வாழ்வியல் சிந்தனைகள்

நாளேடுகளில் முழு பக்க விளம்பரங்கள், தொலைக்காட்சிகளில் இடையறாத விளம்பரங்கள், பெண்களைக் கொச்சைப்படுத்தும் விளம்பரங்கள் ஒரு பக்கம் என்றாலும், பொருள் விளம்பரங்கள் - தள்ளுபடி விளம்பரங்கள் - எல்லாம் நடுத்தர வர்க்கத்தினரையே பெரிதும் பலி''யாகச் செய்கிறது!

கைத்தொலைப்பேசி மாடல்கள் இடையறாது மாறிக் கொண்டிருக்கின்றன. அவைகளை - சபலம் உள்ள இளைஞர்கள், தங்கள் தகுதியை மீறிக் கூட மாதத் தவணை (EMI) முறையில் வாங்குவது, கண்டபடி செலவழிப்பது, நுகர்வுக் கலாச்சாரம் என்ற ஒரு தொற்று வியாதி மிகவேகமாக - தொலைக்காட்சி விளம்பரங்கள்மூலம் எக்கச் சக்கமாக' அங்கிங்கெனாதபடி விளம்பரங்கள்!

ஒன்று வாங்கினால் மூன்று இலவசம்' என்ற ஆசைகளைத் தூண்டி, தேவையற்ற பொருள்கள், துணிமணிகள், அணிகலன்கள் இவைகளை கடனுக்காவது வாங்கத் தூண்டும் நிலையில், பல நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் சேமிப்பு களையெல்லாம்கூட இழந்து நிற்கும் அவலம்  - இன்று நாம் அன்றாடம் காணும் காட்சிகள்!

மிகவும் இன்றியமையாத தேவை என்றா லொழிய எந்தப் பொருளையும் அது மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக, இலக்குத் தெரியாமல் புதையலைத் தேடி அலைந்து ஏமாந்த சோண கிரிகளாகிவிடுவது போல் ஆகிவிடுவது தேவையா?

கடன் அட்டைகளை  (Credit Cards) வங்கிகள் மிகவும் தாராளமாக, ஏராளமாக புழக்கத்தில் விடுகின்றன. அதை ஒரு தகுதிப் பெருமையின் அடையாளம்'' (Status symbol) ஆக எண்ணி, தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து, குடும்பத்தில் உள்ள மகளிரும்கூட இது உள்ளப டியே தேவைதானா? இதை வாங்காவிட்டால் நமக்கு ஏற்படும் நட்டமோ - குறையோ எந்த அளவு என்றெல்லாம் பல கேள்விகளை மனதுக்குள் அடுக்கடுக்காய் எழுப்பி - திருப்தியான விடை - நியாயமான தேவை என்பது உணர்ச்சி வயப்பட்ட நிலை தணிந்த பிறகு - தேவையானால் வாங்கலாம். ஓர் வரையரை - இலக்கணம் தேவை.

சாப்பாட்டுக்குரியது என்பதில்கூட எதை ஒதுக்கலாம், எதை ஒதுக்கக்கூடாது என்று உடல் நலக் கண்ணோட்டத்தோடு, மருத்துவர் ஆலோச னையெல்லாம் பெற்று, பிறகு உணவைக்கூட தள்ளுபவைகளைத் தள்ளி, கொள்ளுபவைகளைக் கொள்ளும்போது,

இந்தப் பொருள் வாங்கி வியாதி'களுக்கு ஏன் பலியாகவேண்டும்? கண்டதும் காதல் (விளம் பரத்தைப் பார்த்ததும் மோகம்') எதிர்த்த வீட்டுக் காரர் வாங்கி விட்டாரே, நாம் வாங்கி - என்னிடமும் அதைவிட விலை உயர்ந்த பொருள் இருக்கிறது'' என்ற வீண் ஜம்ப வெளிச்சம் - தேவையா?

தீபாவளி போனஸ்' வாங்கி பல வீடுகளில்  குறிக்கோளற்ற வீண் ஆடம்பரச் செலவுகள், அல்லாது நுகர்வுக் கலாச்சாரப் பாயலாக' பல்பொருள்கள் - தேவையற்ற துணிமணி - நகை அலங்காரம் இவைகளுக்கு செலவழிப்பதைவிட, வருங்காலத்தில் எதிர்பாராது ஏற்படக்கூடிய செலவினங்களுக்கு நாம் சேமித்து வைத்தால்தானே சுயமரியாதையுடன் கடனற்ற நிம்மதி வாழ்வு - மான வாழ்வு வாழ முடியும் என்று எண்ணிட வேண்டும்.

சம்பள உயர்வுக்குப் போராடுவோர் அதை சரிவர செலவழிக்கச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்களோ, அமைப்புகளோ இல்லாதது மிகப் பெரிய குறைபாடு அல்லவா!

உங்களுக்கு நீங்களே ஆசான்களாக' (தேவையற்றவைகளை) வாங்குதலினும் வாங் காமை நன்று - வீட்டில் வறுமை (பிறகு) தேங்காமை நன்று - இல்லையா!

நம்முடைய குடும்பத்திலும் சரி, நிறுவனங்கள், அமைப்புகள் எதுவானாலும் தாமே அவற்றிற்கென ஒரு 'பட்ஜெட்' - வரவு செலவு திட்டம் அமைத்துக் கொண்டே செயல்பட்டால் அது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவக்கூடும்.

'வரவு எட்டணா - செலவு பத்தணா' என்ற திரைப்படம் ஒன்றில் வந்த பாட்டு வரிகளைப் போலவே,

'கடைசியில் கையில் துந்தனா'தான்!

வரவைப் பெருக்குவது என்பதற்கான முக்கிய வழி அதிகமாகச் சம்பாதிப்பது என்பதன் மூலம் தான் என்றல்ல; செலவுகளைக் கட்டுப்படுத்திக் குறைப்பதும் கூட வருவாய்ப் பெருக்க வழிதானே!

வள்ளுவரே சிறந்த பொருளாதார வல்லுநர் போல் உயர்ந்து சொன்ன ஆழமான அறிவுரையே இதற்குத் தக்க சான்றாகும்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை. (குறள் - 478)

வரவு எப்படி இருந்தாலும் செலவுகளைக் குறைத்தால் அதுவே ஒரு புது வகை வரவு - வருமானம் தானே? இல்லையா? 'பட்ஜெட்' போட்டுப் பார்த்தால் தான் - மனதால் எண்ணுவதைவிட ஒரு தாளையோ அல்லது சிறு 'நோட் புக்கையோ அல்லது டைரி எழுதும் பழக்கமுள்ளோராயின் அதில் ஒரு பக்கத்திலோ எழுதி - வரவுகள் ஒரு புறம், செலவுகள் மறுபுறம் - அதில் குறிப்பாக செலவுகளுக்கு எதெதெற்கு முன்னுரிமை தரவேண்டும், என்று செலவினத்தை (ஜீக்ஷீவீஷீக்ஷீவீவீமீ) முன்னுரிமைப்படுத்திப் பார்த்தால் தான் நமது நிதிநிலைமை பற்றி நமக்கே புரியும்.

பல குடும்பங்களில் வாழ்விணையான பெண் தான் சரியான 'நிதியமைச்சர்' ஆக இருப்பார்கள்.

'மின்னனுப் புரட்சி - தகவல் புரட்சி யுகம்' இது ஆன படியால், அவற்றின் உதவியை நாடினால் இது மிகவும் பயன் அளிக்கும் என்றே சம்பந்தப் பட்டவர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் காலம் விரையம் தடுக்கப்படவும் கூடும்!

அடுத்து, நமது அன்றாட செலவுகள் கூட நம்மை சிற்சில நேரங்களில் திண்டாட, திக்குமுக் காடும்படிச் செய்து விடக் கூடும். அன்றாட செலவினைக்கூட இப்படி எழுத்தில் வடித்து வார இறுதியில் பார்த்தால் 'ஓகோ இதெல்லாம் நாம் தவிர்த்திருக்கக்கூடிய செலவுதானே! இச்செலவைத் தவிர்த்து அதைச் சேமித்திருக்கலாமே!' என்றுகூட எண்ணி முடிவு எடுத்து நல்ல முறையில் ஒழுங்கு படுத்தி, சிக்கல் இல்லாத  - தலைநிமிர்ந்த - கடன் வாங்காத "சுயமரியாதை வாழ்வே என்ற சுக வாழ்வு" வாழலாமே!

'ஒரே ஒரு முறைதான் செலவழிக்கிறோம்; இது வழக்கமாக செலவுத் திட்டத்தில் இடம் பெறக் கூடிய செலவு அல்ல' என்ற போதிலும் அதுவும் கூட இடம் பெறல் அவசியம்.

எடுத்துக்காட்டாக, நண்பர்களை அழைத்துச் சென்று ஏதோ ஒரு நாள் ஓட்டல்களில் விருந்து கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் கூட அடுத்த மாதச் செலவு - வரவை ஒழுங்குபடுத்திட பெரும் அளவுக்கு உதவக்கூடும்!

சில செலவுகளைச் செய்யும்போது இந்த மாத ஒதுக்கீடு என்ற அளவுக்கு மேல் செலவு செய்துவிட்டோம்; இதை அடுத்த மாத பட்ஜெட்டில் செலவைத் தவிர்த்து 'மிச்சப்படுத்தி' வாழ்க்கையில் துன்பச் சுமை ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்!

நடந்து செல்வதற்குப் பதில் 'டாக்சி' எடுத்தது; அடுத்த மாதம் சரிகட்டலாமே! பேருந்து பயணம் செய்தாலோ அல்லது உடல் நலம் - வலிமை கருதி நடந்து சென்றோ பணத்தை மிச்சப்படுத்தி 'சரி கட்டலாமே!'

சேமிப்பில் - எதிர்பாராத அவசர செலவுகள் என்ற நிலை வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும் சூழ்நிலை உருவாவது சகஜம்; அதற்கு நமது வீட்டு - குடும்ப வரவு - செலவுத் திட்டத்தில் கட்டாயம் ஒரு பகுதியை சேமிப்பது மிகப் பெரிய அளவில் நமக்குக் கைகொடுக்கும்!

திடீர் உடல் நலக்குறைவு; ஏற்பட்ட விபத்து காரணமாக எதிர்பாராத மருத்துவச் செலவு - மருத்துவக் காப்பீடு - இன்சூரன்சையும் கூடத் தாண்டி செலவழிக்கவேண்டியதும் வரக்கூடும். அதற்கென தனியே மாதம் ஒரு சிறு தொகை "எதிர்பாராமல் வரும் நெருக்கடிக்கான ஒதுக்கீடு" என்ற செலவினத்தையும் கூட (ஒரு தலைப்பில்) ஒதுக்கி வைத்தால் எப்போதும் நமக்குப் பெரிதும் கைகொடுக்கவும் செய்யும்.

எனவே திட்டமிடல் வாழ்க்கைக்கு உதவும். வெளிநாடு, வெளியூர் சுற்றுலாவுக்கு மேல் நாட்டவர்கள் 2, 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சேமித்தே, அதைச் செலவழிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? - அதையும் பின் பார்க்கலாம்!

1924ஆம் ஆண்டு - இன்றைய தேதியான அக்டோபர் 30 அய் உலக சிக்கன நாளாகக் கடைப்பிடிப்பதென, இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெற்ற முதல் பன்னாட்டு சேமிப்புக் காங்கிரஸ் - மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு, 94 ஆண்டுகளாக அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்!

சிக்கனம் - சேமிப்பு என்பது வாழ்வின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய தேவையான கூறுபாடுகளில் ஒன்றாகும்!

செலவே செய்யக் கூடாது என்று இதைத் தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.

தேவையானவற்றிற்குச் செலவழித்துத் தான் தீர வேண்டும் என்பது வாழ்க்கையின் தத்துவம் ஆகும் - 'வரவு' என்ற சொல்லுடன் இணைந்தே வரும் மற்றொரு சொல் 'செலவு' என்பதாகும்!

வரவினைக் கொண்டு செலவழித்தல் ஒரு வகை; செலவிற்காக வரவினைத் தேடுவது இன்னொரு முறை.

சென்ற நூற்றாண்டான 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொருளாதார வல்லுனரான ஜான் மேண்ட் கீன்ஸ் என்ற பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் அழகான ஒரு எளிய தத்துவத்தைக் கூறினார்.

'ஒருவரது செலவு, மற்றவரது வரவு' என்று அவர் கூறினார். (One Man's Expenditure  is another man's income)

பணத்தின் பெருமை - முடங்கிக் கிடப்பதில் இல்லை; மாறாக, நடைமுறை புழக்கத்தில் அது எவ்வளவு பேர்களிடம் கை மாறுகிறதோ (Velocity of Circulation of Money) அவ்வளவுக்கவ்வளவு பொரு ளாதார நடவடிக்கை, வளர்ச்சிக்கு வழிகோலும்!

சிக்கனம் - சேமிப்பு என்பதெல்லாம் கூட பொருளா தார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும்!

சேமிப்பு என்பதில்கூட கூர்த்த அறிவும், மிகுந்த நம்பகத் தன்மையுடைய அமைப்புகளான வங்கிகள், நிதி நிறுவனங்களில்தான் போட வேண்டும்.

செய்திதாள்களைத் திறந்தால், 'டெப்பாசிட் இழந்த வர்கள் சங்கத்தின்' தீர்மானங்களையும், போராட்டங் களையும் பற்றி படிக்கும் போது நம் கண்களில் கண்ணீர் அருவியெனக் கொட்டுகின்றது; காரணம், பல முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள் கடும் உழைப்பு - பல்லாண்டு கால பணிகள் மூலம் கிடைத்த பணிக் கொடை வரவு - இவைகளை தவறானவர்களை நம்பி, கூடுதல் வட்டி கிடைக்குமே என்ற தவறான ஆசை - ('பேராசை' என்ற சொல் அவர்களுக்குப் பொருந்தாது) காரணமாக உள்ளதை இழந்த, திடீர் பூகம்பம் ஏற்பட்டு உயிருடன் தப்பி, வீதியில் நிற்கும் முன்னாள் பணக்காரர்களைப் போல ஒரே நாளில் மீண்டும் அவர்களை வறுமைத் தேள் கொட்டி, விஷத்தை ஏற்றி விட்டதே என்ற அவல நிலை!

எனவேதான் சேமிப்பினைக்கூட சரியான அடை யாளத்துடன் கொண்ட நாணயம் தவறாத அமைப்பில் பண முதலீடு செய்ய வேண்டும் - விழிப்புணர்வுடன் செய்தல் - அவசியம்.

உங்கள் வாழ்வில் சேமிப்பு - மிச்சப்படுத்தல்பற்றிய இலக்குபற்றி தாளை எடுத்து எழுதுங்கள்.

1. குறைந்த காலத் திட்டம் (Short Term)

2. நடுமை காலத் திட்டம் (Medium Term)

3. நீண்ட காலத் திட்டம் (Long Term)

இதற்குமேல் "எதிர்பாராத செலவுகள்" என்பதற்கு உங்களது  வரவு - செலவுத் திட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஒதுக்குங்கள். செலவாகாமல் அத்தொகையில் மீதம் ஆனால் பெரு மகிழ்ச்சியை அதுவே தரும் - இல்லையா?

நம் வருமானத்தில் - வரவில் - ஒரு பகுதியை 10 விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு என்று வாய்ப்புக்கும், வசதிக்கும் ஏற்ப ஒதுக்கி, சேமிப்பில் போடுங்கள்.

உண்டியலில் போடும் பழக்கத்தை குழந்தைகளுக் குக்கூட சிறு வயதிலேயே உருவாக்கிவிடுங்கள். அந்த தொட்டிற் பழக்கம் பிறகு "சுடுகாடு"  மட்டும் நீடிக்கும்!

இப்படி ஒழுங்கான, முறையான சேமிப்புப் பழக்கம் - என்பது உங்களது நீண்ட காலத் திட்டத்திற்கு உதவிடும் முதல்படி என்பதை உணருங்கள் - மறக்காதீர்கள்!

முதலில் சிறு தொகையிலிருந்தே ஆரம்பியுங்கள்.

இந்த சேமிப்பை "தற்காலிகமாக" "வசதியாக" மறந்து விடுங்கள்! உங்கள் செலவு பட்ஜெட் அயிட்டங்களில் இதனைக் கணக்கில் கொண்டு வராதீர்கள்!

(நாளையும் தொடரலாம்)

மத்திய அரசின் வருமானவரித் துறையினர் - அவர்களுக்கு, கழகத்தை விட்டுவெளியேறிய தி.பொ. வேதாசலம் அவர்களும், குத்தூசி க. குருசாமி அவர்களும் எழுதியனுப்பிய கடிதம், பெரியாரிடம் உள்ள பணம் பற்றியும், அதற்கு உரிய கணக்கு வரி முதலியன போடவும் தூண்டி எழுதப்பட்டதை வைத்தே 1956-57 முதல் 1963-64; 1965-66, 1966-1967, 1967-68 இப்படி பல ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்தவில்லை - வருமானத்தை மறைத்தார் என்று குற்றஞ் சுமத்தி பெரியார் அறக்கட்டளையான, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பதற்கும், அதே தொகை ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் என்று தனிப்பட்ட நபர்  ஹோதாவிலும் என்று வரி, அபராத வட்டி இப்படி அய்யா காலத்தில் 15 லட்சம் ரூபாய்; அம்மா பொறுப் பேற்ற பிறகு 60 லட்சம் ரூபாய்;  எனது பொறுப்பில் வந்த வழக்கு I.T. Tribunal என்ற மேல் முறையீட்டு டிரிபியூனல் நடுவத்தில் 80 லட்சம்  ரூபாய் என்றும் வந்தது. இவ்வழக்கு விசாரணையில் நிறுவனம் சார்பில் வாதாடிய பிரபல வழக்குரைஞர் உத்தம்ரெட்டி (ஏற்கெனவே வருமான வரித்துறை பெரிய அதிகாரியாக இருந்து பிறகு வழக்குரைஞர் தொழிலை மேற்கொண் டவர்) "பெரியார் எந்தத் தொழிலையும் 1919க்குப் பின்  செய்யவே இல்லை; பொது வாழ்வில் தான் இருந்தார். அவருக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட அன் பளிப்புகள், நன்கொடைகளைக்கூட, அவர் சொத்துக்கள்  மூலம் வந்த வருமானம் உட்பட வங்கியில் தான் போட்டு நிறுவனத்திற்குத்தான் அளித்து வந்துள்ளார்!

அவர் வருமானத்தை மறைத்தார் என்பது சரியல்ல.

வழிச் செலவிற்குக் கொடுக்கப்பட்ட - ஒரு கூட்டத்திற்கு 50 ரூபாய் என்றால் அதைத் தோழர்கள் கொடுத்தபோதுகூட பெயருடன், தேதியுடன் வங்கிக் கணக்கில் போட்டு, டைரியில் குறித்து வைத்துள்ளார். இதோ அந்த சில டைரிகள்" என்று இரண்டு நடுவர்களுக்கும் காட்டினார்.

அய்யாவின் எழுத்துக் குறிப்புகளை சரியாக விளங்கிக் கொண்டு படித்துக் காட்ட, நடுவர்கள், நீதிபதிகள் என்னையே படித்துக் காட்டச் சொன்னார்கள். நான் படித்து முன் எழுத்து -சுருக்கியுள்ளதையும் அவர்களுக்கு விளக்கியபோது தந்தை பெரியாரின் பொறுப்பு மிகுந்த நிதி மேலாண்மையைக் கண்டு வியந்து, இதில் வருமானத்தை மறைத்தார் என்ற குற்றச்சாற்றுக்கு ஏது இடம் என்றே கேட்டார்கள். பிறகு தீர்ப்பு ஆணையும், எழுதி, அந்த வரி விதிப்பு முழுவதையும் தள்ளுபடி செய்து, அறக்கட்டளைத் தகுதியை வழங்கினார்கள்!

அய்யா பெரியார் அவர்களுக்கு லெட்ஜர், குறிப்பு, பேரேடு எல்லாம் அவரது பையில் உள்ள டைரியும், 'செக்  புத்தகங்களின் அடிக்கட்டையும்' (Counterfoil) தான். அதில் யாருக்கு இந்த காசோலை கொடுக்கப்பட்டது - என்பதற்கான குறிப்பை அவரது கையிலேயே எழுதி வைத்திருப்பார்கள். அந்த பழைய 'செக்' புத்தகங்களை, அடிக்கட்டைகளையும்கூட அந்த நீதிபதிகளான நடுவர்கள் பார்த்து வியந்தனர்.

சில நேரங்களில் அவருக்கு அவரது டைரிக் குறிப்பின் முன் எழுத்துள்ள நபர் யார் என்பது நினைவுக்கு வராவிட்டால் வலிந்து அதை நினைவூட்டிக் கொள்வார்; முடியாதபோது அன்னை மணியம்மை யாரையோ, தனிச் செயலாளர் புலவர் இமயவரம் பனையோ, எங்களைப் போன்றவர்களையோ கேட்பார். நாங்கள் "அய்யா, இன்னார் இந்த ஊருக்கு தேதி கேட்டு முன் பணமாக பாதி 25 ரூபாய் தந்தார். மற்ற 25 ரூபாய் தங்களைப் பார்க்க வந்த இந்த ஊர் கழகப் பொறுப்பாளர் இன்னார் கொடுத்தார்" என்றவுடன் திருப்தி அடைவார்!

சில்லறை நோட்டுகள் ரூபாய் 90, 95 சேர்ந்தவுடன் அதை 100 ரூபாய் நோட்டாக மாற்றிடவே விரும்புவார். சிக்கனம் சேமிப்புக்காக அவர் கடைப்பிடித்த வழி அது! பக்கத்தில் அம்மாவிடம் கேட்பார். "ரூ.5 இருந்தால் கொடு" என்று! 95+5 = ரூ.100 நோட்டு வாங்கி வா என்பார். மற்றவர் எவரும் வந்து புதிதாக பணம் கொடுத்தால் நினைவு தப்பிய - வாங்கிய 5 ரூபாய், 10 ரூபாய் கடனை அம்மாவிடம்கூட பைசல் செய்து விடுவார்!

100 ரூபாய் நோட்டை சேமிப்பாக்கி வங்கிக் கணக்கில் போடுவார்.

இப்படித்தான் நண்பர்களே, தந்தை பெரியாரின் சிக்கனம் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ஆகியது. இன்று குழந்தைகள் விடுதி,  ஏராளமான கல்வி நிலையங்கள், நூலகம், படிப்பகம், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி, ஏடுகள் என்றெல்லாம் மக்களுக்கே திருப்பி (அவை மூலம்) தரப்படுகின்றன!

எளிமை, சிக்கனம், ஆடம்பரத்தை இயல்பாகவே ஏற்காத மனம் - அவருடைய வாழ்வியல்!

திருச்சியில் மாளிகையில் தங்கியிருந்து  சாப்பிடும் உணவுகூட மிகவும் எளிமை,  ஏராளம் பல காய்கறி வகைகள் சமைக்காது - ஒன்று இருந்தாலே போதும் என்ற நோக்கு!

இப்படிப்பட்ட எளிய, மக்கள் தலைவரை எங்கே காண முடியும்?

விளம்பரப்படுத்திக் கொள்ளாத எளிமை, விரும்பி வாழ்ந்த சிக்கனம், வெறுக்கப்பட்ட ஆடம்பரம் - இவைதாம் பெரியார்! நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்கூட! இல்லையா?

'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு' என்பது பழமொழி.

எதையும் அளவிட்டு, அளவறிந்து, திட்டமிட்டு வாழ்வில் செய்தால் நமது வாழ்க்கை பயனுள்ள தாகவும், பிறகு வருந்தத்தகாததாகவும் கூட அமையக்கூடும்!

செலவழிப்பதில்கூட திட்டமிட்டு, கணக்குப் பார்த்துச் செலவழிப்பது, செலவழித்ததை மறந்து விடாமல் செலவு கணக்கில் ஒரு சிறு குறிப்பில் எழுதி வைப்பதும் நம்மை மேலும் செம்மையுறச் செய்யும்!

நம்மில் பலரும் செலவழித்துப் பழக்கப்பட்ட வர்களே! திட்டமிட்டு செலவழித்தோ அல்லது முன்னுரிமை எதற்கு - எந்த அளவு இதற்கு நம்மிடம் உள்ள நிதியை ஒதுக்கிட முடியும் என்று ஆழ்ந்து யோசித்துச் செலவழிப்பதில்லை. அப்படிப்பட்ட வர்கள் வாழ்க்கை கடனாளி வாழ்க்கையாகவும், வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்த இயலாமல், சாக்குப் போக்கு கூறி ஓடி ஒளியும் தலைமறைவுக்காரராக ஆக்கி, தமது நாணயத்தை இழந்தவர்களாகிவிடும் மிகப் பெரிய சமூக அவலத் திற்கு ஆளாகி விடும் விரும்பத்தகாத நிலையும்கூட உள்ளது!

பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் படித்த ஷேக்ஸ்பியரின் ஒரு வரி அறிவுரை வசனத்தை, அவர் படைத்த ஒரு பாத்திரம் கூறுவதாக நமக்குக் கற்பித்தார் நமது பேராசிரியர்!

'Neither a lender nor a borrower be'

கடனும் கொடுக்காதே, கடனும் வாங்காதே'

- இந்த அறிவுரையை பெரிதும் - நான் அறிந்த வகையில் - வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகிய தலைவர் தந்தை பெரியார் அவர்களாவார்கள்!

'மண்டிக்கடை ஈ.வெ.ராமசாமி நாயக்கராக' இருந்த காலத்திலேயே அவர் இதனைக் கற்றவர் என்றாலும் தொழில் வாழ்க்கைக்குப் பொருந்தாது; தனி வாழ்க்கைக்கு மட்டும்தான் என்பதையும் நன்கு புரிந்தவர்!

அய்யா தந்தை பெரியார் அவர்களிடம் யாராவது கடன் கேட்டால் - கூடுமானவரை மறுத்து விடுவார் - முகதாட்சண்யம் பார்க்காமலேயே கூட. இப்படி தன்னிடம் வந்து கேட்பவர்களிடம் முகத்திற்கு நேரே சொல்வார்.

"என்னிடம் கடனாக நீங்கள் பெற்று, உறுதி யளித்தபடி திருப்பிக் கொடுக்க இயலாது போகும் போது உங்களுக்கும் தர்மசங்கடம்; எனக்கும் மன வேதனை - இரண்டும் வேண்டாம்! இதோ ஒரு சிறு தொகை - இதை நான் தங்களுக்கு நன்கொடை யாகவே தந்துவிடுகிறேன்; பெற்றுக் கொள்ளுங்கள். இதை எனக்குத் திருப்பித் தர வேண்டாம்" என்றே கூறுவார்கள்!

தனது நண்பர்களின் வேண்டுகோள் காரணமாக, சில மில்களில் முதலீடு செய்து அந்த வட்டித் தொகையைப் பெருக்கி, இயக்கப் பணத்தில் சேர்த்துப் பெருக்கியே மகிழ்ந்திருக்கிறார்!

அந்த மில் நிர்வாகத்திடமிருந்து, குறிப்பிட்ட (3 மாத வட்டித்தொகை) தேதியில் டி.டி.யாக வரவில்லை என்றால் ஓரிரு நாள் பொறுப்பார்; உடனே கடிதம் எழுதி உடன் தொகையை அனுப்ப நினைவூட்டுவார்; அதன் மேலும் தாமதமானால், சிக்கனத்திற்கே பேர்போன தந்தை பெரியார் அந்த 'பாக்கியாளருக்கு' தந்தியே அனுப்புவார். (இதில் தந்தி செலவு பார்க்க மாட்டார்) அவர் வியாபாரப் பாரம்பரியத்தில் வந்ததால், வந்த வட்டித் தொகையை உடனே வங்கியில் போட்டு வைத்து, அதன்மீது வட்டி இழப்பு ஏற்படாமல் பெருக்க வேண்டுமென்றே விரும்புவார்!

பலருக்கு உதவும் போது கூட, சிறுதொகை ரூ.50, ரூ.100 போன்றவைகளுக்குக்கூட, 'செக்' காசோலை யாகவே கொடுப்பார். செலவு கணக்குப் பார்ப்பதற்கு அது வசதியாக இருக்கும். என்றாலும் அதையும் மறக்காமல் தனது டைரியில் குறித்து வைப்பார்.

வழிச்செலவுக்குப் பணத்தை (50 ரூபாய்தான் அப்போது) வாங்கி - சுருக்கெழுத்தில் கொடுத்தவர் முன் எழுத்தைப் போட்டு - வீ(ரமணி) க(டலூர்) கூட்டத்திற்கு அழைத்து அய்யாவிடம் 25 ரூபா தந்து 25 ரூபாய் பாக்கி என்பதையும் மற்றொரு பக்கத்தில் (கடைசிப் பக்கத்தில்) குறித்து வைத்து, நினைவாக அவ்வூரில் கூட்டம் முடித்தோ, முன்போ கேட்பார் - இப்படிச் சிக்கனமாகச் சேர்த்துத்தான் மக்களுக்கே விட்டுச் சென்றார்.

Time Management என்பது எவ்வளவு முக் கியமோ அவ்வளவு முக்கியம் பணத்தை சேமிப் பதும், செலவழிப்பதும் Money Management ஆகும்!

ஒரே ஒரு வேறுபாடு இரண்டிற்கும் எது என்றால் பணத்தைச் செலவழித்தால் மீண்டும் சம்பாதிக்க முடியும்; நேரத்தைச் செலவழித்து விட்டால் செல வழிக்கப்பட்ட நேரத்தை - காலத்தை - மீண்டும் வாழ்நாளில் திரும்பப் பெறவே முடியாது!

தந்தை பெரியாரின் பொது வாழ்க்கையிலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் அநேகம்; அதைவிட அய்யாவின் தனி வாழ்விலிருந்தும் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவர்களைப் பொறுத்த வரை தனிவாழ்வு - பொது வாழ்வு என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை; இரண்டறக் கலந்தவையாகும்!

என்றாலும் இப்படி எதையும் கணக்கிட்டுச் செலவழிப்பது,  வரவு-செலவுகளைப் பதிய வைத்து அசைபோட்டுப் பார்ப்பது ஒவ்வொருவரின் வாழ்க் கையிலும் உயர்வைத் தரும்!

அய்யா தந்தை பெரியாரின் 'டைரிக் குறிப்பு' எப்படி வருமான வரித்துறை கீழமை அமைப்பு அவர்மீது சாட்டிய ஆதாரமற்ற குற்றம் - "வரு மானத்தை மறைத்தார்" என்பது! (அவரால் ஆளாக் கப்பட்டவர்கள் ஆதாரமற்ற புகார்களை எழுதிப் போட்டதன் விளைவு) அழிக்கப்பட வொன்னாத சரியான மருந்தாகி, வழக்கை வென்றது எப்படி என்பதை நாளை பார்ப்போம்!

- நாளையும் வரும்

Banner
Banner