வாழ்வியல் சிந்தனைகள்

ஜப்பான் நாடு 'உதய சூரியன் நாடு' என்று அழைக்கப்படும் நாடு.

அங்கே உள்ள மக்கள் தொகையில்  65 வயதானவர்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்கு!

மகிழ்ச்சியுடன் வாழும் முதியவர்கள் பலரும் உண்டு. அங்கே 122 வயது வாழும் மூதாட்டியும்  உள்ளார்!

105 வயதான டாக்டர் ஷிகியாக்கி இனோஹாரா இதுவரை 150க்கு மேற்பட்ட புத்தகங்களை - "வாழும் கலை", "நீண்ட காலம் வாழ்வது", "நலமுடன் வாழ்வதெப்படி" என்பது போன்ற பல நூல்கள் அதில் அடங்கும்.

இவர் 'முதியவர்களின் புதிய இயக்கம்' என்ற ஒரு தனி இயக்கத்தின் நிறுவனர் ஆவார்!

உடல் நலத்துடனும் பலம் குன்றாமலும் இந்த 105 வயதிலும் உள்ள டாக்டர் இனோஹாரா அவர்கள் முதுமையைக் கண்டு அஞ்சாமல்,  அந்த முதுமையை வரவேற்று மகிழ்ச்சியுடன் வாழுவதற்குரிய 14 வழிமுறைகளை அவர் அறிவுரைக் கொத்தாக - பூங்கொத்து கொடுத்து மகிழ்விப்பது போல் மகிழ வைத்துள்ளார்! இதோ அந்த கருத்து முத்துக்கள்;

1) வியர்வையை வரவழைத்து - உடல் பலத்துடன் வாழுங்கள் முதுமையிலும் வியர்வை வெளியே வரும் வகையில் நமது உடல் நகர்ந்து கொண்டே - ஏதோ ஒன்றைச் செய்துகொண்டே இருங்கள்! மாடிப் படிகளில் ஏறி இறங்குங்கள்; உங்கள் உடமைகளை - பை போன்றவற்றைக்கூட - புத்தகங்களைக் கூட நீங்கள் பிறரிடம் தராமல் தூக்கிச் சென்று உடல் பலத்தை நாளும் இழக்காமல் கூட்டுங்கள். எஸ்கலேட்டர் - மின் படிகளில் ஏறுவதைவிட, படிகளில் நடந்து சென்றால் உங்களுக்குத் தேவையான வியர்வைத் துளிகள் உங்களுக்குப் பிறகு மகிழ்ச்சித் துளிகளாக மாறுவது நிச்சயம்!

2. உங்கள் டாக்டர் கூறுவதை அப்படியே கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளாதீர்கள். (அவரே ஒரு டாக்டராக இருந்தும் இப்படிக் கூற, அவர் தயங்கவில்லை!) உங்கள் டாக்டர் கூறும் எல்லாமே உங்களுக்கு ஏற்புடைத்தாக வேண்டும் என்பது உண்மை அல்ல. நீங்கள் உடல் நலவாழ்வு பற்றியும், நலம் பேணுவதுபற்றியும் உள்ள பல நூல்களைப் படியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதற்கே முன்னுரிமை கொடுத்து அதனைப் புரிந்துசெயல்படுங்கள்.

உடல் அமைப்பு அவ்வப்போது தேவையான எச்சரிக்கைகளை - அறிவிப்புகளாக வெளியிடுவதை உன்னிப்பாக கவனித்து அதன்படி என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்துங்கள். உடல் கூறுவதே முக்கியம்; டாக்டர் கூற்று அதற்குப் பிறகே! நமக்கு முதல் டாக்டர் நம் உடலே மறவாதீர்!

3. உங்கள் அறிவை, திரட்டும் தகவல்களை, அறியும் உண்மைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்!

இந்த 105 வயதான டாக்டர் இனோஹாரா - ஜப்பான் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து - 100 சொற்பொழிவு களுக்கு மேல் நிகழ்த்தி வருகிறார்! வியப்பாக இல்லையா?

அதுவும் நின்று கொண்டே பேசுகிறார்!

இவரது சொற்பொழிவுகளின் மய்யக் கருத்து வாணிபத்தில் வெற்றி பெறும் மக்கள் பற்றியும், போரும் - அமைதியும் எப்படிப்பட்டவை, மற்றும் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்கள்  - இவைகளே!

4. எளிதில் ஓய்வு (Retire) பெற்று விடாதீர்கள்.

உங்கள் உடலில் ஏதாவது ஓய்வோ, மனதில் ஏதும் ஊனமோ, மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோயின் காரணமாக வேலைகளில்  தொடர முடியாத நிலை ஏற்பட்டால் ஒழிய எளிதில் ஓய்வு என்ற ரிடையர்மெண்ட் பற்றி நினைக்கவே நினைக்காதீர்கள். தன்னைப்போல ஒரு நாளில் 18 மணி நேரம்கூட - இந்த வயது முதுமை யிலும் உழைப்பதற்குத் தயங்கவே தயங்காதீர்கள்!

5. முன்கூட்டியே திட்டமிட்டு வாழுங்கள். திட்டமிடாமல் மனம் போனபோக்கில் நடந்தால் நமக்குத் தோல்வியும், வீழ்ச்சியும் தான் ஏற்படும்.

ஒரு நாளுக்கு முன்பே அடுத்த நாள் என்ன வேலைத் திட்டம், எப்படி அதை செலவிடுவது என்பதை நன்றாக யோசித்துத் திட்டமிட்டு வாழுங்கள்; இன்றேல் உங்களது வாழ்வு கெட்டுப் போனதாக ஆகிவிடக் கூடும்.

இவரின் (டாக்டர் இனோஹாரா அவர்களின்) முன்கூட்டியே திட்டமிட்டு வாழும் வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ:

2020 ஜப்பான் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இவர் தனக்கென ஒரு வாய்ப்பையும், இடத்தையும்  ஒதுக்கி வைக்க வேண்டுகோள் விடுத்து இடத்தையும் பெற்றிருப்பதுதான்!

(நாளையும் தொடரும்)

புற்றுநோய் ஆபத்தான உயிர்க்கொல்லி நோய்; அதைத் தடுக்க எவ்வளவோ ஆராய்ச்சிகள் உலகின் வளர்ந்த நாடுகளில் நடைபெற்று வருகின்ற நிலையிலும், அதற்கான தனி தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

என்றாலும் நேற்று (14.9.2018) ஒரு நாளேட்டில் வந்துள்ள ஓர் செய்தி - இந்தியாவில் முதல் உயிர்க்கொல்லி நோயாக புற்றுநோய் முதன்மை பெறாத நோயாக எண்ணிக்கையில் இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

மாரடைப்பும் (Heart Attack), சர்க்கரை நோய்க் காரணமாக ஏற்படும் மரணங்களுமே இதற்கு முன் வரிசையில் நிற்கின்றவாம்!

கடந்த 1990 முதல் 2016 வரையில் 26 ஆண்டுகளில் சுமார் 100 அமைப்புகள் - இந்தியாவில் உள்ளவை ஒன்று திரண்டு, வயது முதுமை காரணமாக மரணம் ஏற்படும் நோய்கள் பற்றிய ஆய்வினை நடத்தி சில அரிய தகவல்களைத் தந்துள்ளனர்.

வயது முதுமை நிலையில், இந்த புற்று நோய்த் தாக்கம் என்பது கூடினாலும்கூட,  அதற்குரிய தக்க மருத்துவத்தின் மூலம் புற்று நோயாளிகளின் வாழ்வு கூடுகிறது என்பது ஒரு நம்பிக்கையூட்டும் நல்ல செய்தியாகும். 'தி லேன்செட்'  (The  Lancet) என்ற ஏட்டில் வெளி வந்துள்ள பல புள்ளி விவரங்கள் இதோ:

இரண்டாவது பெரிய உயிர்க்கொல்லியான இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்  பல உறுப்புகளின் புற்று நோயவர்கள் ஆகும். கருவாய் புற்றுநோய் - பெண்களின் பிறப்புறுப்பு புற்று நோய் (Cervical Cancer) பாதிப்பவர்கள் எண்ணிக்கையில் அவர்களது சுகாதாரப் பாதுகாப்புக் கண்காணிப்பு மூலம் குறைந்து வருகிறதாம்! இவ்வகை பல நோயாளிகளான பெண்கள் மருத்துவர்களிடம் கொண்டு வந்து காட்டுவதே, அந்நோய் முற்றிய நிலையில் மூன்றாவது, நான்காவது கட்டத்தில்தான் எனும் அவலம் உள்ளது என்பதால்; மற்றபடி உரிய காலத்தில் வந்து சிகிச்சை தொடங்கி விட்டால் 80 விழுக்காட்டினர் ஆபத்திலிருந்து நீங்கிய வர்களாகி விடுகிறார்கள்.

பல்வகையான உடலின் உறுப்புகளில் புற்றுநோய் தாக்குகிறது; தாக்கப்படுவது எந்த உறுப்புகளில், எந்த அளவு விழுக்காடு என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்கள் ஆய்வாளர்களான மருத்துவ வல்லுநர்கள் - 2016ஆம் ஆண்டு 'சர்வே'படி

1)     வயிற்றுப் புற்றுநோய்         - 9.1 சதவிகிதம்

2)     மார்பகப் புற்றுநோய்           - 8.2 சதவிகிதம்

3)     நுரையீரல் புற்றுநோய்        - 7.5 சதவிகிதம்

4) உதடுவாய்ப் புற்றுநோய்     - 7.2 சதவிகிதம்

5)     தொண்டை, மூக்குப் பகுதி புற்று நோய்                - 6.8 சதவிகிதம்

6)     கொலோன் - இரைப்பை, மற்றும் ஆசனவாய் புற்று நோய்    - 5.8 சதவிகிதம்

7)     ரத்தப் புற்றுநோய்       - 5.2 சதவிகிதம்

8)     கருவாய்ப் புற்றுநோய்         - 5.2 சதவிகிதம்

கடந்த 26 ஆண்டு காலத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்த ஒரு அரிய தகவல் மார்பகப் புற்றுநோய் - மகளிரிடம் ஒவ்வொரு மாநிலத்தில் 39.1 சதவிகிதம்  அதிகரித்துள்ளது.

கருவாய் (பெண் பிறப்புறுப்பு)  புற்றுநோய் 39.7 சதவிகிதம் குறைந்துள்ளது.

இதற்குரிய முக்கிய காரணங்கள் மருத்துவ ஆய்வின் அறிக்கை கூறும் தகவல் உடல் பெருத்தல், வயது தாண்டி கருவுற்ற பிள்ளைப் பேறு, சுற்றுச்சூழல் முதலியவை மார்பகப் புற்றுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.

புகையிலை எந்த ரூபத்தில் உடலுள் சென்றாலும் மிகவும் ஆபத்தான புற்றுநோய்க்கான விதையாகும்!

இவைபற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நாடு தழுவிய இயக்கமாகவே நடத்திட  நல அமைப்புகள் முன் வருதல் அவசியம் - அவசரம்!

புற்றுநோய் பற்றிய தடுப்பு விழிப்புணர்வுக்கான பெரியார் மய்யம் சென்னையிலும், திருச்சியிலும் இயங்கி வருகிறது. அதனை ஊக்கப்படுத்தி ஈத்துவக்கும் நல்லமனம் கொண்ட, நடுத்தரக் குடும்பத்தினரும், ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய மேற்பொறியாளரும், சிறுவயது முதலே மானமிகு பெரியார் பற்றாளரான திரு. வாசுதேவன் (வயது 86) (இவர் செய்யாறு அருகில் உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர்), அவரது வாழ் விணையர் மறைந்த பத்மினியின் நினைவாக  10 லட்சம் ரூபாய் நமது பெரியார் அறக்கட்டளைக்கு அளித்து மகிழ்ந் துள்ளார்கள்!

எத்தகைய பெரு உள்ளம் படைத்தவர்கள் பார்த்தீர்களா?

இப்படிப் பற்பல நற்பணிகள் அதிக விளம்பரங்கள் இல்லாமல் அடக்கமாக நடந்தேறி வருகின்றன!

அருமை நண்பர் மானமிகு வாசுதேவன் போன்ற வரால்  இந்த உலகம் உயர்ந்தோர் மாட்டுமட்டுமல்ல; நற்பணிகளைத் தூண்டல் என்ற தொண்டறம் தொடர வாய்ப்பேற்படுகிறது! வாழ்க - வளர்க!

பெங்களூருவில் நீண்ட காலம் அரசுப் பணியி லிருந்து ஓய்வு பெற்றவர், சுயமரியாதை வீராங் கனையாகிய திருமதி. சொர்ணா அரங்கநாதன் அவர்கள்.

நாளை (11.9.2018)  அவருக்கு 85ஆவது வயது பிறந்த நாள். பல்லாண்டு நலத்துடன் வாழ்க!

அவரும், அவரது வாழ்விணையரும் (தோழர் அரங்கநாதன்)  கருநாடக திராவிடர் கழகத்தில் இணைந்து பணியாற்றிய தொண்டறச் செம்மல்கள். தனது பேரன் - பிள்ளைக்குச் சொத்தினை வழங்கி விட்டு, எஞ்சியது தங்களது நிகழ்கால எதிர்கால வாழ்வுக்கென ஒதுக்கி, அதில் ஒரு முக்கிய பகுதியை நமது பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்திற்கும், நமது அறக்கட்டளைகளுக்கும் அவ்வப்போது வழங்கிக் கொண்டே இருப்பதில் தனி இன்பங் காணுபவர் இவர்கள்!

சுயமரியாதை வீராங்கனை சொர்ணா அவர்கள் எம்.ஏ. படித்து முடித்தவர். தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளை நன்கு அறிந்தவர்.

அவர் தஞ்சை வல்லத்தில் உள்ள நமது பல்கலைக் கழக விடுதியில் தான் தங்கி, மகிழ்ச்சியுடன் தமது எஞ்சிய வாழ்வைச் செலவழித்து, நமது கழகப் பணியை, கல்விப் பணியை எப்போதும் ஊக்குவிக்கும் ஓர் அன்புச் சகோதரியவார்.

அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பு ஆண்டுதோறும் சமூகநீதி தொண்டறத்திற்கான பாராட்டு விருதாக வழங்கி வரும் 'கி. வீரமணி சமூகநீதி விருது' ஒரு லட்ச ரூபாய் - பாராட்டுரை பட்டயத்தை நமது இனமானத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு பெரியார் திடலில் வழங்கிய அன்று, பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகத்திற்கு (அப்பல்கலைக் கழகத்தினை முதல் அமைச்சராக இருந்த நிலையில் அவர்தான் 12 ஆண்டுகளுக்கு முன்பே அதைத் தொடங்கி வைத்தவர்) மானமிகு திருமதி. சொர்ணா ரங்கநாதன் அவர்கள் பல்கலைக் கழக வளர்ச்சிக்கு 30 லட்ச ரூபாய் காசோலையை கலைஞர் கையில் கொடுத்து நம்மிடம் வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

என்னிடம் மேடையில் கலைஞர் அவர்கள் இவரைப்பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து மகிழ்ந்தார். இவர் பெரும் பணக்காரரோ, தொழில் அதிபரோ, செல்வத்தில் புரளும் செல்வந்தரோ அல்ல. நடுத்தரக் குடும்பத்தினர்; ஓய்வு பெற்ற ஓர் அரசு அதிகாரி - ஓய்வூதியத்தை வைத்து வாழுபவர்.

அவர் தமது சேமிப்பிலிருந்து ஒரு பகுதியாக 30 லட்ச ரூபாய்களை நம் பெரியார் - மணியம்மை பல்கலைக் கழக வளர்ச்சிக்குத் தந்தார் என்றால், அது எத்தகைய பெரு உள்ளம் கொண்ட செயல்! அதுபோலவே அவருக்குக் கொடுத்து மகிழ்வதில்தான் எத்தனை எத்தனை இன்பம்!

அதனைத்தான் 'ஈத்துவக்கும் இன்பம்' என்று கூறி மகிழ்ந்தார் வள்ளுவர் பெருமான்!

பணம், கொடை தருவதற்கு முக்கியமாக வேண்டியது பணம் அல்ல நண்பர்களே - மனம், மனம், மனம்! எத்தனையோ பெரும் பணக்காரர்கள் ஏன் பண முதலைகள்கூட நாட்டில் ஏராளம் உண்டு. அவர்கள் இரு வகைப்பட்டவர்கள்.

ஒருவகை, பணத்தைச் சேர்த்து வைத்து 'வைத்திழக்கும் வன்கண்வர்கள்' வைக்கோல் போரினை காக்கும் குக்கல்கள் போன்ற குறுகிய புத்தியாளர்கள் - கொடை அறியாத தடை மனத்தவர்! கடை மனிதர்கள்!

மற்றொரு வகை, சேர்த்த பணம் தவறான வழியில் ஈட்டப்பட்டது என்பதை அறிந்து. 'தன் நெஞ்சே தன்னைச் சுடும்' என்பதால், அதை திருப்பதி ஏழுமலையானுக்கு வைரத்தோடு, ஏதோ அவர் துரித நகைக்கடை வைப்போர் போல என்றோ, அல்லது அணிந்து கம்பீர நடை போடுவார் என்றோ கருதாமல், உண்டியலில் போட்டு, பாவத்திற்குக் கழுவாய் தேடி, மோட்சத்திற்கு டிக்கெட் வாங்கிட முந்துபவர்கள்! அறவிலை வணிகர்கள்!!

ஆனால் சொர்ணா அரங்கநாதன் போன்ற பகுத்தறிவாளர்கள் தாராள மனம் படைத்தவர்கள் மட்டுமல்ல; எங்கே எவரிடம் இதைக் கொடுத்தால் அது சுயநல வாய்க்காலில் செல்லாமல், பொது நலப் பயன்பாட்டு வயலுக்குப் பயன்படும் என்றே தெளிவாக திட்டமிட்டு நன்கொடை தருவார்கள்.

நேற்று முன்னாள் (8.9.2018) வல்லத்தில் பல்கலைக் கழக வளாகத்தில் நடை பயிற்சியின்போது அவரைக் கண்டு நலம் விசாரிக்கச் சென்றபோது, ரூபாய் 50 ஆயிரம் கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும், ரூபாய் 20 ஆயிரம் நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கும், (இரண்டும் திருச்சியில் பல ஆண்டுகளாக இயங்கும் மனிதநேய மய்யங்கள் ஆகும்) நன்கொடையளித்தார்! நாம் நன்றி கூறினோம். அவரது மகிழ்ச்சி ஊற்றெனப் பெருகியது.

என்னே தொண்டறம்! இவரைப் போலவே மதுரை திருநகர் பகுதியில் வாழும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஓய்வு பெற்று, ஒற்றை தனி மரமாய் ஓங்கி நிற்கும் தொண்டறச் செம்மல் ஆசிரியர் இராமசாமி அவர்களும் தனது சேமிப்பினை நமது அறக் கட்டளைகள் நடத்தும் கல்வித் தொண்டிற்கு வாரி வழங்கி தோன்றாத் துணையாக  உள்ள மற்றொரு தொண்டறச்செம்மல்.

அவர்பற்றி நாளை எழுதுவோம். 'விடுதலை' எழுத்துக்களை வரிவரியாய் படித்து மனதிற்கோடிட்டு, மகிழ்ச்சியுடன் மற்றவர்களிடம் பகிரும் ஈத்துவக்கும் பணியில் இன்பங்காணும் எளிமையின் ஏந்தல் அவர்!

இவர்களைப்  பெற்றது பெரியாரின் வாழ்நாள் மாணவன் ஆகிய எம்மைப் போன்றோர்க்கு எத்துணை எத்துணைப்   பேறு - வற்றாத ஆறுபோன்ற பேறு! என்பேன்! மகிழ்வேன்.

(அவர்பற்றி நாளை)

ஜான் மெக்கெயின் அவர்கள், வியட்நாம் போரில் யுத்தக் கைதியாக வியட்நாமியர்களால் சிறை பிடிக்கப்பட்டு தனது 31 வயதில் 5 ஆண்டு தனிமைச் சிறையில் பல்வேறு சோதனைகள்  - வேதனைகளுடன் வாழ்ந்தார்.

கருத்த முடியுடன் கைதியாகப் பிடிபட்டு, தன்னாட்டுக்காக, இராணுவக் கைதியாக வியட்நாமின் சிறைச்சாலையில், பல நேரங்களில் தனிமைச் சிறையில் வதிந்த நேரத்திலும் நம்பிக்கை இழக்காமலிருந்த இந்த மாபெரும் மேதை 5 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வெளியே வரும்போது, நரைத்த முடி, இளைத்த உடலுடன் - ஆனால் தளரா உறுதியுடன் வெளியே வந்தார்!

இவர் பாரம்பரியமான இராணுவக் குடும்பம் - கப்பற்படை அதிகாரியாக இவரது  தாத்தா, தந்தை இவர்கள் எல்லாம் பணிபுரிந்துள்ளனர் என்பதை அறிந்து, இவருக்குச் சிறையில் சலுகை காட்டி, விடுதலை செய்ய (முன்கூட்டியே) முன்வந்த நிலையில், இவர் தனது சக கைதிகள் - இராணுவ போர்க் குற்றவாளிகளான (POW - Prisoner of War) அத்தனைப் பேர்களும் விடுதலை செய்யப்பட்டாலொழிய தான் வெளியேற  மாட்டேன் என்று பிடிவாதம் காட்டி, வெற்றியடைந்த ஒரு மாமனிதர் இவர்!

சிறைச்சாலைதான் மனிதர்களின் சுயநலம் எத்தகையது என்பதை அளந்து காட்டும் அற்புத பரிசோதனைக்கூடம் என்பதை மிசா கைதியாக 1976இல் சென்னை மத்திய சிறைச்சாலையில் நான் இருந்தபோது நேரில் பார்த்து அனுபவித்து உணர்ந்தவன்.

சக கைதியான ஒரு தோழர், ஆறு பேர்கள் கொண்ட எட்டடி கொட்டகை அறையில்  (Cell) ஒருவர் இரவில் போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டு, அவருக்கு வந்த ஒரு ஆப்பிள் பழத்தை இரவு எல்லோரும் தூங்கி விட்டார்கள் என்ற நினைப்பில் பிறகு மெதுவாக கடித்து - மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவே செய்ததைக் கண்டு நாங்கள் நகைத்து ரசித்தோம். மனிதர்களின் சுயநலம் எப்படி வெளியே உலா வருகிறது அங்கே என்று புரிந்து கொண்டவன் இதை எழுதுகிறேன்.

ஆனால், ஜான் மெக்கெயின் போன்றவர் தனக்கு விடுதலை தந்து - கருணை காட்டி - அங்குள்ள ஜெயில் அதிகாரிகள் முன்வந்தபோதுகூட அதை ஏற்காது, சக தோழர்களுக்கும் விடுதலை கிட்டினால்தான், தான் வெளியே செல்ல முடியும் என்ற அவரது உறுதி எவ்வளவு மகத்தான மாமனிதர் அவர் என்பதை உலகுக்குக் காட்டுவதாக இருந்தது!

பண அரசியல், தரந்தாழ்ந்த பிரச்சாரப் புழுதி - இவைகள்தான் தேர்தல் அரசியலில் காணப்படும் அம்சங்கள் அமெரிக்காவில் கூடவா என்று மூக்கின் மேல் விரலை வைக்காதீர்கள்!

அமெரிக்காவாக இருந்தால் என்ன? வேறு நாடாக இருந்தால் என்ன? எங்கும் மனிதன் மனிதன்தானே!

மனித சுபாவமும், ஆசா பாசங்களும் எல்லாம் ஒரே மாதிரியான அடிப்படையைக் கொண்டதுதானே!

இவரை எதிர்த்து நின்ற  ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பேரக் ஒபாமா, அவரைப்பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் "அவர் ஒரு தீவிரவாதி; அராபியக் குடும்பத்தவர்" என்றெல்லாம் இவருடைய கட்சியின் தேர்தல் பிரச்சாரகர்கள் பேசியபோதுகூட அதனை மறுத்து "அப்படிக் கூறாதீர்கள்; அவர் ஒரு கண்ணியம் மிக்க குடும்பத்தைச் சார்ந்த பெருமகன்"  என்று கூறி தனது கட்சிக்காரர்களின் ஒத்துழைப்பையேகூட இழக்கத் தயாரான நேர்மையாளர் இவர்!

தரந் தாழ்ந்த பிரச்சாரத்திற்கு இவரால்கூட பலியா காமல் தப்பிக்க முடியவில்லை - தேர்தல் கால பிரச்சாரப் புழுதியில்!

மின்னஞ்சல்கள், வதந்திகளும், மொட்டைப் பிரசுரங்களும் நல்ல மனிதனரான இவர்மீதும் பாயவே செய்தன!

இந்த மனிதர் குடியரசுத் தலைவர் வேட்பாளர், ஒரு சட்ட விரோத, இனக் கலப்புள்ள குழந்தையின் தந்தை என்றெல்லாம் 'கப்சாக்'களை கட்டி உலவ விட்டனர்! அவதூறு சேற்றை வாரி வீசினர்!

ஜான் மெக்கெயினும், அவரது துணைவியரும் வங்கதேசத்துப் பெண் குழந்தையை எடுத்து தங்களது வளர்ப்பு மகளாக்கி வளர்த்தார்கள் என்பது எவ்வளவு அருமையான, இவர் "யாவரும் கேளிர்" என்ற பரந்து விரிந்த மனப்பான்மையுடைய மாண்பமை மனிதர் என்பது புரியவில்லையா?

ஏன் 'கிசு கிசு' - பிரச்சாரத்தால் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது என்றெல்லாம்கூட கதை கட்டி விட்டனர்!

வெற்றி - தோல்வி என்பது தேர்தல்களில் உண்டு; ஆனால் மனிதத்தைத் தூக்கிப் பிடிக்கும் மகத்தான தொண்டறப் போரில் அவர் என்றுமே தோற்றதில்லை. மறைந்தும் மறையாமல் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழுகிறார் அவர்!

அண்மையில் காலமான அமெரிக்காவின் மாமனிதர்களில் ஒருவரான ஜான்மெக்கெயின் பற்றிய பல்வேறு தகவல்கள் மிகவும் சுவையானவை.

அவர் எழுதியுள்ள "ஓய்வற்ற அலைகள்" என்ற நூலைப் படிக்கும்போது அவரது, மேலான சிந்தனைகளும், செயல்பாடுகளும் மிளிருகின்றன.

இவர் அமெரிக்கக் கப்பற்படையில் சேர்ந்து பணி யாற்றியவர்; இவரது தந்தையாரும், அவரைப் பெற்ற இவரது தாத்தாவும்கூட அதே துறைகளில் பணியாற்றி முத்திரை பதித்தவர்கள்.

இவரது தாத்தா - கப்பற்படையில் மிகப் பெரிய சேவை புரிந்து, வீட்டிற்குத்  திரும்புகிறார்; இவரது பாட்டி தனது வாழ்விணையரை வரவேற்க வீட்டில் நண்பர்களை  அழைத்துப் பெரியதொரு வரவேற்பினை அளிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு காத்திருக்கிறார். தாத்தா மாரடைப்பினால், வந்த அடுத்த நாள், விருந்துக்கு முன்னர் மரணமடைந்த செய்திதான் போய்ச் சேருகிறது அவர்களுக்கு! 61 வயதுதான் அவருக்கு அப்போது! அவரது மகன்  - ஜான்மெக்கெ யினின் தந்தை - ஆற்ற முடியாத துயரம். அதனைத் தாங்கி எளிதில் வெளியே  வர முடியாத அவ்வளவு சோகம் கப்பிக் கொண்ட நிலையில், இவரது தந்தை இவரிடம், அவர் தந்தை சொன்ன அரிய கருத்துரைகளை நினைவூட்டிப் பேசுகிறார். "மகனே, மரணத்தைவிட மிகப் பெரிய செயல் உலகத்தில் ஏதும் இல்லை - எப்போது? நீ நம்பும் கொள்கைக்காகவும், நாட்டிற் காகவும் நீ மரணமடையும்போது, அதைவிடப் பெரியது வேறு எதுவமில்லை"

தன்னுடைய நூல் குவிக்கப்பட்ட நினைவுகளின் தொகுப்பாகவே இருக்கும் என்கிறார் ஜான்மெக்கெயின்.

இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்காவின் 'பேர்ல் ஹார்பர்' (Pearl Harbour) துறைமுகத்தில் ஜப்பானியர்களின் எதிர்பாராத தாக்குதல், அமெரிக்கா விற்கு மிகப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அதன் நினைவு நிகழ்ச்சியின்போது அந்நாளை, அப்போரில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற (War Veterans) இராணுவ வீரர்கள்,  தளபதிகளைக் கொண்டு அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜார்ஜ் H.W. புஷ் அவர்களைக் கொண்டு நடத்திடும் அந்நிகழ்ச்சியில், முன்னணி வீரர்களாக இருந்த போரில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களை அழைத்துப் பாராட்டி, பல்வேறு மலரும் நினைவுகளையெல்லாம் பரிமாறி மகிழ்ந்திடும் நிகழ்ச்சியாகிய அதன மிக அருமையாக வர்ணிக்கிறார்!

வியட்நாமுடன் அமெரிக்கா நடத்திய போரில் ஜான்மெக்கெயின் 5 ஆண்டு வியட்நாம் சிறையிலும் இருந்து பிறகு விடுதலையாகி வந்தவர் ஆவர். POW (Prisoner of War) என்ற முகாமில் இவர் ஆற்றிய பணி அளப்பரியது. நீண்ட நாள் செனட்டரான இவர் டெட்கென்னடிக்கு மிக நெருங்கிய நண்பர் ஆவர்!

அமெரிக்க செனட் உறுப்பினராக இருந்தவர்களில் இவர் ஒருவர்தான் ஒரு தனித்துவம் நிறைந்த அருமையான யோசனைகளைக் கூறிய மேதையாவார்!

மசோதாக்களை அவைகளில் கொண்டு வரு முன்னரே, எல்லா தரப்பினரையும் அழைத்து கருத்துப் பரிமாற்றங்கள் விவாதங்கள் மூலம் நடத்தி, எவற்றில் சமரசமாகப் போய் - விட்டுக் கொடுத்து, 'சுமுகமாக அவை சட்டங்களாக நிறைவேறிட வழிவகை செய்வது ஜனநாயகத்தின் மாண்புகளை மேலும் உயர்த்துவ தாகவே அமையக்கூடும்' என்ற அரிய யோசனையைக் கூறி, தனித்தே உயர்ந்து நின்றவர் இவர்!

அவர் இதற்காக ஒரு அழகான உவமையைச் சொன்னார்.

"எப்படி ஒரு மருத்துவர் - அறுவைச் சிகிச்சையை நடத்துமுன் நோய் பற்றி நன்கு அலசி ஆராய்ந்து, பிறகே அறுவை சிகிச்சை தேவை என்று முடிவெடுத்து இறங்குகிறாரோ அதுபோல அவைகளின் நடவடிக்கை - சட்டங்கள் இயற்றுதலும் இருப்பது மிகவும் அவசியம்" என்று கூறினார்.

யதார்த்த நடைமுறைகளில் மனிதகுலம் பகுத்து பார்க்கப்படுவது மதம், இனம் (Tribe), மனிதர்கள் குழு, லட்சியங்கள் இவைகளால்தான் தனித்தன்மையுடன் இயங்குகின்றன" என்று கூறினார்.

நூலைப் படியுங்கள். பாழும் புற்றுநோய் இவரைப் பறித்தது! அவர் மரணத்தை எதிர்கொண்டே உழைத் தார் -  மாமனிதர் மக்கள் நெஞ்சில் நிறைந்தார்!

(நாளையும் தொடரும்)

Banner
Banner