வாழ்வியல் சிந்தனைகள்

‘திடீர் இடியோசை’ என்ற ‘ஓஷோ’வின் புத்தகத்தைப் படித்தேன்.

ஓஷோ ஒரு சுதந்திர சிந்தனையாளர்; தனித் தன்மையுடன் எதையும் கூறுபவர்.

மனிதர்களைப் பிணைத்துள்ள பல்வேறு சங்கிலிகள், தளைகள், விலங் குகளை அவர்கள் அறுத்தெறிந்திட தனித்த பாதை வகுத்தவர்.

வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கோணத்தில் எப்போதும் பார்த்து, அதைப் பதிவு செய்தவர்!

குழந்தைகளை நாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்ற பழைய கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்குகிறார் ஓஷோ.

தனி மனிதச் சுதந்திரத்தின் தேவை - பெருமைகளையெல்லாம் பேசுபவர்கள், அச்சுதந்திரத்தை மனிதர்களின் குழந் தைப் பருவத்திலேயே பறித்துவிட்டேம் என்பதை ஏனோ மறந்தோம்? என்று ஒரு சொடுக்கு சொடுக்கிறார் ஓஷோ.

ஆழமாகச் சிந்தித்தால்தான் அவரது கருத்தை எவரும் ஏற்க முடியும்.

வழமையான - வாடிக்கையான சிந்தனையோடு, ‘பழைய எண்ணத்தில் ஊறிய ஊறுகாய்' போன்றோர் அவ் வளவு எளிதாக அக்கருத்தை ஏற்க மாட்டார்கள்!

அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டைப் பெற்றோர்கள் பிஞ்சுகளிடம் - குழந் தைகள் என்ற இளந்தளிர்களிடம் திணிக்கும்போது, தென்றலால்கூட கிழிக்கப்படும்தளிர்களாகவும்அவை கள் பற்பல நேரங்களில் மாறி விடு கின்றனவே! இல்லையா?

Spartan Decipline - Military Discipline என்பதெல்லாம் பற்றிப் பேசப்பணிதல் -  கட்டுப்பாட்டின் உச்சம் - கடுமை அவைகளுக்கு உண்டு. அந்தத் துறைக்கு இராணுவத்திற்கு அது தேவைதான். அங்கே கட்டுப்பாடு தான் முன்னுரிமைக்குரியதே தவிர, தன்னிச்சையான தலைவணங்காத் தன்மை நுழையக் கூடாத ஒன்று.

குழந்தைகள் பற்றி ஓஷோவின் புத்தொளிப் பாய்ச்சல் இதோ:

“ஜெர்மனியில் மிகவும் புகழ்பெற்ற ஒரு மனிதனைப் பற்றி நான் கேள் விப்பட்டிருக்கிறேன். இன்றும் கூட அவரது சிலைகள் அங்கு உள்ளன. மேலும் சில தெருக்களுக்கும், சில சதுக்கங்களுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.டாக்டர் டேனியல் காட்லீப் ஸ்செரெபர் என்பது அவரது பெயர். பாசிஸ கொள் கையின் உண்மையான ஸ்தாபகன் அவர் தான். அவர் 1861இல் இறந்து விட்டார். ஆனால் அவரையும் அறியாமலேயே அடால்ப் ஹிட்லர் வருவதற்கான ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கிவிட்டார்.

இந்த மனிதர் குழந்தைகள் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்கிற குறிப்பிடத்தக்க எண்ணங்களைக் கொண்டிருந்தார். அவர் அநேக புத்தகங்களை எழுதினார். இந்தப் புத்தகங்கள் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றில் சில அய்ம்பதாவது பதிப்புவரை சென்றுள்ளன. அவரது புத்தகங்கள் அபரிமிதமாகநேசிக்கப்பட்டன.அபரிமிதமாகமதிக்கப்பட்டன.ஏனெனில் அவரது கருத்துக்கள் விதிவிலக்கானவைஅல்ல. அவரது கருத்துக்கள் மிகவும் சாதாரணமானவையாக இருந்தன. பலநூற்றாண்டுகளாக ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருக்கின்ற விஷயங் களை அவர் கூறினார். அவர் சாதாரண மனிதனைப்பற்றி பேசுகின்ற ஒரு மனிதராக இருந்தார்.

