எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நம் வாழ்வில் அவதூறுகள் நம் எதிரிகளால் எளிதில் பரப்பப்படுவது இயல்பு.

அதுவும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது, ஆதாரமற்ற செய்திகளை அள்ளி விடுதல் - இவைகளை வாடிக்கையாகவே கொண்டு வயிறு நிரப்பும் வம்பர்களுக்கு நமது நாட்டில் குறைவே இல்லை.

அதுவும் பெண்கள்பற்றியோ, சொல்லவேண்டி யதே இல்லை!

பயமுறுத்தி காசு பறிக்கும் கயமைக்கு இது ஒரு வழிமுறைபோல் சிலருக்குப் பயன்படும்.

எதையும் எதிர்கொண்டு பழக்கமில்லாதவர்கள், இல்லாத ‘பேய்’க்கு எப்படி மனிதர்களில் சிலர் அஞ்சி அஞ்சி நடுங்குகிறார்களோ, அதுபோலவே இந்த அவதூறு சேறு கண்டும் மிகவும் பலர் அஞ்சுவர்.

பொதுவாழ்க்கை என்ற முள்படுக்கைமீது உள்ள வர்கள் பதில் கூறவேண்டிய - அதாவது - பொருட் படுத்தவேண்டிய அவதூறுகளுக்குத் தக்க பதில் கூறவேண்டும்; இல்லாத பொல்லாப்பு, பொய் மூட்டைகளைப் புறந்தள்ளியே வாழப் பழகிட வேண்டும்.

சிலர் இதன்மூலம் ‘பிரபலம்‘ ஆவதற்கே இந்த அவதூறு பரப்புதலை ஒரு அன்றாடத் தொழி லாகவே செய்வதுண்டு.

எனது  பொதுவாழ்வில் இரண்டு அவதூறு வழக் குகளை நானே போட்டு, இரண்டிலும் உண்மையை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று மகிழ்ந்தேன். மற்ற நண்பர்களையும், கழகக் கொள்கைக் குடும் பத்தவரையும் மகிழச் செய்தேன். மனநிறைவடைந் தேன். இளையவர்கள் தகவலுக்காக இது.

அ.தி.மு.க.வின் நாளேடாக நண்பர் ஜேப்பியார் நடத்திய ஒரு ஏடு, நண்பர் கே.ஏ.கிருஷ்ணசாமி நடத்திய ஏடுகளில், ‘நான்’ கலைஞரை அரசியல் ரீதியாக ஆதரித்ததினால், எரிச்சலுற்று, என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று, ‘சுத்தப்படுத்தாத கூவத்தில்’ தங்கள் பேனாக்களை நனைத்து எழுதி னார்கள். நான் பொருட்படுத்தவில்லை, அலட்சியப் படுத்தினேன்!

பிறகு, ‘மக்கள் குரல்’ நாளேட்டில் டி.ஆர்.ராமசாமி அய்யங்கார் (T.R.R.)    வேறு புனைபெயரில் இதே குற்றச்சாட்டை எழுதினார். பிரபல்யப்படுத்தி னார் - ‘கூவம் காண்ட்ராக்ட் புகழ்’ என்று பெயர் போட்டே எழுதியதை எதிர்த்து நான் ‘மக்கள் குரல்’ நாளேட்டின்மீது அவதூறு வழக்குப் போட்டு (Defamation I.P.C. கீழ்) சென்னை நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

தன்னிடம் உள்ள நாளேடான ‘மக்கள் குரலில்’ கொட்டை எழுத்துகளில், குறுக்கு விசாரணையில், என்னிடம் அவர்களது வழக்குரைஞர்கள் கேட்ட அதீத கேள்விகளை பெரிதாகவும், நான் கூறிய பதில்களை சிறிதாகவும் வெளியிட்டு மக்களைக் குழப்பிட தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.

அந்த டி.ஆர்.ஆர்., முதலமைச்சராக அன்று இருந்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கம். ஈ.வெ.கி. சம்பத் அவர்களது மகன் பொறியாளர் கவுதமன் திருமணம் பெரியார் திடலில், அவரது தலைமையில், திருமதி சுலோச்சனா சம்பத் அவர்கள் நடத்தினார். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தார். பெரியார் திடலுக்கு முதன்முதலாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வருவதால், வரவேற்பது நமது கடமை என்பதால், நான் வரவேற்றேன்.

மேடையில் என்னை அழைத்து அமர்த்தி, அவர் என்னிடம், ‘‘நீங்கள் திராவிட இயக்கத்திற்கே பொதுச்செயலாளர்; எங்களுக்கு வழிகாட்டிடும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள்மீது இப்படி அவதூறு புகார் கூறியுள்ளதைப்பற்றி நீங்கள் வழக்குப் போட்டுள்ளதால் பரவுகிறதே’’ என்றார்.  ‘‘நீங்கள் ஏன் அவதூறு வழக்குப் போட்டீர்கள்’’ என்று அவர் கேட்ட தொனி, ‘‘வழக்கை வாபஸ் வாங்குங்கள்’’ என்று சொல்லாமற் சொன்னதாகும்!

காதோடு காதாக மேடையில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் - மற்ற அனைவரும் கவனிக்கின்றனர்.

நான் அவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் முதல மைச்சர்; பொதுப் பணித்துறையின் கோப்புகளை வாங்கி, கூவம் சுத்தப்படுத்துவதுபற்றிய கோப்பில் -  நீங்களே உங்கள் செயலாளர்களை விட்டு ஆராய்ந்து பாருங்கள்; அப்படி என் பெயராலோ, என் தம்பி பெயராலோ ஏதாவது உள்ளதா என்று? எனக்குத் தம்பியே கிடையாது’’ என்றேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிரித்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியதும் அக்கோப்புகளை வரவழைத்துப் பார்த்து ஆய்வும் செய்துள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது!

வழக்கு பல வாய்தாக்கள் நடந்தது! எனக்குப் பல வங்கிகளில் கணக்கு இருக்கிறது; அவற்றை எல்லாம் ஆராயவேண்டும் என்று ‘மக்கள் குரல்’ சார்பில் எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நான் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து, பட்டியல் தந்தேன். பிறகு ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 20 ரூபாய்தான் இருப்பு இருந்தன. அதனைப் பார்த்த நீதிபதி, ‘‘அதென்ன இப்படி’’ என்று அதிர்ச்சி அடைந்து கேட்டபோது,

‘‘பெரியார் சிலைகளை ஆங்காங்கு நிறுவிட, D.D. -க்களை (டிராப்ட்) என் பெயருக்கு கழகப் பொறுப்பாளர்கள் அனுப்புவதை டிராப்ட் களானபடியால், பற்பல வங்கிகளில் என் பெயரில் S/B
சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறந்து போடப் பட்ட D.D. தொகையை எடுத்து அவர்களுக்குக் கொடுத்ததுபோக, குறைந்தபட்ச தொகைகளே இருப்புகள்’’ என்றேன்.

இதைக் கேட்டு நீதிபதி எதிர்மனுதாரர்களைப் பார்த்துச் சிரித்தார்! எதிரணி வக்கீலுக்கும் அதிர்ச்சி! வெட்கம்! தனியே என்னிடம் தனது வருத்தத்தை அப்போதே சொன்னார்.

கூவம் சம்பந்தமாக எந்த ஆதாரத்தையும் துளிகூட காட்ட முடியவில்லை; வழக்கு வழக்கம் போல 2 ஆண்டுகள் நடந்து முடிந்து, ‘மக்கள் குரல்’ ஆசிரியர் சண்முகவேல் அவர்களுக்கு சென்னைப் பெருநகர நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு தண்டனை அளித்தது! பத்திரிகையாளர் தண்டிக்கப் பட்டது அதுவே இங்கே முதல் முறை. அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், எழுதியவர் வேறு ஒருவர் - தண்டனை வாங்கி உள்ளே போனவர் வேறு ஒருவர். அதுவும் தமிழர்! எனவே, மேல்முறையீட்டில்கூட உயர்நீதிமன்றத்தில் மிகவும் வற்புறுத்திடவில்லை.

அதன் பிறகு என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று எழுதுவதையே பல ஏடுகளும், மேடைகளில் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வந்தவர்களும் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டனர்!

அவதூறுகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். பிரபல ‘இந்து’ ஆங்கில நாளேட்டின்மீது திராவிடர் கழகம் சார்பில் 1971 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை பொதுச்செயலாளர் என்ற முறையில் நானே நேரில் சென்று  (Party in person) வாதாடி வென்றோம்.

நாளை அதுபற்றி அறிந்துகொள்வீர்!


- கி.வீரமணி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner