எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலத்தில் தந்தை பெரியார் 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் 23, 24 ஆகிய இரு நாள்களில் மூடநம் பிக்கை ஒழிப்பு மாநாட்டினை வெகுசிறப்பாக நடத்தினர்.

அதில் பல புரட்சிகர தீர்மானங்கள் இரண்டாம் நாள் நிறைவேற்றினார்கள்.

அப்படி நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் ஒன்று,

‘‘ஒருவன் மனைவி மற்றொருவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கப்படக்கூடாது’’ என்ற ஒரு வாக்கியத் தீர்மானம் ஆகும்.

மகளிர் உரிமை என்பது ஆணுக்குள்ள உரிமை அத்தனையும் பெண்ணுக்கும் உண்டு; கற்பு என் பதோ, காதல் என்பதோ ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது.

விரும்பாத நண்பனை விட்டு விலகுகிறோம் - வேண்டாத எஜமானனிடமிருந்துகூட வேலை செய்ய விரும்பாது வெளியேறுகிற உரிமை உடை யவர்கள் நாம்.

அப்படி இருக்கையில், திருமணம் என்றால், கொத்தடிமையை விலைக்கு வாங்குவது போன்று, பெண்ணை வெறும் போகப் பொருளாய், வேலைக் காரியாய், சமையற்காரியாய், பிள்ளை பெறும் போகக் கருவியாய் எண்ணி, கணவன் ஆதிக்கம் செலுத்த முயன்றால், அந்நிலையிலிருந்து அப் பெண் விடுதலைபெற விரும்பி வேறு ஒருவனை விரும்பினால், (மனைவியை) குற்றவாளியாக்கக் கூடாது என்பது மகளிர் உரிமையை மனதிற் கொண்டே தந்தை பெரியார் நிறைவேற்றிய அதிர்ச்சி வைத்திய தீர்மானம்.

ஏற்கெனவே இ.பி.கோ.வில் உள்ளதுதான் இது.

இதை வெளிப்படையான தீர்மானமாக வடிவம் கொடுத்தார் பெரியார் அம்மாநாட்டில்.

1971 தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடிக்க தீவிரமாக கச்சை கட்டிக் கொண்டிருந்த ஏடுகள், எதிர்க்கட்சிகள் இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தவறான பிரச்சாரத்தை நாடு முழுவதும் கட்ட விழ்த்து விட்டார்கள்.

யார் மனைவியை யார் வேண்டுமானாலும் அபகரிக்க, சேலம் தீர்மானத்தின்மூலம் பெரியார் கூறி,  சமூக ஒழுக்கத்தையே பாழ்படுத்துகிறார்; அவர் ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா உங்கள் ஓட்டு என்று திசை திருப்பி விட்டனர்!

‘இந்து’, ‘தினமணி’, ‘எக்ஸ்பிரஸ்’ ஏடுகள் இதில் தீவிர முனைப்புக் காட்டின.

‘இந்து’  (இங்கிலிஷ்) வெளியிட்ட செய்தியிலும், அதில் வந்த ‘ஆசிரியருக்குக் கடிதங்களிலும், ஆங்கி லத்தில் தீர்மானத்தை திரித்துப் போட்டு’ எழுதினர்.

ஆங்கில வாசகம், ‘‘Coveting another man’s wife should not be a crime’
என்று பெரியார் இயக்கமான திராவிடர் கழகம்,  தீர்மானம் நிறைவேற்றியது.

மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பேரா சிரியர் தி.வை.சொக்கப்பா, வக்கீல் நோட்டீஸ் அனுப் பியும், திருத்திப் போடாமல் திரும்பத் திரும்ப அதையே எழுதினர்.

உடனே அய்யாவின் அனுமதியோடு, நான் கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் வழக்குப் போட்டேன். பிறகும் அதை எழுதிய பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்காக்கி, மன்னிப்பு கேட்க வழக்காடினோம்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வீராசாமி, வி.வி.ராகவன் (அய்யர்) ஆகியோர் அடங்கிய அமர்வில் நான் மதியம் வழக்கெடுக்க (Lunch Motion) அனுமதி பெற்று, வழக்கை நானே நடத்தினேன்.

தலைமை நீதிபதி அவர்கள் என்னிடம், சரியாகத்தானே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் தமிழில் படித்த தீர்மானத்திற்கும், ஆங்கில வாசகங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லையே என்றார்.

பிறகு நான் தலைமை நீதிபதி அவர்களிடம் கனம் தலைமை நீதிபதி அவர்களே தீர்மானத்தின் அடிப்படை மாற்றப்பட்டுள்ளது ஆங்கில வாசகத் தில். Desiring விரும்பினால் என்பது மனைவியின் உரிமை பற்றிய கருத்தாக்கம். அவர்கள் வெளி யிட்டதோ ‘Coveting another man’s wife’ என்பது கணவனின் சட்ட விரோதச் செயலை.

முந்தைய தீர்மான வாசகம் மனைவியைப் பற்றியது.

இவர்கள் வெளியிட்டது கணவனின் துர் ஆக்கிர மிப்புச் செயல் - நேர் எதிரிடையானது என்று விளக்கினேன்.

உடனே தலைமை நீதிபதி , மற்ற நீதிபதி ஆகியோர் விளங்கிக் கொண்டு, நோட்டீஸ் அனுப்பிய பிறகு,  ‘இந்து’ ஆசிரியரிடம் விளக்கம் கேட்டனர். மறுபடியும் அப்படிப் போடலமா? என்று கேட்டு வருத்தம் தெரிவிக்கச் சொன்னார். ‘தி இந்து’ சார்பில் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தார் அதன் ஆசிரியர் கோபாலன் (என்று நினைவு).

பிறகு இந்து (இங்கிலீஷ்) நாளேடு வழக்கு 17.2.1971 இல் தலைமை நீதிபதி அமர்வு முன்வந்த உடன்,

இந்து பத்திரிகை சார்பில் உண்மையான நிபந் தனையற்ற வருத்தத்தை தெரிவித்து மன்னிப்புக் கோரியதை விண்ணப்பதாரர் (கே.வீரமணி) ஏற்றுக் கொண்டதால், வழக்கைத் திரும்பப் பெற கோர்ட் டார் அனுமதித்து தீர்ப்பளித்தனர். (இது 17.2.1971 இல் நடந்த நிகழ்வு).

இப்படிப்பட்ட வரலாறு, பலருக்கும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிக்கும் சற்று மயக்கத்தையும், குழப்பத்தையும் அவ்வாசகங்கள் ஏற்படுத்தியதை நல்ல வண்ணம் தெளிவுபடுத்திய தால், நீதி நிலை நாட்டப் பெற்று உண்மை வென்றது.

எனவே, உரிய வகையில் அணுகினால் நம்மீது வீசப்படும் சகதியையும், சந்தனமாக்கி விடலாம்  - அது நமது அணுகுமுறையில்தான் உள்ளது என்பது அவ்வழக்கு தந்த பாடமாகும்!

- கி.வீரமணி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner