எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்டரின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைக் கவனித்து ஒழுங்குபடுத்தியும், அவரது மிகப் பெரிய வீட்டு நூலகத்தை -  டில்லியில் அவரது குடியிருப்பிலும் சரி, பம்பாயின் இராஜ கிருகம்' என்ற அவரது சொந்த வீட்டிலும் சரி, வீடு முழுவதும் புத்தகங்களே இருக்கும். தேவிதயாளுக்கு அதனை அடுக்குவது, அவர் விரும்பும் அதே இடத்தில் மாறாமல் வைப்பது, அவர் எழுதிக் கொண்டோ, சிந்தித்துக் கொண்டோ இருக்கும் போது திடீரென்று தேவைப்படும் புத்தகங்களையோ, பாதுகாக்கப்பட்ட பத்திரிக்கை துணுக்குகளையோ (Press Cuttings)
உடனுக்குடன் எடுத்துத் தர வேண்டிய மிக கடினமானப் பொறுப்பு - இவைகள்தான் முக்கியப் பணியாக இருந்தது.

எனவே அவருடைய தேவையைக் குறிப்பறிந்து இவர் செய்வார்; அவர் அம்பேத்கரின் வீட்டு நூலகம் பற்றிக் குறிப்பிடுகையில்,

"நம் எல்லாருக்கும் வீடு - நம் வசதிக்காக; ஆனால்  டாக்டருக்கோ, புத்தகங்களுக்காகத்தான் வீடு; பிறகே இவரது வசதிக்காக என்று இறுதி வரை வாழ்ந்தவர்" என்று கூறிவிட்டு, தேவிதயாளிடம் பாபாசாகேப் ஒரு முறை தனியே இருக்கும்போது கூறினாராம் - ஓர் உரையாடலில்.

"நான் மிகவும் ஏழை. எனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எனக்குத் தாராளமான வருவாய் இல்லை. எனது முதுமைக் காலத்தில் என் நிலை எப்படி இருக்கும் -எனக்கு ஆதரவு வசதிகளுக்குரிய வருவாய் இல்லை.

எனக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியை; நான் புத்தகங்களுக்கே செலவழித்து விடுகிறேன். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. மாற்றிக் கொள்ள முடியாது.

எனது  இந்த நூலகத்தை - கிடைத்தற்கரிய  நூல் களையெல்லாம் நான் சேகரித்து வைத்துள்ள இந்த நூலகத்தினை தனியார் யாருக்காவது கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் (அப்போது  அது பெரிய தொகை என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுவோம்) ஆனால் அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை; நான் இந்த நூலகத்தை சித்தார்த்தா கல்லூரிக்கு (டாக்டர் துவக்கிய கல்லூரி) அளித்துவிட முடிவு செய்து விட்டேன்" என்று உருக்கத்துடன் தனது நிலையைப் பகிர்ந்து கொண் டுள்ளார்! அவரது மிக நெருக்கமான பல நண்பர்கள் தேவிதயாளிடம்  கூறுவார்களாம்! "என்ன டாக்டர் தனக்கு 100 ரூபாய் கிடைத்தால் அதில் 50 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிடுகிறார், 200 ரூபாய் என்றால் அதில் ரூ.100க்கு புத்தகம் வாங்கி விடுகிறாரே!" என்று கவலையுடனும், வியப்புடனும் கூறுவார்களாம்.

புத்தகங்களை - அவை விலை உயர்ந்தவைகளாக - அப்போது 150 ரூபாய் 200 ரூபாய் விலையுள்ளவை மிக அதிக விலையுள்ள நூல்கள்; அதுபற்றிக் கவலைப்படாமல் அவர் புத்தகங்களுக்கே 'துணிந்து' செலவழித்து விடுகிறார் என்பார்களாம்.

தேவிதயாள் மேலும் கூறுகிறார்: "எனது சக்திக்கு அப்பாற்பட்டதாகவும்கூட அந்த நூலகப் பராமரிப்பு பற்பல நேரங்களில் இருந்ததை நானே உணர்ந்துள்ளேன். மிகவும் கடினமான பணி. அந்தந்த நூல்களை டாக்டர் எந்த இடத்தில் வைத்தாரோ, அவை எடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்ட பிறகுகூட, குறிப்பிட்ட அதே இடத்தில் அதே வடிவத்தில் இருக்க வேண்டும் என்றுதான் டாக்டர் விரும்புவார்!

சுமார் 4 ஆண்டுகள் நான் டில்லி வீட்டில், புத்தகம் பராமரிப்பு, மேற்பார்வை என்ற பணிகளைச் செய்த போது பெற்ற அனுபவங்கள் சிற்சில நேரங்களில் கடுமையாக அமைந்ததும் கூட உண்டு.

அவர் கேட்டவுடனேயே சிறிது தாமதம்கூட இல்லாமல் உடனடியாக குறிப்பிட்ட அந்த புத்தகத்தை அவருக்கு எடுத்துத் தர வேண்டும். ஒரு நிமிடத்திற்கு மேல் தயக்கம் என்றால், எனக்கு ஏராளமான 'திட்டுகள்' டாக்டரிடமிருந்து சரசரவென்று வந்து வெடித்து விழும்!

ஒரு குறிப்பிட்ட கட்டுரையைக் கேட்கிறார்; தேடு கிறேன்; உடனே கிடைக்கவில்லை டாக்டர் என்னைப் பார்த்து, உன்னால் உடனே அதனை எடுக்க முடிய வில்லையா? "நீ இத்தனை ஆண்டுகள் இதனைப் பராமரித்து வைத்துள்ள லட்சணமா இது?" என்று கேட்டு அவரே குறிப்பிட்ட நூல் அல்லது கட்டுரை இருக்கும் இடத்தையும் குறித்து தனது குறையாத நினைவு  ஆற்றலைப் புரட்டி விட்டுச் சொல்வார் 'அங்கிருக்கும் எடுத்து வா' இந்த வண்ணத்தில் இந்த மூலையில் இருக்கும் என்று 'லொக்கேஷனோடு' (Location) கூறுவார்.

பிறகு அவரது வசைமொழிகள் மழைத் துளிகளைப் போல கொட்டும்.

"முட்டாள் கழுதை' நீ இருந்து என்ன பயன்?"

சில நேரங்களில் எல்லை தாண்டிய கோபத்தில் எனக்கு அறைகள் விழுந்ததும் உண்டு. காரணம் அவரது சிந்தனை ஓட்டத்தின் வேகம் குறையாமல் - பணிகளை நடத்திட்ட பாங்கு; அதற்கு நான் இப்படி பயன்பட்டதுண்டு!

அப்போதுள்ள அவருக்குரிய புத்தகக்காதல், புத்தக உலகத்திலேயே மூழ்கித் திளைத்தவர் அவர் என்பதை அறிந்ததால் நான் அதற்காக வருந்தியதில்லை.

தாங்க முடியாத கால் வலி - பல நேரங்களில் டாக்டருக்கு வந்தால், அவர் அதைப் போக்கிக் கொள்ள மருத்துவ டாக்டரிடம் செல்லுவதற்குப் பதிலாக, மருந் தினைத் தேடி எடுத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, சில புத்தங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டு, பிறகு சொல்வர்; புத்தகப் படிப்பு எனக்கு வலி தெரியாமல் செய்து விட்டது என்று புத்தகம் அவருக்கு நன் மருந்தாம்! என்னே ஆர்வம் - அதிசயம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner