
கோவையில் வரும் 25 ஆம் தேதியிலும், சேலத்தில் வரும் 26 ஆம் தேதியிலும் ஆர்ப்பாட்டங்களைத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார்.
பாவத்தின் தண்டனை மரணம் என்று விவிலியம் கூறுவதுண்டு. அது அறிவிற்கு ஏற்றதன்று.
இந்திய தேசத்தின் குடிமகனாக இருப்பதால் கிடைக்கும் தண்டனை - தமிழர்கள் நாவறண்டு, வயிறு காய்ந்து சாவதுதான் போலும்.
தாமிரபரணியைத் தவிர தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ்நாட்டிலேயே தன் பயணத்தை முடித்துக் கொள்ளும் நதி வேறு எதுவும் இல்லை என்பதால் இந்த நிலையோ!
ஆந்திரமும், கருநாடகமும், கேரளமும் தமிழ்நாட்டு மக்களைப் பட்டினி போடுவது என்ற ஒரே தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார்களோ!
ஒரு பக்கம் பாலாற்றுப் பிரச்சினை! இன்னொரு பக்கம் காவிரிப் பிரச்சினை!! மூன்றாம் பக்கம் கேரளா என்று தமிழர்களை நோக்கிச் சூலாயுதம் தூக்கி நிற்பது ஏன்?
இந்தியா ஒரே நாடு என்பது பொய்யா?
ஆமாம் என்று சொல்லிவிட்டு, கேரளம் முட்டுக் கட்டை போடட்டும்; கருநாடகாவும் நடத்தட்டும் தனது தர்பாரை! ஆந்திரமும் தன் பங்குக்குப் பாலாற்றின் குறுக்கே தடுப்பணையைக் கட்டித் தமிழர்களின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போடட்டும்!
தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரமும், கல்பாக்கத்தில் கிடைக்கும் மின்சாரமும் மட்டும் மற்ற மற்ற மாநிலங்களுக்குப் பங்குப் போட்டுக் கொடுக்க வேண்டும். கருநாடகத்துக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட், கேரளாவுக்கோ நாள்தோறும் 9 கோடி யூனிட், ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் தாரை வார்க்கப்படுகிறது. வெளி மாநிலத் தண்ணீர் மட்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவே கூடாது. ஆகா, என்னே தாராள உள்ளமும், தனிப்பெருங் கருணை யும்! (வாழ்க இந்திய தேசிய ஒருமைப்பாடு!)
ஓர் உண்மை தெரியுமா? 2000 டி.எம்.சி. நீரை கேரளா கடலில் கலக்க விட்டாலும் விடுமே தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சொட்டு நீரைக் கூடக் கொடுக்க மனம் ஒப்பாது!
இதைப்பற்றியெல்லாம் எந்த பார்ப்பன ஏடும் சிணுங்காது. சிணுங்கினால் இந்திய ஒருமைப்பாட்டின் சுவாசக் குழாய் அடைபட்டுப் போய்விடாதா!
இப்பொழுது கோவை மக்களுக்குக் கிடைத்து வரும் சிறுவாணி நீருக்கும் ஆபத்தோ ஆபத்து!
பவானியின் குறுக்கே சித்தூர் அருகில் அணை ஒன்றைக் கட்டும் வேலையில் கேரளா இறங்கியுள்ளது. கோவை மக்களின் தவித்த வாய்க்குத் தண்ணீர் மறுக்கப் படுவது மட்டுமல்ல - திருப்பூர், ஈரோடு மாவட்டங் களில் வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப் படும். பின்னலாடை திருப்பூரில் கூட இனி கோவணாண்டிகளைப் பார்க்கலாம்.
என்னதான் நடந்தாலும் இந்திய அரசு கண்டு கொள்ளாது. கேட்டால் அதோ பாருங்கள் குரங்கு பொம்மையை! கண்களையும், காதுகளையும், வாயையும் பொத்திக் கொண்டு இருக்கிறதே - உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா - அர்த்தமும் புரியவில்லையா என்பார்கள்.
நல்ல தேசியம் - நல்ல இறையாண்மை!
மயிலே மயிலே என்றால் இறகு போடுமா? ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணுமாம் - பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்கணுமாம் - சொல்லி வைத்திருக்கிறார்கள்.
எனவே தோழர்களே! கோவை ஆர்ப்பாட்டம் கொந்தளிக்கும் கடலாய் குமுறும் எரிமலையாய், கட்டுப் பாட்டோடு நடக்கட்டும்! நடக்கட்டும்!!
சேலம் கோட்டம் ரயில்வேக்கு தலைமை இடம் பாலக்காடாக இருந்தது. சேலம் கோட்டம் என்று சொல்லிக் கொண்டு, பாலக்காட்டில் கொண்டு போய் தலைமையகத்தை வைப்பது என்ன நியாயம் என்று போராடி சேலத்திற்கே தலைமையிடத்தைக் கொண்டு வந்தோம்.
ஆண்டுகள் பல ஆனபிறகு, இப்பொழுது மீண்டும் அதைப் பாலக்காட்டுக்குக் கொண்டு போகத் துடிக்கிறார்கள்.
மலையாளிகளின் இன உணர்வுக்கு ஈடு ஏது? தென்னகத்தில் ரயில்வே வளம் கொழிப்பு என்பது கேரளத்தில்தான்.
ஈரோடு எக்ஸ்பிரஸ் என்பார்கள்; பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளி கோவை எக்ஸ்பிரஸ் என்பார்கள். அடுத்த கட்டமாக அது கேரளாவின் மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிவிடும்.
என்னே தந்திரம்! தமிழனைப் போல இளிச்சவாயன் எங்குக் கிடைப்பான்?
கருஞ்சட்டைச் சேனைதான் இருக்கவே இருக்கிறது. வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கும் முப்படையும் அதுதானே!
வரும் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சேலத்தில் சிலிர்த்தெழுந்தது காண் கருஞ்சட்டை சிங்கக் கூட்டம் என்று கண்டோர் திகைக்கும் அளவுக்கு ஆட்சியாளர்கள் அகலவிரித்துக் கண்களால் பார்க்கும் அளவுக்கு நடக்கட்டும், நடக்கட்டும் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
- மின்சாரம் -