வாழ்வியல் சிந்தனைகள்

 

 

வாழ்க்கையை தனக்காக மட்டும் வாழாமல் பிறர்க்காக வாழ்ந்து, தொண்டறத்தின் தூய்மையின் எல்லைக்குச் சென்ற  - செல்லும் எவரும் நன்றியை எதிர்பார்க்க மாட்டார்கள், எதிர்பார்த்து ஏமாறவும் தேவையில்லை.

1933இல் 'குடிஅரசு' தலையங்கம் ஒன்றில் - தந்தை பெரியார் எழுதிய சில வரிகள் - காலத்தாலும் அழிக்கப்பட முடியாத கருத்துரைப் பெட்டகமாகும்!

"நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்; எதிர்பார்ப்பது சிறுமைக் குணமேயாகும்!" - தந்தை பெரியார்

அதை தனது இயக்கத்திற்கான நடைமுறைக் கோட்பாடாகவே தந்தை  பெரியார் அவர்கள் ஆக்கி, நமது இயக்கம் நன்றியை எதிர்பார்க்காத தொடர் பணி Thankless Job - என்ற தத்துவத்தை உட்கொண்டு இயங்குவது என்று  கூறினார்.

இது இன்றும் உண்மை என்பதற்கு ஒரு சாதாரண  இரண்டு எடுத்துக்காட்டுகள்!

1.  தந்தை பெரியார் அவர்களால் 83 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பெற்ற பகுத்தறிவு சுயமரியாதை நாளேடு  'விடுதலை!' "உலகின் பகுத்தறிவு நாளேடு 'விடுதலை'தான்" என்று உலக மனிதநேயர் அமைப்பின் தலைவராக இருந்த, நார்வே நாட்டினைச் சேர்ந்த லெவிபிராகல்  அவர்கள் உரையாற்றும்போது குறிப் பிட்டாரே!

அந்நாளேடு இன்று பல லட்சக்கணக்கில் அச்சிட்டு செல்ல வேண்டும் - தமிழர்களுக்கு நன்றி உணர்வு இருந்தால்!

'தமிழன் இல்லம்' என்பதற்கு அடையாளம் 'விடுதலை' அந்த வீட்டில் இருப்பதே என்றார் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் முன்பு!

'விடுதலை'யால் - பெரியாரால் -இயக்கத்தால் நேரிடைப் பயன் அடைந்தவர்கள் மட்டும் வாங்கி னால்கூட, இந்நேரம் அது பல லட்சம் பிரதிகள் - இப்போது இருப்பதுபோல 'பல ஆயிரங்கள்' என்ற நிலை மாறி உயர்ந்திருக்குமே!

அதுபோலவே பெரியார் இயக்கத்தினால், தொண்டறத்தால் பயன் பெற்றவர்கள், மாதா மாதம் ஒரு சிறு சதவிகிதம் - ஒன்றிலிருந்து மூன்று சதவிகிதம் நன்கொடை அளித்து வந்தாலே, அதன் நட்டத்தை ஈடு செய்ய முடியுமே!

பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவை நாடுவதுபோல - பயனடைவதுபோல - வந்து, நோய் குணமானதும்  'பறந்தே' விடுவர்!

சுய காரியப் புலிகள், இருப்பதை நிலைக்க வைத்த வர்கள் முக்கியமல்ல; பறப்பதற்குக் குறி வைக்கும் பரம பத ஏணிகள் தான் முக்கியம் என்பவர்களே உலகில் எங்கும்!

தேடித் தேடிப் பார்த்தாலும் 'ஒயாசிஸ்' போல நன்றி சொல்வோர், படர்ந்துள்ள பாலையில் சிலருண்டு!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு                           குறள்-110

2. மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு - 'பிஞ்சு களுக்கு' அய்ந்து ஆங்கிலச் சொற்களை கட்டாயம் மிகச் சிறு வயதிலேயே - மொழிப் பாடத் துவக்கம் போல சொல்லிக் கொடுப்பதில் 'ஜிலீணீஸீளீ' - 'நன்றி' என்று எப்போதும் தவறாது சொல்ல வேண்டும் யார்உ.தவி செய்தாலும் என்பதாகும்.

குழந்தைப் பருவப் பாடங்கள் - - Good Morning
தொடங்கி Thanksவரை முக்கிய சொற்கள்!

பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளில்கூட நான் கூர்ந்து கவனித்த ஒன்று;  பரிசு பெறும் இருபாலருள்ளும்  'நன்றி' என்ற சொல்லை பயன்படுத்துபவர்கள் வெகுக் குறைவு!

நன்றி காட்டுவது தமிழனுக்கு நஞ்சு! என்றும் சொன்ன பெரியார் மக்களை எப்படித் தன் அறிவுத் தராசில் சரியாக எடை போட்டுள்ளார், பார்த்தீர்களா!

 

- கி.வீரமணி

 

 

சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடம்பில் நாள்தோறும் உள்ள ரத்த சர்க்கரை (Blood Sugar)
அளவு, காலையில் வெறும் வயிற்றில் எழுந்தவுடன் உள்ள அளவு(Fasting) 80லிருந்து 110க்குள் இருக்க வேண்டும் என்றும், சாப்பிட்ட பின்பு, 110 முதல் 140 வரை இருப்பது நலம் Post Prandial (PP) எனவும் உள்ள அளவு அது!

இது மட்டுமே உடலின் ரத்தச் சர்க்கரை அளவை சரியாகக் கணக்காணிக்கும் முறையாகும். மூன்று மாதங்களில் அந்த சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது; எப்படி இருக்கிறது என்பதைக் கண் காணித்துப் பார்த்து, அதற்கேற்ப மருந்து மாத்திரைகளையோ அல்லது இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வோர்களுக்கு டாக்டர்கள் அளவை நிர்ணயிப்பதற்கு இந்த மூன்று மாத அளவு கோல் பயன்படும் என்பது முக்கியம்.

HbA1c  என்ற இந்த அளவு 3லிருந்து 6க்குள் இருந்தால் சர்க்கரை  இல்லை (Good Control),, 6 முதல் 7 வரை நியாயமான கண் காணிப்புடன்கூடி அளவு  (Fair Control),  7-8 மோசமான உடல் அளவு  (Bad Control)    என்று உலக அளவில் மருத்துவர்களால் கூறப்பட்டு கடைப் பிடிக்கப்படும் நியதியாக இருக்கிறது!

இதுபற்றி 'தமிழ் இந்து' நாளேட்டில் டாக்டர் கு.கணேசன் அவர்கள் எழுதியுள்ள ஒரு விரிவான கட்டுரை (22.3.2018 பக்கம் 8 ) வந்துள்ளது!

அதனை அப்படியே 'விடுதலை'யின்  பிறிதொரு பக்கத்தில் வெளியிட்டுள்ளோம் (6ஆம் பக்கம் காண்க).

அதில் அமெரிக்க மருந்து கம்பெனி களின் பங்கும், கருத்தோட்ட தாக்கமும் தான் இப்படி அடிக்கடி ரத்த அழுத்தம் பற்றி 140/90 என்பதைக்கூட மாற்றி குறைத்து 130/80 என கூறி யுள்ளார்கள். அதுவே இரத்தச் சர்க்கரை அளவு HbA1c என்பதில் 6,7 என்பது 8 என்றால் பயமுறுத்தும் அளவுக்கும் கூறுவது பன்னாட்டு மருந்து கம்பெனி யர்களின் திட்டமிட்ட ஒரு செயல், ஏற்பாடோ என்ற விவாதங்கள் நடை பெற்று வருகின்றன!

அதில் அறவே உண்மையில்லை என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது!

தற்போது துரித உணவுகள் (Fast Foods)    என்ற நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அடிமை யாகியுள்ள நமது இருபால் இளைஞர்கள், வீட்டில் சுகாதார முறை யில் சமைத்த உணவுகளை உண்ணாது புறந்தள்ளி, இந்த துரித உணவகங் களுக்குப் படையெடுத்து காசைச் செலவழித்து நோய்க்கு அழைப்பு விடுத்து, வெறும் நாக்கு ருசியை மய்யப்படுத்தி உண்ணுவதால், 25-30 வயது இளைஞர்கள் 'கிட்னி' - சிறுநீரகம் கெட்டுப் போகும் அளவுக்கு இவர்கள் சர்க்கரை நோயால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்ப வங்கள் ஏராளம் அன்றாடச் செய்திகளாக  ஏடுகளில், ஊடகங்களில் வருகின்றன.  மூன்று மாத அளவு 8க்குள் இருக்கலாம் என்றால் நோயாளி உயிரிழப்புகளும்கூட அதி கரிக்கும் வாய்ப்பும் உண்டு!

ஆனால் மருத்துவ ரீதியாக பல பன்னாட்டு மருந்து தயாரிப்பாளர்களின் 'லாபி' சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. அமெரிக்காவில் மட்டுமல்ல; அய்ரோப்பா கண்ட நாடுகளில்கூட இந்த உண்மை பொருந்தும்!

மூன்று மாத சர்க்கரை அளவைக் கணிக்கும்போது நோயாளிகளின் முதுமை, வயது - இவைகளுடன் இணைத்துப் பார்ப்பதே முக்கியம் என்று பொது மருத்துவ வல்லுநர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் (General Physician & Diabatology அறிவுரையாளர்), பிரபல Diabetologist சர்க்கரை நோய் மருத்துவர் (ஆஸ்திரேலியாவில் இத்துறையில் படிப்பு - பயிற்சி பெற்று வந்து இப்போது சென்னையில் உள்ள) டாக்டர் நல்லபெருமாள் போன்றவர்கள் நோய் நாடி நோய் முதல் நாடிடும் மருத்துவ  முறையை அறி வுறுத்துவர்.

50 வயது சர்க்கரை நோயாளிக்கும், 80-85 வயதுள்ள சர்க்கரை நோயாளிக்கும் எப்படி ஒரே அளவுகோலை HbA1c மூன்று மாத அளவுகோலை பார்ப்பது என்று கூறி இப்போது கூறும் 75-80-85 வயது சர்க்கரை 7க்குள் இருக்க வேண்டும் என்று கூற வேண்டாம்; அவர்களை பயமுறுத்தத் தேவையில்லை என்பர்!

மருந்துகள் உயிர்க் காக்கின்றன!

மருத்துவர்கள் நோயாளிகளை நன்கு குணப் படுத்துவர் ஆனால் மருந்து தயாரிப்பாளர்கள் பன் னாட்டு நிறுவனங்கள் தங்கள் பணப் பெட்டியை பதப்படுத்துகின்றன!

என்னே விசித்திரம்!

நேற்று (18.3.2018) தமிழ்ப் புலிகள் நடத்திய பெண்கள் விடுதலை மாநாட்டில் கலந்து கொண்டு மதுரையி லிருந்து இரவு 11 மணியளவில் புறப்பட்ட 'துராந்தோ வேக ரயிலில்' பயணம் செய்து சென்னைக்குத் திரும்பினேன்.

தொடர் வண்டி 3 மணி நேர கால தாமதத்துடன் தான் வந்தது.

காலையில் சென்னைக்கு வந்து சேர வேண்டிய நேரத்தில், காட்பாடிக்கு முன்னே ரயில் நின்று கொண்டிருந்தது.

நல்வாய்ப்பாக மதுரையில் நேற்று என்னைச் சந்தித்த பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் பொறியாளர் டாக்டர் வா. நேரு அவர்கள் தென்கச்சி கோ. சாமிநாதன் (அகில இந்திய வானொலியில், 'இன்று ஒரு தகவல்' மூலம் பிரபலமான மறைந்தும் மறையாத இனிய நண்பர்) எழுதிய சிந்தனை விருந்து தொகுப்பு நூல் -  அவரது வானொலித் தகவல் தொகுப்பு தந்தார்; படித்து முடித்தேன் ரயில் பயணத்தில்.

பல சுவையான செய்திகளில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் ஏற்பட்ட கதை பற்றிய தகவல் இதோ!

படித்துச் சுவையுங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்.

"தஞ்சாவூரை சரபோஜி மன்னர் ஆட்சி பண்ணிக் கிட்டிருந்த காலம்.

அப்போ ஒரு தடவை அந்த மன்னர் காசி யாத்திரை போனார்.

அந்தச் சமயத்துலே கல்கத்தாவுலே இருந்த ஆங்கிலேய ராஜப்பிரதிநிதியையும் அவர் சந்திக்கறதுக் காகப் போயிருந்தார்.

அந்த ராஜப் பிரதிநிதி, தமிழ்நாட்டுலேயிருந்து ஒரு ராஜா தம்மைப் பார்க்கறதுக்காக வர்றார்ன்னதும், தமிழ் நாட்டோட அருமை பெருமையையெல்லாம் விசாரிச்சு வச்சிக்கிட்டார்.

அவரு ஏற்கெனவே திருக்குறளோட ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிச்சவர். அதோட பெருமையை எல்லாம் புரிஞ்சிக்கிட்டவர். அதனாலே அதோட தமிழ் மூல நூலைப் பத்தி தமிழ்நாட்டுலேயிருந்து வர்ற ராஜாகிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சிக் கிட்டிருந்தார்.

சரபோஜி ராஜா வந்து சேர்ந்தார். ஆங்கிலேய ராஜப்பிரதிநிதி அவரை அன்போட வரவேற்றார்!

ரெண்டு பேரும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருந்தாங்க.

அப்போ அந்த இங்கிலீஷ்காரர் தஞ்சாவூர் ராஜாவைப் பார்த்துக் கேட்டார்:

"தமிழ் நாட்டுலே உண்டான திருக்குறளோட ஆங்கில மொழி பெயர்ப்பை நான் படிச்சு அனுபவிச்சி ருக்கேன். மொழிபெயர்ப்பே அப்படி இருந்தா மூலநூல் எந்த அளவுக்கு இருக்கும்ங்கறதை நான் யோசிச்சுப் பார்க்கிறேன். அதை யாராவது சொல்லிக் கேட்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு! அதனாலே திருக் குறள்லே சிலதை எனக்கு நீங்க சொல்லுங்களேன்!"ன்னு கேட்டுக் கிட்டார்.

சரபோஜி மன்னருடைய தாய் மொழி - மராட்டி (மகாராஷ்டிரம்)

அதனாலே தமிழ்லே திருக்குறளை எடுத்துச் சொல்ற நிலைமையிலே அவரு இல்லே!

ராஜப் பிரதிநிதி இப்படி கேட்டுட்டாரே என்ன பண்றதுன்னு முதல்லே கொஞ்சம் யோசிச்சார் - ராஜா! இருந்தாலும் அறிவுக்கூர்மை உள்ளவர் சரபோஜி மன்னர்.

அதனாலே அவரு அந்த ராஜப்பிரதிநிதியைப் பார்த்து, "என்னுடைய புத்தக சாலையிலே இதுமாதிரி ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் உண்டு. அதனாலே எல்லாத்தையும் நான் தெரிஞ்சு வச்சிருக்கறது முடியாத காரியம். நீங்க அனுமதி கொடுத்தா நான் ஊருக்குப் போனதும் அந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!"னார்.

"இதுமாதிரி இன்னும் எவ்வளவு தமிழ் புத்தகம் இருக்கு?" ன்னு கேட்டார் அவர்.

"எவ்வளவோ இருக்குது! ஊருக்குப் போனதும் அதோட பட்டியலையும் அனுப்பி வைக்கிறேன்!"னார் இவர்.

"சரி! அப்படியே செய்யிங்க!" சொல்லிப்புட்டார் அவர்.

ராஜா திரும்பி வந்தார். யோசிச்சிப் பார்த்தார்.

தமிழ்நாட்டுக்கு ராஜாவா இருந்துகிட்டு - தமிழ் மொழியிலே கவனம் செலுத்தாமே இருந்தது எவ்வளவு பெரிய தவறு-ன்னு அவருக்குப் புரிஞ்சுது!

இனிமே அப்படி இருக்கப்புடாது-ன்னு முடிவு பண்ணினார். தமிழ்ச் சுவடிகளையெல்லாம் தேடிக் கண்டு பிடிக்கணும் - தமிழ்ப் புலவர்களையெல்லாம் ஆதரிக்கணும்-ன்னு தீர்மானிச்சுட்டார்.

அதோட விளைவுதான் இன்றைக்கு இருக்கிற தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம்.

ராஜா, சொன்னது மாதிரியே திருக்குறள் பிரதியையும், தமிழ் நூல் பட்டியலையும் கல்கத்தாவுக்கு அனுப்பி வச்சார்.

சரபோஜி மன்னர் புத்தகங்களை தேடிக் கண்டு பிடிச்சு பாதுகாக்கறதுலே அக்கறையா இருந்தார்.

"நாமெல்லாம் புத்தகங்களை தேடிக் கண்டுபிடிச்சுக் கடையிலே போடறதுலே அக்கறையா இருக்கிறோம்!" என்று கூறினேன் என் நண்பர் ஒருத்தர்கிட்டே!

இதுக்கு அவரு பெர்னாட்ஷாவுக்கு ஏற்பட்ட அனுபவம் ஒண்ணைச் சொன்னார்.

ஒரு தடவை பெர்னாட்ஷா ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போயி சிலதை எடுத்துப் புரட்டிப் பார்த்துக்கிட்டிருந்தாராம்.

அவரே எழுதின நாடக நூல் ஒண்ணு இருந்தது. அதை எடுத்துப் பிரிச்சுப் பார்த்தார். அது ஒரு நண்பருக்கு பெர்னாட்ஷா ஏற்கெனவே அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகம்.

அந்த ஆளு கடையிலே போட்டுட்டார் போல இருக்கு.

பெர்னாட்ஷா மறுபடியும் அதை விலை கொடுத்து வாங்கினார். அதுலே ஏற்கெனவே 'அன்பளிப்பு'ன்னு எழுதியிருந்ததுலே அதுக்குக் கீழே புதுப்பித்த அன்பளிப்பு என்று எழுதி கையெழுத்து போட்டார். மறுபடியும் அதே நண்பருக்கு அனுப்பி வச்சுட்டார். அதாவது அன்பளிப்பை ஸிமீஸீமீஷ்  பண்ணிட்டார் - 'லைசென்ஸ்'லாம் Renew பண்றாங்கள்லே, அது மாதிரி!

இந்தச் சம்பவத்தை என்கிட்டே சொன்ன நண்பர் கிட்டே நான் ஒரு கேள்வி கேட்டேன்.

"ஏன் சார்! நான் எழுதிய புஸ்தகம் ஒண்ணை  'அன்பளிப்பு'ன்னு எழுதி  உங்ககிட்டே கொடுத்தா நீங்க அந்த ஆளு செஞ்சது மாதிரியாச் செய்வீங்க?"ன்னேன்.

"நிச்சயமா அப்படிச் செய்ய மாட்டேன்! வேறே மாதிரி பண்ணுவே!"ன்னார்.

"என்ன பண்ணுவீங்க?ன்னேன்.

"நீங்க எழுதிக் கையெழுத்துப் போட்ட பக்கத்தைக் கிழிச்சுட்டு அதுக்கப்புறமா கடையிலே போடு வேன்!ன்னார்".

- புத்தகம் எத்தகைய தனிமையைப் போக்கும் மகத்தான பயனுறு நண்பன் பார்த்தீர்களா?


நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தக்க முறையில் பாதுகாக்கப் பட வேண்டியதே.  என்றாலும் அடிப் படையானது இருதயம்; (Heart) தான் ஓய்வெடுக்காமல், உறங்காமல் சலிப் பின்றி தனது கடமையைச் செய்யும் முக்கிய உடல் உறுப்பு அது!

அதுபோலவே மூளையும் முக்கியம். அதன் செயலாக்கம்தான் நமது வாழ்வை பொருள் உள்ள (பணமல்ல - அர்த்த முள்ள வாழ்வு) வாழ்வாக ஆக்கிட உதவும். அது செத்துப்போனால் நாம் வாழ்வது பயனற்ற வாழ்க்கை அல்லவா? அதனால் மூளைச் சாவு ஏற்பட்ட வர்களின் உடல் உறுப்புக் கொடைமூலம், பலரையும் வாழ வைக்கும் அருமையான தொண்டறம் நடை பெறுகிறது. வாழு, வாழ விடு என்பதை சற்று மாற்றி, 'வாழு, முடியாவிட்டால் பிறர் வாழ வகை செய்ய நீ உதவிடு' என்பதற்காகவே இந்த உடல் உறுப்புக் கொடை. என்பது பரந்து விரிந்த மனிதநேயம்! இல்லையா?

கல்லீரல், கணையம் என்பதுடன் சிறுநீரகம் (Kidney) என்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்தால் தான் நமது உடல் நலம், கவலைகள் அற்றதாக இருக்க முடியும்.

நமது சிறுநீரகம் (Kidney)) அதுவும் சலிப்பின்றி பணி செய்து நம்மை வாழ வைக்கிறது. இரண்டில் ஒன்று பழுதானால்கூட மற்றொன்று அதன் கடமையைத் தவறாமல் செய்து நமது ஆயுளை வளர்க்க உதவுகிறது.

ஆனால் நம்மில் பலர் அதனை சரிவர கடமையாற்ற விடாமல் நமது தவறான பழக்க வழக்கங்களால் செய்து விடுகிறோம். எப்படிப்பட்ட கவலையும், கவனமும் சிறுநீரகத் நோய்த் தொல்லையிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதுபற்றி, நமது மருத்துவ நண்பர் அனுப்பிய ஒரு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நமக்கு ஒரு தனி மகிழ்ச்சியே!

1. அதிகமாக மது அருந்துவோர் தங்களது சிறுநீரகம் கெடுவதற்கு விதை தூவி, உரம் போட்டு வருகிறார்கள். அது சிறுநீரகத்தை பாதிக்கிறது. குடிகாரர்கள்கூட (ஒரு தடவை) அளவுடன் குடித்தால் அது பெரிய அளவில் பாதிப்பதில்லை! மொடாக் குடியர்கள் என்றால் கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை நிச்சயம் பாதிக்கவே செய்யும் என்பது ஓர் எச்சரிக்கையாகும்.

2. நமது நாட்டில் வழங்கப்படும் எளிய பழமொழி ஒன்று உண்டு.

'ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் மூத்திரத்தை அடக்கக் கூடாது' என்பதே சரியான அறி வுரை. அவ்வப்போது மூத்திரப் பையை (Bladder)
காலி செய்யத் தயங்கக் கூடாது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள்.

சிறுநீர் வெளியேற்றப்படாமல் அடக்கி அடக்கி வைத்தால் அதனால் மூத்திரப் பையில் கற்கள் உருவாகி, பிறகு அது பெரும் வலியைத் தந்து உயிர்க் கொல்லி யாகவும்கூட சிற்சில நேரங்களில் ஆகும் ஆபத்தை உண்டாக்கி விடக் கூடும். எனவே சிறுநீரை அடக்கா தீர்கள்!

வயது முதிர்ந்தவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இளைஞர்கள் கூச்சப்பட்டோ, சோம்பல் காரணமாக சிறுநீர் கழிப்பதைத் தள்ளி போட்டால், சிறுநீரகக் கற்களை அவர்களே உற்பத்திக் கான ஆயத்தம் செய்கிறார்கள் என்று பொருள்.

3. தேவைப்படும் அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.

போதிய தண்ணீர் குடிக்காவிட்டால் அதன் விளைவு நமது உறுப்புகள் செயலற்றுப் போக இந்தத் தண்ணீர் இன்மை (Dehydrate) காரணமாகிவிடும்!

நீரின்றி அமையாது உடம்பு என்று கவனமாக இருந்து அவ்வப்போது நீர் அருந்தினால் தான் நமது உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேற அது உதவி செய்யக் கடமை ஆற்றிடும், அதற்குப் போதுமான நீர் இல்லா விட்டால், அந்த சிறுநீரகம், - எண்ணெய் போடாத என்ஜின்  துருப்பிடிப்பதைபோல, இதுவும் கெட்டுப் போய் தட்டுத் தடுமாறிடும் நிலை ஏற்பட்டு டாக்சின் (Toxin)  என்ற விஷப் பொருள் உடம்பில் உற்பத்தியாகும். எனவே, போதிய  நீர் குடிப்பது மிகவும் தேவையாகும்.

4. உணவில் அதிக உப்பு ரொம்பவும் தப்பு - புரிந்து செயல்படுங்கள். சிறுநீரக பரிசோதனையில் உப்பு (Sodium) எவ்வளவு என்பதுபற்றியும் கிரியாட்டின் (Creatinine)
அளவு சோதனை போலவே கவனிப்பார்கள். அதிக உப்பு, சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்ய முக்கிய காரணியாகச் செயல்படும். எனவே உடலில் உப்புச்சத்து குறைந்து விடவும் கூடாது; கூடியும் விடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருங்கள்.

உப்புச் சத்து அதிகம் உள்ள ஊறுகாய், கருவாடு இவைகளை அதிகம் எடுப்பவர்கள் கவனமாக இருங்கள்.

(ஊறுகாய்ப் பிரியனான நான் அதை குறைத்து வருகிறேன் - பிறகு நிறுத்தியும் விடுவேன்)

5. அளவுக்கு அதிகமாக ஒரு நாளில் பல முறை காப்பி (Coffee)
) குடித்துக் கொண்டே இருந்தால் அது சிறு நீரகத்தை பாதிப்பது நிச்சயம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!

எனவே அளவோடு, ஒன்று, இரண்டு முறையோடு காப்பியை நிறுத்திக் கொள்க.

6. தூக்கமின்மை: உணவு, விளையாட்டு, உடற்பயிற்சி இவையெல்லாம் நமது உடல் நலம் பேண எவ்வளவு முக்கியமோ அதுபோல தூக்கம் என்பதும் முக்கியமாகும்! குறிப்பிட்டநேரம் தூங்குவது எழுவது உடல் கடிகாரத் தினை ஒழுங்குபடுத்துவதோடு, நமது உடல்  நலத்தையும் பாதுகாக்கப் பயன்படும்!

தூக்கமின்மை என்பது பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது!

அண்மையில் படித்த ஒரு வாக்கியம் - பிடித்த சொற்களும்கூட!

"பகலில் தூங்கினால் அது உடல் சோர்வைக் குறிக்கிறது. இரவில் தூக்கம் வராமல் இருந்தால் அது மனச் சோர்வை - மன உளைச்சலைக் குறிக்கிறது என்று அது எவ்வளவு சரியான உண்மை!

வயது முதிந்தவர்களுக்குக்கூட குறைந்தது 8 மணி நேரம் அல்லது 7 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள் தூக்கம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள்.

எனவே, தூங்குவது அவசியம். குறிப்பாக இரவு 12 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை உள்ள நேரத்தில் கண் விழித்திருப்பதை தவிர்த்து தூங்கினால் அது உடல் நலப் பாதுகாப்புக்கு பொதுவாக நல்லது என்பது மருத்துவ ஆய்வியல் கூற்றாகும்.

எனவே இந்த ஆறு கட்டளைகளை தவறாது ஏற்று வாழக் கற்றுக் கொண்டு, சிறுநீரகம் சீராக இயங்க உதவி, நோயற்ற வாழ்வைப் பெறுவோமாக.


சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழர்களுக்கான தமிழ் கற்கும் வாய்ப்பு எல்லாம் எடுத்துக்காட்டானவை ஆகும்.

பெரும்பான்மை, சிறுபான்மை என்பதைப் பற்றி கணக்குப் பார்க்காமல், மொழி என்பது அந்த மக்களின் உணர்வு பூர்வமான பண்பாட்டு தளம் என்பதால் அதனை மதித்து, அங்கே நான்கு மொழிகளான (மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம்) ஆகியவற்றிற்கு சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்தந்த மக்களும் தத்தம் தாய் மொழிகளைக் கற்றுக் கொள்கின்றனர். அவர்தம் வழி வழி சந்ததியரான இளையவர்களும் தமிழ் மொழியைக் கற்கவும், பேசவும், எழுதவும், ஏடுகள், செய்தி நிறுவ னங்களும், தொலைக்காட்சி, ஊடகங்களும் மிகச் சிறப் பான வகையில், தமிழைப் பயன்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில்கூட, மொழி ஒலியிலும், கருத்திலும் தமிழுக்கு இத்தனைக் கவலை பொறுப்புணர்ச்சியுடன் அதன் வளர்ச்சிக்கு வித்திடுவார்களா என்பது அய்யமாக உள்ள நிலையில், செம்மொழியான எம் மொழி தமிழுக்கு சிங்கப்பூர் நாட்டின் அரசு தரும் ஆக்கமும், ஊக்கமும் மிகுந்த பாராட்டிற்குரியவை ஆகும்.

நேற்று (28.2.2018) என்னைச் சந்தித்த, தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம். இலியாஸ் அவர்கள், அண்மையில் சிங்கப்பூரில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தமிழ் மொழி பெயர்ப்புக் குழுவும், அதன் சொல்வளக் குழுவும் இணைந்து உருவாக்கிய கையேடு, அரசு அதிகாரிகள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ் ஊடகங்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள் எனப் பலருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ் "சொல்வளக் கையேடு" - - (Glossary of English to Tamil Terms) என்ற நூலை என்னிடம் தந்தார்.

அந்நூல் பற்றிய செய்தி வந்தவுடன், அதனைப் படிக்க வேண்டும் என்ற எனது பேரவா நிறைவேறிற்று. அது கிடைத்து படித்ததில் எனக்குத் தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆங்கில அகர வரிசைச் சொற்கள், அரசாங்க அமைப்புகள், சார்ந்த சொற்கள், சட்டப் பெயர் தொகுப்பு ஆகிய நான்கு பகுதிகள் இந்தக் கையேட்டில்  அடக்கமாகி உள்ளன.

மிகுந்த பயனுடன் சிறந்த சொல் லாக்கத்தை கொண்டதாக இந்நூல் உள்ளது.

படித்தேன் - சுவைத்தேன்!

ஏடு நடத்துவோர், வகுப்புகளை எடுப்போர், எழுத் தாளர்கள், சொற்பொழிவாளர்கள் எல்லோருக்குமே இந்த அரிய கருத்துக் கருவூலம் பயன்படும் என்பது உறுதி!

இந்தக் கையேட்டில் சுமார் 4000 சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை   நண்பர் இலியாஸ் எனக்கு அளித்தவுடன் படிக்கத் துவங்கினேன். சொல்லாக்கங்கள் எப்படி எளிமையும், தமிழ் வலிமையும் பதியும் வண்ணமும் இந்நூலில் உள்ளன என்பதைப் பார்க்கையில் சிங்கப்பூர் அரசையும், வளர் தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி பெயர்ப்புத் துறையினரையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும்.

ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லை இணையத்தில் தேடுவதில் உள்ள இடர்ப்பாடு இதன் மூலம் வெகுவாகக் குறையும். சிறப்பான சொல்லாட்சிகள் புழக்கத்திற்கு வரும் வாய்ப்புகளும், அதன் மூலம் தமிழ் வளர் தமிழாகவே உண்மையில் வளர்ந்து பெருகிப் பெரிய பயன் விளைவிக்கவும் கூடும்.

எடுத்துக்காட்டாக இதோ ஒரு சில மொழிபெயர்ப்பு - சொல்வளங்கள்.

Assassination  - அரசியல்வாதி படுகொலை, பிரமுகர் படுகொலை

Asteroid  - சிறுகோள் (செவ்வாய், வியாழன்ஆகிய கோள்களுக்கிடையே செல்லும் சுற்றுப்பாதையில் உள்ள சிறுகோள்).

Budget airlines- மலிவுக்கட்டணச் சேவை/ சிக்கன விமானச் சேவை

Business cartel  - வர்த்தகக் கூட்டு ஆதிக்கம்/இலாப நோக்கு வர்த்தகக் கூட்டணி

Calamity  - பேரிடர் - பெருந்துயரம்

Pre emptive strike  - முன்னெச்சரிக்கைத் தாக்குதல்/முந்து நிலைத் தாக்குதல்.

Wrestling  - மற்போர்

WWW( World Wide Web) - உலக விரிவலை

Xenophobia - வெளிநாட்டவர்மீதான கடும் வெறுப்பு

இந்த 200 பக்கங்கள் கொண்ட கையேடு போன்று ஒன்று தமிழ்நாட்டிலும் நமது தமிழ் அறிஞர்கள், ஏட்டின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்கூடி தயாரித்து, உடனடி உதவி பயன்பாட்டுக்குச் செய்ய முன் வர வேண்டும்.

தமிழ் வாழ்க என்று ஆயிரம் முறை முழங்குவதை விட, இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வ சாதனைகள் அளவற்றப் பயன்பாட்டைத் தருவது உறுதி! சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தினர், தமிழ்மொழி பெயர்ப்புத் துறையினர் இணைந்த இப்பணிகள் அனைத்திற்கும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நெஞ்சம் வழியும் வாழ்த்துகள் உரித்தாகுக!

இத்தகைய ஆக்கங்கள் வருக! வளர்க! வாழ்க!

Banner
Banner