வாழ்வியல் சிந்தனைகள்

தேவிதயாளின் அன்றாடப் பணிகளில் ஒன்று, டாக்டர் பார்த்து கோடிட்ட பத்திரிக்கைகளின் (நாளே டுகள் தான் பெரிதும்) பகுதிகளை வெட்டி கத்தரித்து அவைகளை தேதி, குறிப்பிட்ட ஏடு சம்பந்தமான கோப்புகளாக ஆக்கி வைத்து அவருக்கு உதவுவது.

தேவிதயாள் கூறுகிறார்:

"இது எனக்குப் புதிய பணி அல்ல. டாக்டர் துவக்க காலத்திலிருந்தே அவரே அதனைச் செய்து வந் துள்ளார். அவரது நூலகத்தில் ஒரு பகுதி இத்தகைய வெட்டி சேகரித்து வைக்கப்பட்ட பத்திரிக்கை கத்தரிப்பு கோப்புகளும் ஆகும்.

நான் பம்பாயில் இருந்தபோது அவரது நூலகத்தில் 1907, 1908, 1909 போன்ற ஆண்டுகளின் பத்திரிக்கை கத்தரிப்புகளும் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டி ருப்பதை நானே பார்த்திருக்கிறேன். நூலகத்தில் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன்.

என்னிடம் ஒரு நாள் தடித்த ஒரு கோப்பினை டாக்டர் காட்டினார். அது பத்திரிக்கை கத்தரிப்புச் சேகரிப்புகள். அவர் கொடுத்தது 1917 முதல் 1929 வரை வந்த முக்கிய செய்திகள் - தகவல்கள், கருத்துரைகளின் தொகுப்புகளைக் கொண்ட கோப்பு - அக்கால அரசியல், சமூக, நிலவரத்தை உள்ளது உள்ளபடித் தெரிவிப் பவையாக அவைகள் இருந்தன. இதில் வியப்புக்குரிய செய்தி என்ன தெரியுமா?

இவைகளின் சேகரிப்புகளில் உள்ளதைவிட, டாக்டரின் மூளையில் அவைகளை ஒரு ஆவணக் காப்பகம் போல பதிந்து வைத்துள்ளார். எதை  எப்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர் அறிவார்; பயன்படுத்தவும் தயங்க மாட்டார். இதற்கு எடுத்துக் காட்டான ஒரு நிகழ்வு.

1944இல் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் "திவானாக" இருந்த சர் சி.பி. இராமசாமி அய்யர் டாக்டரைச் சந்திக்க வருகிறார்; சில விஷயங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றத்திற்கான சந்திப்பு அது. டாக்டர் கூறுகிறார்:

"தேவிதயாள், எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அவர் (சர் சி.பி. ராமசாமி அய்யர்) முன்பு 'தீண்டாத மக்களுக்கு' எதிராகப் பேசினார். அப்பேச்சு வெளிவந்த பத்திரிக்கைச் செய்தியை வெட்டி பாது காப்பாக வைத்துள்ளேன். அதைத் தேடிப் பிடி" என்றார்!

அய்யா, அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்று டாக்டரைக் கேட்டேன்! '12 ஆண்டுகளுக்கு முன்பிருக்கும்' - டாக்டர் பதில். 3,4 அங்குல நீளமுள்ள தாள் எனவும், அதை ஒரு காகிதப் பையில் போட்டு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்".

இவர் தேடிய போது அப்படியே சரியாக அதே பையில் தாள் இருந்ததை கண்டுபிடித்து டாக்டரிடம் கொடுத்த போது, டாக்டர் "You see I told you that rogue was once against temple entry'' என்று கோபம் கொப்பளிக்கக் கூறியுள்ளார்!

கோயில் நுழைவுக்கு எதிராக இந்த யோக்கியப் பொறுப்பற்ற மனிதர் பேசியுள்ளார் என்று கூறினாராம்! (இதைப்பற்றி "காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத வருக்குச் செய்தது என்ன?' என்ற நூலில் எழுதியுள்ளார்).

1932ல் குருவாயூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட வர்களை அனுமதிப்பதை அங்குள்ள வைதிக நம் பூதிரிகளும், பார்ப்பனர்களும் எதிர்த்தபோது சர். சி.பி. இராமசாமி அய்யர் கோயில் நுழைவுக்கான எதிர்ப் பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நவம்பர் 10 - 1932இல் வெளி வந்துள்ளதை டாக்டர் கத்தரித்து வைத்துப் பாதுகாத்துள்ளார். பிறகு ஏதோ மிகப் பெரிய மனமாற்றத்தின் விளைவால் திருவாங்கூர் கோயில் நுழைவுக்குத் தானே காரணம் என்பதாக சர்.  சி.பி. இராமசாமி அய்யர் வர்ணித்துக் கொண்ட "இரட்டை வேட நிலை" பற்றியதால் டாக்டருக்கு அவ்வளவு கோபம்! கடுமையான அச்சொல் அவர் வாயிலிருந்து வெளி வந்துள்ளது.

