எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாழ்க்கையில், காலத்தை எப்படி நாம் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் கவனமாகச் செலவழிக்க வேண்டும் என்பது முக்கியமோ, அதுபோலவே ஒவ்வொரு நாளும் நல்ல முதலீடுகளை (Investments)    செய்யப் பழகிக் கொள்ளுவதும், அதற்குரிய திட்டமிட்ட வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்வதும் நமது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும், மனநிறைவுக்கும் வழி வகுப்பதாகும்.

வரவுகளைவிட - அதாவது சம்பாதனைகளைவிட, அதனை நல்வழியில் முதலீடு செய்வது தான் நிகழ் காலத்திற்கு மட்டுமல்ல, வருங்காலத்தினையும் வளப்படுத்து வதற்கு மிகவும் உதவும்.

செலவுகளைச் செய்வது, சிக்கன மாகச் செலவழிப்பது முக்கியம் என்பது வாழ்க்கையின் பொது விதியானாலும், "தாராளமாகவும்" வாழ நாம் கற்றுக் கொள்ளுதல் நம் வாழ்வை - மனிதநேயம், பற்று, பாசம், சுயநலத்தைத் தாண்டிய பொது நலம் என்ற பரந்த, விரிந்த வட்டத்தை அது உருவாக்கி நம்மை உயர்த்தியும், நம்மிடம் இருக்க வேண்டிய "மனிதத்தை" - மானுடப் பற்றை - சமூக அக்கறையை விரிவுபடுத்தி நம்மை அடையாளப்படுத்தும். எப்படி நாம் கஷ்டப்பட்டு உழைத்து, சிக்கனமாக வாழ்ந்து, சேமித்த தொகையை பாதுகாப்பான முதலீடுகளாகச் செய்ய வேண்டும் என்று கவனஞ் செலுத்துவது மிக மிக அவசியமோ, அதுபோலத்தான் நம் வாழ்க்கையில் "மனிதத்தை" மானுடத்தை- வளர்த்திட நல்ல குடிமக்களாக நம்மை சமூகத்திற்குப் பயன்படுபவர்களாக்கி வாழுவதற்கு இன்றியமையாததுமாகும்!

எனது "பொது நலம்" என்று நீங்கள் பலர் பாராட்டுவது உண்மையில் எனது "சுயநலமும்" காரணம்! அதுதான் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை மனநிறைவைத் தருகிறது; அது போலவே  எனது  "சுயநலம்" என்பது என்னைப் பொறுத்தது என்றாலும் அது மற்றவர்களுக்குப் பயன்படுவதாலும், மற்றவர் துய்த்து மகிழ்வடைதாலும் அவர்களுக்கு அது "பொது நலமாக"த் தென்படுகிறது!

கல்விக்காகச் செலவழிப்பது செலவல்ல; முதலீடேயாகும்.  (Investments)  பிள்ளைகளுக்கு, பேரப் பிள்ளைகளுக்கு, மற்றவர்களுக்கு சொத்துக்களாக வீடு, வாசல், நிலம் வணிக நிறுவனங்களை விட்டுச் செல்லுவது என்பது அவர்களுக்கு முதலீடுகள் - பங்குகளாகத் தோன்றக் கூடும். ஆனால் அது நல்ல முதலீடு ஆகாது. ஏனெனில் ஒன்றிரண்டு தலைமுறைகளில் அவை பிறர் சொத்துக்களாகி விடக் கூடிய அபாயம் உண்டே!

ஆனால், கல்வியில் முதலீடு, தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், அவைகளில் ஈடுபட்டு சமூகத் தொண்டூழியம் செய்தல் நமக்கு "நல்ல முதலீடுகள்" ஆகும்.

நமக்கு எது மனநிறைவைத் தரும்?

மக்கள் பலரும் பயன் அடையும் பொதுத் தொண்டறம் சார்ந்த பல பணிகளில் ஈடுபட்டோர் தான் பெருத்த செல்வத்தையோ, தனி நபர் சொத்துக் கணக்கில் (ஊரை அடித்து உலையில் போட்டு, இறுதியில் சந்தி சிரிக்கும் இழிதகு நிலைக்குத் தள்ளப்பட்டு, சமூகத்தில் நல்லோர் அருவருப்புக் கொள்ளவும், சொத்து சேர்த்து "வைக்கப்போர் நாயாக" மாறியவர்கள் வேதனையால் வெந்து, நொந்து, நூலாகிப் போனவர்களைக் கண்டால் அதைவிட அவலம் வேறு என்னவிருக்க முடியும்?

தன் கடன் பிறர்க்கு உதவுதல்; அதிலும் எதிர்பாராது - கைமாறு கருதாது, மன நிறைவு ஒன்றையே எண்ணி தம்மிடம் உள்ள உழைப்பு, பொருள், எந்த நிலையிலும் பிறர் பற்றி புறங்கூறாமை, தன்னுள் உள்ள உணர்வை வெளி உணர்வும் அதாவது 'புறங்கூறி பொய்த்துயிர் வாழாமை' என்ற அறம்தான் மனித வாழ்வின் மாண்புறு முதலீடு.

அடுத்த உலகம், மோட்சம், வைகுந்தம் சிவலோகம் அங்கே போக இங்கே தருமகாரியங்கள் என்ற ஒன்றை எதிர்பார்த்து மற்றொன்றைச்செய்வது ஒரு வகையான லாப நோக்கங் கொண்ட வியாபாரமே தவிர, தொண் டறம் ஆகாது!

எனவே (மனசாட்சியைக் கொல் லாது) 'உள்ளாத்தாற் பொய்யாது ஒழுகல்' என்பதே வாழ்வில் நாம் செய்யும் மிகப் பெரிய முதலீடு  என்பதை மறவாதீர்! புகழை எதிர்பார்த்தோ, பெருமையைக் கருதியோ எதையும் செய்வது தொண்டறம் ஆகாது. தவறான முதலீடு - ஒரு வழி வாணிபம்!

வாழ்க்கையின் சிறப்பு வளம் என்பதன் பொருள் அதுதான்; மற்றவை கலைந்து செல்லும் மேகங்கள், திடீரென்று தோன்றி மறையும் ஏழு வண்ண வானவில் ஆகும்! காட்சிக்கு மட்டுமே அழகு தரும்; கருத்துக்கு - கொள்கை வாழ்க்கைக்கு - அந்த வெளிச்சங்கள் பயன்படாது; எனவே அடக்கத்தை, எளிமையை, வாழ்வின் மாற்றப்பட முடியாத முதலீடுகளாக ஆக்கி வாழுங்கள்; வெற்றி பெறுங்கள்!

- கி.வீரமணி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner