எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆரியர்களுக்கு, ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அஸ்தியில் ஜூரம் கண்டு விட்டது. தேர்தல் முடிவு - தங்களை முகவரியற்ற முண்டங்களாக ஆக்கி விடும் என்ற அச்சம் அவர்கள் நாடி நரம்புகளை யெல்லாம் குடைய ஆரம்பித்துவிட்டது. குருதி கொழுப்பு எடுத்து கோமா நிலைக்கு ஆளாகி விட்டார்கள்.

அதன் விளைவுதான் தந்தை பெரியார் சிலை உடைப்பு - இந்த மனிதன் அல்லவா, நம் ஆதிக்கத்தின் ஆணிவேரில் ”வெடி குண்டை” வைத்தவர்,

“சூத்திரன் என்றால் ஆத்திரம் கொள்” என்ற சுலோகத்தை சொல்லிக் கொடுத்தவர்,

பக்தி என்னும் பெயரால் கண்மூடித் தனமாக ஆரியத்தின் அடிமையாகக் கிடந்த மக்களைக் கிளர்ந்தெழச்செய்த கிழவன் அல்லவா!

செத்தொழிந்தார் என்று நினைத்து, நிலை கொள்ளாமல் குதியாட்டம் போட்டிடலாம் என்ற நமது கனவு எல்லாம் கானல் நீராகி விட்டதே!

அவர் செத்தாலும் அவரின் சிந்த னைகள் எரிமலையாகச் சீறிக் கொண்டி ருக்கின்றனவே!

அவர் வகுத்துத் தந்த கொள்கைகளும், கோட்பாடுகளும் இன்றளவும் நின்று, நிலை பெற்று நம்மை நிலை குலையச் செய்கின்ற னவே!

சிலையாக நின்று நம் தூக்கத்தைக் கலைத்து கொண்டு இருக்கிறாரே, கடவுள் நம்பிக்கையாளர்களும் கூட பொங்கிச் சமுக நீதி என்ற கைத்தடியைத் தூக்கிக் கொண்டு கண்டன ஊர்வலங்களை நடத்துகிறார்களே!

இந்தக் கடவுளும், பக்தியும் மதச்சடங்கு களும் பார்ப்பனீயத்தின் அடிப்படை என்பதையல்லவா பாடம் சொல்லிக் கொடுத்து, பயிற்சியையும் பக்குவத்தையும் சொல்லிக் கொடுத்துப் போயிருக்கிறார்!

ஒரு வீரத் தலைவரையும் அடையாளம் காட்டிச் சென்று இருக்கிறார்.

ஆத்திரமும், ஆவேசமும் கரைபுரள இந்தப் பார்ப்பன சக்திகள்,  அதன் தொங்கு சதைகள் இரவோடு இரவாக, கோழைத் தனம் பெற்றெடுத்த இந்த குல்லூகப்பட்டர் பரம்பரையினர் தந்தை பெரியார் சிலையை சிதைக்கின்றனர். அறந் தாங்கியில் தந்தை பெரியார் சிலையை சிதைத்துள்ளனர்.  மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று புரட்சிக் கவிஞர் பாடினாரே; அந்த மண்டைப் பகுதியை அடித்துத் தாக்கியுள்ளனர்.

அட மாங்காய் மடையர்களே! அது கற்சிலைதான் - அதற்கு மகத்துவம் இருக்கிறது என்று நம்பக் கூடியவர்கள் அல்லர் நாங்கள்.

ஆனால் நீங்கள் செய்ததன் எதிர் வினை என்ன தெரியுமா? கட்சிகளைக் கடந்து ஒட்டுமொத்தமான பார்ப்பனர் அல்லாதாரையும் வீட்டுக்குள்ளிலிருந்து வீதிக்கு அழைத்து வந்து விட்டீர்களே. தலைவர்கள் எல்லாம்  கண்டனக் கணைகளை எழுப்புகின்றனரே!

1971ஆம் ஆண்டில் அப்படித்தான் இராமனா, (பெரியார்) இராமசாமியா? என்று நீங்களே தேவையில்லாமல் பேசி - தேர்தலின் திசையையே மடை மாற்றம்  செய்தீர்கள்!

விளைவு என்ன? 1967இல் தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 138 என்றால், 1971இல் 184 என்று எகிறியது. அமைச்சர் களின் பதவிப் பிரமாணம் தந்தை பெரியார் திருமுன்னே நடந்தது என்பது வரலாறு. பட்டும் புத்திக் கொள்முதல் பெறவில்லையே, இந்தத் தேர்தலையும், அந்தத் திசைக்கு இழுத்துச் சென்று விட்டீர்கள். செய்யுங்கள்! செய்யுங்கள்!!

முட்டாளுக்கு ஓரிடம், புத்திசாலிக்கு மூன்று இடம் என்பது இதுதானா? பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர புத்திசாலிகள் அல்லர் என்பார் அண்ணல் அம்பேத்கர்.

வினை விதைத்து விட்டீர்கள் - அதன் அறுவடையைக் காணப் போகிறீர்கள்!

பெரியாருக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லாம் பெரியார் கொள்கைப் பயிருக்கு எருவாயின என்பதுதான் கடந்த கால வரலாறு.

இப்பொழுதும் அப்படித்தான்; பிஜேபி என்னும் மதவாத சக்தியின் அய்ந்தாண்டு கால ஆட்சி என்பது!

வெகு மக்களுக்கு விரோதமான பார்ப்பனர்கள் ஆதி பத்தியத்தை மீண்டும் மகுடம் சூட்டிய மனு தர்ம ஆட்சி.

சமுக நீதிக்குச் சம்மட்டி அடி கொடுக்கும் ஆட்சி - தாழ்த்தப்பட்டவர் களுக்கும்; சிறுபான்மையினருக்கும் எதிரான எரியீட்டி ஆட்சி - பெண் ணுரிமையை ஏற்காத ஆட்சி  - இதனை எந்த விலை கொடுத்தேனும் வீழ்த்த வேண்டும் என்று வெகு மக்கள் திரளும் போது அவர்களின் கண்களுக்கு, சிந்தனைகளுக்குப் பேருருவாக எழுந்து மிரட்டி நிற்பவர் தந்தை பெரியார்தான்.

அதனுடைய வீச்சுதான் திருச்சியில் திரண்டெழுந்த இலட்சோப லட்ச கருஞ்சட்டை இளைஞர்களின் பேரலை - பெரு முழக்கம்!

என்னவோ நினைத்தோமே - இந்த இராட்சதர் கூட்டம் எங்கிருந்து வந்தது? - தப்புக் கணக்குப் போட்டு விட்டோமே என்று ஒழுங்காக சிந்தித்து இருந்தால் , புது யூகங்களை வளர்த்திருக்கலாமே!

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று ஆரியம் அன்றாடம் நிரூபித்து கொண்டு தானே இருக்கிறது.

பெரியாரை செருப்பால் அடிப்போம் என்று ஒரு காரைக்குடி காவி கத்தியது. அதன்மீது வழக்குப் போட்டால் - வழக்குப் போட முகாந்திரம் இல்லை என்கிறது ஆரியத்துக்கு அடிபணிந்து விட்ட அண்ணா திமுக ஆட்சி! (அண்ணாவின் ஆரிய மாயை நூலை - ஒரே ஒரு பக்கம் புரட்டியிருந்தால் கூட அவர்களின் புத்தியில் கொஞ்சம் உறைத்திருக்கும்)

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியுற்று பிஜேபி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததுதான் தருணம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஓர் உஞ்ச விருத்தி (பிஜேபியின் தேசிய செயலாள ராம் இந்த லட்சணத்தில்) எப்படியெல்லாம் ஆட்டம் போட்டது - ஆர்ப்பாட்டக் கச்சேரி நடத்தியது, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது - என்று ஆனந்தக்கூத்தாடி, உடைக்கப்பட்ட லெனின் சிலையை வீடியோவாக வெளியிடுவோம் (தனது முகநூலில்) என்று பதிவிட்டது என்பது நினைவில் இருக்கிறதா?

லெனின் யார்? அவருக்கும், இந்தியா வுக்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத் துக்கும் இந்தியாவுக்கும் என்ன  தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில்; இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை  தமிழகத்தில் ஜாதி வெறியர் ஈ.வெ.இராமசாமி சிலை என்று கூறவில் லையா? (7.3.2018)

இன்றைக்குப் பா.ஜ.க.வுக்காக வக்காலத்து வாங்கி   தந்தை பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் காட்டிக் கொடுத்துப் பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமாரின் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி எடுத்த நடவடிக்கை என்ன?

இந்த வெட்கக் கேட்டில் பெரியார், அண்ணா உருவங்களை பதாகைகளிலும், சுவரொட்டிகளிலும் பொறிப்பது அறிவு நாணயமா?