அவரதுகொள்கைகளை,அவ ரது சிந்தனைகளை என்றும் தொடர்ந்திருக்கசெய்வதற்காகநூற் றுக்கணக்கான சங்கங்களும், கிளப்களும் உருவாக்கப்பட்டன. அவர் இறந்த பிறகு அநேக கிளைகள் நிறுவப்பட்டன. அநேக தெருக்களுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு ஆறு மாதம் ஆகின்ற காலத்தில் இருந்தே அவர் களை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க வேண்டும் என்று அவர் நம்பிக்கை கொண்டார், ஏனெனில் குழந்தை ஆறு மாதமாக இருக்கும்போது நீங்கள் ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கவில்லை என்றால் அவனை உண்மையிலேயே ஒழுக்கத்துடன் வளர்க்கின்ற சந்தர்ப்பத்தை நீங்கள் இழந்து விடுவீர்கள் என்று அவர் கூறினார். ஒரு குழந்தையானது மிகவும் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும் போதே, இந்த உலகின் வழிகள் குறித்து அறிவதற்கு முன்பே அவனுக்குள் ஒரு ஆழ்ந்த பதிவை உண்டாக்கி விடுங்கள். அதன் பின்னர் அவன் எப்போதுமே அந்தப் பதிவினை பின்பற்றி நடப்பான். மேலும் அப்படி அவன் ஆக்கப்பட்டிருப்பதும் கூட அவனுக்குத் தெரியாது. தனது சொந்த தீர்மானத்தின் படியே தான் எல்லாவற்றையும் செய்வதாக நினைத்துக்கொண்டு இருப்பான். ஏனெனில் ஒரு குழந்தையானது ஆறு மாதம் ஆகின்ற நிலையில் இருக்கும் போது அவனுக்கென்று எந்த ஒரு தீர்மானமும் இன்னமும் அவனிடம் இருக்காது.தீர்மானங்கள் பின்னாளில்தான் வருகின்றன. எனவே ஒழுக்கக் கட்டுப்பாடு என்பது அவனது தீர்மானத்திற்கு முன்பே வந்து விடுகிறது. எனவே, இதுதான் எனது சொந்தக் கருத்து என்று அவனுடைய தீர்மானம் எப்போதும் நினைக்கும்.

இது ஒரு குழந்தையை களங் கப்படுத்துவதாகும். ஆனால் இந்த உலகில் உள்ள எல்லா மதங்களும், பெரும் பேச்சு வன்மை படைத்தவர்கள் எல்லாம், இந்த உலகின் சர்வாதிகார மக்கள் எல்லாம், குருக்கள், பாதிரி யார்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எல்லாம் இதைச் செய்வதில் தான் நம்பிக்கை கொண்டி ருந்தனர்.''

(‘‘திடீர் இடியோசை''- ஓஷோ நூலின் பக்கம் 273-274)

(மற்றவை நாளை )

2017  ஜனவரி முதல் நாள் - ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்க நாள் அல்லவா?

வழமைபோல், புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன உறவுகள், கொள்கை உறவுகள், நட்பு உறவுகள் - இப்படிப் பலரும் இரவு 12 மணிமுதலே வாழ்த்துக் கூறி, மறு வாழ்த்தினையும், நன்றியையும் பெற்றனர் - நம்மிடம்!

காலை சுமார் 11 மணியளவில் எனது கெழுதகை நண்பர் பிரபல மருத்துவர் டாக்டர் ராஜசேகரன் அவர்கள், நாங்கள் பேசி ஏற்கெனவே எடுத்த முடிவினைச் செயல்படுத்தும் வகையில், அவர்தம் காரிலேயே எங்கள் இருவருக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற போது நட்பு வட்டத்திற்குள் வந்த கொடுமுடி நண்பர், டாக்டர் மாரிமுத்து அவர்களை நாங்கள் நேரில் சென்று அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தையும், புத்தாண்டு வாழ்த்தையும் இணைத்துக் கூறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண் டோம்.

நாங்கள் மூவரும் சென்னையில் அடுத்தடுத்த  பகுதிகளில்தான் வாழு கிறோம். நண்பர் டாக்டர் மாரிமுத்து அவர்கள், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிய மனம் பெற்று, நிர்வாகத்தில் சிறந்தோங்கி, அங்கே வரலாறு படைத்தவர்; கறை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர். (அப் போதெல்லாம் துணைவேந்தர் பதவிகள் ஏலப் பொருள்களாக இல்லாத காலம்).

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் 1954-1956 ஆகிய ஆண்டுகளில் அவர் தாவரவியல் (Botony) மேல் பட்டப் படிப்பு படித்தபோது எங்களது நட்புறவு மலர்ந்தது!

பிறகு அமெரிக்கா சென்று, பல் வேறு ஆய்வுத் துறையில் மிளிர்ந்து, சிறந்தோங்கி, தாயகம் - தமிழ்நாடு திரும்பிய நிலையில்தான், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் பொறுப்பேற்றார்!

அவர் ஓய்வு பெற்ற பின் சென் னையில் ஆய்வுகளை நடத்திய கால கட்டத்தில்தான் - மனிதர்களால் மீள முடியாது என்று அஞ்சும் கொடும் நோய் அவரைத் தாக்கியது!

அவருக்கு மிகப்பெரும் சோதனை யாகவும், வேதனையாகவும் அந்நோய் அமைந்தது; அவரை ஒவ்வொரு முறை யும் அதன் கொடுமையின் தாக்கத்திலிருந்து மீட்டவர்களில் முக்கியமான பங்காளர் நமது நண்பர் டாக்டர் ஏ.இராஜசேகரன் அவர்களே!

அதை நண்பர் மாரிமுத்து அவர்கள் மிகுந்த நன்றி உணர்வுப் பொங்க எப்போதும் குறிப்பிடத் தயங்காதவர்!

ஆனால், டாக்டர் ராஜசேகரன் அவர்கள், அதை வாழ்வில் அவருக்கு மகிழ்ச்சி தரும் இன்றியமையாக் கடமையாகக் கருதியே அவரைத் தொடர்ந்து கண்காணித்து உதவி வந்தார். அதை ஏதோ நோயாளிக்கு டாக்டர் அளிக்கும் சிகிச்சை என்ற கண்ணோட்டத்துடன் காண மறுப்பவர் ஆவார்!

பல கொடுமையான உயிர் பறிப்புக் கட்டங்களை எல்லாம் டாக்டர் மாரி முத்து தாண்டியதுபற்றியெல்லாம், நான் அடிக்கடி அவரது உடல்நலத்தை டாக்டர் இராஜசேகரன் அவர்களிடம் விசாரிப்பேன். (பொதுவாழ்வு, இடை யறாத கழகப் பணிகளால் பல நண்பர் களை உடனடியாகச் சென்று பார்த்து நலம் விசாரிக்க இயலாத சூழல் எனக்கு அமைந்துவிட்டது தவிர்க்க இய லாததாகி விட்டதே - என்ன செய்வது?) நண்பர் மாரிமுத்து இவ்வளவு நாள் பிழைத்து - புது வாழ்வு பெற்றதன் முழுக் காரணம் என்ன தெரியுமா?

மனிதநேயமும், தொண்டுள்ளமும் கொண்ட ஒரு தாய் - அவர் ஊர்க்காரர் வந்து இவருடன் (மாரிமுத்து தனி யாகவே உள்ள இல்லத்தில்) இந்த நோயால் வாடுபவரின் அத்துணை தேவைகளையும் நன்கு கவனித்து - எல்லையற்ற சகிப்புத்தன்மை,  பொறுமையுடன் அவருடன் இருந்து ‘‘தொண்டு’’ செய்துவரும் அதிசயத் தாயான ஒரு அம்மையார்தான்!

எவ்விதத்திலும் இரத்த உறவு - மனித உறவுகளில் தண்ணீரைவிட கெட்டியானது  என்பர் (ஆங்கிலப் பழமொழி கூட உண்டு). நாங்கள் கூறுவது கொள்கை உறவு அதனினும் கெட்டி - மனிதநேய அன்பால் - பண் பால் பிணைக்கப்பட்ட உறவோ, கெட்டியிலும் கெட்டி!

அவர் பெயர் ‘அம்மை அம்மா!’

இப்படிப்பட்ட  ‘அதிசயங்களையும்‘ எப்போதோ எங்கோ இந்த கணக்குப் போட்டுப் பழகும் ‘பூவுலகில்’(?) காணவே செய்கிறோம்.

அந்த அம்மாளின் பெயர் அம்மை அம்மா.

15 ஆண்டுகளாக அலுப்பு, சலிப் பின்றி மாரிமுத்துவை ஒரு செவிலித்தாயினும் மேலான தாயாக கண்காணித்து, எந்த மருந்து, எந்த ஊசி எதைக் கேட்டாலும் - படிக்காத இந்த மேதை - அவருக்குத் தந்து காப்பாற்றிடும் கருணை மழையாகப் பொழிகிறார்!

இதைவிட நாம் ‘‘முழு மனிதத்தை’’ வேறு எங்கு காண முடியும்? எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கிராமத்துத் தாயாக வந்தவர்  - தாதியாகவே திகழ்ந்து, மேனாள் துணைவேந்தருக்கு உற்ற துணைச் செவிலியராக - காப்பாளராகப் பணியாற்றும் பான்மை கண்டு அவ ருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தோம் அவரது பிறந்த நாளில் நானும், டாக்டர் இராஜசேகரும், வேறு சில அவரது முன்னாள் மாணவ, மாணவியருடன்!

இதையே புத்தாண்டின் பெருமை மிகு தொடக்கமாகக் கருதி மகிழ்கிறோம் - உண்மைதானே!

 

நீண்ட காலம் மனித ஆயுள் நீள வேண்டும் என்று ஆசைப்படுவது, பகுத் தறிவு - மனிதநேய - சுயமரியாதைக் கண்ணோட்டத்தில்எவ்வளவுதூரம் விரும்பத்தக்கது என்பது விவாதத்திற் குரியதாகும்.

நீண்டகால முதுமை வாழ்க்கை நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள மற்றவர் களுக்கும் சுமையாக ஆகி, ஒருவகை ‘வேண்டாவெறுப்புத்தன்மை’க்குமுதி யோர்களை ஆளாக்குவது, சுயமரி யாதைக் கண்ணோட்டத்தில் எவ்வளவு தூரம் சரியானது?

முன்பெல்லாம்‘‘ஆதரவற்றகுழந் தைகளுக்கான விடுதி''கள்தான் தேவைப்பட்டன.

ஆனால்,இப்போதோ,‘‘ஆதரவு மறுக்கப்பட்ட அல்லது அலட்சியப் படுத்தப்பட்ட பெற்றோர் - மற்றோர் எல்லோருக்கும் உரிய முதியோர் இல் லங்கள்’’ தேவைப்படும் நிலை உள்ளது!

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடு களில் முதுகுடி மக்களைக் (Senior Citizens) காப்பாற்ற போதுமான மனித நேய ஏற்பாடுகள் உள்ளன! ஆனால், நம்நாட்டில்... கேள்விக்குறியே!

நம் நாட்டில் குறைந்தபட்சம் முது குடி மக்களுக்கு ரொக்கப் பணம் தேவைப்படும்போது, அதை அவர்கள் வாழும் இடத்திற்கே, வங்கியோ, கருவூலத் துறையின் ஊழியர்களோ நேரில் கொண்டு போய் கொடுத்து, போதிய சான்றுகள் பெற்றுத் திரும்பும் ஏற்பாடு செய்வது என்ன பெரிய முடியாத ஒன்றா?

இல்லை; இல்லவே இல்லை! மன மிருந்தால் மார்க்கம் உண்டு.

முதுமை ஓங்கிடும் நிலையில், அவர்கள் உடல் தளர்வு - ஏற்பட்டு எப்படி அது முதுமையில், மிகப்பெரிய கேட்டில் முடிகிறது என்பதை அண் மையில் வெளியிடப்பட்ட ஒரு நூலை எனது மருத்துவ நண்பர் டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் கொடுத்தார்.

அவரது மாணவர் - தற்போது அமெரிக்காவில் மருத்துவராகப் பணி புரிபவர் டாக்டர் வெங்கட் சீனுவாசன் ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு என்னிடம் கொடுத்துப் படித்துப் பயனடையச் சொன்னார்.

அந்நூலைப் படித்தேன். அதில் மருத்துவத் துறையில் எத்தனைக் கோணத்தில் நோய் தீர்க்க வேண் டிய பொறுப்பும், கடமையும் மருத்து வர்களுக்கு உள்ளது என்பதை ஒரு புது வெளிச்சம் பாய்ந்த நிலையை விளக்குகிறது அந்நூல்!

‘Bio-psychosocial Model’ என்ற தலைப்பில்,

மூன்று கோணங்களில் நோயாளியை மருத்துவர்கள் - மருத்துவம் பார்த்து சிகிச்சை அளிப்பதில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று கூறுகிறது அந்நூல்!

முன்பு மருந்து கொடுத்தாலோ அல்லது ஊசி போட்டுவிட்டுச் செல் வதாலோ முடியும் என்று கருதிவிடக் கூடாது.

1. உடற்கூறு  ((Biological)

2. மனோதத்துவ ரீதியில் ஆய்வு (Psychological)

3. சமூக உறவு - தோழமை  அடிப் படை (Social aspects to patients)

70 வயது நிறைந்த ஒரு நண்பர் அவருக்கு ஏற்கெனவே இதய நோய் உண்டு. இதய நோயாளியாயினும் அதைப் பொருட்படுத்தாமல் எப்போதும் போல அவர் மகிழ்ச்சியாக இல்லை; காரணம் அவர் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து, வழமையான பணி செய்ய முடியாத அளவுக்கு, வீட்டில் முடக்கம். வீட்டில் முடக்கம் காரணமாக நண்பர்களைக்கூட சந் தித்து அளவளாவிட முடியவில்லை; அவரையும் தொற்றுநோய்க் கிருமிகளி டமிருந்து காப்பாற்றிட வேண்டுமே!

இதனால் அவருக்கு மன அழுத்தம் (Stress) அதிகமாகி, அவரைத் தன்னை மறந்த நிலைக்குத் தள்ளிவிடுகிறது!

எனவே, நீண்ட காலம் வாழுகிறார். மேலும் வாழவேண்டும் என்று ஆசைப்படுவது அவர்களுக்கே ஒரு சுமைபோல ஆகிவிடுகிறதே!

தந்தை பெரியார் எப்போதும் கசப் பான உண்மையையே பேசக்கூடியவர்.

அவர் கூட்டங்களில் கூறுவார்,

‘‘என்னை நூறாண்டு வாழவேண்டும்; அதற்குமேலும் வாழவேண்டும் என் றெல்லாம் வாழ்த்தினீர்கள்!

உங்களுக்கென்ன? கூறிவிட்டுச் செல்வதன்மூலம் உங்கள் வேலை - ஆசை முடிந்துவிட்டது!

வாழுகின்ற என்னைப் போன்ற வனுக்கு அல்லவா அதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது என்பது புரியும்‘’ என்று நகைச்சுவையோடு கூறுவார்.

எனவே, நல்ல உடல்நலம் முக்கியம்; நீண்ட ஆயுளைவிட என்பதே யதார்த்தம்!

- கி.வீரமணி

 

உலக சுகாதார அமைப்பு  (WHO - World Health Organisation) நல வாழ்வு (Health) என்பதை எப்படி விளக்கி உள்ளது தெரியுமா?

(The World Health Organisation Definition of health as ‘’a state of complete physical, mental and social well - being and not merely the absence of disease or infirmity’’)

மனிதனின் நல வாழ்வு என்பது உடல், உள்ளம் ஆகியவற்றோடு சமூக நலமும் கலந்துள்ளதுதானே ஒழிய, வெறும் நோய் இல்லாமலோ, ஊனம் இல்லாமலோ இருப்பது மட்டுமல்ல என்று கூறியுள்ளது!

இதன் தத்துவம் - உட்பொருள் நலவாழ்வு என்பது தனது நோயற்ற, ஊனமற்ற நிலையை மாத்திரம் கணக்கில் எடுக்காது, சமூகம் சார்ந்த நடப்புகளிலும் செயல்படும் ஆரோக்கியத்தை உள்ள டக்கியதாகும்!

காரணம்,வெளிப்படை;மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி அல்லது சமூகவாழ்வின் கூட்டுறவில் பங்கேற்று பணிபுரிந்து, சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குப் பெரிதும் உதவ வேண்டியவனாகவே இருக்கிறான்; இருக்கவேண்டும்!

முதுமையை நாம் முழுமையாக விரட்டுவது இயலாத ஒன்று!

நீண்ட நாள் வாழவேண்டும் என்று விரும்பும் - வாழ்த்தும் பலரும் நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், பழுதில்லா உடல், பக்குவமான மனம், மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லாத நகைச்சுவை உணர்வு, இவைகளுடன் அது அமைந்தால்தான் சாத்தியமாகும் என்பதை உணர்ந்தா - புரிந்தா வாழ்த்துகிறார்கள்?

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் - உண்மைதான்!

ஒரு கேள்வி - நம்மில் எத்தனைப் பேர் வாய்விட்டுச் சிரிக்கிறோம்,  அன் றாடம்?

நாம் சந்திக்கும் பலரும்கூட சிரித்த முகத்துடன் நம்மிடம் உரையாடினால், அது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் - நலவாழ்வைக் கொண்டு வந்து சேர்க்கும்.

நடைமுறையில் அப்படி உண்டா? பலருக்குத் தகுதிக்கு மீறிய ஆசை - பேராசை; பதவி, பணம், புகழ், பெருமை இவைகளைக் குவித்துவிட வேண்டும்; எந்த குறுக்கு வழியாக இருந்தாலும், கிறுக்கு முறையாக இருந்தாலும் சரி என்று கண்மண் தெரியாமல் நடந்து பிறகு ஒரே அடியாக சோதனைப் பள்ளங்களில் விழுந்து பலத்த அடி வாங்கும்போது அவர்களுக்கு தங்கள் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று காலந்தாழ்ந்தே நினைத்து, மாளாத்துயரம் - மீளாத் துன்பம், மாறா மன இறுக்கம் இவைகளோடு வாழ்கிறார்கள்!

எனவே, சமூகக் கவலையும் தனி மனிதர்களுக்குத் தேவை - இரண்டும் சரியான நேர்கோட்டில் இணைந்து சென்றால்தான் அது முழு நல வாழ்வு - ஆரோக்கியம் ஆகும்.

முதுமையைத் தவிர்க்க இயலாது; அதன் விளைவுகளை நாம் சற்று சந் தித்துப் புறந்தள்ள முடிந்த அளவுக்குப் புறந்தள்ளலாம். சமூகத்திற்குத் தொண்டு - தமிழ்த்தொண்டு, தேசத் தொண்டு செய்து, பொன்னையோ, பொருளையோ சேர்க்காது தூய தொண்டறம் நிகழ்த்திய தமிழ்ப் பெரியார் திரு.வி.க.கூட இறுதி நாளில் பார்வை இழந்த நிலையில், கவிதையாகக் கூறியதை அருகில் இருந்து டாக்டர் மு.வ. எழுதினாராம் - ‘முதுமை உளறல்’, ‘படுக்கைப் பிதற்றல்’ என்று.

அதுபோன்ற சங்கடம் தந்தை பெரியாருக்கு 95 வயதிலும் - நான்கு நாள்களுக்குமுன்கூட தன் வெண்கலக் குரலில் சிங்கம்போல், இறுதிப் பேருரை - இல்லை இல்லை, போர் உரையாக எப்படி, சென்னை தியாகராயர் நகரில் பல்லாயிரம் மக்கள்முன் தனது கொள்கைப் பயணம் புறப்பட்ட இடம் தொடங்கி அடுத்து மேற்கொள்ளவேண்டிய ஜாதி - சூத்திர - தீண்டாமை ஒழிப்பு அறப்போர் வரை பேச முடிந்தது!

எண்ணிப் பார்த்தேன் பல ஆண் டுகளாய் - விடை கிடைத்தது!

உலகசுகாதாரஅமைப்பின்வரை யறைப்படி, சமூகநலமும் சார்ந்திருந் தால், அதையே ஆரோக்கியத்தின் தேவையாக எண்ணி சமூகச் சிந்தனை - சமூகக் கவலை - சமூக அக்கறையின்மீது தந்தை பெரியார் காட்டிய அளவற்ற ஆர்வமே அவரை அவதிப்படாத உடல்நலத்துடன் முழுமையாகப் பழுத்த 95 ஆம் ஆண்டிலும் வாழச் செய்தது!

காரணம், தொண்டு செய்து பழுத்த பழமானார் அவர்; சமூகப் புரட்சிபற்றியே சதா சிந்தித்தார்; இறுதி நாள் வரை பிறவிப் போர் வீரராகக் களங்கண்டார் - இளமை உணர்வு மனதில் பொங்கியது!

(மற்றவை நாளை)

Banner
Banner