பொழுதுபோக்கு, சினிமா, கிளப்புகளுக்கு நண் பர்கள் இவரை  வற்புறுத்தி அழைத்துப் போய் சில மணி நேர மாற்றத்தை "இவருள் திணிக்க - மாறி இளைப் பாறட்டும்" என்ற நோக்கில் முயற்சி செய்தபோது அம்பேத்கர்தான் அப்போதும் வெற்றி பெற்றுள்ளார்; நண்பர்கள் தோற்றுப் போயினர்!

சினிமா அல்லது வெளியே சுற்றுலா மாதிரி அழைத் துச் செல்லப்பட்டார். இரண்டு முறை சினிமாவுக்கும், நான்கு முறை நண்பர்களுடன் சேர்ந்து செலவழிக்கும் கேளிக்கைக்கும் (Picnic)  சென்றதாக தேவி தயாள் கூறுகிறார்.

அதுபற்றி அவர் மேலும் கூறும்போது,

"அங்கே இருக்கும்போது அவர் மனம் சதா பல சிந்தனைகளைத் தேக்கி வைத்தபடியே இருக்கும். எதை எழுதுவது அல்லது சில பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதையே அவர் மனம் அசைபோட்டுக் கொண்டே இருந்திருக்கும் என்பதை எப்படிக் கண்டுபிடித்தோம் என்றால் - அங்கே இருந்து திரும்பும்போது நேரே மேஜைக்குச் சென்று உடனே அவசர அவசரமாக எழுதிட முனைவார். உடை களைக்கூட மாற்றிடும் எண்ணமே அப்போது அவருக்கு வந்ததே இல்லை! திரைப்படங்களில் பாதியில் திரும்பி வீட்டிற்கு வந்ததும் உடனே எழுதிட முனைவார்; காரணம் தேக்கிய எண்ணங்கள் கருத்துருவாக எழுத்தில் புத்தாக்கம் கொள்ளுவதை தாமதிக்கவே கூடாது என்பது அவரது பழக்கங்களில் ஒன்று."

முகமன் - முகஸ்துதி அவருக்குப் பிடிக்காத ஒன்று. அதைப் புரிந்து மறுத்திட தயங்கியதே இல்லை புரட்சியாளர் அம்பேத்கர்.

(நீளலாம்)

தேவி தயாள் என்பவர் சிறுவயதிலிருந்தே டாக்டர் அம்பேத்கரிடம் பணி புரிந்த இளைஞன் - உதவியாளர். இவரது பணி அவரது (வீட்டு) நூலகத்தைப் பார்த்துக் கொள்வதும், வீட்டில் சிறுசிறு வேலைகளைப் பார்ப் பதும் ஆகும்.

"டாக்டர் அறையில் காலை 7 மணி அளவில் சென்று அவர்கள் வாசிக்கும் செய்தித்தாள்களை அவரது சிறு ஸ்டூல் ஒன்றின்மேல் வைத்து விடுவேன். அவர் உறக்கத்தில் இருப்பார். பக்கவாட்டில் இருபுறங்களிலும், 2,3 நூல்கள் கிடக்கும். அவர் உறங்கும்போது மார்பில் புத்தகம் திறந்த நிலையில் இருக்கும்; சில நேரங்கள் அவை பக்கத்தில் விழுந்து கிடக்கும்" என்கிறார் தேவி தயாள். இரவு 1.30 மணிக்கு அவரை விட்டு இந்த தேவி தயாள் வெளியேறுவார்! சில புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு நீங்கள் படுக்கைக்குச் செல்லுங்கள் என்று அவரிடம் கூறுவாராம். அப்படி அவர் கேட்ட சில புத்தகங்கள் புருஷார்த்தா, ரிக்வேத சம்ஹிதை, தாமஸ்மூர் ஆகிய புத்தகங்கள். அவைகளை எடுத்து அவர் அருகில் வைத்து விட்டு அவரைக் கும்பிட்டு விட்டு நான் விடை பெறுவேன்; அவர் பக்கத்தில் எப்போதும் எட்டு, பத்து புத்தகங்கள் இருக்க வேண்டும்; காரணம் கண் விழித்துக் கொண்டால் அவற்றில் ஒன்றை எடுத்துப் படித்துக் கொண்டேயிருப்பார். அந்த வசதிக்காகத்தான் அந்த எட்டு, பத்து புத்தகக் குவியல். அவர் எப்போது உறங்குவார் படித்து முடித்து என்பது தேவி தயாளுக்கே கூடத் தெரியாது.

'Burning the midnight oil' ீ' நடு இரவு விளக்கெரித்தல் மூலம் எண்ணெயைச் செலவு செய்தல் என்று நேரடி பொருள் கொண்டால், இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பவர்களைப் பற்றியதே இச்சொற்றொடர் ஆகும்!

அவரது படுக்கை அறை 12 சதுர அடி, நாலு கதவுகள் (டில்லி பங்களா); ஒரு கதவு மட்டும் திறந்திருக்கும்; மற்ற மூன்று கதவுகளும் மூடியே இருக்கும்; காரணம் அவைகளுக்குப் பக்கத்தில் பெரிய பெரிய அலமாரிகள். அதில் வரிசையாக அடுக்கப்பட்ட புத்தகங்கள்தான், பக்கத்திலும் மேஜையில் புத்தகக் குவியல், எழுதும் தாள், பலவித பேனா, பென்சில்கள், அவர் உட்கார்ந்து படிப்பதேகூட வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு டாக்டர் அந்த அறையில் இருப்பதோ, படிப்பதோ தெரியாது; காரணம் புத்தகங்கள் மறைத்துக் கொள்ளும்! அவரது நண்பர்களில் ஒருவர் (ரமேஷ்) டாக்டர் எங்கே இருக்கிறார் என்று தன்னைக் கேட்டதாகவும், அதற்கு தேவி தயாள், அங்கே அறையில் தானே படித்துக் கொண்டிருக்கிறார் என்று பதில் கூறிய பிறகே, புத்தகக் குவியலில் புதைந்து படித்துக் கொண்டிருக்கும் அம்பேத்கரை அந்த நண்பர் ரமேஷ் கண்டார்!

அவரால் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டும்தான் அந்தக் குவியலில் இருக்கும். அவர் அமர்ந்து படிக்கும் நாற்காலிக்குப் பின்னே அலமாரியில் 4 அறைகளில் அவர் எழுதிய கையெழுத்து (நூல் களுக்காக) பிரதிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அவைகளில் பல புத்தகமாக அச்சுக்குச் செல்ல வேண்டியவைகளாகவும் இருக்கும். பென்சில் சீவும் கூர் தீட்டும் கருவியும் அருகில் அம்மேஜையில் இருக்கும்!

அவரது படுக்கைக்குப் பக்கத்தில்  பல ஸ்டூல்கள் வரிசையாக எப்படித் திரும்பினாலும் இருக்கும். அவற்றில் புத்தகக் குவியல் - அவர் மாறி மாறிப் படிப்பதற்கு வசதியாக தேவி தயாள் அடுக்கி வைப்பார். அவர் ஒரு முறை தேவி தயாளிடம் கூறினார்.  "தனது படுக்கையறை தான் எனது கல்லறையாகும்" என்றார்!

எதேச்சையாக சொன்னது நடந்ததே! 1956 டிசம்பர் 5 இரவு 'புத்தமும் தம்மமும்' (Buddha & Dhamma)
நூலின் முன்னுரையை எழுதி இறுதி வடிவம் கொடுத்து, உறங்கப் போனவர் நீடுதுயிலில்  - மரணத்தினை அடைந்து விட்டார்!

மேலும் தேவிதயாள் கூறுகிறார்:

அவரது உதவியாளர் தேவி தயாள் காலையில் அவரது படுக்கைக்குப் பக்கத்தில் செய்தித்தாள்கள் கட்டினை வைத்து, மின் விளக்குப் பொத்தானைப் போடுவார். எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்தவர் ஓரிரு ஏடுகளைப் படித்து விட்டு, எஞ்சியவைகளை அவர் கழிப்பறைக்கு (Toilet) செல்லுகையில் கையில் எடுத்துச் சென்று படித்து முடித்து விடுவார்.

இம்மாதிரி கழிப்பறைக்கு வெறும் பத்திரிக்கைகளை மட்டுமல்ல; சில சில நேரங்களில் புத்தகங்களைக்கூட எடுத்துச் சென்று விடுவார்!

அவர் எழுதும்போது அருகில் தள்ளி அமர்ந் திருப்பேன்; அவருக்கு அப்போது தேவையான புத்தகங்களை எடுத்துத் தருமாறு என்னைப் பணிப்பார். நான் உடனே தாமதமின்றித் தர வேண்டும்; தருவேன்.

அவர் எழுந்து கழிப்பறைக்குப் போன பின்னர் என்ன புத்தகம் அவர் அப்போது படித்து மேற்கோள் காட்டி எழுதுகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்னை உந்தித் தள்ளும். அது  H.H. வில்சனின் "வேதங்களின் மொழிபெயர்ப்பு" நூல் என்பதை அறிந்தேன்.

பத்திரிக்கைகளைப் படிக்கும்போது கோடிட்டு அத்துணை செய்திகளையும் படித்துவிட்டு தேவையான வைகளை கத்தரித்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச் சொல்வார்!

இதுபற்றி வியப்புடன் கூடிய ஒரு தகவலை நாளை படிப்போமா?

டாக்டர் அம்பேத்கரின் நட்புறவு வட்டத்தின் நெருங்கிய சீடரான நாம்தேவ் நிம்காடே, ஓர் நாள் மாலை டாக்டரை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். வழமைக்குமாறாக டாக்டர் அம்பேத்கர் சற்றுப் பதற்றத்துடன் கவலையும், அதிர்ச்சியும் உறைந்த நிலையில் உள்ளதைப் புரிந்து கொண்ட நாம்தேவ் "என்ன நடந்தது, ஏன் இன்று இப்படி இருக்கிறீர்கள்?" என்றுகேட்கிறார்.

அதற்கு டாக்டர் பதிலளிக்கிறார். "நேற்று நான் ஒரு விபத்தில் சிக்கி மீண்டேன். புத்தகம் வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்து நடந்தது;  கடுமையான மழை பெய்து கொண்டிருந்ததால், சாலைகள் வழுக்கிடும் நிலையில் இருந்திருக்கிறது. அப்படி கார் ஓடும்போது ஏற்பட்ட அந்த விபத்து, கார் வழுக்கிச் சென்று விபத்தை உருவாக்கிடும் பேரபாயம் ஏற்பட்டது; எப்படியோ எனது காரோட்டி (டிரைவர்) மிகவும் சாமர்த்தியமாக ஓட்டி, காரை தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து என்னைஅந்த ஆபத்தி லிருந்து காப்பாற்றினார். நான் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். அதோடு ஒரு சிறு தொகையை அன்பளிப்பாகவும்  தந்தேன். ஒரு வேளை அப்போது அந்த விபத்து ஏற்பட்டு நான் செத்திருந்தால்  என்னவாகும்?"

இப்படி அவர் சொன்னதைக் கேட்கும் எவரும், டாக்டர் தனது உயிரின்மீது எவ்வளவு ஆசை வைத் துள்ளார்; அல்லது சாவு கண்டு எவ்வளவு பயப்படுகிறார் என்றுதான் அவசரப்பட்டு, நம் கருத்தைச் சொல்லி விடுவோம்.

'நான் செத்திருந்தால் என்னவாகியிருக்கும்?' என்பதோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார் அம்பேத்கர்.

'நான் ஹிந்துவாக அல்லவா செத்திருப்பேன்! அதுதான் எனது கவலை!' என்பதுபோல் அப்படிக் கூறியிருக்கிறார்.

அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு தான் செத்திருந்தால் ஓர் ஹிந்துவாகவல்லவா செத்திருப்பேன் என்று கூறியது எவ்வளவு ஆழமான கொள்கை உறுதியையும், சொன்னதை செயலில் நாட்டுவதில் அவருக்கு இருந்த லட்சிய உறுதியையும் அல்லவா இது காட்டுகிறது.

"பிறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்து விட்டேன். அது எனது விருப்பமோ, அல்லது தேர்வோ அல்ல; ஆனால் இறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகச் சாக மாட்டேன்என்பது உறுதி!" என்று பல மேடைகளில் முழங்கியவர் ஆனபடியால் அதற்குரிய வாய்ப்பு இல்லாமல் விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டிருந்தால், தான் சொன்ன சொல்லை - லட்சியத்தை - காப்பாற்ற முடியாமல் போயிருக்குமே என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து அவருக்கு அவரது உயிரின்மீதிருந்த பற்றைவிட, அவரது கொள்கைப் பிரகடனமான "நான் சாகும்போது ஒருக்காலும் ஹிந்துவாக சாக மாட்டேன்!" என்ற உறுதியைச் செயல்படுத்த முடியாத வரலாற்றுப் பழிக்குத் தான் ஆளாகி விட்டிருப்போமே என்ற கவலை தான் டாக்டரை அதிர்ச்சிக்குரிய தாக்கியது!

உயிரைவிட இலட்சியம் - கொள்கை - சொன்ன உறுதிமொழியைக் காப்பாற்றுதல் என்பவை முன் னுரிமை பெற்று முதல் இடத்தில் உள்ளன அவரது வாழ்வில் என்பதைப் பார்த்தீர்களா?

இதைப் படித்தவுடன் அம்பேத்கர் என்ற ஒரு நாணயத்தின் மறுபக்கமான தந்தை பெரியார் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த இதே போன்ற கவலையும், அதிர்ச்சியும் எமது நினைவில் நிழலாடியது!

திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கச்சனம் என்ற ஊரில் 1964இல் நடைபெற்ற 'ஜாதி ஒழிப்பு மாநாட்டில்' தந்தை பெரியார் பேசும்போது, (அம்மாநாட்டில் தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், பாலதண்டாயுதம் கலந்து கொண்டனர், நானும் கலந்து கொண்டேன்!) "சில வருஷங்களுக்குமுன் எனக்கு நாக்கில் ஒரு புண் வந்து, ரத்தம் சீழ் வடியத் தொடங்கியது. உடனே சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனம் அவர்களிடம் காட் டினேன். அவர் என்னை டாக்டர் ராய் என்பவரிடம் அனுப்பி சிகிச்சை பெற பரிந்துரைத்தார். டாக்டர் ராய்  - எக்ஸ்ரே எடுத்து நோய் வாய்ப் புண்பற்றி ஆய்வு செய்து விட்டு,  'அட உங்களுக்கு இப்படி ஒரு நோயா வர வேண்டும்? இது புற்றுநோய் - நாக்கில் ஏற்பட் டுள்ளது; என்றாலும் சிகிச்சைகளை உடனே துவக்கி விடுகிறோம்' என்று கூறி ஏதோ சிகிச்சைகளை மேற்கொண்டார்.

அப்போது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி, துன்பம், கவலை ஏற்பட்டு விட்டது.

"நாம் சாவதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. வாயில் புற்று நோய் வந்தல்லவா இந்த இராமசாமி நாயக்கன் செத்தான். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்த அவனுக்கு கடவுள் என்ன தண்டனை, எப்படித் தந்தார் பார்த்தீர்களா? என்று அல்லவா எதிரிகள் பிரச்சாரம் செய்வர். அதை சிலரும் நம் மக்கள் முட்டாள்களாக இருப்பதால் நம்பித் தொலைப்பார்களே என்று கருதி அப்படி நடப்பதைவிட தற்கொலையாவது செய்து கொள்வது மேல் என்றுகூட நான் யோசித்த துண்டு" என்று கூறினார்.

அவருக்கு மரண பயம் இல்லை; மாறாக அய்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியது - தனது கொள்கைக்கு ஓர் பின்னடைவு பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடுமே என்ற கவலைதான் அவரை இந்த ஒரு விபரீத முடிவுக்குக்கூட தள்ளிவிட்டது!

டாக்டர் அம்பேத்கரும் சரி, தந்தை பெரியாரும் சரி -  மரணத்தைவிட தமது கொள்கை, லட்சிய, வெற்றிக்காக எவ்வளவு கவலையெடுத்தனர், அதற்காக உழைத் துள்ளனர் என்பதைப் பாருங்கள்.

இலட்சிய வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்களது இலக்கணம் எப்படி என்பது இதன்மூலம் புரிகிற தல்லவா?

இப்படிப்பட்ட அரிய தகவலைக் கூறும் நாம்தேவ் அவர்கள் தனது சைக்கிளில் சென்று, அண்மையில் அம்பேத்கரின் புத்தகம் வெளிவந்திருந்தால் அதைக் கொடுங்கள் என்று (1956 டிசம்பர் 6ஆம் தேதி) காலை குறிப்பிட்ட நாளன்று புத்தக விற்பனையாளரிடம் கேட்கிறார்.

அவர் ஒரு புத்தகத்தை இவருக்கு எடுத்துக் கொடுக் கும்போது, "இந்த நூலாசிரியர் டாக்டர் அம்பேத்கர் இன்று காலை காலமானார் என்று வானொலியில் செய்தி சொல்லப்படுகிறது; தலைவர்களும், மக்களும் அவரது (டில்லி இல்லம்) நோக்கிச் செல்கின்றார்களே" என்று இவரிடம் கூறிட இடி தாக்கியதுபோல உணர்ந்து   - "இருக்காது நிச்சயம், அது உண்மையாக இருக்காது; இருக்கவும் கூடாது" என்று தலையில் அடித்துக்  கொண்டே சென்று செய்தி உறுதியான பிறகு அம் பேத்கர் எழுதிய புதிய புத்தகம் ஒருகையில்; மறுகையில் மாலையும் அவரது சடலத்தின் மீது வைத்து, தேக்கிய கண்ணீர் ஏரியை உடைத்து விட்டுத் திரும்பினார்.

என்னே கொடுமை! இயற்கையின் கோணல் புத்தி.

(நதி மீண்டும் ஓடும்)

 

டாக்டர் அம்பேத்கரின் மிக நெருங்கிய நட்புற வுடன் இருந்த சீடரான நாம்தேவ் நிம்காடே ஓர் அரிய தகவலை - டாக்டரின் தனி நூலகம் எப்படிப் பட்ட பெருமைகளைக் கொண்ட அரிய சேகரிப்பு - மேற்கோள் பார்த்து அறியும் ஆய்வகம் போன்றது என்பதை விளக்கும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்!

ஒரு பிரிட்டிஷ் கமிஷன் - பிரிட்டிஷ் அரசால் நியமனம் பெற்றது; ஆய்வு செய்து அறிக்கையைத் தரும் பணி செய்யும் கமிஷன் - குறிப்பிட்ட ஓர் அறிக்கை (ரிப்போர்ட்) தேவை என்று இந்திய நாட் டின் நூலகங்கள், அரசு ஆவணக் காப்பகங்கள் எங்கெங்கும் தேடினர்; கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு அக்குறிப்பிட்ட தாங்கள் தேடும் அறிக்கை ஆவணம் டாக்டர் அவர்களது நூலகத்தில் இருக்கக் கூடும்; காரணம், இதுபோல், பல அரியவை களை சேகரித்துப் படித்து,  பின்பு பாதுகாப்புடன் இருப்பது அங்கேதான்; எதற்கும் அங்கு போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று டாக்டரை நாடி வந்து கேட்டனர்.

அவர்களுக்கு ஆச்சரியம்...!

அது அங்கே கிடைத்தது. டாக்டரிடம் கேட்டார் கள். அந்த பிரிட்டிஷ் கமிஷனின் பொறுப்பாளர்கள் - ஆய்வு செய்வதற்காக.

டாக்டர் அம்பேத்கர் உடனே இசைவு தந்தார். (பொதுவாக தனது புத்தகங்களை யாருக்கும் இரவ லாகக்கூட தருகின்ற பழக்கம் டாக்டர் அம்பேத் கருக்குக் கிடையாது). ஏனெனில், அவை திரும்பி வருமோ என்ற சந்தேகம் ஒருபுறம் என்றாலும், எதை, எப்போது எடுத்து அவர் ஆராய்வார் என் பதை அறுதியிட்டுக் கூற முடியாதே! தேடும்போது அது அங்கே இல்லை; கிடைக்கவில்லை என்றால், பணி - எழுத்துப் பணி அல்லது உரைக்கான ஆயத் தப் பணி அல்லது அவ்வப்போது கூடி விவாதிக்கும் நண்பர்களிடம் குறிப்பிட்ட அத்தகவல்களை மேற் கோளாகக் காட்டும் நூலை உடனே சுட்டிக்காட்டும் வாய்ப்பும் இருக்காதல்லவா? அதனால்தான் புத்தகங் களை இரவல் கொடுப்பது கூடாது என்ற அவரின் கொள்கைத் திட்ட நடைமுறை நமக்கும் ஏற்பு டையதே!

அவர் ஒரு நிபந்தனை விதித்தார். ‘‘இந்த அறிக் கையை எவ்வளவு விரைவில் உங்களால் திருப்பித் தர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்‘’ என்பதே அந்நிபந்தனை.

இப்போதுள்ள நகலக வசதிகள் அக்காலத்தில் கிடையாதே!

புத்தகங்களைப்பற்றிய - அவர் படித்த கொலம் பியா பல்கலைக் கழக நூலகத்தின் புத்தகங்கள்பற்றி டாக்டருக்கு மனதில்  அத்துப்படி டாக்டருக்கு. அவரது நினைவும், ஆற்றலும் அபாரமானது!

தான் எழுதிக் கொண்டிருந்த ஒரு நூலுக்குரிய மேற்கோள் (Reference)
வேண்டியிருந்ததால், ஒரு குறிப்பிட்ட புத்தகம் அவருக்குத் தேவைப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள நூலகங்களில் கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. பிறகு, தான் படித்த அமெரிக்கப் பல்கலைக் கழகமான கொலம்பியா பல்லைக் கழகத்தில் அப்போதிருந்த ஒரு மாணவரை - நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் மாண வராக அவர் இருந்திருக்கக்கூடும் என்பதால், குறிப் பிட்ட அந்த புத்தகத்தை நூலகத்தில் தேடிக் கண்டு பிடித்து எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அம்மாணவர் அங்கு தேடியபோது கிடைக்க வில்லை; இதை டாக்டரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக டாக்டர், ‘‘எனக்கு Card Catalogue  நூலக புத்தக எண் வரிசை அட்டை நினைவில் இல்லை என்று கூறி, நூலகத்தின் அலமாரிகளில் ஓர் அடையாளம் சொல்லி அந்த மூலைப் பகுதிக்குச் சென்று தேடிப் பாருங்கள் என்று சொன்னதும், அம்மாணவர் அந்தப் புத்தகத்தை குறிப்பிட்ட அவ்விடத்தில் கண்டுபிடித்தார்!

என்னே, யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு!

இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பது டாக்டரின் வழக்கம்; அவர் எப்போது எத்தனை மணிக்கு உறங்கப் போவார் என்பது அவருடைய உதவியாளர் ராட்டுவுக்குக்கூட சரியாகத் தெரியாது.

அப்படி படிப்பு! வாசிப்பு!! வாசிப்பு!!! சில அமெ ரிக்க பத்திரிகை நிருபர்கள் டாக்டரைத் தொடர்பு கொண்டு தங்களைச் சந்திக்க - பேட்டி காண - வசதியான நேரத்தை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டனராம். அப்போது இரவு நடுநிசி! நீங்கள் எப்போது வேண்டுமானாலும், இரவிலும் வந்து என்னைப் பார்க்க வரலாம்; உங்களுக்கு அனுமதி உண்டு என்றவுடன், நடுநிசி நேரத்தில் சென்று - அதிசயத்துடன் அவரைச் சந்தித்துள்ளனர்.

அவர்கள் கேட்ட முதல் கேள்வியும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த சமூகப் பொறுப்பு மிகுந்த பதிலும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். (இதை நாம்தேவ் நிம்காடே  தனது நூலில் பதிவு செய்துள்ளார்).

‘‘காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டு மென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகே அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது. ஆனால், இங்கே நாங்கள் வந்து பார்த்தால், நீங்கள் இந்த நடு இரவிலும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறீர்களே!’’ என்று அந்த நிருபர்கள் கேட்டதற்கு,

பாபா சாகேப், ‘‘காந்தியும், நேருவும் வாய்ப்பானவர்கள் (Luckly Leaders)
அவர்களைப் பின்பற்று வோர் எப்போதும் விழித்திருக்கிறார்கள். எனவே, இவர்கள் தூங்குகிறார்கள்.

எனது நிலை அப்படியில்லையே! என்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே உள்ளதால், அவர்களுக்காக இந்த நடுநிசியிலும் விழித்திருப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை இல்லையே!’’ என்று கூறினார்.

அவர்கள், டாக்டரின் சமூக உணர்வும், ஈடுபாடும், உறுதிப்பாடும் கண்டு வியப்புக் கடலில் வீழ்ந்தனர்!

அதுமட்டுமா?

டாக்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய விபத்து பற்றி கவலையுடன் டாக்டர் அம்பேத்கர், நாம்தேவ் விடம் கூறியதில் பொங்கிய கொள்கை உறுதிப்பாடு - அதிர வைக்கக் கூடியது.

அடுத்துப் பார்ப்போமே!

 

டாக்டர் அம்பேத்கருடன் பல கட்டங்களில் நெருங்கிப் பழகி, உரையாடி பல்வேறு அரிய செய்திகளை அறியும் வாய்ப்புப் பெற்ற நண்பர்கள் வட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் நாம்தேவ் நிம்காடே. இவர் டாக்டர் அம்பேத்கருக்கு அடுத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பூத்த ஒரு குறிஞ்சி மலர் - ஆம்! வேளாண் விஞ்ஞானியான இவர் அமெரிக்காவில் பிஎச்.டி., பட்டம் அத்துறையில் எடுத்தவர்.

மாணவப் பருவம் தொட்டு, வெளிநாட்டுப் பட்ட தாரியாகி - ஆய்வாளராகி உயர்நிலைக்குச் சென்ற நிலையிலும், டாக்டருடன் பழகிய அக்கால இளை ஞர்களில் ஒருவர். (இவர் 1920 இல் பிறந்து 2011 இல் மறைந்தவர்).

இவர் ‘ஒரு அம்பேத்கரிஸ்டின் சுயசரிதை ’(The Autobiography of An Ambedkarite) என்று அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுவைபட எழுதியுள்ளார்.

அதில் புத்தகங்களை எப்படிப் படித்தார்; பாதுகாப்பதில் எவ்வளவு கவலையாக டாக்டர் அவர்கள் இருந்தார் என்பதை பற்பல இடங்களில் விரிவாக விளக்கியிருக்கிறார்.

அம்பேத்கர் புதுடில்லியில் அரசியல் சட்ட வரை வுக் குழுத் தலைவர், பிறகு சட்ட அமைச்சர் நிலை களில் வாழ்ந்த பங்களாவில்கூட, மற்ற அமைச்சர் களின் பங்களாக்களில், அழகுப் பொருள்கள் வர வேற்புக் கூடங்களை அல்லது அலுவலக அறை களை அலங்கரிக்கும்.

ஆனால், டாக்டருடைய அந்தக் கூடங்கள் - அவரது வளமனையில் - புத்தக அலமாரிகள் வரிசைப்படுத்தப்பட்டு, அது கண்ணாடி போடப் பட்டு பல இடங்களில் இருக்கும். திடீரென்று, பேருரையாடல்கள் நண்பர்களிடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் கட்டமாகவோ அல்லது எழுதிக் கொண்டிருக்கையில் தேவைப்படும் நூல்களாகப் பல இருப்பதால், எந்த சூழலிலும் உடனே எடுத்துப் படித்துக் காட்டவோ, குறிப்பெடுக்கவோ அல்லது விவாதத்தில் எழுந்த அய்யப்பாடுகளைக் களை யவோ அது பயன்படும் வண்ணம் ஆங்காங்கே கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட புத்தக அலமாரிகள் இருக்கும்!

பம்பாயில் (அப்போது மும்பை பெயர் மாற்றம் கிடையாது என்பதால் இச்சொல் இங்கே பயன் படுத்தப்படுகிறது) உள்ள அவரது ‘ராஜ்கிரகா’ இல்லம்தான் மிகப்பெரிய, அரிய நூல்களைக் கொண்ட மிகப்பெரிய தனியார் இல்ல நூலகம் ஆகும்.

நண்பர் நாம்தேவ் நிம்காடவே, ஒருமுறை கேட்டார்; ‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’  என்று.

அதற்கு அம்பேத்கர், ‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். சிறந்த தொகுப்புகள்தான் என்பது உண்மை. பனா ரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்திற்கு இதனை அளித்து விடுங்கள் - விலைக்குத்தான் என்னிடம் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்’’ என்று கூறினார்.

நாம்தேவ் நிம்காடே கூறுகிறார்:

டாக்டரின் நூலகத்தில் பற்பல தலைப்புள்ள நூல் வகையறாக்களும் இருக்கும். எல்லா விஷயங்கள் பற்றியதாக, தெரிந்துகொள்ளும் வகையில்,

Theory of Relational  முதல் புத்த மார்க்கம் - அரசியலில் இருந்து கோழி வளர்ப்புவரை எல்லா விதமான புத்தகங்களும் இருக்கும். அவரிடம் எந்த விஷயம்பற்றியும் உரையாடி விவாதிக்கலாம். நீர்ப்பாசனம் தொடங்கி, அணுமின் சக்தி, நிலக்கரி சுரங்கம்வரை பலதரப்பட்ட தலைப்புகளிலும் ‘பளிச்' சென்று அவர்  படித்த செய்திகளையும் இணைத்துக் கூறத் தயங்கவே மாட்டார் டாக்டர்!

அவரிடம் ஒருமுறை நாம்தேவ் கேட்கிறார்:

 

‘‘அய்யா, நீங்கள் இவ்வளவு சலிப்பின்றி, களைப்பின்றி அதிக நேரம் புத்தகங்களை எப்படி வாசிக்க உங்களால் முடிகிறது?  அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடையில் சற்று இளைப்பாறிட (Relax)
மாட்டீர்களா?’’

அதற்குப் புன்னகைத்துக் கொண்டே பதில் சொல்கிறார் டாக்டர்.

‘‘எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான முற்றிலும் மாறான ஒரு புத்தகத்திற்கு மாறுவதுதான்’’ என்றார்.

அதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு புத்த மார்க்கம்பற்றி ‘சீரியசான’ ஆய்வு நூலைப் படித்து - சற்று நிறுத்திவிட்டு - உடனே நிகழ்கால நட வடிக்கைபற்றிய புது வெளியீடு ஒன்றை மாற்றிப் படிப்பது என்றார்.

இந்தப் பதில் எனக்கு மிகவும் தெம்பூட்டும் பதில்; ஏனெனில், மிக நீண்ட காலம் அம்பேத்கர் முறைபற்றி அறியாமலேயே அதைப் பின்பற்றும் புத்தக வாசிப்பாளன்  நான் என்பது, எனது முறை - இளைப்பாறுதல்தான் ‘மாறிடும் தலைப்பு’ - வழிமுறை மிகவும் பயன்தரக் கூடியதே!

எனவேதான், எனது புத்தகக் கூடத்தில் பலதரப்பட்ட தலைப்பு நூல்கள் - படிக்கவேண்டிய புதிய நூல்களை வைத்துக் கொண்டிருப்பேன் - சிலவற்றை பயணங்களிலும் எடுத்துச் சென்று படிப்பேன். அந்த இளைப்பாறுதல் மிகவும் பயனுறு காலச் செலவீடு அல்லவா?

(நதி  மேலும் ஓடும்)

Banner
Banner