இதற்கெல்லாம் அண்ணா தி.மு.க. பதில் சொல்ல வேண்டிய, விலை கொடுக்க வேண்டிய தருணம் வரும் - தந்தை பெரியார் தலையை உடைத்த தருணத்தில் கூட எதிரிகளுக்கு வக்காலத்துத் தோள் போட்டு நிற்கும் இவர்களின் தலைகள் வெட்கத்தால் தொங்கும் நிலை ஏற்படத்தான் போகிறது.

எந்தத் தேதியில் பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா என்ற இனவெறியன் பெரியார் சிலையை உடைப்போம் என்று சொன்னாரோ, அதே நாள் இரவில் (7.3.2018) வேலூர் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை திருப்பத்தூர் பிஜேபியின் முத்துராமன்  என்பவர் சேதப்படுத்தினாரே!

அந்த வழக்கு என்னவாயிற்று? தண்டனை அளிக்கப்பட்டதா? தூண்டிய எச்.ராஜா அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ராஜநடைப் போட்டு திரிவது எப்படி?

இதே புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகில் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களால் 2003இல் திறந்து வைக்கப்பட்ட புதுக்கோட்டை விடுதியில் உள்ள தந்தை பெரியார் சிலை தாக்கப்பட்டதே! (20.3.2018)

தாராபுரம் தீவுத்திடல் பூங்காவில் உள்ள தந்தை பெரியார் சிலை தந்தை பெரியார் பிறந்தநாளில் (17.9.2018)  அவமானப்படுத்தப்பட்டதே! இரவோடு இரவாக தந்தை பெரியார் தலையின் மீது செருப்பை வைத்துவிட்டு ஓடி மறைந்த அந்தப் பிஜேபி பேர் வழி சென்னை உயர்நீதிமன்றத்தில்  அவர் ஒரு பைத் தியக்காரன் என்று மருத்துவச்சான்று பெற்று விடுதலை பெறவில் லையா?

அட கோழைகளே! செய்ததற்குப் பொறுப்பேற்கும் திராணியில்லாமல் ஏனிந்த இழி செயலில் இறங்கிட வேண்டும்? செய்ததையும் செய்துவிட்டு என் அட்மின் செய்து விட்டார் என்று சொல்லுபவர்தானே பிஜேபியின் தேசியச் செயலாளர்.

அதே தேதியில் - தந்தை பெரியார் பிறந்தநாளான (17.9.2018) சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையின் மீது செருப்பை வீசிய ஒரு சிறு நரி ஜகதீசன் (வழக் குரைஞராம் இந்த லட்சணத்தில்) பிஜேபி அல்லவா? (பிறகு கம்பி எண்ணினார்)

மத்தியில் பிஜேபி ஆட்சி, மாநிலத்தில் அதன் கொத்தடிமை ஆட்சி இருக்கிறதே என்று அசட்டு தைரியத்தில் இவையெல்லாம் நடந்திருக்கிறது. இந்த நேரத்தில் பார்ப்பனர் அல்லாதாரே, அல்லாதாரே! நாம் செய்ய வேண்டியது என்ன? பதிலுக்குப் பதில் வன்முறையில் இறங்குவதா? அல்ல அல்ல - அது செல்லுபடியாகாத ஆரியத்தின் சிட்டா அடங்கல்!

தேர்தலைத் திசை திருப்பத்தானே இந்த இழிவில் இறங்கி விட்டார்கள்? அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த தேர்தலில் கட்டிய பணத்தைக் கூட திரும்பப் பெறமுடியாது பிஜேபி தலைமையிலான இந்த அணி என்பதைச் செயலில் காட்ட வேண்டுமா? பெரியார் மீது கை வைத்தால் அதன் கண்டு முதல் 1971 பாடம் தான் என்று மீண்டும் வரலாற்றில் நிலைநாட்ட கிடைத்ததோர் அரிய சந்தர்ப்பம் அல்லவா!

உங்கள் வாக்கு மட்டுமல்ல - உங்கள் முயற்சியும் - மக்களுக்கு எடுத்துரைக் கும் அறிவுத்திறனும் இணைந்து கை கோத்து, முதலில் உங்கள் பகுதியில் ஒவ்வொரு  வாக்காளரையும் பண்போடு அணுகி, பகுத்தறிவோடு எடுத்துரைத்து திமுக அணியை வெற்றி பெறச் செய்வீர்!.

அந்த நாள்தான் ஆரியத்தின் ஆதிக்க சவப் பெட்டிக்கு ஆணி அடிக்கப்படும் அரும்பெரும் நாள், அரும்பெரும்நாள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner