபாய்க் கொடுத்து இந்த இடத்தை வாங்கியுள்ளீர்கள். நான்கு லட்ச ரூபாய்த் தருகிறேன், இந்த இடத்தை எனக்குக் கொடுங்கள் என்று கேட்டபோது, நாம் வாங்கிய ஒரு லட்ச ரூபாய்க்கு நான்கு மடங்கு ரூபாய்த் தருவதாக சொல்லுகிறாரே ஆதித்தனார் - கொடுத்து விடலாமாம் என்ற எண்ணம் தந்தை பெரியாருக்கு; ஆனாலும் அம்மாவின் கருத்தைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று ஆதித்தனாரிடம் கூறினார் அய்யா.

அம்மாவிடம் அய்யா சொன்னபோது, அம்மாவுக்கு வந்ததே கோபம் - 'அது எப்படி?'  இது சாதாரணமான இடம் இல்லை. இயக்கத்துக்குத் தலைமையிடம். நான்கு லட்சம் இல்லை, நான்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கொடுக்கக் கூடாது' என்று பிடிவாதமாக இருந்தார் அம்மா. "ஆதித்தனாரிடம் கொடுக்கிற மாதிரி சொல்லி விட்டேனே" என்று அய்யா தயங்கியபோது அம்மா அவர்கள் 'நானே ஆதித்தனாரிடம் பேசுகிறேன்' என்று கூறி, ஆதித்தனாரிடம் உண்மை நிலையைச் சொன்னபோது அவரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

இன்று இந்த இடத்தில் நாம் கம்பீரமாக  இருக்கிறோம், நிற்கிறோம், தலைமைக் கழகம் இருக்கிறது, 'விடுதலை' அலுவலகம் இயங்குகிறது என்றால் அதற்குக் காரணம் அம்மா அவர்கள்தான் என்று ஆசிரியர் சொன்னபொழுது பலத்த கரஒலி! கரஒலி!! தனக்கென இருந்த தனி வாழ்வைப் பொது வாழ்வுக்கு அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார்.  அந்தப் பொது வாழ்வில்  மான அவமானம் பார்க்கக் கூடாது என்பதற்கு இலக்கணமாக, எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் அம்மா என்று ஆசிரியர் கூறினார்.

வட சென்னை மகளிர்ப் பாசறை அமைப்பாளர் சுமதி கணேசன் நன்றி கூறினார். மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்  வழக்குரைஞர் பா. மணியம்மை நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்குக் குடும்பம் குடும்பமாக ஏராளமான தோழர்கள் திரண்டு வந்தனர். மதிய உணவுக்குப் பிறகு சென்னை மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகில் , சென்னை மண்டல மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில்  நடைபெற்ற  - பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நடத்தப் பெற்ற கண்டனப் போராட்டத்தில் கழக மகளிர் அணியினர் -  பாசறையினர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner