வாழ்வியல் சிந்தனைகள்

ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் நம் தமிழ்நாட்டில் பல நடைபெறுகின்றன. மதங்களின் சார்பிலும் பல நடைபெற்று வந்தாலும், அங்கே அந்தக் குழந்தைகளை வைத்து சூதாட்டங்கள் போல பலவும், தவறான பயன்பாடுகளும் பற்பல நடைபெறுவதால், குழந்தைகள் இல்லம் நடத்து வோர்மீதே அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும், மக்க ளுக்கும் பல்வேறு சந்தேகங்களும், அருவருப்பு களும் கூட ஏற்படும் அவலம் தற்போது உள்ளது!

ஆனால் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் அவர்களால் துவக்கப் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாகும் நிலையில் திருச்சியில் நடைபெற்று வரும்  "நாகம்மையார் குழந்தைகள் இல்லம்" - "ஒழுக்கத்திலும், கட்டுப் பாட்டிற்கும் எடுத்துக்காட்டானது" என்று உயர்நீதி மன்ற நீதிபதிகளே பாராட்டிடும் வண்ணம் அய்யா வும், அம்மாவும் இதன் அடிக்கட்டுமானத்தை அசைக்க முடியா வண்ணம் அமைத்துள்ளனர். அதனால் அது நெறி தவறுவதில்லை!

தம்மால் மருத்துவமனைகளிலிருந்து பெறப் பட்ட பெண் குழந்தைகள் பலவற்றினையும் பெயரிட்டு, "ஈ.வெ.ரா.ம." முன்னொட்டு (Initials) போட்டு வளர்த்து, படிக்க வைத்து, போதிய வயது வந்தவுடன் திருமணமும்கூட செய்து ஒரு குடும்பம்போல என்றும் தொடர்புடன்  உள்ள இல்லம் நமது திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம்!

அன்னையார் தம் உடல் நலம் குன்றிய போதும், குழந்தைகளின் நலம் பற்றிய அக்கறையும், கவலை யும் கொண்டு பேணி வளர்த்தார்.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். திடீரென இரண்டு இல்லத்துப் பெண் குழந்தைகள் சாந்தி, தனலட்சுமி என்று பெயர் கொண்டவர்களைக் காணவில்லை - திருச்சி எங்கும் தேடும்படி அம்மா ஆணையிட்டார்; கழகத் தோழர்களை எங்கும் அனுப்பினார் அம்மா.

இந்த இருவரில் ஒரு பெண் சாந்தி குறைவான மார்க் வாங்கியதால், மற்றொரு பெண் தனத்தையும் அழைத்து வெளியே சென்று ஒருவர் வீட்டில் தில்லை நகரில் தங்கி, பிறகு மதுரைக்கு அழைத்துச் சென்று ஒரு  பெரும் பணக்காரர் வீட்டில் வேலை செய்ய அமர்த்தி விட்டார் யாரோ ஒருவர்.

அவர் அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த ஒருவர் பிரபல அரசு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வீட்டில் கொண்டு போய் தனத்தை விட்டார்! அவர்களோடு அவரது சகலை - சென் னையில் அரசு செயலாளர், தகுதியுள்ள ஒருவர் வீட்டுக்கு வேலைக்குப் பெண் தேவை என்பதால் அனுப்பி வைத்து அங்கே வேலை பார்த்தது.

அம்மா எங்கெங்கோ தேடுகிறார். வெளியேறிய மற்றொரு பெண் பள்ளியில் பணியாற்றிய ஒருவ ரிடம் இந்தத் தகவலை கசிய விட்டது - கடிதம் மூலம்; அதன் மூலம் துப்பு துலக்கி திருச்சி அதி காரியிடம் பெரியார் மாளிகை நிர்வாகி திரு. சோமு போய் கேட்க, அவர் அதிகாரத் தோரணையில் பதில் கூறி விட்டார்.

சென்னை வந்தார் - அம்மாவின் உச்சக் கட்ட கோபத்தை நாங்கள் கண்டது அப்போதுதான்!  "ஊராருக்கு வேலை செய்யும் பணிக்கா அவர்கள் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு இங்கு வந்தனர்!" என்றார்.

எப்படியும் அப்பெண் குழந்தைகளை மீட்டாக வேண்டும் என்று ஒரே நோக்கில் உண்ணாமல், உறங்காமல் இருந்தார்!

நானும், நிர்வாகி சம்பந்தமும், நண்பர்களும் இணைந்து அம்மாவிடம் கூறினோம் - தேடுகிறோம் என்று! அத்துடன் Habeas Corpus சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு ரிட் மனு போட்டார் அம்மா.  அம்மாதான் 'ரிட்' மனுதாரர்! சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஜஸ்டீஸ் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், ஜஸ்டீஸ் ஏ.வரதராஜன் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது, "உடனடியாக அந்த இல்லத்துக் குழந்தையை அந்த மூத்த அய்.ஏ.அய் அதிகாரி வீட்டிலிருந்து மீட்டு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கினர்.

தனம் என்ற தனலட்சுமி அம்மாவிடம் வந்தது. அறிவுரை கூறி இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

அன்னையார் மறைந்து உடல் பெரியார் திடலில் இறுதி மரியாதை செலுத்த  அந்த இரு மூத்த நீதிய ரசர்களும் கையில் மாலையுடன் வந்து அம்மாவின் உடலின்மீது வைத்தபோது, வியந்து சொன் னார்கள். ஒரு குழந்தையைத் திரும்பிப் பெற எத்தனை முயற்சி எடுத்த பாசமுள்ள தகைமைத் தாய் அவர் என்று கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்தினர்.

அந்த தனலட்சுமிக்கு திருமணத்தை நாங்கள் - எனது தலைமையில் நடத்தி வைத்து, அதற்கு இரண்டு பெண் குழந்தைகள் - மிகச் சிறப்பாகப் படித்து நல்ல துணைவர்களைப் பெற்றும், இந்தப்  பெண் எப்போது எங்கள் வீட்டிற்கு வந்தாலும் தங்கி அண்ணன், அக்கா உறவு அறுபடாமல் வளர்த்த பாசத்தோடு இருந்து வருபவர்.

தையல் கலையில் சிறந்த பயிற்றுநர் தனம். துணைவரை நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்து கவனித்தும் அவர் நோய் முற்றி மறைந்தார் என்றாலும், தனமும் குழந்தைகளும் எங்கள் தனங் களில் ஒன்று என்று இல்லமும், நாங்களும் பெரு மைப்படும்படி பாசத்தோடும் இன்றும் உள்ளது!

அம்மா என்ற போராளி நீதிமன்ற படிக்கட்டு களிலும்  - குழந்தைகளை மீட்க ஏறி வெற்றி பெற்ற பாசத்தை நினைத்து நினைத்து அவரது நூற் றாண்டில் நெக்குருகிறோம்!

குவலயம் காணா உறவுகள் இவை! பெற் றால்தான் பிள்ளையா என்பார்கள்; யாரோ பெற்று வந்த பிள்ளைகளையும் பெற்ற பிள்ளைகளைவிட பாசத்தைக் கொட்டிய தாயே உங்களை மறக்க முடியுமா?

அன்புள்ள அம்மா, பாட்டிக்கு,

உங்களால் சீராட்டி சிறப்புடன், கண்டிப்புடன் ஊட்டி வளர்க்கப்பட்டு, "சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு நாணிக் கண்ணுறங்கு, நகைத்து நீ கண்ணுறங்கு!" என்று தங்கள் விழி இமையாய் என்னை, எங்களைக் காத்து வளர்த்து ஆளாக்கினீர்கள்.

தங்களின் நூற்றாண்டு தொடங்கும் நாளில் நன்றிக் கண்ணீர், மகிழ்ச்சிக் கண்ணீருடன் எண்ணிப்பார்க்கிறேன்.

எங்களை விட்டு பாழும் உடல்நோய் உங்களைப் பிரித்த போது, அதுவரை அனாதைகள் இல்லை; காரணம் எங்கள் பெயருக்குப் பின்னால் ஈ.வெ.ரா.ம. கலைமணி, அருள்மணி, அன்புமணி என்றெல்லாம் E.V.R.M. என்ற முன்னெழுத்துக்கள் (Intials) எங்களுக்குத் தந்து பெற்ற தாயினும் மேலான உற்ற தாயாக எங்களை நாளொருமேனியும், பொழுதுதொரு வண்ணமும், கவலையுடனும், அதே நேரத்தில் கண்டிப்புடனும் வளர்த்து ஆளாக்கிவிட்டுச் சென்று விட்டீர்!

எங்கள் அண்ணனும், அக்காவும், புலவர் அண்ணனும் தங்காத்தாளும்,  எங்களின் இழப்பை ஈடுசெய்ய முன் வந்து கடமையாற்றி பாசப்பொழிவினை பரிவுடன் காட்டி, எங்களது படிப்பை வளர்த்தனர்.

எங்கள் திறமை, ஆற்றல் பற்றி நாங்களே கூட அறியாத போது அவர்கள் உணர்ந்ததோடு, எங்களுக்கும் உணர்த்தினர்!

நான் "பிளஸ் டூ" நம் கல்வி நிறுவனத்தில் முடித்த வுடன், அண்ணனிடம் சொன்னேன் - அக்காவிடம் கூறினேன். "எனக்கு ஓர் ஆசிரியப் பயிற்சி டிப்ளோமோ பட்டயப் படிப்பில் போட்டு கரையேற்றுங்கள்" என்று.

அவர்களோ "முடியாது, நீ பட்டதாரி - அதுவும் என்ஜினியரிங் பட்டதாரியாக வரவேண்டும்" என்று பிடிவாதமாகக் கூறி, என்னை உலகின் முதல் பெண் பொறியியல் கல்லூரி - வல்லத்தில் தொடங்கிய பெரியார்  மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் சேர்த்து, கணக்கில் சுணக்கம் எனக்கு, என்ஜினியரிங் கஷ்டம் அண்ணா என்று தயங்கியபோது, உனக்கு ஸ்பெஷல் வகுப்பு கணக்கு வாத்தியார் வந்து சொல்லிக்கொடுக்கச் சொல்கிறேன் என்று கூறி, அதன்படி செய்து என்னை நன்றாக B.E பாஸ் செய்ய வைத்தார்கள்.

நானும் ஒத்துழைத்தேன் - முடித்து சம்பளம் பூராவும் அய்யா டிரஸ்ட்டே எனக்குக் கட்டியது!

பாஸ் செய்த பிறகு எனக்குத் திருமண ஏற்பாடு - என்னைப்புரிந்து, கொள்கை உணர்வுக்காக குழந்தைகள் இல்லத்துப் பெண்களையே மணக்க விரும்புகிறேன் என்ற லட்சிய நோக்குக் கொண்ட மானிட நேயர் - சுயமரியாதை வீரரை மணமகனாக்கியதை அக்காவும் தங்காத்தாள் அக்காவும், அண்ணன் விருப்பப்படி அவர்கள் இல்லம் சென்று சம்மதம் பெற்று குடந்தையில் மாநாடு போல - மக்கள் தலைவர் மூப்பனார் முன்னிலையில் அண்ணா - அக்காவால் நடத்தி வைக்கப்பட்டது.

வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் அண்ணன் என்னை விரிவுரையாளராக நியமித்து, வகுப்பெடுக்க வாய்ப்பளித்து, பக்குவப்படுத்தினார்!

மேலும் திருச்சி RECயில் B.E தாண்டி M.E முடித்தேன். வாழ்விணையரும் பெரும் ஒத்துழைப்பு - ஊக்கம் தந்தார். ஒரு பெண் குழந்தை. குடும்பத்தார் அனைவரும் எங்களிடம் பாசம் காட்டியதில் பஞ்சமே இல்லை - குடும்ப உறவு, குருதி உறவு எல்லாம் மிகவும் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தது!

மேலும் நான் குடந்தை பல்கலை- ஒரு பொறியியல் கல்லூரியில் இணைப்பேராசிரியராக உயர்வு பெற்று Ph.d என்ற டாக்டர் பட்டத்திற்கு பதிவு செய்து ஆராய்ச்சிப் பட்ட மேல் நிலைத் தகுதியும், என் பெயருக்குமுன் முனைவர் பட்டமும் பெற்றேன்.

எங்கள் மகள் நன்றாகப் படித்து மாநிலத்தில் முன்னணி மதிப்பெண்கள் பெற்று, இன்று ஆடிட்டிங் படிப்பில் அப்பாவுக்கு உதவியாய் இருக்க ஆயத்தமாகி வருகிறாள்.

தாத்தா, பாட்டி கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம் சந்திப்போம்; மகிழ்வோம். நான் குடும்பத்தினருடன் மாநாடுகள், விழாக்கள்,  குடந்தை, பாபநாசம், கபிஸ்தலம் பகுதியில் வரும் போதெல்லாம் எங்கள் இல்லம் விழாக்கோலம் - விருந்து உபசரிப்பு பல நூறுபேர்களுக்கு.

எங்களுக்குத்தான் எத்தனை எத்தனை கொள்ளை மகிழ்ச்சி!

எங்கள் அன்பை, மரியாதையை அவர்கள் பெறும்போ தெல்லாம் அவர்கள் வாஞ்சையுடன் எங்கள் உச்சிமோந்து பாராட்டி மகிழ்வதை விட அவர்களுக்கும் சரி, எங்களுக்கும் சரி - வேறு என்ன கைமாறு தேவை?

பெரியார் தாத்தாவை, மணிப் பாட்டியை நான் பார்த்ததில்லை - எங்கள் அம்மா அவர்கள் வளர்ப்பில் தான் வளர்ந்து ஆளாகி இன்று என்னை நல்லாசிரியையாய், நல்ல தாயாய் ஆக்கினார். எனக்கும் தாத்தா, பாட்டி அன்பைக் கொட்டி அரவணைத்து வழிகாட்ட இருக்கிறார்களே அது பெரிய வாய்ப்பு அல்லவா?

இந்தக் குடும்பம் ஒரு தோப்பு போலே! இதில் இது போல எத்தனையோ பழமரங்கள் பூத்து, காய்த்து, கனியாகி, பழுத்துத் தொங்கி சிறப்பாக இருக்கிறதே.

அந்த விதை நட்டு நீர் பாய்ச்சி உழவுக்காரருக்கு நூற்றாண்டு விழா என்றால் என்னைப் போன்ற விழுதுகளுக்கு இதை விட வேறு விழா வேண்டுமா? மகிழ்ச்சி கண்ணீருடன், அந்தத் தாத்தாவின், பாட்டியின் கைப்பற்றி குலுக்கி மகிழ என தலைமுறைக்கு வாய்ப்பில்லை. இதோ எங்கள் பாட்டியும், தாத்தாவும் கைப்பிடித்து குலுக்கி மகிழும் நிலையில் அவர்கள்  கைகளில் எனது, எங்களது கண்ணீர்தான் விழுந்து ஈரமாக்கி, அவர்களது ஈரமுள்ள இதயங்களை குளிர்விக்கிறதே அது போதாதா?

இப்படிக்கு

நாகம்மை விடுதியின் விழுதும், விழுதின் விழுதும்!

(அன்னையார் நூற்றாண்டில் இப்படி கடிதம் - கற்பனை என்றாலும் உண்மைகளை -

உணர்வுகளை உள்ளடக்கிய கற்பனைக் கடிதம் - அன்னையார் நூற்றாண்டுத் தொடக்கம் அல்லவா?)

நமது வாழ்வு நலமுடன் அமைய வேண்டின், அதற்கு நாம் உட்கொள்ளும் உணவு முக்கியம்; அதே போல் உடற்பயிற்சி - வயதுக்கு ஏற்ற வகையில், மருத்துவர்கள் ஆலோசனைகளை ஏற்று செய்வது - நடை பயிற்சி உட்பட மிகவும் முக்கியம்.

மருந்துகள் எடுத்துக் கொள்ளும் - தேவை உள்ள வர்கள், முறையாக கால நேரம் தவறாமல் அவைகளை எடுத்துக் கொள்வது - அதில் காலாவதியான மருந்துகளா (Expiry Dates) என்று பார்த்து எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை, வழக்கமாக ஆக்கிக் கொள்ளுதல் முக்கியம் ஆகும்.

இவை எல்லாவற்றையும்விட மிக  முக்கியம், வயதுக்கு ஏற்ப தூக்கம் ஆகும்!

எல்லோருக்கும் குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம் மிகவும் தேவை என்று மருத்துவ நிபுணர்களும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.

நம்மில் பலரும் தூக்கத்தை அலட்சியப்படுத்தி இரவுக் கச்சேரிகள் - நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி - இரவு நேர திரைப்படக் காட்சிகள்  - நடு நிசி 12 மணியையும் தாண்டி வேலை செய்தல் - எழுதுவது, படிப்பது - காலை 4லு மணி வரைகூட இத்தகைய பணிகளில் ஈடுபடுதலை வழக்கமாக்கிக் கொள்ளு கின்றனர்!

இளம் பிராயத்தில் இந்த இரவு நேர விழிப்பு - இடையறாத பணி உடலுக்கு ஒத்துப் போகக் கூடுமே தவிர, முதுமையில்  இவைகளால் நாம் கடும் விலையை - உடல் நலப் பாதிப்பைக் கொடுக்க வேண்டி நேரிடும்! முதுமை அடைந்தவர்கள் 60,70 வயது தாண்டிய எவராயினும் அவருக்கு 8 மணி நேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்புது முதிர்ச்சியுள்ள - மூத்த அனுபவம் மிக்க மருத்துவர்கள் கருத்தாகும்!

அனுபவ அறிவுரையும்கூட!

இரவு 12 மணிக்கு மேல் 2 மணி வரை தான் மூளையில் சில மறதி நோய் பிற்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய துகள்கள் உருவாகித் தேங்குகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்!

அந்த கால கட்டத்தில் எதிர் நீச்சல் போட்டு விழித் துக் கொண்டு, உறக்கத்தை விரட்டியடிப்பது பிற்கால விபரீத விளைவுகளுக்கு நாம் அச்சாரம்  தருவதாகவே அமையக் கூடும்!

தூங்க விடாமல், குற்றவாளிகளிடமிருந்து உண் மைகளை  கறந்திட - காவல்துறை விசாரணை அதிகாரிகள் செய்யும் முறை இருப்பதே, 'தூக்கமின்மை' எத்தகையது என்பது பொது அறிவின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாமே!

மதியம் ஒரு சிறு இடைவெளித் தூக்கம் (Nap) குறிப்பாக முதியவர்களுக்கும், இதய சிகிச்சை செய்து கொண்டோருக்கும் மிகவும் நல்லது.

இன்று வெளி வந்துள்ள ஒரு செய்தியில், ஜெர்மனிய பல்கலைக் கழகத்தில் தூக்கம் பற்றிய ஒரு மிக முக்கிய மான ஆய்வினை மேற்கொண்டு கண்டறிந்துள்ள அறிவியல் - உடலியல் சம்பந்தப்பட்ட துறையினர் தரும் ஆய்வுத் தகவல், முறையாகத் தூங்குவது - போதிய அளவில் தூக்கத்தைத் தவறாமல் கடைப் பிடிப்பது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, அதிகப்படுத்த உதவுகிறது என்பது அரிய உண்மையாகும்!

டி செல்ஸ் (T Cells) என்பவை  கெட்டுப் போன அதாவது தொற்று நோய் பீடிக்கப்பட்ட ஒருசெல்லில் பசை போல ஒட்டக் கூடிய இண்ட்டகிரின் (மிஸீமீரீக்ஷீவீஸீ) என்ற வகை புரதம் அந்த செல்லைப் பிடித்துக் கொள்ளுகிறதாம்!

தொடர்ந்து தூக்கமின்மையும், மன அழுத்தமும் (Stress)  இணைந்து இந்த நோயை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் கெடுக்கிறதாம்!

எனவே உங்களது  நோய் எதிர்ப்பு சக்தியைக் குன் றாமல், குறையாமல்  உடலில் வைத்திருக்க, போதிய அளவான 7,8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசிய மாகும்.

மற்றொரு செய்தி: அதிகமான தூக்கமும்கூட உடல் நலத்தினைக் கெடுத்து, இதய நோய் வர துவக்கம் செய்யக் கூடும் என்பதை மறவாதீர்!

சிறிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூர் நாட்டின் அரசு - மக்கள் நலம் பேணும் சிறப்புக்குரிய ஆட்சியைப் பெற்றுள்ள நாடாகும்.

"கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்" (Controlled Democracy) என்பதும்கூட வரவேற்க வேண்டிய ஒன்றுதான்!

பொதுவாக ஆட்சிகள் என்பவை 17,18ஆம் நூற் றாண்டுகளில் வெறும் (Police State) சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதுதான் முக்கிய வேலை என்பதாக இருந்தவை.

ஆனால் 19ஆம் நூற்றாண்டு இறுதி - 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்தக் கருத்து, மாற்றத்திற் குள்ளாகியது;  மக்கள் நலம் பேணுவது (Welfare State) அரசின் கடமைகளாக மாறி விட்டன.

இப்போது கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் - இத்தகைய வாக்குறுதியின் தொகுப்புகளாக வெளி வருகின்றன.

லீக்வான்யூ (Leekuan yew) நவீன சிங்கப்பூரின் தந்தை. அவரது மக்கள் செயல் கட்சி (People's Action Party) தான் தொடர்ந்துவெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகின்றது. பலம் பொருந்திய எதிர்க்கட்சிகள் இல்லை - சில தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் இருந்த போதிலும்கூட!

மக்கள் தேவை - மனோபாவம் - அறிந்து தூய்மைக்கு முன்னுரிமை தந்து - கையூட்டு (லஞ்சம்), ஊழல் அற்ற ஆட்சியாக சிங்கப்பூர் அரசு தொடர்கிறது.

அமைச்சர்கள் அதிக சம்பளம் பெறும் அரசியல் விற்பன்னர்கள். வெளியில் "கை நீட்ட வேண்டிய அவசி யமில்லாத" வகையில் அதிக ஊதியம் அவர்களுக்கு!

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உபரி கண்ட தொகையிலிருந்து குடி மக்களுக்கு 28 ஆயிரம் டாலர் வரை ஆண்டு வருமானத்துடன் சொத்து ஒன்று மட்டும் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 300 டாலர்களும், ஒரு லட்சம் டாலருக்குள் ஆண்டு வருமானத்துடன் சொத்து ஒன்று மட்டும் உள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 200 டாலர்களும், ஒரு லட்சம் டாலருக்கும் மேல் ஆண்டு வருமானத்துடன் 2 அல்லது கூடுதலாக சொத்துள்ளவர்களின் வங்கிக் கணக்கில் 100 டாலரும் அளிக்கப்பட்டுள்ளது. வியப்பிலும் வியப்பு இது!

சுற்றுச்சூழல், புதுப்புது மக்கள் நலத் திட்டங்கள் குடியிருப்பு வசதிகள் குடி மக்களுக்கு, இத்தியாதி... இத்தியாதி...

மாணவ - மாணவிகள் எடையை அங்கே அவ்வப்போது பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்; பெற்றோர்களுக்குத் தகவல் (Optimum)  எவ்வளவு சீரான எடை என்பதை  அறிவித்து அதற்குரிய  ஏற்ற இறக்கம் உட்பட கண் காணிக்கப்பட்டு வரும் நல்ல முறை!

அண்மையில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட Fitness - Fitbiz  உடல் சீராய்வு பற்றி நாம் கையில் கட்டிக் கொண்டிருக்கும் கடிகாரம் நாம் ஒவ்வொரு நாளும் எத்தனை அடிகள் நடந்தோம்; நமது இதயத் துடிப்புப் பதிவுகள் இப்படி பல அம்சங்களை நமது செல் போன்களிலே, அய்.பேட் (I-Pad) இணைத்து அதுவே - நவீன மின்னணுவியல் கடிகாரம் நமது இரத்த அழுத்தம் குறைந்தாலோ, அதிகம் கூடினாலோ எச்சரிக்கை மணி அடிப்பதுபோல டாக்டருக்கு தகவல் போய்ச் சேரும் அளவுக்கு அதுவே செய்கிறது.

ஆப்பிள் கைகடிகாரம் ஈ.சி.ஜி. (ECG) படம் உட்பட எடுத்து டாக்டர்களுக்கு அனுப்பிவிடுகிறது. அவரது கவனத்திற்குச் சென்று விடும். இதுபோல வேறு சில கம்பெனிகளும் செய்துள்ளன.

ஆச்சரியமாக இல்லையா? மிச்சியோ காக்கு (Michio kaku) என்ற (அமெரிக்க - ஜப்பானியர்) அறிவியல் பேராசிரியர்  தான் எழுதிய ஒரு நூலில்  Chip-அய்த் தாங்கள் அணியும் 'டை'யிலோ, அல்லது காலில் உள்ள (Shoes) 'ஷூ'விலோ இணைத்து விட்டால் டாக்டருக்கு நபர்களின் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் குறைந்தால் கூட தெரிவித்துவிடும். அவரது டாக்டருக்கு அதை இணைத்து விட்டால் என்று கூறினார். அது நடைமுறை சாத்தியமாக கையில் கட்டும் கைக் கடிகாரத்திலேயே பொருத்தப்பட்டு தனி நபர்கள் வாங்கிக் கட்டிக் கொண்டு நடந்தால் - எல்லாம் பதிவாகி, உடல் நலம் பற்றிய முக்கியத் தகவல்களைப் பதிவு செய்து விடும். இப்போது சிங்கப்பூர் அரசு தனது குடிமக்கள்  "தொங்கு சதை", "அமர்வு நாற்காலி - உருளைக்கிழங்கு" போல இருக்கிறார்கள் பலர் என்பதால் - நடைபயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு வாழ ஒவ்வொரு பகுதியில் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம், எடை நிதானம் பற்றிய தகவல்களை பதிவு செய்ய கைகடிகாரம் இலவசமாக குடிமக்களுக்கு அனுப்பி  அவர்களை உற்சாகப் படுத்துகிறது.

சரியான உடல் எடை, நடை பேணுவோரில் சிறந்தவருக்கு இலவசப் பொருள்களை NTUC என்ற தொழிற்சங்கம் நடத்தும் பண்ட விற்பனைச் சாலையில் பெற்றுக் கொள்ள வவுச்சர்களை (Coupons) யும் தந்து ஊக்கப்படுத்துகிறது!

மருத்துவமனைகளில் நோயாளிகள் குறையவும், மக்கள் ஆயுள் நீளவும் நல்ல ஊக்கப்படுத்தும் அருமையான ஏற்பாடு அல்லவா இது!

இங்குள்ள அரசுகள் இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களைத் தரக் கூட வேண்டாம்; 'HIV' இரத்தத்தை கர்ப்பிணிகளுக்கு ஏற்றிடாத அளவுக்குக் கவனமாக இருந்தாலேகூட போதும்; என்னே கொடுமை! எவ்வளவு அலட்சியம்! வேதனையோ வேதனை இது!

'சிங்கப்பூர் சிறிய நாடு' என்ற சமாதானம் எடுபடாது. ஆரோக்கிய வாழ்வு, சுற்றுச்சூழல் தூய்மையை - ஏட்டளவில் பாராட்டி நாட்டளவில் செயல்படுத்து வோமாக.

நாட்டு மக்களின் விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் அடிப்படையானவை என்பதும் முக்கியம் தானே!

இன்று ஆங்கிலப் புத்தாண்டு உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள், ஓர் கால அளவையின் வெளிப்பாடு!

உலக முழுவதிலும் ஒருவருக் கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்டு, வாழ்த்துகளை தெரிவிப்பது வழமை. இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு பலர் புதிய முடிவுகளை, உறுதிகளை மேற்கொண்டு தங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திட முயல்வது; சிலர் பாதியிலேயே முடிவு களைக் கைவிட்டு 'பழைய கருப்ப னாகவே வழமை போல் மறுபடியும் தொடருவது.  இப்படி நடைபெறுவதும் நடைமுறையில் நாம் காணும் காட்சி தானே!

அதிவேக அறிவியல் வளர்ச்சி அதன் தவிர்க்க இயலாத பக்க விளைவுகள் எல்லாம் நமக்கு மகிழ்ச்சியையும் அதேபோல துன்பத் தையும், தொல்லையையும், துயரத்தையும் கூட தரத்தான் செய்கிறது!

எடுத்துக்காட்டாக, கைத்தொலைபேசி (Cell Phone) இருந்தால் பெரிய பாதுகாப்பு - பல ஆபத்துக்களிலிருந்து மீள, உடனே தகவல் கொடுக்க, அல்லது தகவல்களைத் தோண்டி உண்மைகளைக் கண்டறிந்து பல குற்றங்களைக்கூட துப்புத் துலக்க மிகவும் பயன்படுகிறது என்ப தெல்லாம் நன்மைகள் பக்கம்.

ஆனால் அதே கைத்தொலைபேசி நமது மனித உறவுகளின் மாண்பைக் குலைத்து பல நேரங்களில் குடும்பத்தவர்களைக்கூட தனித் தனியே பிரித்து ஒருவருக்கொருவர் காட்டிய அன்பு, பாசம், ஒன்றுபட்டு கலந்துரையாடல், கூடிக் குலவி பேசி மகிழ்ந்திடும் வாய்ப்பைக் காணாமற் போகும்படிச் செய்து விட்டதே!

'செல்ஃபி' (Selfie) எடுக்கிறோம் என்று தொல்லை நம்மை சதா துரத்திக் கொண்டே இருக்கிறது. அன்பு 'அம்பாகி' மாறி குத்தித் தொலைக்கிறது!

அந்த (செல்போன்) கைத்தொலைபேசி பெண்கள் பாதுகாப்புக்குரிய நல்லாயுதமாகப் பயன்படும் என்று கருதி, நடைப்பயிற்சிக்கு எடுத்துப் போகும் போது, அதனைப் பறிப்பதற் கென்றே இரு சக்கர வாகனங்களில் வருவது, பறித்துக் கொண்டு பறப்பது, பற்பல நேரங்களில் உயிரைக் காப்பதே பெரிய முயற்சியாக மாறி விடுவதும் நடைபெறுகிறதே!

தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதில், துப்பாக்கியால் சுடும்போது ஓசையே கேட்காமல் சுட்டுக் கொன்று விட்டு, கொலைகாரர்கள் தப்பிச் செல்ல அதிக வாய்ப்பு ஏற்படுகிறதே!

இந்திய மனிதச் சராசரி ஆயுள்  இரு நூற்றாண்டுக்கு முன் 10,12 ஆக இருந்தது. இப் பொழுது 70ஆக உயர்ந்துள்ளது!

மனிதனின் ஆயுளைப் பல மடங்கு பெருக்கி யிருக்கும். மருத்துவ வளர்ச்சி ஓர்புறம் என்றாலும், மரண அடையாளத்தை எளிதில் புலனாய்வுத் துறையினரே  கண்டுபிடிக்கப்பட முடியாத, மெல்லக் கொல்லும் நஞ்சு (Slow Poisoning drug) மருந்தினை ஊசி மூலம் செலுத்தினால் அது நம் உடல் உறுப்புக்களை கொஞ்சம் கொஞ்சமாகி அழித்து, மரணத்தை உடனே மற்ற விஷம் போல ஏற்படுத்தாது. 3 அல்லது 6 மாதங்களை கழித்து ஏற்படுத்துமாம்! ஈரல், கல்லீரல், சிறுநீரகம், இருதயம் போன்றவைகளைப் பாழாக்கி, பணி செய்யாமல் ஆக்கி சாவை வரவழைக்குமாம்! கேட்கவே அச்சமாக இல்லையா?

எனவேதான் பகுத்தறிவுள்ள மனி தர்கள் - அறிவியலைக்கூட ஆக்கத் திற்கே செலவழிக்க முயல வேண்டும். மனித குல அழிவிற்கு அழைப்புக் கொடுப்பதாக அமைந்து விடக் கூடாது என்றுதான் உழைக்க வேண்டும்.

மனித குலம் வளர   பயன்படவேண்டிய புதுமை, புத்தாக்கம் அழிவிற்கு அச்சார மாகி விடலாமா?

எதற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு அல்லவா?

எச்சரிக்கையுடன் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவோமாக!

எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) வராமல் - மனதில் அவைகட்கு இடம் தராமல் - அவற்றை விரட்டி அடித்து, ஆக்கபூர்வ, எதையும் நல் நம்பிக்கையுடன் எதிர் நோக்கி செயல்படும் ஆக்க பூர்வ சிந்தனைகளையே  (Positive Thoughts)  இவ்வாண்டு வளர்த்துக் கொள்ள முடிந்த அளவு முயலுவேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

நன்றி காட்டுதலை தலையாய பண்பாக, பழக்கமாக கொள்ளுங்கள். அந்த உறுதி ஆண்டு முழுவதும்கூட அல்ல வாழ்நாள் முழுதும்கூட

'பழி வாங்கும் உணர்வுக்கு' இடமே தராதீர்!

'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என்பதை எண்ணினால் அது நம் சிந்தனை - செயலாக்கத்தின் விளைவு என்பது ஆழ்ந்து சிந்தித்தால் எளிதில் புரியும்.

 

Banner
Banner