வாழ்வியல் சிந்தனைகள்

ஓர் இயக்கமானாலும், நிறுவனம் ஆனாலும், ஏன் - குடும்பமானாலும் எந்த நிர்வாகத்தினைச் சிறப்புடனும், திறமையுடனும், நாணயத்துடனும் நடத்துவதற்கு நல்ல பொறுப்பான மேலாண்மையாளர்கள் தேவை.

நம்பிக்கைத் துரோகம் என்ற நோய் தாக்கப்படாத வளர்ந்து முற்றிய கதிர்கள் உள்ள நெற்பயிர்களைப் போல் அத்தகையவர்கள் அமைந்தால்தான் எவ்வளவு சிறப்போடு, எவ்வளவு ஆர்வத்தோடு, எவ்வளவு எதிர்பார்ப்போடு துவக்கப்படும் நிறுவனங்கள் - அமைப்புகள் ஆனாலும் அவை வெற்றி பெற்றிட தெளிவான முறையில் தேர்வுகள் நடைபெறுதல் முதல் தேவையாகும்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்          (குறள் - 517)

அது மட்டுமா? அந்த 'இவன்' எப்படித் தேர்வு செய்வது, ஆளுமையில் எப்படிப்பட்ட அணுகுமுறை பயனுறு வகையில் அமையக் கூடும் என்பதையும் திருவள்ளுவப் பேரறிஞர் துல்லியமாக விளக்குகிறார்.

இப்போது MBA என்ற (Master of Business Management) வகுப்புகளுக்கெல்லாம் இதனை (ஆங்கில மொழி பெயர்ப்புடன்) வைத்து, படிப்பாளிகளைப் பக்குவப்படுத்தலாம்.

பெரியார் அறக்கட்டளையின் தலைவரும் (மறைந்த),  சீரிய சிந்தனையாளருமான சிவகங்கை ஏழை மக்கள் வழக்குரைஞர் மானமிகு ஆர். சண்முகநாதன் அய்யா  அவர்கள், தன் பிள்ளைகளுக்கு முதற்கொண்டு அனைவருக்கும் சொல்லிக் கொடுத்த, ஒழுகச் சொன்ன குறள்கள் இதோ:

"தெரிந்து தெளிதல்" என்ற அதிகாரத்தில் ஓர் குறள்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள்               (குறள் - 509)

பொருள்: யாரையும் ஆராய்ந்து பார்க்காமல், ஒருவர் அப்படியே நம்பி விடக் கூடாது. அவ்வாறு ஆராய்ந்து பார்த்தபின், நம்பத் தக்கவைகள் எவையோ, அவற்றை மட்டும் அய்யுறாது நம்புதல் வேண்டும்.

அதுபோலவே மற்றொரு வழிகாட்டும் பாடம் நம்மில் பலருக்கும் இதோ:

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுறவும்

தீரா இடும்பை தரும்                    (குறள் - 510)

பொருள்: ஒருவனை நன்கு ஆராய்ந்து பார்க்காமல் நம்புவதும், ஆராய்ந்து பார்த்த பிறகு நம்பிக்கையுடையவனிடத்து அய்யப்படுதலும், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களைத் தவிர, இக்குறளைக் கடைப்பிடித்த தலைவர் எவரையும் யாம் கண்டதில்லை.

தந்தை பெரியார் தம், நம்பிக்கையை எவரும் எளிதில் பெற்று விட முடியாது; யாருக்காவது முக்கிய பொறுப்புக் கொடுக்க அவர்கள் நினைத்தால், எளிதில் முடிவு எடுத்துவிட மாட்டார்; பல சோதனைகளையும் (மறைமுக), பல்வேறு இக்கட்டான சூழலில் அத்தகையவர்கள் நடந்து கொண்ட முறைகள், சராசரி ஆசாபாசங்களைத் தாண்டி அத்தகைய நபர் நடக்கிறாரா? என்றெல்லாம் கூர்ந்து, பார்ப்பார். ஒரு பார்வையிலே ஓங்கி மனிதர்களை அளந்து விடும் "நுண்மாண் நுழைபுலம்" படைத்தவர் அய்யா என்றாலும்கூட பல்வேறு கோணங்களில் யோசித்து வைப்பார்.

பொறுப்பில் வைத்தபின் எளிதில் சந்தேகப்பட மாட் டார்; முழு நம்பிக்கை வைத் திருப்பார்! பல புகார்கள் - தவறுகள் குற்றச் சாற்றுகள் அப்பொறுப்பாளர்மீது கூறப்பட்டாலோ, எழுப்பப்பட்டாலோ அவற்றை நிதானமாகக் கேட்டபிறகு, அவசரப்பட்டு நடவடிக்கையெடுத்து நீக்குவதோகூட அவருடைய முறை அல்ல.

ஆங்கிலச் சொற்றொடரானது 'Giving the long rope, or giving  long margin' என்றபடி மேலும் ஓரிரண்டு முறை பொறுத்துப் பார்ப்பார்; அதன்மீதே நடவடிக்கை பாயும்.

தெரிந்தபின் அய்யுறுவுதான மனித வாழ்வில் பலர், மனைவியைக்கூட சந்தேகப்படும் கணவன்களும், தொண்டர்களைச் சந்தேகப்படும் தலைவர்களும் உயிருக்குயிரான நண்பர்களையே ஒரு வகையாகப் பார்க்கும் விசித்திர நண்பர்களும்கூட உண்டே! அன்றாட வாழ்வின் அவலங்களை - செய்தித்தாளில் பார்க்கிறோம். சில உண்மைகள் அப்பக்கத்தில் இருக்கக் கூடும் என்றாலும்,

நம்பிக்கைத் துரோகமும், நயவஞ்சக நாடகமும் மலிந்து வரும் இக்கால கட்டத்தில் தெளிந்த நட்பும், நன்றி உணர்வும் - நம்பிக்கையை நியாயப்படுத்தும் பொறுப்பாளர்களும், நண்பர்களும், அத்திப் பூக்களே!

 

- கி.வீரமணி

தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ - மேதைகளாக, மூதறிஞர்களாக முதிர்ந்து ஒளிவிளக்குகளாக வழிகாட்டிக் கொண் டுள்ள எண்ணற்ற நம் இனப் பெரியோர்களை - தமிழ்த் தொண்டர்களை - நாம் நம் இளைய தலை முறையினருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

புதுப்புது ஆரவாரங்களில் திளைக்கும் நம் இளையர்களுக்கு, வேர்களின் பெருமையை விளக்கி னால்தான் - அவ்விழுதுகள்கூட நாளை அந்த வேர் களைப்போல் உறுதியாக நின்று, மரத்தைக் காக்கும் மகத்தான கடமையாற்றிட முடியும்.

வட அமெரிக்காவில் சிகாகோ தமிழ்ச்சங்கம் தொடர்ந்து சிறப்பான மொழி, இனம், கலை, பண்பாடு, நமது தனித்த நாகரிகச் சிறப்பு - மானுட நேயம் - எல்லாவற்றையும் முன்னிறுத்தி நல்ல பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

தோழர் சாக்ரட்டீஸ் அவர்களும், அவரது செயற் குழு நண்பர்களும் தொடர்ந்து செய்யும் இவ்வறப் பணிகளில் ஒன்று, நம் கவனத்திற்கு வந்தது - மகிழ்ச்சி அடைந்தோம்.

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களுக்கு நூற் றாண்டு விழாவை அங்கே நடத்தி, தமது நன்றி உணர்வைக் காட்டினர். டாக்டர் வ.சுப.மாணிக்கம் நமது தலைமுறையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர். ‘வள்ளுவம்‘ என்ற அவரது நூல் ஒரு சிறந்த ‘நவில் தொறும் நயம்‘ தரும் நூல். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவராக விளங்கிய பிறகு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தவர்!

‘பொய் சொல்லா மாணிக்கனார்’ என்று அவருக்கு ஒரு பெயரே உண்டு; அவ்வளவு தூரம் உண்மை விளம்பி அவர்!

அவரது நூற்றாண்டு விழாவை நடத்தியவர்கள், அருமையான அழைப்பிதழை அச்சிட்டிருந்தனர். அவரது மொழியில், அவர் எழுதிய கவிதை வடிவில் செய்தியையே அச்சிட்டிருந்த முறை முற்றிலும் புதிது! அறிவு விருந்தும்கூட!

‘நல்லாவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை’ என்று தொடங்கும் அவரது வாழ்வின் குறிக்கோள் பற்றிய கவிதை வரிகளில்...

‘நல்லாவின் பால் முழுவதும் கன்றுக்கில்லை

நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை

நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை

நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை

பல்லாரும் கனி முழுதும் மரத்துக்கில்லை

பண்ணரம்பின் இசை முழுதும் யாழுக்கில்லை

எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்

என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும்'

என்பதுதான் முக்கியம்.

தன் பெண்டு, தன் பிள்ளை என்ற சின்னதோர் கடுகு உள்ளம் தவிர்க்கப்பட்டு, தொல்லுலக மக்கள் நம் மக்கள் என்ற பரந்த, விரிந்த, மனப்பான்மை நமக்குத் தேவை! சமூக வாழ்வும், அக்கறையும் பளிச் சிடுகின்றன.

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் எழுதிய வள்ளுவத்தில், பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டு தந்தை பெரியார் என்று எழுதுகிறார். அதற்கு அவர் சுட்டும் எடுத்துக்காட்டு,

‘‘கடவுள் நம்பிக்கை இல்லாத தந்தை பெரியார் அவர்கள் மேடையில் - அவர் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில்  கடவுள் வாழ்த்து பாடப் படும்பொழுது எழுந்து நிற்பார் - தள்ளாடிய, முடியாத நிலையில்கூட (மற்றவர் துணையுடன்).

என்னே நயத்தக்க நாகரிகம்! தன்னிய உயர்ந்த பண்பு’’ என்று பாராட்டுவார்!

பல நூற்றாண்டு விழாக்களை நாம் நடத்துவது அவர்களுக்குப் பெருமை சேர்க்க அல்ல; நம் தரத்தை உயர்த்திட; நமது மனிதத்தைப் பெருக்கிட, நமது பட் டறிவை, பகுத்தறிவை, பொது அறிவை விளக்கிடவே!

எளிமை, நிறைகுடம் தளும்பாத அடக்கம் இவைகளை நாம் கண்டறிந்து வியந்தோம்.

வாழ்க வ.சுப.மாணிக்கனார்!

வாழ்க்கையில், காலத்தை எப்படி நாம் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் கவனமாகச் செலவழிக்க வேண்டும் என்பது முக்கியமோ, அதுபோலவே ஒவ்வொரு நாளும் நல்ல முதலீடுகளை (Investments)    செய்யப் பழகிக் கொள்ளுவதும், அதற்குரிய திட்டமிட்ட வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்வதும் நமது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் வழி வகுப்பதாகும்.

வரவுகளைவிட - அதாவது சம்பாதனைகளைவிட, அதனை நல்வழியில் முதலீடு செய்வது தான் நிகழ் காலத்திற்கு மட்டுமல்ல, வருங்காலத்தினையும் வளப்படுத்து வதற்கு மிகவும் உதவும்.

செலவுகளைச் செய்வது, சிக்கன மாகச் செலவழிப்பது முக்கியம் என்பது வாழ்க்கையின் பொது விதியானாலும், "தாராளமாகவும்" வாழ நாம் கற்றுக் கொள்ளுதல் நம் வாழ்வை - மனிதநேயம், பற்று, பாசம், சுயநலத்தைத் தாண்டிய பொது நலம் என்ற பரந்த, விரிந்த வட்டத்தை அது உருவாக்கி நம்மை உயர்த்தியும், நம்மிடம் இருக்க வேண்டிய "மனிதத்தை" - மானுடப் பற்றை - சமூக அக்கறையை விரிவுபடுத்தி நம்மை அடையாளப்படுத்தும். எப்படி நாம் கஷ்டப்பட்டு உழைத்து, சிக்கனமாக வாழ்ந்து, சேமித்த தொகையை பாதுகாப்பான முதலீடுகளாகச் செய்ய வேண்டும் என்று கவனஞ் செலுத்துவது மிக மிக அவசியமோ, அதுபோலத்தான் நம் வாழ்க்கையில் "மனிதத்தை" மானுடத்தை- வளர்த்திட நல்ல குடிமக்களாக நம்மை சமூகத்திற்குப் பயன்படுபவர்களாக்கி வாழுவதற்கு இன்றியமையாததுமாகும்!

எனது "பொது நலம்" என்று நீங்கள் பலர் பாராட்டுவது உண்மையில் எனது "சுயநலமும்" காரணம்! அதுதான் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை மனநிறைவைத் தருகிறது; அது போலவே  எனது  "சுயநலம்" என்பது என்னைப் பொறுத்தது என்றாலும் அது மற்றவர்களுக்குப் பயன்படுவதாலும், மற்றவர் துய்த்து மகிழ்வடைதாலும் அவர்களுக்கு அது "பொது நலமாக"த் தென்படுகிறது!

கல்விக்காகச் செலவழிப்பது செலவல்ல; முதலீடேயாகும்.  (Investments)  பிள்ளைகளுக்கு, பேரப் பிள்ளைகளுக்கு, மற்றவர்களுக்கு சொத்துக்களாக வீடு, வாசல், நிலம் வணிக நிறுவனங்களை விட்டுச் செல்லுவது என்பது அவர்களுக்கு முதலீடுகள் - பங்குகளாகத் தோன்றக் கூடும். ஆனால் அது நல்ல முதலீடு ஆகாது. ஏனெனில் ஒன்றிரண்டு தலைமுறைகளில் அவை பிறர் சொத்துக்களாகி விடக் கூடிய அபாயம் உண்டே!

ஆனால், கல்வியில் முதலீடு, தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், அவைகளில் ஈடுபட்டு சமூகத் தொண்டூழியம் செய்தல் நமக்கு "நல்ல முதலீடுகள்" ஆகும்.

நமக்கு எது மனநிறைவைத் தரும்?

மக்கள் பலரும் பயன் அடையும் பொதுத் தொண்டறம் சார்ந்த பல பணிகளில் ஈடுபட்டோர் தான் பெருத்த செல்வத்தையோ, தனி நபர் சொத்துக் கணக்கில் (ஊரை அடித்து உலையில் போட்டு, இறுதியில் சந்தி சிரிக்கும் இழிதகு நிலைக்குத் தள்ளப்பட்டு, சமூகத்தில் நல்லோர் அருவருப்புக் கொள்ளவும், சொத்து சேர்த்து "வைக்கப்போர் நாயாக" மாறியவர்கள் வேதனையால் வெந்து, நொந்து, நூலாகிப் போனவர்களைக் கண்டால் அதைவிட அவலம் வேறு என்னவிருக்க முடியும்?

தன் கடன் பிறர்க்கு உதவுதல்; அதிலும் எதிர்பாராது - கைமாறு கருதாது, மன நிறைவு ஒன்றையே எண்ணி தம்மிடம் உள்ள உழைப்பு, பொருள், எந்த நிலையிலும் பிறர் பற்றி புறங்கூறாமை, தன்னுள் உள்ள உணர்வை வெளி உணர்வும் அதாவது 'புறங்கூறி பொய்த்துயிர் வாழாமை' என்ற அறம்தான் மனித வாழ்வின் மாண்புறு முதலீடு.

அடுத்த உலகம், மோட்சம், வைகுந்தம் சிவலோகம் அங்கே போக இங்கே தருமகாரியங்கள் என்ற ஒன்றை எதிர்பார்த்து மற்றொன்றைச்செய்வது ஒரு வகையான லாப நோக்கங் கொண்ட வியாபாரமே தவிர, தொண் டறம் ஆகாது!

எனவே (மனசாட்சியைக் கொல் லாது) 'உள்ளாத்தாற் பொய்யாது ஒழுகல்' என்பதே வாழ்வில் நாம் செய்யும் மிகப் பெரிய முதலீடு  என்பதை மறவாதீர்! புகழை எதிர்பார்த்தோ, பெருமையைக் கருதியோ எதையும் செய்வது தொண்டறம் ஆகாது. தவறான முதலீடு - ஒரு வழி வாணிபம்!

வாழ்க்கையின் சிறப்பு வளம் என்பதன் பொருள் அதுதான்; மற்றவை கலைந்து செல்லும் மேகங்கள், திடீரென்று தோன்றி மறையும் ஏழு வண்ண வானவில் ஆகும்! காட்சிக்கு மட்டுமே அழகு தரும்; கருத்துக்கு - கொள்கை வாழ்க்கைக்கு - அந்த வெளிச்சங்கள் பயன்படாது; எனவே அடக்கத்தை, எளிமையை, வாழ்வின் மாற்றப்பட முடியாத முதலீடுகளாக ஆக்கி வாழுங்கள்; வெற்றி பெறுங்கள்!

- கி.வீரமணி

 

உங்களுடைய வங்கிக் கணக்கில், ஒவ்வொரு நாள் காலையிலும் 86,400 டாலர்கள் (கணக்கில்) வரவு வைக்கப் படுகிறது; ஒரே ஒரு நிபந்தனைதான்!

அது என்னவென்றால், மறுநாள் வரைக்கும் எல்லா டாலர்களையும் செலவழித்துவிட வேண்டும்; அப் போதுதான் அடுத்த நாள் காலையிலும் இதே 86,400 டாலர், கணக்கிற்கு வரவு வரும்.

என்ன செய்வீர்கள்? ‘‘எப்படியும் செலவழித்துவிட்டு அடுத்த நாள் வங்கிக் கணக்கில் வரவினை எதிர் பார்த்து இருப்பேன். ஏனெனில், அதுதானே நிபந்தனை'' என்பீர்கள்.

சரி, அதனைச் செலவழித்து அடுத்த வரவிற்குக் காத்திருக்கும் உங்களுக்கு, இந்த 86,400 டாலரில் எதுவுமே மிச்ச மிருக்காது; புதிய வரவு அப்போதுதான் கிடைக்கும் என்னும்போது, நீங்கள் மிகுந்த கவனத்துடன்தானே அதனைச் செலவழிப்பீர்கள்; கண்ணை மூடிக் கொண்டு ஏதோ ‘தாம்தூம்‘ என்று செல வழிக்காமல், கவனமாகச் செலவழிப் பேன் என்றும் கூறுகிறீர்கள், மகிழ்ச்சி, நன்றி!

நாம் ஒவ்வொருவரும் இந்த வரவு - செலவுக் கணக்கைப் பெற்றிருக் கிறோம்; மறவாதீர்! அதற்குப் பெயர்தான் விலை மதிப்பற்ற ‘‘காலம்‘’  (Time)  என்பதாகும்!

செலவழிக்கும் பணத்தைக்கூட மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம்; ஆனால், செலவழித்த காலத்தை நாம் மீண்டும் சம்பாதிக்க முடியுமா? நிச்சயம் முடியாது!

ஒவ்வொரு நாளிலும் நமக்கு 86,400 வினாடிகள் கிடைக்கின்றன. அதனை மிகமிகக் கவனமாக, பயனுறு வகையில் செலவழிக்க வேண்டாமா? அந்தக் கோணத்தில் சிந்தித்துச் செயலாற்றுங் கள்.

ஒவ்வொரு நாளும் காலம் நமக்குத் தரும் கொடை 86,400 வினாடிகள்; அதனை நாம் மிகுந்த பொறுப்புடன் செலவழிக்கவேண்டும்.

உடல் நலம் பேண,

கல்வி அறிவு வாய்ப்புகளைப் பெருக்கிட,

மகிழ்ச்சியான வாழ்வினைப் பெற்றிட!

இந்த இருப்புகளைப் பயன்படுத்து வதுதானே அறிவுடைமை - இல்லையா?

காலம் என்பதின் - கடிகாரம் - இந்த 86,400 வினாடிகள் நமக்கு நாள்தோறும் கிடைக்கிறதே அதன் பெருமையை அறிந்து, மிகுந்த பயனுறு வகையில் அதனைக் கையாள வேண்டாமா?

ஒரு வருடத்தின் பெருமையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், கடைசித் தேர்வில் தோற்றுப் போன மாணவனைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமையை அறிந்துகொள்ள  - அரைகுறையாகப் பிறந்த குழந்தையின் பெற்றோரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள அன்றாட கூலி வேலை செய்யும் தொழிலாளியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!

ஒரு மணித்துளியின் மதிப்பை உணர்ந்துகொள்ள ரயிலையோ, பேருந்தையோ தவறவிட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு வினாடியின் அதிமுக்கியத்துவம் புரிய வேண்டுமா?

தாம் உயிருக்கு உயிராக நேசித்தவர், மரணப் படுக்கையில் விட்ட கடைசி மூச்சினைக் கணக்கிட்டு வருந்தி வாடி டுவோரிடம் தெரிந்துகொள்ளுங்கள்.

நண்பர்களே, எல்லோருக்கும் இந்த 86,400 நிதி - காலையில், நாளும் வாழ்க்கை என்னும் வங்கியில் போடப்பட்டு - இரவு முடிந்துவிடுகிறது!

எனவே, இந்தபெருமதிப்பிற்குரிய காலத்தை கருத்தோடும், கவனத் தோடும், வீண் செலவு எதிலும் ஈடுபடுத்தாமல், நற்காரியங்களுக்கே நாளும் செலவிடுங்கள் - நாம் வளர, முன்னேற அதுவே வழி!

காலமும், அலைகளும் யாருக்காக வும் காத்திரா!

புரிந்துகொள்க!

- கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்

 

இன்று (மே 31) உலக புகையிலை எதிர்ப்பு நாள். உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை அறிவித்து ஆண்டு தோறும் கடைப்பிடித்து வருகிறது!

புகையிலை என்பது மனித குலத் தின் வாழ்வைப் பறிக்கும் வன்கொடு மைத் தூதுவன்.

புகையிலைதான் புற்றுநோயின் மூலக்கரு.

புகையிலையைப் பயன்படுத்து வோரில் உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகமாம்! மகாவெட்கக்கேடு!!

உலகம் முழுவதும் புகையிலையால்  பாதிக்கப்படுவோர் சுமார் 60 லட்சம் பேர் என்றால், இந்தியாவில் மட்டும் இத் தகைய கொடிய பழக்கத்திற்கு அடி மையாகி பலி பீடத்தில் நிறுத்தப்பட்ட வர்கள் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆகும்! இவர்கள் புற்றுநோய் என்ற கேன்சர் (Cancer) நோய்க்கு ஆளாகிப் பலியாகி வருகின்றனர்!

புகைக்காத வகையில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உல கிலேயே இந்தியாவில்தான் அதிகம்.

இன்னொரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!

இந்தியாவில் 15 வயதிற்குமேல் உள்ளவர்கள் 30 விழுக்காட்டினர். ஏதோ ஒரு வகையில் புகையிலையைப் பயன்படுத்தி பாழாகி வருகிறார்கள்! இப்போது பரவாயில்லை - முன்பெல் லாம் கிராமங்கள், நகரங்களில் எல்லாம் புகைச் சுருட்டு (Cigars) பிடிக்கும் பழக்கம் - புகையிலையை வாயில் மணிக்கணக்கில் அடக்கியே ஊற வைத்துக்கொண்டு, இந்த உயிர்க்கொல் லியை ஏதோ உணவுபோல் ‘உள்ளே’ தள்ளுவது வழக்கம் - பல தாய்மார்கள் உள்பட!

சாவுகள் நிகழ்கையில், சவ ஊர் வலம் சுடுகாட்டிற்குச் செல்லும்போது ஊர்வலத்தில் கலந்துகொள்வோருக்கு சுருட்டுகளை விநியோகிப்பது ஒரு வழக்கமான பழங்கால வாடிக்கையாகும்!

பீடி, சிகரெட், பான்பராக், மூக்குப் பொடி முதலிய பல ‘‘அவதாரங்களில்’’ புகையிலை படையெடுத்து மனித குலத்தை அழிக்கின்றது!

முதலில் விளையாட்டாகத்தான் இப்பழக்கம் நண்பர்கள் வட்டத்தில் தொடங்கும்; ஆனால், அப்பழக்கம் மனிதர்களை கொஞ்சம் கொஞ்சமாக மெல்லக் கொல்லும் நஞ்சாகவே அதன் பணியைத் தொடங்கி, இறுதியில் அதுவே வெற்றி பெற்று விடுகிறது!

மத்திய அரசுக்கு கடந்த 2015-2016 ஆம் ஆண்டு மட்டும் புகையிலை மூலமாகக் கிடைத்த வரி வருவாய் 27,825 கோடி ரூபாய்.

இது கண்டு மகிழ முடியுமா? முடி யாது ஏன்?

கேன்சர் நோய், டி.பி. என்ற காச நோய் இவை மூலம் சிகிச்சைக்குச் செலவழிக்கப்படும் தொகை அந்த வருவாயைவிட அதிகம்!

பல நேரங்களில் எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைத்தபாடில் லையே!

மத்திய அரசுக்கு இரு ஒரு வருவாய் வரவழைக்கும் வாயிலாக இருக்கிறது என்று எண்ணி மகிழும் நிலை தொடரக்கூடாது.

நாய் விற்ற காசு குரைக்குமா?

கருவாடு விற்ற காசு நாறுமா?

புகையிலையால் வரும் ‘வருமான போதையை' அரசுக்கா ஏற்றுகிறது; மாறாக மக்களின் வாழ்க்கையை அல் லவா முடித்துக் கட்டுகிறது!

மக்கள் நல அரசுகள் - இதுபோன்ற தீய வகை வருமானங்களை அறவே ஒழித்து, நியாயமான பல்வகை வரி களை ஆராய்ந்து, வெளிப்படையாக நல்ல வருவாய் ஈட்டும் வழிமுறைகளை யும் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு, ஒரு புகையில்லா புதிய சமூகத் தையே உருவாக்க முன்வரவேண்டும். உலக புகையிலை எதிர்ப்பு நாள் வெறும் பிரச்சாரத்தோடு முடியாமல் செயலில் காட்டி வெற்றி பெறவும் துணை நிற்கட்டும்!

Banner
Banner